Sunday, August 27, 2017

அமெரிக்காவுடன் மேலும் நெருங்கிடும் மோடியின் விசுவாசம்


மோடி அரசாங்கம், அமெரிக்காவை ராணுவ ரீதியாக மிகவும் நெருக்கமானமுறையில் கட்டித்தழுவிக்கொண்டிருக்கிறது. டிரம்ப் நிர்வாகத்திற்கு நரேந்திர மோடி தன்னாலான அனைத்து விதங்களிலும் விசுவாசமாக நடந்துகொள்வார் என்றே தோன்றுகிறது.
ஆகஸ்ட் 15 அன்று, டொனால்டு டிரம்பிற்கும் நரேந்திர மோடிக்கும் இடையே தொலைபேசி வாயிலாக ஓர் உரையாடல் நடந்திருக்கிறது. டிரம்ப், மோடிக்கு இந்தியாவின் சுதந்திர தின வாழ்த்துக்களைக் கூறியதுடன், இரு நாடுகளின் உறவுகளுக்கு இடையே புதிய சில நடவடிக்கைகள் குறித்தும் கோடிட்டுக்காட்டியிருக்கிறார்.
வெள்ளை மாளிகை யிலிருந்து வந்துள்ள செய்தி, “இருநாட்டின் தலைவர்களும் இந்தியபசிபிக் பிராந்தியத்தில் அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் வளர்த்துக்கொள்வதற்காக ஒவ்வொரு நாட்டின் சார்பிலேயும் இரு அமைச்சர்களைக் கொண்ட ஓர் அமைப்பு நிறுவப்படும்என்றும்அந்த அமைப்பு ராணுவரீதியான (strategic) கலந்தாலோசனைகளை முன்னெடுத்துச் செல்லும்என்றும் கூறுகிறது.

புதிய இரண்டுக்கு இரண்டு

இரண்டுக்கு இரண்டு அமைச்சர்கள் என்பது, இந்தியாவின் தரப்பில் ராணுவ அமைச்சர் மற்றும் அயல்துறை அமைச்சர்களையும், இதேபோன்று அமெரிக்காவில் இத்துறைகளுக்குப் பொறுப்பாகவுள்ள அமைச்சர்களையும் குறிப்பிடுகிறது.

இதுவரை இந்த 2க்கு 2 என்பது, நம் நாட்டின் சார்பில் அயல்துறை அமைச்சரும், வர்த்தகத்துறை அமைச்சருமாக இருந்தார்கள். அதேபோன்று அமெரிக்காவின் சார்பிலும் அயல்துறை அமைச்சரும், வர்த்தகத்துறை அமைச்சருமாகத்தான் இருந்தார்கள். இப்போது வர்த்தகத்துறை அமைச்சர் என்பது ராணுவத்துறை அமைச்சர் என்று மாற்றப்பட்டிருக்கிறது.
இம்மாற்றம், இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ ரீதியான ஒத்துழைப்பு அதிகரித்துக்கொண்டிருப்பதையே காட்டுகிறது. அமெரிக்கா, ஆசியாபசிபிக் பிராந்தியத்தில் இவ்வாறு 2க்கு 2 அமைச்சர்களைக் கொண்ட ராணுவக் கூட்டணிகளை இதுவரையிலும் ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன்தான் வைத்திருந்தது. இப்போது அதனுடன் இந்தியாவும் சேர்ந்துகொண்டிருக்கிறது.
இந்திய-பசிபிக் பிராந்தியம் என்பதன் பொருள் என்னவென்பதை இந்தப் பின்னணியில் பார்த்திட வேண்டும். 2015 ஜனவரியில் ஒபாமா இந்தியாவிற்கு வந்திருந்த சமயத்தில், ஆசியபசிபிக் மீதான அமெரிக்கஇந்திய கூட்டு தொலைநோக்கு அறிக்கை (US-India Joint Vision Statement on Asia Pacific)  ஒன்று தயாரிக்கப்பட்டதைப் பார்த்திட வேண்டும். இப்போது இவர்கள் ஏற்படுத்திக் கொண்டுள்ள கூட்டணி என்பது, சீனாவே தங்களின் பிரதான கவலை என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

மோடியின் நன்றி உணர்த்துவது என்ன?

இந்தப்பிராந்தியத்தில் அமெரிக்காவின் தலைமையை ஏற்றுக் கொள்ளக்கூடிய அளவிற்கு மோடி சென்றிருப்பதை, மோடி “வட கொரிய அச்சுறுத்தலுக்கு எதிராக உலகத்தை ஒன்றுபடுத்திட ஒரு வலுவான தலைமையைக் கொடுப்பதற்காக ஜனாதிபதி டிரம்புக்கு நன்றி தெரிவித்திருப்பதிலிருந்தே நன்கு தெரிந்துகொள்ள முடிகிறது. இந்தியா, அமெரிக்காவின் ஒரு நம்பகமான கூட்டாளியாக இருந்திடும் என்பதை மீண்டும் உறுதியளித்திடும் விதத்தில் இந்தக்கூற்று அமைந்திருக்கிறது.

அதன்பிறகு, ஜனாதிபதி டிரம்ப், ஆப்கானிஸ்தானத்துடனும், தெற்கு ஆசிய நாடுகளுடனும் அவருடைய அணுகுமுறை எப்படி இருந்திட வேண்டும் என்று உரையாற்றியிருக்கிறார். பாகிஸ்தானில் அடைக்கலம்புகுந்துள்ள பயங்கரவாதிகளுக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்ததில் மோடி அரசாங்கம் புளகாங்கிதம் அடைந்திருக்கிறது.

டிரம்ப் மேலும் கூறுகையில், பாகிஸ்தானுக்கு அமெரிக்கா பல பில்லியன் டாலர்கள் கொடுத்திருப்பதாகவும், இந்நிலையில் தாங்கள் யாருக்கெதிராகப் போராடிக் கொண்டிருக்கிறோமோ அத்தகைய பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுப்பதை சகித்துக்கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் இவ்வாறு அறிக்கைகள் விடுவதெல்லாம் அமெரிக்கா கடந்த 15 ஆண்டுகளாக செய்து வந்ததுதான். எதார்த்த நிலை என்னவென்றால், ஆப்கானிஸ்தானத்தில் பாகிஸ்தானின் உதவியில்லாமல் அமெரிக்காவால் எதுவும் செய்ய முடியாது என்பதுதான்.
டிரம்பின் எதிர்பார்ப்பு

இந்தியா குறித்து, டிரம்ப் கூறுகையில், “இந்தியா, அமெரிக்காவுடன் பல பில்லியன் டாலர்கள் மதிப்பிற்கு வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கிறது. ஆப்கானிஸ்தானத்தில் எங்களுக்கு அதிக அளவில் இந்தியா உதவிட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். குறிப்பாக, பொருளாதார உதவி மற்றும் வளர்ச்சிப் பகுதிகளில் அதன் உதவி மிகவும் அவசியமாகும்.
டிரம்ப், தன்னுடைய நேட்டோ கூட்டணி நாடுகளுடனும் இதே போன்றே நிலை எடுத்திருக்கிறார். தாங்கள் தங்களுடைய ராணுவத்தினருக்கு அதிக அளவில் பணம் செலவு செய்துகொண்டிருப்பதாகவும், அத்தகைய செலவுகளைத் தங்களுடன் ராணுவக் கூட்டணி வைத்துள்ள நாடுகள் தாங்குவதை அமெரிக்க எதிர்பார்க்கவில்லை என்றும் டிரம்ப் கூறியிருக் கிறார். ஆப்கானிஸ்தானத்தைப் பொறுத்தவரை, தன்னுடைய கூட்டணிகளாக இருக்கக்கூடிய பாகிஸ்தானும் இந்தியாவும் பல பில்லியன் டாலர்கள் ஈட்டிக்கொண்டிருப்பதால், அதற்குப்பிரதிபலனாக தங்களுடைய உரிய பங்கினைச் செலுத்த வேண்டும் என்று டிரம்ப் எதிர்பார்க்கிறார்.
இந்த ஆண்டின் இறுதிவாக்கில் அமெரிக்க ராணுவ அமைச்சர் ஜெனரல் ஜேம்ஸ் மாட்டிஸ் இந்தியா வர இருக்கிறார் என்று கூறப்பட்டிருக்கிறது. லீமோ (LEMOA-Logistics Exchange Agreement)  கடல்வழி மற்றும் வான்வழி பரிவர்த்த னை ஒப்பந்தத்தினைத் துவக்கி வைப்பதே அவர் திட்டம். அப்போது அவர் இந்தியாவிற்குக் கொண்டு வரும் விமானப்படை விமானத்திற்கு எரிபொருள் களை நிரப்புதல் மற்றும் பணிபுரிதல் ஆகிய வற்றைத் திறந்துவைத்திடுவார்.
லீமோ என்பது இந்திய தலங்களை (bases)  அமெரிக்கப் போர் விமானங்கள்
மற்றும் போர்க் கப்பல்கள் பயன்படுத்திக்கொள் வதற்கான வசதிகளை செய்து கொடுப்பதற்கான ஒப்பந்தமாகும்.

தங்கள் வளைக்குள் இழுக்க

அமெரிக்காவுடன் ராணுவ ஒத்துழைப்பு அதிகரித்துக் கொண்டிருப்பது, டோக்லாம் சமவெளியில் சீனாவுடன் பிரச்சனைகள் தொடர்ந்துகொண்டி ருக்கும் பின்னணியில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதுவே இந்தியாவை தங்களின் போர்த்தந்திர வலைக்குள் ஈர்ப்பதற்குச் சரியான தருணம் என்று அமெரிக்கா கருதுகிறது.

ஒவ்வோராண்டும் நடத்தப்படும் மலபார் பயிற்சியில் ஆஸ்திரேலியாவையும் சேர்த்து அதனை விரிவாக்கிடவேண்டும் என்று இந்தியாவை அமெரிக்கா நச்சரித்துக்கொண்டி ருக்கிறது. அவ்வாறு நடைபெற்றால் அது நான்கு நாடுகளின்அதாவது அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா என நான்கு நாடுகளின்கூட்டுப் பயிற்சியாக மாறிவிடும்.
மோடி அரசாங்கம், போர் ஆயுதங்கள் செய்திடும் அமெரிக்க நிறுவனங்கள், இந்தியாவில் ராணுவத்தளவாடங்கள் உற்பத்தி செய்வதற்குக் கதவைத் திறந்துவிடும் வேலைகளிலும் இறங்கி இருக்கிறது.இவற்றுடன் இந்தியக் கார்ப்பரேட்டுகளும் பன்னாட்டு நிறுவனங்களும் கேந்திரமான ராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய்திடவும் கதவுகளைத் திறந்துவிட்டிருக்கிறது.
அமெரிக்காவின் ராணுவ மற்றும் போர்த்தந்திர நடவடிக்கைகளுக்கு இந்தியாவை அடிபணிய வைத்திருப்பது, நாட்டின் இறையாண்மைக்கும், சுதந்திரத்திற்கும் மாபெரும் அச்சுறுத்தலாகும். போலி தேசிய இந்துத்துவா சக்திகளுக்கு எதிரான போராட்டத்துடன் அமெரிக்காவிடம் இந்தியா சரணாகதி அடைந்துகொண்டிருப்பதற்கு எதிராகவும் போராடிட வேண்டும்.
செப்டம்பர் 1 அன்று ஏகாதிபத்தியத்திற்கு எதிரான தினமாகவும், நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான தினமாகவும் அனுசரிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தி யக்குழு அறைகூவல் விடுத்திருக்கிறது. இந்தப் பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் மிகவும் விரிவான அளவில் எடுத்துச் சென்றிட வேண்டும்.

===பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்====                                                                                              தமிழில்: .வீரமணி


Thursday, August 3, 2017

அயல்துறைக் கொள்கை - சீத்தாராம் யெச்சூரி விளக்கம்


அயல்துறைக் கொள்கையில் ஏற்பட்ட மாற்றமே
உள்நாட்டுக் கொள்கையிலும் மக்கள் மீதான தாக்குதல்கள்
மாநிலங்களவையில் சீத்தாராம் யெச்சூரி விளக்கம்
புதுதில்லி, ஆக. 4-
அயல்துறைக் கொள்கையில் அமெரிக்காவின் இளைய பங்காளியாக மாறியதன் விளைவுதான் உள்நாட்டுக் கொள்கையிலும் மக்கள்மீதான தாக்குதல்கள் அதிகரித்திருப்பதற்குக் காரணங்களாகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.
நாடாளுமன்ற மழைக்காலக்கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. வியாழன் அன்று மாலை இந்தியாவின் அயல்துறைக் கொள்கையும், போர்த்தந்திர பங்காளிகளை ஏற்படுத்திக்கொண்டுள்ளமையும் என்பது குறித்து குறுகிய கால விவாதம் நடைபெற்றது. இதில் பங்கேற்று சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது:
“மாண்புமிகு துணைத் தலைவர் அவர்களே, இவ்விவாதத்தில் பேச வாய்ப்பளித்தமைக்க முதற்கண் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இது மிகவும் முக்கியமான பிரச்சனையாகும். நம் நாட்டின் எதிர்காலத்திற்கும் மிகவும் உயிர்நாடியானதாகும்.
மிகவும் மோசமான காலகட்டத்தில் நாட்டின் அயல்துறைக் கொள்கையைக் குறித்து நாம் விவாதித்துக் கொண்டிருக்கிறோம். அயல்துறைக் கொள்கை என்பது, உள்நாட்டுக் கொள்கையின் ஒரு விரிவாக்கம்தான் என்பதை நாம்  அனைவரும் நன்கு அறிவோம்.
இந்தியாவின் நலன்களைப் பாதுகாப்பதற்கு, நம் அயல்துறைக் கொள்கை என்னவாக இருக்க வேண்டும்? வரலாற்றுரீதியாக நம் நாட்டின் அயல்துறைக் கொள்கை என்பது, நம்முடைய நாட்டின் நலன்களைப் பாதுகாக்கக்கூடிய விதத்தில், ஒரு சுயேச்சையான அயல்துறைக் கொள்கையாக இருந்து வந்தது. அதற்குத்தான் உச்சபட்ச முன்னுரிமை அளித்து வந்தோம். எனவே நாம் அந்த சமயத்தில், வரலாற்று ரீதியாக,  உலகில் உள்ள வளர்முக நாடுகள் அனைத்திற்கும்,  அணிசேரா இயக்கத்தின் தலைவனாக இருந்து வந்தோம்.  அப்போது நம் சுயேச்சையானக் குரல், அனைத்து  நாடுகளிடையேயும்  மதிப்புடனும் மரியாதையுடனும் கேட்டுக்கொள்ளப்பட்டது. அதேபோன்று உலக அளவில் பல்வேறு பிரச்சனைகளின்மீது நாம் முன்வைத்த கருத்துக்களும் உலக அளவில் கொள்கைகளை  நிர்ணயிப்பதில் செல்வாக்கு செலுத்தியது. நம் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி  அணு ஆயுதக் குறைப்பு  தொடர்பாக முன்வைத்த முன்மொழிவுகள் இன்னமும் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் முன் நிலுவையில் இருந்து வருகிறது.  அனைத்து அணு ஆயுதங்களையும் முற்றிலுமாக ஒழித்துக் கட்டுவதன்மீது, இந்தியா தலைமைதாங்கி வழிகாட்டிக் கொண்டிருந்தது.
ஆனால்,  இன்றையதினம் நடந்துகொண்டிருப்பவற்றைப் பார்த்தோ மானால், நம் நாட்டின் ஒட்டுமொத்த அயல்துறைக் கொள்கையின்மீதும் மிகவும் மோசமானமுறையில் முறிவினை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்றே கருதுகிறேன். ஆம், அதன் பின்னர், உலக நிலைமைகளில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. பனிப் போர் முடிந்துவிட்டது. இப்போது, சர்வதேச அரங்கில் நீங்கள் வித்தியாசமான நாடுகளுடனும், சக்திகளுடனும்  உறவினை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்.  இந்தியாவை ஆட்சி செய்த அரசாங்கங்கள்  தங்கள் அயல்துறைக் கொள்கைகளில் பல்வேறு பெயர்வுகளைச் செய்திருக்கின்றன. இவ்வாறான பெயர்வுகளால், ஓர் அடிப்படைக்  கேள்வி எழுகிறது. அதாவது, இவற்றில் நம் நலன் எந்த அளவிற்குச் சார்ந்திருக்கிறது? இவ்வாறான மாற்றங்களால், நாம் நம் சுயேச்சையான அயல்துறைக் கொள்கையை இப்போதும் பின்பற்றுகிறோம் என்று சொல்ல முடியுமா? அல்லது உலகில் உள்ள சில வல்லரசுகளைச் சார்ந்திருக்கிறோமா? 
ஒட்டுமொத்த உலகிலும் நிலைமைகள் மாறிக் கொண்டிருக்கின்றன.   இப்போதும் அது தொடர்ந்து கொண்டிருக்கிறது.  உலகை, பனிப்போர் முடிவடைந்துள்ள நிலையில், அமெரிக்கா தன்  ஒரு துருவக் கோட்பாட்டின் (unipolarity) கீழ் கொண்டுவர வேண்டும் என்பதற்கும், உலகில் உள்ள பல்வேறு நாடுகள் அதனை பல்துருவக் கோட்பாடாகவே நீட்டித்திட வேண்டும் என்று விரும்புவதற்கும் இடையிலான போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இந்தப் போராட்டத்தில் இந்தியா பல்துருவக் கோட்பாட்டிற்காகப் போராடும் நாடுகளுடன்தான் கை கோர்த்திட வேண்டும்.  ஆனால், இந்த அரசாங்கத்திற்கு எதிராக என்னுடைய குற்றச்சாட்டு என்னவெனில், நாம் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள ஒருதுருவக் கோட்பாட்டை நோக்கியே நம் அனைத்து அம்சங்களையும் நகர்த்திக் கொண்டிருக்கிறோம் என்பதாகும். இது எந்தவிதத்திலும் இந்தியாவின் நலன்களுக்கானது அல்ல என்பதே என் கருத்தாகும்.  எனவேதான், இந்தியாவின் பாதுகாப்பு, இந்தியாவின் சர்வதேச எல்லைகள் தொடர்பான பாதுகாப்பு, இந்தியாவின் இறையாண்மை ஆகியவை நமக்கு மிகவும் முக்கியமானவை. இவற்றைப் பாதுகாப்பதில் நமக்கு எவ்விதமான  மாற்றுக்கருத்தும் இருந்திட முடியாது.
நம் நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை மீறுவதற்கு எவர் முயன்றாலும், அதனைத் தடுத்து நிறுத்தி நம்மைப் பாதுகாக்கக்கூடிய விதத்தில், இந்தியா இருந்திட வேண்டும். இதில் எவ்வித சமரசத்திற்கும் இடம் கொடுக்க முடியாது. இதில் நாம்  அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்பதே இதன் பொருளாகும். ஆனால், இதனைக் கூறும் அதே சமயத்தில், இந்திய அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது? உலக அளவில் அமெரிக்காவினால் தலைமை தாங்கப்படும் ஒருதுருவக் கோட்பாட்டிற்கும், பல்வேறு நாடுகளால் விரும்பப்படும் பல்துருவக் கோட்பாட்டிற்கும் இடையே போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய இன்றைய சூழ்நிலையில், இந்தியா அமெரிக்காவினால் தலைமை தாங்கப்படக்கூடிய ஒருதுருவக் கோட்பாட்டுடன் தன்னைப் பிணைத்துக்கொண்டிருக்கிறது.  
இவ்வாறு இதற்கு முன்பிருந்த அரசாங்கங்களும் செயல்பட்டதை நாம் பார்த்தோம்தான். அப்போதும் நாங்கள் இதனை முழுமையாக ஒத்துக் கொள்ளவில்லை. ஐமுகூ அரசாங்கம் இருந்த சமயத்திலும் இந்தியா, அமெரிக்காவுடன் ஒரு போர்த்தந்திரக் கூட்டணியை (a strategic partnership) நோக்கி நகர்ந்தது.  இந்திய – அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் செய்துகொள்ள முடிவு செய்தது. அதன் காரணமாக நாங்கள்  அதற்கு அளித்துவந்த ஆதரவினை விலக்கிக் கொள்ள வேண்டியிருந்தது.  ஏனெனில் நாங்கள் ஐமுகூ அரசாங்கத்தை ஆதரிப்பதற்காக உருவாக்கப்பட்டிருந்த குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தின் ஓர் அங்கமாக அந்த ஒப்பந்தம்  அமைந்திடவில்லை.  எனவேதான் நாங்கள் அதற்கு அளித்துவந்த ஆதரவினைத் திரும்பப் பெற்றுக் கொண்டோம்.   
ஆனால், இன்றைய தினம், அந்த ஒப்பந்தத்தின் கதி என்ன? அந்த ஒப்பந்தத்தால்  இந்தியா என்ன சாதித்திருக்கிறது? இவ்வாறு எதுவும் இந்தியாவிற்கு அமெரிக்காவால் கிடைக்காத நிலையில் இப்போதும்  அதன்மீது எப்படி முழு நம்பிக்கை வைத்துக்கொண்டிருக்கிறீர்கள்?  அந்த அணுசக்தி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, இந்தியாவிற்குக் கூடுதலாக ஒரு  மெகாவாட் அளவாவது அணுசக்தி மூலமாக மின்சாரத்தை நாம் பெற்றோம் என்று சொல்ல முடியுமா?  அமெரிக்காவிடமிருந்தாவது  அல்லது ‘உயர்ந்தோர்’ குழாம் என்று கூறப்படும், ‘அணுசக்தி கிளப்’பிடமிருந்தாவது,  அணுசக்தி தொழில்நுட்ப மாற்றம்  நமக்கு நடைபெற்றிருக்கிறதா?  ‘அணு விநியோகஸ்தர்கள் குழுமத்தில்’ (Nuclear Suppliers’ Group) நுழைவதற்காவது அனுமதிக்கப்பட்டிருக்கிறீர்களா? இன்றைய தினம் நம் விஞ்ஞானிகள், இவ்வாறு ராக்கெட்டுகளையும், செயற்கைக்கோள்களையும் விண்ணில் அனுப்பமுடிகிறதென்றால், அதற்கு அவர்களின் சொந்தத் திறமைதான் காரணமாகும். எந்த அயல்நாட்டின் ஒத்துழைப்பாலும் அவர்கள் இந்தத் திறனை வளர்த்துக்கொள்ளவில்லை.
எனவே, இவ்வாறு நம் திறமைகளை வளர்த்துக்கொள்வதற்குப் பதிலாக, ஒருதுருவக் கோட்பாட்டிற்கும், பல்துருவக் கோட்பாட்டிற்கும் இடையே நடைபெறும் போராட்டத்தில் நாம் ஒருதுருவக்கோட்பாட்டினைச் சார்ந்திருக்கிறோம்.
ஐமுகூ அரசாங்கம் சர்வதேச அளவில் மேற்கொண்ட பல நடவடிக்கைகளுக்காக  நாங்கள் பாராட்டப்பட்டிருக்கிறோம்.  இந்தியா, பிரேசில் மற்றும் தென் ஆப்ரிக்க நாடுகளின் கூட்டணி என்கிற ‘இப்சா(IBSA)’ அமைக்கப்படுவதற்கு நாங்கள் கேந்திரமான பங்களிப்பினைச் செய்திருக்கிறோம். அதேபோன்று ‘பிரிக்ஸ்’ (‘BRICS’) எனப்படும் இந்தியா, பிரேசில், தென் ஆப்ரிக்கா, சீனா மற்றும் ருஷ்யா ஆகிய நாடுகள் கூட்டணிக்கு நாம் மிக முக்கிய பங்களிப்பினை ஆற்றியிருக்கிறோம்.  இவ்வாறு  பல்துருவக் கோட்பாடு என்பது இயற்கையானதாகும்.  உலகம்  அதனை நோக்கிதான் நகர வேண்டும்.
ஆனால், இப்போது, கடந்த மூன்றாண்டுகளில்  இந்தியா எந்த அளவிற்குத் தன்னைச் சுருக்கிக் கொண்டிருக்கிறது? இவ்வாறு நான் கூறுவதற்கு என்னை மன்னிக்க வேண்டும். இப்போது இந்தியா, உலக அளவில் அமெரிக்காவின் இளைய பங்காளியாக  மாறியிருக்கிறது என்றே நான் பார்க்கிறேன். அமெரிக்காவுடன் நாம் செய்துகொண்டுள்ள ஒப்பந்தங்களின் அடிப்படையிலேயே இவ்வாறு நான் கூறுகிறேன்.  ஐந்து தடவைகள் நம் பிரதமர் அங்கே சென்றிருக்கிறார். ஐந்தாவது தடவை அவர் சென்ற போது, என்ன நடந்தது? நான் அதற்குச் சற்றே பின்னால் வருகிறேன். நான்காவது தடவை அவர் சென்றபோது, ஓர் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. உண்மையில்  அது நம்மை மிகவும் சங்கடத்திற்குள்ளாக்கியுள்ளது. ‘லீமா’ (‘LEMA’) எனப்படும் கடல்வழி மற்றும் வான்வழி பரிவர்த்தனை புரிந்துணர்வு ஒப்பந்தம் (Logistics Exchange Memorandum of Agreement) என்பது குறித்து நமக்கு எதுவுமே தெரியாது.  இந்த ஒப்பந்தத்தில் உள்ள நிபந்தனைகள் என்ன என்று நமக்கு எதுவுமே தெரியாது. இந்த ஒப்பந்தம் நம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் முன் வைக்கப்படவில்லை.  இங்கே இந்த ஒப்பந்தம் குறித்து எதுவும் விவாதிக்கப்படவில்லை. ஆனால் அமெரிக்காவில் உள்ள செனட் சபையில் 2017ஆம்  ஆண்டு தேசியப் பாதுகாப்பு அதிகாரத்துவ சட்டம் (2017 National Defence Authorization Act) என்பதன் ஓர் அங்கமாக அமெரிக்க செனட் சபையின் ஏற்பளிப்பு இதற்குத் தேவைப்பட்டிருக்கிறது.  அங்கே அது விவாதிக்கப்பட்டிருக்கிறது. அந்த ஒப்பந்தத்தில் என்ன அடங்கியிருக்கிறது என்பதை அவர்களின் இணையதளத்திலிருந்துதான் நம்மால் தெரிந்துகொள்ள முடிந்தது. இந்த ஒப்பந்தம் குறித்து அவர்கள் என்ன கூறுகிறார்கள்? அவர்கள், இதன் மூலமாக இந்தியா, நம்முடைய மிகப்பெரிய ராணுவக் கூட்டாளியாக, மிகவும் நெருக்கமான ராணுவக் கூட்டாளியாக,  மாறியிருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்கள். இதன் பொருள் என்ன?
அவர்களுடைய இணையதளத்தில் இதுதொடர்பாக உள்ள அறிக்கையில், 12(9)(2)ஆவது பிரிவில் ‘ஈ’ (‘E’) பத்தியில், “ராணுவப் பொருட்களின் பாதுகாப்பை சரிபடுத்திக்கொள்வதற்கான ஏற்பாடுகள், சைபர் பாதுகாப்பு மற்றும் பல்வேறு ஒப்பந்தங்கள் தொடர்பாக ராணுவ சேவைகளின் தொழில்நுட்பங்களைத் தெரிந்து கொள்ளுதல் ஆகியவற்றுடன் இந்தியாவை அமெரிக்க ஆயுதங்களைக் கொள்முதல் செய்வதற்கு ஏற்ப ஒழுங்குபடுத்தியிருத்தல்,” என்று கூறப்பட்டிருக்கிறது.  எந்த அளவிற்கு நம் நாட்டின் இறையாண்மை சரண்செய்யப்பட்டிருக்கிறது என்று பாருங்கள். இந்த ஒப்பந்தத்தில் மேலும் என்னவெல்லாம் கூறப்பட்டிருக்கிறது, தெரியுமா? நாம் இங்கே, நாட்டின் இறையாண்டை, பாதுகாப்பு ஆகியவை எவருடனும் சமரசம் செய்துகொள்வதற்கில்லை என்று பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால்  இந்த ஒப்பந்தத்தில் என்ன கூறப்பட்டிருக்கிறது, தெரியுமா? அதில் என்ன எழுதியிருக்கிறது என்று  நான் படிக்கிறேன்.  “தெற்காசியா மற்றும் பெரிய அளவில் இந்திய – ஆசிய பசிபிக் பிராந்தியத்தில், அமெரிக்காவின் நலன்களை முன்னெடுத்துச் செல்லக்கூடிய விதத்தில், ‘முன்னெடுத்து’ என்கிற சொல்லைத் தயவுசெய்து அடிக்கோடிட்டுக்கொள்ளுங்கள், இந்தியாவின் ராணுவம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு கிடைத்திடும்.”  ஆகவே, இப்போது நாம், அமெரிக்காவின் இளைய பங்காளி என்ற முறையில், நம்முடைய அண்டை நாடுகளில் அமெரிக்கா எடுத்திடும் அத்துணை போர்த் தந்திர நடவடிக்கைகளுக்கும் அதன் சொல்படி கேட்டு நடந்திடும் ஏவலாளாக மாறியிருக்கிறோம்.  இவ்வாறு நம் சுயேச்சையான அயல்துறைக் கொள்கையை சவப்பெட்டிக்குள் அடைத்துவைத்து கடைசி ஆணியும் அடிக்கப்பட்டுவிட்டது. இந்த அரசாங்கம் இவ்வாறு மேற்கொண்டு பல்வேறு நடவடிக்கைகளையும் பார்த்தபின்னர்  கனத்த இதயத்துடன் இதை நான் கூறுகிறேன். 
இவ்வாறு அமெரிக்காவின் கட்டளைக்கிணங்க பல்வேறு துறைகளை நாம் மாற்றி அமைத்துக்கொண்டிருப்பதன் காரணமாக பலதுறைகளிலும் அவற்றின் பாதிப்புகளை இப்போது நம்மால் பார்க்க முடிகிறது. 
நமது பிரதமர் 65 தடவைகள் உலகத்தைச் சுற்றி வந்திருக்கிறார். ஆனால் ஒருதடவையாவது, தன் சுற்றுப்பயணத்தின் விவரம் குறித்து இந்த அவைக்கு அவர் தெரிவித்திருக்கிறாரா?  நம்  அயல்துறை அமைச்சர், மாண்புமிகு சுஷ்மா ஸ்வராஜ், தான் அயல்நாடுகளுக்கு சென்றுவந்தபின் அதன் விவரங்களை கலந்தாலோசனைக் குழுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து என்ன நடந்தது என்று கூறிவிடுவார். அதற்காக அவரை நான் பாராட்டுகிறேன். ஆனாலும், அவரும் இந்த அவையில் அவற்றைத் தெரிவித்ததில்லை.
 சுஷ்மா ஸ்வராஜ் (அயல்துறை அமைச்சர்): நான்  அதனை முறையாகச் செய்துகொண்டிருக்கிறேன்.
சீத்தாராம் யெச்சூரி: இவ்வாறு இந்தியா, அமெரிக்காவின் இளைய பங்காளியாக மாறியபின், அது நம் பொருளாதாரக் கொள்கைகளிலும் பிரதிபலிக்கத் தொடங்கிவிட்டன. அனைத்துத் துறைகளில் அந்நிய முதலீடுகள் 100 சதவீதம் அளவிற்கு அனுமதித்திருக்கிறோம். இப்போது ரயில்வேயையும் தனியாருக்குத் தாரை வார்க்கத்தொடங்கிவிட்டீர்கள். ஏர் இந்தியா நிறுவனம் தனியாருக்குத் தாரை வார்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ராணுவத் தளவாடங்கள் கொள்முதலில் தனியார் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவற்றின் இறுதி விளைவு என்னவாகும்?  
மோடி பிரதமரானபின் கடந்த மூன்றாண்டுகளில் இந்த அரசாங்கம் சுமார் 1.1 கோடி ரூபாய் அளவிற்கு ராணுவத்துறையில் அந்நிய நேரடி முதலீடு வந்திருக்கிறது.  இப்போது பிரதமர் மோடி அமெரிக்காவிற்கு ஐந்தாவது தடவையாக சென்றுவந்தபின், மே மாதம் வரை எவ்விதமான அந்நிய முதலீடும் வரவில்லை.  இந்த நாட்டில் 2016-17இல் அந்நிய முதலீடு 1,000 டாலர்களாக இருந்தது. இது 2014-15இல் 78 ஆயிரம் டாலர்களாக இருந்தது. இவை யனைத்துக்குப் பின்னரும், இந்த ஒப்பந்தத்தின்மூலமாக நீங்கள் என்ன சாதித்திருக்கிறீர்கள்?  நம் நாட்டின் ராணுவ உற்பத்தில் 49 சதவீத அளவிற்கு அந்நிய முதலீட்டுக்கு வழிதிறந்துவிட்டிருக்கிறீர்கள். இது நம்முடைய நலனுக்காக என்று சொல்ல முடியுமா?  நம்முடைய ராணுவ வசதிகளை ஆய்வு செய்வதற்கு  அமெரிக்காவை மட்டுமல்ல, எந்த நாடு வேண்டுமானாலும் ஆய்வு செய்திடலாம் என்று செய்து வைத்திருக்கிறீர்களே. இது நம் நாட்டின் நலனுக்காகவா?   
இதுவரை நம் நாட்டின் ராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய்து வந்த டிஆர்டிஓ (DRDO-Defence Research and Development Organization) என்னும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி ஸ்தாபனம், இனி இஸ்ரேலுடன் நெருக்கமான முறையில் ஒத்துழைத்திடும். இது நம்முடைய நலனுக்காகவா? நான் கேட்க விரும்பும் கேள்வி இதுதான்.  பிரதமர் மோடி, ஐந்தாவது தடவையாக அமெரிக்கா சென்றுவந்தபின், இந்தியாவின் பாதுகாப்பிற்காக நாம் என்ன பெற்றிருக்கிறோம்.  நாம் எச்1 விசா தொடர்பாக எவ்வித உறுதிமொழியையும் அமெரிக்காவிடமிருந்து பெறவில்லை என்று பல உறுப்பினர்கள் இங்கே குறிப்பிட்டார்கள். அமெரிக்காவில் சிலிகான்  பள்ளத்தாக்கில் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட நம் நாட்டு இளைஞர்கள் பணிபுரிகிறார்கள். அவர்கள் தொடர்ந்து அங்கே பணியாற்றுவது இன்றைக்குக் கேள்விக்குறியாகி இருக்கிறது. ஆனால், இப்போதும் நீங்கள் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை நம்பிக்கொண்டிருக்கிறீர்கள்.
டிரம்ப் தன்னுடைய எழுபது நாட்கள் பதவியை நிறைவு செய்ததைத்தொடர்ந்து லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் ஏட்டில் வெளியாகியுள்ள செய்தியைப் படிக்கிறேன், கேளுங்கள். அந்த ஏட்டின் தலையங்கம் என்ன எழுதியிருக்கிறது என்று படிக்கிறேன். “ஜனாதிபதி டிரம்ப் ஆட்சிக்கு வந்தபின்னர் ஏதாவது செய்வார் என்று மற்ற பல அமெரிக்கர்களைப்போலவே நாமும் எதிர்பார்த்தோம். ஆனால் இந்த எழுபது நாட்களில் எதுவுமே நடக்கவில்லை. இனிவரக்கூடிய 1400 நாட்களும் அப்படித்தான் இருக்கப்போகிறதோ என்றே தோன்றுகிறது,” இவர்கள்தான் அமெரிக்கர்கள். ஆயினும் அமெரிக்க ஜனாதிபதி நம் அபிலாசைகளைத் தீர்த்துவைப்பார் என்று நம்புகிறோம். இந்தப் பின்னணியில்தான் என்னை மிகவும் சங்கடத்திற்குள்ளாக்கிய விஷயம் என்னவெனில், இந்தியா அமெரிக்காவின் இளைய பங்காளியாக மாறியது மட்டுமல்ல, அதனை பிரதமர் மோடி, இஸ்ரேலுக்குப் பயணம் செய்ததன் மூலம் மிகவும் உறுதிப்படுத்தியிருப்பதுமாகும். இப்போது இஸ்ரேல் சென்றபோது ஏழு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருக்கிறார். அவை என்னவென்று நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். 
பாலஸ்தீனத்திற்கு செல்லாதது மட்டுமல்ல பாலஸ்தீனத்தை இழிவுபடுத்தக்கூடிய விதத்தில் பிரதமர் மோடி பேசியிருப்பதாகவும் ஊடகங்களில் செய்திகள் கசிந்திருக்கின்றன. இவ்வாறு இவர் பேசியிருப்பதன்மூலமாக நம் சுயேச்சையான அயல்துறைக் கொள்கை சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டு கடைசி ஆணியும்  அடிக்கப்பட்டுவிட்டது.
பாலஸ்தீனத்திற்கும் நமக்கும் இருந்த ஒருமைப்பாடு என்பது  நாம் சுதந்திரம் வாங்குவதற்கு முன்பே தொடங்கிவிட்டது. சுதந்திரப் போராட்டக் காலத்தில் மகாத்மா காந்தி என்ன கூறினார்? “எப்படி ஆங்கிலேயர்களுக்கு இங்கிலாந்து இருக்கிறதோ, எப்படி பிரெஞ்சுக்காரர்களுக்கு பிரான்ஸ் இருக்கிறதோ அப்படி பாலஸ்தீனர்களுக்கு பாலஸ்தீனம்” என்று கூறினார்.  பாலஸ்தீனத்தின் நிலப்பகுதிகள் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மேலும், இந்தியா தற்போது அதிக அளவில் ராணுவ தளவாடங்களை இஸ்ரேலிடமிருந்துதான் இறக்குமதி செய்கிறது.  இவ்வாறு இந்தியா இன்றைய தினம் உலக விவகாரங்களில் தன்னுடைய அணுகுமுறையை முழுமையாக மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறது.
இதனால் என்ன ஆதாயம் இந்தியாவிற்கு ஏற்பட்டிருக்கிறது? நம்முடைய பொருளாதாரக் கொள்கைகளில் அந்நிய மூலதனத்திற்கு வழிதிறந்து விட்டிருக்கிறீர்கள், ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற உங்கள் அறிவிப்பு, ஜிஎஸ்டியை நீங்கள் கொண்டுவந்திருக்கும் முறை இவை அனைத்துமே  பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கு வசதி செய்து தந்திருக்கிறது.
ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததைத்தொடர்ந்து டிஜிடல் முறையில் பணப் பரிவர்த்தனைக்கு மாறுங்கள் என்றீர்கள். இதனால் லாபம்  அடையக்கூடிய உலக அளவிலான டிஜிடல் கம்பெனிகள் எவை? ஜிஎஸ்டியைத் தொடர்ந்து, ஒவ்வொரு டிஜிடல் பரிவர்த்தனைக்கும் 18 சதவீதம் பரிவர்த்தனைக் கட்டணமாக வழங்கிட வேண்டும். ஒரு 100 ரூபாய் நோட்டு, ஒரு லட்சம் தடவைகள்  கைமாறினால், ரொக்க மதிப்பில் அதற்கு எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடாது.  தொடர்ந்து அது 100 ரூபாயாகவே இருந்திடும். ஆனால் அதுவே டிஜிடல் பரிவர்த்தனை மூலமாக இலட்சம் தடவைகள் 18 சதவீத பரிவர்த்தனைக் கட்டணத்துடன்  மாற்றப்பட்டால், பின்னர் 18 லட்சம் ரூபாய் லாபம் அந்த டிஜிடல் கம்பெனிக்குச் சென்றடைந்திடும். ஆனால் ரூபாய் நோட்டின் மதிப்பு மட்டும் 100 ஆகவே தொடரும். நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்?
அந்நிய மூலதனத்தைக் குஷிப்படுத்துவதற்காக நீங்கள் உங்கள் சொந்த நாட்டு மக்கள்மீது சுமைகளை ஏற்றிக்கொண்டிருக்கிறீர்கள். மாறாக நம் நாட்டிற்கு எதுவுமே வரப்போவதில்லை.
உலகப் பொருளாதார நெருக்கடி 2008இல் ஏற்பட்டபின்னர், மேற்கத்திய நாடுகள் எதற்காக ஏங்கின? அமெரிக்கா எதற்காக ஏங்கியது? அவை சந்தைகளுக்காக ஏங்கின. மலிவான  வள ஆதாரங்களுக்காக ஏங்கின. இப்போது அவற்றின் ஆதாயங்களுக்காக நீங்கள் இந்திய சந்தையைத் திறந்து விட்டிருக்கிறீர்கள். நம் மக்களைக் கசக்கிப்பிழிந்து  அவர்கள் நெருக்கடியைத் தீர்த்துக்கொள்ள வசதி செய்து தந்திருக்கிறீர்கள்.
இவ்வாறு நம் அயல்துறைக் கொள்கை நம்மை எங்கே இழுத்துச் சென்றுகொண்டிருக்கிறது? அயல்துறைக் கொள்கையின் மிக முக்கியமான கூறு, நம் உறவுகள் அண்டை நாடுகளுடன் எப்படி இருக்கிறது என்பதாகும்.   அண்டை நாடுகளுடன் நம் உறவு இப்போது எப்படி  இருக்கிறது?
நேபாளம்
நேபாளத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.  இந்தியர்களும், நேபாளியர்களும் அண்ணன் – தம்பி போல அல்ல, மாறாக இரட்டையர் போல வாழ்ந்து வந்தோம். ஒருவரின் வலி மற்றவருக்குத் தெரியும். ஒருவரின் சந்தோஷம், மற்றவரின் சந்தோஷமாக இருந்து வந்தது. இன்றையதினம் அந்த நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? நேபாள நாடாளுமன்றம் தங்கள் நேபாள அரசமைப்புச் சட்டத்தை நிறைவேற்றி 22 மாதங்களாகின்றன.  அவர்கள், அவர்களுடைய அரசமைப்புச் சட்டத்தை நிறைவேற்றுகிறார்கள்.  அதில் நமக்கு ஒத்துப்போகாத அம்சங்கள் இருக்கலாம். நாம் அதனை ராஜீயரீதியாக எடுத்தக்கொண்டிருக்க வேண்டும். ஆனால்  நேபாளத்தில் உள்ள பொதுக் கருத்து என்னவென்றால், இந்தியா தங்கள் விவகாரங்களில் தலையிடுகிறது என்பதாகும்.  ஏன் இவ்வாறான நிலை எழுந்துள்ளது? ஏனென்றால், நேபாளத்தில் மன்னராட்சி முறை மீண்டும் வரவேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. ஏனெனில், உலகில் இருந்த ஒரேயொரு இந்து ராஷ்ட்ரமாக அது இருந்து வந்தது. இவ்வாறு அங்கே இந்திய எதிர்ப்பு உணர்வு வளர்ந்தால், அது நம் நாட்டின் நலனுக்கு உகந்ததா?
வங்க தேசத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? அந்நாட்டின் பிரதமர் வருகிறார். அங்கே விரைவில் பொதுத் தேர்தல் நடக்க இருக்கிறது.  அந்த நாட்டுடன் சில ஒப்பந்தங்களைப் போட்டிருந்தோம். அவை இன்னமும் நிறைவேறவில்லை. இதனால் அங்கே நம் நாட்டிற்கு எதிராக அதிருப்தி மனப்பான்மை வளர்ந்து வருகிறது. இது இந்தியாவின் நலனுக்கு உகந்தது அல்ல.
பாகிஸ்தானின் நிலைமை என்ன?  இப்போது திடீரென்று அறிவிப்பு வந்திருக்கிறது, எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. அதுகுறித்து அயல்துறை அமைச்சர் விளக்குவார் என நம்புகிறேன். இருநாட்டின் தேசியப் பாதுகாப்பு ஏஜன்சிகளும் பேச்சுவார்த்தைகள் நடத்திக்கொண்டிருக்கின்றன என்பதாகும். இது உண்மையானால், பாகிஸ்தான் மண்ணிலிருந்து பயங்கரவாதநடவடிக்கைகள் நிறுத்தப்படாதவரை பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்று சொல்லிவந்தது என்னவாயிற்று? இப்போது  பேச்சுவார்த்தைகள் நடக்கிறதா?  இல்லையா? பதான்கோட்டில் ஐஎஸ்ஐ-ஐ அனுமதித்தீர்கள். நாம் என்ன திரும்பப் பெற்றோம்? சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தினீர்கள்.  வந்துள்ள செய்திகளின்படி இறந்த நம் வீரர்கள் எண்ணிக்கை இரண்டு மடங்கானது. என்ன கொள்கையை நீங்கள் பின்பற்றிக் கொண்டிருக்கிறீர்கள்?
இப்போது சீனத்துடன்  மோதல் போக்கு.  ராஜீய பேச்சுவார்த்தைகளின் மூலம் இரு நாட்டுப் பிரச்சனைகளையும் பேசித்தீர்த்துக்கொள்ள வேண்டும் என்கிற அரசின் கொள்கைமுடிவோடு நாங்கள் நூறு சதவீதம் உடன்படுகிறோம். இது சீனாவுடன் மட்டுமல்ல. இக்கொள்கைமுடிவை ஆழமாகப் பரிசீலனை செய்திடுங்கள்.
இந்த ஆண்டு நீங்கள் மலபார் பயிற்சியை நடத்தி இருக்கிறீர்கள். மலபார், அரபிக்கடலில் இருக்கிறது. ஆனால் பயிற்சியை வங்காள விரிகுடாவில் நடத்தி இருக்கிறீர்கள். இதன் பொருள் என்ன? யாருடன் செய்திருக்கிறீர்கள்? அமெரிக்காவுடனும், ஜப்பானுடனும். கூட்டு ராணுவ பயிற்சியை  அமெரிக்கா, ஜப்பான், இந்தியா சேர்ந்து செய்திருக்கிறது. இதன் மூலம் தென்கிழக்கு ஆசியா, மற்றும் தெற்காசியாவில் உள்ள நாடுகளுக்குக் குறிப்பாய் நீங்கள் சொல்ல விரும்புவது என்ன? இரு நாடுகள் தங்களுக்கு எதிராக ஒரு பொது எதிரி இருக்கிறார் என்று கருதினால் அவருக்கு எதிராக இத்தகைய கூட்டு ராணுவ பயிற்சிகளை நடத்திடும். அமெரிக்கா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையே, வங்காள விரிகுடாவில்,  பொது எதிரி யார்? இதனை இதனைச் சுற்றியுள்ள நாடுகள் புரிந்து கொள்ளாது என்று நீங்கள் நினைக்காதீர்கள்.
தயவுசெய்து நம்  அண்டை நாடுகளுடன் சுமுகமான உறவுகளை வைத்துக்கொள்ளப் பாருங்கள். அண்டை நாடுகளுடன் நல்லுறவு நீடிப்பது அயல்துறைக் கொள்கையின் அடித்தளமாக அமைந்திட வேண்டும். நம்  அண்டை நாடுகளுடன் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதையும், உலக அளவில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதையும் மறுபரிசீலனை செய்திடுங்கள். அமெரிக்க – இஸ்ரேல் – இந்தியா கூட்டணி நம் நாட்டின் நலனுக்கானது அல்ல. இது நாம் இப்போது பெற்றிருக்கும் நம் கூட்டணி நாடுகளின் நலன்களுக்கும் ஏற்புடையது அல்ல. இவற்றை இந்த அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்.”
இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி பேசினார்.
(தமிழில்: ச.வீரமணி)