Friday, March 27, 2009

பெரும்பான்மை மதவெறி, பயங்கரவாதத்தை முறியடித்திடுவோம் - மதச்சிறுபான்மையினர் உரிமைகளைப் பாதுகாத்திடுவோம்:பிரகாஷ்காரத்


புதுடில்லி, மார்ச் 27-
பாஜக கிளப்பிவிடும் பெரும்பான்மை மதவெறிப் பிரச்சாரம் மற்றும் செயல்பாடகளையும், பயங்கரவாத நடவடிக்கைகளையும் எதிர்த்து முறியடித்திடுவோம், கிறித்துவ, முஸ்லீம் மற்றும் பல்வேறு மதச்சிறுபான்மையினர்களின் உரிமைகளையும் பாதுகாத்திடுவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத் கூறினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு அலுவலகமான ஏ.கே.கோபாலன்பவனில் வெள்ளியன்று மாலை செய்தியாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் சார்பில், ‘‘வகுப்புவாத சக்திகளை முறியடித்திடுவோம், பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றுபடுவோம்’’ மற்றும் ‘‘சிறுபான்மையினர் உரிமைகளைப் பாதுகாத்திடுவோம்’’ என்னும் தேர்தல் பிரச்சாரத்திற்கான சிறுபிரசுரங்களை வெளியிட்டு, பிரகாஷ்காரத் பேசியதாவது:
‘‘மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்ட சொன்னதற்கிணங்க, தொடர்ந்து கட்சியின் சார்பில் தேர்தல் பிரச்சாரத்திற்கான சிறுபிரசுரங்களை வெளியிட்டு வருகிறோம். இன்றைய தினம் ‘‘வகுப்புவாத சக்திகளை முறியடித்திடுவோம், பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றுபடுவோம்’’ என்னும் சிறுபிரசுரத்தையும், ‘‘சிறுபான்மையினர் உரிமைகளைப் பாதுகாத்திடுவோம்’’ என்னும் சிறுபிரசுரத்தையும் வெளியிடும் பொறுப்பு எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
நான், தேர்தல் அறிக்கை வெளியிடப்படட அன்று, ‘‘நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பாஜகவையும், காங்கிரசையும் தோற்கடிப்போம்’’ என்று அறைகூவல் விடுத்தோம். பாஜக-வானது நாட்டில் பெரும்பான்மை மதவெறி சக்திகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு கட்சியாகும். வருண்காந்தியின் மிகவும் காட்டுமிராண்டித்தனமான மதவெறிப் பேச்சுக்களை அவர்கள் நியாயப் படுத்துவதிலிருந்தே இதனைத் தெரிந்து கொள்ள முடியும்.
வருண்காந்தியின் மதவெறிப் பேச்சு மட்டுமல்ல. 2007இல் உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போதுகூட பாஜக கட்சியானது, மதவெறிப் பிரச்சாரம் அடங்கிய ஒரு குறுந்தகட்டைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக வெளியிட்டது. அதற்கெதிராக நாடுமுழுதும் கடும் கண்டனக் கணைகள் வந்தன. அதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் அதன் மீது 2007 மே மாதம் நடவடிக்கை எடுத்தது. மேற்படி குறுந்தகட்டில் உள்ள சாராம்சம் குறித்து பாஜக கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டது. ஆனால் ஆரம்பத்தில் பாஜக அந்தக் குறுந்தகட்டில் உள்ள சங்கதிகளுக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்றுதான் கூறியதேயொழிய, கண்டனம் தெரிவிக்க மறுத்துவிட்டது. ஆனால் தேர்தல் ஆணையம் பாஜகவின் நிலைபாட்டை நிராகரித்து, கண்டனம் தெரிவித்தேயாக வேண்டும் என்று கட்டளையிட்டது. அதன்பின்னர்தான் பாஜக கண்டனம் தெரிவித்தது. இதுதான் பாஜகவின் ‘பண்பாடு’ ஆகும். இந்த வழியில்தான் அது தன் பிரச்சாரத்தை மேற்கொள்ளும்.
சமீபத்தில் உத்தரப்பிரதேசத்தில், குறிப்பாக மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் எல்.கே. அத்வானி பேசிய பேச்சுக்களை ஒருவர் ஆராய்ந்தாரானால், வருண்காந்தியைப் போன்றே அவரும் பேசியிருப்பதை அறிய முடியும். இந்தவழியில்தான் எண்ணற்ற பாஜகவின் தலைவர்கள், நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள் மதச்சிறுபான்மையினருக்கு எதிராக, வெறுப்புப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு பேசுவது, அக்கட்சியின் பிரச்சார உத்தியின் ஒரு பகுதியாகும்.
இத்தகைய சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரம் என்பது துரதிர்ஷ்டவசமாக பேச்சோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. அதனைத் தங்களுக்கு வாய்ப்பு உள்ள இடங்களில் செயலிலும் காட்டிவிடுகிறார்கள். கடந்த ஐந்தாண்டுகளில், நாட்டின் பல பகுதிகளில் மதச்சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதை நாமறிவோம். இவர்களின் மதவெறி நடவடிக்கைகளுக்குச் சமீபத்திய எடுத்துக்காட்டு, கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் சம்பவமாகும். அங்கு ஓர் உணவு விடுதியில் நேற்று இளம் தம்பதிகள் இந்துமதவெறியர்களால் அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறார்கள். ‘அவர்கள் பார்வைக்கு இரு மதத்தைச் சேர்ந்தவர்கள் போல் இருந்ததாகச் சந்தேகப்பட்டு’ இவ்வாறு தாக்கப்பட்டிருக்கிறார்கள். இத்தகு மோசமான சம்பவங்கள் கர்நாடகத்தில் தொடர்கதையாகிவிட்டன. இவ்வாறு பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் கிறித்துவ மற்றும் முஸ்லீம் சிறுபான்மையினரின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. பல்வேறு காரணங்களைக் கூறி அவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல்கள் தொடுக்கப்படுகின்றன. அவர்கள், தங்கள் மதத்தைத் தழுவுவதற்கான உரிமைகள் மறுக்கப்படுகின்றன. மதச்சிறுபான்மையினத்தைச் சேர்ந்த இளம்பெண்களை இந்துத்வா வெறியர்கள் பல்வேறு வகைகளிலும் தாக்கி வருகின்றனர். இவ்வாறு கர்நாடகா மாநிலம் முழுதும் நடைபெற்று வருகிறது.
பாஜக-வானது தங்களுடை இந்துத்வா கொள்கையைத் தீவிரமாகப் பிரயோகிப்பதை ஒத்திவைத்திருக்கிறோம் என்று இப்போது சொல்லிக்கொண்டிருக்கிறது. இதுவெல்லாம் கண்துடைப்பு வேலை. வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் அவர்கள் மதவெறி நடவடிக்கைகளில் இறங்குகிறார்கள் என்பதே உண்மை.
‘பெரும்பான்மை வகுப்புவாதம்’ (majority communalism) என்னும் தத்துவத்தை வரித்துக்கொண்டிருக்கும் பாஜக-வானது எப்போதுமே ‘மதச்சிறுபான்மையினர் முகஸ்துதி’ செய்யப்படுகிறார்கள் என்கிற பொய்ப்பிரச்சாரத்தையும் செய்து வருகிறது.
நீதியரசர் சச்சார் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, நாட்டில் உள்ள முஸ்லீம் மக்களின் நிலைமைகள் குறித்து ஆராய்ந்து அவர்களின் சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்காக எண்ணற்றப் பரிந்துரைகளைச் செய்தது. ஆனால், அவற்றை நிறைவேற்ற ஆட்சியிலிருந்த ஐமுகூ அரசு உருப்படியான நடவடிக்கை எதையும் எடுத்திடவில்லை. சச்சார் குழு அறிக்கையில் கூறப்பட்டிருந்ததைப்போல் முஸ்லீம் மக்களுக்கு, இடஒதுக்கீட்டிலும், கல்வி, சுகாதாரம் மற்றும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதிஒதுக்கீட்டிலும் துணைத் திட்டம் (sub plan) கொண்டுவர வேண்டும் என்று பிரதமரைப் பார்த்து வலியுறுத்தினோம். நாங்கள் ஆட்சியில் உள்ள மேற்கு வங்கத்தில் இவ்வாறு கொண்டு வந்திருக்கிறோம். கேரளாவிலும் சில நடவடிக்கைகள் எடுத்திருக்கிறோம். ஆனால் மத்திய அரசு அதனை ஏற்க மறுத்துவிட்டது.
மத்திய அரசும், திட்டக் கமிஷனும் துணைத் திட்டத்தை ஏற்காததால், பல மாநில அரசுகளால் இதற்கான நிதியைப் பெற முடியாமல் ஊனப்பட்டிருக்கின்றன.
பயங்கரவாதம்
பயங்கரவாதத்தைப் பொறுத்தவரை, இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைகள் பல்வேறு வடிவங்களில் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சில பயங்கரவாத அமைப்புகளில் முஸ்லீம் இளைஞர்கள் செயல்படுகிறார்கள் என்றால், வடகிழக்குப் பகுதியில் வேறுவிதமான தீவிரவாதக் குழுக்கள் செயல்படுகின்றன. உத்தரப்பிரதேசம், மகாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களில் மலேகான் போன்ற இடங்களில் பெரும்பான்மை இந்து தீவிரவாத அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. உத்தரப்பிரதேசத்தில் கான்பூரில் பஜ்ரங்தளத்தைச் சேர்ந்தவர்கள் வெடிகுண்டுகள் தயார் செய்துகொண்டிருந்தபோது இருவர் விபத்தில் இறந்துள்ளனர். இவ்வாறு பயங்கரவாதத்திற்கு மதம் கிடையாது. ஆனால் பல்வேறு மாநிலங்களில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் தீவிரவாதிகள் என்றாலே அவர்கள் முஸ்லீம்கள் என்ற முறையில் நடவடிக்கைகளில் இறங்கி, அப்பாவி முஸ்லீம் இளைஞர்களைக் கைது செய்து, சிறையில் அடைத்து கொடுமைப்படுத்தி வருகின்றனர்.
எனவேதான் பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளும் அனைத்த அமைப்புகளும் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றும், பல்வேறு மாநிலங்களில் செயல்படும் அமைப்புகளுக்கிடையே ஓர் ஒருங்கிணைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறோம்.
ஐமுகூ அரசு, தற்சமயம் சட்டவிரோத நடவடிக்கைகள் சட்டத்தை கடுமையாக்கியிருக்கிறது. இதனால் அப்பாவி மக்கள், குறிப்பாக சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுகிறார்கள்.
வகுப்புவாதத்திற்கு எதிராகவும், பயங்கரவாதத்திற்கு எதிராகவும் மதவேறுபாடின்றிப் போராடுவோம்.
இவ்வாறு பிரகாஷ்காரத் கூறினார்.
பெரும்பான்மை வகுப்புவாதம் குறித்துக் கூறினீர்கள், சிறுபான்மை வகுப்புவாதம் குறித்துத் தங்கள் கருத்து என்ன என்று ஒரு செய்தியாளர் கேட்டபோது, ‘‘வகுப்புவாதம் என்றால் அது சிறுபான்மை வகுப்புவாதத்தையும்தான் குறிக்கும்’’ என்றும், ‘‘நாங்கள் சிறுபான்மையினர் குறித்துக் கூறும்போது, அவர்களுடை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றுதான் கூறுகிறோம்’’ என்றார்.
(ச. வீரமணி)




No comments: