Saturday, September 10, 2016

ஹரியானா மாநிலத்தில் பசு பாதுகாப்புக் குழுவினரின் கொடூரம் வன்புணர்வு மற்றும் கொலைக் குற்றங்களைச் செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்திடுக

ஹரியானா மாநிலத்தில் பசு பாதுகாப்புக் குழுவினரின் கொடூரம்
வன்புணர்வு மற்றும் கொலைக் குற்றங்களைச் செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்திடுக

ராஜ்நாத் சிங்கிற்கு சீத்தாராம் யெச்சூரி கடிதம்
புதுதில்லி, செப். 10-ஹரியானா மாநிலத்தில் மேவாட் மாவட்டத்தில் ஏழை குடும்பத்தைச்சேர்ந்த மதச்சிறுபான்மையினர் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதற்கு எதிராக உடனடியாகத் தலையிடுமாறு மத்திய உள்துறை அமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சீத்தாராம் யெச்சூரி கடிதம் எழுதியுள்ளார்.
கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:2016 ஆகஸ்ட் 24-25 இரவு ஹரியானா மாநிலம், மேவாட் மாவட்டத்தில் தாவோரு உட்கோட்டத்தில் திங்கர்ஹரி கிராமத்தில் ஜஹருதீன் என்பவர் குடும்பத்தினர் மீது கயவர்கள் சிலர் காட்டுமிராண்டித்தனமான முறையில் வன்புணர்வு மற்றும் கொலை செய்துள்ள குற்றங்கள் தொடர்பாக மிகவும் மனவேதனையுடனும், கோபத்துடனும் தங்களுக்கு இக்கடிதத்தை எழுதுகிறேன்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் சுரேந்தர் சிங் மற்றும் இந்தர்ஜித் சிங் ஆகியோர் ஆகஸ்ட் 30 அன்று சம்பவ இடத்திற்குச் சென்று நேரடியாக விசாரணை செய்ததன் அடிப்படையில் இதனை எழுதுகிறேன். இந்த சம்பவம் தொடர்பாக செப்டம்பர் 1அன்று தாவோருவில் நடைபெற்ற பஞ்சாயத்திலும் இந்தர்ஜித் பங்கேற்றிருந்தார். பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், எங்கள் கட்சித் தலைவர்கள். பஞ்சாயத்தில் பலர் கூறிய விவரங்கள் மற்றும் ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளின் அடிப்படையில் இக்கடிதத்தைத் தங்களுக்கு எழுதுகிறேன்.
தாக்குதலால் இருவர் சாவு
திங்கர்ஹரி கிராமத்தில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் சிறு அளவு நிலத்தில் பயிர்செய்து ஜஹருதீன் குடும்பத்தினர் வாழ்ந்து வந்தனர். இதர பண்ணை விவசாயிகளைப்போலவே இவர்களும் பண்ணை நிலத்தில் குடிசை வேய்ந்து வாழ்ந்து வந்தார்கள்.
2016 ஆகஸ்ட் 25 இரவு குடிபோதையிலிருந்த சமூக விரோதிகள் சிலர் பண்ணைவீடுகள் மீது தாக்குதல் தொடுத்திருக்கிறார்கள். இவர்களில் நால்வரை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.
இரண்டு இளம் பெண்களை பாலியல்ரீதியாகக் குறிவைத்தே இவர்கள் அங்கேவந்திருக்கிறார்கள். ஆயினும் இவர்கள்வருவதை அறிந்து வயதான தம்பதிகளான இப்ராகிம் (38), ரஷீதான் எழுந்துவிட்டார்கள். சமூக விரோதிகளை இவர்கள் தட்டிக்கேட்க, அவர்கள் இவர்களைக் கடுமையாகத் தாக்கியதில் அவர்கள் இறந்துவிட்டார்கள். வீட்டிலிருந்த ஜஹருதீன், அவர் மனைவி ஆயிஷா மற்றும் குழந்தைகள் பர்வேஸ் (11) , நவீத் (8) ஆகியோருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
பின்னர் இவர்கள் குறிவைத்து வந்த இரு சிறுமிகளும் தேடிக் கண்டுபிடிக்கப்பட்டு, வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். ஆறு மாத கைக்குழந்தைக்குத் தாயான மூத்த பெண் எப்படியோ தப்பி ஓடி ஒளிந்துவிட்டார். அவர் வந்து சரணடையாவிட்டால் அவரது 6 மாத குழந்தையை கண்ட துண்டமாக வெட்டிவிடுவோம் என்று அந்தக் கிரிமினல்கள் மிரட்டியுள்ளனர். இதனால் பயந்துபோய் ஒளிந்திருந்த அவர் இவர்களுக்கு முன்னால் வந்துள்ளார். பின்னர் இரு பெண்களையும் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக, கயவர்கள் கும்பல் வன்புணர்வுக்கு உள்ளாக்கியுள்ளனர். இரண்டாவது சிறுமி 13 வயதுக்கும் குறைந்தவராவார்.
தகவல் தெரிந்து உறவினர்களும் மற்றவர்களும் வந்து பார்த்தபோது, அவர்கள் கண்முன்னாலேயே இந்தக் கொடுமைகள் நடைபெறுவதைப் பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். காவல்துறையினரும் வந்துவிட்டனர். எனினும் குற்றச்செயல்களின் தன்மைக்கேற்ப சட்டரீதியான நடவடிக்கை எதையும் அவர்கள் தொடங்கிடவே இல்லை.
பின்னர் மாவட்ட மருத்துவமனைக்கு இவ்விரு இளம்பெண்களும் கொண்டு செல்லப்பட்டனர். இரு சடலங்களும் அங்கேதான் வைக்கப்பட்டிருந்தன. இவர்களுக்குக் குடிக்கத் தண்ணீர்கூட கொடுக்கப்படவில்லை. மாஜிஸ்திரேட் முன்பு வாக்குமூலம் வாங்குவதற்காக இந்த இரு பெண்களும் கொண்டுவரப்பட்டதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
வழக்கறிஞர் சங்கத்தின் மூத்த வழக்கறிஞர் தலையிட்டு நிர்ப்பந்தம் அளித்ததைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து இ.த.ச.302 (கொலை) பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இ.த.ச. 460 (கொலை செய்வதற்காக வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததற்காக) பிரிவின்கீழ் மட்டும்தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இவ்வாறு மிகவும் கொடூரமான முறையில் தாக்குதலுக்கு ஆளாகியுள்ள குடும்பத்தினர் மற்றும் அவர்களுடைய உறவினர்கள் மிகவும் அச்சத்துடன் நிலைகுலைந்துள்ளனர். காவல்துறையினர் குற்றமிழைத்த கிரிமினல்களுக்குப் பரிவு காட்டிவருவதைப் பார்த்து இங்கேயுள்ள மக்கள் அனைவருமே இன பேதங்களுக்கு அப்பாற்பட்டு ஆத்திரம் அடைந்துள்ளனர்.
பசு பாதுகாப்புக் குழுவை சேர்ந்தவர்கள்
இவ்வாறு காட்டுமிராண்டித்தனமான முறையில் நடந்துகொண்ட கிரிமினல்கள் நான்கு பேரும் உள்ளூரைச்சேர்ந்த பசு பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்று இப்போது தெரிய வந்திருக்கிறது. தாவோரு நகரத்தில் இச்சம்பவம்தொடர்பாக நியாய பஞ்சாயத்து நடைபெற்றிருக்கிறது, கடும் மழை பெய்தபோதும் அதனைப்பொருட்படுத்தாது அனைத்துத்தரப்பு மக்களும் அங்கே குழுமினார்கள். சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பஞ்சாயத்துப் பிரதிநிதிகள், வழக்கறிஞர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைவரும் திரண்டுவந்து தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினார்கள்.
நியாய பஞ்சாயத்தில் கட்டார் அரசாங்கம் இக்குற்றத்தைப் புரிந்தவர்களுக்கு எதிராக நியாயம் வழங்கிட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கிரிமினல்களுக்கு ஆதரவாக நடந்துவரும் காவல்துறையினரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது, இந்தப் பிரச்சனை ஒரு சட்டம் –ஒழுங்குபிரச்சனை, மாநில அரசின் அதிகாரத்திற்குஉட்பட்டது என்ற போதிலும்கூட, தாக்கப்பட்டிருப்பவர்கள் மதச்சிறுபான்மையினர் என்பதைக் கணக்கில் கொண்டு, இப்பிரச்சனையில் தாங்கள் உடனடியாகத் தலையிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்,
இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி அக்கடிதத்தில் கோரியுள்ளார்.
(ச.வீரமணி)


No comments: