Showing posts with label Elections. Show all posts
Showing posts with label Elections. Show all posts

Friday, April 15, 2011

கேரளம் மற்றும் தமிழகத்தின் தேர்தல்கள் --பிரகாஷ்காரத்



கேரளம் மற்றும் தமிழ்நாட்டு மக்கள் ஏப்ரல் 13 அன்று தங்கள் மாநில சட்டமன்றப் பேரவைகளுக்கான தேர்தல்களில் வாக்களித்துள்ளார்கள். இவர்களுடன் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த மக்களும் தங்கள் யூனியன் பிரதேச சட்டப்பேரவைக்கான தேர்தலில் வாக்களித்துள்ளார்கள். இரு வாரங்களுக்கே நடைபெற்றதென்ற போதிலும் அவ்விரு வாரங்களும் மிகவும் விறுவிறுப்பான தேர்தல் பிரச்சரம் இரு மாநிலங்களிலும் நடைபெற்றதைப் பார்த்தோம். இரு மாநிலங்களிலும் நான் ஒருசில நாட்கள் இக்கால கட்டத்தில் செலவழித்தேன். தேர்தல் பிரச்சாரம் குறித்தும் பல்வேறுபட்ட தேர்தல் கூட்டணிகள் அவற்றின் வாய்ப்புகள் குறித்தும் ஒருசில கருத்துக்களை முன்வைக்கிறேன்.
பிரதானமான பிரச்சனைகள் நாட்டைக் கடுமையாகப் பாதித்துள்ள விலைவாசி உயர்வும் ஆட்சியாளர்களின் லஞ்ச ஊழலும் இரு மாநிலங்களில் நடைபெற்ற பிரச்சாரத்தின்போதும் பிரதான பிரச்சனைகளாக மக்களின் முன் வைக்கப்பட்டன. நகர்ப்புறமாக இருந்தாலும் சரி அல்லது கிராமப்பகுதிகளாக இருந்தாலும் சரி, அனைத்து இடங்களிலும், மக்கள் இவ்விரு பிரச்சனைகள் குறித்தும் இவை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் குறித்தும் கவலைப்பட்டார்கள். கேரளாவில், விலைவாசி உயர்வுப் பிரச்சனை, பொது விநியோக முறையோடு நேரடியாக இணைக்கப்பட்டது. வறுமைக் கோட்டுக்குக் கீழ் வராத குடும்பத்தைச் சேர்ந்த அனைவருக்கும் அரிசி கிலோ 2 ரூபாய் வீதம் அளித்திடக்கூடிய வகையில் இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் அத்திட்டத்தை விரிவாக்கியது. மாநில அரசாங்கம் தம் வசம் உள்ள அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருள்களை மக்கள் வாங்கக்கூடிய விலைகளில், நியாய விலைக் கடைகள், மாவேலி ஸ்டோர்கள் மற்றும் கூட்டுறவு அங்காடிகள் மூலம் விநியோகிக்க மேற்கொண்ட நடவடிக்கைகளை விலைவாசி உயர்வினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பெரிதும் பாராட்டி வரவேற்றார்கள். இதற்கு நேர்மாறாக, மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் விலைவாசியைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை எதையும் எடுக்காதது மக்கள் மத்தியில் வருத்தத்தையும் ஆத்திரத்தையும் அளித்தது.

உயர்மட்ட அளவில் நடைபெற்றுள்ள லஞ்ச ஊழல்கள் கேரள மக்கள் மத்தியில் கடுமையாக எதிரொலித்தன. சமீபத்தில், முந்தைய ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த, ஆர். பாலகிருஷ்ண பிள்ளை, சிறைக்கு அனுப்பப்பட்டார். இவர் மீது கீழமை நீதிமன்றம் அளித்திருந்த தண்டனைத் தீர்ப்பு உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு இவர் முன்னர் விடுதலை செய்யப்பட்டிருந்தார். ஆனால் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற மேல்முறையீட்டில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தள்ளுபடி செய்யப்பட்டு, கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பே சரியானது என்று உறுதி செய்யப்பட்டு, அவர் சிறைக்கு அனுப்பப்பட்டார். அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த வி.எஸ். அச்சுதானந்தன் நீதிமன்றத்தில் பாலகிருஷ்ண பிள்ளை மீது தொடுத்த மனு மீதான விசாரணையில்தான் இவ்வாறு அவருக்கு லஞ்சஊழலுக்கான தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. ஊழலுக்கு எதிராக இடது ஜனநாயக முன்னணியின் உறுதியான நிலைப்பாட்டை இது அழுத்தந் திருத்தமாகத் தெரிவிக்கிறது. ஐமுகூ அரசாங்கத்தின் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், மற்றும் சமீபகாலங்களில் அடுக்கடுக்காக வெளிவந்துள்ள பல்வேறு ஊழல் வழக்குகள் மக்கள் மத்தியில் இந்த அரசின் மீதான சித்திரத்தை சின்னாபின்னமாக்கிவிட்டன. இந்தப் பின்னணியில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தின்போது, இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் லஞ்ச ஊழல் மிகுந்தது என்று கூறிய குற்றச்சாட்டை, மக்கள் சட்டைசெய்யவே இல்லை. காங்கிரஸ் ஆதரவாளர்கள்கூட இதனைப் பெரிதுபடுத்தவில்லை. ஐக்கிய ஜனநாயக முன்னணி மீண்டும் ஆட்சிக்கு வருவது என்பதன் பொருள், லஞ்சலாவண்யம் மிக்க ஓர் அரசாங்கத்தை, தற்போது மத்தியில் உள்ளது போன்று லஞ்சத்தில் ஊறித்திளைக்கும் அரசாங்கத்தை மீண்டும் ஆட்சியலமர்த்துவதே என்கிற இடது ஜனநாயக முன்னணியின் பிரச்சாரம் மக்களிடம் வலுவாகச் சென்றடைந்தது.

உயர் மட்ட அளவில் ஊழலுக்கு எதிராக மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கடுங்கோபம், ஊழலற்ற அரசாங்கம் அமைய வேண்டும் என்று மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள வலுவான பெருவிருப்பம், நிச்சயமாக இடது ஜனநாயக முன்னணிக்கு ஆதரவாக வேலை செய்தது. முதலமைச்சர் வி.எஸ். அச்சுதானந்தன் கூட்டங்களில் மக்கள் பெரும் திரளாகத் திரண்டதானது இதனை அங்கீகரிப்பதாக அமைந்தது.

தேர்தல் பிரச்சாரம் மற்றொரு குறிப் பிடத்தக்க அம்சத்தையும் வெளிப் படுத்தியது. இதனை இடது முன்னணிக்கு எதிராகச் செயல்பட்டுவரும் ஊடகங்களாலேயே கூட மறைக்க முடியவில்லை. ஆட்சியிலிருப்பவர்களுக்கு எதிராக மக்கள் மத்தியில் பொதுவாக இருந்திடும் கசப்புணர்வு (யவேi-inஉரஅநெnஉல கநநடiபேள), இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்திற்கு எதிராக இல்லை என்பது மிகவும் தெளிவாகத் தெரிந்தது.

இடது ஜனநாயக முன்னணியின் சாதனை

அடுத்து கேரளத்தில் வளர்ச்சிப் பணிகள் இல்லை என்பது போன்ற பிரச்சனைகள் எழுப்பப்பட்டன. காங்கிரஸ் தலைமையும் ஐக்கிய ஜனநாயகக் கூட்டணியும்தான் கேரளாவில் வளரச்சித் திட்டங்களை உருவாக்கியதாகவும், அதனை இடதுஜனநாயக முன்னணி தொடர்ந்து மேற்கொள்ளத் தவறிவிட்டது என்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியும், பிரதமரும் கூறினார்கள். மத்திய அரசு அளித்த நிதிகளையும், திட்டங்களையும் இடது ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் முறையாகப் பயன்படுத்தத் தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டையும் சுமத்தினார்கள். கடந்த ஐந்தாண்டுகளில் கேரளம் முதலீடுகளைக் கவர்ந்திடவும், வளர்ச்சியை உத்தரவாதப் படுத்திடவும் தவறிவிட்டது என்று குறை கூறினார்கள். இதற்கு இடதுசாரிகளின் பத்தாம்பசலித்தனமான சித்தாந்தமே காரணம் என்றும் அவர்கள் குறிப்பிட்டார்கள். ‘‘வளர்ச்சிக்கான அடிப்படைகள் மாறியிருக்கின்றன என்பதை இடதுசாரிகள் அங்கீகரிக்க மறுத்தார்கள்’’ என்றும், ‘‘சாமானியர்களின் தேவைகளுக்குப் பொருந்தக்கூடிய திட்டங்களை அவர்கள் பின்பற்றவில்லை’’ என்றும் பிரதமர் மன்மோகன்சிங் கூறினார். இதன் பொருள் என்ன? காங்கிரஸ் கட்சியையும் ஐமுகூ அரசாங்கத்தையும் பொறுத்தவரை, ‘‘வளர்ச்சிக்கான அடிப்படைகள் மாறியிருக்கின்றன’’ என்பதன் பொருள், நவீன தாராளமய, சந்தைப் பொருளாதாரக் கொள்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என்பதேயாகும். மத்திய அரசின் நாசகரமான விவசாயக் கொள்கைகள்தான் விவசாயிகளின் அவல நிலைக்கும், அவர்கள் கேரளாவில் தற்கொலைகளை மேற்கொள்ளத் தள்ளியதற்கும் காரணங்களாக இருந்தன. உலகச் சந்தையுடன் விவசாயத்தை இணைத்ததும், அவர்களுக்கு அளித்து வந்த மான்யங்களை இல்லாது ஒழித்ததும்தான் இவர்களின் வளர்ச்சிப் பாதையின் பகுதிகளாகும். இவர்களது நவீன தாராளமய அணுகுமுறைக் கண்ணோட்டத்தின்படி, கேரள அரசாங்கம் நலிவடைந்த பொதுத்துறை நிறுவனங்களுக்குப் புத்துயிரளித்ததும், அவற்றை லாபகரமானதாக மாற்றியதும் வெறுக்கப்பட வேண்டியவை களாகும். உழைக்கும் மக்களின் அனைத்துப் பிரிவினருக்கும் விரிவாக்கப்பட்ட பல்வேறு சமூக நலத் திட்டங்கள், பொது விநியோக முறையை அனைவருக்குமானதாக மாற்றுவதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகள், குறைந்தபட்ச ஊதியம், ஓய்வூதியம் மற்றும் பல சமூகப் பாதுகாப்பு உதவிகளை உத்தரவாதப் படுத்தியமை போன்றவை பிரதமரின் பார்வையில், ‘‘சாமானியர்களின் தேவைகளுக்குப் பொருந்தக்கூடிய திட்டங்கள்’’ இல்லை என்பதாகும். ஆனால் இவைதான் கேரள அரசு மீது மக்களுக்குக் கசப்புணர்வு ஏற்படாமல் இருந்ததற்குக் (anti-incumbency feelings) காரணங்களாகும்.
மத்தியில் ஐமுகூ அரசாங்கம் கடைப்பிடிக்கும் நவீன தாராளமய அணுகுமுறைக்குச் சவால் விடக்கூடிய வகையில் மாற்று வளர்ச்சிப் பாதையை இடது ஜனநாயக முன்னணியின் கொள்கை முன்வைத்தது. அதைத்தான் பல விமர்சகர்களும், ஆராய்ச்சியாளர்களும் கண்டித்தார்கள், கண்ணீர் விட்டார்கள். காங்கிரஸ் அல்லது பாஜக ஆட்சியாளர்கள் கடைப்பிடிப்பதைப்போன்று, கேரள அரசும் சட்டவிரோத முதலாளித்துவ (உசடிலே உயயீவையடளைஅ)பாதையைப் பின்பற்ற வேண்டும், கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட அனுமதித்திட வேண்டும், பெரும் வர்த்தக நிறுவனங்கள் - அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரவர்க்கத்தினர் இடையேயான கள்ளத் தொடர்பை, கயமைத் தொடர்பை மேம்படுத்திட வேண்டும் என்பதே அவர்களது விருப்பங்களாகும்.

இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தின் செயல்பாடுகள் குறித்து மக்கள் மத்தியில் ஆழமான முறையில் அதிருப்தி எதுவும் இல்லாத நிலையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி சாதீய மற்றும் வகுப்புவாத அமைப்புகளின் ஆதரவைப் பெற முடிவுசெய்தது. இதற்கு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கேரளாவில் பணமும், மதுவும் ஆறாக ஓடியதையும் பார்க்க முடிந்தது. பிரச்சாரம் முடிவுற்ற சமயத்தில், எதிரிகள் திட்டமிட்டு உருவாக்கிய துர்ப்பிரச்சாரங்கள் மற்றும் கருத்துக் கணிப்புகளைப் பொடிப்பொடியாக்கி, இடது ஜனநாயக முன்னணி மிகவும் நம்பிக்கையுடன் முன்னேறியதைப் பார்க்க முடிந்தது.

தமிழ்நாட்டின் நிலைமைகள்

தமிழ்நாட்டிலும் கூட, லஞ்ச ஊழல் மற்றும் விலைவாசி உயர்வு ஆகிய இரண்டும் இரு முக்கிய பிரச்சனைகiளாக முன்னுக்கு வந்தன. ஆயினும் இங்கே லஞ்ச ஊழல் என்னும் பிரச்சனை என்பது பிரம்மாண்டமான அளவில் இருந்தது. நாடு சுதந்திரம் பெற்றபின்னர் நாட்டில் நடைபெற்ற ஊழல்களிலேயே மிகப்பெரிய ஊழலை மாநிலத்தை ஆளும் திமுக-வினர் புரிந்துள்ளனர் என்பதும், அது தொடர்பாக மேற்கொள்ளப் பட்டுள்ள கிரிமினல் வழக்கில் அக்கட்சியின் சார்பில் மத்தியில் ஆட்சியில் இருந்த அமைச்சரே பிரதானமாகக் குற்றஞ் சாட்டப்பட்டிருக்கிறார் என்பதும் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட்டது. நாட்டில் உயர் மட்ட அளவில் நடைபெற்றுள்ள ஊழல்களுடன் முதல்வர் கருணாநிதியின் குடும்பம் பின்னிப் பிணைந்திருப்பதை தமிழக மக்கள் தெரிந்து கொண்டார்கள். முதல்வர் கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் - திரைப்படத் துறை, தொலைக்காட்சி அலைவரிசைகள், பத்திரிகைகள், கேபிள் டி.வி. விநியோகம், ரியல் எஸ்டேட், விமானக் கம்பெனிகள், ஓட்டல்கள் என அனைத்துத் துறைகளிலும் - ஆதிக்கம் செலுத்துவது ஜனநாயக அமைப்பின் மீதான கொடூரமான தாக்குதலாக மக்களால் பார்க்கப்பட்டன. அஇஅதிமுக பொதுச் செயலாளர், செல்வி ஜெயலலிதா, இப்பிரச்சனையைத் தன்னுடைய தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் அனைத்திலும் கொண்டு சென்றார். மக்கள் மத்தியில் இது பெரும் வரவேற்பைப் பெற்றது.

கடும் விலைவாசி உயர்வு, மிகவும் விரிவான அளவில் இருந்த மின்வெட்டு, திமுக-வினர் மஃபியா கும்பலுடன் வைத்திருந்த கள்ளத் தொடர்பு ஆகிய பிரச்சனைகளும் மக்களைத் திமுக அரசாங்கத்திற்கு எதிராக அணிதிரட்டியுள்ளது. திமுக - காங்கிரஸ் கூட்டணியும் கூட அருவருப்பான ஒன்றாகவே அமைந்திருந்தது. ஏனெனில் காங்கிரஸ் கட்சிக்குள் நிலவிய கோஷ்டிச் சண்டைகளும், மக்கள் மத்தியில் திமுக குறித்து வெளிப்படையாகவே அதன் தலைவர்கள் பலர் வெளிப்படுத்திய கருத்துக்களும் நிலைமைகளை அவ்வாறு ஆக்கி இருந்தன.

தமிழ்நாடு, நவீன தாராளமயக் கொள்கைகளின் முழுமையான விளைவுகளை அனுபவித்த மாநிலமாகும். சமீப ஆண்டுகளில் வேறெந்தவொரு மாநிலமும் தேர்தலில் இந்த அளவிற்கு சட்டவிரோதமாகச் சேர்த்த கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை வாரியிறைத்ததில்லை. திருமங்கலத்தில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தல் அனுபவத்தை அடுத்து, சென்ற மக்களவைத் தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் அளிப்பது என்பது மிகவும் விரிவான முறையில் நடைபெற்றிருந்தது. தேர்தல் ஆணையம் சட்டவிரோத பணப் புழக்கத்தைத் தடுத்திட சில நடவடிக்கைகளை மேற்கொண்டது. தேர்தலுக்கு முன் நடைபெற்ற பல சோதனைகளில் சுமார் 50 கோடி ரூபாய் வரை ரொக்கமாகவும், பல்வேறு பொருள்களாகவும் கைப்பற்றப்பட்டன. திருச்சியில் ஒரு ஆம்னி பஸ்ஸின் மேல் உச்சியிலிருந்து மட்டும் 5 கோடியே 11 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. ஆயினும் இவை அனைத்தும் ஆட்சியாளர்களால் வாரியிறைக்கப் பட்ட பல்லாயிரம் கோடி ரூபாயில் ஒரு சிறு துளிதான். நகர்ப் புறங்களில் வாக்காளர்களுக்கு 500 ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாய் வரைக்கும், கிராமப்புறங்களில் 500 ரூபாய் வரைக்கும் கோடிக்கணக்கான ரூபாய்கள் வாரியிறைக்கப்பட்டிருக்கின்றன.

ஆயினும், பிரச்சாரத்தின்போது மக்களின் மனநிலை எப்படி இருந்தது என்பதை ஒருவர் நன்கு அறிந்து கொள்ள முடிந்தது. இந்தத் தடவை ஆட்சியாளர்கள் எவ்வளவுதான் கோடி கோடியாக கொட்டியிருந்த போதிலும் அதனால் தேர்தல் முடிவைத் தீர்மானிக்க முடியாது என்பதைத் தெள்ளத் தெளிவாகப் பார்க்க முடிந்தது.

திராவிட முன்னேற்றக் கழகம், நாட்டில் உள்ள மாநிலக் கட்சிகளில் முதல் அதிகாரபூர்வமான மாநிலக் கட்சியாக விளங்கியது. சமூக நீதி மேடையிலிருந்து உதித்த வெகுஜன தளத்தையும் ஸ்தாபனக் கட்டமைப்பையும் மிகவும் வலுவாகக் கொண்டிருந்த ஒரு கட்சியாக திமுக இருந்தது. மாநில சுயாட்சி மற்றும் மத்திய மாநில உறவுகளுக்குக் குரல் கொடுத்த கட்சிகளில் முன்னோடியாக விளங்கிய ஒன்று. அத்தகைய பாரம்பர்யம் கொண்ட ஒரு கட்சியாக விளங்கிய திராவிட முன்னேற்றக் கழகம், மிகவும் தரம் தாழ்ந்து இன்றைய தினம் ஒரு குடும்ப முன்னேற்றக் கழகமாக மாறி, சட்டவிரோத மூலதனத்தால் (crony capitalism) கொள்ளையடித்த பணத்தைத் தேர்தலிலும் பயன்படுத்தி, ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள முயல்வதைப் பார்க்கும்போது, மிகவும் பரிதாபமாக இருக்கிறது.

திமுக இத் தேர்தலில் தூக்கி எறியப்பட்டால், அவ்வாறு அதன் விதி முடிவது முழுமையும் சாலப் பொருத்தமானதேயாகும். ஊழலில் அதன் கூட்டாளியாக இருந்த காங்கிரஸ் கட்சியும் இதேபோன்றதொரு மோசமான முடிவையை எதிர்கொள்ள விருக்கிறது.

(தமிழில்: ச.வீரமணி)