Thursday, June 3, 2010

மேற்கு வங்க நகராட்சி/மாநகராட்சித் தேர்தல்கள்



மேற்கு வங்க மாநிலத்தில், 2010 மார்ச் 30 அன்று 81 நகராட்சி/ மாநகராட்சிகளுக்கு நடைபெற்ற தேர்தல்களில் இடது முன்னணி 18 நகராட்சி/மாநகராட்சிகளில் மட்டும் வெற்றி பெற்றிருக்கிறது. திரிணாமுல் காங்கிரஸ் 26இலும், காங்கிரஸ் 7இலும், இடது எதிர்ப்புக் கூட்டணி 4 இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கின்றன. 23 நகராட்சிகளில் தொங்கு நிலைமை ஏற்பட்டிருக்கிறது. 3 இடங்களில் எவருக்கும் பெரும்பான்மை கிடைக்காது வெற்றி தோல்வியற்ற (tie) நிலை ஏற்பட்டிருக்கிறது. யார் பக்கம் இது அமையும் என்பது எதிர்காலத்தில்தான் தெரிய வரும்.

ஜனநாயக நடைமுறைகளை உயர்த்திப் பிடிக்கும் உன்னத பாரம்பர்யத்தின் அடிப்படையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையிலான இடது முன்னணி மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறது. மேற்கு வங்கத்தில் உள்ள இடது முன்னணி, எதிர்காலத்தில் சரியான திசைவழியில் தன்னை தகவமைத்துக்கொள்ளக் கூடிய விதத்தில் தேர்தல் முடிவுகள் தொடர்பாக முறையான மதிப்பீட்டையும் பரிசீலனையும் மேற்கொள்ளும் என்று பிரகடனம் செய்கிறது.
ஊடகங்கள், மேற்கு வங்கத்தில் நகராட்சிகளுக்காக நடைபெற்ற தேர்தல்கள் குறித்து, 2011 மே மாதத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்களுக்கான ‘அரை இறுதி ஆட்டம்’ (‘ளநஅi-கiயேட’) என்று மிகப்பெரிய அளவில் தம்பட்டம் அடித்தன. அரசியல் உணர்வு அதிகம் உள்ள வங்க வாக்காளர்கள், ஒவ்வொரு தேர்தலையும் அதன் நோக்கத்தின் அடிப்படையில் தனித்தனியே நுணுகி அணுகும் குணம் கொண்டவர்களாவார்கள். மக்களவைத் தேர்தல் என்பது மத்தியில் ஆட்சியைத் தீர்மானிப்பதற்காக நடைபெற்றது. மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல்கள், மாநில அரசைத் தீர்மானிப்பதற்கான ஒன்று. அதேபோன்றுதான், நகராட்சி மற்றும் பஞ்சாயத்துத் தேர்தல்கள் ஒவ்வொன்றும் அவற்றுக்கெனத் தனித்தனிக் குறிக்கோள்களையும், நோக்கங்களையும் கொண்டிருக்கின்றன. இவ்வாறு ஒவ்வொரு தேர்தல்களுமே வெவ்வேறு நோக்கத்தின் அடிப்படையில் நடைபெறுகின்றன.

திரிணாமுல் காங்கிரஸ், முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதொரு மாநில அரசை டிஸ்மிஸ் செய்திட வேண்டும் என்றும், தேர்தல்களை முன்கூட்டியே நடத்திட வேண்டும் என்றும் அடிக்கடி காட்டுக் கூச்சலிட்டு பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறது. இது ஜனநாயக விரோதம் மட்டுமல்ல, பகுத் தறிவுக்குப் பொருந்தாததுமாகும். நடைபெற்ற நகராட்சித் தேர்தல்களில் வாக்களிக்கத் தகுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 85 ஆயிரத்து 33 ஆயிரம் ஆகும். இவர்கள் மாநிலத்தின் மொத்த வாக்காளர் எண்ணிக்கையான 5 கோடியே 24 லட்சத்து 32 ஆயிரத்தில் வெறும் 17 விழுக்காடேயாகும். மீதமுள்ள 83 விழுக்காட்டினர் கிராமப்புற வங்க வாக்காளர்கள். இவர்கள்தான் கடந்த காலங்களில் மேற்கு வங்க மாநில அரசின் குணத்தைத் தீர்மானிப்பதில் முக்கிய கூறாய் இருப்பவர்கள். எனவே, நகராட்சித் தேர்தல்களின் முடிவுகள்தான் ஒட்டுமொத்த மாநில வாக்காளர்களின் பிரதிபலிப்பு என்பது தவறான முடிவுக்கே இட்டுச் செல்லும்.
ஆயினும், இது நகர்ப்புற வங்கத்தின் பிரதிபலிப்பாகும். அந்த அளவிற்கு, இத்தேர்தல் முடிவுகள் குறித்து ஓர் ஆழமான ஆய்வினை மேற்கொள்ள இடது முன்னணி உறுதி பூண்டிருக்கிறது. 2009இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களின்போது, இடது முன்னணி பெற்ற வாக்கு எண்ணிக்கையில் ஆழமான அளவில் சரிவு இருந்தது. அப்போது 1966 நகராட்சி வார்டுகளில் 525இல் (அதாவது 29.73 விழுக்காடு) அதிக வாக்குகளைப் பெற்றிருந்தது. இப்போது நடைபெற்றுள்ள தேர்தல்களில் இடது முன்னணி 1791 நகராட்சி வார்டுகளில் 603இல் (அதாவது 33.61 விழுக்காடு) வெற்றி பெற்றிருக்கிறது. எனவே. இப்போதுள்ள நிலைமை என்பது இடது முன்னணியின் செயல்பாட்டைப் பொறுத்த வரை சற்றே முன்னேற்றம் என்றுதான் கூறவேண்டும்.
எனவே, மக்களவைத் தேர்தல்களின்போது ஏற்பட்ட பின்னடைவு மீள மாற்றியமைக்கப்பட வில்லை, மாறாக அவ்வாறு ஏற்பட்ட பின்னடைவு தொடராமல் நிறுத்தப் பட்டிருக்கிறது.
2005இல் நகராட்சி/மாநகராட்சித் தேர்தல்களின்போது, இடது முன்னணி முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, மொத்தம் உள்ள 81 நகராட்சி/மாநகராட்சிகளில் 50 இடங்களைப் பெற்று வெற்றி பெற்றிருந்தது. ஆயினும் 2009 மக்களவைத் தேர்தல்களில், இவற்றில் 19 இல் மட்டுமே அதிக அளவில் வாக்குகளைப் பெற்றிருந்தது. இப்போது நடைபெற்ற தேர்தல்களில் 18இல் மட்டும் வெற்றி பெற்றிருக்கிறது. ஆயினும், நாம் முன்பே குறிப்பிட்டதைப்போல, 26 நகராட்சி/மாநகராட்சிகளுக்கான தலைமை இனிமேல்தான் தீர்மானிக்கப்பட இருக்கின்றன. இடது முன்னணிக்கு பிரதானமாகப் பின்னடைவு என்பது கொல்கத்தா மற்றும் அதனைச் சுற்றியுள்ள நகர்ப்பகுதிகளில் இருந்துதான் ஏற்பட்டிருக்கிறது. வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் 21 நகராட்சி/மாநகராட்சிகளும், ஹூக்ளி மாவட்டத்தில் 11ம் இருக்கின்றன. 2005இல் இடது முன்னணி இவற்றின் மொத்தம் உள்ள 32 நகராட்சி/மாநகராட்சிகளில் 26இல் வெற்றி பெற்றிருந்தன. ஆனால் இப்போது இடது முன்னணி நான்கில் மட்டும் வெற்றி பெற்றிருக்கின்றன, இரண்டில் எவருக்கும் வெற்றி தோல்வி இல்லா (tie) நிலை ஏற்பட்டிருக்கிறது. இது மிகவும் ஆழமான விஷயமாகும். சரியான படிப்பினைகளுக்கு வரக்கூடிய விதத்தில் இவை ஆழமாகப் பரிசீலிக்கப்பட வேண்டியது அவசியமாகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடது முன்னணியும் சரியான முறையில் இவற்றை மேற்கொள்ள உறுதி பூண்டிருக்கின்றன.

(தமிழில்: ச.வீரமணி)

No comments: