Sunday, November 1, 2009

அன்புத் தோழர் பி.மோகன் மறைந்து விட்டார்



கட்சி என்னை டில்லிக்கு அனுப்பியபோது, என்னை புதுடில்லி ரயில்நிலையத்திற்கு வந்து வரவேற்று, உடன் தங்க வைத்து, என்னை கடந்த ஐந்தாண்டு காலமாக டில்லியில் கட்சிப் பணியைச் செய்திட அனைத்து விதங்களிலும் உற்ற துணையாக இருந்த தோழர் பி.மோகன் மறைந்து விட்டார். ஐந்தாண்டுகளுக்கு முன் நான் டில்லி வந்தபோது, மிகவும் சுறுசுறுப்புடன் மிகவும் அர்ப்பணிப்பு உணர்வுடன் நாடாளுமன்றப் பணிகளில் தோழர் பி.மோகன் ஈடுபட்டார்.

நாடாளுமன்றம் நடைபெறும் நாட்களில் அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை எழுப்ப வேண்டுமானால், நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் முதலில் கடிதம் கொடுத்தவர்களுக்கே முன்னுரிமைகொடுக்கும் வழக்கம் இருந்ததால், காலை எட்டு மணிக்கே, என்னுடைய சைக்கிளை வாங்கிக் கொண்டு அவரே நேரடியாக நாடாளுமன்றம் சென்று கடிதத்தைக் கொடுத்து விட்டு வருவார். நானும் சென்று அவர் கையொப்பமிட்ட கடிதத்தைக் கொடுக்கலாம். ஆனாலும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரே நேரில் வந்து கொடுத்தால் அதற்கு அதைவிட முன்னுரிமை கூடுதலாகும். எனவே அவரே சென்று கடிதத்தைக் கொடுத்துவிட்டு வருவார். இவர் சைக்கிளில் செல்வதைக் கண்டு இனிய அதிர்ச்சியுறாத பாதுகாவலர்களே இல்லை என்று சொல்லலாம்.

தேசபிமானி நிருபர் ஒருநாள் பார்த்துவிட்டு தன் புகைப்படநிபுணருடன் வந்து அவரைப் பேட்டிகண்டு, தேசாபிமானியில் ‘‘இவருக்கு நாடாளுமன்றப் பணிகளுக்கு இந்த சைக்கிளே போதும்’’ என்ற தலைப்பிட்டு ஒரு முழுப் பக்க கட்டுரையே எழுதி விட்டார். ஆயினும் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் உடல் நலிவடையத் தொடங்கிவிட்டது. மருத்துவ சிகிச்சைகளை அவர் மேற்கொண்டபோதிலும், மருத்துவர்களின் ஆலோசனைகள்படி அவர் அதன்பின் நடந்து கொண்டாரா என்பது எனக்குச் சந்தேகமே.

வீரம் விளைந்தது நாவலில் தோழர் பாவல் ஓரிடத்தில் சொல்கிறார்:
‘‘என் தேகாரோக்கியத்தைப் பற்றியே நான் அஜாக்கிரதையாக இருந்தேன். அந்த முட்டாள்தனத்தை எண்ணி நான் என்னைக் கடிந்துகொள்கிறேன். அந்த அஜாக்கிரதைப் போக்கில் ஒரு வீரமும் இல்லை என்பதை இப்பொழுது உணர்கிறேன். அந்தக் கண்மூடித்தனம் இருக்காதிருந்தால், நான் மேலும் சில ஆண்டுகள் தாக்குப் பிடித்திருக்க முடியும். வேறுவிதமாகச் சொல்வதென்றால், இடதுசாரி வாதம் என்ற இளம் பருவ வியாதி நம்முன் உள்ள பேராபத்துக்களில் ஒன்று.’’

இந்தப் போக்குடன்தான் நம் கட்சி உறுப்பினர்களில் பலர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தோழர் பி.மோகனும் கிட்டத்தட்ட அப்படித்தான். அவருக்கு சர்க்கரை நோய் உண்டு. ஆயினும் எவரேனும் தேநீர் சர்க்கரையுடன் கொடுத்தால் வாங்கிச் சாப்பிட்டுவிடுவார். எவரேனும் பிரியமாக எதையேனும் கொடுத்தால் அதைச் சாப்பிட்டுவிட்டு அவர் அவதிப்படுவதை அடிக்கடி நான் பார்த்திருக்கிறேன். உடல்நலத்தைப் பார்த்துக் கொள்வதில் அவர் இன்னும் கொஞ்சம் அக்கறையுடன் இருந்திருந்தால், இவ்வளவு சீக்கிரம் அவர் நம்மைவிட்டுப் பிரிந்திருக்க மாட்டார் என்றே நான் கருதுகிறேன்.

எனினும் தான் வாழ்ந்த ஒவ்வொரு நாளும் தன்னைத் தேடி வந்த மக்களுக்காக அவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அதைப்பற்றிக் கவலைப்படாது, தன்னாலான அனைத்து உதவிகளையும் தன் வாழ்நாள் முழுவதும் மேற்கொண்டிருந்தார். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தசமயத்தில் தமிழுக்குச் செம்மொழி அந்த°து அளிக்கப்பட வேண்டும் என்பதற்காக முதன்முதலில் தமிழிலேயே குரல் கொடுத்தவர் தோழர் பி. மோகன்.

இதைப்போல் ஐடிஐ படிக்கும் மாணவர்கள் தமிழில் தேர்வு எழுத நடவடிக்கை எடுத்தவர் தோழர் பி.மோகன்.

இன்றைக்கு சென்னை - மதுரை ரயில்பாதை இரட்டை ரயில்பாதையாக மாறி, மின்மயமாகிக் கொண்டிருக்கிறதென்றால் தன் நாடாளுமன்றப் பணிக்காலம் முழுதும் அதற்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்டவர் தோழர் பி.மோகன்.

அவர் நம்மை விட்டுச் சென்றாலும் அவரால் செயல்படுத்தப்பட்டுள்ள பணிகள் நம்மை என்றென்றும் இயங்க வைத்துக் கொண்டிருக்கும்.

1 comment:

vimalavidya said...

I had read so many tributes to com.Mohan.but yours is a diferent one and all your frank feelings expressed your truthfulness and honesty veeramani comrade--vimalavidya