Thursday, June 10, 2010

நீதித்துறையிலிருந்து ஓர் அநீதித் தீர்ப்பு



உலகின் மிகவும் மோசமான தொழிற்சாலை விபத்தான - போபால் விஷவாயுத் துயரத்தில் - கால் நூற்றாண்டு காலத்திற்குப் பின் இறுதியாக வழக்கில் குற்றச்சாட்டுப் பதிவு செய்தவர்களைத் தண்டித்து ஒரு தீர்ப்பு வந்திருக்கிறது. இத்தீர்ப்பு குறித்து உலகம் முழுதும் ‘தாமதிக்கப்பட்ட நீதி என்றும் மறுக்கப்பட்ட நீதி என்றும்’ கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. வெளிப்படையாக சொல்வதென்றால் இவ்வழக்கில் நீதி வழங்கப்படவில்லை. அநீதி -அதுவும் கிரிமினல் அநீதி - வழங்கப்பட்டிருக்கிறது. யூனியன் கார்பைட் நிறுவனத்தின் அப்போதைய தலைவரான வாரன் ஆண்டர்சன் நியூயார்க்கில் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். மேற்படி யூனியன் கார்பைட் நிறுவனத்தின் நிர்வாகிகளில் இந்தியாவைச் சேர்ந்த எட்டு பேர்களுக்கு (அவர்களில் ஒருவர் இறந்துவிட்டார்) மட்டும் வெறும் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு லட்ச ரூபாய் அபராதமும் யூனியன் கார்பைட் இந்தியா லிமிடெட்டுக்கு ஐந்து லட்ச ரூபாய் அபராதமும் விதித்தும் கீழமை நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. தண்டனை வழங்கப்பட்ட அனைவருமே 20 ஆயிரம் ரூபாய்க்கு சொந்தமாக முறி எழுதிக்கொடுத்ததன் பேரில் உடனடியாக பிணையிலும் விடுவிக்கப்பட்டுவிட்டார்கள்.

உலகின் மிக மோசமான இத்தொழிற்சாலை விபத்து குறித்து வாசகர்களுக்கு மீண்டும் நினைவுக்குக் கொண்டு வருகிறோம். 1994 டிசம்பர் 2-3 இரவு இக்கோர விபத்து ஏற்பட்டது. போபாலில் இருந்த யூனியன் கார்பைட் தொழிற்சாலையின் ரசாயன உலையிலிருந்து 40 ஆயிரம் கிலோவுக்கு அதிகமான ‘டாக்சிக் வாயு’ கசிந்ததை அடுத்து, அந்தக் கணமே தொழிற்சாலையிலிருந்த நாலாயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டார்கள், போபாலிலும் அதனைச் சுற்றிலும் இருந்த ஒரு லட்சத்திற்கும் மேலான மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள். பாதிக்கப்பட்ட மக்களின் உண்மையான எண்ணிக்கை குறித்து பல்வேறு தகவல்கள் இருந்தபோதிலும், இதுவரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இறந்துவிட்டார்கள் என்பதும், ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஆயுள் பூராவும் அனுபவிக்கக்கூடிய விதத்தில் பல்வேறு உடல் பாதிப்புகளுக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்பதும் உலகம் முழுதும் ஏற்றுக் கொண்ட உண்மைகளாகும். விபத்து நடப்பதற்கு முன்பாக, யூனியன் கார்பைட் நிறுவனத்திற்குப் பலமுறை எச்சரிக்கைகள் விடுத்தும், அது உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்காததனால்தான் இப்பேரிடர் ஏற்பட்டது என்பது புலனாய்பு மூலம் மெய்ப்பிக்கப் பட்டிருக்கிறது.

யூனியன் கார்பைட் நிறுவனத்தின் தலைவரான அமெரிக்காவைச் சேர்ந்த ஆண்டர்சன், விபத்து நடைபெற்றபின் நான்கு நாட்கள் கழித்து போபால் வந்த போது, தொழிற்சாலையை அஜாக்கிரதையாகவும் கவனக்குறைவாகவும் நடத்தி அதன் மூலம் பல்லாயிரக்கணக்கானோர் இறக்கக் காரணமாக இருந்ததற்காக, கைது செய்யப்பட்ட போதிலும், உடனடியாக அவர் 20 ஆயிரம் ரூபாய்க்கு சொந்த முறி எழுதிக்கொடுப்பதன் பேரில் விடுவிக்கப்பட்டு, மாநில அரசின் விமானம் ஒன்றில், புதுதில்லிக்கு அனுப்பப் பட்டு, அங்கிருந்து அமெரிக்காவிற்குத் தப்பித்துச் செல்வதற்கும் அனுமதிக்கப்பட்டார். பின்னர் இதுநாள் வரையில் அவர்
இவ்வழக்கில் ‘காணப்படாதவராகவே’க் கருதப்பட்டு வந்துள்ளார். அவர் நீதிமன்றத்தில் எழுதிக்கொடுத்த பிணைமுறியில், வழக்கு விசாரணையின்போது இந்தியாவுக்கு வந்து நீதிமன்றத்தில் ஆஜராவதாக உறுதிமொழி அளித்திருந்தபோதிலும், அவர் அதனைச் செய்திடவில்லை, அவரை இந்தியாவிற்குக் கொண்டுவருவதற்கு இந்திய அரசும் முயற்சிகள் மேற்கொள்ள இதுவரை தவறிவிட்டது.

1989இல் இந்திய அரசும், இந்திய நீதித்துறையும் இணைந்து எவருக்கும் விளங்காத வகையில் யூனியன் கார்பைட் நிறுவனத்திற்கு எதிராக இருந்த அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் கைவிட்டுவிட்டன. இதற்கு எதிராக மக்கள் வெகுண்டெழுந்ததை அடுத்து, உச்சநீதிமன்றம் 1991இல் இது தொடர்பான வழக்குகளை மீண்டும் தோண்டி எடுத்தது, ஆயினும், 1996இல் மீண்டும் எவருக்கும் விளங்காத வகையில், உச்சநீதிமன்றமானது குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சாட்டியிருந்த பத்தாண்டுகள் தண்டனை விதிக்கக்கூடிய வகையில் சாட்டியிருந்த கடுமையான கொலைக் குற்றச்சாட்டுக்களை, அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் மட்டும் விதிக்கக்கூடிய ‘கவனக்குறைவால் ஏற்பட்ட மரணம்’ என்ற குற்றச்சாட்டுகளாக மாற்றியது. இவ்வாறு மாற்றியமைத்த குற்றச்சாட்டின் அடிப்படையில்தான் அதன்பின்னர் பதினைந்து ஆண்டுகள் கழித்து, இப்போது எவ்விதத்திலும் நியாயமற்ற ஓர் அநீதித் தீர்ப்பு, அளிக்கப்பட்டிருக்கிறது.

இத்தகைய அநீதியை ஏற்கமுடியாது. அமெரிக்காவின் நிர்ப்பந்தத்திற்கு அடிபணிந்து, இந்தியாவில் நீதி வழங்கும் முறையை சீர்குலைத்திடவோ, மறுதலித்திடவோ அனுமதிக்க முடியாது. இது அனுமதிக்கப்பட்டால், பின் நம் நாட்டு மக்களுக்கு நம் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையே சுக்குநூறாக உடைந்து தகர்ந்துவிடும். இவ்வாறு அநீதி இழைக்கப்பட்டுள்ளமைக்குப் பரிகாரம் காண இந்திய அரசாங்கம் உளப்பூர்வமாக முன்வர வேண்டும். பல்லாயிரக் கணக்கானோர் மடியக் காரணமாக இருந்த கோரவிபத்திற்குக் காரணமானவர்கள் அனைவரும் மீண்டும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட வேண்டும், பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்கப்பட வேண்டும். இக்கோர விபத்தினால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் சராசரியாக வெறும் 12 ஆயிரத்து 410 ரூபாய் மட்டும் இழப்பீடாக வழங்கியிருப்பது எவ்விதத்திலும் ஏற்க முடியாததாகும்.

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக நாடு முழுதும் மக்கள் கொந்தளித்து எழுந்துள்ளதற்குப் பதிலளிக்கும் விதத்தில் சட்ட அமைச்சர், ‘‘ஆண்டர்சன்னுக்கு எதிராக உள்ள வழக்கு சட்டரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் இன்னமும் நிலுவையில் இருப்பதாகவும், ‘‘அவர் கொண்டுவரப்பட்டால், அவர் இப்போதும் விசாரிக்கப்பட முடியும்’’ என்று கூறியிருக்கிறார். இதனை அரசு உளப்பூர்வமாக செய்தால் மட்டுமே நாட்டு மக்களின் கோபத்தைத் தணிக்க முடியும். அதுமட்டுமல்ல, சட்ட அமைச்சர் மேலும், அடுத்த ஆறு மாத காலத்திற்குள் இத்தகைய மோசமான தொழிற்சாலை விபத்துக்கள் நிகழுமானால் அத்தகைய விபத்துக்களுக்குக் காரணமானவர்கள் மீது கடுமையான முறையில் பாயக்கூடிய விதத்தில் புதிய சட்டம் கொண்டுவர இருப்பதாகவும் உறுதி அளித்திருக்கிறார்.
இவர் கூறுவது உண்மையெனில், ஐமுகூ-2 அரசாங்கமானது, மிகவும் ஆழமாக மறுபரிசீலனை செய்து, நாடாளுமன்றத்தில், அமெரிக்காவின் நிர்ப்பந்தத்திற்கு ஆளாகி, அவசரம் அவசரமாக அறிமுகப்படுத்தியுள்ள (ராணுவம்சாரா) சிவில் அணுசக்தி பொறுப்பு சட்டமுன்வடிவைத் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும். போபால் விஷவாயு விபத்து தொடர்பாக, இத்தனை ஆண்டுகள் நீண்ட நெடிய வழக்கு விசாரணைகளுக்குப்பின் யூனியன் கார்பைட் நிறுவனம் இதுவரை வெறும் 713 கோடி ரூபாய் மட்டுமே இழப்பீடாக வழங்கியிருக்கிறது. இப்போது அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியுள்ள சிவில் அணுசக்தி பொறுப்பு சட்டமுன்வடிவு நாடாளுமன்றத்தில் நிறைவேறி சட்டமாகிவிட்டால், பின்னர் அணுசக்தி கம்பெனிகள் விபத்து ஏற்படின் அளிக்கப்பட விருக்கும் அதிகபட்ச இழப்பீட்டுத் தொகையே வெறும் 500 கோடி ரூபாய்கள்தான். விபத்துக்கான பொறுப்பு அரசாங்கத்திற்கு மாற்றப்பட்டால் இழப்பீட்டுத் தொகை என்பது 2100 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட முடியும். அணுசக்தி உலைகளில் விபத்து என்றால், அதனால் விளையும் பாதிப்புகள் பல மடங்கு இருக்கும் என்பது இன்றையதினம் ஒவ்வொருவருக்கும் நன்கு தெரியும். ஆயினும் மேற்படி சட்டமுன்வடிவானது, போபால் விஷவாயு விபத்து வழக்குகளில் யூனியன் கார்பைட் நிறுவனம் கொடுத்த அற்பத் தொகையை விட அற்பமாக அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இப்போது ஏற்பட்டுள்ள அனுபவத்தின் வெளிச்சத்திலிருந்து இந்தச் சட்டமுன்வடிவு நிராகரிக்கப்பட்டாக வேண்டும் என்பது தெளிவு.
இப்போது வழங்கப்பட்டிருக்கும் நீதிமன்றத் தீர்ப்பானது, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய முதலாளித்துவ அரசுகளுக்கு மிகவும் தெளிவாக ஒரு செய்தியை இத்தீர்ப்பின்மூலம் அனுப்பியிருக்கிறது. அதாவது, அவை இந்தியாவில் தொழிற்சாலைகளை நிறுவி, கொள்ளை லாபத்தை அறுவடை செய்து கொள்ளலாம். தொழிற்சாலை விபத்துக்கள் நடைபெற்றால் அதன் காரணமாக அதிகமான அளவில் இழப்பீடு வழங்க வேண்டியிருக்குமோ என அவை கிஞ்சிற்றும் அஞ்சவேண்டியதில்லை. இத்தகைய சிந்தனையோட்டத்தைத்தான் அமெரிக்க அரசின் அமைச்சர் ஒருவர் பிரதிபலித்திருக்கிறார். யூனியன் கார்பைட் நிறுவனத்திற்கு எதிராக எதிர்காலத்தில் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று ஏற்கனவே அமெரிக்க அரசு கூறிவிட்டது.

ஐமுகூ-2 அரசாங்கமானது, எக்காரணம் கொண்டும் சிவில் அணுசக்தி பொறுப்பு சட்டமுன்வடிவை நிறைவேற்ற வேண்டும் என்கிற அமெரிக்க அரசின் நிர்ப்பந்தத்திற்கு இரையாகிவிடக் கூடாது. யூனியன் கார்பைட் நிறுவனத்தின் தலைவரான வாரன் ஆண்டர்சனை இந்தியாவிற்குக் கொண்டுவர, சட்ட அமைச்சர் உறுதியளித்துள்ளபடி, உண்மையாகவே நடவடிக்கைகள் மேற்கொண்டு, அவர் மீதான விசாரணையை விரைவுபடுத்திட வேண்டும், மேலும் அரசாங்கம் இப்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்திட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு கிடைத்திடவும் உச்சநீதிமன்றத்தை அணுகிட வேண்டும். எதிர்காலத்தில் இத்தகைய கோர விபத்துக்கள் நிகழும் சமயங்களில் அதற்குக் காரணமானவர்கள் மீது தாமதமின்றி வழக்கு தொடுத்து, நீதி வழங்கிடக் கூடிய வகையில் சட்டங்களை வலுப்படுத்திடவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

(தமிழில்: ச.வீரமணி)

Thursday, June 3, 2010

மேற்கு வங்க நகராட்சி/மாநகராட்சித் தேர்தல்கள்



மேற்கு வங்க மாநிலத்தில், 2010 மார்ச் 30 அன்று 81 நகராட்சி/ மாநகராட்சிகளுக்கு நடைபெற்ற தேர்தல்களில் இடது முன்னணி 18 நகராட்சி/மாநகராட்சிகளில் மட்டும் வெற்றி பெற்றிருக்கிறது. திரிணாமுல் காங்கிரஸ் 26இலும், காங்கிரஸ் 7இலும், இடது எதிர்ப்புக் கூட்டணி 4 இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கின்றன. 23 நகராட்சிகளில் தொங்கு நிலைமை ஏற்பட்டிருக்கிறது. 3 இடங்களில் எவருக்கும் பெரும்பான்மை கிடைக்காது வெற்றி தோல்வியற்ற (tie) நிலை ஏற்பட்டிருக்கிறது. யார் பக்கம் இது அமையும் என்பது எதிர்காலத்தில்தான் தெரிய வரும்.

ஜனநாயக நடைமுறைகளை உயர்த்திப் பிடிக்கும் உன்னத பாரம்பர்யத்தின் அடிப்படையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையிலான இடது முன்னணி மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறது. மேற்கு வங்கத்தில் உள்ள இடது முன்னணி, எதிர்காலத்தில் சரியான திசைவழியில் தன்னை தகவமைத்துக்கொள்ளக் கூடிய விதத்தில் தேர்தல் முடிவுகள் தொடர்பாக முறையான மதிப்பீட்டையும் பரிசீலனையும் மேற்கொள்ளும் என்று பிரகடனம் செய்கிறது.
ஊடகங்கள், மேற்கு வங்கத்தில் நகராட்சிகளுக்காக நடைபெற்ற தேர்தல்கள் குறித்து, 2011 மே மாதத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்களுக்கான ‘அரை இறுதி ஆட்டம்’ (‘ளநஅi-கiயேட’) என்று மிகப்பெரிய அளவில் தம்பட்டம் அடித்தன. அரசியல் உணர்வு அதிகம் உள்ள வங்க வாக்காளர்கள், ஒவ்வொரு தேர்தலையும் அதன் நோக்கத்தின் அடிப்படையில் தனித்தனியே நுணுகி அணுகும் குணம் கொண்டவர்களாவார்கள். மக்களவைத் தேர்தல் என்பது மத்தியில் ஆட்சியைத் தீர்மானிப்பதற்காக நடைபெற்றது. மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல்கள், மாநில அரசைத் தீர்மானிப்பதற்கான ஒன்று. அதேபோன்றுதான், நகராட்சி மற்றும் பஞ்சாயத்துத் தேர்தல்கள் ஒவ்வொன்றும் அவற்றுக்கெனத் தனித்தனிக் குறிக்கோள்களையும், நோக்கங்களையும் கொண்டிருக்கின்றன. இவ்வாறு ஒவ்வொரு தேர்தல்களுமே வெவ்வேறு நோக்கத்தின் அடிப்படையில் நடைபெறுகின்றன.

திரிணாமுல் காங்கிரஸ், முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதொரு மாநில அரசை டிஸ்மிஸ் செய்திட வேண்டும் என்றும், தேர்தல்களை முன்கூட்டியே நடத்திட வேண்டும் என்றும் அடிக்கடி காட்டுக் கூச்சலிட்டு பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறது. இது ஜனநாயக விரோதம் மட்டுமல்ல, பகுத் தறிவுக்குப் பொருந்தாததுமாகும். நடைபெற்ற நகராட்சித் தேர்தல்களில் வாக்களிக்கத் தகுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 85 ஆயிரத்து 33 ஆயிரம் ஆகும். இவர்கள் மாநிலத்தின் மொத்த வாக்காளர் எண்ணிக்கையான 5 கோடியே 24 லட்சத்து 32 ஆயிரத்தில் வெறும் 17 விழுக்காடேயாகும். மீதமுள்ள 83 விழுக்காட்டினர் கிராமப்புற வங்க வாக்காளர்கள். இவர்கள்தான் கடந்த காலங்களில் மேற்கு வங்க மாநில அரசின் குணத்தைத் தீர்மானிப்பதில் முக்கிய கூறாய் இருப்பவர்கள். எனவே, நகராட்சித் தேர்தல்களின் முடிவுகள்தான் ஒட்டுமொத்த மாநில வாக்காளர்களின் பிரதிபலிப்பு என்பது தவறான முடிவுக்கே இட்டுச் செல்லும்.
ஆயினும், இது நகர்ப்புற வங்கத்தின் பிரதிபலிப்பாகும். அந்த அளவிற்கு, இத்தேர்தல் முடிவுகள் குறித்து ஓர் ஆழமான ஆய்வினை மேற்கொள்ள இடது முன்னணி உறுதி பூண்டிருக்கிறது. 2009இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களின்போது, இடது முன்னணி பெற்ற வாக்கு எண்ணிக்கையில் ஆழமான அளவில் சரிவு இருந்தது. அப்போது 1966 நகராட்சி வார்டுகளில் 525இல் (அதாவது 29.73 விழுக்காடு) அதிக வாக்குகளைப் பெற்றிருந்தது. இப்போது நடைபெற்றுள்ள தேர்தல்களில் இடது முன்னணி 1791 நகராட்சி வார்டுகளில் 603இல் (அதாவது 33.61 விழுக்காடு) வெற்றி பெற்றிருக்கிறது. எனவே. இப்போதுள்ள நிலைமை என்பது இடது முன்னணியின் செயல்பாட்டைப் பொறுத்த வரை சற்றே முன்னேற்றம் என்றுதான் கூறவேண்டும்.
எனவே, மக்களவைத் தேர்தல்களின்போது ஏற்பட்ட பின்னடைவு மீள மாற்றியமைக்கப்பட வில்லை, மாறாக அவ்வாறு ஏற்பட்ட பின்னடைவு தொடராமல் நிறுத்தப் பட்டிருக்கிறது.
2005இல் நகராட்சி/மாநகராட்சித் தேர்தல்களின்போது, இடது முன்னணி முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, மொத்தம் உள்ள 81 நகராட்சி/மாநகராட்சிகளில் 50 இடங்களைப் பெற்று வெற்றி பெற்றிருந்தது. ஆயினும் 2009 மக்களவைத் தேர்தல்களில், இவற்றில் 19 இல் மட்டுமே அதிக அளவில் வாக்குகளைப் பெற்றிருந்தது. இப்போது நடைபெற்ற தேர்தல்களில் 18இல் மட்டும் வெற்றி பெற்றிருக்கிறது. ஆயினும், நாம் முன்பே குறிப்பிட்டதைப்போல, 26 நகராட்சி/மாநகராட்சிகளுக்கான தலைமை இனிமேல்தான் தீர்மானிக்கப்பட இருக்கின்றன. இடது முன்னணிக்கு பிரதானமாகப் பின்னடைவு என்பது கொல்கத்தா மற்றும் அதனைச் சுற்றியுள்ள நகர்ப்பகுதிகளில் இருந்துதான் ஏற்பட்டிருக்கிறது. வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் 21 நகராட்சி/மாநகராட்சிகளும், ஹூக்ளி மாவட்டத்தில் 11ம் இருக்கின்றன. 2005இல் இடது முன்னணி இவற்றின் மொத்தம் உள்ள 32 நகராட்சி/மாநகராட்சிகளில் 26இல் வெற்றி பெற்றிருந்தன. ஆனால் இப்போது இடது முன்னணி நான்கில் மட்டும் வெற்றி பெற்றிருக்கின்றன, இரண்டில் எவருக்கும் வெற்றி தோல்வி இல்லா (tie) நிலை ஏற்பட்டிருக்கிறது. இது மிகவும் ஆழமான விஷயமாகும். சரியான படிப்பினைகளுக்கு வரக்கூடிய விதத்தில் இவை ஆழமாகப் பரிசீலிக்கப்பட வேண்டியது அவசியமாகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடது முன்னணியும் சரியான முறையில் இவற்றை மேற்கொள்ள உறுதி பூண்டிருக்கின்றன.

(தமிழில்: ச.வீரமணி)

Tuesday, June 1, 2010

2ஜி ஸ்பெக்ட்ரம்: மறு ஏலம் நடத்துக! ஊழல் அமைச்சர் ஆ.ராசாவை நீக்கவேண்டும்: சீத்தாராம் யெச்சூரி





புதுதில்லி, ஜூன் 1-

2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலால் அரசுக்கு பெரும் அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளதால் முந்தைய விற்பனை ரத்து செய்யப்பட்டு, புதிதாக 3-ஜி ஏலம் விட்டதுபோல் ஏலம் விட வேண்டும் என்றும், 2ஜி ஊழல் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவ தால் விசாரணைக்கு இடையூறு ஏற்படா வண்ணம் அமைச்சர் ஆ.ராசா அமைச்சர வையிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்றும், 2ஜி ஊழலில் ஈடுபட்ட அதிகாரி கள் மீது போதிய அளவிற்கு குற்றங்கள் மெய்ப்பிக்கப்பட்டிருப்பதால் அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட வேண்டும் என்று பிரதமருக்குக் கடிதம் எழுதியிருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அர சியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தா ராம் யெச்சூரி கூறினார்.

தலைநகர் புது தில்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு அலுவலகமான ஏ.கே.கோபாலன் பவனில் செவ்வாய் அன்று பத்திரிகையாளர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக பிரதம ருக்கு எழுதிய கடிதம் மற்றும் அஞ்சல் மற்றும் தொலைத்தகவல் தணிக்கை அலு வலகத்தின் தணிக்கைக் குறிப்புகளின் நகல்களை வெளியிட்டு, சீத்தாராம் யெச் சூரி கூறியதாவது:

சமீபத்தில் பிரதமர் அவர்கள் பத்திரி கையாளர்களைச் சந்தித்தபோது, 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாகவும், அமைச்சர் ஆ.ராசாவுக்கு எதிராக உள்ள குற்றச்சாட்டு தொடர்பாகவும் சில கருத்துக் களைத் தெரிவித்திருக்கிறார். 2ஜி விற்ற போது கிடைத்த வருவாய்க்கும் 3ஜி ஸ்பெக்ட் ரம் விற்றபோது கிடைத்த வருவாய்க்கும் இடையில் உள்ள பெரிய அளவிலான வித் தியாசத்தை ஒப்புக்கொண்டிருக்கிறார். இது தொடர்பாக நான் மீண்டும் இப்போது பிரத மருக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறேன். இதற்கு முன்பும் இரு தடவைகள் இது தொடர்பாக அவருக்குக் கடிதங்கள் எழுதி யிருக்கிறேன்.

அமைச்சர் ஆ. ராசாவின் நடவடிக்கை களின் காரணமாக, அரசு கஜானாவிற்கு வரவேண்டிய வருவாய் பெருமளவில் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. மேலும் அவர் சட்டத்திற்குப் புறம்பாகவும், அரசு விதி முறைகளுக்குப் புறம்பாகவும் எப்படி எல் லாம் செயல்பட்டிருக்கிறார் என்பதையும், ஒருசிலருக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்துடனேயே அவர் இவ்வா றெல்லாம் செய்திருக்கிறார் என்பதையும் பிர தமரின் கவனத்திற்குக் கொண்டு வந்திருக் கிறேன்.

சமீபத்தில் 3ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் விட் டதன் மூலம் அரசுக்கு மிகப்பெரிய அள வில் வருவாய் வந்திருக்கிறது. இதே நடை முறைப்படி 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்கப்பட்டி ருந்தால் அரசுக்கு சுமார் 1 லட்சத்து 90 ஆயிரம் கோடி ரூபாய் அப்போது கூடுத லாக வருவாய் வந்திருக்கும். அமைச்சர் சட்டவிரோதமாக அரசு விதிகளைத் திருத்தி இருக்கிறார். அதன் காரணமாகத் தான் அரசிடமிருந்து 2ஜி உரிமங்களை வாங்கிய நிறுவனங்கள் ஒரு குறுகிய காலத் திற்குள்ளேயே தாங்கள் வாங்கியதின் ஒரு பகுதியை ஐந்தாறு மடங்கு விலைக்கு அந்நிய நிறுவனங்களிடம் விற்க முடிந்தி ருக்கிறது. எனவே அரசாங்கம் 2ஜி ஸ்பெக்ட்ரத்தின் இன்றைய சந்தை மதிப்பின் கீழான தொகையை முன்பு 2ஜி உரிமங்களை வாங்கிய கம்பெனிகளிட மிருந்து பெறத் தயங்கக் கூடாது. இவ்வாறு சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாயை அவர்களிடமிருந்து வாங்க வேண்டும். அவ்வாறு அவர்கள் தர மறுத்தால், அவர் களுக்கு அளித்துள்ள உரிமங்களை ரத்து செய்திட வேண்டும் என்று அக்கடிதத்தில் கோரியிருக்கிறேன்.

தவறான தகவல்

பிரதமர், பத்திரிகையாளர்களிடம் விவா திக்கையில் அமைச்சர் ஆ.ராசா ‘ட்ராய்‘ விதிமுறைகளின்படிதான் நடந்துகொண்டி ருப்பதாகத் தன்னிடம் தெரிவித்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார். அதுவும் தவறான தகவல் என்பதையும், எப்படியெல்லாம் அவர் ‘ட்ராய்’ விதிகளை மீறிச் செயல்பட் டிருக்கிறார் என்பதையும் பிரதமருக்கு விளக்கியிருக்கிறேன்.

எனவே, பிரதமர் 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்ற பழைய உரிமங்களை ரத்து செய்துவிட்டு, இப்போது 3ஜி ஸ்பெக்ட்ரம் விற்றதுபோல் மீண்டும் 2ஜி உரிமங்களை விற்று, அரசுக்கு ஏற்பட்ட இழப்பைச் சரி செய்திட வேண்டும்.

2ஜி ஸ்பெக்ட்ரம் விற்றது தொடர்பாக, மத்திய குற்றப்புலனாய்வுக் கழகத்தின் சார்பில் விசாரணை நடைபெற்றுக் கொண் டிருப்பதால், அவ்விசாரணைக்குக் குந்த கம் ஏற்படாத வகையில், அமைச்சர் ஆ. ராசா அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட வேண்டும்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்குத் துணை போன அதிகாரிகள் பலர் தொடர்பாக போதிய ஆதாரங்கள் கிடைத்திருப்பதால் அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட வேண் டும் என்று கடிதத்தில் பிரதமரைக் கோரி யிருக்கிறேன்.

இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

பேட்டியின்போது மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஆராய்ச்சித்துறையை சேர்ந்த பிரபிர் புர்காயஸ்தா உடன் இருந்தார்.

(ந.நி.)