Saturday, November 28, 2009

லிபரான் ஆணைய அறிக்கை:குற்றவாளிகளைத் தண்டித்திடுக



பல்வேறு விதமான இக்கட்டுகளைக் கடந்து பதினேழு ஆண்டுகள் கழித்து, லிபரான் ஆணையம் கடைசியாகத் தன்னுடைய அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கைக்காக 48 தடவைகள் கால நீட்டிப்பு செய்து கொண்ட பின்னர் கடைசியாக அது சமர்ப்பித்துள்ள அறிக்கை யானது, 1992 டிசம்பர் 6 அன்று மிகவும் அரக்கத்தனமான முறையில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிகழ்வானது கடுஞ்சீற்றம் கொண்ட கும்பலால் தன்னெழுச்சியாக மேற்கொள்ளப்பட்ட ஒன்று அல்ல, மாறாக மிகவும் உன்னிப்பாகத் திட்டமிடப்பட்டு நிறைவேற்றப்பட்ட ஒன்று என்று மக்களுக்கு நன்கு தெரிந்த விவரங்களை மீள அது உறுதிப்படுத்தி இருக்கிறது.

மேற்படி அறிக்கையின் சாராம்சங்களை, சில ஊடகங்கள் வெளியிட்டதை அடுத்து, ஐமுகூ அரசாங்கமானது, நாடாளுமன்றத்தில், அதன்மீது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை அறிக்கையுடன் (ஹஉவiடிn கூயமநn சுநயீடிசவ) லிபரான் ஆணைய அறிக்கையையும் வைக்க வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டது. மேற்படி நடவடிக்கை அறிக்கையில் மேற்படி சம்பவத்திற்குக் காரணமானவர்கள் மீது எவ்விதமான தண்டனை நடவடிக்கையோ அல்லது சட்டரீதியான நடவடிக்கையோ எடுக்கப்படுவது தொடர்பாக எதுவும் இல்லை என்பதில் ஆச்சர்யப்படுவதற்கு ஏதமில்லை. இத தொடர்பாக பல சட்ட வழக்குகள் பல நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதாகவும், எனவே சட்டம் அதன் கடமையைச் செய்ய அதற்குரிய கால அவகாசத்தை அளித்திட வேண்டியிருக்கிறது என்றும் இதற்கு வக்காலத்து வாங்கப்படலாம். ஆயினும், இவ்வாறு பல நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை ஒருங்கிணைத்து, விரைவில் முடிவு காண்பதற்கு ஏதுவாக உச்சநீதிமன்றத்திற்கு அவற்றை மாற்றல் செய்திட, தன்னுடைய சட்ட அலுவலர்கள் மூலம் அரசு முயற்சிகள் மேற்கொண்டால் அதனைத் தடுத்திடுவோர் யாருமில்லை. அத்தகையதொரு நடைமுறையைப் பின்பற்ற ஐமுகூ-2 அரசாங்கத்திட்ம் ஆர்வமோ, விருப்பமோ இருப்பதாகத் தெரியவில்லை.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவமானது மிகவும் அருவருப்பான முறையில் மதம் சார்ந்த ஓரிடத்தை இடித்த நிகழ்வு மட்டுமல்ல. இது நம்முடைய நவீன இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளத்தினையே மிகவும் மோசமான முறையில் தாக்கியதொரு நிகழ்வாகும். இடிக்கப்பட்டது ஒரு கான்கிரீட் கட்டிடமாக இருக்கலாம், ஆனால் அதன் மூலமாக அவர்கள் இடித்திருப்பது அதனை மட்டுமல்ல, நவீன இந்தியாவின் உணர்வையும் உன்னதத்தையுமே உருக் குலைத்து விட்டார்கள். எனவேதான், இதனைச் செய்திட்ட கயவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காது சுதந்திரமாக விட அனுமதிப்ப தென்பது, நவீன இந்தியக் குடியரசுக்கு விடப்பட்ட சவாலை எதிர்கொள்ள மறுக்கும் போக்காகும். தாமதமாகும் நீதி மறுக்கப்பட்ட நீதியாகும். பதினேழு ஆண்டுகளாகியிருந்த போதிலும், நீதி நிலைநாட்டப்பட வேண்டியது அவசியமாகும்.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்வவமானது ஒரு நாள் நிகழ்வல்ல. அந்த சம்பவம் நடைபெறுவதற்கு முன்பும் அதற்குப் பின்பும் கூட நாடு முழுதும் மதவெறி விசிறி விடப்பட்டது. நாட்டின் பல பகுதிகளிலும் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் வெட்டிக்கொல்லப்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்தனர். வேற்றுமையிலும் ஒற்றுமை காணும் உயரிய பண்புடன் வாழ்ந்த வந்த மக்களுக்கிடையே இருந்த மதநல்லிணக்க மாண்பை மிக மோசமான முறையில் சீர்குலைத்தனர். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான், இவ்வாறு பாபர் மசூதியை இடித்து, அதன்மூலம் இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயக மாண்பைக் குலைத்திட்ட, கயவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதோடு, இந்த சம்பவத்தின் மூலம் நாட்டிலும் சமுதாயத்திலும் ஏற்பட்டுள்ள காழ்ப்புணர்வைச் சரி செய்யக்கூடிய வகையிலும் நீதி அமைந்திட வேண்டும். நவீன இந்தியாவை ஒருமுகப்படுத்தும் வகையில், லிபரான் ஆணையத்தின் பரிந்துரைகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காது இருந்துவிடக் கூடாது. பாபர் மசூதி இடிக்கப்பட்டதை அடுத்து நடைபெற்ற மும்பை கலவரங்கள் தொடர்பாக விசாரணை செய்த ஸ்ரீகிருஷ்ணா ஆணையத்தின் அறிக்கையின் பரிந்துரைகள் மீது உருப்படியாக நடவடிக்கை எதையும் எடுக்காததுபோல் இதனையும் விட்டு விடக் கூடாது.
லிபரான் ஆணையமானது, அப்போது மத்தியில் ஆட்சியிலிருந்த நரசிம்மராவ் அரசாங்கத்தின் பங்களிப்பு குறித்து கண்டு கொள்ளாமல் விட்டிருப்பது விநோதமாகத் தோன்றுகிறது. சம்பவ சமயத்தில் எல்லோரும் அறிந்த உண்மைகளுக்கு முற்றிலும் முரணான முறையில் இது அமைந்திருக்கிறது. அந்த சமயத்தில் மதச்சார்பின்மையைப் பாதுகாத்திட மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று வலியுறுத்தி நாட்டிலிருந்த அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும் மத்திய அரசின் பின்னால் அணிவகுத்து நின்றன. உண்மையில், பாபர் மசூதி இடிப்புக்கு ஒருசில நாட்களுக்கு முன்பு கூடிய தேசிய ஒருங்கிணைப்புக் கவுன்சில் கூட்டத்தில், (இக்கூட்டத்தை பாஜக-வும் அப்போது அரசின் கூட்டணிக் கட்சியாக இருந்த அதிமுகவும் பகிஷ்கரித்தன), பாபர் மசூதியைப் பாதுகாத்திட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நரசிம்மராவ் அரசாங்கம் எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, தோழர் சுர்ஜித் அவர்களால் முன்மொழியப்பட்ட தீர்மானத்தை, ஒருமனதாக ஏற்றுக்கொண்டது. ஆயினும், இவ்வாறு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு அளித்தபோதிலும், அரசாங்கமானது வலுவான முறையில் செயல்படவில்லை.

சம்பவ இடத்தில் கொலையைச் செய்கிற ஒருவனுக்கும், சம்பவ இடத்தில் நின்று கொண்டிருக்கிற போலீஸ்காரன் அவ்வாறு கொலை நடைபெறாமல் தடுப்பதில் தவறுவதற்கும் நிச்சயமாக வித்தியாசம் உண்டுதான். கொலைபுரிந்த கயவன் மீது கொலைக்குற்றத்திற்காக விசாரணை மேற்கொள்ளப்படும் அதே சமயத்தில், சம்பவ இடத்தில் நின்றிருந்தும் கொலை நடப்பதைத் தடுத்திடத் தவறிய போலீஸ்காரன் மீதும் கடமையைச் செய்யத் தவறியதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். உண்மையில் 1993இல் இது தொடர்பாக நரசிம்மராவ் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்மொழிந்தது. அப்போது ‘ஜார்கண்ட் லஞ்ச வழக்கு’ என்று எல்லோராலும் அறியப்பட்ட சம்பவத்தின் காரணமாக அரசாங்கம் கவிழாமல் தப்பிப் பிழைத்தது.
கடந்த அறுபதாண்டு கால குடியரசில், நவீன இந்தியாவினை ஒருமுகப்படுத்தும் நடவடிக்கையில் நாம் மற்றொரு தாக்குதலையும் எதிர்கொண்டோம். 1975இல் உள்நாட்டு அவசரநிலைப் பிரகடனம் என்ற வடிவத்தில் அது இருந்தது. மக்கள் அதனை எதிர்கொண்டு முறியடித்து, ஜனநாயகத்தை மீள நிலைநிறுத்தினார்கள், இந்திரா காந்தியைத் தோற்கடித்தார்கள். ஜனநாயகத்தை மதிக்காது அத்துமீறி நடந்துகொண்ட மேலும் சிலரையும் உரிய முறையில் தண்டித்தார்கள். பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிகழ்வும் நம்முடைய மதச்சார்பற்ற ஜனநாயக மாண்பின் மீதான மிக மோசமான தாக்குதலாகும். நம்முடைய நவீன குடியரசின் நம்பகத்தன்மையை மக்கள் மத்தியில் அழியாது காத்திட வேண்டுமானால், இவ்வாறு பாபர் மசூதியை இடித்தக் கயவர்கள் மீது உரிய முறையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு நீதி வழங்கப்பட வேண்டியது அவசியம். எனவே. லிபரான் ஆணையத்தின் பரிந்துரைகள் மற்றும் அதன்மீது அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை அறிக்கை மீது நாடாளுமன்றம் விவாதிக்கும்போது, இந்தத் திசைவழியில் அது அமைந்திட வேண்டும். நவீன இந்தியக் குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயக மாண்பு ஒருங்கிணைக்கப்படும் நடைமுறைகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும்.

(தமிழில்: ச.வீரமணி)

No comments: