பீப்பிள்ஸ் டெமாக்கரசி தலையங்கம்
திரிணாமுல் காங்கிரஸ்
கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் தபஸ்பால் கூறிய மூர்க்கத்தனமான அடாவடித்
தனமான கருத்துக்களுக்கு எதிராக நாடு முழுவதும் கண்டனக் கணைகள் மிகச்சரியாகவே
வெளிப்பட்டுள்ளன. பயங்கரவாத அச்சுறுத்தல்கள், வன்முறை மற்றும்
வன்புணர்ச்சி ஆகியவற்றை நியாயப்படுத்தும் இத்தகைய அடாவடித் தனமான கருத்துக்களுக்கு
எந்தவொரு ஜனநாயக சிவில் சமூகத்திலும் இடம் இல்லை. இத்தகைய கருத்துக்களை வெளிப்
படுத்தும் பேர்வழிகள் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும்.
மேற்கு வங்கத்தில்
ஆளும் கட்சியாக இருக்கும் இவர்களின் கட்சி இத்தகைய கருத்துக்களை உள்ளார்ந்த
முறையில் ஏற்றுக்கொண்டிருப்பதையும் அனுமதிக்க முடியாது. ‘இவரது கூற்றுடன் எங்களுக்கு உடன்பாடில்லை’
என்று வெறுமனே கண்துடைப்புக்காக கூறுவதை மட்டும் வைத்து இவர்களுக்கு
இதில் எந்தப் பொறுப்பும் இல்லை என்று விட்டுவிட முடியாது. நம் அரசியல் சமூக
அமைப்பை சுத்தப்படுத்துவதற்கு, குறைந்தபட்சம் இத்தகைய நாடாளுமன்ற
உறுப்பினர்களை மக்கள் தம்மிச்சையாகவே சமூகப்புறக்கணிப்பு செய்து தங்கள் கடும்
நடவடிக்கையைத் துவங்கிட வேண் டும்.
திரிணாமுல் காங்கிரஸ்
கட்சியோ அதன் தலைவரோ இத்தகைய நட வடிக்கை குறித்து மனதளவில்கூட சிந்தித்துப்
பார்க்காததிலிருந்து இக்கட்சியானது பயங்கரவாத அரசியலையே பெரிதும் ஊக்குவிக்கும்
கட்சி என்பதை மீண்டும் ஒருமுறை மெய்ப்பித்திருக்கிறது. ஜூன் 14
அன்று பொதுக்கூட்டம் ஒன்றில் நாடாளுமன்ற உறுப்பினரால் ஆற்றிய விஷம
உரை, மின் ஊடகங்களின் வாயிலாக மக்களால்
விரிவானமுறையில் அறியப்பட்டு கடும் கண்டனத்திற்கு உள்ளாக்கப்பட்டது. மேற்படி
எம்பிக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைமை யின் ஆதரவு இருப்பதால் மாநிலக்
காவல்துறை அவருக்கு எதிராக இந்தியத் தண்டனைச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை
எடுத்திடவில்லை.
மின் ஊடகங்களில்
கிடைத்திடும் அவரது உரை, `குற்றமுறு மிரட்டல்’
(criminal intimidation) என்னும் இந்தியத் தண்டனைச்
சட்டப்பிரிவின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி இருப்பதைக் காட்டுகிறது.
எனவே அவருக்கு எதிராக
இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 503வது பிரிவின் கீழ் வழக்குத் தொடர
முடியும். மேலும், சட்டத்தை அமல்படுத்த வேண்டிய
பொறுப்புள்ள மாநிலக் காவல்துறை அவ்வாறு அவர்மீது வழக்கு தொடர 1861ம் ஆண்டு இந்தியக் காவல் சட்டம் 23வது பிரிவின் கீழ் எவரிடமிருந்தும் எவ்விதமான முறையீடும் பெறாமலேயே
இவ்வாறு உரை நிகழ்த்துவதிலிருந்து ஒரு நபரைத் தடுக்கும் விதத்தில் முன்னதாகவே நட
வடிக்கைகளை எடுத்திட அதிகாரம் பெற்றிருக்கிறது. இந்தக் குறிப்பிட்ட வழக்கில்,
இவ்வாறு பேசியதற்காக, இத்தகையதொரு செயலை
அவர் மீண்டும் செய்யாது தடுக்கும் விதத்தில் கைது செய்யப்படுவதற்கு மிகவும்
சிறப்பான முறையில் தகுதிபடைத்தவராகிறார்.
இந்தி யத் தண்டனைச்
சட்டத்தின் 503வது பிரிவு கூறுவதாவது:“வேறு ஒருவரின் உடலுக்கு, பெய ருக்கு அல்லது
சொத்துக்கு அல்லது அவர் அக்கறை கொண்டுள்ள ஒருவரின் உடலுக்கு அல்லது பெயருக்கு,
கேடுஇழைப்பதாக அவருக்கு பீதி விளைவிக் கும் உட்கருத்துடன் அல்லது
அத்தகைய மிரட்டல் நிறைவேற்றப்படுவதைத் தவிர்க் கும் பொருட்டு அவர் சட்டப்படி
செய்யக் கட்டுப்பட்டிராத செய்கை எதனையும் செய்வதை அல்லது சட்டப்படி அவர் செய்ய
உரிமைப் பெற்றிருக்கிற செய் கை எதனையும் செய்யாது விடுவதை விளைவிக்க அச்சுறுத்துகிற
எவரொரு வரும் ... குற்றமுறு மிரட்டலைச் செய்கிறார்.’’ எனவே இவர் கைது செய்யப்படுவதற்கு உரியவராகிறார்.
ஆயினும்
இந்தப்பேர்வழிக்கு மாநில அரசின் ஆதரவு இருப்பதால், மாநில காவல்துறை இதுவரை இவருக்கு எதிராக எவ்வித நட வடிக்கையும்
எடுக்காதது இயற்கையே.இந்த எம்பி என்ன கூறினார் என் பதைப் பரிசீலித்தோமானால்,
மாநிலக் காவல்துறை எந்த அளவிற்குத் தங்கள்கடமைகளைச் செய்யாது
தவறியுள் ளன என்பதை உணர்ந்து கொள்ளமுடியும். ஊடகங்களில் வெளியானவை களிலிருந்தும்,
பத்திரிகைகளில் மேற் கோள் காட்டப்பட்டவை களிலிருந்தும் மேற்படி எம்பி
பேசியதாவது: “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச்
சேர்ந்தஎவனாவது இங்கே இருந்தால், நான்சொல்வதைக் கேட்டுக்கொள். சௌ
மாஹாவில் எந்தவொரு திரிணாமுல் காங்கிரஸ் ஊழியர் அல்லது அவர்களு டைய குடும்பத்தினர்
மீது நீ கை வைத்தால், அதற்கான விலையை நீ கொடுக்க
வேண்டியிருக்கும். என்னுடன் மோத முயற்சிக்காதே. உன்னை நான் மோதித் தள்ளிவிடுவேன்.
ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளின்படி அவர், “அரசியல் எதிரிகளை சுட்டுத் தள்ளுங்கள்,’’ என்றும், “அவர்களுடைய குடும்ப பெண்களை
வன்புணர்வுக்கு உள்ளாக்கும் வகையில் நம் பையன்களை அனுமதித்திடுங்கள் என்றும் மிரட்டி இருக்கிறார்.
தான் எப்போதும் ஒரு
துப்பாக்கியை ஏந்திய வண்ணம்தான் இருப்பேன் என்றும் அவர் பீற்றிக் கொண்
டிருக்கிறார்.இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒரு நபர்
இவ்வாறெல்லாம் ஆபாசமாகப் பேசுவது ஏற்கத்தக்கதல்ல. இதனை நாம் அச்சுக் குக் கொடுத்துக்கொண்டிருக்கும்
சமயத்தில், இந்நபருக்கு எதிராக பொதுநல மனு ஒன்று
தாக்கல் செய்யப் பட்டு அது நீதிமன்றத்தால் அனுமதிக்கப் பட்டிருப்பதாக ஊடகங்களில்
செய்திகள் வெளியாகி இருக்கின்றன. சம்பந்தப்பட்ட எம்பிக்கு எதிராகக் கடும்
நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று பொதுமக்கள் கண்டனக்குரல் எழுப்பியிருக்கையில்
அதனை மட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, திரிணாமுல் காங்கிரஸ்
தலைவரும் மேற்கு வங்க முதல்வரும் என்ன சொல்லி யிருக்கிறார் தெரியுமா?
“நான் என்ன செய்ய முடியும்? நான் அவனை சுட்டுக்
கொல்ல முடியுமா?’’ என்று பதிலுக்கு கோபப்பட்டிருக்கிறார்.
எம்பியின் பேச்சுக்கு இணையான அளவில் இதுவும் மூர்க்கத் தனமான ஒன்றேயாகும்.
மேற்குவங்க
மாநிலத்தில் அரசியல் ஒடுக்குமுறையின் ஒரு கருவியாக வன்புணர்வும்
பயன்படுத்தப்படுகிறது என்கிற உண்மையை ஒப்புக்கொண்டு, கொல்கத்தா இப்போது நாட்டின் வன் புணர்வு தலைநகராக மாறியிருப்பதை
வெட்கக்கேடான முறையில் ஏற்றுக் கொண்டு, மகளிர்க்கான தேசிய
ஆணை யம் சுயமாகவே இந்த எம்பிக்கு எதிராக கிரிமினல் நடவடிக்கையைத் தொடர்ந்திட
வேண்டும். அதேபோன்று, இந்தக் குறிப் பிட்ட எம்பியின் பேச்சு
அரசமைப்புச் சட் டத்தின் 21வது ஷரத்தான நாட்டிலுள்ள அனைத்துப்
பிரஜைகளின் `உயிருக்கும் சுதந்திரத்திற்கும்’
அடிப்படை உரிமை அளிக்கிறது என்பதை மீறும் விதத்தில் இருப்பதால்,
தேசிய மனித உரிமைகள் ஆணையமும் இவர் மீது நடவடிக்கை எடுத்திட
வேண்டும். திரிணாமுல் காங்கிரஸ் எம்பி தபஸ் பால் கூறியவை ஒருவிதத்தில் இன்றைய
மேற்கு வங்க மாநிலத்தின் எதார்த்த உண்மைகளின் பிரதிபலிப்பேயாகும்.
திரிணாமுல் காங்கிரஸ்
மாநிலத்தில் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளவும், தேர்தலில் மக்கள் ஆதரவினைத் திரட்டிடவும்,
தன்னுடைய பிரதான கருவி யாக, பயங்கரவாத வன்முறை
வெறி யாட்டங்களைக் கட்டவிழ்த்துவிட்டிருக் கிறது. கீழ்க்கண்ட உண்மை சம்பவங்கள்
இவற்றைத் தெளிவுபடுத்திடும்:2011 சட்டமன்றத் தேர்தல்களிலிருந்து,
2011 மே 13க்கும் 2014 ஜூனுக்கும் இடை யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடது
முன்னணியைச் சேர்ந்த 157 ஊழியர்களும் தலைவர்களும் மேற்குவங்க
மாநிலத்தில் கொல்லப்பட்டிருக் கிறார்கள். 2014 மார்ச் 5க்குப்பின், மக்களவை தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட
பின்னர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும்
இடதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்த 12 தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள்
கொல்லப்பட்டிருக்கிறார்கள். 8,785 பேர் கடும் காயங்களுக்கு ஆளாகியுள்
ளார்கள்.
மாநிலத்தில் விவசாயப்
பணிகள் மிகப்பெரிய அளவில் கடுமையாக சீர்குலைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மாநிலத்தின்
அனைத்து மாவட்டங்களி லும் ஏழை மற்றும் நடுத்தர விவசாயிகள் கடுமையாகப்
பாதிக்கப்பட்டுள்ளார்கள். 27 ஆயிரத்து 283
பேர் அவர்களின் 9,811.83 ஏக்கர் நிலங்களிலிருந்து சாகு படி
செய்யவிடாமல் தடுக்கப்பட்டு, வெளி யேற்றப் பட்டிருக்கிறார்கள்.
அனைத்து மாவட்டங்களிலும் இவர்களுக்குச் சொந்த மான பல கோடி ரூபாய் மதிப்புள்ள கால்
நடைகள் அழிக்கப்பட்டுள்ளன. 48 ஆயிரத்து 382
குடும்பங்கள் அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றப்
பட்டிருக்கிறார்கள். 6,152 வீடுகள் முழுமையாக இடித்துத் தரைமட்ட
மாக்கப்பட்டுள்ளன.9,529 பேர் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகி மற்றும்
பிணைக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டு இவற்றிலிருந்து மீள்வதற் காக அவர்கள் 27
கோடியே 87 லட்சத்து 8
ஆயிரம் ரூபாய் வரை தண்டம் அளித்துள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சிக்குச் சொந்தமான 1,365 அலுவலகங்கள் சூறையாடப்பட்டிருக்கின்றன.
இடதுசாரிக் கட்சிகளுக்குச் சொந்தமான வெகுஜன அமைப்புகளின் 398
அலுவலகங்களும் அழித்துத் தரைமட்டமாக்கப்பட் டிருக்கின்றன.
இவற்றைச் செய்த
கயவர்கள் மீதுஎவ்விதமான நடவடிக்கையும் எடுப்பதற் குப் பதிலாக,
மாநில அரசாங்கத்தின் கீழ் உள்ள காவல்துறை,
பாதிக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிக்
கட்சியின் ஊழியர்களான 5732 பேர்கள் மீதே பொய் வழக்குகளை ஜோடித்து
சிறையில் தள்ளியுள்ளது. இறுதியாக, இவர்களின் இத்தகைய
வன்முறை மற்றும் பயங்கரவாத அரசி யலுக்கு மிகவும் மோசமாகப் பலியாகி இருப்பது
பெண்களாகும். 291 பெண்கள் வன்புணர்வுக்கு ஆளாகி
யுள்ளார்கள். 675 பேர் மானபங்கப் படுத்தப்
பட்டுள்ளார்கள். 1,035 பேர் தாக்கப்பட்டுள்ளார்கள். இவை
அனைத்தும் மற்றும் இதற்கு மேலும் விவரங்கள் மேற்கு வங்க இடது முன்னணியின்
தூதுக்குழுவால் சமீபத்தில் மேற்குவங்க முதல்வரிடம் சமர்ப்பிக் கப்பட்டுள்ளது.
ஆயினும் அதன்மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று சொல்லத்
தேவையில்லை.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் விரைவில் தொடங்க இருக்கிறது.
சட் டத்தை
உருவாக்குபவர்களின் மத்தியில் இத்தகைய சட்டவிரோதமான மற்றும் மூர்க்கத்தனமான
கருத்துக்களைக் கூறிய உறுப்பினர்களை இருக்க விடலாமா என்பது குறித்து அது ஒரு
முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது. சட்டத்தை மீறும் இத்தகைய பேர்வழிகளே சட்டத்தை
உருவாக்குபவர்களாக இருப்பது உண்மையில் ஜனநாயகத்தின் கேலிக் கூத்தாகும். நாட்டின் ஜனநாயகத்திற்கும்,
அதன் குடியரசு அரசமைப்புச் சட்டத்திற்கும் பங்கம் விளைவிக்கக்கூடிய
விதத் தில் அமைந்துள்ள இத்தகைய பயங்கர வாத மற்றும் மிரட்டல் அரசியல் அனுமதிக்கப்பட
முடியுமா என்பதை நாடும் நாட்டு மக்களும் தீர்மானித்திட வேண்டும்.
நிச்சயமாக,
இதனை அனுமதித்திட முடியாது. மேற்கு வங்க மக்கள்,
வெகுகாலமாக தாங்கள் அனுபவித்து வந்த துன்ப துயரங்களையும்,
மன வேதனைகளையும், வலுவான ஒற்றுமைப் போராட்டத்தின் மூலமாக 1970களில் தங்கள் மீது ஏவப்பட்ட அரைப் பாசிச அடக்குமுறைகளை முறியடித்தார்கள்.
அதன்பின்னர் புதியதொரு தலைமுறை பிறந்து வளர்ந்திருக்கிறது. இத்தகைய வீரஞ்செறிந்த
பாரம்பரிய வரலாற்றை நாட்டின் ஜனநாயகம், மனித வாழ்க்கை,
சுதந்திரம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றைப் பாதுகாத்திட இளைய
சந்ததியினரிடம் கொண்டு வருவது இன்றைய அவசியத் தேவையாகும்.
-
தமிழில்: ச.வீரமணி
No comments:
Post a Comment