Sunday, May 29, 2016

பகாசுரன் / முன்னுரை



1. இக்கதையின் நோக்கமும் இதன் உள்ளடக்கமும்

மனிதகுல வரலாற்றில், மக்கள் என்பவர்கள் எப்போதும் ஆட்சியாளர்களின் குடிகளாகவே இருந்து வந்திருக்கிறார்கள்.  அது அரசர்களாக இருந்தாலும் சரி,  அல்லது பதவியை சட்டவிரோதமாக அபகரித்துக் கொண்டவர்களாக இருந்தாலும் சரி, அல்லது மன்னர் பரம்பரையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி. இப்போது, சட்டப்படி எல்லோரும் இந்நாட்டு மக்கள்.  அதாவது, மக்கள் தங்களைத் தாங்களே ஆண்டு கொண்டிருக்கிறார்கள் என்றுதான் நம் அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது.  ஆயினும், மக்கள் தங்களை அறியாமலேயே தங்களை ஆள்வதற்கான வேலையை, அரசர்களிடம் இல்லையென்றாலும், அதனை சட்டவிரோதமாகப் பறித்துக் கொள்பவர்களிடத்திலும், அவர்களுக்குப்பின் அவர்களின் வாரிசுகளிடமும், கிரிமினல்களிடமும், நாட்டின் செல்வங்களைக் கொள்ளையடிப்போரிடமும் அளித்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு இவர்களிடம் அளிப்பதற்கு கைமாறாக தேர்தல் நடைபெறும் சமயங்களில் இவர்களிடமிருந்து ஏதோ கொஞ்சம் எலும்புத் துண்டை வாங்கிக் கொள்கிறார்கள்.
நாடு 1947இல் சுதந்திரம் அடைந்த பின்னர் அநேகமாக ஒவ்வொரு ஆட்சியிலும் இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. உயர்ந்த சிந்தனைகளுடனும், நன்னெறியுடையவர்களாகவும், தியாகசீலர்களாகவும் ஆட்சியாளர்கள் இருந்தார்கள் என்பதெல்லாம் பழங்கதையாகி விட்டது. நாடு, ஓர் இருண்ட காலத்தை நோக்கி மிக வேகமாக வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. மாண்புமிக்க மனிதர்கள் மறைந்து கொண்டிருக்கிறார்கள். பொருளாதார வளர்ச்சி இடையூறுக்கு உள்ளாகி இருக்கிறது. வளர்ச்சித் திட்டங்களில் ஏற்படும் இழப்புகள் என்பவை கற்பனை செய்யமுடியாத அளவிற்கு அதிகமாக இருக்கின்றன. இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் இடையேயான இடைவெளி மேலும் மேலும் விரிவாகிக் கொண்டே இருக்கிறது.  அவதிக் குள்ளாகும் மக்கள் செய்வதறியாது  திகைத்து, விரக்தியுற்று, நக்சல்களாகக்கூட மாறிக் கொண்டிருக்கிறார்கள். ஒட்டுமொத்த சமூகமே தரம் கெட்டு, அழுகி வீழ்ந்து கொண்டிருக்கிறது. எப்படியாவது பணக்காரர்களாக வேண்டும் என்பதற்காக அனைத்து விதமான அயோக்கியத் தனங்களிலும் ஈடுபடுவது அதிகரித்துள்ளது. அதேபோன்று அதிகாரத்தை எப்படியாவது அபகரித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக அனைத்துவிதமான ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதென்பதும் அதிகரித்துள்ளது.
ஆட்சியிலுள்ளோர் செய்கின்ற ஊழல்கள் வெளிச்சத்திற்கு வந்தபோதிலும் என்ன செய்வதென்று தெரியாது மக்கள் மருகுகிறார்கள். கால்நடைத் தீவனம், ஜேஎம்எம் ஊழல், நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்கு, தாஜ் கொரிடார், 2ஜி, நிலக்கரி என்று எண்ணற்ற ஊழல்களில் ஆட்சியாளர்கள் மூழ்கித் திளைப்பதைப் பார்த்தும் என்ன செய்வதென்று தெரியாமல் குழம்புகிறார்கள்.  இவ்வாறு கோடி கோடியாகக் கொள்ளை யடிக்கும் கேடிகளை, ஆட்சியில் அமர வைப்பதற்காக அவர்கள் பின்னே செம்மறியாட்டுக் கூட்டம் போன்று சென்று கொண்டிருக்கிறார்கள்.
பெரும்பான்மையான மக்களுக்கு நம்மைக் கொள்ளை யடிப்பவர்களைத்தான் நாம் ஆட்சியில் அமரச் செய்வதற்காக அணிதிரண்டிருக்கிறோம் என்பதே தெரியவில்லை. மாறாக இத்தகைய பகாசுரன்களை நேர்மையாளர்கள் என்று கருதுகிறார்கள்.  இவர்கள் கோடி கோடியாகக் கொள்ளையடிக்கும் மாபெரும் கிரிமினல்கள் என்பதைப் பார்க்க முடியாத அளவிற்கு இவர்களின் கண்கள் கட்டப்பட்டிருக்கின்றன.  ஐயகோ, இத்தகைய கிரிமினல் தலைவர்களுக்கு விடையளிப்பதற்குப் பதிலாக, இவர்களுக்குப் பட்டுக்கம்பளம் விரித்து வாழ்த்துப்பா பாடி வரவேற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
இத்தகைய ஊழல் பேர்வழிகளுக்கு எதிராக பலர் தங்கள் குரல்களை எழுப்பியிருக்கிறார்கள். இவர்களது ஊழல் நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராட முயற்சிகளை மேற் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும், காலம் செல்லச் செல்ல தங்கள் முயற்சிகள் மீது தாங்களே நம்பிக்கையிழந்து கொஞ்சம் கொஞ்சமாக அவர்களும் அவர்களுடைய ஊழல் பொறியில் அகப்பட்டுக் கொள்கிறார்கள்.  
லோக்பால் சட்டம் தொடர்பாக அரசியல்வாதிகள் எந்த அளவிற்கு நாடகமாடினார்கள் என்பதை நன்றாகவே பார்த்தோம். அனைத்து அரசியல்வாதிகளும் இதில் ஒன்றிணைந்தார்கள். இச்சட்டம் குறித்து பல்வேறு கருத்துக்களையும் தீர்மானங்களையும் முன்மொழிந்தார்கள். விவாதங்கள் மூலம் நடைமுறைப்படுத்தப்படுவதைத் தாமதித்தார்கள். நாடாளு மன்றத்தில் பல கூட்டத் தொடர்களின்போது எந்தவிதமான காரணமுமின்றி ஒத்திவைக்கப்பட்டது.  இச்சட்டத்தை ஆதரிப்பதுபோல மக்களுக்கு முன்னால் பாவனை காட்டும் அதே சமயத்தில் இதற்காகப் போராடிக் கொண்டிருந்த தலைவர்கள் மத்தியில் இதற்கெதிரான கருத்துக்களை மிகவும் சாதுர்யமாக விதைத்திடவும்  முனைந்தார்கள். இச்சட்டத்திற்காகத் தன் னெழுச்சியாக உருவான கிளர்ச்சிப் போராட்டம் கடைசியில் மந்தமாகிப் போனது. ஊழலுக்கு எதிராக உருப்படியாக ஏதேனும் நடவடிக்கை மீண்டும் எழுமா என்பது தொலைதூரக் கனவாகிப் போனது. இத்தகைய நபர்களை மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுத்தமைக்காகவும், தங்களுடைய சுயநலத்திற்காக பல்வேறு தந்திங்கள் மூலம்  நாட்டையே நாசகரப் பாதையில் கொண்டு செல்ல அனுமதித்ததற்காகவும், “நாங்களே நாடாளுமன்றம், நாங்களே உயர்ந்தவர்கள், நாடு எங்கள் கருணாயால்தான் இருக்கிறது,’’ என்று கூறி, ரோம் நகரம் எரிந்து கொண்டிருந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்ததைப்போல நடந்துகொண்டமைக்காக, உண்மையில்  மிகவும் வருத்தப் பட்டிருக்க வேண்டும்.
நாட்டு நிர்வாகத்தின் அனைத்து மட்டங்களிலும் நன்கு ஊடுருவியுள்ள இத்தகைய ஊழல் பகாசுரன்களை மக்கள் மத்தியில் தோலுரித்துக்காட்டாதவரை, இத்தகைய பகாசுரன்கள் தங்களைத் திருத்திக் கொள்வதற்கு வாய்ப்புகள் ஏதுமில்லை. அங்கிங்கெனாதபடி எங்கும் வியாபித்துள்ள ஊழல் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?
ஜோசப் புலிட்சர்மிகவும் சரியாகவே சொல்லி இருக்கிறார்: “ஊழல் என்பது ஒரு குற்றம் மட்டும் அல்ல, மோசடி மட்டும் அல்ல, ஒரு தந்திரம் மட்டும் அல்ல, நாட்டின் வளங்களை சூறையாடுவது மட்டும் அல்ல, ஒரு தீயொழுக்கம் மட்டும் அல்ல - மாறாக இவை அனைத்தும் சேர்ந்த ஒன்றாகும். இது,  இரகசியமாக இருக்கும் வரைக்கும்தான் அதனால் உயிர்பிழைத்திருக்க முடியும். இவற்றை வெளிச்சத்திற்குக் கொண்டு வாருங்கள், மக்கள் மத்தியில் நன்கு விமர்சியுங்கள், இவற்றை தாக்குதல்களுக்கு உட்படுத்துங்கள், ஊடகங்களில் எள்ளிநகையாடுங்கள், இவை மக்கள் மனதைக் கவ்விப்பிடிக்கும்போது, இத்தகைய பகாசுரன்களை அவர்கள் முற்றிலுமாக ஒழித்துக்கட்டுவார்கள்.’’ சமுதாயம் இவர்களை மீண்டும் தாக்குதலுக்கு உள்ளாக்கும். இத்தகைய ஊழல்பேர் வழிகள் இல்லாத மாற்றை உருவாக்கிடும்.
ஆனால், எப்படி?  இந்த மீட்பர்கள் யார்?’’ எவ்விதத் துப்பும் கிடைக்காது, பலர் தேடிக்கொண்டிருந்தார்கள். தங்கள் முதுகுக்குப் பின்னேயே வலுவானதொரு மாற்று இருப்பதை அறியாது இவ்வாறு இவர்கள் தேடிக்கொண்டிருந்தார்கள். உண்மையில் நாம் நம் இளம் சந்ததியை மறந்துவிட்டோம். இந்த சந்ததிதான் விரைவில் இந்த சமுதாயத்தை மாற்றுவதற்கான பொறுப்பினை ஏற்கப் போகிறது. இதுவரை இந்த சமுதாயத்தின் கறைகள் எதுவும் படாது வளர்ந்துள்ள அவர்களுடைய கலப்படமற்ற மனம் இதனை சாதிக்கப்போகிறது.  மண்ணின் மாண்புகளுடன் ஊக்குவிக்கப் பெற்று, நாட்டின் எதார்த்தத்துடன் தெளிவுபெற்று, புலிட்சரின் வார்த்தைகளைத் தங்கள் தத்துவத்தின் அடிநாதமாகக் கொண்டு, நிச்சயமாக இந்த இளம் சந்ததி இன்றைய ஊழல் சமுதாயத்தை மாற்றி அமைத்திட முடியும். நம்மால் சாதிக்க முடியாததை, இத்தகைய இளைய சமுதாயம் சாதித்துக் காட்டிடும்.
இந்தப் புத்தகத்தின் குறிக்கோள், இத்தகைய இளம் சந்ததியினரை நேர்மையான பிரஜைகளுக்கு நினைவுகூர்ந்திட வேண்டும் என்பதோடு மட்டுமல்லாமல், இத்தகைய இளம் சந்ததியினரை  நாட்டின் எதிர்காலத்தை உருவாக்கும் உணர்வு படைத்த போராளிகளாக உருவாக்க வேண்டும் என்பதுமாகும்.
 இதற்காக நாட்டின் பல்வேறு நகரங்களிலும் இடங்களிலும் நடந்த பல்வேறுவிதமான ஊழல் நடவடிக்கைகள் குறித்து படங்களுடன் கதைவடிவில் இந்நூலில் இடையிடையே தூவப்பட்டிருக்கிறது. இது மருந்துதான். ஆயினும் மருந்தின் கசப்போ துவர்ப்போ தெரியாதபடி வாழைப்பழம் என்னும் கதையில் வைத்துத் தரப்பட்டிருக்கிறது. மேலெழுந்தவாரியாகப் பார்க்கும் போது, சமுதாயத்தின் துயரார்ந்த நிலைக்காக மனம் வருந்துவதுபோலத் தோன்றும். ஆனால், இக்கதையின் நோக்கமும் இதன் உள்ளடக்கமும் இதனைப் படிக்கும் வாசகர்கள் மத்தியில், அவர்களை வீரம் செறிந்தவர்களாக, பொறுப்புள்ள பிரஜைகளாக, நல்லொழுக்கம் வாய்ந்த தீரர்களாக மாற்றக்கூடிய விதத்தில் அறிவினைப் புகட்ட வேண்டும் என்பதேயாகும். இவ்வாறு உருவாகும் அறிவில் சிறந்த இளம் சமுதாயம் காலப்போக்கில் தங்களுக்குப் பின்னே வரும் சமுதாயத்திற்கும் நல்வழி காட்டுவார்கள் என்பது மட்டுமல்ல, தற்போது ஊழல் சகதியில் புரண்டுகொண்டிருக்கும் சமுதாயத்தையும் சுத்தப் படுத்தி, மாற்றி அமைத்திடுவார்கள்.  இந்நூல் ஊழல் பேர்வழிகளையும்  அவர்களது வீட்டுக் குழந்தைகளையும் பார்த்து எள்ளிநகையாடவும். அத்தகைய ஊழல் பேர்வழிகளையும் அவர்தம் குடும்பத்தினரையும் மனித மலத்தை உண்ணும் பன்றிகளைப்போல வெறுத்து ஒதுக்கிட வேண்டும் என்று கற்றுக் கொடுக்கும். இரண்யனைக் கொன்ற பிரகலாதன் போன்றும்,  மகாபாரதத்தில் பேராசை பிடித்த பகாசுரனைக் கொன்ற பீமன் போன்றும் மாற உத்வேகம் அளித்திடும்.
இக்கதையில் வரும் ரவி மற்றும் பிரதீப் ஆகிய இரு சகோதரர்களும்,  தங்கள் விடுமுறையைக் கழிப்பதற்காக, தில்லிக்கு போபாலிலிருந்து வருகிறார்கள்.  தில்லி வந்தபின், தில்லியில் வாழும் தங்களுடைய மாமா சேகர் என்பவரால் ஆகர்ஷிக்கப்படுகிறார்கள். சேகர் தன்னுடைய அனுபவத்தில் சமுதாயத்தில் கண்ட, கேட்ட ஊழல்கள் குறித்தும், அவற்றைக் களைந்திட அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் அறிவுபூர்வமாக அவர்களுக்குச் சொல்கிறார். அதன்மூலம் அவர்களைச் சமுதாயத்தை மாற்றும் போராளிகளாக உருவாக்குகிறார்.  இக்கதையைப் படிக்கும் எல்லோரையும் இல்லாவிட்டாலும்  ஊழல் சேற்றில் புரளலாமா வேண்டாமா என்று ஊசலாடிக்கொண்டிருக்கும்  ஒரு சில இளைஞர்களையாவது இது நல்வழிப்படுத்தும், அவர்களை நேர்மையாளர்களாக மாற்றும்  என்பது திண்ணம். அதுமட்டுமல்ல, இதைப்படித்திடும் ஒருசில ஊழல்பேர்வழிகளைக்கூட திருத்துவதற்கு இது உதவுக்கூடும்.

இப்போது, இதனை முடிப்பதற்குமுன் ஒரு முக்கியமான கேள்வி. ஊழல் பேர்வழிகளை ஏன் பகாசுரன்கள் என்று அழைக்கிறீர்கள்? இதற்கு இந்தக் கதை விடையளிப்பதோடு மட்டுமல்ல, ஊழல்பேர்வழிகளுக்கான “முத்திரைப் பெயராக’’ அது இருக்கப்போவதையும் வாசகர்களுக்கு இது உத்தரவாதப்படுத்தும். இது நிச்சயம்.

No comments: