Monday, June 24, 2013

மாற்றுக் கொள்கை தேர்ந்தெடுத்திடுக!



அரசியல்வானில் சமீபத்திய நிகழ்ச்சிப் போக்குகள் நாட்டில் ஒரு மாற்று அரசியல் கூடாரத்தை அமைத்துக் கொண்டிருக்கிறது என்பது தெளிவு. ஒருபக்கத்தில், ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கமானது சிறுபான்மை அரசாக சுருங்கிக் கொண்டிருக்கிறது, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருந்த பெரிய கட்சிகளில் தேசியவாதக் காங்கிரஸ் கட்சி யைத் தவிர மற்ற அனைத்தும் தங்களைக் கழட்டிக் கொண்டுவிட்டன. அது ஆட்சியில் உயிர்பிழைத்து நீடித்திருப்பதற்குக் காரணமே, சமீபத்தில் கொஞ்ச காலமாக, அது சமாஜ் வாதிக் கட்சியிடமிருந்தும், பகுஜன் சமாஜ் கட்சியிடமிருந்தும் வெளியிலிருந்து ஆதரவு பெற்றுக் கொண்டிருப்பதை வைத்துத்தான். மற்றொரு பக்கத்தில், பாஜக தலைமையிலான தேஜகூட்டணியில் இருந்த கட்சிகளில் தற்போது அதனுடன் ஒட்டிக்கொண்டிருப்பது சிவசேனையும் அகாலி தளமும் மட்டுமே.தே.ஜ.கூட்டணியிலிருந்து ஐக்கிய ஜனதா தளம் வெளியேறியிருப்பது என்பது, பாஜக தலைமையிலான தேஜகூட்டணிக்குள் தீர்க்கமுடியாத அளவிற்கு முரண்பாடுகள் ஏற் பட்டுவிட்டதையே பிரதிபலிக்கிறது. ஆர். எஸ்.எஸ். இயக்கத்தின் அரசியல் அங்கமாகச் செயல்படும் பாஜக, தன்னுடைய வெறிபிடித்த அரக்கத்தனமான இந்துத்வா நிகழ்ச்சிநிரலைப் பின்பற்றும் நரேந்திர மோடியை அதனால் ஏற்படும் அனைத்துவிதமான பலாபலன் களுடனும் பிரதமர் வேட்பாளராக சித்தரித்திட வும் அதன் மூலம் தன் சொந்த சமூகப் பின்ன ணியை தக்க வைத்துக்கொள்ளவும் முன் வந்திருக்கிறது. இந்தத் திசைவழியில் அது எந்த அளவிற்கு வெறியுடன் செயல்படு கிறதோ அந்த அளவிற்கு அது, அடுத்த பொதுத் தேர்தலுக்குப்பின் அமையவிருக்கும் அரசாங்கத்திற்கு ஆதரவாக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்கான வல்லமையை இழந்துவிடும்.

நாட்டின் அரசி யலில் இன்றைக்கு ஏற்பட்டுள்ள நிகழ்ச்சிப் போக்குகள் இத்தகைய தீர்க்கப்பட முடியாத முரண்பாட்டின் வெளிப்பாடேயாகும்.இதில் வேடிக்கை வினோதம் என்ன வெனில், நரேந்திர மோடியைவிட எல்.கே. அத்வானி மிகவும் மிதமானவர் போலவும், தாராள முகம் படைத்தவர் போலவும் பாஜக வினரால் சித்தரிக்கப்படுவதுதான். இன் றைக்கு இருக்கும் பாஜக வளர்ந்ததே இதே அத்வானி 1990 செப்டம்பரில் ‘‘பாபர் மசூதி இருக்கும் இடத்தில் ராமர் கோவிலைக் கட்டு வோம்’’ என்ற முழக்கத்துடன் சோம்நாத்தி லிருந்து அயோத்திக்கு தன்னுடைய இக ழார்ந்த (infamous) ரத யாத்திரையைத் தொடங் கியதன் மூலமாகத்தான். இந்த ரத யாத்திரை யானது நாடு முழுதும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மதவெறியைக் கூர்மைப்படுத்தி பல இடங்களில் வகுப்புக் கலவரங்களை ஏற் படுத்தி நாட்டையே ரத்தக்களறியாக்கியதுடன் இந்தியக் குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளத்திற்கே அச்சுறுத்தலை ஏற்படுத் தியது. இந்த ரத யாத்திரைதான் 1992 டிசம்பர் 6 அன்று பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கும் அடிப்படையாக அமைந்தது. 2014இல் நடைபெறவுள்ள பொதுத் தேர் தல்களிலும் இத்தகைய வளர்ச்சிப் போக்கு கள் தன் பங்களிப்பினைத் தொடர்ந்திடும் அதே சமயத்தில், நாட்டில் உள்ள பெரிய கட்சி களின் கவனத்தை அதிகமான அளவில் ஈர்க் காது இருக்கும் நிகழ்வுகள் என்னவெனில், தற்போது மக்கள் மீது ஏற்றப்பட்டிருக்கும் பொருளாதார சுமைகளாகும். நாட்டில் பொரு ளாதார மந்த நிலைமை மோசமாகிக் கொண் டிருப்பது தொடர்கிறது. அதன் காரணமாக வேலையில்லாத் திண்டாட்டமும், எவ்விதக் கட்டுப்பாடுமின்றி எகிறிக்கொண்டிருக்கும் பணவீக்கமும் சாமானிய மக்களின் வாழ்க்கை யை மிகவும் அவல நிலைக்குத் தள்ளியுள் ளன. எரிபொருட்களின் விலைகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து உயர்த்தப் பட்டுக்கொண்டே இருக்கின்றன. நாட்டின் பல பகுதிகளில் விவசாயிகள் கடுமையான வறட்சியின் பாதிப்புகளிலிருந்து இன்னமும் மீளமுடியாத நிலை தொடரும் அதே சமயத் தில், வட இந்தியாவில் மழைக்காலம் முன்ன தாகவே தொடங்கி பெரிய ஆறுகள் அனைத் தும் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப் பட்டு நாட்டின் பல பகுதிகளில் பேரழிவினை ஏற்படுத்தியிருக்கிறது. இவ்வாறு, நாட்டு மக்களில் பெரும்பான் மையோருக்கு ஏற்பட்டுள்ள துன்ப துயரங்கள் குறித்துக் கிஞ்சிற்றும் கவலைப்படாத நிலை யிலேயே தற்போதைய அரசியல் நிகழ்ச்சிப் போக்குகள் நடந்து கொண்டிருப்பது போல் தோன்றுகிறது. ஏற்கனவே வாழ்க்கைத்தரம் மிகவும் தாழ்ந்துபோயிருக்கக்கூடிய நிலை யில் மேலும் தொடர்ந்து ஏற்றப்படும் சுமைகளி லிருந்து நிவாரணம் கிடைக்காதா என்று மக்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

நாம் இந்தப் பகுதியில் முன்பு பலமுறை சுட்டிக் காட்டியிருப்பதைப்போல, மக்களுக்கு ஏதேனும் நிவாரணம் கிடைக்க வேண்டும் என்றால் ஆட்சியாளர்கள் தற்போது கடைப்பிடித்து வரும் நவீன தாராளமயக் கொள்கைகள், மக்கள் நலன் சார்ந்த மாற்றுக் கொள்கையால் மாற்றி யமைக்கப்பட்டால் மட்டுமே சாத்தியமாகும். ஆனால் இத்தகைய மாற்றுக் கொள்கையை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் எடுபிடிகளாக இருக்கும், நவீன தாராளமய பொருளாதார சீர் திருத்தங்களுக்கு உண்மையாக இருந்திடும் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சி களாலுமே தர முடியாது என்பது தெள்ளத் தெளிவான ஒன்று. எனவே, காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளின் இத்தகையக் கொள்கைகளை எதிர்த்து ஒரு மாற்றுக் கொள் கைத் திசைவழியை உருவாக்கவேண்டியது அவசியமாகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சமீபத் தில் நாட்டின் நான்கு முனைகளிலிருந்தும் நடத்திய மாற்றுப் பாதைக்கான போர் முழக்கப் பயணத்தின்போது, மக்களுக்குத் தேவையான நிவாரணம் அளிக்கக்கூடிய விதத்திலும், அதே சமயத்தில் நம் மக்களில் பெரும்பான் மையோரின் பொருளாதார மேம்பாட்டிற்கு அடிப்படையான உள்நாட்டுத் தேவையை அதிகரிக்கக்கூடிய விதத்திலானப் பொருளா தார வளர்ச்சியைப் பெருக்கக்கூடிய விதத் திலும் ஒரு மாற்றுக் கொள்கையை முன்வைத் தது. இவ்வாறு ஒரு மாற்றுக் கொள்கைத் திசைவழியில் பயணிப்பதற்கான ஓர் அரசியல் மாற்றுக்காகச் செயல்படும் நேரத்தில், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது அகில இந்திய மாநாட்டின் அரசியல் தீர்மானம், கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்து வரையறுத்திருப்பதாவது:‘‘மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காங் கிரசையும் பாஜகவையும் அரசியல் ரீதியாக எதிர்க்க வேண்டியிருக்கிறது. இவ்விரு கட்சிகளுமே பெரும் முதலாளிகள் - நிலப் பிரபுக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி அவர் களின் வர்க்க சுரண்டல் என்றென்றும் தொடர்வதற்கு வழிவகுக்கும் கட்சிகளாகவும், பல்வேறு பிரிவு மக்களின் சமூக ஒடுக்கு முறைக்கும் காரணமாகவுள்ள கட்சிகளாகவும் இருக்கின்றன. அவை நவீன தாராளமயக் கொள்கைகளைப் பின்பற்றுகின்றன, அமெரிக்க ஆதரவு அயல்துறைக் கொள்கையையும் நியாயப்படுத்துகின்றன. மக்களை நசுக்கிக் கொண்டிருக்கும் விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயிகள் - தொழிலாளர்களின் அவல நிலைக்குக் கார ணமானதும், பெரும் வர்த்தகப்புள்ளிகள் மற் றும் பணக்காரப் பிரிவினருக்கு சலுகைகளை வாரி வழங்கியுள்ளதும், அதற்காக நாணங் கெட்ட முறையில் ஊழலில் ஊறித் திளைக்க வும் கவலைப்படாத காங்கிரஸ் கட்சியும் ஐ.மு.கூட்டணி அரசாங்கமும் தோற்கடிக்கப் படுவது அவசியமாகும். அதேபோன்று இடது, ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற சக்திகள் முன் னேறுவதற்கு, பாஜக தனிமைப்படுத்தப்படு வதுடன் அதன் மதவெறி மற்றும் வலதுசாரி நிகழ்ச்சிநிரல் எதிர்த்து முறியடிக்கப்பட வேண்டி யதும் அவசியமும் முக்கியமானதுமாகும்.

‘‘காங்கிரஸ் மற்றும் பாஜகவிற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடது மற்றும் ஜனநாயக மாற்றை முன்வைத்திருக்கிறது. முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ ஆட்சிக்கு மாற்று ஓர் இடதுசாரி ஜனநாயக மேடையாகத் தான் இருக்க முடியும். இத்தகைய மாற்று என் பது இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளின் அரசியல் கூட்டணியின் மூலமாக உருவாகி டும் இயக்கங்கள் மற்றும் போராட்டங்கள் மூலமாக மட்டுமே கட்டப்பட முடியும். இதற் கான முயற்சிகளில் ஈடுபடும்போது, ஜனநாய கம், தேசியப் பாதுகாப்பு, மதச்சார்பின்மை, கூட்டாட்சித் தத்துவம் மற்றும் மக்களின் வாழ்வாதாரங்களையும் உரிமைகளையும் பாது காப்பதற்கான பங்கினைச் செலுத்தக்கூடிய, காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத சக்தி களுடன் அணிவகுக்க வேண்டிய அவசியம் எழலாம், இத்தகைய கூட்டு மேடைகள் உருவாவது இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளின் கூட்டணியைக் கட்டுவதற்கான நடைமுறைக்கு உதவிட வேண்டும். ‘‘இன்றைய சூழ்நிலையில் காங்கிரஸ் அல்லாத மதச்சார்பற்ற கட்சிகளுடன் பிரச்ச னைகளின் மீது கூட்டு நடவடிக்கைகளுக்கு முயற்சித்திட வேண்டும். அப்போதுதான் அவ்வாறு மேற்கொள்ளும் இயக்கங்களை விரி வாக்கிட முடியும். சில குறிப்பிட்ட கொள்கை விஷயங்களிலும் மக்கள் பிரச்சனைகளிலும் இக்கட்சிகளுடன் நாடாளுமன்றத்திலும் ஒத் துழைப்பினை ஏற்படுத்திக்கொள்ள முடியும். தேவைப்பட்டால் மற்றும் தேவைப்படும் பொழுது, இக்கட்சிகளில் சிலவற்றுடன் தேர் தல் புரிந்துணர்வுகளையும் ஏற்படுத்திக் கொள்ள முடியும்.’’ (பத்திகள் 2.137 முதல் 2.139 முடிய)2013 ஜூலை 1 அன்று புதுதில்லியில் இடதுசாரிக் கட்சிகளின் சார்பில் தேசிய அளவிலான அரசியல் சிறப்பு மாநாடு ஒன்று நடைபெறவிருக்கிறது. இச்சிறப்பு மாநாடு, நாட்டிற்கான மாற்றுக்கொள்கைத் திசைவழி குறித்து இடதுசாரிக் கட்சிகளின் அணுகு முறையை உள்ளடக்கி ஒரு பிரகடனத்தை விவாதித்து வெளியிட இருக்கிறது. இந்தப் பிரகடனத்தின் அடிப்படையில், இடதுசாரிக் கட்சிகள் நாட்டில் உள்ள அனைத்து காங் கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் மற்றும் கட்சிகளுக்கு நாட்டிற்கான மாற்றுக் கொள்கைத் திசை வழியை ஆதரிக்குமாறும் அதற்காகச் செயல் பட முன்வருமாறும் வேண்டுகோள் விடுக்கப் படும். நாட்டின் நலன்களும் நாட்டு மக்களின் நலன்களும் பாதுகாக்கப்படவேண்டுமானால், இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசியல் நிகழ்ச்சிப்போக்குகள் இந்தத் திசைவழியில்தான் முன்னேறவேண்டும்.
(தமிழில் : ச.வீரமணி)


No comments: