Friday, February 15, 2008

மகாத்மா காந்தியும் மதச்சார்பின்மையும் -- வீ. சிவகாமியின் செல்வி



மகாத்மா காந்தி ஒரு மாபெரும் ஆளுமை. அவர் வலுவான மதநம்பிக்கை உடையவராக இருந்தாலும், மதப்பற்று, மதச்சார்பின்மை, வகுப்புவாதம் - இவை மூன்றிற்கும் உள்ள வேறுபாடுகளை நன்கு உணர்ந்திருந்தார். மதம் பெண்களுக்கு விதித்த தேவையற்ற கட்டுப்பாடுகளையும், தீண்டாமையையும், சாதி அடக்குமுறைகளையும் வன்மையாகக் கண்டித்ததோடு மட்டுமல்லாமல், அவற்றிற்கெதிரான போராட்டத்தையும் மக்களிடையே கொண்டு சென்றார். சமூக வாழ்க்கையின் எல்லா பரிமாணங்களிலும் பகுத்தறிவைப் பயன்படுத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அகிம்சையின் மூலம் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும் என்று நம்பினார். மகாத்மா காந்தி இறந்து 59 ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்னும் மகாத்மா காந்தி என்கிற அரசியல்வாதியையும் அவரது ஆளுமையையும் பற்றிய பல பரிமாணங்கள் மக்களுக்கு தெரியாமலேயே உள்ளன. மகாத்மா காந்தி நாத்திகர் அல்ல. மதப்பற்று இல்லாதவரும் அல்ல. தான் சார்ந்த மதத்தின் மீது அவருக்குப் பற்று இருந்தது. கடவுள் பக்தி அதிகம் உடையவர். ஆனால் மதப்பற்றுக்கும், மதச்சார்பின்மைக்கும் உள்ள வேறுபாடுகளை நன்கு உணர்ந்தவர். மதவெறிக்கு எதிராகக் கடைசி வரைப் போராடியவர். மதச்சார்பின்மைக்காகவும் இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காகவும் தன் இறுதி மூச்சுவரை போராடியவர் என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் உண்டு. ஆனால் மதவெறியர்கள் காந்தியின் மதநம்பிக்கையையும் அவரின் மதச்சார்பின்மையையும் தவறாகப் புரிந்து கொண்டு அவருக்கு எதிராகவே செயல்பட்டனர்.

மகாத்மா காந்தி எவ்வாறு மதநம்பிக்கையையும் மதச்சார்பின்மையையும் வேறுபடுத்திக் காட்டினார்? இந்தியாவிலும் வேறுசில நாடுகளிலும் மதச்சார்பின்மை என்பது நான்கு நெறிமுறைகள் வரையறை செய்யப்பட்டுள்ளது.1. மதம் ஒரு மனிதனின் தனிப்பட்ட விவகாரம். அரசியல், சமூகம், பொருளாதாரம், கல்வி இவையனைத்திலும் மதம் ஊடுறுவக்கூடாது. 2. அரசு எல்லா மதங்களையும் நடுநிலையோடு பார்க்க வேண்டும். நாத்திகம் உட்பட எல்லா நம்பிக்கைகளையும் சமமாகப் பாவிக்க வேண்டும். 3. மதத்தின் அடிப்படையில் எந்தவொரு மனிதனையும் அரசு வேறுபடுத்தி பார்க்கக்கூடாது. மதத்தின் அடிப்படையில் எந்தவொரு சலுகையையும் அரசு விதிக்கக்கூடாது. 4. இந்தியாவைப் பொறுத்தவரை இந்தியாவை ஒருங்கிணைக்கவும் இந்திய மக்களை ஒன்றுபடுத்தவும் மதச்சார்பின்மை என்ற தத்துவம் கடைப்பிடிக்கப்பட்டது. மதச்சார்பின்மையின் மூலமே வேற்றுமையில் ஒற்றுமை காண முடியும். ஆனால், வகுப்புவாதமோ மக்களைப் பிளவுபடுத்தவும் பிரிவினைக்கும் வித்திட்டது. இந்த நான்கு நெறிமுறைகளையும் மகாத்மா காந்தி எவ்வாறு கடைப்பிடித்தார் என்பதை காண்போம்.

மதம் ஒரு மனிதனின் தனிப்பட்ட விவகாரம் 1942ஆம் ஆண்டு தன்னுடைய பத்திரிகையில் காந்தி பின்வருமாறு எழுதுகிறார். “மதத்தின் பெயரால் ஒருமனிதனை இன்னொரு மனிதனிடமிருந்து வேறுபடுத்துவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். மதம் ஒரு மனிதனின் தனிப்பட்ட விவகாரம். அரசியல், சமூகம், பொருளாதாரம் போன்றவற்றில் மதம் ஊடுருவக் கூடாது. வருவாய், காவல்துறை, நீதி, உணவு, ஆரோக்கியம், சுகாதாரம், பொது இடங்களில் பழகுதல் போன்றவற்றில் ஒரு இந்துவின் தேவையும் ஒரு முஸ்லிமின் தேவையும் எவ்வாறு வேறுபட முடியும்? யதார்த்த வாழ்கையில் எத்தனை தனி மனிதர்கள் உள்ளனரோ அத்தனை மதம் உள்ளது. ஒவ்வொரு மனிதனும், தன்னுடைய கல்வி, சிந்தனை, அறிவு - இவற்றின்மூலம் தன்னுடைய மதத்தை எந்த அளவிற்கு கடைப்பிடிக்கவேண்டும்? எந்தக் கருத்துகளை ஏற்றுகொள்ளவேண்டும் என்று முடிவு செய்த பிறகே கடைப்பிடிக்கிறான். எனவே மதம் என்பது ஒரு மனிதனின் தனிப்பட்ட விவகாரம். அரசியலிலோ சமூகத்திலோ மதம் ஊடுருவக் கூடாது.”

அரசின் முன் அனைத்து மதங்களும் சமமேஇரண்டாவது நெறிமுறையான “அரசு எல்லா மதங்களையும் நடுநிலையோடு பார்க்க வேண்டும். நாத்திகம் உட்பட எல்லா நம்பிக்கைகளையும் சமமாகப் பாவிக்க வேண்டும்,” என்ற வரையறையை மகாத்மா காந்தி 1931ம் ஆண்டு கராச்சியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் அடிப்படை உரிமைகளுக்கான தீர்மானமாக வெளியிட்டார். இந்த வரையறையைத்தான் அவர் அனைத்து மதங்களும் சமம் (சர்வதர்ம சம்பவ) என்று அடிக்கடி குறிப்பிடுவார். எல்லா மதங்களையும் மட்டுமல்ல நாத்திகத்தையும் அவர் சமமாகப் பாவித்தார். “ஆத்திகர்கள் ‘கடவுள் உண்மையானவர்’ என்று நம்புகின்றனர். நாத்திகர்கள் ‘உண்மையே கடவுள்’ என்று நம்புகின்றனர். ஆகையால் அவர்களுடைய நேர்மையை நான் மதிக்கிறேன்” என்றார் காந்தி. காந்தியின் நண்பர்களுள் ஒருவரான பேராசிரியர் கோரா என்பவர் நாத்திகர். அவருடைய மகளை ஒரு தாழ்த்தப்பட்ட இளைஞனுக்கு நாத்திக முறைப்படி காந்தி தலைமையில் மணமுடிக்க விரும்பினார். மணமக்கள் உறுதிமொழி எடுக்கும்போது கடவுளின் பெயரால் அல்ல உண்மையின் பெயரால் இவ்விருவருக்கும் திருமணம் நடத்திவைக்க காந்தி ஒப்புகொண்டார். காந்திக்கு மிகப்பிரியமான இரண்டு நபர்கள் - மகாத்மா காந்தியின் அரசியல் குருவான கோபாலகிருஷ்ண கோகலேவும் அரசியல் வாரிசான ஜவஹர்லால் நேருவும் நாத்திகர்களே. மத அடிப்படையில் வேறுபாடின்மை:“சட்டத்தின் முன் அனைவரும் சமம். மதம், சாதி, இனம், பால் இவற்றின் அடிப்படையில் எந்த வேறுபாடும் இந்தியாவில் கிடையாது. இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் மனசாட்சியின்படி நடந்துகொள்ளும் உரிமை வழங்கப்படும். தன் மனதிற்கு பிடித்த எந்த மதத்தையும் கடைப்பிடிக்கலாம் அல்லது மதப்பற்று அற்ற நாத்திகராகவும் இருக்கலாம்.” என்று கராச்சி தீர்மானத்தில் காந்திஜி மிகவும் தெளிவாகத் தெரிவித்திருந்தார். மதச்சார்பின்மை ஒன்றுபடுத்தும் சக்தி; வகுப்புவாதம் பிளவுபடுத்தும் சக்தி;1922ஆம் ஆண்டு “பேச்சு சுதந்திரமும் சங்கம் அமைக்கும் சுதந்திரமும் மக்களின் அடிப்படை உரிமை. அதைப் பெற்றால்தான் நம்முடைய இலக்கை நோக்கி நாம் செல்லமுடியும்,” என்று கூறும் காந்தி 1936ஆம் ஆண்டு “பேச்சு சுதந்திரம் மதவெறியை மக்களிடையே தூவுவதாக இருக்கக்கூடாது. தனிமனிதர்கள் - மதங்கள் - இனங்கள் இவற்றிற்கிடையே மதவெறி, இனவெறி, தீய எண்ணங்களைத் தூண்டும் பத்திரிகைகளைத் தடைசெய்யும் உரிமை எனக்கிருந்தால் அதனை உடனே செய்வேன். பேச்சு சுதந்திரம் என்பது மக்களின் மனதில் விஷத்தை தூவுவதற்காக அல்ல. சுதந்திர இந்தியாவில் இப்படிப்பட்ட பத்திரிகைகளுக்கு இடமளிக்க மாட்டோம்’’ என்று காந்தி கூறுகிறார். மதச்சார்பின்மையின் ஒவ்வொரு அங்கத்தையும் இவ்வாறு கடைப்பிடித்த காந்தியை ஏன் இந்து மதவெறியர்களும் முஸ்லிம் மதவெறியர்களும் வெறுத்தனர், மதநம்பிக்கையையும் மதச்சார்பின்மையையும் காந்தி எவ்வாறு வேறுபடுத்திக் காட்டினார் என்பதில் தெளிவின்மைதான் இதற்குக் காரணம். காந்தியைப் பொறுத்தவரை மதம் என்பது இந்துமதத்தையோ, முஸ்லிம் மதத்தையோ, புத்த மதத்தையோ குறிப்பிடுவது அல்ல. அவரைப் பொறுத்தவரை “மதம் என்பது அறம், நீதி, உண்மை, நேர்மை’’ என்பதாகும் . ‘‘பொது வாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் அறம், நீதி, உண்மை, நேர்மை என்ற மதத்தைக் கடைபிடிக்கவேண்டும்’’ என்றார். ‘‘ ஏனென்றால் எல்லா மதங்களும் அவற்றைத்தான் போதிக்கின்றன. மதம் என்பது தர்மம். நான் தர்மம் என்கிற மத நம்பிக்கை உடையவன். உண்மையும் அன்புமே கடவுள்கள். நேர்மையும் நெறிமுறையும் தான் கடவுள். மனசாட்சிதான் கடவுள். வீரம்தான் கடவுள் நம்பிக்கை’’ என்றார். ‘‘மதம் என்று நான் குறிப்பிடுவது ஒருவரை ஒருவர் வெறுக்கவும் ஒருவரோடு ஒருவர் சண்டையிடவும் வைக்கும் கண்மூடித்தனமான மூடநம்பிக்கைகள் நிறைந்த மதம் அல்ல. எல்லோரையும் தன் அன்பால் அரவணைக்கும் சகிப்புத்தன்மை என்பதே மதம். அப்படிப்பட்ட சகிப்புத்தன்மை என்ற மதத்தின் பல்வேறு கிளைகள்தான் இந்துமதம், முஸ்லிம் மதம், புத்த மதம், கிறித்துவ மதம் போன்றவை. அப்படிபட்ட சகிப்புத்தன்மை என்ற நெறியே அரசு கடைப்பிடிக்கும் மதமாக இருக்கவேண்டும்.” என்று பல இடங்களில் 1922 முதல் 1942 வரை கூறியுள்ளார். இப்படி மதத்தையும் தர்மத்தையும் அவர் ஒன்றாக பாவித்தார். ஆனால் தர்மம்தான் காந்தி குறிப்பிடும் மதம் என்பதை பலர் புரிந்துகொள்ளவில்லை. பிரிவினைவாதமும் மதவெறியும் உச்சகட்டத்தில் இருந்த சமயத்தில் தன்னுடைய மதநம்பிக்கையை மக்கள் தவறாக புரிந்துகொண்டனர் என்பதை காந்தி உணர்ந்தார். எனவே 1942ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆரம்பித்ததிலிருந்து “மதம் ஒரு மனிதனின் தனிப்பட்ட விவகாரம். அரசியல், சமூகம், பொருளாதாரம் போன்றவற்றில் மதம் ஊடுருவக் கூடாது,” என்று பேசவும் எழுதவும் ஆரம்பித்தார். கல்வியில் மதம் திணிக்கப்படுவதை கடுமையாக எதிர்த்தார். 1947ஆம் ஆண்டு ஜாஹிர் ஹூசேனிடம் பேசும்போது “மதத்தையும் கல்வியையும் ஒன்றுபடுத்தக்கூடாது. எந்தவிதமான மதபோதனையும் கல்வி நிறுவனங்களில் போதிக்கப்படக் கூடாது. அதன் விளையு விபரீதமாக இருக்கும். மதம் என்பது தனிமனித விவகாரம். மத நிறுவனங்கள் தங்கள் மதத்தை பற்றி தனிமனிதர்களுக்கு சொல்லிக்கொடுக்கட்டும். ஆனால் அரசு அந்த வேலையை செய்யக்கூடாது. தனிமனித மத நம்பிக்கையும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்காமல் இருக்கவேண்டும். எல்லா மதத்திற்கும் பொதுவான ஒழுக்க நெறிகளையும் சகிப்புத்தன்மையையும்தான் அரசு போதிக்கவேண்டும். ஏனென்றால் இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாக இருக்கவேண்டும். அடிப்படை மதத்தையும் தர்மத்தையும் ஒன்றுபடுத்தாதீர்கள்,” என்றார்.

1920களில் மதம் என்பது தர்மம்தான் என்று சொன்ன காந்தி 1947ல் மதத்தையும் தர்மத்தையும் ஒன்றுபடுத்தாதீர்கள் என்று ஏன் சொன்னார்? காந்தி இப்படி மாறி மாறி மதத்தையும் தர்மத்தையும் குழப்பிக்கொண்டாரா என்ற கேள்விக்கு அவருடைய சுயசரிதை பதிலளிக்கிறது. “சத்தியத்தை நோக்கிய என்னுடைய தேடலில் நான் பல விஷயங்களை உணர்ந்துகொண்டிருக்கிறேன். என்னுடைய பல கருத்துகளை மாற்றிக்கொண்டிருக்கிறேன். நான் இப்பொழுது பேசும் வார்தைகள் முன் பேசியவைகளுக்கு முரணாக இருந்திருந்தால் நான் கடைசியாக சொன்னவைகளையே எடுத்துகொள்ளவேண்டும். தனிமனிதனின் அறிவு பரிணாம வளர்ச்சிக்கு உட்பட்டது. சத்தியத்தை நோக்கிய என்னுடைய தேடலில் என்னுடைய வார்த்தைகளையோ கருத்துக்களையோ மக்கள் புரிந்துகொள்ளவில்லையென்றால் மக்களால் புரிந்துகொள்ளக்கூடிய கருத்துக்களை நான் பரப்புவேன். நான் நல்ல மனநிலையில் உள்ளவன்தான், கிறுக்கன் அல்ல என்பதை நம்பினால், என்னுடைய அறிவு பரிமாணத்தை. அதன் பரிணாம வளர்ச்சியை புரிந்துகொள்ளுங்கள்,” என்று கூறுகிறார். மகாத்மாவின் இந்த சுயவிமர்சனம் அவருடைய மதம் குறித்த கோட்பாட்டை நமக்கு விளக்கும். 1920களில் தனிப்பட்ட மனிதனின் மதம் என்பது தர்மம்தான் என்று போதித்தார். ஆனால் அந்த போதனை மக்களிடையே தவறாக சென்றிருக்கிறது என்பதை காந்தி உணர்ந்தார். மக்கள் மதம் என்றால் இந்து மதத்தையும் முஸ்லிம் மதத்தையும்தான் நினைக்கின்றனர். தர்மம்தான் மதம் என்பதை மக்கள் உணர்ந்திருந்தால் நாடு பிரிவினைக்கு உட்பட்டிருக்காது என்பதைப் புரிந்துகொண்டார். எனவே மதமும் தர்மமும் ஒன்றுதான் என்று பேசுவதையும் எழுதுவதையும் தன்னுடைய தனிநபர் நம்பிக்கையாக எடுத்துக்கொண்டு அரசியலிலும் கல்வியிலும் மதம் புகக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தார். அதேபோல் மகாத்மாவின் பேச்சுக்கள் புராணங்களையும் இதிகாசங்களையும் உள்ளடக்கியிருந்தது. சுயராஜ்யம் இராம இராஜ்யமாக இருக்கவேண்டும் என்று மகாத்மா காந்தி பேசுவார். இதனை பிரிவினைவாதிகள் மதவெறிக்கு ஆதரவாக திசைதிருப்பினர். இதற்குப் பதிலளிக்கையில் “இராம இராஜ்யம் என்ற என்னுடை சொல்லை மதவெறிக்கு ஆதரவாகத் திசைதிருப்பிவிடும் நண்பர்களை நான் கண்டிக்கிறேன். இராம இராஜ்யம் என்று நான் குறிப்பிடுவது இந்துக்களின் இராஜ்யத்தை அல்ல. இராம இராஜ்யம் நல்லாட்சியின் முன்னுதாரணம். இராம இராஜ்யம் என்பது உண்மை நேர்மை என்ற கடவுளின் இராஜ்யமாக இருக்கவேண்டும். எனக்கு இராமனும் ரஹிமும் ஒன்றுதான். நல்ல அரசாங்கம் என்பதை இராம இராஜ்யம் என்று சொன்னால் மக்கள் புரிந்துகொள்கிறார்கள். எல்லைப் பகுதிகளுக்குச் செல்கையில் நான் அதனை குதாய் இராஜ்யம் என்று சொல்வேன். கிறித்துவர்களிடம் பேசுகையில் பூமியில் தேவன் நடத்தும் ஆட்சி என்று குறிப்பிடுவேன். நான் சந்தர்ப்பவாதியல்ல. இந்தியாவில் சாதி மத பேதமற்ற, இருப்போர் இல்லாதோர் போன்ற வேறுபாடுகளற்ற, நீதி தவறாத, பேச்சுரிமையும் வழிபாட்டுரிமையும் கொண்ட மக்களாட்சி மலரவேண்டும். அதுதான் கடவுளின் ஆட்சி. அதுதான் சுயராஜ்யம் என்ற கருத்தை மதச்சார்பற்று பரப்பவேண்டும். இதுவே என் நோக்கம்,” என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் மதவெறியர்கள் காந்தியை கடைசி வரைபுரிந்துகொள்ளவேயில்லை. மதச்சார்பின்மைக்கு ஆதரவாக தன்னுடைய கருத்துகளை விதைத்த காந்தி மதவெறியை முற்றிலும் எதிர்த்தார். எனவேதான் முஸ்லிம் மதவெறியர்கள் மட்டுமல்லாமல் இந்து மதவெறியர்களும் அவருடைய கருத்துகளை மக்களிடம் திரித்துக் கூறியுள்ளனர். வகுப்புவாதம் ஒரு பிரிவினைசக்தி என்பதை நன்றாக புரிந்துகொண்ட காந்தியால் அவற்றை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளைக் கண்டறிய முடியவில்லை. வகுப்புவாதத்தை அடக்குவதற்காக காந்தி மதத்தலைவர்களுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் மதத்தலைவர்களின் செல்வாக்கை அதிகரித்தனவே தவிர வகுப்புவாதத்தைக் குறைக்கவில்லை. சுதந்திரப் போராட்டத்தில் வெள்ளையனை வெளியேற்றுவதற்காக அணி திரண்ட மக்கள் மதம் கடந்து ஒன்றுபடுவார்கள் என்று நம்பினார். பிரிவினையைத் தடுப்பதற்காக முகம்மது அலி ஜின்னா இந்தியாவின் பிரதமராக அரியணையேறட்டும் என்று முன்மொழிந்தார். காந்தியின் அகிம்சைத் தத்துவம் வகுப்புவாதத்தைக் கட்டுப்படுத்துவதில் தோற்றுப் போனது. ஏனென்றால் வகுப்புவாதமும் ஒரு தத்துவம். வகுப்புவாதத்தை தத்துவார்த்தரீதியில் எதிர்த்திட வேண்டும் என்பதை காந்தி உணரவில்லை. வகுப்புவாதத்தை அடக்குவதற்கு நலப்பணித்திட்டங்களும் சலுகைகளும் அறிவிப்பதென்பது தற்காலிக பயனையே தரும். நிரந்தரமாக வகுப்புவாதத்தை ஒழிக்கவேண்டுமென்றால் வகுப்புவாதம் என்பது தவறான தத்துவம் என்பதை உணர்த்தவேண்டும். இதனைத் தத்துவப் போராட்டத்தின் மூலம்தான் செய்யமுடியும் என்பதை அக்காலத் தலைவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. எனவேதான் நாடு மதத்தின் அடிப்படையில் பிளவுபட்டது. இதனை, காந்தியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கடைசி வரை அதன் வேதனையும் விரக்தியும் அவரிடம் மேலோங்கியிருந்தன. காந்தியின் மதச்சார்பின்மையைப் பொறுத்துக்கொள்ள முடியாத காரணத்தினாலேயே ஒரு இந்து மதவெறியனால் காந்தி சுட்டுகொல்லப்பட்டார். காந்தி மதச்சார்பின்மைக்காகவே தன்னுடைய உயிரைத் தியாகம் செய்தார். காந்தியின் மதச்சார்பின்மை இந்தியாவை மதச்சார்பற்ற அரசாக மாற்றியது. பிரிவினை, பிரிவினை சார்ந்த கலவரம் இவற்றிற்கு மத்தியிலும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தால் மதச்சார்பின்மையைத் தூக்கிப்பிடிக்க முடிந்தது. மதச்சார்பற்ற இந்தியராக வாழ்ந்து மத சகிப்புத்தன்மையைக் கடைபிடித்து எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களையும் இந்தியராக அரவணைத்து ஒற்றுமையாக வாழ்வதே மகாத்மாவிற்கு நாம் செலுத்தும் நன்றிக் கடன்.

-- (வரலாற்றாசிரியர் பிபின் சந்திரா ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் ஆற்றிய உரையை ஆதாரமாகக் கொண்டு இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.)

No comments: