Monday, November 30, 2009

சர்வதேச கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் 11ஆவது மாநாட்டின் முக்கியத்துவம் - சீத்தாராம் யெச்சூரி




புதுதில்லியில் நடைபெற்ற சர்வதேச கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் 11ஆவது மாநாடு தன்னுடைய நிகழ்ச்சிநிரலை மிகவும் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. மாநாடு தில்லி பிரகடனத்தையும் ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது. அடுத்து நடைபெறவேண்டிய 12ஆவது மாநாட்டை தென் ஆப்ரிக்கக் குடியரசில் நடத்திடவும், அதனை தென் ஆப்ரிக்கக் கம்யூனிஸ்ட் கட்சி 2010 இல் கடைசி காலாண்டில் நடத்திடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் இம்மாநாடு பல வழிகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தற்போதுள்ள உலகப் பொருளாதார மந்தம் தொடர்பாக உலகம் முழுதும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்கள் ஆய்வினை இம்மாநாட்டில் சமர்ப்பித்து, முதலாளித்துவமானது ஒரு வரையறைக்கு மேல் வளர முடியாது என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது என்று கூறி, இதற்கெதிராக மனித சமூகத்திற்கு விடுதலையை அளிக்கக்கூடியது சோசலிசமே என்றும் அதனை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அடிக்கோடிட்டு வலியுறுத்தின. இடைப்பட்ட காலத்தில், உலகப் பொருளாதார மந்தத்திலிருந்து தன்னைக் காப்பாற்றி மீண்டெழுவதற்காக உலக முதலாளித்துவம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளையும் அவைகள் விளக்கின. உதாரணமாக, கார்பரேட் நிறுவனங்கள் நெருக்கடியிலிருந்து மீளவேண்டுமென்பதற்காக அவை கேட்டுக்கொண்டபடி முதலாளித்துவ அரசுகள் 14 டிரில்லியன் டாலர்கள் உதவி இருக்கின்றன. இதற்குப் பதிலாக, இவ்வளவு பெரிய தொகையை பல்வேறு நாடுகளிலும் பொது முதலீட்டில் செலவழித்திருந்தால், அது மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்பினையும் பெருக்கி அந்தந்த நாடுகளின் பொருளாதார மற்றும் சமூகக் கட்டமைப்பையும் எழுப்பியிருக்கும். அதன் மூலமாக மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்து, தங்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முயற்சிப்பதன் மூலம் முதலாளித்துவ உற்பத்தி முறையும் மீண்டெழுந்து வலிவும் பொலிவும் பெற்றிருக்கும், உலகப் பொருளாதாரமும் இப்போது ஏற்பட்டுள்ள மந்தத்திலிருந்து மீண்டெழுந்திருக்கும். ஆயினும், இந்தப் பாதையில் செல்வதென்பது கார்பரேட் நிறுவனங்களைப் பொறுத்த வரை, தாங்கள் முதலாளித்துவ நெருக்கடிக்கு முன்பு லாபமீட்டியதுபோல் லாபமீட்ட வெகு காலமாகும். எனவே இதனை அவை விரும்பவில்லை. நெருக்கடிக்குள்ளான நிதி ஜாம்பவான்கள் அத்தொகையை நேரடியாகவே விழுங்கி தங்களுக்கு லாபத்தில் ஏற்பட்ட இழப்பைச் சரிசெய்து கொண்டன. ஆனால், இந்தப் பாதையானது மிகப் பெரிய அளவில் வேலையிழப்பினை ஏற்படுத்தி, மக்களை உலக அளவில் வறுமை மற்றும் பட்டினிக் கொடுமைக்குள் தள்ளி இருக்கிறது. இவ்வாறு உலக முதலாளித்தவம் மக்களைப் பற்றிக் கவலைப்படாது தன் நலன்களை மட்டும் காப்பாற்றிக்கொண்டிருக்கக்கூடிய சூழ்நிலையில், நடைபெற்ற சர்வதேச கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் மாநாடு, மக்களைக் காப்பாற்றிட ஒரு மாற்றுப் பாதையைக் காட்டியிருக்கிறது. வெகுஜன இயக்கங்களின் மூலம் அரசியல்ரீதியாக மக்களை அணிதிரட்டுவதன் அடிப்படையில் இந்த மாற்று இருந்திட வேண்டும். வெகுஜன இயக்கங்கள் மூலம் முதலாளித்துவத்திற்கு எதிராக, சோசலிசத்திற்கான ஓர் அரசியல் மாற்றுக்கான போராட்டம் வலுப்பட வேண்டும் என்று அறைகூவல் விடுத்திருக்கிறது.

பெர்லின் சுவர் அகற்றப்பட்ட 20ஆம் ஆண்டு தினம் கோலாகலமாகக் கொண்டாடப்படும் தருணத்தில் இம்மாநாடு நடைபெற்றது. மேற்கத்திய நாடுகள் அனைத்திலும், இக்கொண்டாட்டத்தை, கம்யூனிஸ்ட் எதிர்ப்புப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்திக் கொண்டன. உலகப் பொருளாதார மந்தத்தால் மக்கள் படும் துன்ப துயரங்களை மறக்கடிக்கவும் முதலாளித்துவ உலகம் இதனைப் பயன்படுத்திக் கொண்டது. ஐரோப்பா கண்டம் முழுவதுமே கம்யூனிசத்தை பாசிசத்துடன் ஒப்பிட்டு மிகவும் கேவலமான முறையில் பிரச்சாரங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன.

பெர்லினில் உள்ள ரெய்ச்ஸ்டாக் கோட்டையில் செங்கொடியை உயர்த்தியதன் மூலம் பாசிசமும் ஹிட்லரும் தோற்றதை உலகுக்கு அறிவித்தது, சோவியத் யூனியன்தானே தவிர, அமெரிக்காவோ அல்லது இங்கிலாந்தோ அல்லது பிரான்சோ அல்ல. இந்த வரலாற்று உண்மையை மீளவும் நாம் மக்கள் மத்தியில் சொல்ல வேண்டியிருக்கிறது. கம்யூனிச எதிர்ப்பு என்பது ஐரோப்பிய நாடுகளில் மிகவும் இழிவான நிலைக்குச் சென்றிருக்கிறது. கிரீஸில் ஒரு பள்ளிக்கூடத்தில் ஓர் இளைஞன் சோசலிசத்திற்கு ஆதரவாக இருந்தான் என்பதற்காகப் பள்ளி நிர்வாகம் அவனை இடைநீக்கம் செய்திருக்கிறது. இவ்வாறு உலகம் முழுதும் வரலாற்றைத் திரித்திடும் போக்கு முன்னுக்கு வந்துள்ள சூழ்நிலையில்தான் இதற்கெதிராக கம்யூனிச அடையாளத்தை உயர்த்திப் பிடிக்கும் வகையிலும், இத்தகைய முதலாளித்துவத்தின் சித்தாந்தரீதியான தாக்குதலை முறியடிக்கக்கூடிய வகையிலும் நடைபெற்றுள்ள சர்வதேச கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் 11ஆவது மாநாடு முக்கியத்துவம் பெறுகிறது.

மாநாட்டின்போது அமெரிக்காவிலிருந்தும் கியூபாவிலிருந்தும் வந்த கம்யூனிஸ்ட் கட்சிப் பிரதிநிதிகளும், இஸ்ரேலிலிருந்தும் பாலஸ்தீனத்திலிருந்தும் வந்த கம்யூனிஸ்ட் கட்சிப் பிரதிநிதிகளும், ஒருவரையொருவர் கட்டித் தழுவிக்கொண்டதைப் பார்த்தோம். இதுதான் உண்மையான கம்யூனிஸ்ட் உணர்வு என்பதாகும். மாநாட்டின் துவக்கத்தில் சர்வதேசிய கீதம் இந்தியில் இசைக்கப்பட்டு அது முடிவுறும் சமயத்தில் ஒவ்வொரு நாட்டிலிருந்தும் வந்திருந்த பிரதிநிதிகள் தங்கள் தங்கள் மொழியில் சர்வதேசிய கீதத்தை இசைத்தனர். இதுவே மனிதகுலத்தின் சகோதரத்துவம். இன்றைய உலகில் கம்யூனிஸ்ட் சித்தாந்தம் ஒன்றால்தான் இத்தகைய அரசியல் உணர்வைப் பிரதிபலிக்க முடியும்.

பல்வேறு நாடுகளில், பல்வேறு சிரமமான சூழ்நிலைகளில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கட்சிகளின் பிரதிநிதிகள் தங்கள் அனுபவங்களை மாநாட்டில் பகிர்ந்துகொண்டார்கள். இவ்வாறு செயல்படும் கம்யூனிஸ்ட் கட்சிகளில் இஸ்ரேல் கம்யூனிஸ்ட் கட்சியும் ஒன்றாகும். அரபு நிலங்களை இஸ்ரேல் ஆக்கிரமித்திருப்பதைக் கண்டித்திருப்பதுடன், அரசின் கட்டாய ராணுவப் பயிற்சிக்கு எதிராக உயர்நிலைப் பள்ளி மாணவர்களை இஸ்ரேல் கம்யூனிஸ்ட் கட்சி அணிதிரட்டி வருகிறது. மிகவும் இக்கட்டான சூழ்நிலைமைகளிலும் கூட, இஸ்ரேல் கம்யூனிஸ்ட் கட்சியானது, 150 உறுப்பினர்கள் கொண்ட இஸ்ரேல் நாடாளுமன்றத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மூன்று உறுப்பினர்களை தொடர்ந்து அனுப்பி வருகிறது. இம்மூவரில் இருவர் யூதர்கள் என்பதும், ஒருவர் அராபியர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலில் உள்ள கட்சிகளில் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றில்தான் யூதர்களும், அராபியர்களும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

பல நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு, மக்கள் ஆதரவு வெகு குறைவு என்று ஒரு துஷ்பிரச்சாரம் அடிக்கடி மேற்கொள்ளப்படுகிறது. இத்தகைய பிரச்சாரத்தை வாதத்திற்காக ஏற்றுக்கொண்டாலும், அந்தந்த நாடுகளில் அவை ஆளும் வர்க்கங்களின் மூர்க்கத்தனமான தாக்குதல்களை எதிர்த்து நின்றே தங்களின் அரசியல் போராட்டங்களை நடத்தி வருகின்றன. பல நாடுகளில் அவர்களின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. இத்தகைய கம்யூனிஸ்ட் கட்சிகள்தான் முதலாளித்துவத்திற்கு எதிராக கூர்மையான மற்றும் தெளிவான மாற்றை முன்வைத்திருக்கின்றன.

இத்தகைய கம்யூனிஸ்ட் அடையாளம் இன்றைய நிலையில் மிகவும் அவசியமாகும். மாநாட்டில் பங்கேற்ற கட்சிகளில் பல, தங்கள் நாடுகளில் ஏகாதிபத்திய எதிர்ப்பு மேடைகளில் முன்னணியில் உள்ள கட்சிகளாகும். சர்வதேச அளவில் நடைபெறும் இத்தகைய மாநாடுகளில் பங்கேற்பதும், வலுப்படுத்துவதும் முதலாளித்துவத்திற்கு எதிராக மாற்றை ஏற்படுத்துவதற்கு அவசியம். இத்தகைய நடைமுறையானது இரண்டாம் உலகப் போருக்கு முன்பிருந்ததைப்போல் ‘கம்யூனிஸ்ட் அகிலத்தை‘ உருவாக்குவதற்கான முயற்சி அல்ல என்பதில் நாம் தெளிவாகவே இருக்கிறோம். அந்தக் காலங்கள் இப்போது வரலாறாகிப் போய்விட்டன. இப்போது நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும், பல்வேறு நாடுகளிலும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கிடையே பெருமளவில் ஒருங்கிணைப்பை உருவாக்குவதும், தார்மீக ஆதரவினை வெளிப் படுத்தவதும்தான். இத்தகைய கம்யூனிச அடையாளம்தான், ஒன்றுபட்ட ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணிகளுக்கு அடித்தளங்களாக அமைந்திடும்.

இத்தகைய சர்வதேச மாநாடுகள், மாநாட்டில் முன்வைக்கப்பட்ட ஆய்வுப் பொருள் மீது கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கவனத்தை ஈர்ப்பதுடன், சோசலிசத்திற்கு ஆதரவாக ஓர் அரசியல் மாற்றை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதோடு மட்டும் நிற்காமல், இத்தகைய மாநாடுகள்தான் சுரண்டலுக்கும், மனித குலத்தின் துன்பதுயரங்களுக்கும் மாற்று சோசலிசமே என்றும் உரத்துப் பிரகடனம் செய்கிறது.

(தமிழில்: ச.வீரமணி)

No comments: