Sunday, July 6, 2014

புத்துயிர் பெற்று எழுவோம்! - பிரகாஷ் காரத்



பிரகாஷ் காரத்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடதுசாரிகளும் நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தல் களில் மிகவும் மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளன. கட்சி ஒன்பது இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று, போட்டியிட்ட 93 இடங்களில் 3.25 சதவீத அளவிற்கே வாக்குகளைப் பெற்றிருக்கிறது. கேரளாவில் சுயேச்சையாகப் போட்டியிட்ட இருவர் கட்சி மற்றும் இடது ஜனநாயக முன்னணி ஆதரவுடன் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்தில் வெற்றி பெற்றிருப்பதன் மூலம், இடதுசாரிகளின் மொத்த எண்ணிக்கை 12 மட்டுமே. நாடாளுமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மிக மோசமான பங்களிப்பு ஓர்ஆழமான பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்பதைக் கட்டாயப்படுத்தி இருக்கிறது. விமர்சனப் பூர்வமான ஆய்வின் அடிப்படையில்தான் முறையான முடிவுகளுக்கு வர முடியும், அதன் அடிப்படையில் கட்சியின் அரசியல் தளம் மற்றும் ஸ்தாபனத்தை முழுமையாக சரிசெய்திட வேண்டியிருக்கிறது.

மத்தியக் குழு, ஜூன் 7 மற்றும் 8 தேதிகளில் நடைபெற்ற கூட்டத்தின்போது கட்சியின் செயல்பாடுகள் குறித்து ஆழமாகப் பரிசீலித்தது. கட்சியின் சுயேச்சையான பலமும், வெகுஜன தளமும் வீழ்ச்சியடைந்திருக்கிறது. இதற்கு மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட ஆழமானப் பின்னடைவு மட்டும் காரணம் அல்ல, நாடு முழுவதும் கட்சியை முன்னெடுத்துச் செல்வதில் ஏற்பட்ட தோல்வியும் இதற்கு முக்கிய காரணமாகும். கட்சியையும் அதன் அரசியல் செல்வாக்கையும் முன்னெடுத்துச் செல்வதில் தோல்வி ஏற்பட்டிருப்பதற்கான பொறுப்பு கட்சியின் அரசியல் தலைமைக்குழு மற்றும் மத்தியக் குழுவையே சாரும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் பாஜக தலைமையிலான அரசாங்கமாக இருந்தாலும் சரி அல்லது காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கமாக இருந்தாலும் மத்திய அரசாங்கங்கள் பின்பற்றி வந்த நவீன தாராளமயக் கொள்கைகளைத் தொடர்ந்து உறுதியாக எதிர்த்து வந்திருக்கின்றன. இத்தகைய கொள்கைகளின் கடுந்தாக்குதல்களைத் தடுத்து நிறுத்திடவும் தங்களுடைய உரிமைகளைப் பாதுகாத்திடவும் உழைக்கும் மக்களின் போராட்டங்களை அவை தொடர்ந்து மேற் கொண்டு வந்தன. நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு மாற்றாக, பொருளாதாரம், சமூகம் மற்றும் அரசியல் அரங்கங்களில் மாற்றுக் கொள்கைகளுக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிகளும் தொடர்ந்து இயக்கங்கள் மற்றும் பிரச்சாரங்கள் நடத்தி வந்தனர். வகுப்புவாதக் கொள்கைகளை எதிர்ப்பதுடன் மதச்சார்பின்மையைப் பாதுகாப்பதற்காகவும், சமூகரீதியாக ஒடுக்கப்பட்டவர்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும் இடதுசாரிகள் தொடர்ந்து உறுதியுடன் போராடி வந்திருக்கிறார்கள்.

இவ்வளவு நடவடிக்கைகளை இடதுசாரிகள் மேற் கொண்டிருந்தபோதிலும், மக்களின் ஆதரவினைப் பெறுவதில், அதிலும் குறிப்பாக இளைஞர்களின் ஆதரவினைப் பெறுவதில், தோல்வியடைந்து விட்டதையே தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தி இருக்கின்றன.

மத்தியக்குழு தன்னுடைய பரிசீலனை அறிக்கையில், குறைபாடுகளைக் களைந்திடவும், கட்சி மக்களிடமிருந்து அந்நியமாகியிருப்பதை உடனே சரி செய்யவும், சில முக்கிய முடிவுகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டியது அவசரம், அவசியம் என்று கருதுகிறது. இன்றைய நிலையை சரிசெய்து முன்னேறிடவும், கட்சி மற்றும் இடது மற்றும் ஜனநாயக சக்திகளை முன்னெடுத்துச் செல்வதற்கு அடிப்படையை அமைத்திடவும் நான்கு முக்கிய நடவடிக் கைகளை எடுத்திட தீர்மானித்திருக்கிறது.

நான்கு நடவடிக்கைகள்
1. கட்சியின் சுயேச்சையான பலத்தை அதிகரித்திட வேண்டும் என்று தொடர்ந்து கட்சியின் அகில இந்திய மாநாடுகளில் நாம் நம்முடைய அரசியல்-நடைமுறை உத்திகளுக்கு அழுத்தம் கொடுத்து வந்த போதிலும், நாம் அதனை செய்ய இயலாதவர்களாகவே இருந்து வந்திருக்கிறோம். மேற்கு வங்கம், கேரளம் மற்றும் திரிபுரா ஆகிய மூன்று வலுவான மாநிலங்களுக்கு அப்பால், இது தொடர்பாக முன்னேற்றம் எதுவும் இல்லை. கட்சியின் பலம் சுயேச்சையாக வளராமல், இடது - ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்துவது மற்றும் இடது - ஜனநாயக மாற்றை உருவாக்குவது என்கிற அரசியல் உத்தி வெற்றி பெறாது.

நாம் மேற்கொள்ள வேண்டிய பெரிய அளவிலான முதல் நடவடிக்கை என்பது, இதுவரையிலும் கடைப்பிடித்து வந்த அரசியல் உத்தியை மறு ஆய்வுக்கு உட்படுத்துவது என்பதேயாகும். நாம் இதுநாள்வரை பின்பற்றி வந்த ஐக்கிய முன்னணி உத்தி என்கிற கட்சியின் அரசியல் நிலைப்பாட்டின் அனைத்து அம்சங்களும் விமர்சன ரீதியாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியது அவசியம். இவ்வாறு நடவடிக்கைகளை மேற் கொள்வதன் மூலம் ஒரு சரியான, பொருத்தமான அரசியல்மேடை மற்றும் முழக்கங்களை உருவாக்குவதில் நமக்கிருந்த குறைபாடுகள் அல்லது பலவீனங்களை அடையாளம் கண்டறிய முடியும்.

கட்சி முழுமையும் விவாதிக்கும்
ஒவ்வொரு அகில இந்திய மாநாட்டின்போதும், நாம் பின்பற்றி வரும் அரசியல்-நடைமுறை உத்திகளை அமல் படுத்தியது தொடர்பாக இயல்பாகவே கட்சி ஓர் ஆய்வினை மேற்கொள்ளும். ஆனால், இன்றைய சூழ்நிலையில் இதுமட்டும் போதுமானதல்ல. இதுவரை பின்பற்றி வந்த அரசியல் - நடைமுறை உத்திகளை ஓர் ஆழமான ஆய்வுக்கு இன்றைய தினம் உட்படுத்துவது அவசியம். இதற்காக, அடுத்த ஆண்டு ஏப்ரலில் நடைபெறவுள்ள அகில இந்திய மாநாட்டுக்கு முன்பாக நாம் பின்பற்றி வந்த அரசியல் - நடைமுறை உத்திகள் குறித்து ஒரு மறு ஆய்வினை மேற்கொள்வது என மத்தியக்குழு தீர்மானித்திருக்கிறது. இவ்வாறு மேற்கொள்ளப்படும் அரசியல் - நடைமுறை உத்திகள் தொடர்பான மறு ஆய்வின் முடிவுகள் அடங்கிய அறிக்கை, கட்சியின் நகல் அரசியல் தீர்மானத்துடன் கட்சி முழுமைக்கும் விவாதத்திற்காக முன்வைக்கப்படும். இதனை அடுத்து நடைபெறவிருக்கும் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் புதிய அரசியல் - நடைமுறை உத்திகள் நிறைவேற்றப்படும். இவ்வாறாக, முழுமையான அளவில் ஓர் உள்கட்சி விவாதத்தை நடத்திட உள்ளோம்.

மாற்றங்களுக்கு ஏற்ற முழக்கங்கள்
கடந்த இருபத்தைந்து ஆண்டு கால வரலாற்றில், ஏகாதிபத்திய உலகமயத்தின் தாக்கம் காரணமாகவும், நவீன தாராளமயக் கொள்கைகள் நாட்டில் பின்பற்றப்பட்டு வந்ததன் விளைவாகவும், சமூக-பொருளாதார நிலைமைகளில் மிகப்பெரிய அளவில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. வர்க்கங்களின் நிலைப்பாடுகளிலும், வர்க்கங்களுக்குள்ளேயும் இத்தகு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தொழிலாளர் வர்க்கம், விவசாய வர்க்கம், விவசாயத் தொழிலாளர் வர்க்கம் மற்றும் நடுத்தர வர்க்கங்களுக்குள்ளேயும் இத்தகு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளாகவே, இவ்வாறான மாற்றங்கள் இவர்களின் அரசியல் ஸ்தாபன நடவடிக்கைகளில் எப்படிப்பட்ட அளவிற்கு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன என்பதை நாம் பார்த்து வருகிறோம். பெரு முதலாளிகள் மற்றும் முதலாளித்துவத்தின் மற்ற பிரிவினர் மத்தியிலும் கூட வலுவான முறையில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

நவீன தாராளமயக் கொள்கைகளின் விளைவாக மிகவும் பாதிக்கப்பட்ட பிரிவினர்களின் பிரச்சனைகளை எடுத்துக்கொள்ளும்போது, முழக்கங்களை உருவாக்குகையில், இவ்வாறு ஏற்பட்டுள்ள மாற்றங்களை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக ஒரு வலுவான இயக்கத்தைக் கட்டி எழுப்பிட, அனைத்து வர்க்கப்பிரிவினர்களையும் அணுகக் கூடிய விதத்தில் நம்முடைய முழக்கங்களில் மாற் றங்களை ஏற்படுத்த வேண்டியதும் அவசியம். இதற்கு, சமூகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும், அத்தகு சமயங்களில் பல்வேறு வர்க்கப் பிரிவுகளின் நிலைப்பாடுகள் மற்றும் பங்களிப்புகள் குறித்தும் ஒரு துல்லியமான ஆய்வினை மேற்கொள்வது அவசியமாகும்.

பல்வேறு துறைகளிலும் அத்தகைய துல்லியமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, அத்தகைய துல்லியமான ஆய்வுகளின் அடிப்படையில், கட்சியின் எதிர்கால லட்சியங்களை மனதில் கொண்டு, முழக்கங்களையும் கோரிக்கைகளையும் அமைத்திட முடியும். இத்தகைய துல்லியமான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு ஒரு குறிப்பிட்ட காலவரையறையினை தீர்மானித்திட வேண்டும் என்றும் மத்தியக் குழு முடிவு செய்துள்ளது.

மக்களுடன் ஜீவனுள்ள தொடர்பு
3. இவ்வாறு அரசியல் நிலைப்பாட்டை மேற்கொள்வதற்காக நாம் முயற்சிகளை மேற் கொள்வதுடன், நம் கட்சி ஸ்தாபனத்தின் நிலை குறித்தும், அதன் செயல்பாடுகளின் பாணி எப்படி இருந்தது, மக்கள் மத்தியில் அதன் வீச்சு எந்த அளவிற்கு இருந்தது என்பது குறித்தும் பரிசீலனை செய்ய வேண்டியதும் அவசியம். கட்சியின் கீழ் அமைந்துள்ள வெகுஜன அமைப்புகள் பல்வேறு வெகுஜனப் போராட்டங்களையும் இயக்கங்களையும் நடத்தியுள்ள போதிலும், அத்தகு இயக்கங்களில் ஈடுபட்ட மக்களை அரசியலாக மாற்ற முடியாத நிலையிலேயே கட்சி ஸ்தாபனம் இருக்கிறது என்கிற பிரச்சனை இதில் ஒன்று.

அடுத்து ஸ்தாபனம் பலவீனம் அடைந்திருக்கும் பிரச்சனையும் போராட்டங்கள் மற்றும் இயக்கங்களை வளர்த்தெடுக்க முடியாத நிலைக்கு இட்டுச் சென்றுள்ளன. செயல் பாடுகளில் ஒரேவிதமான சலிப்பூட்டுகிற முறைகள் மற்றும் மக்களுடன் ஜீவனுள்ள தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள முடியாததும் பிரச்சனைகளாகும். புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நம்முடைய பிரச்சார முறைகளில் மாறுதல்களை மேற்கொள்ள வேண்டியதும் அவ்வகையில் மக்களிடம் விரைவில் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டியதும் காலத்தின் கட்டாயமாக மாறியிருக்கின்றன. கட்சி ஸ்தாபனத்தை முழுமையாக பழுதுபார்த்து, தவறான போக்குகளை சரி செய்திடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

வர்க்க - வெகுஜன அமைப்புகள்
4. வெகுஜன அமைப்புகளின் வளர்ச்சி, அவற்றின் சுயேச்சையான செயல்பாடுகள் மற்றும் அவற்றின் கீழ் மக்களை விரிவான முறையில் அணிதிரட்டுதல் ஆகியவையும் கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்கு மிகவும் முக்கிய அம்சங்களாகும். மாநிலக் குழுக்கள் நடத்தியுள்ள தேர்தல் ஆய்வுகள் காட்டுவது என்னவெனில், நம் கட்சியின் கீழ் அமைந்துள்ள வெகுஜன அமைப்புகளில் அணிதிரண்டுள்ள மக்களில் கணிசமானவர்கள் நம் கட்சிக்கோ அல்லது இடதுசாரி வேட்பாளர்களுக்கோ வாக்களிக்கவில்லை என்பதாகும். வர்க்க, வெகுஜன அமைப்புகள் மற்றும் நம் அரசியல் வேலைகளில், நம்முடைய சுயேச்சையான செயல்பாடுகளில் குறைகள் மலிந்துள்ளன. இவற்றை மிகவும் ஆழமான முறையில் சரி செய்திட வேண்டியது அவசியம். மேற்கண்ட நான்கு பிரதான நடவடிக்கைகளையும் ஒன்றிணைத்து முன்னெடுத்துச் செல்லவேண்டும். கட்சி எதிர்கொண்டுள்ள நிலைமைகளை கவலையுடன் பரிசீலித்திட வேண்டும் என்று கட்சி முழுமைக்கும் மத்தியக்குழு அறைகூவல் விடுத்திருக்கிறது.

புதிய நிலைமை
தேர்தலுக்குப் பின்னர் நரேந்திர மோடியின் கீழ் பாஜக தலைமையிலான அரசாங்கம் அமைந்தபின், ஒரு புதிய அரசியல் நிலைமை உருவாகி இருக்கிறது. நவீன தாராளமயக் கொள்கைகள் முன்னிலும் வெறித்தனமான முறையில் முன்னெடுத்துச் செல்வதற்கான அறிகுறிகள் தென்படத் துவங்கிவிட்டன. பெரு முதலாளிகள் மற்றும் சர்வதேச நிதி மூலதனத்தின் கோரிக்கைகளை நிறைவேற்ற ஏற்கனவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு விட்டன. இதன் எதிர்விளைவாக, மக்களின் வாழ்வைக் கசக்கிப் பிழியக்கூடிய வகையில் நடவடிக்கைகளும் துவங்கி விட்டன.

பணவீக்கத்திற்கும் விலைவாசி உயர்வுக்கும் காரணமாக விளங்கும் கொள்கைகளை அமல் படுத்துவது தொடர்கின்றன. பாஜக/ஆர்எஸ்எஸ் கும்பல் இந்துத்துவா நிகழ்ச்சிநிரலை உந்தித்தள்ளுவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளன. அரசின் கீழான பல்வேறு அமைப்புகளிலும் ஆர்எஸ்எஸ் ஊழியர்களை ஊடுருவச் செய்வதற்கான வேலைகளும் நடந்து கொண்டிருக்கின்றன. இந்துத்துவா தீவிரவாத விஷமிகள் சிறுபான்மையினர் மற்றும் மதச்சார்பற்ற மாண்புகளின் மீது தாக்குதல்களைத் தொடுக்கத் துவங்கி யிருக்கின்றனர். புனேயில் நடந்துள்ள நிகழ்வுகள் மற்றும் குஜராத், உத்தரப்பிரதேசம், கர்நாடகா மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் நடந்துள்ள வகுப்பு மோதல்களும் ஓர் எச்சரிக்கை மணியாகும்.

புத்துயிரோடு எழுவோம்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிகளும் வலதுசாரிகளின் தாக்குதல்களுக்கு எதிராக எதிர்ப்பினை முடுக்கிவிடவும், உழைக்கும் மக்களின் உரிமைகளைப் பாதுகாத்திடப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வேண்டியிருக்கிறது. வகுப்புவாத சித்தாந்தம் மற்றும் அரசியலுக்கு எதிராக உறுதியான போராட்டத்தை நடத்திக் கொண்டிருப்பது இடதுசாரிகள் மட்டுமே. பெரும்பான்மை மதவெறியின் நாசகர அச்சுறுத்தல்களுக்கு எதிராக களத்தில் மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக சக்திகளை இறக்கி விடுவதில் கேந்திரமான பங்கு வகிக்க வேண்டிய நிலையில் இடதுசாரிகள் இருக்கிறார்கள்.

இப்பணிகளை வலுவாக செய்யக்கூடிய விதத்தில் இடதுசாரிகள் புத்துயிர் பெற்று எழுவதில் உடனடிக் கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியம். அனைத்து இடதுசாரி சக்திகளுடனும் ஒன்றிணைந்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியோடு செயலாற்றும். அனைத்து இடது மனோபாவம் கொண்ட சக்திகள், குழுக்கள் மற்றும் அறிவுஜீவிகளையும் ஒரேகுடையின்கீழ் திரட்டிட விவாதங்கள் நடத்தப்பட வேண்டும். ஒன்றுபட்ட மற்றும் புத்துயிர் பெற்ற இடதுசாரிகளால் மட்டுமே 
இந்திய அரசியலில் வலதுசாரிகளால் கட்டவிழ்த்துவிடப்படும் சவால்களை எதிர் கொள்ள முடியும்.


தமிழில்: ச.வீரமணி

No comments: