Showing posts with label 11th meeting of InternationCommunist and Workers' Parties. Show all posts
Showing posts with label 11th meeting of InternationCommunist and Workers' Parties. Show all posts

Monday, November 30, 2009

சர்வதேச கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் 11ஆவது மாநாட்டின் முக்கியத்துவம் - சீத்தாராம் யெச்சூரி




புதுதில்லியில் நடைபெற்ற சர்வதேச கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் 11ஆவது மாநாடு தன்னுடைய நிகழ்ச்சிநிரலை மிகவும் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. மாநாடு தில்லி பிரகடனத்தையும் ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது. அடுத்து நடைபெறவேண்டிய 12ஆவது மாநாட்டை தென் ஆப்ரிக்கக் குடியரசில் நடத்திடவும், அதனை தென் ஆப்ரிக்கக் கம்யூனிஸ்ட் கட்சி 2010 இல் கடைசி காலாண்டில் நடத்திடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் இம்மாநாடு பல வழிகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தற்போதுள்ள உலகப் பொருளாதார மந்தம் தொடர்பாக உலகம் முழுதும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்கள் ஆய்வினை இம்மாநாட்டில் சமர்ப்பித்து, முதலாளித்துவமானது ஒரு வரையறைக்கு மேல் வளர முடியாது என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது என்று கூறி, இதற்கெதிராக மனித சமூகத்திற்கு விடுதலையை அளிக்கக்கூடியது சோசலிசமே என்றும் அதனை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அடிக்கோடிட்டு வலியுறுத்தின. இடைப்பட்ட காலத்தில், உலகப் பொருளாதார மந்தத்திலிருந்து தன்னைக் காப்பாற்றி மீண்டெழுவதற்காக உலக முதலாளித்துவம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளையும் அவைகள் விளக்கின. உதாரணமாக, கார்பரேட் நிறுவனங்கள் நெருக்கடியிலிருந்து மீளவேண்டுமென்பதற்காக அவை கேட்டுக்கொண்டபடி முதலாளித்துவ அரசுகள் 14 டிரில்லியன் டாலர்கள் உதவி இருக்கின்றன. இதற்குப் பதிலாக, இவ்வளவு பெரிய தொகையை பல்வேறு நாடுகளிலும் பொது முதலீட்டில் செலவழித்திருந்தால், அது மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்பினையும் பெருக்கி அந்தந்த நாடுகளின் பொருளாதார மற்றும் சமூகக் கட்டமைப்பையும் எழுப்பியிருக்கும். அதன் மூலமாக மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்து, தங்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முயற்சிப்பதன் மூலம் முதலாளித்துவ உற்பத்தி முறையும் மீண்டெழுந்து வலிவும் பொலிவும் பெற்றிருக்கும், உலகப் பொருளாதாரமும் இப்போது ஏற்பட்டுள்ள மந்தத்திலிருந்து மீண்டெழுந்திருக்கும். ஆயினும், இந்தப் பாதையில் செல்வதென்பது கார்பரேட் நிறுவனங்களைப் பொறுத்த வரை, தாங்கள் முதலாளித்துவ நெருக்கடிக்கு முன்பு லாபமீட்டியதுபோல் லாபமீட்ட வெகு காலமாகும். எனவே இதனை அவை விரும்பவில்லை. நெருக்கடிக்குள்ளான நிதி ஜாம்பவான்கள் அத்தொகையை நேரடியாகவே விழுங்கி தங்களுக்கு லாபத்தில் ஏற்பட்ட இழப்பைச் சரிசெய்து கொண்டன. ஆனால், இந்தப் பாதையானது மிகப் பெரிய அளவில் வேலையிழப்பினை ஏற்படுத்தி, மக்களை உலக அளவில் வறுமை மற்றும் பட்டினிக் கொடுமைக்குள் தள்ளி இருக்கிறது. இவ்வாறு உலக முதலாளித்தவம் மக்களைப் பற்றிக் கவலைப்படாது தன் நலன்களை மட்டும் காப்பாற்றிக்கொண்டிருக்கக்கூடிய சூழ்நிலையில், நடைபெற்ற சர்வதேச கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் மாநாடு, மக்களைக் காப்பாற்றிட ஒரு மாற்றுப் பாதையைக் காட்டியிருக்கிறது. வெகுஜன இயக்கங்களின் மூலம் அரசியல்ரீதியாக மக்களை அணிதிரட்டுவதன் அடிப்படையில் இந்த மாற்று இருந்திட வேண்டும். வெகுஜன இயக்கங்கள் மூலம் முதலாளித்துவத்திற்கு எதிராக, சோசலிசத்திற்கான ஓர் அரசியல் மாற்றுக்கான போராட்டம் வலுப்பட வேண்டும் என்று அறைகூவல் விடுத்திருக்கிறது.

பெர்லின் சுவர் அகற்றப்பட்ட 20ஆம் ஆண்டு தினம் கோலாகலமாகக் கொண்டாடப்படும் தருணத்தில் இம்மாநாடு நடைபெற்றது. மேற்கத்திய நாடுகள் அனைத்திலும், இக்கொண்டாட்டத்தை, கம்யூனிஸ்ட் எதிர்ப்புப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்திக் கொண்டன. உலகப் பொருளாதார மந்தத்தால் மக்கள் படும் துன்ப துயரங்களை மறக்கடிக்கவும் முதலாளித்துவ உலகம் இதனைப் பயன்படுத்திக் கொண்டது. ஐரோப்பா கண்டம் முழுவதுமே கம்யூனிசத்தை பாசிசத்துடன் ஒப்பிட்டு மிகவும் கேவலமான முறையில் பிரச்சாரங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன.

பெர்லினில் உள்ள ரெய்ச்ஸ்டாக் கோட்டையில் செங்கொடியை உயர்த்தியதன் மூலம் பாசிசமும் ஹிட்லரும் தோற்றதை உலகுக்கு அறிவித்தது, சோவியத் யூனியன்தானே தவிர, அமெரிக்காவோ அல்லது இங்கிலாந்தோ அல்லது பிரான்சோ அல்ல. இந்த வரலாற்று உண்மையை மீளவும் நாம் மக்கள் மத்தியில் சொல்ல வேண்டியிருக்கிறது. கம்யூனிச எதிர்ப்பு என்பது ஐரோப்பிய நாடுகளில் மிகவும் இழிவான நிலைக்குச் சென்றிருக்கிறது. கிரீஸில் ஒரு பள்ளிக்கூடத்தில் ஓர் இளைஞன் சோசலிசத்திற்கு ஆதரவாக இருந்தான் என்பதற்காகப் பள்ளி நிர்வாகம் அவனை இடைநீக்கம் செய்திருக்கிறது. இவ்வாறு உலகம் முழுதும் வரலாற்றைத் திரித்திடும் போக்கு முன்னுக்கு வந்துள்ள சூழ்நிலையில்தான் இதற்கெதிராக கம்யூனிச அடையாளத்தை உயர்த்திப் பிடிக்கும் வகையிலும், இத்தகைய முதலாளித்துவத்தின் சித்தாந்தரீதியான தாக்குதலை முறியடிக்கக்கூடிய வகையிலும் நடைபெற்றுள்ள சர்வதேச கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் 11ஆவது மாநாடு முக்கியத்துவம் பெறுகிறது.

மாநாட்டின்போது அமெரிக்காவிலிருந்தும் கியூபாவிலிருந்தும் வந்த கம்யூனிஸ்ட் கட்சிப் பிரதிநிதிகளும், இஸ்ரேலிலிருந்தும் பாலஸ்தீனத்திலிருந்தும் வந்த கம்யூனிஸ்ட் கட்சிப் பிரதிநிதிகளும், ஒருவரையொருவர் கட்டித் தழுவிக்கொண்டதைப் பார்த்தோம். இதுதான் உண்மையான கம்யூனிஸ்ட் உணர்வு என்பதாகும். மாநாட்டின் துவக்கத்தில் சர்வதேசிய கீதம் இந்தியில் இசைக்கப்பட்டு அது முடிவுறும் சமயத்தில் ஒவ்வொரு நாட்டிலிருந்தும் வந்திருந்த பிரதிநிதிகள் தங்கள் தங்கள் மொழியில் சர்வதேசிய கீதத்தை இசைத்தனர். இதுவே மனிதகுலத்தின் சகோதரத்துவம். இன்றைய உலகில் கம்யூனிஸ்ட் சித்தாந்தம் ஒன்றால்தான் இத்தகைய அரசியல் உணர்வைப் பிரதிபலிக்க முடியும்.

பல்வேறு நாடுகளில், பல்வேறு சிரமமான சூழ்நிலைகளில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கட்சிகளின் பிரதிநிதிகள் தங்கள் அனுபவங்களை மாநாட்டில் பகிர்ந்துகொண்டார்கள். இவ்வாறு செயல்படும் கம்யூனிஸ்ட் கட்சிகளில் இஸ்ரேல் கம்யூனிஸ்ட் கட்சியும் ஒன்றாகும். அரபு நிலங்களை இஸ்ரேல் ஆக்கிரமித்திருப்பதைக் கண்டித்திருப்பதுடன், அரசின் கட்டாய ராணுவப் பயிற்சிக்கு எதிராக உயர்நிலைப் பள்ளி மாணவர்களை இஸ்ரேல் கம்யூனிஸ்ட் கட்சி அணிதிரட்டி வருகிறது. மிகவும் இக்கட்டான சூழ்நிலைமைகளிலும் கூட, இஸ்ரேல் கம்யூனிஸ்ட் கட்சியானது, 150 உறுப்பினர்கள் கொண்ட இஸ்ரேல் நாடாளுமன்றத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மூன்று உறுப்பினர்களை தொடர்ந்து அனுப்பி வருகிறது. இம்மூவரில் இருவர் யூதர்கள் என்பதும், ஒருவர் அராபியர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலில் உள்ள கட்சிகளில் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றில்தான் யூதர்களும், அராபியர்களும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

பல நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு, மக்கள் ஆதரவு வெகு குறைவு என்று ஒரு துஷ்பிரச்சாரம் அடிக்கடி மேற்கொள்ளப்படுகிறது. இத்தகைய பிரச்சாரத்தை வாதத்திற்காக ஏற்றுக்கொண்டாலும், அந்தந்த நாடுகளில் அவை ஆளும் வர்க்கங்களின் மூர்க்கத்தனமான தாக்குதல்களை எதிர்த்து நின்றே தங்களின் அரசியல் போராட்டங்களை நடத்தி வருகின்றன. பல நாடுகளில் அவர்களின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. இத்தகைய கம்யூனிஸ்ட் கட்சிகள்தான் முதலாளித்துவத்திற்கு எதிராக கூர்மையான மற்றும் தெளிவான மாற்றை முன்வைத்திருக்கின்றன.

இத்தகைய கம்யூனிஸ்ட் அடையாளம் இன்றைய நிலையில் மிகவும் அவசியமாகும். மாநாட்டில் பங்கேற்ற கட்சிகளில் பல, தங்கள் நாடுகளில் ஏகாதிபத்திய எதிர்ப்பு மேடைகளில் முன்னணியில் உள்ள கட்சிகளாகும். சர்வதேச அளவில் நடைபெறும் இத்தகைய மாநாடுகளில் பங்கேற்பதும், வலுப்படுத்துவதும் முதலாளித்துவத்திற்கு எதிராக மாற்றை ஏற்படுத்துவதற்கு அவசியம். இத்தகைய நடைமுறையானது இரண்டாம் உலகப் போருக்கு முன்பிருந்ததைப்போல் ‘கம்யூனிஸ்ட் அகிலத்தை‘ உருவாக்குவதற்கான முயற்சி அல்ல என்பதில் நாம் தெளிவாகவே இருக்கிறோம். அந்தக் காலங்கள் இப்போது வரலாறாகிப் போய்விட்டன. இப்போது நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும், பல்வேறு நாடுகளிலும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கிடையே பெருமளவில் ஒருங்கிணைப்பை உருவாக்குவதும், தார்மீக ஆதரவினை வெளிப் படுத்தவதும்தான். இத்தகைய கம்யூனிச அடையாளம்தான், ஒன்றுபட்ட ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணிகளுக்கு அடித்தளங்களாக அமைந்திடும்.

இத்தகைய சர்வதேச மாநாடுகள், மாநாட்டில் முன்வைக்கப்பட்ட ஆய்வுப் பொருள் மீது கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கவனத்தை ஈர்ப்பதுடன், சோசலிசத்திற்கு ஆதரவாக ஓர் அரசியல் மாற்றை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதோடு மட்டும் நிற்காமல், இத்தகைய மாநாடுகள்தான் சுரண்டலுக்கும், மனித குலத்தின் துன்பதுயரங்களுக்கும் மாற்று சோசலிசமே என்றும் உரத்துப் பிரகடனம் செய்கிறது.

(தமிழில்: ச.வீரமணி)

Wednesday, November 25, 2009

மனித குலத்திற்கு சோசலிசமே மெய்யான மாற்று!



முதலாளித்துவத்தை தூக்கி எறிவோம்! மனித குலத்திற்கு சோசலிசமே மெய்யான மாற்று! சர்வதேச கம்யூனிஸ்ட், தொழிலாளர் கட்சிகளின் 11-வது மாநாட்டுப் பிரகடனம்
மனித குலத்தின் வருங்காலத் திற்கு சோசலிசமே ஒரே மெய்யான மாற்று என்று பிரகடனப்படுத்துவதற்கான போராட்டங்களை வலுப்படுத்துவதில் உலக மக்கள் கம்யூனிஸ்ட்டுக ளுடன் இணைந்து நிற்க வேண்டு மென்று தில்லியில் நடந்த உலக கம்யூனிஸ்ட், தொழிலாளர் கட்சிகளின் 11-வது மாநாடு பிரகடனம் செய்துள்ளது.

47 நாடுகளைச் சேர்ந்த 55 கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் 11-வது சர்வதேச மாநாடு புதுதில்லியில் நவம்பர் 20 முதல் 22 வரை நடைபெற்றது.

இம்மாநாடு தனது தில்லிப் பிரகடனத்தை ஒருமனதாக நிறைவேற்றியது. பிரகடனம் வருமாறு:-

“சர்வதேசப் பொருளாதார நெருக்கடி, தொழிலாளர்கள், மக்கள் ஆகியோரின் போராட்டம், இதற்கான மாற்றுக்கள், கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் இயக்கத்தின் பங்கு” என்ற அடிப் படையில் இம்மாநாடு தனது பிரகடனத்தை நிறைவேற்றியது.

பிரகடனம்

தற்போதைய உலகப் பொருளாதார நெருக்கடி, முதலாளித்துவத்தின் வர லாற்று எல்லைகளை வரையறுத்துக் காட்டியுள்ளதோடு, புரட்சிகரமான நட வடிக்கைகள் மூலம் முதலாளித் துவத்தைத் தூக்கி எறிய வேண்டியதன் தேவையையும் சுட்டிக்காட்டுகிறது. உற்பத்தியின் சமூகத்தன்மைக்கும் முதலாளித்துவச் சுரண்டலுக்கும் இடையே உள்ள முதலாளித்துவத்தின் பிரதான முரண்பாடு கூர்மையடைந்து வருவதையும் அது எடுத்துக் காட்டுகிறது. மூலதனத்தின் அரசியல் பிரதி நிதிகள், இந்த நெருக்கடியின் மைய மாக உள்ள மூலதனத்திற்கும், உழைப் பிற்கும் இடையேயான தீர்க்க இயலாத முரண்பாட்டை மூடிமறைக்க முயற் சிக்கின்றனர். மூலதனத்தின் சுரண்டலைத் தீவிரப்படுத்தும் நோக்கத்துடன் நெருக்கடிக்கான தங்களது தீர்வுகளை அவர்கள் முன்வைக்கின்றனர். உலக அமைப்புக்களான சர்வதேச நிதி நிறுவனம், உலக வங்கி, உலக வர்த்தக அமைப்பு ஆகியவற்றோடு இச்செய லில் ஈடுபட்டு வரும் ஏகாதிபத்திய சக்திகளிடையே நிலவும் போட்டி களை இந்நெருக்கடி தீவிரப்படுத்து கிறது. ராணுவ அரசியல் தீர்வுகள், தீவிர மாக முன்வைக்கப்படுகின்றன.

நேட்டோ ராணுவக் கூட்டணி அமைப்பும் தனது தீவிர நடவடிக்கை களை அதிகரித்து வருகிறது. அரசியல் அமைப்புக்கள், ஜனநாயக, சிவில் உரிமைகள், தொழிற்சங்க உரிமைகள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகின்ற மிகவும் பிற்போக்கான தன்மைக்கு மாறி வருகின்றன என்பதை இம்மாநாடு வலியுறுத்திக் கூறுகிறது.

தற்போதைய நெருக்கடி, 1929-ம் ஆண்டில் ஏற்பட்ட மகத்தான பொருளா தார நெருக்கடிக்குப் பின்னர் அனைத்துத் துறைகளையும் பாதிக்கின்ற ஒன்றாக உள்ளது என்பதை இம்மாநாடு உறுதிபடக் கூறுகிறது. விவசாயமும், கிராமப் பொரு ளாதாரங்களும் பெரும் நெருக்கடியில் ஆழ்ந்துள்ளன. உலகளவில் கோடிக் கணக்கான விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் துன்பத்தையும் வறுமை நிலையையும் அதிகரித்து வருகி றது. கோடிக்கணக்கானோர் வேலைக ளையும் வீடுகளையும் இழந்து நிற்கின் றனர். வரலாறு காணாத அளவில் வேலை யின்மையின் அளவு அதிகரித்து வருகி றது. அதிகாரப்பூர்வமாகவே வேலையில் லாதோரின் எண்ணிக்கை 5 கோடியைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகம் முழுவதும் ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து வருகின்றன. பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகள் மேலும் ஏழைகளாகவும் ஆகி வருகின் றனர். நூறு கோடி மக்களுக்கும் அதிக மானோர், அதாவது மனித குலத்தில் ஆறில் ஒரு பகுதியினர் பட்டினியால் வாடுகின்றனர். இளைஞர்கள், பெண்கள், நாடு பெயர்ந்தோர், இடம்பெயர்ந்த தொழி லாளர்கள் ஆகியோர் இதற்கு முதல் பலியாகின்றனர்.

இயற்கையான தங்களின் வர்க்க நிலைக்கேற்ப, முதலாளித்துவ நாடுக ளின் அரசுகள் இந்த நெருக்கடியிலிருந்து மீண்டு இத்தகைய அடிப்படையான பிரச்சனைகளுக்குத் தீர்வு காணத் தவறி யுள்ளன. நவீன தாராளமயத்தின் ஆதர வாளர்களும், முதலாளித்துவத்தின் சமூக ஜனநாயக நிர்வாகிகளும் இதுநாள்வரை அரசைக் குறை கூறி வந்தனர். இப்போது தங்களை நெருக்கடியிலிருந்து மீட்க அரசைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

முதலாளித்துவ அரசமைப்பு எப்போ துமே முதலாளிகளின் பெருத்த லாபத் திற்கான பாதைகளை விரிவுபடுத்தவும், அதனைப் பாதுகாக்கவும் எப்போதும் துணை நிற்கும் என்ற அடிப்படையான உண்மை மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. முதலாளித்துவ நிறுவனங்களை நெருக் கடியிலிருந்து மீட்பதற்கான மீட்பு நடவ டிக்கைகள் பொதுமக்களின் பணத் திலிருந்து செய்யப்படுகின்றன; ஆனால் இதனால் பயனடைவோர் சிலரே. நெருக் கடியில் உள்ள முதலாளிகளை மீட்பதற் கான நடவடிக்கைகள் முதலில் மேற் கொள்ளப்பட்டதோடு, அவர்களின் கொழுத்த லாபத்திற்கான பாதைகள் விரிவுபடுத்தப்பட்டன. வங்கிகளும், நிதிக் குழுமங்களும் மீண்டும் தொழில்களில் ஈடுபட்டு லாபம் ஈட்டுகின்றன. கார்ப் பரேட் நிறுவனங்களை மீட்கப் பெருந் தொகையை அரசுகள் பரிசாக வழங்கின.

ஆனால் அதிகரித்துவரும் வேலை யின்மையும், உண்மையான ஊதியத்தின் வீழ்ச்சியும்தான் உழைக்கும் மக்களுக்குப் பரிசாக கிடைத்தது. ஒரு சிலரின் பேரா சையின் அடிப்படையில் உருவான பிறழ்ச் சியாலோ அல்லது முறையான ஒழுங்கு முறைகள் இல்லாமையாலோ இந்த நெருக்கடி உருவாகவில்லை. உலகமய மாக்கல் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்தச் சில பத்தாண்டுகளில் முதலாளித் துவத்தின் அடிப்படையான லாபத்தைப் பெருக்குதல், நாடுகளுக்கிடையிலும், ஒரு நாட்டிற்குள்ளேயும், பொருளாதார ஏற்றத் தாழ்வுகளைக் கூர்மையாக அதிகரித்துள்ளது. இதன் விளைவாக உலக மக்களின் மிகப்பெரும்பான்மையோரின் வாங் கும் சக்தி வீழ்ச்சியடைந்துள்ளது. தற் போதைய நெருக்கடி முதலாளித்துவத் தின் உள்ளார்ந்த நெருக்கடியாகும். முதலா ளித்துவ அமைப்பு உள்ளார்ந்த வகையில் நெருக்கடியில் உழலும் ஒன்று என்ற மார்க்சிய பகுப்பாய்வு சரியானதே என்று மீண்டும் நிரூபணமாயுள்ளது.

முதலாளித்துவம் லாப வேட்டைக் காக எல்லைகளைத் தாண்டிச் செயல் படுகிறது. எல்லாவற்றையும் மிதித்து நாச மாக்குகிறது. இந்த நிகழ்வுப் போக்கில் அது தொழிலாளி வர்க்கத்தையும் இதர உழைக்கும் மக்களையும் சுரண்டுவதைத் தீவிரப்படுத்துகிறது. அவர்கள் மீது கூடு தல் துன்பங்களைச் சுமத்துகிறது. முதலா ளித்துவத்திற்கு உண்மையில் ஒரு நிரந்தர உழைப்பாளர் படை தேவைப்படுகிறது.

மெய்யான மாற்று அமைப்பை, அதா வது சோசலிசத்தை நிறுவுவதன் மூலமே இத்தகைய முதலாளித்துவக் கொடுங் கோன்மையிலிருந்து விடுதலை பெற முடியும். இதற்கு ஏகாதிபத்திய எதிர்ப்பு, ஏகபோக எதிர்ப்புப் போராட்டங்களை வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு ஒரு மாற்றுப்பாதைக்கான நமது போராட்டம் முதலாளித்துவ அமைப்புக்கு எதிரான தாகும். ஒரு மாற்றுக்கான நமது போராட்டம் மக்களை மக்கள் சுரண்டுவதும் ஒரு நாட்டை மற்றொரு நாடு சுரண்டுவதும் இல்லாத ஓர் அமைப்பாகும். இது வேறொரு உலகத்திற்கான, ஒரு நியாய மான உலகத்திற்கான, ஒரு சோசலிச உலகத்திற்கான போராட்டமாகும்.

இரண்டாவதாக, சுற்றுச்சூழல் தூய்மை கெட்டிருப்பதற்குக் காரணமான முதலாளித்துவம், உலகம் வெப்பமய மாவதைத் தடுப்பதற்கான சுமை முழுவ தையும் தொழிலாளி வர்க்கம் மற்றும் இதர உழைக்கும் மக்கள் மீது திணிப்பதற்கு முயல்கின்றது. உலகத்தின் வெப்பம் அதி கரிப்பதற்கு அவர்களே காரணமாவர். வெப்ப மாற்றத்தைத் தடுப்பது என்ற பெயரால் உலகக் கட்டமைப்பை மாற்றி யமைப்பதற்கான முதலாளித்துவத்தின் ஆலோசனை, சுற்றுச்சூழலைப் பாது காப்பதற்கு எந்தத் தொடர்பும் இல்லா ததாகும். பசுமை வளர்ச்சி, பசுமைப் பொரு ளாதாரம் என்பனவற்றைப் புதிய அரசு ஏகபோக விதிமுறைகளைச் சுமத்துவ தற்கே பயன்படுத்தப்படுகின்றன. இவை அதிகபட்ச லாபத்திற்காகவும், மக்கள் மீது புதிய துன்பங்களைச் சுமத்துவதையும் ஆதரிக்கின்றன. முதலாளித்துவத்தின் கீழ் அதிகபட்ச லாபமானது சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் மக்களின் உரிமைகளுக் கும் இசைவானதல்ல.

ஆதிக்க ஏகாதிபத்திய வல்லரசுகள் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு உழைக் கும் மக்கள் மீது கூடுதல் சுமைகளைச் சுமத்துவதற்கு முயல்கின்றன. நடுத்தர அல்லது கீழ்மட்ட முதலாளித்துவ வளர்ச்சி நிலையிலுள்ள, அதாவது வள ரும் நாடுகளின் சந்தைகளில் ஊடுருவ வும், ஆதிக்கம் செலுத்தவும் முயல்கின் றன. முதலாவதாக, உலக வர்த்தகக் கழக தோஹா சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் மூலம் இதைச் செய்ய முயல்கின்றன. இவை இந்த நாடுகளின் மக்களுக்குப் பாதகமான முறையில், குறிப்பாக விவசாயத் தரங்கள், விவசாயப் பொருட் கள் அல்லாத பிற பண்டங்களுக்குச் சந்தை அனுமதி மூலம் செய்ய முயல்கின்றன.

இந்த நிலைமைகளில், நிலையான முழு வேலைவாய்ப்புக்காகவும், எல்லோ ருக்கும் இலவச மருத்துவ வசதி, கல்வி மற்றும் சமூக நல்வாழ்விற்கும், பாலின வேறுபாட்டிற்கு எதிராகவும், இன வெறிக்கு எதிராகவும், இளைஞர்கள், பெண்கள், குடியேறித் தொழிலாளர்கள் மற்றும் இன, தேசிய சிறுபான்மையோர் உள்ளிட்ட உழைக்கும் மக்களின் அனைத்துப் பகுதிகளின் உரிமைகளின் பாதுகாப்புக்காகவும் போராட்டத்தில் மக்கள் சக்திகளின், முடிந்த அளவு பரந்த பகுதிகளைத் திரட்டுவதற்கு கம்யூ னிஸ்டு - தொழிலாளர் கட்சிகள் செய லூக்கமாகப் பாடுபட வேண்டும்.

கம்யூனிஸ்ட், தொழிலாளர் கட்சிகள் தமது நாடுகளில் இந்தப் பணியை மேற்கொண்டு, மக்களின் உரிமைகளுக் காகவும், முதலாளித்துவ அமைப்புக்கு எதிராகவும் பரந்த போராட்டங்களை நடத்த வேண்டும். தொழிலாளர் வர்க்கம் தனது பலத்தைத் திரட்டி, முதலாளித் துவத்தின் முயற்சிகளை எதிர்க்கும் போது, தனது உரிமைகளைப் பாதுகாப் பதில் வெற்றியடைய முடியும் என்று அனு பவம் காட்டுகிறது.

முதலாளித்துவ அமைப்பு இயல்பா கவே நெருக்கடி சூழ்ந்ததாக இருந்த போதிலும், அது தானாகவே வீழ்ச்சி யடைந்துவிடுவதில்லை. கம்யூனிஸ்ட் தலைமையிலான எதிர் தாக்குதல் இல்லா விட்டால் பிற்போக்கு சக்திகள் தலை தூக்கும் அபாயத்தை ஏற்படுத் தும். தமது நிலைமையைக் காப்பாற்றிக் கொள்வதற் காக ஆளும் வர்க்கங்கள் கம்யூனிஸ்ட், தொழிலாளர் கட்சிகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்கு முழுமூச் சான தாக்குதலைத் தொடுப்பார்கள். முதலாளித்துவத்தின் மெய்யான தன்மையைச் சமூக ஜனநாயக வாதிகள் தொடர்ந்து பிரமைகளை வளர்க்கிறார் கள். இதற்காக அவர்கள், ‘முதலாளித்து வம் மனித நேயமடைந்து வருகிறது. முறைப்படுத்தப்பட்டு வருகிறது. உலக ரீதியான நிர்வாகம்’ முதலிய முழக்கங் களை முன்வைக்கின்றனர். இவை உண்மையில், வர்க்கப் போராட்டத்தை மறுக்கின்ற முதலாளித்துவத்தின் தந்தி ரத்தை ஆதரிக்கின்றன.

மக்களுக்கு எதிரான கொள்கை களைக் கடைப்பிடிப்பதற்கு ஆக்கமளிக் கின்றன. எந்த அளவு சீர்திருத்தமும் முதலாளித்துவத்தின் கீழான சுரண் டலை அகற்ற முடியாது. முதலாளித் துவம் தூக்கியெறியப்பட வேண்டும். இதற்குத் தொழிலாளி வர்க்கத்தின் தலைமையிலான வெகுஜனப் போராட் டங்கள் சித்தாந்த ரீதியிலும், அரசியல் ரீதியிலும் முனைப்பாக்கப்பட வேண்டும். ஏகாதிபத்திய உலகமயமாக்கலுக்கு வேறு மாற்று இல்லை என்பது போன்ற பல வகைப்பட்ட தத்துவங்கள் பிரச்சாரம் செய்யப்படுகின்றன. அவற்றை முறிய டிப்பதற்கு நமது பதில் ‘சோசலிசம்தான் அவற்றுக்கு மாற்று’.

உலகின் அனைத்துப் பகுதிகளிலி ருந்தும் தொழிலாளி வர்க்கத்தின் மற்றும் சமூகத்தின் இதர உழைக்கும் மக்கள் அனைவரின், உலக மக்களின் மிகப் பெரும்பான்மையோரின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கம்யூனிஸ்ட், தொழிலாளர் கட்சிகளாகிய நாம், கம்யூ னிஸ்ட் கட்சிகளின் மாற்றப்பட்ட முடி யாத பாத்திரத்தை வலியுறுத்துகிறோம்.

மனித குலத்தின் வருங்காலத்திற்கு சோசலிசம்தான் ஒரு மெய்யான மாற்று. அதாவது நமது வருங்காலத்திற்கு சோசலிசம்தான் ஒரே மாற்று என்று பிரகடனப்படுத்துவதற்கான போராட்டங் களை வலுப்படுத்துவதில் எங்களுடன் சேர்ந்து நில்லுங்கள் என்று மக்களை அறைகூவி அழைக்கிறோம்.

Sunday, November 22, 2009

ஏகாதிபத்தியத்துக்கு எதிராக உலகளாவிய போராட்டம் - சர்வதேச கம்யூனிஸ்ட் - தொழிலாளர் கட்சிகள் மாநாடு முடிவு



புதுதில்லி, நவ.22-

புதுதில்லியில் நடைபெற்ற 11-வது சர்வதேச கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகள் மாநாடு ஞாயிறன்று நிறைவு பெற்றது.

இதையொட்டி வெளி யிடப்பட்ட செய்திக்குறிப் பில் கூறப்பட்டுள்ளதாவது:-

48 நாடுகளைச் சேர்ந்த 57 கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் 83 பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். “சர்வதேச முதலாளித்துவ நெருக்கடி, உழைப்பாளர்கள் மற்றும் மக்கள் போராட்டம், கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் வர்க்க இயக்கத்தின் மாற்று மற்றும் பங்கு” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த சர்வதேச மாநாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து நடத்தின.

மாநாட்டின் முத்தாய்ப்பாக நிறைவேற்றப்பட்ட தில்லி பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

இந்த சர்வதேச இயக்கத்தில் தங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற வங்கதேச தொழிலாளர் கட்சியின் கோரிக்கையை மாநாடு ஏற்றுள்ளது. எதிர்காலத்தில் இந்தக் கட்சியும் இதில் இணைத்துக் கொள்ளப்படும்.

12-வது சர்வதேச மாநாட்டை ஆப்பிரிக்க கண்டத்தில் நடத்துவது என்றும், மாநாட்டை நடத் தும் பொறுப்பை தென்னாப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியிடம் ஒப்படைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டின் செயற்குழு கூடி மாநாட்டின் ஆய்வுப் பொருள், தேதி மற்றும் இடம் குறித்த விபரத்தை முடிவு செய்யும்.

அமைதி, இறையாண்மை, ஜனநாயகம், சமூக நீதிக்காக உலகம் முழுவதும் தொழிலாளர்கள் நடத்தி வரும் வீரஞ்செறிந்த போராட்டத்திற்கு இந்த மாநாடு தனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது.

நேட்டோ மற்றும் உலகளாவிய ஆக்கிரமிப்புக்கு எதிராகவும், ஏகாதிபத்திய ராணுவ ஆக்கிரமிப்புக்கு எதிராகவும், பல்வேறு நாடுகளில் அமைக்கப்பட்டுள்ள ஏகாதிபத்திய போர்த் தந்திரங்களுக்கு எதிராகவும் தொடர்ந்து போராடுவது என்று மாநாடு முடிவு செய்துள்ளது.

டமாஸ்கசில் 2009 செப்டம்பரில் நடைபெற்ற கூட்டத்தின் முடிவுப்படி, நவம்பர் 29-ம்தேதியை பாலஸ்தீன போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் தினமாக அனுஷ்டிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

2010-ம் ஆண்டை பாசிசத்தை முறியடித்த 60-ம் ஆண்டாக அனுஷ்டிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாக்க தொழிற் சங்கங்கள் ஒருங்கிணைந்த முறையில் போராடுவது என்றும், சிறைபிடிக்கப்பட்டுள்ள கியூப குடிமக்கள் 5 பேரை விடுவிக்கக்கோரி சர்வதேச அளவிலான ஆதரவுப் போராட்டத்தை தீவிரப்படுத்துவது என்றும், வேலை செய்யும் உரிமையை வலியுறுத்தி இளைஞர் இயக்கங்களோடு சேர்ந்து அந்தந்த நாடுகளில் மக்கள் போராட்டத்தை தொழிற் சங்கங்கள் வலிமையாக முன்னெடுத்துச் செல்வது என்றும் முடிவு செய்யப்பட் டுள்ளது.