Sunday, May 25, 2014

தேர்தல் சீர்திருத்தம் காலத்தின் தேவை


பீப்பிள்ஸ் டெமாக்கரசி தலையங்கம்

பாஜக தேர்தலில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, பாஜகவின் நாடாளுமன்றக் குழுத்தலைவராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக் கப்பட்டதை அடுத்து, குடியரசுத் தலைவர் அவரை நாட்டின் 16ஆவது பிரதமராக நியமித்திருக்கிறார். மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்தல் என்பது எப்போதுமே அமைய விருக்கும் அரசாங்கமானது மக்களுக்குச் சிறந்ததோர் வாழ்க்கையை அளிக்கக்கூடிய விதத்தில் கொள்கைகளையும், திட்டங் களையும் அறிவித்திடும் என்ற எதிர்பார்ப்பு களுடனேயே அமைந்திடும்.
இது தொடர் பாக, நாம் மேலும் சிறிது காலத்திற்குக் காத்துக்கொண்டிருக்க வேண்டியிருக்கும். ஏனெனில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டபின்புதான், அரசாங்கம் அமைந்து, அதுதான் பின்பற்றவிருக்கும் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் சம்பந்தமாக தன்னுடைய முன்னுரிமைகளை அறிவித்திட முடியும். அதன்பின்னர்தான் நாம் மக்களைப் பாதிக்கும் பிரச்சனைகள் குறித்து உண்மையில் செயல் பட முடியும்.இப்போது நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத் திற்காக நிதி உதவி அளித்தவர்கள், புதிய அரசாங்கம் அமையும்போது அதனைத் திரும்பப் பெறுவதற்கான வேலைகளில் இறங்கு வார்கள். அதற்காக, அவர்கள் புதிதாக ஆட்சிப்பொறுப்பேற்கும் அரசாங்கத்திடம் சிலகொள்கைகளை `டிக்டேட்செய்வார்கள். அவ் வாறு அவர்கள் தாங்கள் பிரச்சாரத்தின்போது முதலீடு செய்த பணத்தை மீண்டும் எடுத் திடுவதற்காக, அரசாங்கத்திற்கு `டிக்டேட்செய்யும் கொள்கைகள் காரணமாக மக்களின் சுமைகள் மேலும் அதிகரித்திடும் என்பதில் ஐயமில்லை. எனவே இவர்களின் தலையீடு மக்களின் எதிர்பார்ப்புகளை நேரடியாகப் பொய்யாக்கிடும்.
மேலும், நம் குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளங்களுக்கும் மிகப்பெரிய அளவில் ஆபத்து ஏற்படலாம் என்று ஆழமான முறையில் சந்தேகங்களும் ஏற்பட்டுள்ளன. மக்களவையில் பாஜகவிற்கு பெரும்பான்மை கிடைத்திருக்கும் அதேசமயத்தில் அதன் நாடாளுமன்ற உறுப் பினர்களில் ஒருவர் கூட முஸ்லிம் சிறு பான்மை மதத்தை சேர்ந்தவர் இல்லை என்றஉண்மையும் தெளிவானமுறையில் அமைந் திருக்கிறது. இந்தப் பின்னணியில்தான் ஏற்கனவே நாம் பெற்றிட்ட நம்முடைய நாட்டின் மதச்சார்பின்மை, ஜனநாயகம் மற்றும் அதன்சாதனைகளை, என்னதான் அவை மிகக்குறைவாகவும், வரையறுக்கப்பட்ட நிலையிலும் இருந்தபோதிலும்கூட, அவற்றைப்பாதுகாத்திடவும் அவற்றை மேலும் வலுப்படுத்திடவும் நம்முடைய உறுதியை இரட்டிப் பாக்கிக் கொள்ள சபதமேற்றிடுவோம்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை இத்தகையதொரு உறுதியை நாம் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத் தின்போது மக்கள் மத்தியில் தெளிவாக முன்வைத்தோம். நாட்டு மக்கள்மீது தற்போது ஏற்றப்பட்டுள்ள சுமைகளிலிருந்து அவர்களுக்கு உடனடியாக நிவாரணம் அளிக்கக் கூடிய விதத்தில் மாற்றுக் கொள்கைத் திசை வழியை முன்வைத்து நாம் பிரச்சாரம்மேற்கொண்டோம்.
அவ்வாறு நாம் முன்வைத்த மாற்றுக் கொள்கைத் திசைவழி யானது, நம் குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளங்களை வலுப்படுத்துவதைக் குறிக்கோளாகவும் கொண்டிருந்தது. இந்தப் போராட்டம் இப்போது நாடாளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் தொடரும். நம் நாட்டின் நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பு முறையை மேலும் முன்னேற்றிடவும், மெருகேற்றிடவும் தேவைப்படும் சில முக்கிய அம்சங்கள் ஆராயப்பட வேண்டும் என்பதை இத்தேர்தல்களின் அனுபவம் ஏற்படுத்தி இருக்கிறது.
முதலாவதாக, சுதந்திர இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயக வரலாற்றிலேயே இப்போதுதான், முதன் முறையாக, ஒரு கட்சி நாடாளுமன்ற மக்கள வையில் மிகவும் குறைவான அளவில் வாக்கு சதவீதத்தைப் பெற்றிருந்தபோதிலும், அதிக அளவிலான இடங்களைப் பெற்று ஆட்சியை அமைக்கவிருக்கிறது. இத்தேர்தல்களில் வெறும் 31 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ள அதே சமயத்தில் 282 இடங்களை அது வென்றிருக்கிறது. இதற்கு முன் 1967இல் காங் கிரஸ் கட்சி 40.8 சதவீத வாக்குகளைப் பெற்று,283 இடங்களைப் பெற்று ஆட்சி அமைத் திருந்தது. ஜனநாயகம் என்பது `பெரும்பான்மையின் ஆட்சிஎன்றுதான் பொதுவாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. உலகில் உள்ள பல முதிர்ச்சியடைந்த ஜனநாயக நாடுகளில், வாக்காளர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக வாக்களிக்கப்பட்ட வேட்பாளர்கள் மட்டுமே மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட தகுதி பெற்றவர்களாகிறார்கள். ஆனால், நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ, இந்தியாவில் தனிப்பட்டமுறையில் எந்தவொரு கட்சி யும் இதுவரை 50 சதவீதத்திற்கு மேல் வாக்கு களைப் பெற்று மத்தியில் ஆட்சி அமைத்தது இல்லை.
தங்களுக்கு எதிராக 69 சதவீதத்தினர் வாக்களித்திருந்தும்கூட பாஜக மிகவும் வசதியான முறையில் பெரும்பான்மையைப் பெற்று வென்றிருக்கிறது. என்னே விந்தை!இத்தகைய குறைபாடுகள் குறிப்பிட்ட தொகுதியில் நிற்கும் வேட்பாளர்களில் யார் அதிகம் வாக்குகளைப் பெறுகிறார்களோ அவர் களே வென்றதாகக் கருதப்படுவார் என்கிற தற்போதைய தேர்தல் அமைப்புமுறையின் விளைவாக ஏற்பட்டுள்ளது. உலகில் உள்ள பல முதிர்ச்சிபெற்ற ஜனநாயக நாடுகள் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ அமைப்பைப் பின்பற்றுகின்றன. அதாவது, ஒவ்வொரு கட்சியும் தேர்தலில் பெறும் வாக்குகளின் சதவீதத்தின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு கட்சிக்கும் தீர்மானிக்கப்படுகின்றன. அங் கெல்லாம் மக்கள் அரசியல் கட்சிகளின் கொள்கைகள் மற்றும் திட்டங்களை ஆராய்ந்துதாங்கள் விரும்பும் அரசியல் கட்சிகளுக்குத் தான் வாக்களிக்கிறார்களே தவிர, தனிப்பட்ட நபர்களுக்கு அல்ல. ஒவ்வோர் அரசியல் கட்சியும் தங்கள் கட்சியின் சார்பில் முன்னுரிமை வேட்பாளர்கள் பட்டியலைத் தேர்தல் நடத்திடும் அதிகாரக் குழுமத்திடம் தேர்தலுக்கு முன்பே தந்திட வேண்டும்.
ஒவ்வொரு கட்சியும் பெறும் வாக்குகள் சதவீத அடிப் படையில் அக்கட்சிகள் அளித்திருக்கும் பட்டியல்களிலிருந்து நாடாளுமன்ற உறுப் பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அர சாங்கம் அமைக்கவுள்ள கட்சி, தேர்தலில் வாக்களித்தவர்களில் 50 சதவீதத்திற்கும்அதிகமான அளவில் வாக்கு களைப் பெற் றிருக்க வேண்டும். இதுதான் அந்நாடுகளில் உள்ள தேர்தல் அமைப்புமுறையாகும். நாட்டின் தேசிய ஆங்கில நாளிதழ் ஒன்று தற்போது நாட்டில் நடைபெற்ற தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் பெற்ற வாக்குகளை சதவீத அடிப்படையில் கணித்து, விகிதாச்சார அடிப்படையில் ஒவ்வொரு கட்சியும் பெறும்நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண் ணிக்கையை வெளியிட்டிருக்கிறது. அவ் வாறு அது கணக்கிட்டுள்ள விகிதத்தில் பார்த்தோமானல், பாஜகவிற்கு 282 இடங்கள் கிடைக்காது, மாறாக 169 இடங்கள் மட்டுமே கிடைக்கும். காங்கிரசுக்கு 44க்குப் பதில் 105 இடங்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 9 இடங்களுக்குப் பதில் 18 இடங்களும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு 0 இடத்திற்குப் பதில் 23 இடங்களும், அஇஅதிமுக வுக்கு 37 இடங்களுக்குப் பதில் 13 இடங் களும், திரிணாமுல் காங்கிரசுக்கு 34இடங்களுக்குப் பதில் 21 இடங்களும் மட்டுமே கிடைத்திருக்கும். (தி இந்து, மே 20, 2014).இந்தியாவில் உள்ள நிலைமைகளுக்கு, ஒட்டுமொத்த விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ அமைப்புமுறை என்பது சிறந்ததொரு தீர்வாக அமையும் என்று சொல்வதற்கில்லை,
மாறாக,உலகில் வேறெந்த நாட்டுடனும் பொருத்திப் பார்க்க முடியாத அளவில், மிகப்பெரிய அளவில் சமூக-கலாச்சார-மத-மொழி வேற்றுமைகள் நிறைந்துள்ள நமது நாட்டில் மிகவும்சிறுபான்மையாகவுள்ள தங்கள் பிராந்தியத் தைச் சேர்ந்தவர்களும் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற வேண்டும் என்று விரும் புவது இயற்கையேயாகும். எனவே, இத்தகைய நிலைமைகளின்கீழ், பாதி அளவிற்குக் கட்சியின் வேட்பாளர் முன்னுரிமைப் பட்டியலுடன் கூடிய விகிதாச்சார பிரதிநிதித்துவமும், மீதிபாதி தனிப்பட்ட முறையில் வேட்பாளர்களும் நிற்கக்கூடிய தேர்தல் அமைப்புமுறை மிகச்சிறந்ததொரு அமைப்பாக இருந்திடும். உதாரண மாக, தற்போதுள்ள நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் இரு தொகுதிகளை ஒன்றாக இணைத்து, ஒவ்வொரு வாக்காளருக்கும் இரு வாக்குரிமைகளை அளித்து, ஒரு வாக்கை அவர் தனிப்பட்ட வேட்பாளர் ஒருவருக்கும், மற்றொரு வாக்கை, தான் விரும்பும் கட்சிக்கும் (அதன் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் அடிப்படையில்) அளித்திட வகை செய்திட வேண் டும்.
தனிப்பட்ட நபர்கள் 50 சதவீதத்திற்கும் அதிகமான அளவில் வாக்குகளைப் பெற்றிருப்பின், அவர்களில் எவர் அதிகமான வாக்கு களைப் பெற்றிருக்கிறாரோ அவர் வென்றதாக அறிவிக்கப்படும் அதே சமயத்தில், அரசியல் கட்சியின் வேட்பாளரைப் பொறுத்தவரை தேசிய அளவில் அக்கட்சி பெறும் வாக்குகளின் சதவீத அடிப்படையில் தேர்ந்தெடுத்திட வேண்டும். இந்த எண்ணிக்கை, அக்கட்சியால் முன்னரே அளிக்கப்பட்டுள்ள முன்னுரிமைப் பட்டியலில் உள்ள வேட்பாளர்களிலிருந்து நிரப்பப்பட வேண்டும்.கூடுதலாக, நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கு ஒரு கட்சி பெறும் குறைந்தபட்ச வாக்குசதவீதமும் நிர்ணயிக்கப்படலாம். உதாரணமாக 2 சதவீதம் என்று நிர்ணயிக்கப்படலாம். இதற்குக் குறைவான சதவீத அளவிற்கு வாக்குகளைப் பெறும் கட் சிக்கு விகிதாச்சார அடிப்படையில் நாடாளு மன்றத்தில் இடமிருக்காது. ஆனால் அதேசமயத்தில் தனிப்பட்ட முறையில் அக்கட்சியின் சார்பில் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக் கப்பட்ட வேட்பாளர் இடம் பெறலாம். இத்தகைய முறையானது கூட்டணி அமைத்துத்தான் ஆகவேண்டும் என்கிற பிரச்சனைக்கும், இதன்காரணமாக நாடாளு மன்றத்தில் மிகச்சிறிய அளவில் விகிதாச்சாரம் உள்ள கட்சிகள்கூட மிரட்டும் (பிளாக்மெயில்) ஆபத்துக்களுக்கும் தீர்வு கண்டிட முடியும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாட் டில் இயங்கும் அனைத்து அரசியல் கட்சிகளு டனும் கலந்து பேசி ஒரு கருத்தொற்றுமை ஏற்படுவதன் அடிப்படையில் இத்தகைய பகுதி விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் அமைப்புமுறையைக் கொண்டுவர வேண்டும் என்றே கூறி வருகிறது.இப்போது நடைபெற்ற தேர்தல்களில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பணபலம் பயன்படுத்தப்பட்டதைப் பார்த் தோம். அதேபோன்று இந்தத் தடவை மோடிக் கான பிரச்சாரத்திற்காக குறைந்தபட்ச மதிப் பீட்டின்படியே 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவானது. கூடுத லாக, வாக்காளர்களைக் கவர்ந்திழுப்பதற்காக பல் வேறு தவறான வகைகளில் பணம் பயன்படுத்தப் பட்டுள்ளது. ஒரு வாக்கிற்கு ஆயிரம் ரூபாய் வரைக்கும் வாக்காளர்களுக்கு நேரடி யாக வழங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கூறு கின்றன. தேர்தல் ஆணையமும் நாட்டின் பலபகுதிகளில் பணம், மது பாட்டில்கள் மற் றும் வாக்காளர்களுக்கு அளிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பல்வேறுவிதமான நன்கொடைப் பொருள்களையும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குப் பறிமுதல் செய்திருக்கிறது.
இவ்வாறு பணபலம் பயன்படுத்தப் பட்டிருப்பது தேர்தல் முடிவுகளிலும் பிரதி பலித்திருக்கிறது.ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 16ஆவது மக்களவைக்கு வெற்றி பெற் றுள்ள 541 வேட்பாளர்களில் 442 பேர் கோடீஸ்வரர்களா வார்கள். 15ஆவது மக்களவையில் 300 பேர் கோடீஸ்வரர்கள். இப்போது அதைவிட அதிகம். இந்த 442 கோடீஸ்வரர்களின் மொத்த சொத்தின் மதிப்பு (அவர்கள் அளித்துள்ள உறுதிவாக்குமூலத்தின் அடிப்படையிலேயே) 6500 கோடி ரூபாய்களாகும். இத்தகைய கோடீஸ்வரர்களில் பாஜக நாடாளுமன்ற உறுப் பினர்கள் 237 பேர், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 35 பேர்களாவர்.பண பலத்தை இவ்வாறு பயன்படுத்துவது மக்களின் ஜனநாயகத் தேர்வை சிதைத்திடும். போட்டியிடும் வேட்பாளர் சிறந்த கொள்கை மற்றும் திட்டங்களைக் கொண்டிருக்கிறாரா என்றெல்லாம் ஆராய்வது இல்லாமல் போய்,பணம் அதிகமாகக் கொடுத்தது யார் என்றஅடிப்படையில் வாக்களிக்க மக்கள் ஈர்க் கப்படுகிறார்கள்.
நாட்டின் ஜனநாயகத்தை ஆரோக்கியமான முறையில் மேம்படுத்திட இவ்வாறு பணம் தரும் முறை ஒழிக்கப்பட வேண்டியது அவசியம். இதனை ஒழித்துக் கட்ட வேண்டும் என்றால் அரசியல் கட்சிகள் செய்திடும் செலவினங்களுக்கு தற்போது எவ்வித முறைப்படுத்தலும் அல்லது வரம்பும் இல்லாத நிலை கடுமையான முறையில் மாற்றப்பட வேண்டும். இன்றையதினம், வேட் பாளர்கள் செலவு செய்யும் தொகைக்குத்தான் வரம்பு இருக்கிறதேயொழிய, கட்சியின் செலவினங்களுக்கு எவ்வித வரம்பும் கிடையாது. அரசியல் கட்சிகளின் செலவினங்களுக்கும் வரம்பு நிர்ணயிக்க வேண்டும் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் கோரி வந்திருக்கிறது. இவ்வாறு தேர்தல் விதிகளில் குறைபாடுகள் இருப்பதன் காரணமாகத்தான், தங்கள் தலைவர்கள் நாடு முழுதும் குறுக்கும் நெடுக்குமாக தனியார் ஜெட் விமானங்களிலும் ஹெலிகாப்டர்களிலும் பயணம் செய்ய பல அரசியல் கட்சிகளால் பல்லாயிரம் கோடி ரூபாய்கள் செலவு செய்ய முடிந்தது. பண பலம் உள்ள கட்சிகளுடன் சிறிய கட்சிகள் குறிப்பாக குறைந்த வசதிகளுடன் கூடிய சுயேச்சைகள் போட்டிபோட முடியாது ஓரங்கட்டப்படும் நிலை உருவாகி உள்ளது.
இத்தகு நிலை நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மாண்பினைக் குறைக்கக்கூடிய விதத்தில் மக்கள் தேர்வு செய்யும் வாய்ப்புகளை சிதைக்கிறது.சில அரசியல் கட்சிகளுக்கு கார்ப் பரேட்டுகள் எவ்வித வரம்புமின்றி நிதி யினை வாரி வழங்கி இருக்கின்றனர். இதனைசரிசெய்ய வேண்டும் எனில், கார்ப்பரேட்டுகள் அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிப்பது முற்றிலுமாகத் தடை செய்யப்பட வேண்டும். மாறாக, கார்ப்பரேட்டுகள் நம் ஜனநாயகத்தை வலுப் படுத்துவதற்கு நிதி அளித்திட வேண்டும். இத்தகைய நிதி தேர்தல் ஆணையம் போன்ற அமைப்புகளிடம்தான் தரப்பட வேண்டும். அவை, தேர்தலை சிறப்பாக நடத்திட பயன்படுத்திக்கொள்ள முடியும்.
பல மேற்கத்திய ஜனநாயக நாடுகளில் இதுதான் தற்போதைய நடைமுறையாகும்.தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பாக ஓர் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளைப் பரிசீலிக்க வேண்டிய தருணம் இது. இவ்வாறு மேற்கொள்ளப்படும் பரிசீலனைகளில் நாம் மேலே கூறிய அனைத்து அம்சங்களும் அலசி ஆராயப்பட வேண்டும். நம்முடைய ஜனநாயக நடைமுறைகளை மிகப்பெரிய அளவில் சிதைத்துள்ள நிலைமைகளைச் சரிசெய்திட இவை முற்றிலும் அவசியமாகும். இத்தகைய சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்படுவதை உத்தரவாதப்படுத்தக்கூடிய விதத்தில் ஆழமான வகையில் முயற்சிகள் மேற்கொள் ளப்பட வேண்டும். தேர்தல்களுக்குப்பின் உள்ள நிலை மைகள், நாட்டின், நாட்டு மக்களின் எதிர்காலத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய விதத்தில் புதிய சவால்களை உரு வாக்கியுள்ளன. எதிர்காலத்தில், மதவெறியைக் கூர்மைப்படுத்தக்கூடிய அனைத்துவிதமான முயற்சிகளிலிருந்தும் நம் நாட்டின் மதச் சார்பற்ற ஜனநாயக அடித்தளங்களைப் பாது காத்து, வலுப்படுத்தக்கூடிய விதத்தில் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லக்கூடிய அதே சமயத்தில், நாட்டு மக்களின் வாழ்க் கைத்தரத்தைப் பாதிப்புக்கு உள்ளாக்கக்கூடிய விதத்தில் அவர்கள் மீது ஏவப்படக்கூடிய தாக்குதல்களுக்கு எதிராகவும் போராட்டங் களை முன்னெடுத்துச் செல்ல வேண்டி யிருக்கும். நாம் நடத்தவிருக்கும் இத்தகைய போராட்டங்களின் வலுதான் நம் நாட்டின், நாட்டு மக்களின் எதிர்கால வடிவத்தைத் தீர்மானித்திடும்.

(தமிழில்: ச.வீரமணி)

No comments: