Tuesday, March 24, 2009

மத்தியில் மதச்சார்பற்ற அரசாங்கத்தை அமைத்திடுவோம் - இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் அறைகூவல்


புதுடில்லி, மார்ச் 24,
மத்தியில் மதச்சார்பற்றஅரசாங்கத்தை அமைத்திடுவோம் என்று இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் அறைகூவல் விடுத்தனர்.
இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் சார்பில் செய்தியாளர்கள் கூட்டம் செவ்வாயன்று மதியம் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகமான ஏ.கே.ஜி. பவனில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிப் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் மற்றும் டி.ராஜா, பார்வர்ட் பிளாக் சார்பில் தேவபிரத பிஸ்வாஸ் மற்றும் தேவராஜன், ஆர்எஸ்பி சார்பில் சந்திரசூடன் மற்றும் அபானிராய் ஆகியோர் கலந்துகொண்டார்கள். அப்போது பிரகாஷ்காரத் கூறியதாவது:
‘‘இடதுசாரிக் கட்சிகள் சேர்ந்து, பதினைந்தாவது மக்களவைக்கான அறைகூவலை விடுக்கிறது. இவ்வனைத்துக் கட்சிகளும் தேர்தலையொட்டி ஏற்கனவே தனித்தனியாக தேர்தல் அறிக்கைகள் வெளியிட்டுள்ளன. இப்போது நாங்கள் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து கடந்த ஐந்தாண்டுகளில் ஒன்றிணைந்து இடதுசாரிக் கட்சிகள் புரிந்திட்ட பங்களிப்பினையும், வருங்காலத்தில் ஆற்ற வேண்டிய கடமைகளையும் விவாதித்து, தங்களுக்கு அளித்திருக்கிறோம். எனவே அதற்குள் நான் செல்ல விரும்பவில்லை.
கடந்த ஐந்தாண்டுகளில்ல ஐமுகூ அரசாங்கத்துடன் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அனைத்து அம்சங்களிலும் இடதுசாரிக் கட்சிகள் தலையிட்டிருக்கின்றன. ஐமுகூ அரசாங்கம் மக்கள் விரோத நடவடிக்கைகள் எடுத்தபோதெல்லாம் இடதுசாரிக் கட்சிகள் உரிய நேரத்தில் தலையிட்டு அதனைத் தடுத்து நிறுத்தி இருக்கின்றன. ஐமுகூட்டணி குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தில் அளித்திட்ட உறுதிமொழிகளுக்கு எதிராகச் சென்றபோதெல்லாம் அதனைத் தடுத்து நிறுத்தி இருக்கிறோம். உலகப் பொருளாதார மந்தம் ஏற்பட்டிருக்கக்கூடிய இன்றைய நிலையில் இடதுசாரிக் கட்சிகள் மேற்கொண்ட நிலைப்பாட்டின் காரணமாக இந்தியப் பொருளாதாரத்தைக் காப்பாற்றியிருக்கிறோம் என்பதையும் அதேபோன்று நாட்டின் இறையாண்மை யையும், மக்களின் நலன்களையும் வாழ்வாதாரத்தையும் இடதுசாரிக் கட்சிகள் காப்பாற்றி இருக்கின்றன என்பதையும் இன்றையதினம் அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள்.
இரண்டாவதாக, பாஜக மற்றும் அதனுடன் இணைந்த மதவெறி சக்திகளும் மக்கள் மத்தியில் மதவெறி உணர்வை எழுப்ப முயற்சித்த போதெல்லாம் அவற்றை உறுதியாக எதிர்த்துநின்று அவற்றின் செயல்பாடுகளில் உள்ள கேடுபயக்கும் அம்சங்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி வந்துள்ளோம்.
மூன்றாவதாக இடதுசாரிக் கட்சிகளின் சார்பில் ஒரு பரந்த மேடையையும் கட்டியிருக்கிறோம்.
இத்தகைய மாற்றுக் கொள்கைகள், ஒரு மாற்று மதச்சார்பற்ற அரசாங்கத்தை மத்தியில் அமைப்பதற்கான அடிப்படையாக அமைந்திடும் என்று நாங்கள் நம்புகிறோம். பொருளாதாரக் கொள்கைகள், சமூகநீதி மற்றும் சமூகநலக் கொள்கைகள், சுயேட்சைமயான அயல்துறைக் கொள்கை மற்றும் முக்கிய பல அம்சங்களை வடித்திருக்கிறோம். இதன் அடிப்படையில் இடதுசாரிக் கட்சிகளை வலுப்படுத்தி, மத்தியில் ஒரு மாற்று மதச்சார்பற்ற அரசாங்கம் அமைந்திட அனைவரும் முன்வர வேண்டும் என்று அறைகூவி அழைக்கிறோம்.
இவ்வாறு பிரகாஷ்காரத் கூறினார்.
ஏ.பி.பரதன்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் பேசியதாவது:
‘‘இன்றையதினம் பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் இடதுசாரிக் கட்சிகள் எதிர்மறை அணுகுமுறையோடு நடந்துகொண்டதாக விமர்சித்திருக்கிறார். ஆனால் நாடாளுமன்றத்தில் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த சட்டமுன்வடிவுகளை யெல்லாம் ஒப்பிட்டுப் பாருங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். தகவல் அறியும் சட்டமுன்வடிவாக இருந்தாலும் சரி அல்லது தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டமுன்வடிவாக இருந்தாலும் சரி அல்லது பழங்குடியினர் வனஉரிமைகள் பாதுகாப்புச் சட்டமாக இருந்தாலும் சரி அவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தபோது அதன் ஷரத்துக்கள் எங்ஙனம் இருந்தன, இடதுசாரிக் கட்சிகள் அவற்றில் தலையிட்டு, உரிய திருத்தங்களைச் செய்தபின் அதன் ஷரத்துக்கள் எங்ஙனம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன என்றும் பாருங்கள். எந்த அளவிற்கு இடதுசாரிக் கட்சிகள் ஆக்கபூர்வமாக செயல்பட்டிருக்கின்றன என்பது புரியும். இவ்வாறு உண்மையில் இடதுசாரிக் கட்சிகள் ஆக்கபூர்வமாகத்தான் செயல்பட்டிருக்கின்றனவே ஒழிய, எதிர்மறையில் அல்ல என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆட்சியாளர்கள் பல பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாரிடம் தாரை வார்க்க முயற்சித்தார்கள். அதனை இடதுசாரிக் கட்சிகள் தடுத்து நிறுத்தியுள்ளன. இது ஆக்கபூர்வமான அணுகுமுறையா அல்லது எதிர்மறையான அணுகுமுறையா என்று கேட்க விரும்புகிறேன்.
வங்கித்துறையில், இன்சூரன்ஸ் துறையில் ஒட்டுமொத்தத்தில் நிதித்துறையில் தனியார் பங்குகளை அதிகரித்த ஆட்சியாளர்கள் முயற்சித்தபோது அதைத் தடுத்து நிறுத்தியுள்ளோம். அதன்மூலம் வங்கித்துறையைக் காப்பாற்றியுள்ளோம்.
இவ்வாறு இடதுசாரிக்கட்சிகள் ஆக்கபூர்வiமாகச் செயல்பட்டு உலகப் பொருளாதார மந்தம் ஏற்பட்டுள்ள இன்றைய நிலையில் இந்தியாவின் பொருளாதாரத்தைக் காப்பாற்றியிருப்பது இடதுசாரிக் கட்சிகள்தான். இவ்வாறு இடதுசாரிக் கட்சிகள் செயல்படாதிருந்திருந்தால் இந்தியாவின் பொருளாதாரமே நிலைகுலைந்து போயிருக்கும்.
எதிர்காலத்தில் நாட்டின் மதச்சார்பின்மை பாதுகாக்கப்பட, மதச்சார்பற்ற ஜனநாயகம் காக்கப்பட, நாட்டின் இறையாண்மை பாதுகாக்கப்பட இடதுசாரிக் கட்சிகள் தொடர்ந்து போராடி வந்துள்ளன.
இவ்வாறு கடுமையாகப் போராடிவரும் இடதுசாரிக் கட்சிகளின் கரங்களை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
பதினான்காவது மக்களவையில் இருந்த உறுப்பினர்களைவிட அதிக அளவில் பதினைந்தாவது மக்களவையில் இடதுசாரிக் கட்சி உறுப்பினர்களைத் தேர்வு செய்து அனுப்பிவைத்திடுமாறு இந்திய மக்களைக் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு ஏ.பி.பரதன் கூறினார்.
---

No comments: