Friday, April 15, 2011

கேரளம் மற்றும் தமிழகத்தின் தேர்தல்கள் --பிரகாஷ்காரத்



கேரளம் மற்றும் தமிழ்நாட்டு மக்கள் ஏப்ரல் 13 அன்று தங்கள் மாநில சட்டமன்றப் பேரவைகளுக்கான தேர்தல்களில் வாக்களித்துள்ளார்கள். இவர்களுடன் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த மக்களும் தங்கள் யூனியன் பிரதேச சட்டப்பேரவைக்கான தேர்தலில் வாக்களித்துள்ளார்கள். இரு வாரங்களுக்கே நடைபெற்றதென்ற போதிலும் அவ்விரு வாரங்களும் மிகவும் விறுவிறுப்பான தேர்தல் பிரச்சரம் இரு மாநிலங்களிலும் நடைபெற்றதைப் பார்த்தோம். இரு மாநிலங்களிலும் நான் ஒருசில நாட்கள் இக்கால கட்டத்தில் செலவழித்தேன். தேர்தல் பிரச்சாரம் குறித்தும் பல்வேறுபட்ட தேர்தல் கூட்டணிகள் அவற்றின் வாய்ப்புகள் குறித்தும் ஒருசில கருத்துக்களை முன்வைக்கிறேன்.
பிரதானமான பிரச்சனைகள் நாட்டைக் கடுமையாகப் பாதித்துள்ள விலைவாசி உயர்வும் ஆட்சியாளர்களின் லஞ்ச ஊழலும் இரு மாநிலங்களில் நடைபெற்ற பிரச்சாரத்தின்போதும் பிரதான பிரச்சனைகளாக மக்களின் முன் வைக்கப்பட்டன. நகர்ப்புறமாக இருந்தாலும் சரி அல்லது கிராமப்பகுதிகளாக இருந்தாலும் சரி, அனைத்து இடங்களிலும், மக்கள் இவ்விரு பிரச்சனைகள் குறித்தும் இவை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் குறித்தும் கவலைப்பட்டார்கள். கேரளாவில், விலைவாசி உயர்வுப் பிரச்சனை, பொது விநியோக முறையோடு நேரடியாக இணைக்கப்பட்டது. வறுமைக் கோட்டுக்குக் கீழ் வராத குடும்பத்தைச் சேர்ந்த அனைவருக்கும் அரிசி கிலோ 2 ரூபாய் வீதம் அளித்திடக்கூடிய வகையில் இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் அத்திட்டத்தை விரிவாக்கியது. மாநில அரசாங்கம் தம் வசம் உள்ள அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருள்களை மக்கள் வாங்கக்கூடிய விலைகளில், நியாய விலைக் கடைகள், மாவேலி ஸ்டோர்கள் மற்றும் கூட்டுறவு அங்காடிகள் மூலம் விநியோகிக்க மேற்கொண்ட நடவடிக்கைகளை விலைவாசி உயர்வினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பெரிதும் பாராட்டி வரவேற்றார்கள். இதற்கு நேர்மாறாக, மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் விலைவாசியைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை எதையும் எடுக்காதது மக்கள் மத்தியில் வருத்தத்தையும் ஆத்திரத்தையும் அளித்தது.

உயர்மட்ட அளவில் நடைபெற்றுள்ள லஞ்ச ஊழல்கள் கேரள மக்கள் மத்தியில் கடுமையாக எதிரொலித்தன. சமீபத்தில், முந்தைய ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த, ஆர். பாலகிருஷ்ண பிள்ளை, சிறைக்கு அனுப்பப்பட்டார். இவர் மீது கீழமை நீதிமன்றம் அளித்திருந்த தண்டனைத் தீர்ப்பு உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு இவர் முன்னர் விடுதலை செய்யப்பட்டிருந்தார். ஆனால் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற மேல்முறையீட்டில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தள்ளுபடி செய்யப்பட்டு, கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பே சரியானது என்று உறுதி செய்யப்பட்டு, அவர் சிறைக்கு அனுப்பப்பட்டார். அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த வி.எஸ். அச்சுதானந்தன் நீதிமன்றத்தில் பாலகிருஷ்ண பிள்ளை மீது தொடுத்த மனு மீதான விசாரணையில்தான் இவ்வாறு அவருக்கு லஞ்சஊழலுக்கான தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. ஊழலுக்கு எதிராக இடது ஜனநாயக முன்னணியின் உறுதியான நிலைப்பாட்டை இது அழுத்தந் திருத்தமாகத் தெரிவிக்கிறது. ஐமுகூ அரசாங்கத்தின் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், மற்றும் சமீபகாலங்களில் அடுக்கடுக்காக வெளிவந்துள்ள பல்வேறு ஊழல் வழக்குகள் மக்கள் மத்தியில் இந்த அரசின் மீதான சித்திரத்தை சின்னாபின்னமாக்கிவிட்டன. இந்தப் பின்னணியில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தின்போது, இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் லஞ்ச ஊழல் மிகுந்தது என்று கூறிய குற்றச்சாட்டை, மக்கள் சட்டைசெய்யவே இல்லை. காங்கிரஸ் ஆதரவாளர்கள்கூட இதனைப் பெரிதுபடுத்தவில்லை. ஐக்கிய ஜனநாயக முன்னணி மீண்டும் ஆட்சிக்கு வருவது என்பதன் பொருள், லஞ்சலாவண்யம் மிக்க ஓர் அரசாங்கத்தை, தற்போது மத்தியில் உள்ளது போன்று லஞ்சத்தில் ஊறித்திளைக்கும் அரசாங்கத்தை மீண்டும் ஆட்சியலமர்த்துவதே என்கிற இடது ஜனநாயக முன்னணியின் பிரச்சாரம் மக்களிடம் வலுவாகச் சென்றடைந்தது.

உயர் மட்ட அளவில் ஊழலுக்கு எதிராக மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கடுங்கோபம், ஊழலற்ற அரசாங்கம் அமைய வேண்டும் என்று மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள வலுவான பெருவிருப்பம், நிச்சயமாக இடது ஜனநாயக முன்னணிக்கு ஆதரவாக வேலை செய்தது. முதலமைச்சர் வி.எஸ். அச்சுதானந்தன் கூட்டங்களில் மக்கள் பெரும் திரளாகத் திரண்டதானது இதனை அங்கீகரிப்பதாக அமைந்தது.

தேர்தல் பிரச்சாரம் மற்றொரு குறிப் பிடத்தக்க அம்சத்தையும் வெளிப் படுத்தியது. இதனை இடது முன்னணிக்கு எதிராகச் செயல்பட்டுவரும் ஊடகங்களாலேயே கூட மறைக்க முடியவில்லை. ஆட்சியிலிருப்பவர்களுக்கு எதிராக மக்கள் மத்தியில் பொதுவாக இருந்திடும் கசப்புணர்வு (யவேi-inஉரஅநெnஉல கநநடiபேள), இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்திற்கு எதிராக இல்லை என்பது மிகவும் தெளிவாகத் தெரிந்தது.

இடது ஜனநாயக முன்னணியின் சாதனை

அடுத்து கேரளத்தில் வளர்ச்சிப் பணிகள் இல்லை என்பது போன்ற பிரச்சனைகள் எழுப்பப்பட்டன. காங்கிரஸ் தலைமையும் ஐக்கிய ஜனநாயகக் கூட்டணியும்தான் கேரளாவில் வளரச்சித் திட்டங்களை உருவாக்கியதாகவும், அதனை இடதுஜனநாயக முன்னணி தொடர்ந்து மேற்கொள்ளத் தவறிவிட்டது என்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியும், பிரதமரும் கூறினார்கள். மத்திய அரசு அளித்த நிதிகளையும், திட்டங்களையும் இடது ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் முறையாகப் பயன்படுத்தத் தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டையும் சுமத்தினார்கள். கடந்த ஐந்தாண்டுகளில் கேரளம் முதலீடுகளைக் கவர்ந்திடவும், வளர்ச்சியை உத்தரவாதப் படுத்திடவும் தவறிவிட்டது என்று குறை கூறினார்கள். இதற்கு இடதுசாரிகளின் பத்தாம்பசலித்தனமான சித்தாந்தமே காரணம் என்றும் அவர்கள் குறிப்பிட்டார்கள். ‘‘வளர்ச்சிக்கான அடிப்படைகள் மாறியிருக்கின்றன என்பதை இடதுசாரிகள் அங்கீகரிக்க மறுத்தார்கள்’’ என்றும், ‘‘சாமானியர்களின் தேவைகளுக்குப் பொருந்தக்கூடிய திட்டங்களை அவர்கள் பின்பற்றவில்லை’’ என்றும் பிரதமர் மன்மோகன்சிங் கூறினார். இதன் பொருள் என்ன? காங்கிரஸ் கட்சியையும் ஐமுகூ அரசாங்கத்தையும் பொறுத்தவரை, ‘‘வளர்ச்சிக்கான அடிப்படைகள் மாறியிருக்கின்றன’’ என்பதன் பொருள், நவீன தாராளமய, சந்தைப் பொருளாதாரக் கொள்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என்பதேயாகும். மத்திய அரசின் நாசகரமான விவசாயக் கொள்கைகள்தான் விவசாயிகளின் அவல நிலைக்கும், அவர்கள் கேரளாவில் தற்கொலைகளை மேற்கொள்ளத் தள்ளியதற்கும் காரணங்களாக இருந்தன. உலகச் சந்தையுடன் விவசாயத்தை இணைத்ததும், அவர்களுக்கு அளித்து வந்த மான்யங்களை இல்லாது ஒழித்ததும்தான் இவர்களின் வளர்ச்சிப் பாதையின் பகுதிகளாகும். இவர்களது நவீன தாராளமய அணுகுமுறைக் கண்ணோட்டத்தின்படி, கேரள அரசாங்கம் நலிவடைந்த பொதுத்துறை நிறுவனங்களுக்குப் புத்துயிரளித்ததும், அவற்றை லாபகரமானதாக மாற்றியதும் வெறுக்கப்பட வேண்டியவை களாகும். உழைக்கும் மக்களின் அனைத்துப் பிரிவினருக்கும் விரிவாக்கப்பட்ட பல்வேறு சமூக நலத் திட்டங்கள், பொது விநியோக முறையை அனைவருக்குமானதாக மாற்றுவதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகள், குறைந்தபட்ச ஊதியம், ஓய்வூதியம் மற்றும் பல சமூகப் பாதுகாப்பு உதவிகளை உத்தரவாதப் படுத்தியமை போன்றவை பிரதமரின் பார்வையில், ‘‘சாமானியர்களின் தேவைகளுக்குப் பொருந்தக்கூடிய திட்டங்கள்’’ இல்லை என்பதாகும். ஆனால் இவைதான் கேரள அரசு மீது மக்களுக்குக் கசப்புணர்வு ஏற்படாமல் இருந்ததற்குக் (anti-incumbency feelings) காரணங்களாகும்.
மத்தியில் ஐமுகூ அரசாங்கம் கடைப்பிடிக்கும் நவீன தாராளமய அணுகுமுறைக்குச் சவால் விடக்கூடிய வகையில் மாற்று வளர்ச்சிப் பாதையை இடது ஜனநாயக முன்னணியின் கொள்கை முன்வைத்தது. அதைத்தான் பல விமர்சகர்களும், ஆராய்ச்சியாளர்களும் கண்டித்தார்கள், கண்ணீர் விட்டார்கள். காங்கிரஸ் அல்லது பாஜக ஆட்சியாளர்கள் கடைப்பிடிப்பதைப்போன்று, கேரள அரசும் சட்டவிரோத முதலாளித்துவ (உசடிலே உயயீவையடளைஅ)பாதையைப் பின்பற்ற வேண்டும், கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட அனுமதித்திட வேண்டும், பெரும் வர்த்தக நிறுவனங்கள் - அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரவர்க்கத்தினர் இடையேயான கள்ளத் தொடர்பை, கயமைத் தொடர்பை மேம்படுத்திட வேண்டும் என்பதே அவர்களது விருப்பங்களாகும்.

இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தின் செயல்பாடுகள் குறித்து மக்கள் மத்தியில் ஆழமான முறையில் அதிருப்தி எதுவும் இல்லாத நிலையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி சாதீய மற்றும் வகுப்புவாத அமைப்புகளின் ஆதரவைப் பெற முடிவுசெய்தது. இதற்கு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கேரளாவில் பணமும், மதுவும் ஆறாக ஓடியதையும் பார்க்க முடிந்தது. பிரச்சாரம் முடிவுற்ற சமயத்தில், எதிரிகள் திட்டமிட்டு உருவாக்கிய துர்ப்பிரச்சாரங்கள் மற்றும் கருத்துக் கணிப்புகளைப் பொடிப்பொடியாக்கி, இடது ஜனநாயக முன்னணி மிகவும் நம்பிக்கையுடன் முன்னேறியதைப் பார்க்க முடிந்தது.

தமிழ்நாட்டின் நிலைமைகள்

தமிழ்நாட்டிலும் கூட, லஞ்ச ஊழல் மற்றும் விலைவாசி உயர்வு ஆகிய இரண்டும் இரு முக்கிய பிரச்சனைகiளாக முன்னுக்கு வந்தன. ஆயினும் இங்கே லஞ்ச ஊழல் என்னும் பிரச்சனை என்பது பிரம்மாண்டமான அளவில் இருந்தது. நாடு சுதந்திரம் பெற்றபின்னர் நாட்டில் நடைபெற்ற ஊழல்களிலேயே மிகப்பெரிய ஊழலை மாநிலத்தை ஆளும் திமுக-வினர் புரிந்துள்ளனர் என்பதும், அது தொடர்பாக மேற்கொள்ளப் பட்டுள்ள கிரிமினல் வழக்கில் அக்கட்சியின் சார்பில் மத்தியில் ஆட்சியில் இருந்த அமைச்சரே பிரதானமாகக் குற்றஞ் சாட்டப்பட்டிருக்கிறார் என்பதும் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட்டது. நாட்டில் உயர் மட்ட அளவில் நடைபெற்றுள்ள ஊழல்களுடன் முதல்வர் கருணாநிதியின் குடும்பம் பின்னிப் பிணைந்திருப்பதை தமிழக மக்கள் தெரிந்து கொண்டார்கள். முதல்வர் கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் - திரைப்படத் துறை, தொலைக்காட்சி அலைவரிசைகள், பத்திரிகைகள், கேபிள் டி.வி. விநியோகம், ரியல் எஸ்டேட், விமானக் கம்பெனிகள், ஓட்டல்கள் என அனைத்துத் துறைகளிலும் - ஆதிக்கம் செலுத்துவது ஜனநாயக அமைப்பின் மீதான கொடூரமான தாக்குதலாக மக்களால் பார்க்கப்பட்டன. அஇஅதிமுக பொதுச் செயலாளர், செல்வி ஜெயலலிதா, இப்பிரச்சனையைத் தன்னுடைய தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் அனைத்திலும் கொண்டு சென்றார். மக்கள் மத்தியில் இது பெரும் வரவேற்பைப் பெற்றது.

கடும் விலைவாசி உயர்வு, மிகவும் விரிவான அளவில் இருந்த மின்வெட்டு, திமுக-வினர் மஃபியா கும்பலுடன் வைத்திருந்த கள்ளத் தொடர்பு ஆகிய பிரச்சனைகளும் மக்களைத் திமுக அரசாங்கத்திற்கு எதிராக அணிதிரட்டியுள்ளது. திமுக - காங்கிரஸ் கூட்டணியும் கூட அருவருப்பான ஒன்றாகவே அமைந்திருந்தது. ஏனெனில் காங்கிரஸ் கட்சிக்குள் நிலவிய கோஷ்டிச் சண்டைகளும், மக்கள் மத்தியில் திமுக குறித்து வெளிப்படையாகவே அதன் தலைவர்கள் பலர் வெளிப்படுத்திய கருத்துக்களும் நிலைமைகளை அவ்வாறு ஆக்கி இருந்தன.

தமிழ்நாடு, நவீன தாராளமயக் கொள்கைகளின் முழுமையான விளைவுகளை அனுபவித்த மாநிலமாகும். சமீப ஆண்டுகளில் வேறெந்தவொரு மாநிலமும் தேர்தலில் இந்த அளவிற்கு சட்டவிரோதமாகச் சேர்த்த கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை வாரியிறைத்ததில்லை. திருமங்கலத்தில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தல் அனுபவத்தை அடுத்து, சென்ற மக்களவைத் தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் அளிப்பது என்பது மிகவும் விரிவான முறையில் நடைபெற்றிருந்தது. தேர்தல் ஆணையம் சட்டவிரோத பணப் புழக்கத்தைத் தடுத்திட சில நடவடிக்கைகளை மேற்கொண்டது. தேர்தலுக்கு முன் நடைபெற்ற பல சோதனைகளில் சுமார் 50 கோடி ரூபாய் வரை ரொக்கமாகவும், பல்வேறு பொருள்களாகவும் கைப்பற்றப்பட்டன. திருச்சியில் ஒரு ஆம்னி பஸ்ஸின் மேல் உச்சியிலிருந்து மட்டும் 5 கோடியே 11 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. ஆயினும் இவை அனைத்தும் ஆட்சியாளர்களால் வாரியிறைக்கப் பட்ட பல்லாயிரம் கோடி ரூபாயில் ஒரு சிறு துளிதான். நகர்ப் புறங்களில் வாக்காளர்களுக்கு 500 ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாய் வரைக்கும், கிராமப்புறங்களில் 500 ரூபாய் வரைக்கும் கோடிக்கணக்கான ரூபாய்கள் வாரியிறைக்கப்பட்டிருக்கின்றன.

ஆயினும், பிரச்சாரத்தின்போது மக்களின் மனநிலை எப்படி இருந்தது என்பதை ஒருவர் நன்கு அறிந்து கொள்ள முடிந்தது. இந்தத் தடவை ஆட்சியாளர்கள் எவ்வளவுதான் கோடி கோடியாக கொட்டியிருந்த போதிலும் அதனால் தேர்தல் முடிவைத் தீர்மானிக்க முடியாது என்பதைத் தெள்ளத் தெளிவாகப் பார்க்க முடிந்தது.

திராவிட முன்னேற்றக் கழகம், நாட்டில் உள்ள மாநிலக் கட்சிகளில் முதல் அதிகாரபூர்வமான மாநிலக் கட்சியாக விளங்கியது. சமூக நீதி மேடையிலிருந்து உதித்த வெகுஜன தளத்தையும் ஸ்தாபனக் கட்டமைப்பையும் மிகவும் வலுவாகக் கொண்டிருந்த ஒரு கட்சியாக திமுக இருந்தது. மாநில சுயாட்சி மற்றும் மத்திய மாநில உறவுகளுக்குக் குரல் கொடுத்த கட்சிகளில் முன்னோடியாக விளங்கிய ஒன்று. அத்தகைய பாரம்பர்யம் கொண்ட ஒரு கட்சியாக விளங்கிய திராவிட முன்னேற்றக் கழகம், மிகவும் தரம் தாழ்ந்து இன்றைய தினம் ஒரு குடும்ப முன்னேற்றக் கழகமாக மாறி, சட்டவிரோத மூலதனத்தால் (crony capitalism) கொள்ளையடித்த பணத்தைத் தேர்தலிலும் பயன்படுத்தி, ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள முயல்வதைப் பார்க்கும்போது, மிகவும் பரிதாபமாக இருக்கிறது.

திமுக இத் தேர்தலில் தூக்கி எறியப்பட்டால், அவ்வாறு அதன் விதி முடிவது முழுமையும் சாலப் பொருத்தமானதேயாகும். ஊழலில் அதன் கூட்டாளியாக இருந்த காங்கிரஸ் கட்சியும் இதேபோன்றதொரு மோசமான முடிவையை எதிர்கொள்ள விருக்கிறது.

(தமிழில்: ச.வீரமணி)

Thursday, April 14, 2011

சுரண்டலற்ற உலகத்தை உருவாக்குவோம்! முதலாளித்துவ காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிராக உலகத் தொழிலாளர்களை அணிதிரட்டுவோம்! உலகத் தொழிற்சங்கங்கள் சம்மேளன

ஏதென்ஸ், ஏப். 14-

முதலாளித்துவ காட்டு மிராண்டித்தனத்திற்கு எதிராகவும், சுரண்டலற்ற உலகத்தை உருவாக்குவதற் காகவும், உலகத் தொழி லாளர்களை அணிதிரட்டு வோம் என கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்ஸில் நடைபெற்ற உலகத் தொழிற் சங்கங்கள் சம்மேளனத்தின் 16ஆவது மாநாடு அறை கூவல் விடுத்தது.

உலகத் தொழிற்சங்க சம்மேளனத்தின் (றுடிசடன குநனநசயவiடிn டிக கூசயனந ருniடிளே) 16வது மாநாடு கிரீஸ் தலை நகர் ஏதென்ஸில் கடந்த ஏப் ரல் 6 புதனன்று எழுச்சி யுடன் துவங்கியது. மாநாடு 10ஆம் தேதி வரை நடை பெற்றது.

உலகம் முழுவதுமிருந்து 881 பிரதிநிதிகளும் பார்வை யாளர்களும் மாநாட்டில் கலந்துகொண்டனர். உல கில் நான்கு துணைக் கண் டங்களில் உள்ள 105 நாடு களில் இருந்து தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்றார் கள். மாநாட்டுப் பிரதிநிதி களில் 32 விழுக்காட்டினர் பெண்கள் என்பது குறிப் பிடத்தக்கது.

இந்தியாவில் இருந்து சிஐடியு அகில இந்தியத் தலைவர் ஏ.கே. பத்மநாபன் தலைமையில் பிஎஸ் என்எல் ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் அபி மன்யு, அகில இந்திய இன் சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தலைவர் அமானுல்லாகான் உட்பட 20 பேரும், அகில இந்திய மாநில அரசு ஊழி யர் சம்மேளனம் சார்பில் ஆர்.முத்துசுந்தரம், சுகுமால் சென், ஆர்.ஜி.கார்னிக் உட் பட 6 பேரும் மாநாட்டில் கலந்து கொண்டனர்.

உலகத் தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் அசௌஸ் எம். சபான், பொதுச் செயலாளர் ஜார்ஜ் மாவ்ரிகோஸ் ஆகியோர் மாநாட்டைத் துவக்கி வைத் தனர். சிஐடியு அகில இந்திய செயலாளர் ஹேமலதா மற்றும் தென் ஆப்பிரிக்கா, அரபு நாடுகள் உட்பட 35 பேர் கொண்ட மாநாட்டுத் தலைமைக்குழு தேர்வு செய் யப்பட்டது.

உலகப் பொருளாதார நெருக்கடியின் விளைவாக தொழிலாளர்கள் மீது ஏவப்பட்ட தாக்குதல்களை எதிர்த்து, எண்ணற்ற போராட் டங்களை நடத்திய, உலகத் தொழிற்சங்க சம்மேளனத் தின் பொதுச் செயலாளரும் கிரேக்கத் தொழிற்சங்கத் தின் வீரஞ்செறிந்த தலைவ ருமான பாமே, மாநாட் டைத் துவக்கி வைத்தார்.

மாநாட்டில் உரை நிகழ்த்திய சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஜார்ஜ் மாவ்ரிகோஸ், ஏகாதிபத்தி யத்தின் ஆக்கிரமிப்பு களுக்கு எதிராக உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர் வர்க் கம் ஒன்றுபட வேண்டிய தன் அவசியத்தை வலியுறுத் தினார். இந்தத் திசைவழியில் தான் கடந்த ஐந்தாண்டு களாக சம்மேளனம் செயல் பட்டு வருவதாகத் தெரி வித்தார்.

கிரேக்க நாடாளுமன்றத் தின் முதல் உதவித் தலைவர், கிரேக்க நாடாளுமன்றத் தின் சபாநாயகர், ஏதென்ஸ் மற்றும் பெய்ரஸ் நகரின் மேயர்கள் ஆகியோரும் மாநாட்டில் உரையாற்றினர்.

பிரதிநிதிகள் மாநாடு
மாநாட்டின் பிரதிநிதி கள் அமர்வு 7ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நடைபெற்றது.

மாநாட்டில் முதல் அமர் வுக்கு சிஐடியு தலைவர் ஏ.கே. பத்மநாபன் உள்ளிட்டோர் தலைமையேற்றனர்.

மாநாட்டுப் பிரதிநிதி களின் விவாதத்தில் உலகப் பொருளாதார நெருக்கடி யின் தாக்கம் பிரதானமாக இடம்பெற்றது. இதன் விளைவாக உலக அளவில் அதிகரித்து வரும் வேலை யில்லாத் திண்டாட்டம், தொழிலாளர்களின் உண்மை ஊதியத்தில் இழப்பு ஏற் பட்டுள்ளமை, சமூக நலத் திட்டங்களுக்கு செலவிடும் தொகை வெட்டிக் குறைக் கப்படுதல் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது.

உலக அளவில் பெரும் முதலாளிகள் மற்றும் பன் னாட்டு முதலாளிகளுக்கு எதிரான போராட்டத்தில் உலகத் தொழிலாளர் வர்க் கம், ஏழை விவசாயிகளை யும், சுயதொழில் புரிபவர் கள் மற்றும் வர்த்தகர்களை யும் அணிதிரட்ட வேண்டி யதன் அவசியத்தையும் மாநாடு சுட்டிக்காட்டியது.

முதலாளித்துவ நாடுகள் அனைத்திலும் உழைக்கும் பெண்களுக்கு உள்ள பிரச் சனைகள் குறித்தும் சிறப்புக் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் மாநாடு வலியுறுத்தியது.

பெண் பிரதிநிதிகளைக் கொண்டு தனி அமர்வு ஒன் றும் 7ஆம் தேதியன்று நடை பெற்றது. இதில் உழைக்கும் பெண்களின் பிரச்சனை களை மையப்படுத்தி சர்வ தேச அளவில் தனி மாநாடு ஒன்று நடத்தவும் தீர்மா னிக்கப்பட்டது.

இளம் தொழிலாளர்கள் மத்தியில் தொழிற்சங்க விழிப்புணர்வு குறைவாக இருப்பதை மாநாடு சுட்டிக் காட்டியது.

புதிய நிர்வாகிகள்

மாநாட்டில் சிரியா வைச் சேர்ந்த அசௌஸ் எம்.சபான், தலைவராகவும், ஜார்ஜ் மாவ்ரிகோஸ், பொதுச் செயலாளராகவும் மீண்டும் தேர்வு செய்யப் பட்டனர்.

சிஐடியு சார்பில் ஏ.கே. பத்மநாபன், ஸ்வதேஷ் தேவ் ராய் உட்பட 40 உறுப்பி னர்களைக் கொண்ட புதிய தலைமைக் கவுன்சில் உரு வாக்கப்பட்டது. இக்கவுன் சில் ஏ.கே. பத்மநாபனை, உலகத் தொழிற்சங்க சம்மே ளனத்தின் துணைத் தலைவ ராகவும், ஸ்வதேஷ் தேவ் ராயை செயற்குழு உறுப்பி னராகவும் தேர்வு செய்தது.

உலகத் தொழிற்சங்க சம்மேளனத்தின் அடுத்த மாநாடு நடைபெறும் சம யத்தில் சம்மேளனத்தின் 70ஆம் ஆண்டைக் கொண் டாடும் விதமாக, புதிய தொழிற்சங்க ஊழியர்கள் ஆயிரக்கணக்கானோரை வளர்த்தெடுத்திடவும், வர்க்கப் போராட்டங்களை வலுப்படுத்திடவும், வருங் கால சந்ததியினருக்கு சுரண் டலற்றதோர் உலகத்தை அளித்திடவும் உறுதி மேற் கொண்டுள்ளது.

Thursday, April 7, 2011

ஊழல் பேர்வழிகளைத் தோற்கடிப்பீர்




இந்த இதழ் வாசகர்களின் கைகளை அடையும் சமயத்தில், அநேகமாக நாட்டில் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்கான தேதிகள் நெருங்கிக் கொண்டிருக்கும். அஸ்ஸாமில் தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவு முடிந்துவிட்டது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் முடிவுக்கு வந்திருக்கும்.
மிகப் பெரும்பாலோரால் எதிர்பார்க்கப்பட்டபடி, ஒவ்வொரு மாநிலத்தின் பிரத்யேக பிரச்சனைகளுடன், ஆட்சியாளர்கள் மத்தியில் அதிகரித்துள்ள ஊழல் மற்றும் விலைவாசி உயர்வு பிரச்சாரத்தில் பிரதானமாக இடம் பெற்றிருக்கின்றன. குறிப்பாக தமிழ்நாட்டில் ஆளும் திமுக கூட்டணி காங்கிரசின் உதவியை முழுமையாகப் பெற்றுக்கொண்டு அரசாங்கத்தைத் தக்க வைத்துக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் போன்ற அன்பளிப்புத் திட்டங்கள் (உண்மையில் 50 விழுக்காட்டுக் குடும்பத்தினருக்குக் கூட இவை போய்ச் சேரவில்லை) திமுக அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டிருந்த போதிலும், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் ஒவ்வொரு குடும்பத்தினரின் விவாதப் பொருளாகவும் மாறியிருக்கிறது. தமிழ் நாட்டு அளவில் நடைபெற்றுள்ள பல்வேறு ஊழல்களுடன், ஊழல்களில் அரசியாகத் திகழும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலானது, உயர் மட்ட அளவில் நடைபெறும் ஊழல்களை மையக் கருவாகக் கொண்டு வந்திருக்கிறது.

ஆயினும், ஊழல் என்பது தமிழ்நாட்டோடு மட்டும் சுருங்கிவிடவில்லை. சமீப காலத்தில் வெளிப்பட்டுள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல், ஆதர்ஸ் வீட்டுவசதி சங்க ஊழல், ஆன்ட்ரிக்ஸ்-ஐஎஸ்ஆர்ஓ ஊழல், வாக்காளர்களுக்குப் பணம் தருதல், சட்டவிரோதமாகக் கனிம வளங்களைக் கொள்ளையடித்தல், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் நடைபெற்ற ஊழல் போன்று அடுக்கடுக்காக நடைபெற்ற பல்வேறு ஊழல்கள், காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ-2 அரசாங்கத்தை உயர்மட்ட அளவில் நடைபெறும் ஊழல் பேர் வழிகளுக்குப் பாதுகாப்பு அளித்திடும் ஒன்றாகக் குறைத்து விட்டது. இவர்களின் கேவலமான செயல்பாடுகள் அலிபாபாவும் நாற்பது திருடர்களும் கதையைத் தான் நமக்கு நினைவு படுத்துகின்றன. ஆயினும், தற்போதைய சூழ்நிலைக்கும் அக்கதைக்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் உண்டு. அலிபாபா இல்லாத நிலையில் 40 திருடர்களும் வெறித்தனமாகக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு ஊழல் பேர்வழிகள் பொதுச் சொத்தைக் கொள்ளையடித்ததன் மூலம் பெரும்பான்மை மக்களுக்குப் போய்ச்சேரவேண்டிய நலத்திட்டங்கள் பலவற்றை முடக்கியது மட்டுமல்லாமல், இப்போது தேர்தல் சமயத்தில் அவ்வாறு தாங்கள் கொள்ளையடித்த பணத்தைக் கொண்டு அதே மக்களுக்கு லஞ்சம் கொடுத்து, அவர்களது வாக்குகளை வாங்குவதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருப்பதையும் பார்க்க முடிகிறது. இந்தக் கேவலமான செயல் தமிழ்நாட்டில் கொஞ்சம்கூட கூச்சநாச்சமின்றி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் காரணமாக மத்திய டெலிகாம் துறையின் முன்னாள் அமைச்சரும், திமுகவின் தலைவர்களில் ஒருவருமான ஆ.ராசா தற்சமயம் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். மற்றொரு திமுக தலைவரும் மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சருமான மு.க. அழகிரி நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றிருக்கிறார். தேர்தல் வெற்றிக்கு பணபலத்தைப் பயன்படுத்துவதில் பேர்போன இவர், எங்கே தான் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுவிடுவோமோ என்ற ஐயுறவுக்கு ஆட்பட்டிருக்கிறார். தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளின் காரணமாக, தமிழ்நாட்டில் அனைத்து வாகனங்களிலும் பணம் கொண்டு செல்லப்படுகிறதா என்று சோதனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே, பல கோடி ரூபாய்கள் பறிமுதல் செய்யப் பட்டிருக்கின்றன. உண்மையில், தேர்தல் ஆணையமானது, காவல்துறை வாகனங்களில் பணம் எடுத்துச் செல்லப்படுகிறது என்றும் அதனைத் தடுத்து நிறுத்திட உயர்நீதிமன்றம் தலையிட வேண்டும் என்றும் கோரி, உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறது. சமீபத்தில், ஒரு தனியார் ஆம்னி பஸ்ஸில் பல கோடி ரூபாய் எடுத்துச் செல்லப்பட்டதைக் கைப்பற்றி இருக்கிறார்கள். நம்பிக்கை இழந்த நிலையில் உள்ள திமுக தேர்தல் வெற்றியை எந்த வகையிலாவது வாங்கிட வேண்டும் என்பதற்காக அனைத்துவிதமான வேலைகளிலும் வெறித்தனமாக இறங்கி யிருக்கிறது.

இவ்வாறு ஊழல் என்பது நம் நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பிற்கே கடும் பாதிப்பைக் கொண்டுவந்திருக்கிறது. மக்கள் தாங்கள்அளிக்கும் வாக்குக்குப் பணம் கொடுப்பதன் மூலம், ஊழல் வாக்காளர்களாக மாற்றுவதன் மூலம் அவர்கள் ஜனநாயகபூர்வமாகத் தங்கள் வேட்பாளரைத் தேர்வு செய்யும் வாய்ப்பைச் சீர்குலைக்கிறார்கள். நாட்டின் உயர் மட்ட அளவில் ஊழலுக்குத் துணை போகிறவர்கள் திமுக-வினர் மட்டுமல்ல, காங்கிஸ் கட்சியினரும்தான் ஆவார்கள். எனவே இவ்விரு கட்சியினருமே நடைபெற விருக்கும் தேர்தல்களில் ஓரங்கட்டப்பட வேண்டியவர் களாவர்.

மேலும் இதில் ஒரு முக்கிய அம்சம் அடங்கியிருக்கிறது. இவ்வாறு உயர்மட்ட அளவில் நடைபெறும் ஊழலை ஒரு நாடு எப்படித் தடுத்திட முடியும்? ஊழலைத் தடுப்பது என்பது ஓர் அறநெறிப் பிரச்சனை மட்டுமல்ல. இது மாபெரும் ஒழுக்கக்கேடு என்பது உண்மைதான். இவ்வாறு கேவலமாக சேர்க்கப்பட்ட செல்வமும், சட்டவிரோதமான கறுப்புப் பணமும் வெளிநாடுகளில் பாதுகாப்பாக சேமிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றைக் கைப்பற்றி நம் நாட்டு மக்களுக்குத் தரமான வாழ்க்கையைத் தரக்கூடிய வகையில் செலவிட வேண்டும். 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசையில் கொள்ளையிடப்பட்ட தொகை மட்டுமே நம் நாட்டில் (வறுமைக் கோட்டிற்குக் கீழும், வறுமைக் கோட்டிற்கு மேலும் உள்ள அனைத்துக்) குடும்பங்களுக்கும் இரு ஆண்டுகளுக்கு முழுமையாக உணவுப் பாதுகாப்பினை அளித்திடப் போதுமானவை என்பதை இப்பகுதியில் பலமுறை நாம் குறிப்பிட்டிருக்கிறோம். அல்லது, இந்தத் தொகையை, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்துவதற்கு செலவளித்திட முடியும் என்றும் எழுதியிருக்கிறோம். கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்திட ஒவ்வோராண்டும் 35 ஆயிரம் கோடி ரூபாய் வீதம் ஐந்தாண்டுகளுக்கு, நாடு முழுதும் புதிய பள்ளிகளைக் கட்டுவதற்காகவும், புதிதாக ஆசிரியர்களை நியமிப்பதற்காகவும், மதிய உணவுத் திட்டத்திற்காகவும் செலவு செய்திட வேண்டும். ஆனால், ஆட்சியாளர்கள் இவ்வாறு மாபெரும் அளவில் ஊழல்கள் புரிந்ததன் காரணமாக, இவையனைத்தும் மக்களுக்கு மறுக்கப்பட்டுள்ளன.

ஆட்சியாளர்கள் கடைப்பிடித்த நவீன தாராளமயப் பொருளாதாரச் சீர்திருத்தங்கள், ஊழல் புரிவதற்கு இதற்கு முன்னெப்போதும் இல்லாத பல்வேறு வழிகளை, ‘சட்டவிரோத முதலாளித்துவத்தின்’ (`crony capitalism) மூலமாக வகுத்துத் தந்திருக்கிறது. மக்கள் அனைவருக்கும் கல்வி, சுகாதார வசதிகள் மற்றும் தரமான வாழ்க்கைத் தரத்தை அளிக்கக்கூடிய விதத்தில் வளங்கள் நிறைந்த நாடுதான் நம் நாடு. ஆயினும், சாமானிய மக்களுக்கு சிறந்ததோர் வாழ்க்கையை அளிக்க முடியாத வகையில் ஆட்சியாளர்களின் ஊழல்கள் இந்த வளங்கள் அனைத்தையும் கொள்ளை கொண்டுவிட்டது. ஆட்சியாளர்களின் லஞ்ச லாவண்யங்கள், நாடு தன்னிடம் உள்ள அபரிமிதமான சக்தியைப் பயன்படுத்த முடியாத அளவிற்கு முடக்கிவிட்டது.

நம்முடைய அமைப்பில் புரையோடிப் போயுள்ள இந்தக் கேடுகெட்ட நிலைமையை எப்படிச் சரி செய்வது என்கிற முக்கியமான கேள்வியை நம்முன் கொண்டு வந்திருக்கிறது. நாற்பது திருடர்களின் கொட்டத்தை அடக்கக்கூடிய விதத்தில் அலிபாபா என்னும் நிர்வாக எந்திரத்தை உருவாக்கிட வேண்டியிருக்கிறது. மக்களுக்குப் பதில் சொல்லும் கடப்பாட்டிலிருந்து அரசாங்கமும் ஆட்சியாளர்களும் தப்பிவிடக் கூடாது. ஊழலில் திளைக்கும் இழிபிறவிகளுக்கு அதற்கான தண்டனைகளை அளிக்காமல் தப்ப விடக்கூடாது. மக்கள் மத்தியில் வேகமாக வளர்ந்து வரும் இந்த மனோபாவத்தையே சமூக ஆர்வலர்களில் ஒரு பிரிவினர் லஞ்ச ஊழலுக்கு எதிராகத் தற்போது நடத்தி வரும் கிளர்ச்சிகள் பிரதிபலிக்கின்றன. அத்தகையதோர் நிர்வாக எந்திரமான லோக்பால் குறித்த உள்ளடக்கம் தொடர்பான விவாதங்கள் இதுவரை வெளியாகியுள்ள அனைத்து ஊழல்கள் குறித்த குற்றப் பொறுப்புக்களையும் விசாரிக்காமல் விட்டுவிடக் கூடாது. இவ்வாறு நடைபெற்றுள்ள ஊழல்களின் மூலம் கொள்ளையடிக்கப்பட்டு வெளிநாட்டு வங்கிகளில் பத்திரப்படுத்தப்பட்டுள்ள கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை மீளவும் இந்தியாவிற்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளிலிருந்து திசைதிருப்பக் கூடிய வகையில் இது அமைந்துவிடக் கூடாது. லஞ்ச ஊழல்கள் மூலம் கொள்ளையடித்த வர்களையும், வெளிநாட்டு வங்கிகளில் பணத்தைப் பத்திரப்படுத்தியுள்ளவர்களையும் கடுமையாகத் தண்டித்திட வேண்டும் என்று தனியே கூறத் தேவையில்லை. வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் லோக்பால் சட்டமுன்வடிவை நிறைவேற்றிட வேண்டும். அதற்கு முன்னதாக அது தொடர்பாக அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள், மிகவும் முக்கியமாக மக்கள் மத்தியில் விரிவான வகையில் ஒரு பொருள்பதிந்த விவாதம் நடத்தப்பட வேண்டும்.

(தமிழில்: ச.வீரமணி)