Sunday, February 23, 2014

ஆம் ஆத்மி கட்சி : யார் பக்கம்?


பிரகாஷ் காரத்

ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அர விந்த் கெஜ்ரிவால், சமீபத்தில் தில்லியில் நடைபெற்ற முதலாளிகள் அமைப்பின் (சிஐஐ) கூட்டத்தில் தங்கள் கட்சியின் பொருளாதாரக் கொள்கை குறித்துப் பேசி யிருக்கிறார். ஏஏபி கட்சியின் சார்பாக பொருளாதாரக் கொள்கை குறித்து ஒரு முழுமையான அளவிலான ஆவணம் இல்லாத நிலையில், கெஜ்ரிவால் அங்கே பேசிய பேச்சின் தொனி ஏஏபி கட்சிக்கு பொருளாதாரக் கொள்கை தொடர்பாக உள்ள தத்துவார்த்த நிலைப்பாடு மற்றும் கொள்கை அணுகுமுறை குறித்து தெரி விப்பதாக எடுத்துக்கொள்ளலாம். கெஜ்ரிவால், “அரசாங்கத்தைப் பொறுத்தவரை அதற்கும் வர்த்தகத் திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.அரசாங்கம் வர்த்தகம் எதையும் செய்யக் கூடாது. அவை அனைத்தையும் தனி யார் துறையிடம் விட்டுவிட வேண்டும்’’ என்று பேசியிருக்கிறார்.

அவர் மேலும், தான் இன்ஸ்பெக்டர் ராஜ்ஜியம் மற்றும்லைசன்ஸ் ராஜ்ஜியத்திற்கு எதிரானவன்’’ என்றும் பிரகடனம் செய்திருக் கிறார். கெஜ்ரிவால் தொழில் அதிபர்கள் கூட்டத்தில் பேசியதால் இவ்வாறு பேசியிருக்கிறார் என்றும், இதனை அக்கட்சியின் அடிப்படைப் பொருளாதார சிந்தனையாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் சிலர் கூறலாம். ஆனால், இந்தக் கருத்துக்களை கெஜ்ரிவால் முன்வைக்கும்போது முரண்பாடு எதுவுமின்றி மிகவும் உறுதியாகத்தான் எடுத்துவைத்துள்ளார். இதற்கு முன்பும் ஒரு தடவை அவர், “எங்கள் கட்சியின் பொருளாதாரக் கொள்கைகளைப் பொறுத்தவரை, நாங்கள் முதலாளித்துவவாதிகளுமல்ல, சோசலிசவாதிகளுமல்ல அல்லது இடதுசாரிகளுமல்ல. நாங்கள் மிகவும் `சாமானியர்கள் நாங்கள் எந்த வொரு குறிப்பிட்ட தத்துவத்துடனும் இணைந்தவர்கள் அல்ல. எங்கள் பிரச்சனைகளைத் தீர்க்கக்கூடிய விதத்தில் எந்த தத்துவம் இருக்கிறதோ, அது இடதாக இருந்தாலும் சரி அல்லது வலதாக இருந்தாலும் சரி, அந்த தத்துவத் திலிருந்து நாங்கள் கடன் வாங்கிக் கொள்வோம். ஆயினும் ஒன்றில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். `அரசாங்கம் என்பது வர்த்தகம் எதுவும் செய்யக் கூடாதுஎன்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். வர்த்தகம் என்பது தனிப்பட்ட நபர்களிடம் தான் இருந்திட வேண்டும்.’’ என்றும் கூறியிருக்கிறார்.அரசாங்கத்தைப் பொறுத்தவரை அதற்கும் வர்த்தகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.’’ என்று அடிக்கடி அவர் கூறுவது என்பதும் அனைத்தையும் தனியார் துறையிடமே விட்டுவிட வேண் டும்’’ என்பதும் நவீன தாராளமயக் கண்ணோட்டத்தின் பகுதிகளில் ஒன்றே யாகும்.

இவ்வகைக் கண்ணோட்டம்தான் உலகம் முழுதும் மேலோங்கியிருக்கிறது. இந்த அளவுகோலின்படி அனைத்து வர்த்தகத் துறைகளும் மற்றும் பொருளா தார நடவடிக்கைகளும் தனியார் கைகளிடமே இருந்திட வேண்டும் என்றும், அனைத்தையும் சந்தையே ஆளும் என்றும் ஆகிறது. மின்சாரம், தண்ணீர் விநியோகம் மற்றும் பொதுப் போக்குவரத்து போன்ற அடிப்படை சேவைகளைக் கூட தனியாரிடமே தந் திட வேண்டும் என்றும் ஆகிறது. கெஜ்ரிவால் சிஐஐ கூட்டத்தில் பேசுகையில், அரசாங்கத்தின் கடமை என்ன வெனில் ஒரு நல்ல முறைப்படுத்தும் ஆட்சியை அது நடத்திட வேண்டும் என்றும், அனைத்து வர்த்தக அமைப்பு களும் அரசாங்கத்தின் விதிகளுக்கு உட்பட்டு நடைபெறுகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும் என்றும் வாதிட்டிருக்கிறார்.

இவ்வாறு முறைப் படுத்தும் அமைப்புகள் பெரும் வர்த்தக நிறுவனங்களுக்கு ஆதரவான முறையில் விதிகளை உருவாக்கிட வேண்டும் என்று கூறுவதும் நவீன தாராளமய மாடலின் ஒரு பகுதிதான். தில்லியில் மின் விநியோகம் தனியார்மயமாக்க வேண்டும் என்பதை அவர் எதிர்த்த நாட்களையெல்லாம் கெஜ்ரிவால் மறந்து விட்டது போன்றே தோன்றுகிறது. இப் போது கெஜ்ரிவால் கூறிடும் அளவுகோல், தண்ணீர் தனியார்மயம் சம்பந்தமாக ஏஏபி கட்சியின் தொலைநோக்கு ஆவ ணத்தில் கூறப்பட்டிருப்பதற்கும் எதிரான நிலைப்பாடு என்கிற அளவிற்குச் சென்றிருக்கிறது.
சிஐஐ கூட்டத்தில் கெஜ்ரிவால் பேசியதில் காணப்படும் மற்றொரு முக்கிய அம்சம், “தான் முதலாளித்துவத்திற்கு எதிரானவன் அல்ல, மாறாக சலுகைசார் முதலாளித்துவத்திற்குத்தான் எதிரி’’ என்று கூறியிருப்பதாகும். தில்லியில் மின் விநியோகத்தை மேற்கொண்டுள்ள அம்பானியினுடைய கம்பெனிக்கு எதிராக அல்லது ரிலையன்ஸ் எரிவாயு விலை நிர்ணயம் சம்பந்தமான பிரச்சனைக்கு எதிராக அவர் நடத்தி வரும் போராட்டம் சலுகைசார் முதலாளிகளுக்கு எதிரான வை என்று அவர் வாதிடுகிறார். இங்கேகெஜ்ரிவாலும் அவரது ஏஏபி கட்சியும் பிரதானப் பிரச்சனையை பார்க்க மறுக் கின்றன.

அதாவது நவீன தாராளமயத்தின் குணம் என்பதே மிகப்பெரிய அளவில் சலுகைசார் முதலாளித்துவத்தை உற்பத்தி செய்திடும் என்பதை அவர்கள் பார்க்க மறுக்கிறார்கள். நவீன தாராளமய ஆட்சியில் இயல்பாய் அமைந்திருப் பதே இயற்கை வள ஆதாரங்களைக் கொள்ளையடிக்கவும் ஒட்டுமொத்தத்தில் பெரும் வர்த்தக நிறுவனங்கள் அபரிமித மான லாபம் ஈட்டவும் வசதி செய்து தர வேண்டும் என்பதேயாகும்.உதாரணத்திற்கு கனிம வளங்கள் எடுக்கப்படுவதைப் பார்ப்போம்.

கனிம வளத்துறை தனியார் கம்பெனிகளுக்குத் திறந்துவிடப்பட்டதை அடுத்து அவை அபரிமிதமான லாபம் ஈட்டியிருப்பதை அறிவோம். நவீன தாராளமயக் கொள்கையின் கீழ் அரசுக்கும் பெரும் வர்த்தக அமைப்புகளுக்கும் இடையிலான பிணைப்பு என்பது மிக உயர்ந்த நிலை யிலான சலுகை சார் முதலாளித்துவம் என்பதேயாகும். கெஜ்ரிவாலின் கூற் றின் படி, இவை அனைத்திற்கும் தேவைஒரு நல்ல முறைப்படுத்துபவர் என்றஅளவில்தான். கெஜ்ரிவாலின் அரசாங்கத்தைப் பொறுத்தவரை அதற்கும் வர்த்தகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை’’ என்கிற கருத் தாக்கத்தின்படி நாட்டில் கனிம வளங்கள் எடுக்கப்படுவதும் தனியார் துறையிடம்தான் இருந்திட வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடது சாரிக் கட்சிகளும் கனிம வளங்கள் எடுக்கப்படுவது முழுமையாகப் பொதுத் துறையில்தான் இருந்திட வேண்டும் என்று கோரி வருகின்றன. ஏஏபி கட்சி யைச் சேர்ந்த யோகேந்திர யாதவ் என் பவர் இது, “புத்திசாலித்தனமான பொருளாதாரம் இல்லை’’ என்று பேசியிருக்கிறார். இவ்வாறு இடதுசாரிகளின் நிலைப் பாட்டை ஏஏபி தலைவர்கள் நிராகரிக் கிறார்கள். அதேபோன்று ஏஏபி தலைவர்கள் அடிக்கடி, “நாங்கள் இடதுசாரிகளும் அல்ல, வலதுசாரிகளும் அல்ல’’ என் றும் கூறிக்கொண்டிருக்கிறார்கள்.

பொருளாதாரக் கண்ணோட்டத்தைப் பொறுத்தவரை, அவர்கள், “அது இடது சாரியும் அல்ல, வலதுசாரியும் அல்ல. மாறாக நல்ல சிந்தனை எங்கிருந்து வந்தாலும், அது பழையதாக இருந்தாலும் அல்லது புதியதாக இருந்தாலும், அது நாட்டின் நலனுக்கு ஏற்புடையதாக இருந் தால், ஆதரிப்போம்’’ என்கிறார்கள். அவர்களுடைய சிந்தனாவாதியான யோகேந்திர யாதவ், “இந்தியாவின் இன்றைய நிலையில் இடதுசாரி - வலதுசாரி சிந்தனைகளுக்கு அர்த்தம் ஏது மில்லை’’ என்று கூறியிருக்கிறார். இவ்வாறு கூறும் நபர் தன்னை ஒருசோசலிஸ்ட் என்று கூறிக்கொண்டிருப் பவராவார். இவ்வாறு தாங்கள் இடது சாரிகளுமல்ல, வலதுசாரிகளுமல்லஎங்களுக்கு என்று எந்தத் தத்துவப் பின்னணியும் கிடையாது என்று ஏஏபி கட்சியின் நிலைப்பாடு என்பது நவீன தாராளமயக் கட்டமைப்பிலிருந்து வெளியே போக முடியாத, தங்கள் கொள்கைகளின் குழப்ப நிலையை மூடிமறைப்பதற்கான ஒன்றேயாகும். இத்தகைய கண்ணோட்டத்தின் அடிப் படையில், ஏஏபி கட்சித் தலைவர்கள் இடதுசாரிக் கட்சிகளிடம் காட்டிடும் மனோபாவம் ஆச்சர்யப்படத்தக்கதாக இல்லை. மும்பையில் சமீபத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில், யோகேந்திர யாதவ், “இடது சாரிகள் கொண்டிருப்பது போன்ற தத்துவத்தையோ அல்லது அரசியலையோ நாங்களும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பது தவறானது’’ என்று கூறியிருக்கிறார். அவர் மேலும், “எப்போதெல்லாம் இடதுசாரிகள் கேரளா விலோ அல்லது மேற்கு வங்கத்திலோ அரசாங்கத்தின் அங்கமாக இருக்கிறார் களோ, அப்போதெல்லாம் அவர் கள் மற்ற கட்சிகள் நடந்து கொள் வதைப் போலத்தான் நடந்து கொள்கிறார்கள்,’’ என்றும் கூறியிருக்கிறார்.

யோகேந்திர யாதவ்வைப் பொறுத்த வரை, நிலச்சீர்திருத்தங்கள் அமலாக்கம், தொழிலாளர்களின் உரிமைகளை உத்தரவாதப்படுத்துதல், பஞ்சாயத்து அமைப்புகளுக்கு அதிகாரங்களைப் பரவலாக்கி யமை, இடதுசாரிகளின் தலைமையில் இவ்விரு மாநிலங்களிலும் ஆட்சி நடைபெற்ற சமயத்தில் தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான அட்டூழியங்கள் முற்றிலுமாக இல்லாதிருந் தமை ஆகிய எதுவுமே முக்கியத்துவம் அல்லாதவைகளாகும். அவை அனைத்துமே இடதுசாரிக் கொள்கைகளின் விளைவு கள் அல்லவா? அதேபோன்று அனைவருக்குமான பொது விநியோக முறை வேண்டும் என்கிற இடதுசாரிகளின் நிலைப்பாட்டினையும் யாதவ் எதிர்க் கிறார். மும்பையில் முதலீட்டாளர்களின் மாநாடு ஒன்றில் பேசுகையில், யாதவ், “உணவு மானியங்கள் அளிக்கப்படக் கூடாது. மக்களுக்கு நேரடியாக உணவு அளிப்பது என்பது மிகவும் திறனற்ற ஒன்று என்பதோடு, ஏழைகளுக்கு சேவைசெய்வது என்ற பெயரால் அதிக செலவு பிடிக்கக்கூடியதுமாகும்’’ என்று கூறி யிருக்கிறார்.யாதவ் மேலும், “தாங்கள் காங்கிரஸ் அல்லது பாஜகவிற்கு மாற்றாக மட்டு மல்ல, இடதுசாரிகளுக்கும் மாற்றாக ஒரு மாற்றை அளிக்க விரும்புகிறோம்,’’ என்றும் பீற்றிக்கொண்டுள்ளார். ஏஏபிகட்சியின் மாற்று என்பதன் பொருள் இப்போது தெளிவாகிக் கொண்டிருக் கிறது. அது நவீன தாராளமயக் கொள் கைகளுக்கு மாற்றாக இருக்கப் போவதில்லை, மாறாக அதே கொள்கையை நேர்மையான’’ வடிவத்தில் பின்பற்று மாம்.
தமிழில்: ச.வீரமணி


Sunday, February 16, 2014

ஆர்எஸ்எஸ்/பாஜகவின் பசப்பல் வார்த்தைகள்

 People's Democracy Editorial

2014 மக்களவைக்கான பொதுத் தேர்தல்களையொட்டி காங்கிரஸ் அல்லாத, பாஜக
அல்லாத மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகள் இணைந்து செயல்படுவதற்கான ஒத்துழைப்பு மற்றும் உடன்பாடு உருவாகி யிருப்பதன் காரணமாக,  ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்களுக்கும் அதன் பிரதமர் வேட்பாளருக்கும் நம்பிக்கை யிழந்த நிலையில் ஏற்பட்டுள்ள விரக்தி மற்றும் வெறுப்பு காரணமாக அவர்கள் வெளிப்படுத்தும் வார்த் தைகள் நாகரிக எல்லையை மீறிச் சென்று கொண்டிருக்கின்றன.  ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்களால் அதிலும் குறிப்பாக அவர்களால் அறிவிக்கப்பட்ட பிரதமர் வேட்பாளரால் கட்டவிழ்த்துவிடப்படும்  பண்பாடற்ற சொற்களை பண்புடையவர்கள் எவராலும் நாகரிகமானதாகக் கருத முடியவில்லை.
இந்திய கார்ப்பரேட்டுகளின் ஒரு பிரிவினரும், அவற்றின் மூளையாக செயல் படுபவர்களும், சர்வதே நிதி மூலதனமும் அதே அளவுக்கு நிலை குலைந்து போயுள்ளன.  ஏனெனில் அவை, 1939க்குப் பிந்தைய ஆண்டுகளில் மாபெரும் பொருளாதார மந்தம் ஏற்பட்ட சமயத்தில், பாசிச அடக்குமுறையைக் கட்ட விழ்த்துவிட்டு மக்களின் சுதந்திரத்தை முற்றிலுமாக ஒழித்துக்
கட்டியும், மக்கள் மீது சொல்லொண்ணா அளவிற்கு ஏற்றப்பட்ட பொருளாதாரச் சுரண்
டலையும் தங்கள் கொள்ளை லாபத்தையும் தொடர்வதற்கு, ஹிட்லரின் பாசிசம் எப்படித் தங்களுக்கு உதவியதோ, அதேபோன்று ஆர்எஸ்எஸ் /பாஜக பரிவாரங்களின் சார்பில் முன்னிறுத்தப்பட்டுள்ள பிரதமர் வேட் பாளரை, தங்கள் சார்பில் சிறந்ததொரு நம்பிக்கை நட்சத்திரமாகக் கருதி வந்தன.  நவீன தாராளமய சீர்திருத்தங்களை எவ்வித இடையூறுமின்றி திணித்து மக்கள் மீது மேலும் மேலும் சுமைகளை ஏற்றமுடியும் என்று அவை நம்பிக்கொண்டிருந்தன. ஆனால் காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத ஒரு மாற்று அணி உருவாகி இருப்பது இவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. “மூன்றாவது அணியின் அரசாங்கம் பொருளாதாரச் சீர்திருத்தங்களைத் தாமதப்படுத்தலாம்(டைம்ஸ் ஆப் இந்தியா, பிப்ரவரி 12, 2014) என்று சர்வதேச கிரெடிட் ரேட்டிங் ஏஜன்சி ஒன்று குறிப்பிட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. மேலும் அந்த ஏஜன்சியின் செய்தியாளர், “தேர்தலுக்குப்பின் இந்தியா வில் துண்டு துண்டு கட்சிகளால் அமையும் கூட்டணி அரசாங்கம் பங்குச் சந்தை வணி
கத்திற்கு மாபெரும் அச்சுறுத்தலாக அமைந்திடும்,’’ என்றும் கவலைப்பட்டிருக் கிறார். இதற்கும் மேல் ஏதேனும் சொல்லவேண்டுமா,  என்ன? 

கார்ப்பரேட்டுகள் கனவு காண்பதுபோல் 2014தேர்தல்களில் ஆர்எஸ்எஸ் /பாஜக பரிவாரங்கள் வெற்றிபெற்று மோடியின் ஆட்சி அமைந்தால் இந்தியா மற்றும் மக்களின் நிலை என்னவாகும்? மதவெறித் தீ மேலும் கூர்மையான முறையில் விசிறிவிடப்படும் என்பதோடு, நாட்டு மக்களில் பெரும்பான்மையோருடைய  பொரு ளாதாரச் சுமைகள் மேலும் அதிகரித்திடும்.

தங்களுடைய இந்த அச்சத்தை மறைக்கக் கூடிய விதத்தில், ஆர்எஸ்எஸ் நாட்டு மக்கள் மீது புதியதொரு சொல் விளையாட்டைக் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது. அதனுடைய வெளிப்படையான பிரச்சாரம், நாட்டின் வளர்ச்சி குறித்தும் வளமை குறித்தும் இருக் கிறது. ஆனால், அதன் உண்மையான இலக்கு என்பது தன்னுடைய வெறிபிடித்த சகிப்புத் தன்மையற்ற பாசிச `இந்து ராஷ்ட்ரம்என்னும் நிகழ்ச்சிநிரலை மேலும் கூர்மைப்படுத்தி முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்பதே யாகும்.

நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் முதல்நாளன்றே, பாஜக, நாடாளுமன்றத்தில் வகுப்புவாத வன்முறை தடைச் சட்ட முன்வடிவு அறிமுகப்படுத்தப்பட்டதை வெற்றிகரமான முறையில் வரவிடாமல் செய்ததைப் பார்த்தோம். இதற்கு அது கூறிய காரணம் என்ன? அது நம் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சத்தையே-கூட்டாட்சித்தத்துவத்தையே-மீறுகிறதாம்.  நாட்டின் தற்போதைய கூட் டாட்சிக் கட்ட மைப்புக்கு பாஜக வக்காலத்து வாங்குவது வெறும் கண்துடைப்பேயாகும். ஏனெனில், இந்திய அரசியலமைப்புச்  சட்டத்தைப் பொறுத்தவரை ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அடிப்படை நிலைப்பாடுகளே வேறாகும்.
ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்களின் குருஜி என்று தன்னைத்தானே அழைத்துக் கொண்ட எம்எஸ் கோல்வால்கர்,  அளித்துள்ள `இந்து ராஷ்ட்ரம்என்கிற தத்துவார்த்தக் கட்டுமானமும் (We, Or Our Nationhood Defined, 1939, Fourth Edition, 1947) மற்றும் இக்குறிக்கோளை எய்துவதற்கு,  `சங் பரிவாரம்ஏற்படுத்தியுள்ள ஸ்தாபனக் கட்டமைப்பும் பல ஆண்டுகளுக்கு முன்பே, நம் அரசியலமைப்புச் சட்டம் வரையறுத்துள்ள கூட் டாட்சிக் கட்டமைப்பை குழிதோண்டிப் புதைத்திட வேண்டும் என்று கூறி யிருக்கின் றன.  தற்போதுள்ள அனைத்து `சுயாட்சிமற்றும் `அரை சுயாட்சிமாநிலங்கள் அனைத்தையும் முற்றிலுமாக அழித்து ஒழித்துவிட்டு, `பாரதம்என்கிற ஒரே மாநிலமாக மாற்ற வேண்டும் என்றும், `ஒரே நாடு, ஒரே மாநிலம், ஒரே நாடாளுமன்றம், ஒரே அரசாங்கம் ... எனப் பிரகடனம் செய்திட வேண்டும் என்றும், நாடு மாநிலங்களாகக் கூறுபடுத்தப்படாத ஒரே வடிவ அரசாங்கம் நிறுவப்படக்கூடிய விதத்தில் தற்போதைய அரசியலமைப்புச் சட்டம் மறு பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு, மீளவும் எழுதப்படவேண்டும். என்றும்   அவை தெளிவாகவே தெரிவித் திருக்கின்றன.

ஒருபக்கத்தில் பாஜக, ஜார்கண்ட், சட்டீஸ்கர், உத்தரகாண்ட் மாநிலங்களைத் தாங்கள்தான் உருவாக்கினோம் என்று பீற்றிக்கொள்ளும் அதே சமயத்தில், தெலுங்கானா மாநிலம் தொடர்பாக இரட்டை நாக்குடன் பேசிக்கொண்டிருக்கிறது. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படக்கூடாது என்று எவ்விதப் பிசிறுமின்றி கூறிவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போலல் லாமல், ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் `ஒரே நாடு,. ஒரே மக்கள், ஒரே தேசம்என்று தொடர்ந்து பேசி வருகின்றன. எனவேதான், ஆர்எஸ்எஸ்/பாஜக-வைப் பொறுத்தவரை, கூட்டாட்சித் தத்துவம் என்பது இந்தியாவில் உள்ள பல்வேறு பண்பாடுகளை, மொழிகளை, பன்முகத்தன்மைகளை அங்கீகரிக்கும் ஒன்றாகப் பொருள்கொள்ளவில்லை. மாறாக,  அவர்களைப் பொறுத்தவரை கூட் டாட்சித்தத்துவம் என்பது நாட்டை பல நிர்வாகப் பிரிவுகளாகப் பிரிக்க வேண்டும் என்பதும், அது மக்களின் பல்வகையான மொழி, இனம், பண்பாடு முதலியவற்றின் அடிப்படையில் இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதேயாகும். அனைத்து மாநில நிர்வாகங்களும் மத்திய அரசின் கருணையின்கீழ்தான் இயங்கிட வேண்டும் என்பதே அவர்கள் கோருவதாகும்.  துரதிர்ஷ்டவசமாக, நம் நாட்டில் உள்ள மிகச் சிறிய மாநிலங்களின், குறிப்பாக வட கிழக்கு மாநிலங்களின்,  அனுபவம் இது
தான்.  உதாரணமாக, தற்போது உத்தரப் பிரதேசத்தின் 80 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் ஒரே குரலில் ஒரு நிலைப் பாட்டை மேற்கொள்கையில், அவர்களின் நியாயமான கோரிக்கைகளை எந்தவொரு அரசாங்கமும் உதாசீனம் செய்திட முடியாது. சற்றே கற்பனை செய்து பாருங்கள், இதே மாநிலம் நான்கு அல்லது பல துண்டுகளாக உடையுமானால், ஒவ்வொன்றும் தன் வல்லமையை இழந்து, மத்திய அரசின் கருணை யின் கீழ் இருக்க வேண்டிய நிலை உருவாகி விடும், இல்லையா?

இதேபோன்றுதான் `குஜராத் மாடல்வளர்ச்சி என்று  ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் மேற்கொள்ளும் பிரச்சாரமும் ஆகும்.  திட்டக் கமிஷன் வெளியிட்டுள்ள பல்வேறு விவரங்கள் அது நிகர மாநில உள்நாட்டு உற்பத்தியாக இருந்தாலும் சரி மற்றும் அந்நிய நேரடி முதலீடு வரவாக இருந்தாலும் சரி, குஜராத் ஒடிசா, சட்டீ°கர் போன்று தொழில்துறையில் பின்தங்கியுள்ள மாநிலங்களுக்கும் பின்னால்தான் குஜராத் இருக் கிறது என்று தக்க ஆதாரங்களுடன் மெய்ப் பித்திருக்கிறது. தனி நபர் வருமானத்திலும், நாட்டிலுள்ள பெரிய மாநிலங்களுக்கு மத்தியில் அது ஆறாவதாக இருக்கிறது. வறுமை மட்டத்
தில் ஐந்தாவதாகவும், நீண்ட காலம் உயிர் வாழ்வோர் நிலையில் எட்டாவது இடத்திலும் இருக்கிறது. மனித வள வளர்ச்சி அட்டவணையிலும்கூட அது நாட்டிலுள்ள பெரிய
மாநிலங்களின் வரிசையில் பத்தாவது இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது.  மக்களின் சுகா
தாரம் மற்றும் கல்வி அட்டவணையில் அது ஆறாவது இடத்தை வகிக்கிறது.  குஜராத் மாநிலத்தில் வாழும் குழந்தைகளில் 80 சதவீதத்தினரும், பெண்களில் 55 சதவீதத்தினரும் ரத்த சோகை நோயால் பீடிக்கப்பட்டுள்ளார்கள்.  இதுதான் அதன் `வளர்ச்சி மாடல்ஆகும்.  எதார்த்தநிலை இவ்வாறிருந்த போதிலும், `குஜராத் வளர்ச் சிக் கதையைஇந்தியாவில் உள்ள கார்ப்பரேட் ஊடகங்கள் மக்கள் மத்தியில் அளந்து கொண்டுதான் இருக்கின்றன.
கேரவன்  ஏட்டின் இந்துத்துவா பயங்கர வாதத் தாக்குதல்களில் தொடர்புடைய முக்கிய நபர்களில் ஒருவரான ஆசீமானாந்த் குறித்த சமீபத்திய அட்டைப்படக் கட்டுரையானது இந்துத்துவா பயங்கரவாத வலைப் பின்னலை தோலுரித்துக் காட்டுகிறது. 2007 பிப்ரவரியில் நடைபெற்ற சம்ஜௌதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவைத்துத் தகர்க்கப்பட்டது, 2007 மே மெக்கா  மசூதி வெடிகுண்டுத் தாக்குதல்கள், 2007 அக்டோபர் ஆஜ்மீர் தர்காவில் நடை
பெற்ற வெடிகுண்டுத் தாக்குதல் அனைத்திலும் குற்றம்சாட்டப்பட்டுள்ள முக்கிய நபரான ஆசீமானாந்த் தற்போது காவல் துறையினரின் சிறைக்காவலில் இருக்கிறார். 2006 செப்டம்பர் மற்றும் 2008ல் மாலே கானில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களிலும் இவரின் பங்கு உண்டு என்று பெயரிருந்தபோதிலும், இன்னமும் இவர்மீது குற்ற அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. இந்த நபர் கூறுகிறார்: தான் மேற்கொண்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் அனைத்திற்கும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் உயர்மட்ட அள வில் அனுமதி பெறப்பட்டது. அதாவது தற்போது ஆர்எஸ்எஸ் தலைவராக இருக்கக் கூடிய மோகன் பகவத் வரை தெரியும் என்று கூறியிருக்கிறார்.  மோகன் பகவத், ஆசீமானந்திடம், “இது நிறைவேற்றப்பட வேண்டியது மிக முக்கியம். ஆனால் நீங்கள் இதனை சங் அமைப்புடன் இணைத் திடக்கூடாது,’’ என்று சொன்னதாகக் கூறப்பட்டிருக்கிறது.  மேலும் ஆசிமானந்த் அளித்
துள்ள ஒப்புதல்வாக்குமூலமானது, “ஆசீமானந்த் மேற்படி குற்றங்களைச் செய்
கையில் அவருக்கு உடந்தையாக இருந்த ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்த சுனில் ஜோஷி என்பவன்தான் நாட்டின் பல பகுதி களிலும் நடைபெற்ற சதித்திட்டங்கள் அனைத்திற்கும், அந்த இடங்களில் அணி திரண்டவர்களுக்கும் மற்றும் வெடி குண்டுகளை விதைத்தவர்களுக்கும் இடையே இணைப்புச் சங்கிலியாக இருந் திருக்கிறான். இவன் 2007 டிசம்பரில் மிகவும் மர்மமான முறையில் கொல்லப்பட்டான்.’’ என்கிற அளவிற்கு மிகவும் விபரமாக உள்ளன.

இந்துக்களுக்கு ஆயுதத் தீவிரவாதப் பயிற்சி அளிப்பது என்பதை ஆர்எஸ்எஸ் இயக்கம் மேற்கொண்டு வருவதற்கு நீண்ட வரலாறு உண்டு. வி.டி. சாவர்கர்தான், “அனைத்து அரசியலையும் இந்துமதமாக்கு. இந்துக்கள் அனைவரையும் ராணுவமய மாக்கு’’ என்ற கோஷத்தை முதலில் முன் மொழிந்தவர்.  இவற்றால் உத்வேகமடைந்து, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் நிறுவனரை வழிகாட்டியாகக் கொண்ட டாக்டர் பி.எஸ். மூஞ்சே, பாசிஸ்ட் சர்வாதிகாரி, முசோலினி யைச் சந்திப்பதற்காக இத்தாலிக்குப் பயணம் சென்றார். இந்தியா திரும்பியபின், டாக்டர் மூஞ்சே 1935ல் நாசிக்கில் மத்திய மிலிட்டரி கல்வி சொசைட்டியை நிறுவினார். இதுதான் 1937ல் நிறுவப்பட்டதும், இந்துத்துவா பயங்கரவாதிகளுக்குப் பயிற்சி அளித்து வருவதாகத் தற்போது குற்றஞ் சாட்டப்பட்டுள்ள போன்சாலா மிலிட்டரிப் பள்ளியின் முன்னோடியாகும்.

1939ல் கோல்வால்கர் நாஜி பாசிசத்தின் கீழ் யூதர்களைக் கொன்று குவித்த ஹிட்லரை வெகுவாகப் பாராட்டியதுடன், “இவரது நடவடிக்கைகள் இந்துஸ்தானில் உள்ள நம் அனைவருக்கும் கற்றுக்கொள்வதற்கும் ஆதாயம் அடைவதற்கும் நல்லதொரு படிப் பினையாகும்,’’ என்று கூறியிருக்கிறார். இதன்பின்னர் மிகவும் காலம் கடந்து 1970இல்தான் அவர், “பொதுவாகக் கூறுமிடத்து, தீய சக்திகளால் (இந்த இடத்தில் இந்துக்கள் அல்லாத வர்கள் என்று வாசித்துக்கொள்க) நம்முடைய சித்தாந்தத்தைப் புரிந்து கொள்ள முடியாது.  அவர்களை வலுக்கட்டாயமாகத்தான் கட்டுப் படுத்தப்பட வேண்டும் என்பதே நமக்குக் கிடைத்துள்ள பொதுவான அனுபவமாகும்,’’ என்று கூறுகிறார்.

ஆர்எஸ்எஸ் இயக்கம் எப்போதுமே, தன்னுடைய ஆட்கள் பயங்கரவாத நடவடிக்
கைகளில் சிக்கிக்கொண்டால், அவர் களுடைய பயங்கரவாத நடவடிக்கைகள் வெளிச்சத்திற்கு வந்தால், தங்களுக்கு அதனுடன் எவ்விதமான சம்பந்தமும் இல்லை என்று மறுத்தே வந்திருக்கிறது. உதாரணமாக,  மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேயை ஆர்எஸ்எஸ் இயக்கம் அவர் தங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவரல்ல என்று எப்போதும் மறுத்தே வந்திருக்கிறது. ஆனால் இக்கூற்றை நாதுராம் கோட்சேயின் சகோதரர் கோபால் கோட்சே இன்றளவும் மறுத்து வருகிறார். இதுதொடர்பாக கோபால் கோட்சே ஊடகங்களுக்குத் தெரிவிக்கையில், “சகோதரர்களாகிய நாங்கள் அனைவருமே ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்தான். நாதுராம், தத்தாத்ரேயா, நான் மற்றும் கோவிந்த் அனைவருமே ஆர்எஸ்எஸ்-தான். இன்னும் சரியாகச் சொல்வதென்றால் நாங்கள் எங்கள் வீட் டில் வளர்ந்ததைவிட ஆர்எஸ்எஸ்-ல் வளர்ந்ததுதான் அதிகம். எங்களுக்கு அதுதான் குடும்பம் போன்று இருந்தது. நாதுராம் ஒரு அறிவுஜீவியாக செயல்பட்டான். அவன் தன்னுடைய வாக்கு மூலத்தில் தான் ஆர்எஸ்எஸ் இயக்கத்திலிருந்து விலகிவிட்டதாகக் குறிப்பிட் டிருக்கிறான். இதற்குக் காரணம், கோல்வால்கரும் ஆர்எஸ்எஸ்-உம் காந்தி கொலைக்குப்பின்னர் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டார்கள். ஆனால், அவன் ஆர்எஸ்எஸ் இயக்கத்தைவிட்டுச் சென்றிடவில்லை. (ப்ரண்ட்லைன், ஜனவரி 28, 1994).
இந்தப் பின்னணியில்  வல்லபாய் பட்டேலை ஆர்எஸ்எஸ் இயக்கத்தால் தங்கள் பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டிருப்பவரால் தூக்கி நிறுத்தப்படு வது தொடர்பாக வரலாற்றின் பக்கங்களைத் திருப்பிப்பார்ப்பது அவசியமாகும். மகாத்மா காந்தி கொலை செய்யப்பட்டவுடன் ஆர்எஸ்எஸ் இயக்கத்தைத் தடை செய்தது இதே பட்டேல்தான். பட்டேல் அவர்களால் தயார் செய்யப்பட்ட 1948 பிப்ரவரி 4 தேதியிட்ட அரசு செய்தியானது, “சங் பரிவாரத்தின் ஆட் சேபனைக்குரிய மற்றும் தீங்குபயத்திடும் நட வடிக்கைகள்  எவ்விதத் தடைகளும் இன்றித் தொடர்ந்திருக்கின்றன. சங் பரிவாரத்தால் ஊட்டி வளர்க்கப்பட்ட வன்முறைக் கலாச்சாரம் பல அப்பாவி உயிர்களைப் பலிவாங்கி யிருக்கிறது. இதில் கடைசியாகப் பலியான விலைமதிக்க முடியாத உயிர் காந்திஜியாகும்.’’ என்று கூறுகிறது.
மேலும், ஆர்எஸ்எஸ்/பாஜக தற்போது, 2002ஆம் ஆண்டில் கோத்ரா மதவெறிப் படுகொலைகள் சம்பவத்தின்போது குஜராத் மாநில அரசின் முதல்வராக இருந்து மோடி ஆற்றிய பங்களிப்புகளிலிருந்து அவரை விடுவித்து, நீதித்துறை மூலமாகவும்  அவரை “சுத்தவாளி’’  (clean chit) என்று முத்திரை குத்த முயன்று கொண்டிருக்கிறது.  2012 பிப்ரவரியில் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) இது தொடர்பாக தான் மேற்கொண்ட விசாரணையை முடித்து தாக்கல் செய்த அறிக்கையை இதற்கு சாட்சியமாக அது முன்வைக்கிறது.  இது உண்மைக்கு நேர் மாறான ஒன்று. சிறப்புப் புலனாய்வுக் குழு வானது, 2006 ஜூன் மாதத்தில் அகமதாபாத், குல்பர்கா சொசைட்டி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட ஜாகியா ஜாப்ரியின் முறையீட்டு அடிப்படையில் ஏராளமான சாட்சியங்கள் இருக்கும் அதே சமயத்தில், ஆயினும் மோடிக்கு எதிராக வழக்கு விசாரணை தொடர்வதற்கு அவை போதுமானதல்ல என்றுதான் அறிக்கை சமர்ப்பித்திருக்கிறது. மேலும், இவ்வழக்கில் உச்சநீதிமன்றம் சார்பாக நியமிக்கப்பட்ட வழக்குரைஞர், குஜராத் முதல்வர் இந்திய தண்டனைச் சட்டம் 153(அ) (வகுப்புகளிடையே பகைமையை வளர்த்தல்), 153(ஆ)(தேசிய ஒருமைப்பாட்டிற்குக் குந்தக மாக பழிசுமத்துதல்) மற்றும் 166 (சட்டத்தின் உத்தரவினை பொது ஊழியர் மீறுதல்) ஆகிய பிரிவுகளின்கீழ் விசாரணைக்கு உட் படுத்தப்பட வேண்டியவர் என்று தெளிவாக அறிக்கை தாக்கல் செய்திருக்கிறார். 2002 முஸ்லீம் மக்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கு சம்பந்தமாக இறுதித் தீர்ப்பை பொறுத்தவரை, இன்னமும் ஏராளமான மனுக்கள் உயர்நீதிமன்றத்திலும் மற்றும் உச்சநீதிமன்றத்திலும் நிலுவையில் இருக்கின்றன.எனவே எப்படிப்பார்த்தாலும் இவர் “சுத்த வாளி’’யாக முடியாது.

2002இல் நடந்ததையெல்லாம் மறந்துவிடுங்கள், மோடியின் தலைமையில் வளமான எதிர்காலத்தை நோக்கிப் பயணிப்போம் என்கிறார்கள். மதச்சார்பற்ற, ஜனநாயக, குடியரசுக்கும் நம் மக்களுக்கும் 2002 குஜராத் முஸ்லீம் மக்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்குகளில் இதுவரை நீதி மறுக்கப்பட்டு வருவது தொடர்கிறது. அப்போது முஸ்லீம் மக்களுக்கு ஏற்பட்ட காயங்கள் இன்னமும் ஆறிடவில்லை. இவ்வழக்குகள் அனைத்திலும் நீதி வழங்கப் படும்போது மட்டும்தான், நம் குடியரசு களங்கமில்லாததாகவும் வலுவானதாகவும்  இருக்கும். இவ்வழக்குகளில் நீதி வழங்குவது மேலும் தாமதிக்கப்படுமானால் அது நீதி மறுக்கப்பட்டதாகவே கருதப்படும்.

2014ல் நாட்டிற்குத் தேவை என்னவெனில், காங்கிரசுக்கும் பாஜகவிற்கும் மாற்றாக, நாட்டில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி வழங்கக்கூடியதும், அதன் மூலம் நம் குடியரசை வலுப்படுத்திடவும், நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு சிறந்ததோர் வாழ்க்கையை அளிக்கக் கூடிய விதத்தில் நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்றிடவும் கூடிய ஒரு வலுவான அரசியல் மாற்றை அளிப்பதுதான்.  

- தமிழில்: ச.வீரமணி


Friday, February 14, 2014

எழுச்சியுடன் உருவாகிவரும் மாற்று


பிரகாஷ் காரத்


நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல்கள் நெருங்கிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், தேர்தல் களம் என்பது இரு அணிகளுக்கு இடையேயானதல்ல, மாறாக மூன்றுவிதமான அணிகளுக்கு இடையேயானது. அதாவது காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ, பாஜக தலை மையிலான தேஜகூ மற்றும் காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி என உருவாகி இருக்கிறது.

போட்டி இரு வழியில் இல்லை

ஒருசில மாதங்களுக்கு முன்பு வரை பாஜகவும் காங்கிரஸ் கட்சியும் நினைத்திருந்ததுபோல் இன்றுள்ள நிலைமை இல்லை. நரேந்திர மோடி, சென்ற ஆண்டு செப்டம்பரில் ஆர்எஸ் எஸ்-இன் தலையீட்டின்பேரில் பாஜக வின் பிரதமர் வேட்பாளராக முடி சூட்டப் பட்டபிறகு, பிரதமருக்கான பிரச்சாரத்தில் மோடியைத் தூக்கி நிறுத்திட ஊடகங்கள் கடுமையாக முயன்று வருகின்றன. காங்கிரஸ் கட்சி, தங்களுடைய கட்சி யின் சார்பான பிரச்சாரத்திற்கான பொறுப்பினை ராகுல் காந்தியிடம் தரத் தீர்மானித்த பிறகு, போட்டி என்பது எதையும் செய்துமுடிக்கும் துணிவுள்ள மோடிக்கும் செயல்நயமற்ற ராகுல் காந்திக்கும் இடையிலான ஒன்று என்பது போலச் சித்தரித்து வந்தன. இவ்வாறு மோடிக்கு ஆதரவாக தன்னுடைய அனைத்து விதமான சாமர்த்தியத் துடனும் பாஜக தன்னுடைய பிரச்சாரத் தை முடுக்கிவிட்டிருந்தது.ஆயினும், மக்களை ஏமாற்றக்கூடிய விதத்தில் இவர்கள் நடத்திவந்த நாடகம் எந்த அளவிற்குப் போலியானது என்பதை கடந்த சில வாரங்களில் நடைபெற்ற நிகழ்வுகள் வெளிக் கொண்டுவந்துவிட்டன.

இது ஒன்றும் இரு தலைவர்களுக்கு இடையிலான அல்லது இரு கட்சிகளுக்கு இடையிலான அல்லது ஏன் இரு கூட்டணி களுக்கு இடையிலான போட்டி இல்லை என்பது மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது.நாட்டின் பொருளாதாரம் மிகவும் சீர்கேடு அடைந்து கொண்டிருக்கக் கூடிய பின்னணியில்தான் மக்களவைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. மட்டுமீறிய விலைவாசி உயர்வு, ஏழைவிவசாயிகளின், விவசாயத் தொழி லாளர்களின் வாழ்வாதாரங்கள் முற்றி லுமாக இல்லாது ஒழிக்கப்பட்டுள்ளமை, வேலையில்லா இளைஞர் பட்டாளம் மிகவும் அதிகரித்துள்ளமை ஆகிய வற்றுடன் சாமானிய மக்களுக்கு எட்டாக்கனியாகக்கூடிய விதத்தில் சுகா தாரம், கல்வி மற்றும் வீட்டு வசதிகள் பரி தாபகரமான முறையில் மாறியுள்ளன. இவையனைத்துக்கும், மன்மோகன் சிங் அரசாங்கம் விடாப்பிடியாகக் கடைப் பிடித்து வரும் நவீன தாராளமயக் கொள்கைகள் தான் காரணங்களாகும். நாட்டின் இயற்கை வளங்கள் கொள்ளை போவதும், அபரிமிதமான லஞ்ச ஊழ லும் இதன் வெளிப்பாடுகளேயாகும். பேராசை பிடித்த நவீன தாராளமயக் கொள்கையின் சமூகத் தாக்கத்தை நாடு முழுவதும் பெண்கள் மீது நடந்துவரும் அதிபயங்கரமான தாக்குதல்கள் மற்றும் உரிமைகளுக்காகப் போராடும் மக்களின் மீதான காட்டுமிராண்டித்தனமான ஒடுக்குமுறைகளிலிருந்து நன்கு பார்க்க முடியும்.

இவை அனைத்திற்கும் முழுப் பொறுப்பு ஏற்க வேண்டியது காங்கிரஸ் கட்சியும், ஐமுகூட்டணியும்தான். காங் கிரஸ் கட்சி இவ்வாறு மக்கள் மத்தியில் தனக்கிருந்த பிடிப்பை முழுமையாக இழந்து, நடைபெறவிருக்கும் தேர்தலில் படுவீழ்ச்சியை எதிர்நோக்கிக் கொண் டிருக்கிறது. காங்கிரஸ் மீது மக்களுக்கு இருந்துவரும் கோபத்தை, பாஜக தங் களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள முயற் சித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், நரேந்திர மோடியால் முன்வைக்கப்படும் சிகிச்சை, நோயைவிட மோசமானதாகும். அவர் அரக்கத்தனமான முதலாளித்துவப் பாதையே இப்போதுள்ள துன்பங்களுக் கெல்லாம் மாமருந்து என்று கூறுகிறார். ஆனால் அது மக்களின் இன்றைய அவலநிலையை மேலும் மோசமான அளவிற்கு மாற்றுவதற்கே இட்டுச் செல்லும் என்பதில் ஐயமில்லை. ஊழல் காங்கிரஸ் ஆட்சியால் விளைந்துள்ள அதிருப்தியைப் பயன்படுத்திக்கொண்டு, அதன்மீது தன்னுடைய கெடு நோக்குடைய பெரும்பான்மை வகுப்பு வாதத்தை முன்னெடுத்துச் செல்வதே அவருடைய வளர்ச்சி’’ நிகழ்ச்சிநிரலின் கட்டமைப்பாகும்.

ஆனாலும், மோடி மற்றும் பாஜகவின் செல்வாக்கு என்பது வரையறைக்கு உட்பட்ட ஒன்றே. இதற்கு அதனுடைய ஸ்தாபன செல்வாக்கின்மை மட்டுமல்ல, பல மாநிலங்களில் காங்கிரசுக்கு எதிராக வேறு பல கட்சிகளும் சக்திகளும்கோலோச்சுகின்றன என்பதும், காங் கிரசுக்கு மாற்றாக, பாஜகவைவிட தங்களால் சிறந்ததோர் ஆட்சியை மக்க ளுக்கு அளிக்க முடியும் என்று அவை மக்கள் மனதை வென்றிருப்பதும்தான் காரணங்களாகும்.

மாற்று துருவம்

காங்கிரஸ் அல்லாத மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகளை ஒரேகுடையின்கீழ் கொண்டுவருவதற்கான சமீபத்திய முயற்சிகள் இந்திய அரசியலில் இத்தகைய மாற்றுத் துருவத்தை நோக்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக் கிறது. இவ்வாறு எழுச்சியுடன் உருவாகி யுள்ள மாற்றிற்கு அடித்தளமாக மாநி லக் கட்சிகள் அமைந்துள்ளன. இடதுசாரிக்கட்சிகளுடன் இவை இணையும் போது அது ஓர் அகில இந்திய மாற்றுக் கான வடிவத்தைப் பெறுகிறது.2004லும் 2009லும் நடைபெற்ற கடந்த இரு மக்களவைத் தேர்தல்களிலும், காங்கிரஸ் கட்சி மற்றும் பாஜக ஆகிய இருகட்சிகளும் பெற்ற ஒட்டுமொத்த வாக்குசதவீதம் என்பது 50 சதவீதத்திற்கும் குறைவேயாகும். உண்மையில், இது 2004ல் 46.7 சதவீதம், 2009ல் 47.4 சதவீத மேயாகும். அதன்பின்னர், பல்வேறு மாநிலங்களிலும் நடைபெற்ற மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்களில் மாநிலக் கட்சிகளின் வலு மெய்ப்பிக்கப் பட்டிருக்கின்றன.

அவை மக்களிடம் கணிசமான ஆதரவினைப்பெற்று மாநிலங்களில் ஆட்சிகளை அமைத்திருக் கின்றன. அதிமுக, சமாஜ்வாதிக் கட்சி, பிஜு ஜனதாதளம் மற்றும் ஐக்கிய ஜனதாதளம் ஆகிய கட்சிகள் காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத கட்சிகளுக்கு இடையேயான கூட்டணியாக செயல்பட முன்வந்திருக்கின்றன. இக்கூட் டணியில் மதச்சார்பற்ற ஜனதா தளம், அசாம் கண பரிசத், ஜார்கண்ட் விகாஸ்மோர்ச்சா போன்ற மாநிலக் கட்சிகளும் இணைந்து கொண்டுள்ளன. சென்ற ஆண்டு அக்டோபர் 30 அன்று நடை பெற்ற வகுப்புவாதத்திற்கு எதிராகவும், மக்கள் ஒற்றுமைக்காகவும் நடைபெற்ற சிறப்பு மாநாடு ஒன்று நடைபெற்றதை நினைவுகூர்வோம்.
அந்த சிறப்பு மாநாட்டில் பதினான்கு கட்சிகள் கலந்து கொண்டன. இவற்றில் தற்போதும் ஐ.மு.கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசிய காங்கிரஸ் கட்சியைத் தவிர மற்றஅனைத்துக் கட்சிகளும் பாஜகவை யும், காங்கிரசையும் எதிர்த்து முறியடிப்பதற்கான பொதுவான குறிக் கோளினைப் பகிர்ந்து கொண்டுள்ளன. இக்கட்சிகளில் 11 கட்சிகள் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ளவை களாகும். இந்த 11 கட்சிகளும் காங் கிரசுக்கும் பாஜகவுக்கும் மாற்றாக, வரவிருக்கும் மக்களவைத் தேர்தல் களின்போது ஒன்றிணைந்து செயல்படத் தீர்மானித்திருக்கின்றன. இவற்றுடன் தற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்காத மேலும் சில கட்சிகளும் சேரலாம்.

விஷத்தைக் கக்கும் பாஜக

இக்கட்சிகள் அனைத்தும் ஒரே குடையின் கீழ் வந்திருப்பதை அறிவித்த போது, (இதனை ஊடகங்கள் மூன்றாவது அணி’’ என்று அழைக்கின்றன) பாஜக விற்கு கிலி பிடித்துவிட்டது. மூன்றாவது அணி என்பது ஒரு மாயை’’ என்றும், “தோல்வியடைந்த ஒரு பரிசோதனை’’ என்றும், “மக்களுக்கு ஏற்படையது அல்ல’’ என்றும் மூன்றாவது அணி யைத் தாக்கி பாஜக தலைவர்கள் அறிக்கைகளையும், பேச்சுக்களையும் உதிர்த்தவண்ணம் இருக்கிறார்கள். நரேந்திரமோடி மூன்றாவது அணியை மூன்றாந்தரம்’’  என்று தாக்கி இருக்கிறார்.பாஜக இவ்வாறு விஷத்தைக் கக்கு வதற்கான காரணம் மிகவும் தெளிவானது. இதுநாள்வரை தேர்தல் களம் என்றால் அது காங்கிரசுக்கும் பாஜகவிற்கும் இடையேயானது’’ என்றும், “மோடிக்கும் ராகுலுக்கும் இடையேயானது’’ என்றும் தான் வர்ணிக்கப்பட்டு வந்தது.
இதன்மூலம் காங்கிரஸ் கட்சி மீது மக்களுக்கு இருந்து வரும் அபரிமிதமான அதிருப்தியை நன்கு அறுவடை செய்து கொள்ளலாம் என்று பாஜக மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் கனவு கண்டு வந்தது. ஆனால், காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத தேர்தல் மாற்று ஒன்று எழுச்சி யுடன் உருவாகியிருப்பதானது அக்கட்சியை முழுமையாக நிலைகுலையச் செய்துவிட்டது. பாஜகவின் வெற்றுஆரவாரங்கள் எல்லாம் வெட்டவெளிச்ச மாகிக் கொண்டிருக்கின்றன.பெரும்பான்மை வகுப்புவாதத்தின் அடிப்படையிலான எதேச்சதிகாரத் தலைவராக ஒருவரை பாஜக முன்னிறுத்தியிருப்பதற்கு முற்றிலும் மாறாக, காங்கிரஸ் அல்லாத மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகளின் அணி என்பது முற்றிலும் வித்தியாசமான உருமாதிரியை அடிப்படையாகக் கொண்டதாகும். இடது சாரிக்கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் கூட்டாட்சித் தத்துவத்தின் மீது வலு வான பிடிப்பு உள்ளவைகளாகும். அவை அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட முன்வந்துள்ளதிலிருந்தே இது நன்கு வெளிப்பட்டது. அக்கட்சிகளுக்கு இடையேயான அடையாளங்களும் சுயாட்சி உரிமைகளும் பரஸ்பரம் மதிக்கப்பட்டன. இது மேலும், நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு மாற்றாக மாற்றுக் கொள்கைகளைப் பரப்பிட தேர்தல் பிரச்சாரத்தைப் பயன்படுத்திக்கொள்ள இடதுசாரிக் கட்சிகளுக்கும் வாய்ப்பளித்துள்ளது.

கூட்டுப் பிரகடனம்

ற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முடி வடைந்த பின்னர் 11 கட்சிகளும் சேர்ந்து ஒரு கூட்டத்தை நடத்தி, இம்மாற்று உருவானதை அறிவித்திடத் தீர்மானித்துள்ளன. அந்த சமயத்தில் இம்மாற்றின் அடிப்படை வடிவம், கொள் கைகள் மற்றும் திசைவழி ஆகியவை குறித்து ஒரு பிரகடனமும் வெளியிடப்பட இருக்கிறது.இதில் ஒருங்கிணைந்துள்ள கட்சிகளின் தனித் தன்மையைக் கணக்கில் கொண்டு, இக்கட்சிகளுக்கு இடையே ஒரு தேர்தல் கூட்டணியோ அல்லது இக்கட்சிகளுக்கிடையே இட ஒதுக்கீடு களோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

இக்கட்சிகளில் பெரும் பாலானவை மாநில அடிப்படையில் செயல்படுவதால், அவை இதர மாநி லங்களில் உள்ள கட்சிகளுடன் இடஒதுக்கீடுகள் வைத்துக்கொள்ள வேண் டும் என்று சொல்வது சாத்தியமில்லை. ஆனால், இக்கட்சிகள் அனைத்துமே, அகில இந்திய அளவில் கூட்டி ணைப்புக்கு வாய்ப்பு அளிக்கக்கூடிய விதத்தில், தங்கள் மாநிலங்களில் வலு வைத் திரட்டிட முடியும். அத்தகைய முறையில் அவை தங்கள் மாநிலங்களில் ஏற்படுத்திக்கொண்டுள்ள உடன்பாடு களின் மூலம் காங்கிரசுக்கும், பாஜக விற்கும் எதிராக தங்கள் அரசியல் நிலைப்பாட்டையும், கொள்கைகளையும் வடி வமைத்து, வலுப்படுத்திக்கொள்ள முடியும்.
இத்தகைய காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத மேடையால் காங்கிரஸ்கட்சியின் ஆட்சியால் கடும்வெறுப்புக்கும் சலிப்புக்கும் ஆளாகி யுள்ள மக்களுக்கு ஒரு மாற்றை அளித்திடவும், காங்கிரசுக்கு மாற்று பாஜக தான் என்கிற பாஜகவின் வெற்று ஆரவார முழக்கங்களை வலுவாக முறியடித் திடவும் முடியும்.எழுச்சியுடன் உருவாகியுள்ள இத்தகையதொரு மாற்று, காங்கிரஸ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்திட, மத்தியில் வகுப்புவாத சிந்தனைகொண்ட கட்சி ஆட்சிக்கு வருவதைத் தடுத்திட விரும்பும், நாட்டிலுள்ள அனைத்து மதச்சார்பற்ற-ஜனநாயக சக்திகளும் அணிதிரளும் ஒரு மையமாக அமைந்திடும்.

- தமிழில்: ச.வீரமணி


Friday, February 7, 2014

நாடாளுமன்றத்தை சீர்குலைக்கும் முயற்சி

நாட்டின் 16ஆவது பொதுத் தேர்தல் வருவதற்கு முந்தைய, நாடாளுமன்றத்தின் கடைசி அமர்வு தொடங்கிவிட்டது. இந்த அமர்வுக்கான நிகழ்ச்சிநிரல் உருவாக்கப்பட்டிருக்கும் விதம், இப்போது நடை பெறவிருக்கும் அமர்வை, நாட்டில் ஏற்கனவே மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பெரும்பான்மையான மக்களுக்கு நிவாரணம் அளிக்கக்கூடிய விதத்தில் நிலுவை யில் உள்ள சட்டமுன்வடிவுகளை நிறை வேற்றுவதற்கு பதிலாக, தங்கள் சொந்த தேர்தல் பிரச்சாரத்திற்கான ஒரு மன்றமாக பயன்படுத்திக்கொள்ள ஆட்சியாளர்கள் திட்டமிட்டிருப்பது போலவே தோன்று கிறது.
நாடாளுமன்றத்தின் அமர்வு தொடங்கியதும் முதல்நாள் நிகழ்வுகள் இதனை உறு திப்படுத்தும் விதத்திலேயே அமைந்துள்ளன. நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக விளங்கும் பாஜக-வும் அதேபோன்று தங்கள் சொந்த அரசியல் தேர்தல் பிரச்சாரத் திற்குப் பயன்படுத்திக்கொள்ளும் விதத்தில் நடந்துகொண்டிருப்பது இதனை மேலும் உறுதிப்படுத்துகிறது. எனவே, மக்களுக்கு நிவாரணம் அளிக்கக்கூடிய விதத்தில் தேவை யான சட்டம் எதனையும் நிறைவேற்றாமலேயே இக்கூட்டத்தொடரும் முடிக்கப்பட்டு விடலாம் என்றே தெரிகிறது. 

இந்தப் பின்னணியில்தான் காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூட்டணிக்கும், பாஜக தலைமையிலான தே.ஜ. கூட்டணிக்கும் எதிராக உள்ள 11 மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகள் ஒரே அணியில் நின்று ஒருங்கிணைந்து செயல்பட முடிவெடுத்திருப்பது, மிகுந்த முக்கியத் துவம் பெறுகிறது. நாட்டின் நலன்களுக்கும் நாட்டு மக்களின் நலன்களுக்கும் உதவக்கூடிய விதத்தில் நாடாளுமன்றக் கூட்டத்தொடரை நடத்த வேண்டும் என்று எல்லோருடனும் சேர்ந்து முயற்சிகள் மேற்கொண்டதாலும், நாட்டின் எதிர்கால அரசியல் திசைவழியைக் கணக்கில் கொண்டதாலும் இத்தகைய ஒற்றுமை சாத்தியமானது. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, புரட்சிசோசலிஸ்ட் கட்சி மற்றும் பார்வர்ட் பிளாக் ஆகிய இடதுசாரிக் கட்சிகள் அல்லாமல், சமாஜ்வாதிக் கட்சி, ஐக்கிய ஜனதா தளம், பிஜூ ஜனதா தளம், அதிமுக, மதச்சார்பற்ற ஜனதா தளம், அசாம் கண பரிசத் மற்றும் ஜார்கண்ட் விகாஸ் மஞ்ச் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களும் ஒன்றிணைந்து இதுதொடர்பாக நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரைநிகழ்த்தினார்கள்.

முதலாவதாக, இந்தக் கூட்டத்தொடரை அரசாங்கம் எப்படிபாவித்திருக்கிறது என்றுபார்ப்போம். வழக்கமாக, நமது அரசியலமைப்புச் சட்டம் நிர்ணயித்திருக்கிற ஆணையின்படி, ஒவ்வொரு ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பது நாடாளுமன்றத்தின் இரு அவை களின் கூட்டுக் கூட்டத்தொடராக இருந்திட வேண்டும் என்பதும், அதில் குடியரசுத் தலைவர் உரையாற்ற வேண்டும் என்பதுமாகும். வழக்கமாக, இக்கூட்டத்தொடர் என்பது நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொட ராக இருக்கும். குடியரசுத் தலைவர் உரைக்குப் பின்னர், இரு அவைகளிலுமே நிகழ்ச்சிநிரலின் முதல் இனமாக, அவரது உரையின் மீதான விவாதம், குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானமாக நடைபெறும். குடியரசுத் தலைவரின் உரைக்கு இரு அவைகளின் உறுப்பினர்களும் திருத்தங்கள் கொண்டுவரலாம். அவை அமைச்சரவையால் ஏற்கப்பட்டு, அரசாங்கத்தின் சென்ற ஆண்டு செயல்பாட்டின் இருப்புநிலைக் குறிப் பாக(பேலன்ஸ் ஷீட்டாக)க் கருதப்படும். இந்த நடைமுறையின் காரணமாக இயல்பாகவே அனைத்து கட்சியினரும் ஓர் அர்த்தமுள்ள விவாதத்தை நடத்தி அதன்மீது குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்படும். இது இரு அவைகளிலும் தனித்தனியாக நடைபெறும். இத்தகு நடைமுறையை இந்த ஆண்டு அரசாங்கம் தவிர்த்துவிட்டது. ஏன் அவ்வாறு தவிர்த்தது? இவ்வாறு விவாதம் நடைபெற்றால் நாட்டின் பொருளாதார இறையாண்மையை அரித்துவீழ்த்தக்கூடிய விதத்தில் அது மேற் கொண்ட பொருளாதாரக் கொள்கைகள் குறித் தும் நாட்டு மக்களின் சொல்லொண்ணா துன்பதுயரங்களுக்குக் காரணமான அதன் கொள் கைகள் குறித்தும் உறுப்பினர்கள் தொடுக்கும் தாக்குதலை அதனால் எதிர்கொள்ள முடியாது என்பதாலேயே அரசாங்கம் இவ்வாறு தவிர்த்துவிட்டது என்பது தெள்ளத் தெளிவாகும்.

இதனைத் தவிர்ப்பதற்காகவே அரசாங்கம் மிகவும் தொழில்நுட்பரீதியாக, இந்தக் கூட்டத்தொடரை சென்ற குளிர்காலக் கூட்டத் தொடரின் தொடர்ச்சியாகப் பாவித்து, அதன்காரணமாக குடியரசுத் தலைவரின் உரையை யும், அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான உறுப்பினர்களின் விவாதங் களையும் நிகழ்த்தப் படாமல் பார்த்துக் கொண் டுள்ளது. நாடாளுமன்றக் கூட்டத்தொடர் துவங்கு வதற்கு முன்பு வழக்கமாக நடத்தப்படும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அரசாங்கம் இக்கூட்டத்தொடரில் நிலுவையில் உள்ள 39 சட்டமுன்வடிவுகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று தெரிவித்தது. கூட்டத்தொடர் நடைபெறும் நாட்களோ வெறும் பன்னிரண்டே நாட்களாகும். ஆயினும், இக்கூட்டத்தொடரை நடத்தாமலும் அரசாங்கத்தால் இருந்திட முடியாது. அரசாங்கம் விரும்பினாலும் அதனால் அத னைச் செய்திட முடியாது. வழக்கமாக நடைபெற வேண்டிய அரசாங்கத்தின் செலவினங் களுக்கும், இந்த ஆண்டு நடத்தப்பட வேண்டிய பொதுத் தேர்தலுக்கான செலவினங்களுக்கும் ஏப்ரல் 1க்கு முன்னர் துணை பட்ஜெட் (vote-on-account) அவையில் தாக்கல் செய்யப் பட்டு, நிறைவேற்றப் பட்டாக வேண்டும். சென்றஆண்டு பட்ஜெட் ஒதுக்கீட்டின் அடிப்படை யில் இந்த ஆண்டில் ஜூலை 31 வரையிலான காலத்திற்கு அவையின் அனுமதியைப் பெற்றாக வேண்டும். அடுத்து அமையவிருக்கும் அரசாங்கம் முழு பட்ஜெட்டையும் தாக்கல் செய்யவேண்டியது கடமையாகும். இந்த நிர்ப்பந்தங்களின் பின்னணியில்தான் இந்த அமர்வு கூட்டப்பட்டிருக்கிறது.

ஆயினும், அரசாங்கத்தின் உண்மையான நோக்கங்கள் கூட்டத்தொடரின் முதல்நாளிலேயே, அது வகுப்புவாத வன் முறைத் தடைச் சட்டமுன்வடிவை அறிமுகப்படுத்தியதிலிருந்தே நன்கு விளங்கி விட்டது. இந்தச் சட்டமுன்வடிவு 2004ஆம் ஆண்டிலிருந்தே நிலுவையிலிருந்து வரும்சட்டமுன்வடிவுதான். ஐ.மு.கூ-1 அரசாங்கத் தின் பொதுக் குறைந்தபட்சத் திட்டத்தின் ஓர் அங்கமாகவும் அது இருந்ததுதான்.

அப்போது இவ்வரைவு சட்டமுன்வடிவில் காணப்பட்ட இரு அம்சங்கள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன் ஆட்சேபணைகளைத் தெரிவித்திருந்தது. முதலாவது, இவ்வரைவு சட்டமுன்வடிவானது வகுப்புவாத வன்முறையோடு மட்டும் நின்றுவிடாமல், அதற்கு ஒரு படி மேலேயும் சென்று, அனைத்து வடிவங்களிலான வன்முறைகள் குறித்தும் குறிப்பிட்டிருந்தது. அதாவது சாதி, பிராந்தியம், தொழில் தகராறுகள் ஆகியவற்றால் எழும் அனைத்து வன்முறைகள் குறித்தும் அதில் கூறப்பட்டிருந்தது. இரண்டாவது, அந்த வரைவு சட்டமுன்வடிவு தற்போது நம்முடைய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையாக இருந்துவரும் கூட்டாட்சித் தத்துவத்திற்கு வேட்டு வைக்கக்கூடிய விதத்தில் மாநில அரசுகளின் அதிகாரங்களில் கை வைக்கவும் அதன்மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கங்களின் அரசியலமைப்புச் சட்ட உரிமைகளை வெளிப்படையான முறையில் மீறக்கூடிய விதத்திலும் அமைந்திருந்தது. நாடாளுமன்ற நிலைக்குழுவில் கணிசமான அளவிற்கு விவாதங்கள் நடத்தப்பட்ட பின்னர், அரசாங்கம் ஒரு திருத்தப்பட்ட சட்டமுன்வடிவை தாக்கல் செய்யவேண்டும் என்று பணிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு கூறப்பட்டு பத்தாண்டுகள் கழிந்த பின்னரும்கூட ஐ.மு.கூ. அரசாங்கம் திருத்தப்பட்ட சட்டமுன்வடிவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திடவில்லை.

இப்போது திடீரென்று, அரசியல் கட்சிகளுடன் எவ்விதமான கலந்தாலோசனைகளும் மேற்கொள்ளாமல் மாநிலங்களவையில் திடீரென்று இச்சட்டமுன்வடிவைத் தாக்கல் செய்திருக்கிறது. இதன் மூலம் நம் அரசியலமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படைகளையே மீறக்கூடிய விதத்தில் கொண்டுவந்திருக்கக்கூடிய இச் சட்டமுன்வடிவின் மீது நியாயமானவிதத்தில் எதிர்ப்புகள் கிளம்புவதற்கு வழிவகுத்துத் தந்திருக்கிறது. வகுப்புவாத வன்முறையைத் தடுக்கக் கூடிய விதத்தில், இத்தகையதோர் சட்டமுன்வடிவு அவசியம் தேவை என்றும் அதன்ஷரத்துக்கள் வகுப்புவாத வன்முறைகளைத் தடுக்கக்கூடிய விதத்தில் அமைந்திட வேண் டும், வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைந்து இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும், இவ்வாறு வகுப்புவாத வன்முறையில் ஈடுபடும் கயவர்களுக்கு எதிராக மிகவும் உறுதியான முறையில் வழக்கு தொடுக்கப்பட்டு, விரைந்து அவ்வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெள்ளத் தெளிவாகக் கூறியிருக்கிறது. ஆனால் அதற்காக நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்திற்கே வேட்டு வைக்கக்கூடிய விதத்தில் அது அமைந்துவிடக்கூடாது என்றும் வலியுறுத்துகிறது. இவ்வாறு நாம் கூறியவை குறித்து நியாய மான முறையில் நேர்மையானமுறையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காது, அரசாங்கம் இதுநாள்வரை அதனை கிடப்பில் போட் டிருந்துவிட்டு இப்போது மீண்டும் கொண்டு வந்திருக்கிறது. அதன் உண்மையான நோக்கங் களை இது நன்கு வெளிப்படுத்துகிறது. அதாவது வகுப்புவாத வன்முறைத் தடைச்சட்டமுன்வடிவைத் தாங்கள் நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்ததாகவும், எதிர்க்கட்சிகள்தான் அமளி’’யில் ஈடுபட்டு அதனை நிறைவேற்றாது செய்துவிட்டார்கள் என்றும் மக்கள் மத்தியில் தேர்தல் பிரச் சாரத்தின்போது கூறுவதற்காகவே அரசாங்கம் இவ்வாறு செய்திருக்கிறது.
பாஜக தன்னுடைய மதவெறி நிகழ்ச்சிநிரல் மூலம் நாட்டில் மதவெறித் தீயை விசிறிவிட நடவடிக்கைகள் மேற்கொண்டிருப்பதும், எனவே அதனைத் தடுக்கக்கூடிய விதத்தில் ஏதே னும் சட்டமுன்வடிவு நாடாளுமன்றத்தில் வந்தால் அக்கட்சி அதனைக் கடுமையாக எதிர்த்திடும் என்பதும் நாட்டு மக்கள் அனை வருக்கும் நன்றாகத் தெரியும்.

ஆயினும், இச் சட்டமுன்வடிவு தொடர்பாக மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகள் முன்வைத்த நியாயமான திருத்தங்கள் குறித்து (அவற்றில் பெரும் பாலானவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் கொண்டு வந்தவைகளாகும்) அரசாங்கம் என்ன செய்தது என்றே தெரியவில்லை. இப்போது தாக்கல் செய்யப்படவுள்ள சட்டமுன்வடிவின் நகலை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குச் சுற்றுக்கு விடாமலேயே, அதில் என்ன இருக்கிறது என்று உறுப்பினர்களுக்குத் தெரிவிக்காமலேயே, சட்டமுன்வடிவை மாநிலங்களவையில் தாக்கல் செய்திருக்கிறது. இவ்வாறு இச்சட்டமுன்வடிவைத் தாக்கல் செய்திருப்பதன் மூலம் ஐமுகூ அரசாங்கம் நாட்டு மக்களுக்கு நல்லது செய்யவில்லை, மாறாக நம்பிக்கைத் துரோகமே புரிந்திருக்கிறது.

இவ்வாறு நாடாளுமன்றத்தின் இக்கூட் டத்தொடரின் முதல்நாளை அரசாங்கம் தங்கள் தேர்தல் பிரச்சாரத்திற்காகப் பண்பாடற்ற முறையில் பயன்படுத்திக்கொண்டிருப்பதைப் பார்க்கும்போது, நிச்சயமாக வரவிருக்கும் நாட்களும் இப்படித்தான் இருக்கும் என்ற முடிவிற்கு நம்மை வர வைத்துள்ளது. நிகழ்ச்சிநிரலில், அரசாங்கம், நாடாளு மன்றத்தின் முன் ஆறு சட்டமுன்வடிவுகளைத் தாக்கல் செய்திருக்கிறது. காங்கிரஸ் கட்சி யின் சார்பில் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஞானஸ்நானம் செய்யப்பட்டுள்ள புதியவரால் தயார் செய்யப்பட்ட நிகழ்ச்சிநிரலாக, ஊழல் ஒழிப்பைக் குறிக்கோளாகக் கொண்டு, இந்த ஆறு சட்டமுன்வடிவுகள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. இச்சட்ட முன்வடிவுகளை உரியமுறையில் விவாதித்து நிறைவேற்றிட இக்கூட்டத்தொடரில் போதிய நேரம் கிடை யாது என்பதைச் சொல்ல வேண்டிய அவசி யம் இல்லை.

ஐ.மு.கூ-2 அரசாங்கம் இவற்றின் மீது எவ்வித விவாதமும் இல்லாமல், அவை அமளி’’யில் இருக்கும்போதே நிறைவேற்றிவிடலாம் என்று கருதலாம். அப்படியும் நிறைவேற்றப்படாமல் போனால், “ஊழலை ஒழிக்க உண்மையிலேயே நாங்கள் தயாராகத்தான் இருந்தோம், எதிர்க்கட்சிகள்தான் இவற்றை நிறைவேற்றவிடாமல் செய்து, ஊழலுக்கு வக்காலத்து வாங்குகிறார்கள்’’ என்று மக்கள் மத்தியில் வெட்கங் கெட்டமுறையில் பிரச்சாரத்தில் ஈடுபடலாம்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மற்றும் இதர மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகளும் அரசாங்கத்தை, குறிப்பாக காங்கிரஸ் கட்சியை, எச்சரிக்க விரும்புகின்றன. தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்குவது தொடர்பான , மிகுந்த சச்சரவுக்கு இடமளித்துள்ள, சட்டமுன்வடிவு தொடர்பாக அவையை ஒழுங்குபடுத்தவில்லை என்றால், இந்தக் கூட்டத்தொடர் முழுமையாக சீர்குலைக்கப்படும் என்பதில் ஐயமில்லை. ஏனெனில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களே இதில் மிகவும் கூர்மையாக பிரிந்திருக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் தொடர்ந்து இவ்வாறு அமளி மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியின் திட்டமிட்ட சூழ்ச்சி (game-plan)யாகவே தோன்றுகிறது. இவ்வாறு அமளியாக இருக்கக் கூடிய சமயத்தில் காங்கிரஸ் கட்சியும், அரசாங்கமும் தங்களுக்குச் சாதகமானவற்றை நிறைவேற்றிக் கொள்ளவும் மற்றவற்றை நிறைவேற்றாமல் செய்துவிட்டு அதற்கு எதிர்க்கட்சிகள்தான் காரணம் என்று மக்கள் மத்தியில் எண்ணத்தை ஏற்படுத்தவும் திட்ட மிட்டிருப்பது போல் தோன்றுகிறது. இவற்றின் காரணமாக தேர்தலில் ஏதேனும் கொஞ்சம் ஆதாயம் அடைந்துவிடலாம் என்று அது நம்புகிறது.

நாடாளுமன்றத்தை நடைபெறாது தடுத்திட, காங்கிரஸ் கட்சியும் அரசாங்கமும் இவ்வாறு பண்பாடற்ற முறையில் நடந்தகொண்டிருக்கும் இந்தப் பின்னணியில்தான், நாடாளு மன்றத்திற்குள், காங்கிரஸ் கட்சிக்கும், பாஜக-வால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் மதவெறி சக்திகளுக்கும் எதிராக, ஒருங்கிணைந்து செயல்பட, 11 மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகள் தீர்மானித்திருக்கின்றன. மேலும், 11 கட்சி களின் சார்பில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் அனைவரும், இவ்வாறான ஒருங்கிணைப்பு மாற்றுக்கொள்கைத் திசைவழியில் நாட்டை செலுத்தக்கூடிய விதத்தில் தொடரும் என்றும், அது நாட்டு மக்களுக்குத் தேவையான நிவார ணத்தை ஒரு பக்கத்தில் வழங்கக்கூடிய அதேசமயத்தில், நாட்டிற்கும் நாட்டின் பொருளா தாரத்திற்கும் புத்துயிரூட்டும் என்றும் அறி வித்தனர். இடதுசாரிக் கட்சிகள் ஏற்கனவே 2013 ஜூலை மாதமே நாட்டிற்கான மாற்றுக்கொள்கைத் திசைவழியை வெளியிட்டிருக்கின்றன.கடந்த சில தசாப்தங்களாக நாட்டில் அமைந்த கூட்டணி அரசாங்கங்கள் என்பவை, தேர்தல்கள் முடிந்தபிறகே உருவாகியுள்ளன என்பதே வரலாற்று அனுபவமாக இருந்திருக்கிறது என்பதைக் கணக்கில் கொண்டு, (உதாரணமாக, 1977இல் ஜனதா கட்சி, 1996ல் ஐக்கிய முன்னணி, 1998 மற்றும் 1999ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி, 2004ல் ஐ.மு.கூட்டணி, முதலானவை) இக்கூட் டத்தில் பங்கேற்ற மதச்சார்பற்ற கட்சிகளின் தலைவர்கள், தேர்தலுக்கு முன் அத்தகைய கூட்டணி எதுவும் கிடையாது என்றும், பல மாநிலங்களில் அவ்வாறு கூட்டணி எது வும் அமைத்துக் கொள்ளவில்லை என்றும் அறி வித்தார்கள்.

அவர்கள் மேலும் இவ்வாறான மாற்றுக் கொள்கைத் திசைவழிதான் தங்கள் தலைவராக இருக்கும் என்றும் மாறாக, பாஜக-வால் தம்பட்டம் அடிக்கப்படுவதுபோல எதிர்காலப் பிரதமர் வேட்பாளர் என்று எந்தத்தனிப்பட்ட நபரையும் இப்போது கூறுவதற் கில்லை என்றும் அறிவித்தார்கள்.நாட்டில் இன்றுள்ள அரசியல் சூழ்நிலை யானது நம் குடியரசின் மதச்சார்பற்ற, ஜனநாயக அடித்தளங்களின் நலன்களுக்காகவும், நம் நாட்டு மக்களுக்கு சிறந்ததோர் வாழ்க்கையை உருவாக்கக்கூடிய விதத்திலும் மாற்றுக் கொள்கைத் திசைவழியில் செல்ல வேண்டியது அவசியமாகும். வகுப்புவாத வன்முறைத் தடைச் சட்ட முன்வடிவின் குறிக்கோள்கள் உடனடித் தேவை என்றும் அதற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி ஆதரவு அளித்திடும் என்றும் அழுத்தந்திருத்தமாகக் கூறும் அதே சமயத்தில், இச்சட்டமுன்வடிவின்மீது 2014 பிப்ரவரி 5 அன்று மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தின்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவின் தலைவர் (சீத்தாராம் யெச்சூரி), “வகுப்புவாத வன்முறை பிரச்சனை மீது எங்களுக்கு எந்த சர்ச்சையும் கிடையாது. பிரச்சனை என்னவெனில் இது மாநிலங்களின் உரிமைகள்மீது கை வைக்கக்கூடாது. இதுதான் இதில் உள்ள பிரச்சனை’’ என்று தெளிவு படுத்தினார்.
(தமிழில்: ச.வீரமணி)