Showing posts with label Parliament Democracy is undermined. Show all posts
Showing posts with label Parliament Democracy is undermined. Show all posts

Friday, February 7, 2014

நாடாளுமன்றத்தை சீர்குலைக்கும் முயற்சி

நாட்டின் 16ஆவது பொதுத் தேர்தல் வருவதற்கு முந்தைய, நாடாளுமன்றத்தின் கடைசி அமர்வு தொடங்கிவிட்டது. இந்த அமர்வுக்கான நிகழ்ச்சிநிரல் உருவாக்கப்பட்டிருக்கும் விதம், இப்போது நடை பெறவிருக்கும் அமர்வை, நாட்டில் ஏற்கனவே மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பெரும்பான்மையான மக்களுக்கு நிவாரணம் அளிக்கக்கூடிய விதத்தில் நிலுவை யில் உள்ள சட்டமுன்வடிவுகளை நிறை வேற்றுவதற்கு பதிலாக, தங்கள் சொந்த தேர்தல் பிரச்சாரத்திற்கான ஒரு மன்றமாக பயன்படுத்திக்கொள்ள ஆட்சியாளர்கள் திட்டமிட்டிருப்பது போலவே தோன்று கிறது.
நாடாளுமன்றத்தின் அமர்வு தொடங்கியதும் முதல்நாள் நிகழ்வுகள் இதனை உறு திப்படுத்தும் விதத்திலேயே அமைந்துள்ளன. நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக விளங்கும் பாஜக-வும் அதேபோன்று தங்கள் சொந்த அரசியல் தேர்தல் பிரச்சாரத் திற்குப் பயன்படுத்திக்கொள்ளும் விதத்தில் நடந்துகொண்டிருப்பது இதனை மேலும் உறுதிப்படுத்துகிறது. எனவே, மக்களுக்கு நிவாரணம் அளிக்கக்கூடிய விதத்தில் தேவை யான சட்டம் எதனையும் நிறைவேற்றாமலேயே இக்கூட்டத்தொடரும் முடிக்கப்பட்டு விடலாம் என்றே தெரிகிறது. 

இந்தப் பின்னணியில்தான் காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூட்டணிக்கும், பாஜக தலைமையிலான தே.ஜ. கூட்டணிக்கும் எதிராக உள்ள 11 மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகள் ஒரே அணியில் நின்று ஒருங்கிணைந்து செயல்பட முடிவெடுத்திருப்பது, மிகுந்த முக்கியத் துவம் பெறுகிறது. நாட்டின் நலன்களுக்கும் நாட்டு மக்களின் நலன்களுக்கும் உதவக்கூடிய விதத்தில் நாடாளுமன்றக் கூட்டத்தொடரை நடத்த வேண்டும் என்று எல்லோருடனும் சேர்ந்து முயற்சிகள் மேற்கொண்டதாலும், நாட்டின் எதிர்கால அரசியல் திசைவழியைக் கணக்கில் கொண்டதாலும் இத்தகைய ஒற்றுமை சாத்தியமானது. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, புரட்சிசோசலிஸ்ட் கட்சி மற்றும் பார்வர்ட் பிளாக் ஆகிய இடதுசாரிக் கட்சிகள் அல்லாமல், சமாஜ்வாதிக் கட்சி, ஐக்கிய ஜனதா தளம், பிஜூ ஜனதா தளம், அதிமுக, மதச்சார்பற்ற ஜனதா தளம், அசாம் கண பரிசத் மற்றும் ஜார்கண்ட் விகாஸ் மஞ்ச் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களும் ஒன்றிணைந்து இதுதொடர்பாக நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரைநிகழ்த்தினார்கள்.

முதலாவதாக, இந்தக் கூட்டத்தொடரை அரசாங்கம் எப்படிபாவித்திருக்கிறது என்றுபார்ப்போம். வழக்கமாக, நமது அரசியலமைப்புச் சட்டம் நிர்ணயித்திருக்கிற ஆணையின்படி, ஒவ்வொரு ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பது நாடாளுமன்றத்தின் இரு அவை களின் கூட்டுக் கூட்டத்தொடராக இருந்திட வேண்டும் என்பதும், அதில் குடியரசுத் தலைவர் உரையாற்ற வேண்டும் என்பதுமாகும். வழக்கமாக, இக்கூட்டத்தொடர் என்பது நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொட ராக இருக்கும். குடியரசுத் தலைவர் உரைக்குப் பின்னர், இரு அவைகளிலுமே நிகழ்ச்சிநிரலின் முதல் இனமாக, அவரது உரையின் மீதான விவாதம், குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானமாக நடைபெறும். குடியரசுத் தலைவரின் உரைக்கு இரு அவைகளின் உறுப்பினர்களும் திருத்தங்கள் கொண்டுவரலாம். அவை அமைச்சரவையால் ஏற்கப்பட்டு, அரசாங்கத்தின் சென்ற ஆண்டு செயல்பாட்டின் இருப்புநிலைக் குறிப் பாக(பேலன்ஸ் ஷீட்டாக)க் கருதப்படும். இந்த நடைமுறையின் காரணமாக இயல்பாகவே அனைத்து கட்சியினரும் ஓர் அர்த்தமுள்ள விவாதத்தை நடத்தி அதன்மீது குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்படும். இது இரு அவைகளிலும் தனித்தனியாக நடைபெறும். இத்தகு நடைமுறையை இந்த ஆண்டு அரசாங்கம் தவிர்த்துவிட்டது. ஏன் அவ்வாறு தவிர்த்தது? இவ்வாறு விவாதம் நடைபெற்றால் நாட்டின் பொருளாதார இறையாண்மையை அரித்துவீழ்த்தக்கூடிய விதத்தில் அது மேற் கொண்ட பொருளாதாரக் கொள்கைகள் குறித் தும் நாட்டு மக்களின் சொல்லொண்ணா துன்பதுயரங்களுக்குக் காரணமான அதன் கொள் கைகள் குறித்தும் உறுப்பினர்கள் தொடுக்கும் தாக்குதலை அதனால் எதிர்கொள்ள முடியாது என்பதாலேயே அரசாங்கம் இவ்வாறு தவிர்த்துவிட்டது என்பது தெள்ளத் தெளிவாகும்.

இதனைத் தவிர்ப்பதற்காகவே அரசாங்கம் மிகவும் தொழில்நுட்பரீதியாக, இந்தக் கூட்டத்தொடரை சென்ற குளிர்காலக் கூட்டத் தொடரின் தொடர்ச்சியாகப் பாவித்து, அதன்காரணமாக குடியரசுத் தலைவரின் உரையை யும், அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான உறுப்பினர்களின் விவாதங் களையும் நிகழ்த்தப் படாமல் பார்த்துக் கொண் டுள்ளது. நாடாளுமன்றக் கூட்டத்தொடர் துவங்கு வதற்கு முன்பு வழக்கமாக நடத்தப்படும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அரசாங்கம் இக்கூட்டத்தொடரில் நிலுவையில் உள்ள 39 சட்டமுன்வடிவுகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று தெரிவித்தது. கூட்டத்தொடர் நடைபெறும் நாட்களோ வெறும் பன்னிரண்டே நாட்களாகும். ஆயினும், இக்கூட்டத்தொடரை நடத்தாமலும் அரசாங்கத்தால் இருந்திட முடியாது. அரசாங்கம் விரும்பினாலும் அதனால் அத னைச் செய்திட முடியாது. வழக்கமாக நடைபெற வேண்டிய அரசாங்கத்தின் செலவினங் களுக்கும், இந்த ஆண்டு நடத்தப்பட வேண்டிய பொதுத் தேர்தலுக்கான செலவினங்களுக்கும் ஏப்ரல் 1க்கு முன்னர் துணை பட்ஜெட் (vote-on-account) அவையில் தாக்கல் செய்யப் பட்டு, நிறைவேற்றப் பட்டாக வேண்டும். சென்றஆண்டு பட்ஜெட் ஒதுக்கீட்டின் அடிப்படை யில் இந்த ஆண்டில் ஜூலை 31 வரையிலான காலத்திற்கு அவையின் அனுமதியைப் பெற்றாக வேண்டும். அடுத்து அமையவிருக்கும் அரசாங்கம் முழு பட்ஜெட்டையும் தாக்கல் செய்யவேண்டியது கடமையாகும். இந்த நிர்ப்பந்தங்களின் பின்னணியில்தான் இந்த அமர்வு கூட்டப்பட்டிருக்கிறது.

ஆயினும், அரசாங்கத்தின் உண்மையான நோக்கங்கள் கூட்டத்தொடரின் முதல்நாளிலேயே, அது வகுப்புவாத வன் முறைத் தடைச் சட்டமுன்வடிவை அறிமுகப்படுத்தியதிலிருந்தே நன்கு விளங்கி விட்டது. இந்தச் சட்டமுன்வடிவு 2004ஆம் ஆண்டிலிருந்தே நிலுவையிலிருந்து வரும்சட்டமுன்வடிவுதான். ஐ.மு.கூ-1 அரசாங்கத் தின் பொதுக் குறைந்தபட்சத் திட்டத்தின் ஓர் அங்கமாகவும் அது இருந்ததுதான்.

அப்போது இவ்வரைவு சட்டமுன்வடிவில் காணப்பட்ட இரு அம்சங்கள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன் ஆட்சேபணைகளைத் தெரிவித்திருந்தது. முதலாவது, இவ்வரைவு சட்டமுன்வடிவானது வகுப்புவாத வன்முறையோடு மட்டும் நின்றுவிடாமல், அதற்கு ஒரு படி மேலேயும் சென்று, அனைத்து வடிவங்களிலான வன்முறைகள் குறித்தும் குறிப்பிட்டிருந்தது. அதாவது சாதி, பிராந்தியம், தொழில் தகராறுகள் ஆகியவற்றால் எழும் அனைத்து வன்முறைகள் குறித்தும் அதில் கூறப்பட்டிருந்தது. இரண்டாவது, அந்த வரைவு சட்டமுன்வடிவு தற்போது நம்முடைய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையாக இருந்துவரும் கூட்டாட்சித் தத்துவத்திற்கு வேட்டு வைக்கக்கூடிய விதத்தில் மாநில அரசுகளின் அதிகாரங்களில் கை வைக்கவும் அதன்மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கங்களின் அரசியலமைப்புச் சட்ட உரிமைகளை வெளிப்படையான முறையில் மீறக்கூடிய விதத்திலும் அமைந்திருந்தது. நாடாளுமன்ற நிலைக்குழுவில் கணிசமான அளவிற்கு விவாதங்கள் நடத்தப்பட்ட பின்னர், அரசாங்கம் ஒரு திருத்தப்பட்ட சட்டமுன்வடிவை தாக்கல் செய்யவேண்டும் என்று பணிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு கூறப்பட்டு பத்தாண்டுகள் கழிந்த பின்னரும்கூட ஐ.மு.கூ. அரசாங்கம் திருத்தப்பட்ட சட்டமுன்வடிவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திடவில்லை.

இப்போது திடீரென்று, அரசியல் கட்சிகளுடன் எவ்விதமான கலந்தாலோசனைகளும் மேற்கொள்ளாமல் மாநிலங்களவையில் திடீரென்று இச்சட்டமுன்வடிவைத் தாக்கல் செய்திருக்கிறது. இதன் மூலம் நம் அரசியலமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படைகளையே மீறக்கூடிய விதத்தில் கொண்டுவந்திருக்கக்கூடிய இச் சட்டமுன்வடிவின் மீது நியாயமானவிதத்தில் எதிர்ப்புகள் கிளம்புவதற்கு வழிவகுத்துத் தந்திருக்கிறது. வகுப்புவாத வன்முறையைத் தடுக்கக் கூடிய விதத்தில், இத்தகையதோர் சட்டமுன்வடிவு அவசியம் தேவை என்றும் அதன்ஷரத்துக்கள் வகுப்புவாத வன்முறைகளைத் தடுக்கக்கூடிய விதத்தில் அமைந்திட வேண் டும், வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைந்து இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும், இவ்வாறு வகுப்புவாத வன்முறையில் ஈடுபடும் கயவர்களுக்கு எதிராக மிகவும் உறுதியான முறையில் வழக்கு தொடுக்கப்பட்டு, விரைந்து அவ்வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெள்ளத் தெளிவாகக் கூறியிருக்கிறது. ஆனால் அதற்காக நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்திற்கே வேட்டு வைக்கக்கூடிய விதத்தில் அது அமைந்துவிடக்கூடாது என்றும் வலியுறுத்துகிறது. இவ்வாறு நாம் கூறியவை குறித்து நியாய மான முறையில் நேர்மையானமுறையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காது, அரசாங்கம் இதுநாள்வரை அதனை கிடப்பில் போட் டிருந்துவிட்டு இப்போது மீண்டும் கொண்டு வந்திருக்கிறது. அதன் உண்மையான நோக்கங் களை இது நன்கு வெளிப்படுத்துகிறது. அதாவது வகுப்புவாத வன்முறைத் தடைச்சட்டமுன்வடிவைத் தாங்கள் நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்ததாகவும், எதிர்க்கட்சிகள்தான் அமளி’’யில் ஈடுபட்டு அதனை நிறைவேற்றாது செய்துவிட்டார்கள் என்றும் மக்கள் மத்தியில் தேர்தல் பிரச் சாரத்தின்போது கூறுவதற்காகவே அரசாங்கம் இவ்வாறு செய்திருக்கிறது.
பாஜக தன்னுடைய மதவெறி நிகழ்ச்சிநிரல் மூலம் நாட்டில் மதவெறித் தீயை விசிறிவிட நடவடிக்கைகள் மேற்கொண்டிருப்பதும், எனவே அதனைத் தடுக்கக்கூடிய விதத்தில் ஏதே னும் சட்டமுன்வடிவு நாடாளுமன்றத்தில் வந்தால் அக்கட்சி அதனைக் கடுமையாக எதிர்த்திடும் என்பதும் நாட்டு மக்கள் அனை வருக்கும் நன்றாகத் தெரியும்.

ஆயினும், இச் சட்டமுன்வடிவு தொடர்பாக மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகள் முன்வைத்த நியாயமான திருத்தங்கள் குறித்து (அவற்றில் பெரும் பாலானவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் கொண்டு வந்தவைகளாகும்) அரசாங்கம் என்ன செய்தது என்றே தெரியவில்லை. இப்போது தாக்கல் செய்யப்படவுள்ள சட்டமுன்வடிவின் நகலை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குச் சுற்றுக்கு விடாமலேயே, அதில் என்ன இருக்கிறது என்று உறுப்பினர்களுக்குத் தெரிவிக்காமலேயே, சட்டமுன்வடிவை மாநிலங்களவையில் தாக்கல் செய்திருக்கிறது. இவ்வாறு இச்சட்டமுன்வடிவைத் தாக்கல் செய்திருப்பதன் மூலம் ஐமுகூ அரசாங்கம் நாட்டு மக்களுக்கு நல்லது செய்யவில்லை, மாறாக நம்பிக்கைத் துரோகமே புரிந்திருக்கிறது.

இவ்வாறு நாடாளுமன்றத்தின் இக்கூட் டத்தொடரின் முதல்நாளை அரசாங்கம் தங்கள் தேர்தல் பிரச்சாரத்திற்காகப் பண்பாடற்ற முறையில் பயன்படுத்திக்கொண்டிருப்பதைப் பார்க்கும்போது, நிச்சயமாக வரவிருக்கும் நாட்களும் இப்படித்தான் இருக்கும் என்ற முடிவிற்கு நம்மை வர வைத்துள்ளது. நிகழ்ச்சிநிரலில், அரசாங்கம், நாடாளு மன்றத்தின் முன் ஆறு சட்டமுன்வடிவுகளைத் தாக்கல் செய்திருக்கிறது. காங்கிரஸ் கட்சி யின் சார்பில் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஞானஸ்நானம் செய்யப்பட்டுள்ள புதியவரால் தயார் செய்யப்பட்ட நிகழ்ச்சிநிரலாக, ஊழல் ஒழிப்பைக் குறிக்கோளாகக் கொண்டு, இந்த ஆறு சட்டமுன்வடிவுகள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. இச்சட்ட முன்வடிவுகளை உரியமுறையில் விவாதித்து நிறைவேற்றிட இக்கூட்டத்தொடரில் போதிய நேரம் கிடை யாது என்பதைச் சொல்ல வேண்டிய அவசி யம் இல்லை.

ஐ.மு.கூ-2 அரசாங்கம் இவற்றின் மீது எவ்வித விவாதமும் இல்லாமல், அவை அமளி’’யில் இருக்கும்போதே நிறைவேற்றிவிடலாம் என்று கருதலாம். அப்படியும் நிறைவேற்றப்படாமல் போனால், “ஊழலை ஒழிக்க உண்மையிலேயே நாங்கள் தயாராகத்தான் இருந்தோம், எதிர்க்கட்சிகள்தான் இவற்றை நிறைவேற்றவிடாமல் செய்து, ஊழலுக்கு வக்காலத்து வாங்குகிறார்கள்’’ என்று மக்கள் மத்தியில் வெட்கங் கெட்டமுறையில் பிரச்சாரத்தில் ஈடுபடலாம்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மற்றும் இதர மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகளும் அரசாங்கத்தை, குறிப்பாக காங்கிரஸ் கட்சியை, எச்சரிக்க விரும்புகின்றன. தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்குவது தொடர்பான , மிகுந்த சச்சரவுக்கு இடமளித்துள்ள, சட்டமுன்வடிவு தொடர்பாக அவையை ஒழுங்குபடுத்தவில்லை என்றால், இந்தக் கூட்டத்தொடர் முழுமையாக சீர்குலைக்கப்படும் என்பதில் ஐயமில்லை. ஏனெனில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களே இதில் மிகவும் கூர்மையாக பிரிந்திருக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் தொடர்ந்து இவ்வாறு அமளி மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியின் திட்டமிட்ட சூழ்ச்சி (game-plan)யாகவே தோன்றுகிறது. இவ்வாறு அமளியாக இருக்கக் கூடிய சமயத்தில் காங்கிரஸ் கட்சியும், அரசாங்கமும் தங்களுக்குச் சாதகமானவற்றை நிறைவேற்றிக் கொள்ளவும் மற்றவற்றை நிறைவேற்றாமல் செய்துவிட்டு அதற்கு எதிர்க்கட்சிகள்தான் காரணம் என்று மக்கள் மத்தியில் எண்ணத்தை ஏற்படுத்தவும் திட்ட மிட்டிருப்பது போல் தோன்றுகிறது. இவற்றின் காரணமாக தேர்தலில் ஏதேனும் கொஞ்சம் ஆதாயம் அடைந்துவிடலாம் என்று அது நம்புகிறது.

நாடாளுமன்றத்தை நடைபெறாது தடுத்திட, காங்கிரஸ் கட்சியும் அரசாங்கமும் இவ்வாறு பண்பாடற்ற முறையில் நடந்தகொண்டிருக்கும் இந்தப் பின்னணியில்தான், நாடாளு மன்றத்திற்குள், காங்கிரஸ் கட்சிக்கும், பாஜக-வால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் மதவெறி சக்திகளுக்கும் எதிராக, ஒருங்கிணைந்து செயல்பட, 11 மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகள் தீர்மானித்திருக்கின்றன. மேலும், 11 கட்சி களின் சார்பில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் அனைவரும், இவ்வாறான ஒருங்கிணைப்பு மாற்றுக்கொள்கைத் திசைவழியில் நாட்டை செலுத்தக்கூடிய விதத்தில் தொடரும் என்றும், அது நாட்டு மக்களுக்குத் தேவையான நிவார ணத்தை ஒரு பக்கத்தில் வழங்கக்கூடிய அதேசமயத்தில், நாட்டிற்கும் நாட்டின் பொருளா தாரத்திற்கும் புத்துயிரூட்டும் என்றும் அறி வித்தனர். இடதுசாரிக் கட்சிகள் ஏற்கனவே 2013 ஜூலை மாதமே நாட்டிற்கான மாற்றுக்கொள்கைத் திசைவழியை வெளியிட்டிருக்கின்றன.கடந்த சில தசாப்தங்களாக நாட்டில் அமைந்த கூட்டணி அரசாங்கங்கள் என்பவை, தேர்தல்கள் முடிந்தபிறகே உருவாகியுள்ளன என்பதே வரலாற்று அனுபவமாக இருந்திருக்கிறது என்பதைக் கணக்கில் கொண்டு, (உதாரணமாக, 1977இல் ஜனதா கட்சி, 1996ல் ஐக்கிய முன்னணி, 1998 மற்றும் 1999ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி, 2004ல் ஐ.மு.கூட்டணி, முதலானவை) இக்கூட் டத்தில் பங்கேற்ற மதச்சார்பற்ற கட்சிகளின் தலைவர்கள், தேர்தலுக்கு முன் அத்தகைய கூட்டணி எதுவும் கிடையாது என்றும், பல மாநிலங்களில் அவ்வாறு கூட்டணி எது வும் அமைத்துக் கொள்ளவில்லை என்றும் அறி வித்தார்கள்.

அவர்கள் மேலும் இவ்வாறான மாற்றுக் கொள்கைத் திசைவழிதான் தங்கள் தலைவராக இருக்கும் என்றும் மாறாக, பாஜக-வால் தம்பட்டம் அடிக்கப்படுவதுபோல எதிர்காலப் பிரதமர் வேட்பாளர் என்று எந்தத்தனிப்பட்ட நபரையும் இப்போது கூறுவதற் கில்லை என்றும் அறிவித்தார்கள்.நாட்டில் இன்றுள்ள அரசியல் சூழ்நிலை யானது நம் குடியரசின் மதச்சார்பற்ற, ஜனநாயக அடித்தளங்களின் நலன்களுக்காகவும், நம் நாட்டு மக்களுக்கு சிறந்ததோர் வாழ்க்கையை உருவாக்கக்கூடிய விதத்திலும் மாற்றுக் கொள்கைத் திசைவழியில் செல்ல வேண்டியது அவசியமாகும். வகுப்புவாத வன்முறைத் தடைச் சட்ட முன்வடிவின் குறிக்கோள்கள் உடனடித் தேவை என்றும் அதற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி ஆதரவு அளித்திடும் என்றும் அழுத்தந்திருத்தமாகக் கூறும் அதே சமயத்தில், இச்சட்டமுன்வடிவின்மீது 2014 பிப்ரவரி 5 அன்று மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தின்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவின் தலைவர் (சீத்தாராம் யெச்சூரி), “வகுப்புவாத வன்முறை பிரச்சனை மீது எங்களுக்கு எந்த சர்ச்சையும் கிடையாது. பிரச்சனை என்னவெனில் இது மாநிலங்களின் உரிமைகள்மீது கை வைக்கக்கூடாது. இதுதான் இதில் உள்ள பிரச்சனை’’ என்று தெளிவு படுத்தினார்.
(தமிழில்: ச.வீரமணி)


Thursday, August 8, 2013

நாடாளுமன்றம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது


ஆட்சியாளர்கள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களை செயல் படாது தடுத்திட மேற்கொள்ளும் முயற்சிகளும், தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பதில் பணபலத்தின் செல் வாக்கு வளர்ந்து கொண்டிருப்பதும், மக்களின் நியாயமான அபிலாசை களைக் கருக வைத்திருக்கிறது.
நாடாளுமன்றம் என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவ லனாகும். அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரை, நாட்டு மக்களே ஒப்புயர்வற்ற வர்கள் என்று மிகவும் கம்பீரமாகப் பறை சாற்றுகிறது. அவர்கள் தங்கள் ஒப்புயர் வற்ற நிலையினைத் தங்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் வெளிப்படுத்துகிறார்கள். இப்போதெல் லாம், நாடாளுமன்றம் செயல்படா நிலையே தலைப்புச் செய்திகளாக உள்ளது. அது உண்மையும் கூட. இதுவரையிலான இந்திய நாடாளுமன்ற மக்களவைகளிலேயே தற்போதைய 15ஆவது மக்களவைதான், மிகவும் குறைந்த நாட்களே இயங்கிய ஒன்று என்கிற வரலாறு’(?) படைத்துள்ளது.

மக்களவை செயலகம் தயார்செய்துள்ள புள்ளி விவரங்களின்படி, 15ஆவது மக்களவையின் 12ஆவது அமர்வுவரை 1,157 மணி நேரம்தான் அமர்ந்திருக்கிறது. 14ஆவது மக்களவையின் 1,736 மணி 55 நிமிடங்களுடன் ஒப்பிடுகையில் இது மிக வும் பின்தங்கிய ஒன்று என்பதைப் புரிந்து கொள்ள முடியும். உண்மையில் முதலா வது மக்களவை 677 நாட்கள் அமர்ந்து, தன்னுடைய 14 அமர்வுகளில் 3,784 மணி நேரம் இயங்கி இருக்கிறது. நாடாளுமன்றத்தின் மேலவை என்று கூறப்படும் மாநிலங்களவையிலும் நிலை மைகளில் எந்த வித்தியாசமும் இல்லை. வரலாற்றில் முதன்முறையாக, மாநிலங் களவை பட்ஜெட்டை எவ்வித விவாதமு மின்றி திருப்பி அனுப்பி இருக்கிறது.பல சட்ட முன்வடிவுகள் கிடப்பில்நாட்டில் ஜனநாயகத்தின் செயல்பாடு அரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என் பதை இது மட்டும் காட்டவில்லை. ஆட்சி யாளர்கள் பல கொள்கை முடிவுகளை நாட்டின் ஒப்புயர்வற்ற அமைப்பான நாடாளுமன்றத்தைக் கலந்தாலோசிக்கா மலேயே எடுத்துக்கொண்டிருக்கின்றனர். இதற்கு மிகச் சரியான எடுத்துக்காட்டு, ‘ஆதார்’ (Aadhar)அட்டை வழங்குத லாகும். ஆதார்அட்டை என்பது அனைத்து அரசு நலத்திட்ட உதவிகளையும் பெறு வதற்கு அத்தியாவசியமான ஒன்று என்று கருதப்படுகிறது. ஆதார்எண் இல்லா மல் ஒரு மாணவன் மத்திய, மாநில அரசு களிடமிருந்து எவ்வித உதவியும் பெற முடியாது. நேரடிப் பயன் மாற்றல் (Direct Benefit Transfer) என்னும் திட்டமானது ஆதார்எண்ணையே அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.

வங்கிக் கணக்குகள் இதனுடன் இணைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், ஆதார் திட்டத்திற்கு சட்டரீதி யாக என்ன பின்னணி இருக்கிறது? ஆதார் அமலாக்கத்திற்கான சட்டமாக தன்னிகரற்ற அடையாளஅட்டை சட்ட முன்வடிவு (UID bill - Unique Identification Bill) கருதப்படுகிறது. ஆனால், இச்சட்ட முன்வடிவின் பல ஷரத்துக்களுக்கு நாடாளுமன்ற நிலைக்குழு தன்னுடைய அறிக்கையில் கடும் ஆட்சேபணைகளைத் தெரிவித்திருந்தது. அரசாங்கம் நிலைக் குழுவின் ஆட்சேபணைகள் குறித்து, கிஞ் சிற்றும் கவலைப்பட்டதாகத் தெரியவில் லை. அதனை முழுமையாக அப்படியே கிடப்பில் போட்டு வைத்துவிட்டது. இச் சட்டமுன்வடிவினை எந்த வடிவத்திலும் இதுவரை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றிட அரசாங்கம் முன் வரவே இல்லை.ஆனால், ‘ஆதார்ஏற்கனவே மக்க ளின் வாழ்க்கையில் எதார்த்தமான ஒன் றாக, ஒவ்வொரு இந்தியப் பிரஜைக்கும் தன் வாழ்வின் தவிர்க்க முடியாத அங்க மாக மாறிவிட்டது. அரசாங்கத்தின் இத்த கைய திருட்டுத் தனமான அணுகுமுறை யை அது, மத்திய, மாநில அரசு ஊழியர் களுக்காகக் கொண்டுவந்துள்ள பங் களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை (Contributory Pension Scheme)அறிமுகப்படுத்தி யதிலும் பார்க்க முடியும். நம் நாட்டிலுள்ள அனைத்து மாநில அரசுகளும் தன்னுடைய ஊழியர்களிடமிருந்து ஓய்வூதிய நிதியாக கோடிக்கணக்கான ரூபாய்களை வசூலித் துக் கொண்டிருக்கின்றன.

ஆனால், அது தொடர்பான சட்டமுன்வடிவு இன்னமும் நாடாளுமன்றத்தில் நிலுவையிலேயே இருந்து கொண்டிருப்பதை நாம் காண் கிறோம். இத்தனை ஆண்டு காலமாக இவ்வாறு கோடிக்கணக்கான ரூபாய் களை அரசு ஊழியர்களிடமிருந்து வசூ லித்துக் கொண்டிருப்பதற்கான சட்டப் பூர்வமான நிலை என்ன? நாட்டு மக்க ளைக் கடுமையாகப் பாதிக்கும் பல்வேறு கொள்கை முடிவுகளை அரசாங்கமானது நாடாளுமன்றத்தைப் புறந்தள்ளிவிட்டு எடுத்துக் கொண்டிருக்கிறது என்பதைக் காட்டுவதற்கு இவை ஒருசில எடுத்துக் காட்டுகளேயாகும்.நாட்டின் அரசியலமைப்புச் சட்ட மானது, ஜனநாயக அமைப்பின் பல்வேறு அங்கங்களுக்கும் இருக்கின்ற அதிகாரங் கள் குறித்து மிகவும் தெளிவாக வரை யறை செய்து தந்திருக்கிறது. நாடாளுமன் றம் ஒரு சட்டத்தை நிறைவேற்றும்போது அது நாட்டின் சட்டமாக மாறுகிறது. நாட்டி லுள்ள அனைத்துப் பிரஜைகளும் அதற் குக் கட்டுப்பட்டு நடக்கவேண்டியவர் களாகிறார்கள். ஆனால், இத்தகைய அரசியலமைப்புச் சட்டத்தின் கட்டளை யையே ஆட்சியாளர்கள் மீறும் போக்கு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானமே ஓரங்கட்டப்பட்டுவிட்டது2012-13ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்கையில், அப் போது நிதியமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி, கடந்தகால வரி நிலுவைகளை வசூலிப்பதற்காக, கடந்தகால வரிவிதிப்பு முறையை (retrospective taxation) அறி முகப்படுத்தினார்.

இச்சட்டமுன்வடிவினை நாடாளுமன்றத்தின் இரு அவை களும் ஒருமனதாக நிறைவேற்றின. ஆனால், ப.சிதம்பரம் நிதியமைச்சரானபிறகு, காட்சிகள் மிக வேகமாக மாறின. இந்தப் புதிய வரிவிதிப்பு சீர்திருத்தத்தை ஆராய் வதற்காக ஒருநபர் குழுவை அமைத்தார். வரிகள் தொடர்பான வல்லுநர், பார்த்த சாரதி சோம், அறிக்கையைப் பெற்ற ஒரு வார காலத்திற்குள்ளாகவே நாடாளுமன் றத்தின் இரு அவைகளாலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட கடந்தகால வரி விதிப்புமுறை சட்டத்தை மூன்றாண்டு காலத்திற்கு அரசாங்கம் கிடப்பில்போடத் தீர்மானித்தது. நாட்டின் மிக ஒப்புயர்வற்ற அமைப்பான நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒருமனதாக நிறைவேற்றிய ஒரு சட்டத்தை ஒரு வல்லுநர் ரத்து செய்ய முடியுமா? நாடாளுமன்றத்தின் குழுக்கள், ஒரு சிறிய அளவிலான நாடாளுமன்றம் என்றே கருதப்படுகின்றன. இக்குழுக்களில் அநேகமாக அனைத்து அரசியல் கட்சிக ளின் உறுப்பினர்களும் அங்கம் வகிப்பது வழக்கம். நன்கு வளர்ந்த ஜனநாயக நாடு களில், நாடாளுமன்றக் குழுக்களின் முடிவுகளை நாடாளுமன்றம்தான் ரத்து செய்திட முடியும். ஆனால், இந்தியாவில் தான், நாடாளுமன்றக் குழு அளித்திட்ட பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்றுக்கொள் வதற்கோ அல்லது நிராகரிப்பதற்கோ உரிமை பெற்றிருக்கிறது.
ஒரு சட்டமுன் வடிவில் புதிதாக ஏதேனும் ஒரு பிரிவை அரசாங்கம் இணைக்கும்பட்சத்தில், மீண்டும் அச்சட்டமுன்வடிவு, பரிசீல னைக்காக நாடாளுமன்றக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். ஆனால், இதுநாள்வரை இவ்வாறு பின்பற் றப்பட்டு வந்த அரசியலமைப்புச் சட்ட நடைமுறைக்கு முரணாக, இந்தியக் குடி யரசின் வரலாற்றில் முதன்முறையாக, நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரை களை ஆய்வு செய்வதற்காக அரசாங்கம் ஒரு வல்லுநர் குழுவை அமைக்கிறது. நாம் மிகவும் ஆச்சர்யப்படத்தக்க விதத்தில், நிதித்துறை சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற நிலைக்குழு நேரடி வரிவிதிப்புச் சட்டம் (Direct Tax Code) குறித்து தன் அறிக்கை யை சமர்ப்பித்தபோது, நிதி அமைச்சக மும் உடனடியாக அந்த அறிக்கை மீது ஒரு குழுவை அமைத்ததைப் பார்த்தோம். இதுதொடர்பாக மோதல் வெடித்த போது, அமைச்சகத்தின் சார்பில் சில சமாதா னங்கள் சொல்லப்பட்ட போதும், இவ்வாறு குழு அமைக்கப்பட்டதை நியாயமான அல்லது நேர்மையான ஒன்று எனக் கருத முடியுமா? இது நாடாளுமன்றத்தின் அதி காரத்தைப் பறிக்கும், மக்களின் குரலை நெறிக்கும் செயலாகாதா?இவை அனைத்தும் நாடாளுமன்றத் தின் சட்டமியற்றும் அதிகாரங்களைக் கீழ றுத்திடுவதற்கான ஒரு திட்டத்தின் அடை யாளங்களேயன்றி வேறல்ல. அரசின் இத்த கைய இழிவான நடவடிக்கைகள் இதர பல கொள்கைப் பிரச்சனைகளிலும் வெளிப்பட்டிருக்கின்றன. 1990களுக்கு முன்பெல்லாம், நாட்டிலுள்ள சாமானியன், தொலைக்காட்சி முன் அல்லது வானொலி முன் அமர்ந்து, பட்ஜெட் முன்மொழிவுகள் குறித்து தெரிந்துகொள்வதற்காக ஆவ லோடு காத்திருப்பார்கள். வரி விதிப்பு முறைகளில் ஏதேனும் மாற்றம் வருமா? பல்வேறு அத்தியாவசியப் பொருள்களின் விலைகளில் மாற்றம் இருக்குமா? ரயில் கட்டணம் உயருமா? இதுபோன்று எண் ணற்றவை குறித்து எதிர்பார்ப்புடன் அமர்ந் திருப்பார்கள்.

ஆனால், இப்போதெல்லாம், எவரொருவரும் பட்ஜெட் குறித்து அலட் டிக்கொள்வதில்லை. சமீபகாலங்களில், நாடாளுமன்றம் மட்டுமல்ல, அரசாங்கம் கூட, பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை நிர்ணயம் செய்திடுவதில் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. அரசாங் கம் அதற்கான அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்படைத்துவிட்டது. சென்ற ரயில்வே பட்ஜெட்டின்படி இனி ரயில் கட்டணங்கள் ஓர் ஒழுங்குமுறை அதிகாரக்குழுமத்தின் (regulatory authority) மூலமாக தீர்மானிக்கப்பட இருக் கின்றன. அரசாங்கம் தற்போது பொருள்கள் மற் றும் சேவைகள் வரி (Goods and Services Tax) அமல்படுத்துவதற்காக ஓர் அரசிய லமைப்புத் திருத்தச் சட்டமுன்வடிவை நிறைவேற்றத் தயாராகிக் கொண்டிருக் கிறது. வரைவு சட்டமுன்வடிவின்படி, வரி விகிதங்களைத் தீர்மானித்திட, நாடாளு மன்றத்திற்கு எவ்வித அதிகாரமும் கிடை யாது. மத்திய அரசு மற்றும் மாநில அரசு களுக்கான வரி விதிகத்தைத் தீர்மானிப் பதற்கான அதிகாரங்களை பொருள் மற் றும் சேவை வரிக் கவுன்சில் (GST Council) மட்டுமே பெற்றிருக்கும். இவ்வாறு வரிவிதிக்கும் நடைமுறைகளில் இனி நாடாளுமன்றத்திற்கோ, சட்டமன்றங் களுக்கோ எவ்வித வேலையும் கிடை யாது. இதன் மூலமாக பட்ஜெட் என்பது வெறுமனே காலத்தைச் செலவழிக்கும் ஒன்றாகவே மாறுகிறது. இவ்வாறு மக்கள் பிரதிநிதிகளுக்கு, அரசியலமைப்புச் சட் டம் வழங்கிய பொறுப்புகள் அவர்களிட மிருந்து, பறிக்கப்பட்டுள்ளன. சமூகத்தின் பல்வேறு பிரிவுகளிலிருந்தும் அரசின் இத் தகைய முயற்சிகளுக்கு கடும் எதிர்ப்புகள் வந்தபின்னர், அரசாங்கம் இச்சட்டமுன் வடிவில் ஒரு சிறிய மாற்றத்தைச் செய் திருக்கிறது. அதாவது பொருள் மற்றும் சேவை வரிக் கவுன்சில் அதிகாரங்கள் சிபாரிசுசெய்யக்கூடியவை மட்டுமே என்று அரசு கூறியிருக்கிறது. ஆனால், உண்மையில், இதன் சிபாரிசுகள் எதிர் காலத்தில் நிதியமைச்சர்களின் கை களைக் கட்டிப்போடும் என்பதிலோ, அதன்மூலம் நாடாளுமன்றத்தின் அதி காரங்களை நீர்த்துப்போகச் செய்திடும் என்பதிலோ ஐயமில்லை. நாடாளுமன்ற அமைப்புமுறைக்கு ஏற் பட்டுள்ள மற்றுமொரு மிகப்பெரிய அச் சுறுத்தல், இந்திய சமூகத்தின் அடிப்படை அமைப்பாக விளங்கும் இதன் பிரதிநிதி களின் வர்க்கப் பின்னணி மிக மோசமாக வீழ்ச்சியடைந்திருப்பதாகும். நாடாளு மன்ற உறுப்பினர்கள் தொடர்பாக மேற் கொள்ளப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, 15ஆவது மக்களவையில் 306 நாடாளு மன்ற உறுப்பினர்கள் கோடீஸ்வரர்களா வார்கள். இது, 14ஆவது மக்களவையை விட நூறு விழுக்காட்டுக்கும் அதிகமான தாகும். ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப் பினரின் சராசரி சொத்து மதிப்பு 5.8 கோடி ரூபாய்களாகும். நாட்டின் மக்கள்தொகை யில் 77 விழுக்காட்டிற்கும் மேற்பட்டவர் கள் நாளொன்றுக்கு 20 ரூபாய்க்கும் கீழே தான் செலவழிக்கிறார்கள் என்று கூறப் படுகிற ஒரு சமூகத்திற்கு இவர்கள்தான் பிரதிநிதிகள் என்று கூறப்படுவது கேலிக் கூத்தாக இல்லையா? மற்றொரு புள்ளி விவரம் என்ன கூறுகிறதெனில், சென்ற மக்களவைத் தேர்தல் வேட்பாளர்களில் 5 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து உள்ள வர்கள் 32 விழுக்காட்டினர் என்பதாகும். 50 லட்சம் ரூபாய்க்கும், 5 கோடி ரூபாய்க் கும் இடையே சொத்து உள்ள வேட்பாளர் களின் வெற்றி வாய்ப்பு 18.5 விழுக்காடு, பத்து லட்சத்திற்கும் கீழே சொத்துள்ளவர் களின் வெற்றி வாய்ப்பு வெறும் 2.6 விழுக் காடு மட்டுமே.

இதன் மூலம், தாராளமயப் பொருளாதாரத்தின் தேர்தல் அமைப்பு முறையில் மிகப்பெரிய காரணிகளில் ஒன்றாக பணபலம் இருக்கிறது என்பது தெளிவு.ஒரு குறிப்பிட்ட காலம் வரை, இந்திய ஜனநாயக அமைப்புமுறை ஒரு முற் போக்கு குணாம்சத்தோடு இருந்தது. ஆனால், ஆளும் வர்க்கத்தினரால் அது தாக்குத லுக்கு உள்ளாக்கப்பட்டது. நாடாளுமன் றத்தின் பிரதிநிதித்துவ குணாம்சத்தைப் பாதுகாத்திட வேண்டும். நாடாளுமன்றம் மூலமாகத்தான் மக்களின் அபிலாசை களையும் தேவைகளையும் பூர்த்தி செய் திட முடியும். இதன்மூலம்தான் நாட்டின் சட்டங்களையும், மக்களுக்கான நீதியை யும் வழங்கிட முடியும். நாடாளுமன்றத் திற்கான அதிகாரங்களையும், பொறுப்பு களையும் மறுப்பதோ அல்லது அவற்றைப் பறிப்பதோ மக்களின் நியாயமான அபிலா சைகள் அரிக்கப்படுவதற்கே இட்டுச் செல்லும்.

(கட்டுரையாளர் : நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்)
நன்றி:தி இந்து நாளிதழ் ஆகஸ்ட்7
தமிழில்: ச.வீரமணி