கொரானா வைரஸ் தொற்றை ஒழிக்கும் நடவடிக்கைகளில்
மத்திய அரசு பெரிய அண்ணன் மனப்பான்மையுடன்
நடந்து கொள்கிறது
மாநிலங்களுக்கு போதிய நிதி உதவி அளித்திடவில்லை,
சமூக முடக்கத்தை நீட்டிப்பதா, தளர்த்துவதா
என்பது குறித்து
முடிவெடுக்கும் அதிகாரத்தையும் அளித்திடவில்லை
சீத்தாராம் யெச்சூரி குற்றச்சாட்டு
(சமூக முடக்கத்திற்குப்
பின் பொருளாதாரத்தை மீட்டமைத்திட, பெரிய அளவுக்கு அரசாங்க ஒதுக்கிடுகள் தேவை என்று
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, கோரியுள்ளார்.
தி இந்து நாளிதழுக்கு அவர் அளித்துள்ள நேர்காணலின்போது, அவரிடம் கேட்கக்பபட்ட கேள்விகளும்,
அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு.)
கேள்வி: சமூக முடக்கமும், மற்றும் அதனை மேலும் விரிவுபடுத்தியதும்
பொருளாதாரத்தின் மீதான கடும் தாக்கத்திற்குக் காரணம் என்பதை நியாயப்படுத்துகிறதா?
சீத்தாராம் யெச்சூரி : சமூக முடக்கம் சில சமயங்களில் தவிர்க்கமுடியாத
ஒன்றாக இருக்கலாம்., ஆனால், இங்கே பிரச்சனை என்னவென்றால், அது முறையான தயாரிப்புக்குப்
பின்னர் திணிக்கப்பட்டிருக்க வேண்டும். சமூக முடக்கக் காலத்தை வலுவான முறையிலும், அறிவியல்பூர்வமான
முறையிலும் பயன்படுத்திட வேண்டும். அடுத்து, எங்கே நோய்த் தொற்று பரவிக்கொண்டிருக்கிறது
என்பதைக் கண்டறிந்து அந்தப் பகுதிகளைத் தனிமைப்படுத்திடவும், இதர இடங்களை மீளவும் திறந்திடவும்
நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும். இதைத்தான் பல நாடுகள் செய்திருக்கின்றன, செய்து கொண்டுமிருக்கின்றன.
ஆனால் இங்கே வெறும் நான்கு மணி நேர கால இடைவெளியுடன் பிரதமர் சமூக முடக்கத்தை அறிவிக்கிறார். மாநில அரசாங்கங்களுக்கோ அல்லது மக்களுக்கோ தயாரிப்புக்கான
கால அவகாசமே கொடுக்கவில்லை. இது தேவையற்ற விதத்தில் பெரும் குழப்பங்களை ஏற்படுத்தி
இருக்கிறது.
இரண்டாவதாக, சமூக முடக்கக் காலத்தில், மிகவும் விரிவான அளவில்
சோதனைகள் செய்யப்பட்டு, எங்கே நோய்த்தொற்று அதிகமாக உள்ளதோ அந்தப் பகுதியைத் தனிமைப்படுத்தி
இருக்க வேண்டும். பின்னர், இயல்பான கட்டுப்பாடுகளுடன் இதரப் பகுதிகளை மெல்ல மெல்ல இயல்புநிலைக்குக்
கொண்டுவர நடவடிக்கைகள் எடுத்திருக்க வேண்டும். சமூக இடைவெளியல்ல, மாறாக சமூக ஒருமைப்பாட்டுடன்
மக்கள் இடையே இடைவெளியை (physical distance with social solidarity) உருவாக்க வேண்டும்
என்றுதான் நாங்கள் எப்போதும் சொல்லிவந்து கொண்டிருக்கிறோம். ஆனால், நாம் போதுமான சோதனை
வசதிகளுடனோ அல்லது சுய பாதுகாப்பு உபகரணங்களுடனோ தயாராயில்லை. கொரானா வைரஸ் தொற்றை
வலுவான முறையில் சமாளிக்கக்கூடிய விதத்திலும், மக்களுக்கு நிவாரணம் அளிக்கக்கூடிய விதத்திலும்
நாம் தயாராயில்லாத நிலையில் இருக்கிறோம்.
கேள்வி: சமீபத்தில் பிரதமருக்கும், முதல்வர்களுக்கும் இடையே
காணொளிக் காட்சி வாயிலாக நடைபெற்ற கலந்தாலோசனைகளை எப்படி நீங்கள் பார்க்கிறீர்கள்?
சீத்தாராம் யெச்சூரி: திங்கள்
கிழமை அன்று நடந்த கூட்டத்திற்கு, பிரதமர் அலுவலகத்திலிருந்து ஒன்பது முதல் அமைச்சர்களுக்கு
மட்டும் பேசுவதற்குக் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. ஏன், மற்றவர்கள் அழைக்கப்படவில்லை?
யார் பேச வேண்டும் என்பதும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதா? இவ்வாறு பேசிய ஒன்பது பேர்களில்,
ஒருவர் ஒடிசாவைச் சேர்ந்தவர், மற்றொருவர் புதுச்சேரியைச் சேர்ந்தவர். மற்ற அனைவரும்
பாஜகவை சேர்ந்தவர்கள் அல்லது பாஜக ஆதரவாளர்கள். இத்தகையக் கலந்தாலோசனையை எதில் சேர்ப்பது?
ஒவ்வொரு கூட்டத்திலும், பிரதமர் அலுவலகம், எந்த முதல்வர் பேச வேண்டும் என்று தீர்மானிக்கிறது.
முதல்வர்கள் காணொளிக் காட்சி நடைபெறப் போகிறது என்றால் அனைத்து முதல்வர்களையும் அவர்களின்
கருத்துக்களைக் கூறுவதற்கு அனுமதித்திட வேண்டும். இவ்வாறு ஒருசிலரைப் பொறுக்கி எடுத்து,
பின்னர் இவ்வாறு பேசிய ஒன்பது பேரில் நான்கு பேர் சமூக முடக்கக் காலத்தை விரிவாக்க
வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள் என்று ஒருவிதமான தவறான தகவலை வெளியிடுகிறார்கள்.
இது இத்தகைய கூட்டத்தின் நம்பகத்தன்மையையே பாதிப்புக்கு உள்ளாக்குகிறது.
கேள்வி: கேரள அரசாங்கம் சமூக முடக்கக்காலக் கட்டுப்பாடுகளைச்
சற்றே தளர்த்தியிருப்பது குறித்து, உடனடியாக மத்திய உள்துறை அமைச்சகம், கேரள அரசாங்கத்தின்மீது
பாய்ந்திருக்கிறது. மேலும் மத்திய அரசு, மேற்கு வங்கம் மற்றும் ராஜஸ்தான் போன்று எதிர்க்கட்சிகள்
ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் தங்கள் குழுக்களை அனுப்பி இருக்கின்றன. இந்நிகழ்வுகளை
எப்படிக் பார்க்கிறீர்கள்?
சீத்தாராம் யெச்சூரி: நீங்கள்
உண்மையிலேயே கொரானா வைரஸ் தொற்றுக்கு எதிராகப் போர்க்களத்தில் ஈடுபட்டிருக்கிற மாநிலங்களுக்கு
உதவ வேண்டும் என்று விரும்பினால், அம்மாநில அரசாங்கங்களுக்குத் தேவையான உதவிகளை முறையாகச்
செய்திட வேண்டும். அதற்கு, அவற்றுக்கு நிதி உதவிகள் செய்ய வேண்டியது அவசியமாகும். ஆனால்
அதைச் செய்யவில்லை. அவர்களுக்கு அளிக்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகைகளைக் கூட அவர்களுக்கு
அளிக்கவில்லை.
‘பிஎம்கேர்ஸ்’ (PMCARES) என்ற பெயரில் புதிய நிதியம் ஒன்றின்கீழ் பல கோடி ரூபாய்கள் நீங்கள் வசூலித்திருக்கிறீர்கள்.
இந்தப் பணம் உங்களுக்கு எதற்காக? இந்தப் பணத்தை மாநில அரசாங்கங்களுக்கு மாற்றல் செய்யுங்கள்.
மத்திய அரசு, இதை எப்படிச் செய்வது என்பது குறித்து ஒருவிதமான பெரிய அண்ணன் மனப்பான்மையுடன்
நடந்துகொண்டிருக்கிறது. மத்திய அரசு அவர்களுக்குத் தேவையான உதவிகளையும் செய்யவில்லை.
மாநிலத்தில் தாங்கள் மேற்கொண்ட மதிப்பீடுகளின்படி செயல்படவும் அனுமதிக்க மறுக்கிறது.
இவ்வாறு நிதிக் கூட்டாட்சி மற்றும் அரசியல் கூட்டாட்சி இரண்டுமே கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது.
மத்தியக் குழுக்கள் எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு மட்டும் அனுப்பப்படுகின்றன,
ஏன்? பாஜக ஆளும் மாநிலங்களான குஜராத்தும், மத்தியப் பிரதேசமும் கோவிட்-19 கொரானா வைரஸ்
தொற்று அதிகமாகப் பாதிக்கப்பட்டு, ‘பாசிடிவ்’ வழக்குகள் மிகவும் உயர்ந்திருப்பதாகச்
செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. கேரளாவில் ஜனவரி 30 அன்று முதல் வழக்கு குறித்து
செய்தி வெளிவந்ததிலிருந்து, இதுவரையிலும் மத்திய அரசாங்கம் எதுவுமே செய்யவில்லை. இந்தக்
காலகட்டத்தில்தான் நாங்கள் எங்களுக்குள்ளேயே இதை எதிர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள
வேண்டியிருந்தது. மாறாக, அவர்கள் ‘நமஸ்தே
டிரம்ப்’ கூட்டத்திற்கு மக்களைத் திரட்டினார்கள், இப்போது இதன் காரணமாக குஜராத்தில்
கொரானா வைரஸ் தொற்றின் நிலைமை மிகவும் உச்சத்தில் இருக்கிறது.
அடுத்து, மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதில்
மும்முரமாக இருந்தீர்கள். பின்னர் பிரம்மாண்டமான கூட்டத்துடன் உங்கள் ஆட்சிக்கான பதவிப்
பிரமாண நிகழ்ச்சியை நடத்தினீர்கள்.
அடுத்து, தப்லிகி ஜமாத் கூட்டத்தை நடத்தினீர்கள். இதனை நடத்தியவர்கள்
மிகவும் பொறுப்பற்ற முறையில் அந்த சமயத்தில் கூட்டத்தைக் கூட்டினார்கள். ஆனால், இதனை
அனுமதித்தது யார்? இதே போன்றதொரு கூட்டத்திற்கு மகாராஷ்ட்ர அரசாங்கம் அனுமதி மறுத்தது
எப்படி? ஆனால், தில்லியில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில்
உள்ள காவல்துறை இதற்கு அனுமதி அளிக்கிறது. இது எப்படி?
கேள்வி: இந்தத் தொற்றிலிருந்து எவ்வாறு தப்பிப்பது?
த்தாராம் யெச்சூரி: கொரானா வைரஸ் தொற்று அதிகமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளை
அடையாளம் கண்டறிந்து, அவற்றைத் தனிமைப்படுத்தி, ஓர் அறிவியல்பூர்வமான அணுகுமுறையைக்
கடைப்பிடித்து, நடவடிக்கைகள் எடுப்பதன் மூலமே இது சாத்தியம், ஒருவிதமான இயல்புநிலைக்குத்
திரும்பமுடியும். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இயல்பு வாழ்க்கைக்கான நடவடிக்கைகளை
மெல்ல மெல்லத் தொடங்கிட வேண்டும். அப்படித்தான் ஜனநாயகம் கூட ஜீவித்திருக்கும். மாறாக
நீங்கள் சர்வாதிகாரமான முறையில் கடுமையாக நடவடிக்கை எடுத்தீர்களானால், பின் ஜனநாயகம்
பாதிப்புக்கு உள்ளாகும். இதுபோன்று தொத்துநோய்கள் சமூகத்தில் பீடிக்கப்படும் காலங்களில்
எல்லாம், அல்லது சுகாதார அவசரநிலை உருவாகும்போதெல்லாம், ஆட்சியாளர்களால் அரக்கத்தனமான
சட்டங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. 1890களில் பிளேக் நோய்த்தொற்று உருவான சமயத்தில்,
பிரிட்டிஷார் பாதிப்புக்கு உள்ளானவர்கைளை ஆட்டு மந்தையை அடைப்பதைப்போல் ஒரேயிடத்தில்
அடைத்துவைத்து அவர்கள் கொத்து கொத்தாக இறப்பதற்கு வழிவகுத்தார்கள். இதற்கு எதிர்ப்புத்
தெரிவித்து, தேசிய இயக்கம் கிளர்ந்தெழுந்தது.
இதன் விளைவாகத்தான் பிளேக் கமிஷனர் வால்ட்ர் சார்லஸ் ரேண்ட் என்பவர் சபேகார்
சகோதரர்களால் சுட்டுக்கொன்ற புகழ்பெற்ற வழக்கு நடைபெற்றது. பின்னர், 1897இல் கடுமையான
நடவடிக்கைகளுடன் தொற்று நோய்கள் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதே சட்டம் சில அலங்காரப்
பூச்சுகளுடன் 2005இல் கொண்டுவரப்பட்டிருப்பதை இப்போது நாம் பெற்றிருக்கிறோம். பின்னர்,
ராஜத்துரோகச் சட்டம் (Sedition Act) வந்தது. தொற்று நோயை பிரிட்டிஷ் அரசாங்கம் மிகவும்
மோசமான முறையில் கையாள்வதாக அதனைக் கண்டித்து தலையங்கள் எழுதினார் என்பதற்காக பால கங்காதரத்
திலகர் கைது செய்யப்பட்டார். இவ்வாறாக ஆளும் வர்க்கங்கள் எப்போதுமே தொற்று நிலைமைகளைக்
கட்டுப்படுத்துவதற்கு, பெரிய அளவில் எதேச்சாதிகார நடைமுறைகளைத்தான் பயன்படுத்துகின்றன.
ஆனால், அது நாம் இந்தத் தொற்றை முறையாக எதிர்த்துப் போராடவில்லை
என்று கூறுவதற்கான காரணமாக இருக்க முடியாது. இது எதிர்த்து முறியடிக்கப்பட்டாக வேண்டும்.
மக்களின் உயிர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
கேள்வி: இந்தத் தொற்று எப்படி இந்தியப் பொருளாதாரத்தில் தாக்கத்தை
ஏற்படுத்தும்? இதனைச் சரிசெய்திட உங்கள் ஆலோசனைகள் என்ன?
சீத்தாராம் யெச்சூரி: இதனை மூன்று கட்டங்களாக சமாளித்ரிதட
வேண்டும். என்னுடைய கருத்தின்படி, இதற்கு குறுகிற, நடுத்தர மற்றும் நீண்டகால நடவடிக்கைகள்
தேவை. இவை அனைத்தும் இப்போதே தொடங்கிட வேண்டும். குறுகிற கால நடவடிக்கையின்படி, ஒவ்வொருவருக்கும்
அடுத்த மூன்று மாதங்களுக்கு, மாதந்தோறும் 7,500 ரூபாய் ரொக்க மாற்றல் செய்திட வேண்டும்.
பசி-பஞ்சம்-பட்டினி மற்றும் ஊட்டச்சத்தின்மை காரணமாக கொரானா வைரஸ் தொற்றுக்கு ஆளாகக்கூடிய
நிலையில் இருக்கும் ஏழை மக்கள் அனைவருக்கும் இந்திய உணவுக் கழகத்தின் கிடங்குகளில்
உள்ள உணவு தானியங்களை விநியோகம் செய்திட வேண்டும்.
புலம்பெயர் தொழிலாளர்கள், அவர்கள் தங்கள் சொந்த இடங்களுக்குச் செல்வதற்கு போக்குவரத்து
வசதிகள் செய்து தரப்பட வேண்டும். மக்களுக்கு நிவாரணம் அளிப்பது என்பது, உண்மையில் நீங்கள்
உங்கள் உழைப்புச்சக்தியைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று பொருளாகும்.
நடுத்தர கால நடவடிக்கைகள் என்பவை, அரசாங்கம் இப்போது அளித்திருக்கும்
நிவாரணத் தொகுப்புத் திட்டத்தைவிட மேலும் பெரிய அளவிலான நிவாரணத் தொகுப்புத் திட்டத்தை
அறிவித்திட வேண்டும். அரசாங்கம் இப்போது, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1
சதவீதத்திற்கும் குறைவான அளவிலேயே 1.7 லட்சம் கோடி ரூபாயில் ஒரு திட்டத்தை அறிவித்திருக்கிறது.
பல நாடுகள், தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தயில் 20 சதவீத அளவிற்கு நிதித் தொகுப்புகளை
அளித்திருக்கின்றன. நாம் மட்டும் ஏன் இப்படி மிக அற்பத்தனமாக நடந்துகொள்கிறோம்? நமக்குத் தெரியவில்லை. பெரும் பணம் படைத்தவர்களுக்கு உங்களால்
7.78 லட்சம் கோடி ரூபாயை கடந்த ஐந்தாண்டுகளில் தள்ளுபடி செய்யக்கூடிய வல்லமை இருக்கும்
என்றால், நிச்சயமாக உங்களிடம் போதுமான அளவிற்கு நிதி ஆதாரங்கள் இல்லை என்று சொல்ல முடியாது.
பெரும் பணக்காரர்களுக்கு விதிக்கப்பட்டு வந்த 4 சதவீத செல்வ வரியை மீண்டும் கொண்டு
வாருங்கள். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீத அளவிற்கு நிதித் தொகுப்பு செய்யக்கூடிய
அளவிற்குப் போதுமான நிதியை நமக்கு அளித்திடும்.
நீண்டகால நடவடிக்கைகள் என்பனவற்றையும் இப்போதே தொடங்கிட வேண்டும்.
இதில் பிரதானமான அழுத்தம் என்பது, சுகாதாரம், கல்வி மற்றும் நாட்டிற்குத் தேவையான உள்கட்டமைப்பு
வசதிகளுக்குப் பொது முதலீடுகள் அளிக்கப்பட வேண்டும் என்பதாகும். இது, கோடானு கோடி மக்களுக்கு
வேலை வாய்ப்பினை அளித்திடும். மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புச் சட்டத்தின்
கீழ் பட்ஜெட் ஒதுக்கீடு கணிசமான அளவிற்கு உயர்த்தப்பட வேண்டும். இப்போதுள்ள 100 நாள்
வேலை திட்டம் என்பதை, 200 நாட்கள் வேலைத் திட்டமாக உயர்த்திட வேண்டும்.
நன்றி: தி இந்து நாளிதழ், 29.4.2020
(தமிழில்: ச. வீரமணி)
No comments:
Post a Comment