Tuesday, May 24, 2016

மோடியின் மூன்று முகம்




மோடியின் மூன்று முகம்

பாஜக தலைமையிலான நரேந்திர மோடி அரசு 2016 மே 26 அன்று இரு ஆண்டுகளை நிறைவு செய்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21ஆவது அகில இந்திய மாநாடு முடிவுற்ற சமயத்தில், இந்த அரசாங்கத்தின் கீழ் ஒரு புதிய ‘திரிமூர்த்தி’ செதுக்கப்படுகிறது என்ற எச்சரிக்கையை விடுத்தோம். அந்த மூன்று முகங்கள் எப்படிப்பட்டவை?
1 இந்தியக் குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயக குணாம்சத்தை ஆர்எஸ்எஸ் கூறிவரும் ஒரு வெறிபிடித்த சகிப்புத்தன்மையற்ற பாசிஸ்ட் ‘இந்து ராஷ்ட்ரம்’ ஆக மாற்றுவதற்கான முயற்சிகளில் கொடூரமான முறையில் ஈடுபடுவது.
2 நவீன தாராளமய பொருளாதார சீர்திருத்தங்களை மன்மோகன் சிங் தலைமையிலிருந்த ஐமுகூ அரசாங்கம் பின்பற்றியதைவிட மேலும் தீவிரமான முறையில் பின்பற்றுவது; அதன் மூலம் நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்களுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு சுமைகளை ஏற்றுவது.
3 ஜனநாயக உரிமைகளையும், சிவில் உரிமைகளையும் காலில் போட்டு மிதித்துவிட்டு, நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அமைப்புகளை வேரறுக்கும் விதத்தில் எதேச்சதிகார நடவடிக்கைகளை அதிகரிப்பது.மோடி அரசாங்கத்தின் கடந்த ஈராண்டுகால ஆட்சி அனுபவம் என்பது, நாம் விடுத்த எச்சரிக்கையை எவ்வளவு சரியானது என்பதை மெய்ப்பித்துக்காட்டியிருக்கிறது. இம்மூன்று முகங்களுமே முன்பிருந்ததைவிட இன்றையதினம் மிகவும் கோரமாக மாறி இருக்கின்றன என விவரிக்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி.
உக்கிரமடையும் மதவெறித் தீ
நரேந்திரமோடி பிரதமர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட உடனேயே, அவரது அமைச்சரவை சகாக்களையும், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கொண்ட துதிபாடும் பஜனைக் கோஷ்டியினர் வெறுப்பைக் கக்கும் பேச்சுக்களை உமிழத் தொடங்கினார்கள். மோடி பிரதமரானபின் நடைபெற்ற நாடாளுமன்றக்கூட்டத்தின் முதல் அமர்விலேயே, அவரது அரசாங்கம், இத்தகைய வெறுப்பை உமிழும் பேச்சுக்களை பேசுவோர் மீது கிரிமினல் குற்றத்தின்கீழ் நடவடிக்கை எடுக்குமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது மட்டுமின்றி, பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் மக்களுக்கு அத்தகைய உறுதிமொழி எதையும் இதுநாள்வரையில் அளிக்கவில்லை.நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே மற்றும் டாக்டர் கல்புர்கி முதலானோர் பட்டப்பகலிலேயே கொல்லப்பட்ட சம்பவங்கள் நாட்டிலுள்ள அறிவுஜீவிகள், அறிஞர்பெருமக்கள், அறிவியலாளர்கள், வரலாற்றாசிரியர்கள் மற்றும் பலராலும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கண்டனத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றன.
தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்யும் விதத்தில் இவர்களில் பலர் தாங்கள் அரசாங்கத்தில் வாங்கிய விருதுகளைத் திருப்பி அனுப்பியுள்ளனர். மோடி அரசாங்கம் இந்த எதிர்ப்புகளை எல்லாம் கூட சற்றும் வெட்கமின்றி உதாசீனம் செய்திருக்கிறது.மதச் சிறுபான்மையினருக்கு எதிராக, அதிலும் குறிப்பாக முஸ்லீம்களுக்கு எதிராக வெறுப்பை ஏற்படுத்தக்கூடியவிதத்தில் ‘காதலுக்கு எதிரான புனிதப் போர்’; ‘தாய்மதத்திற்கு திரும்புதல்’, ‘மாட்டுக்கறி உண்பதற்கு எதிரான கூச்சல்’, ‘பெண்கள் உடைகள் எப்படி அணிய வேண்டும் என்ற கட்டளை’ மற்றும் ஒழுக்கநெறிகளை அமல்படுத்தும் கலாச்சார போலீஸ் போன்று பல்வேறு மதவெறிப் பிரச்சாரங்களை முடுக்கிவிட்டனர்.மாட்டுக்கறி சாப்பிட்டார் என்று கூறி எவ்வித விசாரணையுமின்றி முகமது இக்லக் கொல்லப்பட்ட சம்பவம், ஜார்கண்ட் மாநிலத்தில் லடேகார் என்னுமிடத்தில் மாட்டு வியாபாரிகளான இரு இளைஞர்களை மரத்தில் தூக்கில் தொங்க விட்டு படுகொலை செய்த சம்பவம் போன்றவை மதவெறிச் சூழலை மேலும் மோசமாக்கின.
கல்வி நிலையங்கள் மீது பயங்கரத் தாக்குதல்
அதேபோன்று ஒட்டுமொத்த கல்வி அமைப்பையும், கல்வி சார்ந்த ஆராய்ச்சி மையங்களையும் வகுப்புவாத சகதியில் தள்ளுவதற்கு படிப்படியான முயற்சிகளில் மோடி அரசு இறங்கி இருக்கிறது. இத்தகைய ஆராய்ச்சி மையங்களின் கேந்திரமான பதவிகளில் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சார்ந்தவர்கள் நியமிக்கப்படுவது தொடர்கிறது. பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பாடத்திட்டங்களை மாற்றி அமைப்பதற்கான முயற்சிகள் தங்குதடையின்றி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம், புனே திரைப்படக் கல்லூரி, ஐஐடி-க்கள் மற்றும் இதர முக்கிய கல்வி நிலையங்கள் போன்ற முதன்மையான கல்வி நிறுவனங்களில், பயிலும் மாணவர் சமுதாயமும், போதிக்கும் ஆசிரியர் சமுதாயமும் தங்களுடைய இந்துத்துவா சித்தாந்தத்திற்கு அடிபணிந்து சேவை செய்ய வேண்டும் என்கிற நோக்கத்தோடு அவர்களின் மதச்சார்பற்ற முற்போக்கு சிந்தனைகள் மீது மிகவும் இழிவான முறையில் தாக்குதலைத் தொடுத்திருக்கிறது.
கணினி மூலம் மோசடியாக உருவாக்கப்பட்ட ஒரு காணொளி சாட்சியத்தின் அடிப்படையில் ஜேஎன்யு மாணவர்கள் மீது தேசவிரோதக் குற்றச்சாட்டுக்களை சுமத்தக்கூடிய அளவிற்கு மோடி அரசாங்கம் சென்றிருக்கிறது.ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தில் தலித் ஆராய்ச்சி மாணவர்களுக்கு கல்வி உதவி தொகையை பல மாதங்களாக நிறுத்தி வைத்தும், அவர்களை விடுதிகளிலிருந்து விரட்டி, அவர்களை மிகவும் மோசமாக நடத்தியதன் விளைவாக ரோஹித் வெமுலா என்பவர் துயரமான முறையில் தற்கொலை செய்து கொள்ளக்கூடிய அளவிற்கு, இவர்கள் தங்கள் இந்துத்துவா உயர்சாதி வெறியைக் காட்டி இருக்கிறார்கள். இந்தியக் குடியரசை ஆர்எஸ்எஸ் அமைப்பின் குறிக்கோளான ‘இந்து ராஷ்ட்ரம்’-ஆக மாற்ற வேண்டும் என்கிற நோக்கத்துடன், மோடி அரசாங்கம் இந்தியாவின் வரலாற்றையே இந்துமதப் புராணங்களின் அடிப்படையில் மாற்றிடவும், இந்து வேத சாஸ்திரங்களையே இந்தியத் தத்துவஞானமாக மாற்றிடவும் முயற்சிகளில் இறங்கி இருக்கிறது.
பயங்கரவாதம் ஊட்டி வளர்ப்பு
மாலேகான் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டது இந்துத்துவா பயங்கரவாத அமைப்புதான் என்று தெள்ளத்தெளிவாக சாட்சியங்கள் மூலம் தெரியவந்த போதிலும், அதனைக் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிப்பதற்காக மிகவும் இழிவான முறையில் என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை தன் அதிகாரங்களைத் துஷ்பிரயோகம் செய்திருப்பது இந்த அரசாங்கத்தின் சமீபத்திய எடுத்துக்காட்டாகும். இதேபோன்று இந்துத்துவா பயங்கரவாத அமைப்புகள் ஈடுபட்ட ஹைதராபாத் மெக்கா மசூதி தாக்குதல், ஆஜ்மீர் தர்கா ஷெரீப் தாக்குதல் மற்றும் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் மீதான தாக்குதல் ஆகியவைகளும் சமரசம் செய்துகொள்ளப்பட்டிருக்கின்றன.மோடி அரசாங்கம், நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை வேரறுப்பதற்கான போராட்டத்தில் சமரசம் செய்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் காணப்படும் பயங்கரவாதத்திற்கு மதம் இல்லை, சாதி இல்லை, பிராந்தியமும் இல்லை என்பது அனைவரும் ஏற்றுக்கொண்டஒன்று. பயங்கரவாதத் தாக்குதல்கள் எவரால் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும் அதனை ஏற்றுக் கொள்ளக்கூடாது அல்லது சகித்துக் கொள்ளக்கூடாது என்பதற்கு மாறாக, மோடி அரசாங்கமானது இந்துத்துவா பயங்கரவாதத்தை ஊட்டி வளர்த்துக் கொண்டிருக்கிறது.
தீவிரமாகும் எதேச்சதிகாரம்
மோடி அரசாங்கம் தன்னுடைய குறுகிய ஒருதலைப்பட்சமான குறிக்கோள்களை முன்னெடுத்துச் செல்வதற்காக நாடாளுமன்ற ஜனநாயகத்தின் கீழ் இயங்கும் நிறுவனங்களையும் பலவீனப்படுத்தும் வேலைகளில் கடந்த இரண்டு ஆண்டு காலத்திலும் படிப்படியாக இறங்கி இருக்கிறது.கார்ப்பரேட்டுகளுக்கு உதவுவதற்காக நிலம் கையகப்படுத்தலை எளிமைப்படுத்துவதற்காக அடுத்தடுத்து அவசரச் சட்டங்களை கொண்டு வந்தது. இதன்மூலம் விவசாய நெருக்கடி காரணமாக ஏற்கனவே நொந்து நூலாகிப் போயிருக்கும் விவசாயிகளின் வயிற்றில் அடித்திட முடிவு செய்தது. ஆயினும் மூன்று முறை மோடி அரசாங்கம் அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்த போதிலும், மாநிலங்களவையில் அது நிறைவேறாமல் தோல்வியடைந்ததால் கடைசியில் மோடி அரசாங்கம் அதனைக் கைவிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.மக்களவையில் இருப்பதுபோல் மாநிலங்களவையில் தனக்குப் பெரும்பான்மை இல்லாததால், அந்த அவையையே புறந்தள்ளுவதற்காக, இழிவான முறையில் பல தந்திரங்களைக் கையாளத் தொடங்கி இருக்கிறது. சாதாரண சட்டமுன்வடிவுகளைக் கூட ‘நிதி சட்டமுன்வடிவு’ என்று பெயர் மாற்றி நிறைவேற்றிக் கொண்டு வருகிறது. ஏனெனில் நிதிச் சட்டமுன்வடிவு என்றால் அது மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை. இவ்வாறு மாநிலங்களவையைப் புறந்தள்ள வேண்டும் என்பதற்காக அரசமைப்புச் சட்ட விதிமுறைகளையே தவறான முறையில் வியாக்கியானம் செய்துகொண்டு வருகிறது.இவ்வாறு நிறைவேற்றப்பட்ட சட்டமுன்வடிவில் ‘ஆதார் சட்டமுன்வடிவு’ ஒன்றாகும்.
இதனை ‘நிதி சட்டமுன்வடிவு’ என்று மத்திய அரசு முத்திரை குத்தி இருப்பதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு, அதனை மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வாயம் விசாரித்து வருகிறது.அடுத்து, மோடி அரசாங்கத்தின் எதேச்சதிகார முகம் எதிர்க்கட்சிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை டிஸ்மிஸ் செய்வதற்காக அரசமைப்புச் சட்டத்தின் 356ஆவது பிரிவை துஷ்பிரயோகம் செய்வதிலும் அப்பட்டமாகத் தெரிய வந்தது. உத்தரகாண்டில் பாஜக மேற்கொண்ட முயற்சி, உச்சநீதிமன்ற தலையீட்டால் இப்போது முறியடிக்கப்பட்டிருக்கிறது. அரசமைப்புச் சட்டம் 356ஆவது பிரிவை துஷ்பிரயோகம் செய்ததற்கு எதிராக உச்சநீதிமன்றம் மத்திய அரசைக் கடுமையான வார்த்தைகளில் கண்டித்திருக்கிறது. மக்களின் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள், பேச்சுரிமை மற்றும் உயிர்வாழ்வதற்கான உரிமைகள் என அனைத்தின் மீதும் தாக்குதல்கள் நாடு முழுதும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.
படாடோபமான வெற்று முழக்கங்கள்
மோடி அரசாங்கம் மிகவும் படாடோபமாக அறிவிக்கும் முழக்கங்கள் அனைத்துமே மிக விரைவில் பொய் என மக்கள் மத்தியில் வெட்டவெளிச்சமாகிவிடுகின்றன. ஊழலற்ற அரசாங்கத்தை அளிப்போம் என்று மக்களுக்கு வாக்குறுதி அளித்தது. ஆனால் இந்த வாக்குறுதியானது எந்த அளவிற்கு பொய் என்பதை மத்தியப் பிரதேச வியாபம் ஊழல் போன்று பாஜக ஆளும் மாநில அரசுகளின் எண்ணற்ற ஊழல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. நம் நாட்டிலிருந்து வெளிநாட்டிற்குத் தப்பி ஓடிய முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடிக்கு மத்திய அயல்துறை விவகாரங்கள் அமைச்சரும், ராஜஸ்தான் மாநில பாஜக முதலமைச்சரும் பாதுகாப்பு அளித்த விவரங்கள் வெளிச்சத்திற்கு வந்து நாடாளுமன்றத்தின் ஒரு கூட்டத்தொடரே அதிர்ந்தது. மோடி அரசாங்கம் பின்பற்றிவரும் “சலுகைசார் முதலாளித்துவக் கொள்கை’’ பெரிய அளவில் ஊழலுக்கு வழிவகுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
நிச்சயமாக இவை வெளி உலகுக்கு ஒருநாள் வந்தே தீரும் என்பதில் ஐயமில்லை. ஐமுகூ அரசாங்கத்தின் ஊழல்கள் வெளி உலகிற்குத் தெரிய வர ஆறு ஆண்டுகள் ஆனது. மோடி அரசாங்கத்தின் அடுத்த மூன்றாண்டுகளில் அதேபோல் எண்ணற்ற ஊழல்கள் மக்களின் பார்வைக்கு வரும் என்பதில் சந்தேகமில்லை.மோடி அரசாங்கம் ‘‘குறைவான அரசாங்கம், நிறைவான ஆட்சி’’ என்று படாடோபமாக அறிவித்தது. குஜராத் மாநிலத்தில் உயர்சாதியினரான பட்டேல் இனத்தவரின் ஆணவக் கிளர்ச்சியும், ஹரியானா மாநிலத்தில் ஜாட் இனத்தவரால் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறை வெறியாட்டங்களும் பாஜகவின் ஆட்சியின் லட்சணத்தை நன்கு தோலுரித்துக் காட்டி இருக்கின்றன.
அமெ.வின் நம்பகமான அடிமை
கடந்த ஈராண்டுகால மோடி ஆட்சியில் இந்தியாவின் சுதந்திரமான அயல்துறைக் கொள்கை மிகவும் கடுமையான முறையில் சிதைத்து சின்னாபின்னமாக்கப்பட்டிருக்கிறது.பிரதமர் மோடி என்ற தனிநபரின் சித்திரத்தை அயல்நாடுகளில் உயர்த்திப்பிடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முன்னுரிமைகளுக்கு உதவிடும் விதத்தில் தன் அயல்துறைக் கொள்கையை மாற்றிக் கொண்டிருக்கிறது மோடி அரசு. அமெரிக்காவின் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றுடன் மேற்கொண்டுள்ள ஒப்பந்தங்கள் உட்பட இரு அரசுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள எண்ணற்ற ஒப்பந்தங்கள், அமெரிக்க ஏகாதிபத்தியம் நம் நாட்டின் ராணுவம் மற்றும் உள்நாட்டு அமைப்புகளில் புகுவதற்கு வழிவகுத்திருப்பதை அம்பலப்படுத்தியுள்ளன. அமெரிக்காவும், மேற்கத்திய வல்லரசு நாடுகளும் தங்கள் இராணுவத் தளவாடங்களை கொள்ளை லாபத்திற்கு இந்தியாவிற்கு விற்பதற்கு இந்த அரசு வழியேற்படுத்தித் தந்திருக்கிறது.உலகத்தின் பார்வையில் மோடி அரசாங்கம் இந்தியாவின் அயல்துறைக் கொள்கையை, பாகிஸ்தானின் கொள்கையுடன் ஒப்பிடக் கூடிய அளவிற்கு தரம்தாழ்த்திவிட்டது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒரு நம்பகமான அடிமை தான்தான் என்று காட்டுவதிலேயே மிகவும் ஆர்வத்துடன் மோடி அரசாங்கம் இருந்து வருகிறது.
இதன்மூலம் இதுநாள்வரை உலக அரங்கில் வளர்முக நாடுகளின் தலைவன் என்று இந்தியாவிற்கு இருந்து வந்த கௌரவம் அடிபட்டுவிட்டது.நம் நாடாளுமன்றத்தில் வரையப்பட்ட ‘சிவப்புக் கோடுகளை’ மறுதலித்துவிட்டு, பாரீசில் நடைபெற்ற சிஓபி 21 என்னும் காலநிலை மாற்ற மாநாட்டில் அமெரிக்காவின் கட்டளைக்கிணங்க கையெழுத்திட்டதில் இதனைப் பார்க்க முடிந்தது. அதேபோன்று, நைரோபியில் நடைபெற்ற உலக வர்த்தக அமைப்பின் தோஹா சுற்று பேச்சுவார்த்தைகள் உச்சிமாநாட்டிலும் இந்தியாவின் விவசாயம் மற்றும் சந்தைகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய விதத்திலும், நம் நாட்டின் மக்களைக் கடுமையாகப் பாதிக்கக்கூடிய விதத்தில் உணவுப் பாதுகாப்பு அம்சங்களிலும் சமரசம் செய்துகொண்டு திரும்பி இருக்கிறது. பிரதமர் மோடி, “பாரக் ஒபாமா என் நண்பர்” என்று கூறுவது சமூகவலைத் தள கருத்துகளுக்கான பேசுபொருளாக இருக்கலாம். ஆனால், இது இந்தியாவை ஒபாமாவின் தலைமையிலான அமெரிக்காவுடன் மிகவும் ஆழமான முறையில் கீழ்ப்படிந்து சேவகம் செய்திடும் ஒரு நாடாக மாற்றிவிட்டதையே காட்டுகிறது.வளர்ச்சி என்ற மாயைபாஜக தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது நாட்டின் பொருளாதாரம் சீரமைக்கப்படும் என்று மிகப்பெரிய அளவில் உறுதிமொழியை அளித்தது. பாஜகவின் படு பிற்போக்கான சமூக மற்றும் பொருளாதாரக் கொள்கைகளுடன் ஒத்துப்போகாத பலரைக்கூட இந்த உறுதிமொழி கவ்விப்பிடித்தது. ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் உருண்டோடி விட்டன. ஆனால் அனைத்து முனைகளிலும் வீழ்ச்சி அடைந்த பொருளாதாரத்தையே இன்று நாம் பெற்றிருக்கிறோம்.உலகின் பொருளாதார நிலைமை மிகவும் மோசமாக இருக்கக்கூடிய இன்றைய நிலையில், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் இந்தியாவில் மிகவும் அதிகமாக இருக்கிறது என்று கூறப்படுவதை இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர், “கண் தெரியாதவர்கள் தேசத்தில் ஒரு கண் உள்ளவன் ராஜா என்பதுபோல’’ என்று சித்தரித்திருக்கிறார்.ஏற்றுமதி கடும் வீழ்ச்சிநாட்டின் ஏற்றுமதி 2013-14ஆம் ஆண்டில் 465.9 பில்லியன் அமெரிக்க டாலராக இருப்பது 2019-20ஆம் ஆண்டிற்குள் தோராயமாக 900 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்தப்படும் என்று மோடி அரசு உறுதி அளித்திருந்தது. ஆனால் எதார்த்தம் என்ன? கடந்த தொடர்ச்சியான 17 மாதங்களில், 261.13 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவிற்கு ஏற்றுமதி வீழ்ச்சி அடைந்திருக்கிறது.
கடந்த 63 ஆண்டுகளில் இல்லாத மிகவும் மோசமான நிலைமை இது. ஏற்றுமதி மூலமான வளர்ச்சி நிலைகுலைந்துள்ள நிலையில், என்ன செய்திருக்க வேண்டும்? நாட்டு மக்களின் வாங்கும் சக்தியை விரிவுபடுத்திட அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். அதன்மூலம் உள்நாட்டு தேவைகளின் வளர்ச்சியை முடுக்கிவிட்டிருக்க வேண்டும். ஆனால் ஐஐபி எனப்படும் நாட்டின் தொழில் உற்பத்தி அட்டவணை பிரதிபலிப்பது என்ன தெரியுமா? மார்ச் மாதத்தில் வெறும் 0.1 சதவீதம் மட்டுமே அதிகரித்திருக்கிறது. ஒட்டுமொத்த 2015-16ஆம் ஆண்டிற்கும் இது வெறும் 2.4 சதவீதமேயாகும். ஆனால் இதே ஐஐபி 2013-14ஆம் ஆண்டில் 4.8 சதவீதம் அதிகரித்திருந்தது. தொழில்துறை எவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறது என்பதை இவை காட்டுகின்றன.
முதலீடுகள் கடும் சரிவு
முதலீடுகளும் கடந்த ஈராண்டுகளில் மிகவும் அவலமான சித்திரத்தையே காட்டுகின்றன. முதலீட்டுக்கான முன்மொழிவுகள் 2013ஆம் ஆண்டில் 5.3 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 2014ஆம் ஆண்டில் 23 சதவீதம் வீழ்ந்து வெறும் 4 லட்சம் கோடியாக மாறி இருக்கிறது. 2015இல் மேலும் 23 சதவீதம் வீழ்ந்து 3.11 லட்சம் கோடியாக குறைந்திருக்கிறது. 2016ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் முதலீட்டுக்கான முன்மொழிவுகள் 60,130 கோடி ரூபாய் மட்டுமே. இந்தப் போக்கு தொடருமானால், முதலீடுகள் இந்த ஆண்டு மேலும் வீழும்.
வேலைவாய்ப்பில் வரலாறு காணாத வீழ்ச்சி
தொழில்துறை வீழ்ச்சி அடைவதால், ஒவ்வோராண்டும் சந்தைக்குள் நுழையும் 1 கோடியே 40 லட்சம் இந்தியர்களுக்கு வேலை இல்லை. தொழிலாளர்கள் அதிகம் இருக்கின்ற தொழிற்சாலைகளிலேயே கடந்த ஆறு ஆண்டுகளில் புதிய வேலைகள் எதுவும் இல்லை என்று அரசாங்கத்தின் தரவுகள் காட்டுகின்றன. வெறுமனே 1.35 லட்சம் வேலைகள்தான் உருவாக்கப்பட்டிருப்பதாக அது கூறுகிறது. சென்ற ஆண்டு ஏப்ரலுக்கும் ஜூனுக்கும் இடையில் வேலைகளின் எண்ணிக்கை உண்மையில் 43 ஆயிரம் வீழ்ச்சி அடைந்துள்ளது.2015 அக்டோபர் - டிசம்பருக்கு இடையில் ஐ.டி.-பிபிஓ துறையில் 14 ஆயிரம் பேர், ஆட்டோமோபைல் துறையில் 13 ஆயிரம் பேர், உலோகத் தொழிலில் 12 ஆயிரம் பேர், தங்க நகைகள் மற்றும் கற்கள் துறை வணிகத்தில் 8 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளார்கள். இவை வேலைவாய்ப்பில் மிகப் பெரிய வீழ்ச்சியாகும். ஒவ்வோராண்டும் 2 கோடி பேருக்கு வேலை வழங்குவோம் என்று உறுதி அளித்து ஆட்சிக்கு வந்த பாஜக அரசாங்கம், இவ்வாறு ஒவ்வோராண்டும் பல்லாயிரக்கணக்கானோரை வேலையிலிருந்து வீட்டிற்கு அனுப்பிக் கொண்டிருக்கிறது. ஒளிமயமான எதிர்காலத்தை வழங்குவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் இருள்மயமான பேரிடரை அளித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ரூ.13 லட்சம் கோடி அம்போ!
ஏற்றுமதிகளில் வீழ்ச்சி, உற்பத்தித் துறையில் முன்னேற்றம் ஏதுமின்றி இருத்தல், முதலீடு மிகவும் குறைவாக இருத்தல் ஆகியவை வங்கித்துறையையும் கடுமையாகப் பாதித்திருக்கின்றன. ஆட்சியாளர்கள் சலுகைசார் முதலாளித்துவத்தைத் தூக்கிப்பிடித்ததன் விளைவாக பல்வேறு வங்கிகள் இன்றைய தினம் மிகவும் ஆழமான நெருக்கடிக்கு ஆளாகி இருக்கின்றன. வங்கிகளுக்கு வரவேண்டிய கடன்தொகைகள் (இதற்கு வங்கித்துறையில் கூறப்படும் நாசூக்கான வார்த்தைகள் ‘இயங்கா சொத்துக்கள்’ என்பதாகும்) சுமார் 13 லட்சம் கோடி ரூபாய்களாகும். இதுஅடுத்த ஆண்டு மேலும் அதிகரிக்கும். இந்தத் தொகை உலகில் உள்ள 112 நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைவிட அதிகமாகும். அதுமட்டுமல்ல, வராக்கடன்களின் அளவு உண்மையில் வங்கிகளின் சந்தை மதிப்பை விட அதிகமாகும்.இவ்வாறு கடன்களை வாங்கிவிட்டு வங்கிகளுக்குத் திருப்பித்தராதவர்கள் யார்? இதனை மக்களுக்கு வெளிப்படுத்த அரசாங்கம் தயாராக இல்லை. இந்நிலையில் இவர்கள் மீது எப்படி நடவடிக்கை எடுத்து, இவர்களைத் தண்டித்திட முடியும்? ஆனால் இதே பேர்வழிகள், வெறும் ஐயாயிரம் ரூபாய் கடன் வாங்கி முறையாக அடைக்கவில்லை என்று கூறி ஏழை விவசாயிகளின் சொத்துக்களை ஏலம் விடத் தயங்குவதில்லை. அதே சமயத்தில் தொழிலாளர்களின் மீதான சுமையும் இந்த அரசாங்கத்தால் பல்வேறு வரிகளின் மூலம் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. மறைமுக வரிகள் மூலமாக சுமார் 20,600 கோடி ரூபாய்க்கு வரி விதிக்கப்பட்டிருக்கிறது. அதே சமயத்தில் பணக்காரர்கள் செலுத்தும் நேரடி வரி 1,600 கோடி ரூபாய் குறைக்கப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக மதிப்பிடப்பட்டுள்ள இலக்கையும் அரசு அடைந்திடவில்லை. பணக்காரர்கள் செலுத்த வேண்டிய 6 லட்சம் கோடி ரூபாய் வரியை வசூலித்திட எந்த முயற்சியையும் இந்த அரசு எடுத்திட வில்லை. அது மட்டுமல்ல அவர்களுக்கு “ஊக்கத்தொகை’’ என்ற பெயரில் மேலும் 6 லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் வரிச் சலுகைகள் அளித்திருக்கிறது.
ஏழைக் கூலிகளை வதைக்கும் கொடூரம்
அரசாங்கத்தின் புள்ளிவிவரங்கள் (உண்மையில் இவை உண்மையான எண்ணிக்கைகளைக் குறைத்தே காட்டுகின்றன) சென்ற ஆண்டு 2,997 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்றும், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 116 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்றும் காட்டுகிறது. ஆயினும் பிரதமர் பல்வேறு கூட்டங்களில் இவர்களுக்காக வாயால் இரங்குவதைத் தவிர செயலில் எதுவும் செய்திடவில்லை.விவசாயிகளுக்கு தாங்கள் உற்பத்தி செய்யும் விளைபொருள்களுக்கு அதற்கான செலவுடன் 50 சதவீதம் உயர்த்தி விலை நிர்ணயிக்கப்படும் என்று பிரதமர் தேர்தல் பிரச்சாரத்தின்போது உறுதிமொழி அளித்தார். ஆனால் அதனையும் இந்த அரசு செய்யத் தவறிவிட்டது. இதனால் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள் எண்ணிக்கை வளர்ந்து கொண்டே இருக்கிறது.போதிய மழையின்மை மற்றும் வறட்சி ஆகியவற்றிற்கு எவரும் தனிப்பட்ட முறையில் பொறுப்பாக முடியாது. எனினும், இதனால் மக்களுக்கு ஏற்படும் துன்ப துயரங்களைக் கட்டுப்படுத்த வேண்டியது அரசின் பொறுப்பாகும்.
கிராமப்புறங்களில் உள்ள மக்கள் அவதிக்கு உள்ளாகி இருக்கக்கூடிய அதே சமயத்தில், அரசாங்கம் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வேலை செய்த ஏழை மக்களுக்கு கூலியை தரக்கூட முன்வரவில்லை. உச்சநீதிமன்றம் சென்ற ஆண்டு அரசாங்கத்தின் தலையில் கடுமையாகக் குட்டியபிறகுதான் அத்தொகையை அரசாங்கம் விடுவித்தது. இந்தப் பிரச்சனை மீது கடந்த வாரமும் கூட உச்சநீதிமன்றம் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி இருக்கிறது. “அரசாங்கம் அரசமைப்புச்சட்டத்தை மீறியிருப்பது தெளிவாகத் தெரிகிறது. ... சமூக நீதி சன்னலுக்கு வெளியே இந்திய அரசாங்கத்தால் தூக்கி எறியப்பட்டிருக்கிறது,’’ என்று குறிப்பிட்டிருக்கிறது.துயரங்களை கொண்டாடும் அரசுஆனால் உச்சநீதிமன்றத்தின் கண்டிப்பு குறித்தெல்லாம் அரசாங்கம் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
அது பல வழிகளிலும் உற்சாகமாகவே இருக்கிறது, கொண்டாட்டங்களுக்கும், விளம்பரங்களுக்கும், சந்தைப் படுத்தலுக்கும் ஏராளமாக செலவு செய்கிறது. சந்தைப்படுத்தலில் இந்தியர்கள் சிறந்தவர்கள் அல்ல என்று பிரதமர் கூறலாம். ஆனாலும் அவரது அரசாங்கம் இதற்கு விதிவிலக்கு. இந்த ஆண்டு அவரது அரசாங்கம் விளம்பரத்திற்கு என்று 20 சதவீதம் வரை - அதாவது 1200 கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறது.எனவே, மோடி அரசாங்கம் மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கக்கூடிய சமயத்தில், இந்திய மக்களுக்கு முன் உள்ள கடமைகள் மிகவும் தெளிவானவைகளாகும்.ஒரு நாகரிகமான வாழ்வாதாரத்திற்குத் தேவையான விதத்தில் மக்களின் உரிமைகளைப் பாதுகாத்திட, அரசமைப்புச் சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்திட,நாட்டை பேரழிவிலிருந்து காப்பாற்றிட வலுவான எதிர்ப்பியக்கங்களைக் கட்டுவோம். நம் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளங்களை நொறுக்கிட ஆட்சியாளர்கள் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளையும் முறியடித்திடுவோம்.
தமிழில்: ச.வீரமணி

No comments: