Sunday, May 26, 2013

சீனப்பிரதமரின் இந்திய விஜயம்


சீன மக்கள் குடியரசின் பிரதமர் லீ கேகி யாங் அரசுமுறைப் பயணமாக இந்தியா விற்கு வந்து சென்றிருக்கிறார். அநேக மாக, புதிதாகத் தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதமர் ஒருவர் தன்னுடைய தூதுக்குழு வுடன் முதன்முதலாகப் பயணம் செய் திடும் அயல் நாடு இந்தியாதான். உண் மையில் இது மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று. சீனப் பிரதமர் வருகையையொட்டி இந்தியப் பிரதமர் ஊடகங்களுக்கு அளித் துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘‘சீனப் பிரதமர் பொறுப்பேற்றபின் விஜ யம் செய்யும் முதல் அயல்நாடாக இந்தி யாவைத் தேர்ந்தெடுத்து வந்திருப்பதற்கு உண்மையிலேயே நான் மிகுந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள் கிறேன். ‘‘நேற்று மாலையிலிருந்து தொடங்கி, பிரதமர் லீயும் நானும் பரஸ்பரம் நலம் பயக்கக்கூடிய பல்வேறு விஷயங்கள் குறித்தும் மிகவும் விரிவான அளவிலும், திறந்த மனதுடனும் விவாதங்களை நடத்தி இருக்கிறோம். நமக்கிடையே பல்வேறு அம்சங்களில் ஒத்த கருத்து ஏற்பட்டிருப்பதனைக் கண்டு நான் மிக வும் மகிழ்ச்சி கொள்கிறேன்.
அதிலும் மிகவும் முக்கியமாக, நம் இரு நாடு களுக்கும் இடையிலான உறவு என்பது அமைதியான முறையில் நம்முடைய வளர்ச்சிக்கும் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கும் அதேபோன்று நம் பிராந் தியத்திலும் உலகத்திலும் ஸ்திரத்தன் மையையும் வளமான வாழ்க்கையையும் கொண்டுவருவதற்கும் மிகவும் முக்கியம் என்பதையும் நாம் இருவரும் ஒப்புக் கொண்டிருக்கிறோம். ‘‘இந்தியாவும் சீனாவும் முதிர்ந்த நாகரிகங்களைக் கொண்ட இரு அண்டை தேசத்தவர்கள், காலங்காலமாக அமைதி யுடன் வாழ்ந்து வந்திருப்பவர்கள், நம்மி டையே கருத்துவேறுபாடுகளை சமீப காலங்களில்தான் நாம் பெற்றிருக்கி றோம். ஆயினும் கடந்த 25 ஆண்டு களில் பரஸ்பரம் பயன் அளிக்கக்கூடிய முறையில் உறவுகளைப் படிப்படியாகக் கட்டி எழுப்பியிருக்கிறோம். தொடர்ந்த வளர்ச்சி மற்றும் நம் உறவுகள் விரி வாக்கப்படுவதற்கான அடிப்படை என் பது நம்முடைய எல்லைகளில் அமை தியைக் கொண்டுவருவதுதான். எல் லைப் பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டிய அதே சமயத்தில் பிர தமர் லீயும் நானும் இத்தகைய உறவி னைத் தக்கவைத்துக்கொண்டுத் தொடர் வது என்றும் ஒப்புக்கொண்டிருக்கிறோம்.‘‘மேற்கத்திய பகுதியில் (western sector), சமீபத்தில் நடந்த நிகழ்விலி ருந்து கற்றுக்கொண்ட படிப்பினைகளை யும் நாங்கள் மனதில் கொண்டுள்ளோம். எல்லைப் பிரதேசங்களில் அமைதியை யும் சுமுக நிலைமையையும் நிலைநிறுத்தித் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அங்கே செயல்பட்டு வரும் சிறப்புப் பிரதிநிதிகளைப் பணித் திருக்கிறோம்.
சிறப்புப் பிரதிநிதிகள் விரைவில் கூடி விவாதங்களைத் தொடர்ந்து மேற்கொண்டு, நியாயமானதும் இரு தரப்பினரும் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக் கூடிய விதத்திலும் எல்லைப் பிரச்ச னைக்கு நிரந்தரமாகத் தீர்வுகாணக் கூடிய விதத்தில் ஓர் ஒப்பந்தத்தை வடி வமைத்துத் தந்திடவும் இருவரும் ஒப் புக்கொண்டிருக்கிறோம். ‘‘அதேபோன்று இரு நாடுகளுக்கு இடையிலே ஓடிக்கொண்டிருக்கும் ஆற்று நீரைப் பங்கிடுவதில் நமது நாட் டில் கடைமடைப்பகுதிகளில் போதிய அளவிற்கு நீர்வரத்து இல்லாதது குறித்து ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்து பிர தமர் லீ கவனத்திற்கு மீளவும் வலி யுறுத்திக் கூறி இருக்கிறோம். இரு நாடு களுக்கும் இடையே ஓடும் ஆறுகள் தொடர்பாக ஒத்துழைப்பை விரிவாக்கிக் கொள்ளவும் இரு நாடுகள் தரப்பிலும் ஒப்புக் கொண்டிருப்பதற்கு என் மகிழ்ச் சியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல் இமயமலைப் பகுதியில் உள்ள உயிரினங்கள் செயல்படும் முறை (நஉடிளலளவநஅ) குறித்து மேலும் சிறந்த முறையில் புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்வதற்கும் இரு நாடுகளும் ஒத்து ழைத்திட முடிவு செய்திருப்பதும் மிகவும் பயனுள்ளதாக அமைந்திடும். ‘‘சீனாவும் இந்தியாவும் முன்னேறு வது, உலகத்திற்கே நல்லது என்கிற என் கருத்தை பிரதமர் லீயுடன் பகிர்ந்து கொள்கிறேன். வளர்ந்து கொண்டிருக்கும் நம் இரு நாட்டு மக்களின் விருப்பங்க ளுக்கும் இடமளித்திட உலகில் போது மான அளவிற்கு இடம் உண்டு.
இதனை எதார்த்தமாக்கிட நம் இரு நாட்டு மக் களுக்கு இடையேயும் புரிந்துணர்வை உருவாக்குவது முக்கியம். மக்கள் மத்தி யில் பரஸ்பரம் நம்பிக்கையை வலுப் படுத்திட இருதரப்பிலும் செயல்படவும் நாம் ஒப்புக்கொண்டுள்ளோம். இதற்கு மிகப்பெரிய அளவில் இரு நாடுகளின் ஒத்துழைப்பும் தேவை.’’இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகள் சார்பாகவும் இரு தரப்பு மற்றம் பலதரப்பு பிரச்சனைகளையும் உள்ள டக்கி முழுமையான அளவில் 35 அம்சக் கூட்டறிக்கை ஒன்று வெளியிடப்பட் டிருக்கிறது. அதாவது சீனப்பிரதமரின் வருகையின் வெளிப்பாடானது, பரஸ் பரம் இரு நாடுகளுக்கும் இடையே மட் டும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்ச னைகள் மீது மட்டும் அல்லாது இப் பிராந்தியம், தெற்காசியா மற்றும் உலகம் சம்பந்தப்பட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் இரு நாடுகளின் கருத்துக் களும் பரிமாறிக் கொள்ளப் பட்டிருக் கின்றன. கூட்டு அறிக்கையில் ‘‘21ஆம் நூற் றாண்டில் இந்தியா - சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே முழுமை யாகவும் வேகமாகவும் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதை திருப்தியுடன் ஆய்வு செய்திருப்பதாக’’க் குறிப்பிடப்பட்டிருக் கிறது. அத்தகைய உறவுகள் சமாதான சகவாழ்வு  அல் லது பஞ்சசீலக் கொள்கையின் அடிப்ப டையில் வரவிருக்கும் காலங்களில் கெட்டிப்படுத்தப்பட வேண்டும் என்று மீளவும் வலியுறுத்திக் கூறப்பட்டிருப் பதோடு, அறிக்கையில் மேலும் ‘‘இரு நாடுகளும் பரஸ்பரம் ஒன்று மற்றொன் றுக்கு உதவக்கூடிய பங்காளிகளாகத் தான் கருதப்பட வேண்டுமேயொழிய, எதிராளிகளாகவோ அல்லது போட்டி யாளர்களாகவோ கருதக்கூடாது’’ என் றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் அதில், ‘‘இரு தரப்பிலும் தங்கள் நாட்டின் எல்லைகள் மற்றொருவரின் நடவடிக் கைகளுக்குப் பயன்படுத்துவதற்காக அனுமதிக்கப் பட மாட்டாது’’ என்றும் கூறியிருக்கிறது.
அநேகமாக பல்வேறு உலக ஊடக விமர்சகர்களின் விமர்ச னங்களை மனதில் கொண்டே கூட்டு அறிக்கையானது, ‘‘இரு தரப்பினரும் இரு நாடுகளும் நட்புறவு கொண்டுள்ள இதர நாட்டினரையும் நட்புறவுடன் ஆத ரிக்கவும் அவற்றுடன் ஆக்கபூர்வமான அணுகுமுறையைக் கையாளவும் உறுதி பூண்டிருக்கிறது’’ என்றும் கூறியிருக் கிறது. இரு நாடுகளுமே தங்கள் நாட்டு அரசு அதிகாரிகளுக்கிடையேயும் முக் கியமான பல்வேறு அமைப்புகளின் தலைவர்களுக்கு இடையேயும் அடிக் கடி முறையாக பயணங்களை மேற் கொள்வது என்றும் தீர்மானித்திருக் கின்றன. கூட்டு அறிக்கையின் முக்கியமான பகுதி, இரு நாடுகளுக்கிடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மிகப் பெரிய அளவில், அதாவது வர்த்தகத்தை குறைந்தபட்சம் 100 பில்லியன் அமெ ரிக்க டாலர்கள் அளவுக்கு மேம்படுத் திக்கொள்வதுதான். இது தற்போது கிட் டத்தட்ட 70 பில்லியன் அமெரிக்க டாலர் கள் அளவிற்கே இருக்கிறது. ஆயினும், இதில் சீனாவிற்கு ஆதரவாக அதிக அள வில் ஒப்பந்தங்கள் ஆகி இருக்கின்றன. அதாவது இந்தியாவிற்கு அதன் ஏற்றுமதி 53 பில்லியன் டாலர்கள் அளவிற்கு இருக்கும் அதே சமயத்தில் இந்தியாவி லிருந்து சீனாவிற்கான ஏற்றுமதி என்பது வெறும் 17 பில்லியன் டாலர்கள் அளவிற் குத்தான் இருக்கும்.
இந்தியாவில் உள்ள முதலாளிகளின் அமைப்புகளானசிஐஐ, எப்ஐசிசிஐ மற்றும் அசோசெம் ஆகியவை மும்பையில் கூட்டாக ஏற் பாடு செய்த வர்த்தக உச்சி மாநாட்டில் பங்கேற்று உரை நிகழ்த்திய சீனப் பிரதமர் இந்த சமநிலையின்மை சரிசெய்யப் படும் என்றும் சீனா அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற் கொள்ளும் என்றும் உறுதி கூறியிருக் கிறார். இந்தியாவும் சீனாவும் தம்மைச் சுற்றி யுள்ள நாடுகளுடனான கூட்டுறவை வலுப்படுத்திக்கொள்ளவும் போதுமான கவனம் செலுத்தும் என்றும் கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக் கிறது. இரு நாடுகளும் நம்மைச் சுற்றி யுள்ள மற்ற நாடுகளுடனும் வர்த்தக முறைகளை விரிவாக்கிக்கொள்ள ஆவ லுடன் இருப்பதாக அறிக்கையில் கூறப் பட்டிருக்கிறது. இது தொடர்பாக பேச்சு வார்த்தைகள் நடத்த வேண்டியதன் அவ சியமும் அறிக்கையில் வலியுறுத்தப்பட் டிருக்கிறது. மேலும் கூட்டு அறிக்கை யில் வங்க தேசம், சீனா, இந்தியா, மியான் மர் ஆகிய நாடுகளுடன் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் முன்னேற்றம் காணப்பட்டிருப்பதாகவும் இந்நாடுகள் அனைத்தும் இணைந்து கூட்டாய்வுக் குழு ஒன்றை நிறுவி, அதன்மூலம் மிக வும் நெருக்கமான முறையில் பொரு ளாதார வர்த்தகம் மற்றும் மக்களிடையே இணைப்புகளை ஏற்படுத்தவும் தீர் மானித்திருப்பதாகவும் கூறப்பட்டிருக் கிறது. எல்லாவற்றையும்விட முக்கியமாக இரு தரப்பிலும் ‘‘விசா வழங்குவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்திட வும்’’ ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது.
மேலும் இரு தரப்பிலும், தெற்காசியா வில் உள்ள நாடுகளுடன் ஒத்துழைப்பை விரிவாக்கிக் கொள்ளவும், ஒருவர்க் கொருவர் நட்புறவுகளை மேலும் வளர்த் துக்கொள்ளவும் ஆதரிக்கவும் ஒப்புக் கொள்ளப் பட்டிருக்கிறது. இதில் கிழக்கு ஆசிய உச்சி மாநாடு, ஷாங்காய் ஒத்து ழைப்பு அமைப்பு, மண்டல ஒத்துழைப் புக்கான தெற்கு ஆசிய சங்கம் மற்றும் ஆசிய - ஐரோப்பிய சந்திப்பு ஆகியவையும் அடங்கும். உலக நிலைமையைப் பொறுத்த வரை, தற்போது முக்கியமாக உள்ள அனைத்துப் பிரச்சனைகளிலும் ஒரு பொதுவான நிலைபாட்டிற்கு வருவது என்றும் கூட்டறிக்கையில் கூறப்பட் டிருக்கிறது. ‘‘உலகப் பிரச்சனைகளைப் பொறுத் தவரை இரு நாடுகளுக்கும் பொதுவான பிரச்சனைகள் தொடர்பாக இரு நாடு களும் சேர்ந்தே ஐ.நா. உட்பட பல்வேறு உலக அளவிலான மன்றங்களில் பிரச்ச னைகளைக் கூட்டாக எழுப்புவதென் றும் இரு தரப்பும் ஒப்புக்கொண்டது. சீனா சர்வதேச விவகாரங்களில் ஒரு பெரிய வளர்முக நாடு என்ற முறையில் இந்தியாவின் நிலைபாட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது, பாது காப்புக் கவுன்சில் உட்பட ஐ.நா. மன் றத்தின் அமைப்புகளில் மிகப்பெரிய பங் கினை ஆற்றுவதற்கு இந்தியாவின் அபி லாசைகளைப் புரிந்து கொள்கிறது மற் றும் ஆதரிக்கிறது,’’ என்று மிகவும் குறிப் பிடத்தக்க முறையில் கூட்டறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
உலக விவகாரங்களில் உலக அமைதி, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்காக பல் துருவ உலகை மேம்படுத்துதல் உட்பட பல பிரச்சனைகளில் இரு நாடுகளுக் கும் இடையே கருத்தொற்றுமை ஏற்பட் டிருக்கிறது. உலக அளவில் முக்கியத்து வம் உடைய இதர பல பிரச்சனைகள் குறித்து, கூட்டறிக்கையில், ‘‘இந்தியா வும் சீனாவும் வளர்முக நாடுகள் என்ற முறையில், புவி வெப்பமயமாதல், உலக வர்த்தக அமைப்பில் தோஹா வளர்ச்சி சுற்றுப் பேச்சுவார்த்தை, எரிசக்தி மற்றும் உணவுப் பாதுகாப்பு, சர்வதேச நிதி நிறு வனங்களையும், உலக அளவிலான நிதி நிறுவனங்களையும் சீர்திருத்தம் செய்தல் போன்ற பல்வேறு பிரச்சனைகள் குறித் தும் பொதுவான நலனைப் பகிர்ந்துகொள் கிறோம். இது பிரிக்ஸ்மற்றும் ஜி-20 நாடுகளுக்குள் இரு தரப்பினரிடையேயும் ஒத்துழைப்பையும் ஒருங்கிணைப்பை யும் மிகவும் நெருக்கமாகப் பிரதிபலிப்பதி லிருந்தே புரிந்து கொள்ள முடியும். புவி வெப்பமயமாதல் தொடர்பான சர்வதேச பேச்சுவார்த்தைகள் மற்றும் 2015ஆம் ஆண்டு வளர்ச்சி நிகழ்ச்சிநிரலுக்குப் பிந்தைய காலங்களில் நடைபெறும் விவாதங்களிலும், நிலையான வளர்ச்சி குறித்த ஐ.நா. மாநாட்டிலும் ஒருங் கிணைப்பை அதிகரித்திட இரு தரப் பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது. ‘‘பயங்கரவாதம் எந்த வடிவில் வந்தா லும் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதிலும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக் கைகளில் ஒத்துழைத்திடவும் இரு தரப்பிலும் உள்ள உறுதியான நிலை யினை மீண்டும் வலியுறுத்திக் கூறப்பட் டிருக்கிறது.
இவை தொடர்பாக ஐ.நா. தீர் மானங்கள், குறிப்பாக 1267, 1373, 1540 மற் றும் 1624 ஆகியவற்றை அமல்படுத்த வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப் பட்டிருக்கிறது.’’ஒட்டுமொத்தத்தில் சீனப் பிரதமரின் இக்குறுகிய கால பயணத்தின்போது இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளில் மிக ஆழமான முறையிலும் மிகவும் உண்மையாகவும் சுமுகமான சூழ்நிலை யிலும் தெற்காசிய மற்றும் உலக அளவி லான பிரச்சனைகள் குறித்தெல்லாம் பரஸ்பரம் கருத்துக்கள் பரிமாறிக் கொள் ளப்பட்டிருப்பதானது தெற்காசியாவில் மாபெரும் ஜாம்பவான்களாகத் திகழும் இரு அண்டைநாட்டவருக்கிடையே உற வுகளை மேம்படுத்திக் கொள்வதற்கும், அதன் மூலம் உலக நிலைமைகளிலும் ஆக்கபூர்வமான முறையில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கும் வழிகோலி இருக் கிறது என்ற உறுதிபடக் கூறிடலாம்.

தமிழில்: ச.வீரமணி



Tuesday, May 21, 2013

இமயமலையைக் கடந்து ஒரு கைகுலுக்கல்:லே கெச்சியாங்




--லே கெச்சியாங்
(மக்கள் சீனாவும் இந்தியாவும் கூடி வாழ முடிவெடுத்திருக்கின்றன. ஆசியா உலக அமைதியின் நங்கூரமாக மாறவேண்டுமானால் இவ்விரு நாடுகளும் கைகோர்த்துக்கொண்டு செயல்பட வேண்டும்.)
நாம் மாறிக்கொண்டிருக்கும் ஒரு கால கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆயினும், சில விஷயங்கள் மட்டும் எப்போதுமே நிலைத்து நிற்கக்கூடியதாகவும், புத்துயிர் அளிக்கக்கூடியதாகவும், அனைவரையும் ஈர்க்கக்கூடியதாகவும் இருந்திடும். இந்தியாவும் அதேபோன்று ஒரேசமயத்தில் பழமையும், இளமையும்  கலந்ததொரு நாடாகும். நான் சீனப் பிரதமரானபிறகு, சீன அரசாங்கத்தின் தூதுக்குழு ஒன்றிற்குத் தலைமையேற்றுப் பயணம் செய்திடும் முதல் நாடு இந்தியாதான். சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே பல்வேறு துறைகளில் ஆழமான முறையில் நட்புறவையும், கூட்டுறவையும் மேம்படுத்திட சில துல்லியமான பங்களிப்புகளைச் செய்திட முடியும் என்ற நம்பிக்கையுடனும் மிகுந்த ஆவலுடனும் வந்திருக்கிறேன்.  
மனிதகுல நாகரிகத்தின் தூண்கள்
சீனாவும் இந்தியாவும் பல்லாயிரம் காலத்திற்கும் மேலான நீண்ட நெடிய வரலாற்றுப் பாரம்பர்யத்தைப் பெற்றுள்ள நாடுகளாகும். மிகவும் பழமையான மனிதகுல நாகரிகங்களில் சீன நாகரிகமும், இந்திய நாகரிகமும் அடங்கும். அவை இரண்டும் கிழக்கத்திய நாடுகளின் நாகரிகத்தின் இரு தூண்களைப் பிரதிநிதித் துவப்படுத்துகின்றன. விண்ணைத்தொடும் இமயமலை யினால்கூட இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர ஈர்ப்பையும்,   அறிவொளி பரிமாற்றத்தையும் தடுத்திட முடியவில்லை. அறிவிற் சிறந்த  பாஹீன் (Fohein), யுவான் சுவாங் (Huen Tsang) ஆகிய இரு சீனத் துறவிகளும்பண்டைக்கால இந்தியாவைச் சேர்ந்த போதி தர்மரும்  சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே மதம் மற்றும் கலாச்சாரப் பரிவர்த்தனைகளுக்குக் கணிசமான அளவில் பங்களிப்பினைச் செய்திருக்கிறார்கள். நான் மாணவனாக இருந்த காலங்களிலேயே இந்தியா மீது அளப்பரிய ஆர்வத்தைக் கொண்டிருந்தேன்.  புகழ்பெற்ற ‘‘மகா கவி’’ ரவீந்திரநாத் தாகூர் அவர்களின் மிகவும் ஆழ்ந்த தத்துவார்த்த மற்றும் மறக்கமுடியாத பல கவிதை வரிகளும்  அவரது காலத்தில் வாழ்ந்த சீன அறிஞர்கள் பலருடன் அவர் கொண்டிருந்த அறிவாழமிக்க நட்புணர்வும் எனக்கு மிகுந்த மனக்கிளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.   நான் பீகிங் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில், இந்தியக் கலாச்சாரம் (Indologistபற்றி நன்கறிந்த சீனப் பேராசிரியர் ஒருவர் இருந்தார். அவருடன் நான் நன்கு அறிமுகமாகி இருந்தேன். அவர் தன் வாழ்நாள் முழுவதையும் புராதன இந்தியக் கலாச்சாரத்தைப் பயில்வதற்கும் போதிப்பதற்குமே செலவழித்தார். அவரது பங்களிப்புக்களை அங்கீகரிக்கும் விதத்தில் அவர்  இந்திய அரசால், பத்ம பூஷன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.  உண்மையில், தலைமுறை தலைமுறையாய், நம் இரு கலாச்சாரங்களும் ஒன்றிலிருந்து மற்றொன்று நிறைய கற்றுக்கொண்டு, பயன்பெற்று தலைத்தோங்கி வளர்ந்திருக்கின்றன.
நான் முதன்முதலாக இருபத்தேழு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிற்கு வந்திருந்தபோது, அதன் இதமான கதிரொளியால்சுடரொளி வீசும் வண்ணங்களால், மிக அற்புதமான கலைகளால், கடினமாகவும் திறமையுடனும் உழைத்திடும் மக்களால், அவர்களுடைய வேற்றுமையிலும் ஒற்றுமையுடன் வாழும் வியத்தகு வாழ்க்கை நெறியால் மிகவும் கவரப்பட்டேன்.  நான் அறிந்தவரை, 21ஆம் நூற்றாண்டின் இந்தியா புதிய புதிய கண்டுபிடிப்புகளின் மூலம் வளர்ச்சியால் மிகவும் வேமாக வளர்ந்துகொண்டிருக்கிறது.  ‘‘தெற்கு ஆசியாவின் சிலிகான் பள்ளத்தாக்கு’’ என்று அழைக்கப்படும் பெங்களூரு இந்தியாவில் உள்ள தகவல்தொழில்நுட்ப விற்பன்னர்களில் மூன்றில் ஒரு பங்கினர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்நகரம் இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப மையமாக மட்டுமல்ல, ஆசியாவின் மென்பொருள் சேவைகளின் மையமாகவும் விளங்குகிறது. இந்தியாவில் உற்பத்தித்துறையும் (Manufacturing Sector) மிகவும் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. வர்த்தக ரீதியான வாகனங்களை உற்பத்தி செய்வதில் டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் உலகின் முதல் ஐந்து நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது. டாட்டா குளோபல் பெவரேஜஸ் (Tata Global Bevarages) நிறுவனம் தேயிலை உற்பத்தியில் உலகின் மிகப்பெரிய இரண்டாவது நிறுவனமாக விளங்குகிறது.  ஆப்பிள் நிறுவனத்தின் மறைந்த தலைவர் (CEO) ஸ்டீவ் ஜாப்ஸ் யோகாவும் தியானமும் கற்றுக்கொள்வதற்காகவே இந்தியாவிற்குப் பயணம் செய்தார் என்று நான் படித்திருக்கிறேன்.  இப்போது, சீன இளைஞர்களில் கணிசமான எண்ணிக்கையினர் இந்தியாவின் உன்னதமான கலாச்சாரத்தையும், வரலாற்றின் தடங்களையும் ஆராய்ந்து அறிந்து பெருமிதம் கொள்ளும் நோக்கத்துடன் இந்தியாவிற்கு வந்துகொண்டிருக்கின்றனர்.
ஆசிய நாடுகளில் அடுத்தடுத்து வாழ்ந்து கொண்டிருக்கும் சீனாவும் இந்தியாவும் கூடி வாழ முடிவெடுத்திருக்கின்றன.
நவீன காலத்தில் நம்முடைய லட்சியங்கள் முன்னெப்போதையும்விட மிகவும் வலுவாகப் பின்னப்பட்டிருக்கின்றன.  நம்முடைய மக்கள் பரஸ்பரம் இரக்கம்கொண்டு, தங்கள் நாடுகளில் அவர்கள் மேற்கொண்ட தேசிய விடுதலைப் போராட்டத்தின்போது ஆதரவும் உதவியும் செய்துள்ளது தொடர்பாக மனதைத் தொடும் எண்ணற்ற கதைகளை விட்டுச் சென்றுள் ளார்கள். அதன்பின்னர், நம் இரு நாடுகளும் இணைந்து  சமாதான சகவாழ்வைத் தொடர ஐந்து அம்சங்களைக் கொண்ட பஞ்சசீலக் கொள்கையை உருவாக்கின.  அது நம் இரு நாடுகளுக்மே சர்வதேச உறவுகளை முன்னெடுத்துச் செல்ல  மிக முக்சியமான அடிப்படை விதிகளாக மாறியுள்ளன. நம் இரு நாடுகளுமே வளர்முக நாடுகளின் உரிமைகளையும் நலன்களையும் உயர்த்திப்பிடித்திட, தெற்குத் தெற்கு ஒத்துழைப்புக்கு இறுதி வடிவம் கொடுத்திடதோளோடு தோள்நின்று, செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இன்று, இமயமலையைத் தாண்டி இப்போது  மேற்கொள்ளப்படும் கைகுலுக்கல் மிகவும் வலிமையானதாகும். பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான பணியிலும், மக்களின் வாழ்க்கைத் தரங்களை முன்னேற்றுவதற்கான செயல்பாடுகளிலும், நாட்டை புதுப்பிப்பதற்கான முயற்சிகளிலும் இரு நாடுகளுமே ஓர் அமைதியான மற்றும்  மன உலைச்சலற்ற அண்டை நாட்டவரைப் பெற்றிருப்பதும், நாடுகளுக்கிடையிலான பிரச்சனை எதுவாக இருந்தாலும் அதனைப் பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒத்துழைப்பு மூலமாக தீர்வு கண்டு வெற்றிகாண விழைவதும் அவசியமாகும்.  ஆசிய நாடுகளில் மிகவும் வலுவாக உள்ள இந்தியா, உலக அளவில் மிகவும் செல்வாக்குடன் காணப்படும் மாபெரும் நாடான இந்தியா, சர்வதேச விவகாரங்களில் அளித்திடும் முக்கியத்துவமான பங்களிப்பு நாளும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.  பிரிக்ஸ்’ (BRICS-Brzzil, Russia, India, China, South Africa) நாடுகளில் ஓர் உறுப்புநாடாகத் திகழும் இந்தியா, தன்னுடைய ஆரோக்கியமான பொருளாதார வளர்ச்சியுடன், தெற்காசிய நாடுகளின் அமைதிக்கும் வளத்திற்கும் குறிப்பாகவும், ஆசிய பசிபிக் நாடுகளில் பொதுவாகவும், தன் குறிப்பிடத்தக்க பங்களிப்பினை ஆற்றி வருகிறது. இந்தியாவின் வளர்ச்சி கண்டு சீனா மிகவும் மகிழ்ச்சி கொள்கிறது. இருநாடுகளிலும் அனைத்துத் துறைகளிலும் பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சிக்கு உதவிடும் வகையில் சீன - இந்திய ஒத்துழைப்பை உயர்த்திடவும் விரிவுபடுத்திடவும் சீனா எப்போதும் தயாராக இருக்கிறது. 
இரு நாடுகளுக்கும் இடையே வரலாறு விட்டுச்சென்றுள்ள சில சிக்கலான பிரச்சனைகள் இன்னமும் இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், பெரும் நாடுகளாக விளங்கும் நம் இரு நாடுகளின் பொதுவான பண்புகளாகத் திகழும் வளமான வரலாற்று அனுபவம் மற்றும் தொலைநோக்குப் பார்வை, நாமிருவரும் நட்புறவுடனும் நல்லெண்ணத்துடனும் வாழ்ந்திடவும் நம் பிரச்சனைகள் அனைத்தையும் ஒரு நீண்ட கால அடிப்படையில் தீர்த்துக் கொண்டிடவும் நமக்கு உதவிடும். கடந்த சில ஆண்டுகளில் நாம் மேற்கொண்ட கூட்டு முயற்சிகள் இரு தரப்பினரும், தாவாவுக்குரிய எல்லைப் பிரதேசங்களில் சமாதானத்தையும்  அமைதியையும் கொண்டுவரவும், பிரச்சனைகள் அனைத்தையும் பகுத்தறிவுக்கு ஒத்த முறையில் மிகவும் நேர்மையாகவும் பக்குவமாகவும் பேசிப்  படிப்படியாகத் தீர்த்துக்கொள்ளவும் கற்றுக்கொண்டிருக்கிறோம்.    சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான பொதுவான நலன்கள் அவற்றின் வித்தியாசங்கள் அனைத்தையும்  விஞ்சி நிற்பவைகளாகும். இரு நாடுகளும் ஒன்றையொன்று சந்தேகத்துடன் பாவிப்பதற்குப் பதிலாக, பரஸ்பரம் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள முன்வர வேண்டும் என இரு நாடுகளுமே ஒப்புக்கொண்டுள்ளன. நம் முன்னேற்றப் பாதையில் நன்கு முன்னேறிக் கொண்டிருக்கும் நாம் இருவருமே நமக்கிடையேயிருக்கும் பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்ள மதிநுட்பத்தையும் பகுத்தறிவையும் நம்சக்தியையும் நன்கு பயன்படுத்துவோமேயானால், நம்மால் களையமுடியாத தடைகள் என்று எதுவுமே இல்லை என்றே நான் நம்புகிறேன். நம் பிரச்சனைகளை நாம் வெளிப்படைத் தன்மையுடன் எதிர்கொண்டு, ஒருவர்க்கொருவர் உண்மையுடன் பேசினோமேயானால் அவற்றிற்கு முறையான தீர்வுகளை நம்மால் நிச்சயமாகக் காண முடியும்.
இன்றியமையாத ஏழு அம்சங்கள்
சீனம் வளர்ந்து கொண்டிருக்கும் மற்றும் அமைதியை விரும்பும் ஒரு  மாபெரும் நாடாகும். சீனர்கள் மிகவும் மதிக்கும் மாண்பு என்னவெனில், ‘‘மற்றவர்கள் உனக்குச் செய்யக்கூடாது என்று எதை நீ கருதுகிறாயோ அதை நீ மற்றவர்களுக்குச் செய்யாதே’’ என்பதேயாகும்.  இத்தத்துவம் அக்கம்பக்கத்திலிருப்பவர்களுடன் நட்புடனும் நன்னம்பிக்கையுடனும் இருக்க வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்திக்கூறுகிறது.  சீனம் முன்பிருந்ததைவிட நன்கு வளர்ந்திருக்கிறது.        ஆனாலும் இன்றும் அது ஒரு வளர்முக நாடுதான். ஒருநாள் அது மிகவும் வலுவான நாடாக மாறினாலும்கூட, நிச்சயமாக அது பிறநாடுகளால் தூஷிக்கப்படக்கூடிய மேலாதிக்கப் பாதையை எப்போதுமே மேற்கொள்ளாது. அந்நியர்கள் பலராலும் மேற்கொள்ளப்பட்ட இத்தகைய இழிநடவடிக்கைகள், யுத்தங்கள் மற்றும் குழப்பங்கள் காரணமாக நாங்கள் ஏராளமாகவே பாதிக்கப் பட்டிருக்கிறோம். அதேபோன்ற துன்ப துயரங்கள் மீண்டும் ஒருமுறை எவருக்கும் ஏற்பட அனுமதிக்கப் படக்கூடாது என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும்.
நவீனமயத்தை எய்திட சீனா செல்ல வேண்டிய பாதை வெகுதூரத்திலிருக்கிறது. சீனா போன்ற மக்கள்தொகை நிறைந்த மாபெரும் நாட்டினை வெற்றிகரமாக நடத்திச் செல்வதற்குஇன்றியமையாத ஏழு அம்சங்களுக்கு மிகவும் உயர்ந்தபட்ச முன்னுரிமைகள் அளிக்கப்பட வேண்டும்.  அவை, எரிபொருளுக்கான விறகு, அரிசி, சமையல் எண்ணெய், உப்பு, சோயா குழம்பு, உணவுக்கு மணமூட்டும் புளிப்புச்சுவை (vinegar) மற்றும் தேயிலை ஆகியவைகளாகும். இந்த  ஏழும் நாள்தோறும் வழங்கப்பட வேண்டியது அவசியம். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், நம் மக்களின் அன்றாட வாழ்க்கைத் தேவைகளுக்கான அத்தியாவசியத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய வேண்டியது நம் உடனடிக் கவலைகளாகும். சீன மக்கள் அனைவருக்கும் சிறந்த கல்வி, மிகவும் உத்தரவாதத்துடன் கூடிய வேலைவாய்ப்புகள், மிகவும் நம்பகமான சமூகப் பாதுகாப்பு, மிகவும் வசதியான குடியிருப்பு வீடுகள், மிகவும் வண்ணமயமான கலாச்சார வாழ்க்கை மற்றும் நிலையான  மற்றும் வளமான தேசம் ஆகியவற்றை விரும்புகிறார்கள்.  இவை அனைத்தையும் எங்கள் மக்களுக்கு வழங்குவது என்பதும் நாட்டை நவீனமயமாக்குவது என்பதும் அவ்வளவு எளிதான ஒன்றல்ல. சுயசார்பு வளர்ச்சிக்கு நாங்கள் அதிக முனைப்பு காட்ட வேண்டும். அதற்கு ஓர் அமைதியான சர்வதேச சூழல் அவசியமாகும். நாங்கள் அண்டை நாட்டவர்களுடன் நல்லிணக்கத்துடனும், உலகில் உள்ள அனைவருடனும் நட்புடனும் வாழவேண்டியது அவசியமாகும். சமாதானமுறையிலான வளர்ச்சிப் பாதையேப் பின்பற்றப்படவேண்டும் என்பதே சீன மக்களின் தடுமாற்றமற்ற உறுதியான நிலைப்பாடும்நடவடிக்கையுமாகும்.
தொடரும் சீர்திருத்தங்கள்
சீனா தன்னுடைய துரிதமான வளர்ச்சிக்கு சீர்திருத்தங்களைத் தொடரவும் அதேபோன்று அயல்நாடுகளின் ஒத்துழைப்பைப் பெறவும் கடன்பட்டிருக்கிறது. உலகமயம் கோலோச்சக்கூடிய இன்றைய சகாப்தத்தில் நாடுகளுக்கு இடையிலான உறவுகள் என்பவை ஒன்றையொன்று சார்ந்தே அமைந்திருக்கின்றன. இன்றைய சர்வதேச ஒழுங்கு மற்றும் அமைப்பில் சீனா நன்கு பயனடைந்தே இருக்கிறது.  இத்தகைய சீர்திருத்த அமைப்புமுறையை முன்னெடுத்துச் செல்வதில் இந்தியாவுடனும் இதர நாடுகளுடனும் ஒத்துழைத்துச் செயல்பட சீனா தயாராகவே இருக்கிறது. சீனா, சர்வதேசக் கடமைகளைத் தன் நாட்டின் பலத்துடன்  முன்னெடுத்துச்செல்லும். உலகோடு  ஒட்ட ஒழுகிட திறந்த மனதுடன் நாங்கள் தயாராகவே இருக்கிறோம். அதேபோன்று உலகமும் எங்களை அமைதியான முறையில் திறந்த மனதுடன் அணுகிடும் என்று நம்புகிறோம்.
சீனாவும் இந்தியாவும் வடிவத்திலும் மக்கள் தொகையிலும் மாபெரும் நாடுகளாகும். இரண்டு நாடுகளிலும் சேர்ந்து, மக்கள்தொகை 2.5 பில்லியனை (250 கோடியை)த் தாண்டிவிட்டது. இது உலக மக்கள் தொகையில் சுமார் 40 விழுக்காடாகும். உலகில் மிகவும் முக்கியமான சந்தைகளாக நம் இரு நாடுகளும் கருதப்படுகின்றன. ஆயினும், சென்ற ஆண்டில் நம் இரு நாடுகளின் வர்த்தகம் (Trade Volume) 70 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் குறைவேயாகும். நம் நாட்டின் வலிமை மற்றும் அந்தஸ்துடன் ஒப்பிட்டோமானால் இது போதுமானதல்ல. ஆயினும் நாம் நம் வர்த்தகத்தைiயும் வணிக ஒத்துழைப்புகளையும் மிகப் பெரிய அளவில் விரிவாக்கிட, மேம்படுத்திட மிகப்பெரிய அளவில் வாய்ப்பு வசதிகள் இருக்கின்றன.    இரு தரப்பிலும் செயல்பட்டு தீர்த்துக்கொள்ள வேண்டிய முக்கியமான பிரச்சனைகளில் இதுவும் ஒன்று.
உலகப் பொருளாதாரத்தை உந்தித்தள்ளும் உந்துசக்தியாக (என்ஜினாக) ஆசியாவை உலகம் பார்க்கிறது. சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு வல்லமை நாடுகளின் பங்கேற்பில்லாமல் இது சாத்தியமாகாது. ஆசியா, உலக அமைதியின் நங்கூரமாக மாற வேண்டுமானால்நம் இரு நாடுகளும் கைகோர்த்துச் செயல்பட வேண்டியது அவசியமாகும்.
உலகிலேயே மிகவும் அதிக மக்கள் தொகை நாடுகளான சீனாவும் இந்தியாவும் நல்லிணக்கத்துடன் வாழவும், பொதுவான வளர்ச்சியை எய்திடவும் தவறுமேயானால், மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஆசிய  நூற்றாண்டு வந்திடாது. ஆசியாவின் எதிர்காலம்  சீனாவும் இந்தியாவும் ஒற்றுமையுடனிருப்பதையே சார்ந்திருக்கிறது. சீனாவும் இந்தியாவும் ஒன்றிணைந்து நல்லிணக்கத்துடனும் வளமாகவும் வாழுமேயானால், நம் இரு நாட்டின் சந்தைகளும் ஒரேபுள்ளியில் குவியுமேயானால், அது ஆசியாவுக்கும் உலகிற்கும்  பெரிய அளவில்   உண்மையான முறையில் நலம் பயக்கும், சீனாவின் வளர்ச்சி இந்தியாவுக்கான வாய்ப்புகளுக்கு உறுதியளிக்கிறது.  அதேபோன்று இந்தியாவின் வளர்ச்சியும் சீனாவுக்கான வாய்ப்புகளுக்கு உறுதி அளிக்கிறது.  நம் பொதுவான வளர்ச்சி நம் இருநாட்டு மக்களுக்கும் பயனளித்திடும், உலகிற்கும் அதிகமான அளவில் சிறந்த வாய்ப்புகளை அளித்திடும்.
(லே கெச்சியாங், சீன மக்கள் குடியரசின் பிரதமர்)
(தி இந்து நாளேட்டில், 2013 மே 20 அன்று வெளியான கட்டுரை)
(தமிழில்: ச.வீரமணி)

Tuesday, May 14, 2013

நாடாளுமன்றம் முடக்கப்பட்டதற்கு அரசாங்கமே பொறுப்பு



நிலக்கரிச் சுரங்கப் படுகைகளை ஒதுக் கீடு செய்தது தொடர்பான மத்திய புலனாய்வுத் துறையின் (சிபிஐ) விசாரணையில் அரசாங் கம் தலையிட்டிருப்பதற்கு உச்சநீதி மன்றம் தனது கடுமையான அதிருப்தியை வெளிப் படுத்தி இருக்கிறது. மத்திய புலனாய்வுத் துறையின் முழுமையான, தரமான புல னாய்வு குறித்தும் மற்றும் அதன் நம்பகத்தன் மையையும் உச்சநீதிமன்றம் கேள்விக்கு உட்படுத்தியுள்ளது. அரசாங்கத்திடம் சிபிஐ பாரபட்சமற்றதாகவும், அது ‘‘வெளிநிர்ப்பந் தங்களுக்கு உட்பட்டு செயல்படாத விதத் தில் சுதந்திரமாகச் செயலாற்ற’’ அனுமதிக்கு மாறும் உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டுள் ளது. உச்ச நீதிமன்றம் இவ்வாறு தன்னுடைய அதிருப்தியைத் தெரிவிக்கையில், ‘‘அரசாங்க அதிகாரிகளின் ஆலோசனைகளின்படி சிபிஐயின் இதயம் போன்ற அறிக்கையே மாற்றப்பட்டுள்ளது,’’ என்று கூறியுள்ளது.
சிபிஐ செயல்பாடுகள் குறித்துக் கடுமை யான முறையில் பதிவுசெய்துள்ள உச்சநீதி மன்றம், ‘‘பல எஜமானர்களும் ஒரு கிளியும் என்ற பஞ்ச தந்திரக்கதையை’’க் குறிப்பிட்டு அதில் வருவதுபோல சிபிஐ ‘‘எஜமானர் களின் குரலைப் பேசும் கூண்டுக்கிளியாக மாறி இருக்கிறது’’ என்று கடும் கண்ட னத்தைத் தெரிவித்துள்ளது. மத்திய சட்ட அமைச்சர் தொடர்ந்து பதவி யில் நீடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது (தற்போது விடுவிக்கப்பட்டிருக்கிறார்) என்று குறிப்பிட்டுள்ள உச்சநீதிமன்ற அமர்வாயம், அமைச்சர் சிபிஐயிடமிருந்து அறிக்கை கோரலாம் ஆனால் நீதிமன்றத்துடன் தலை யிட முடியாது என்று கூறியுள்ளது. சட்ட அமைச்சரைப் பாதுகாக்கும் ஒரு முயற்சி யில், அரசு வழக்கறிஞரான அட்டார்னி ஜெனரல் (முதலில் இவர் சிபிஐ அறிக்கையில் அரசாங்கம் தலையிட வில்லை என்று நீதிமன்றத்தில் கூறியிருந் தார்), ‘‘நான் சிபிஐ அதிகாரிகளுடன் நடத்திய கூட்டமானது சட்ட அமைச்சரின் ஆலோ சனையின்கீழ்தான் நடந்தது’’ என்று கூறி யுள்ளார். உச்சநீதிமன்றத்திடமிருந்து இத்தகைய விமர்சனங்களை எதிர்பார்த்துத்தானோ என்னவோ, அரசாங்கம் நடந்து கொண் டிருந்த பட்ஜெட் கூட்டத்தொடரையே முழு மையாக நடத்திடாமல் முன்கூட்டியே அவ சர அவசரமாக, காலவரையறையின்றி ஒத்தி வைத்து விட்டது.
பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது பாதி முழுமையாகப் பயனேது மின்றி முடிக்கப்பட்டுவிட்டது. பதினோரு நாட்கள் நடைபெற்ற கூட்டத்தொடரில் மக் களவை ஒருநாள்கூட செயல்பட முடிய வில்லை. மாநிலங்களவையில் ஏப்ரல் 22 அன்று பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், தில்லியில் சிறுகுழந்தை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட கொடூரம் குறித்தும் விவாதத்தைத் தொடங்கியது. ஆனால் அதுவும்கூட முழுமையாக நடை பெறமுடியவில்லை. பதினோரு நாட்களில் பத்து நாட்களை அது இழந்துவிட்டது.ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கத்தின் இத்த கைய நடவடிக்கைகளின் காரணமாக ஒன் றன்பின் ஒன்றாக ஒவ்வொருவர் தலையும் மிகவும் பரிதாபகரமான முறையில் உருளத் தொடங்கியுள்ளன. பட்ஜெட் கூட்டத்தொடர் ஆரம்பிக்கையில், கேரள சூர்யாநெல்லி பாலியல் வழக்கில் மாநிலங்களவைத் துணைத் தலைவரது பங்களிப்பு குறித்து குற்றச்சாட்டுக்கள் முன்வந்தபோது ஐ.மு. கூட்டணி-2, அரசாங்கமானது மிகவும் வெட் கங்கெட்ட முறையில் அவரைப் பாதுகாக்க முன்வந்தது. (உண்மையில் அவர் அரசாங் கத்தின் ஓர் அங்கம் கிடையாது.) 2ஜி ஸ்பெக் ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பாக நடைபெற்ற கூட்டு நாடாளுமன் றக் குழுத்தலைவர் தன் அறிக்கை மூலமாக அரசாங்கத்தின் ஊழல்களை முழுமையாக மூடிமறைக்க முன்வந்ததன் மூலம் அரசாங் கத்தின் இத்தகு நாணய மற்ற செயல்பாடுகள் தொடர்ந்தன. நாடாளுமன்றக் கூட்டுக் குழு உறுப்பினர்களுக்கு அவரது அறிக்கை சுற்றுக்கு விடப்படுவதற்கு முன்பேயே ஊட கங்களுக்கு அது கசிய விடப்பட்டுள்ளது. கடைசியில், மக்களவைத் தலைவர் அறிக் கையை முறையாகத் தாக்கல் செய்வதற்காக, கூட்டு நாடாளுமன்றக் குழு வின் காலத்தை மழைக்காலக் கூட்டத் தொடர்முடியும் வரைக்கும் நீட்டித்துள்ளார்.ஊழல்கள் வெளியாகும் அனைத்துப் பிரச்சனைகளிலுமே, அது நிலக்கரிப் படுகைகள் ஒதுக்கீடாக இருந்தாலும் சரி, அல்லது ரயில்வேயில் உயர்மட்ட அதிகாரி களின் நியமனமாகஇருந்தாலும் சரி, அவற் றில் சம்பந்தப்பட்ட சட்ட அமைச்சரும் ரயில்வே அமைச்சரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று நியாயமான கோரிக்கை எழுந்த போது அரசாங்கம் அவற்றை ஏற்க மறுத்தது. (தற்போது இருவரும் ராஜினாமா செய்துள்ளனர்.) புலனாய்வு நடைபெறுவதால் இக்கோரிக்கையை ஏற்கமுடியாது என்று அரசுத்தரப்பில் காரணங்கள் கூறப்பட்டன.
அமைச்சகத்தில் ரயில்வே அமைச்சர் தொடர்ந்து நீடிப்பாரானால் முறையான புல னாய்வு எப்படி நடைபெற முடியும்? எந்த வொரு புலனாய்வுமே நடுநிலையுடன் நடை பெறுவதாக மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படக்கூடிய விதத்தில் நடைபெற வேண் டும். இத்தகைய மக்களின் நம்பிக்கையைப் பற்றி காங்கிரஸ் கட்சி கொஞ்சம்கூட கவ லைப்படவில்லை. ரயில்வே அமைச்சரின் அக்கா மகன் ரயில்வேயின் உயர் அதிகாரிகளை நியமிப் பதில் லஞ்சம் வாங்கியிருக்கிறார் என்று செய் திகள் வெளியான சமயத்தில், ரயில்வே அதி காரிகள் சங்கங்களின் சம்மேளனம் மத்திய அமைச்சரவை செயலாளருக்கும், பிரதமரின் முதன்மை செயலாளருக்கும் இந்திய ரயில் வேயில் உயர் அதிகாரிகள் நியமனங் களில் நடைபெற்றுள்ள தில்லுமுல்லுகள் குறித்து மிகவும் விவரமாக கடிதங்கள் எழுதி, இந்திய ரயில்வேயின் பழைய புகழை மீளவும் கொண்டுவருமாறு கேட்டுக்கொண்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கள் காரண மாக சில ராஜினாமாக்கள் நடைபெறலாம். ஆயினும், அரசியலமைப்புச் சட்டம் நமக்கு வகுத்துத்தந்துள்ள விதத்தில் நாட்டின் அனைத்து அமைப்புகளும் - அதாவது அர சாங்கம் - நாடாளுமன்றம்/சட்டமன்றங்கள் - நீதித்துறை ஆகிய மூன்று அமைப்புகளுமே சரிவிகித அதிகாரங்களுடன் செயல்படுவ தாகக் கூறிட முடியாது. அவை ஆட்சியாளர் களின் நடவடிக்கைகள் காரணமாக சிதைக் கப்பட்டிருக்கின்றன. நம் அரசியலமைப்புச் சட்டத்தின்படி உச்சபட்ச இறையாண்மை என்பது மக்களிடமே இருக்கிறது. ‘‘மக்க ளாகிய நாம்’’தான் இவ்வாறு இறையாண் மையை பிரயோகிக்கிறோம். மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள். அரசாங்கங்கள், நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்களுக் குப் பதில்சொல்லக் கடமைப்பட்டிருக் கின்றன. இத்தகைய சங்கிலித்தொடர் போன்ற ஒருவர் மற்றவர்க்குப் பதில் சொல்ல வேண்டிய கடமை மற்றும் பொறுப்பு அரசாங் கத்தின் இத்தகைய நடவடிக்கை காரணமாக மிகவும் மோசமானமுறையில் சிதைக்கப் பட்டிருக்கிறது. நாடாளுமன்றத்தின் நட வடிக்கைகள் முடமாக்கப்படும்போது, நாடாளுமன்றத்திற்குப் பதில் சொல்ல வேண் டிய ஆட்சியாளர்கள் அவ்வாறு பதில் சொல் லாமல் தப்பித்துக் கொள்கிறார்கள். தொடர்ச்சி யாக இவ்வாறு நாடாளுமன்றம் நடைபெறாத தன் காரணமாக, நாடாளுமன்றம் மக்களுக் குப் பதில்சொல்ல வேண்டிய பொறுப்பி லிருந்து சிதைக்கப்படுகிறது.
ஒட்டுமொத்தத் தின் இது நம் அரசியலமைப்புச் சட்டத்தின் அடித்தளத்தையே அரித்து வீழ்த்துகிறது. அரசியலமைப்புச் சட்டத்தை அமல் படுத்த வேண்டிய அமைப்புகளே அதனை நிலைகுலையச்செய்யக்கூடிய விதத்தில் ஏன் செயல்படுகின்றன? நாடாளுமன்றத் தில் தற்போது ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டை இத்தகைய அடிப்படைக் கேள்வியை எழுப்பியிருக்கிறது. நாடாளுமன்றம் தன் பணிகளைச் செய்யாது ஒதுங்கிக்கொள்ளும் பட்சத்தில், ஆட்சியாளர்கள் தங்கள் பொறுப் புகளை முறையாக நிறைவேற்றாதுஅவற்றை மீறும் பட்சத்தில், பின்னர் நீதித் துறையைமட்டும் ‘‘அது தன் வரம்பை மீறி செயல்படுகிறதுஎன்று குறை காண்பதில் அர்த்தம் ஏதுமில்லை.நாடாளுமன்றம் முடக்கப்பட்டிருப்ப தானது நம்முடைய அரசியலமைப்புச் சட் டத்தின் மைய அம்சங்களுடன் இருக்கின்ற கண்ணிகளையே உடைத்தெறிந்துள்ளது. பிரதமர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரி பாஜக நாடாளுமன்றத்தின் நடவடிக் கைகளை சீர்குலைத்ததன் மூலம், அர சாங்கம் மிகவும் வசதியாக மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய தன்னுடைய பொறுப்பிலிருந்து தப்பித்துக்கொண்டது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் அல்லது நிலக்கரிச் சுரங்கப் படுகைகளை ஒதுக்கீடுகள் செய்த தில் நடைபெற்றுள்ள ஊழல்கள் பலவற்றில் முந்தைய தே.ஜ.கூட்டணி அரசாங்கமும் பல்வேறு தில்லுமுல்லுகளைச் செய்துள் ளது. ஊழல் புரிவதில் போட்டி போட்டுக் கொண்டு இவர்கள் நடந்து கொண்டுள்ளது வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன. இது மிகவும் ஆழமான ஒரு விஷய மாகும். அரசாங்கத்திற்கும் நாடாளுமன்றத் திற்கும் அரசியலமைப்புச் சட்டத்தின்கீழ் பொது விவகாரங்களை மேலாண்மை செய்திட பொறுப்புகள் வழங்கப்பட்டிருக்கின் றன. இறுதி ஆய்வின்போது இரு தரப்பி னருமே மக்களுக்குப் பதில் சொல்லக் கட மைப்பட்டவர்களாவார்கள். உண்மையில் இவ்வாறு ஒருவருக்கொருவர் பதில் சொல் லக்கூடிய விதத்தில் ஆட்சி அமைப்புகள் வகுக்கப்பட்டிருப்பதுதான் ஜனநாயக அமைப்பினை மற்ற அமைப்புகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. இவ்வாறு ஒருவர்க்கொருவர் பதில் கூறும் பொறுப் புக்கள் சிதைக்கப்பட்டிருப்பதைத்தான் இப்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். நம் அரசியலமைப்புச் சட்டத்தின் திட் டக்கூறுகள் இவ்வாறு மோசமாகச் சிதைக் கப்படுவது உடனடியாகச் சரிசெய்யப்பட்டாக வேண்டும். ஆட்சியாளர்கள் நாடாளுமன்றத் திற்குப் பதில் சொல்லாமல் தப்பித்துக் கொள் வது தொடர்வது அனுமதிக்கப்பட முடியாத தாகும்.
இதற்கு நாடாளுமன்றம் முறையாக செயல்பட்டாக வேண்டும். இதற்கு எதிர்க் கட்சிகளின் நியாயமான கோரிக்கைகளை ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இப்போது ராஜினாமா செய்துள்ள அமைச் சர்கள் நாடாளுமன்றம் நடைபெறும்போதே ராஜினாமா செய்திருந்தால், நாடாளுமன்றம் நடைபெறாமல் முடக்கப்பட்டதைத் தவிர்த் திருக்க முடியும். அதே சமயத்தில், எதிர்க்கட் சியினர் கோரும் எதார்த்தத்திற்கு ஒவ்வாத அநியாயமான கோரிக்கைகளுக்காகவும் நாடாளுமன்றம் முடக்கப்படுவதும் அனு மதிக்கப்பட முடியாததாகும். உண்மையில், ஓராண்டில் குறைந்தபட்சம் நூறு நாட் களாவது நாடாளுமன்றம் நடைபெற்றாக வேண்டும் என்கிற முறையில் நம் அரசி யலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும். அதற்குரிய திருத்தத்தைக் கொண்டுவர ஆழமாக நாம் பரிசீலித்திட வேண்டும்.நாடாளுமன்றம் இவ்வாறு சீர்குலைக்கப் பட்டதன் விளைவாக, அரசாங்கமானது தன்னுடைய மிகவும் மோசமான மக்கள் விரோத பட்ஜெட்டை, நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் விவாதம் எதுவுமின்றியும் உறுப்பினர்களின் ஆட்சேபணை எதுவு மின்றியும் நிறைவேற்றிக் கொண்டுவிட்டது. அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகள் பலவற்றை எழுப்பி, விவா தித்து, தீர்வு காண முடியவில்லை. மக்களின் வாழ்வாதாரங்களில் நேரடியாகச் சம்பந்தப் பட்ட, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன் னுடைய மாற்றுப் பாதைக்கான போர்முழக்கப் பயணத்தை மேற்கொண்டபோது முன் வைத்த கோரிக்கைகள் எதனையும் நாடாளு மன்றத்தில் எழுப்ப முடியவில்லை. முன் னெப்போதும் இல்லாத அளவிற்கு மகாராஷ் டிரம், ஆந்திரம் மற்றும் கர்நாடக மாநிலங் களில் வறட்சி தாண்டவமாடக்கூடிய இன் றைய நிலையில் அங்குள்ள லட்சக்கணக் கான விவசாயிகள் வாழ்வாதாரங்களைத் தேடி புலம்பெயர்ந்து சென்றுள்ள கொடு மைகள் குறித்து எதுவும் நாடாளுமன்றத்தில் எழுப்ப முடியவில்லை. மிகவும் முக்கியப் பிரச்சனைகளான விலைவாசி உயர்வு, தனி யார் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் பணப் பரிவர்த்தனைகளில் நடைபெற்றுள்ள ஊழல்கள் குறித்து வெளியாகியுள்ள செய்தி கள், ரயில்வே மற்றும் பொதுப் போக்கு வரத்துக்கு மானிய விலையில் அளிக்கப்பட்ட டீசல் விலையை ரத்து செய்ததன் மூலம் எழுந்துள்ள பிரச்சனைகள், சீட்டுநிதி நிறு வனங்கள் மற்றும் பல்வேறு சிறுநிதி நிறு வனங்களின் மோசடிகள், இவற்றால் லட் சக்கணக்கான மக்கள் ஏமாற்றப்பட்டு, பலர் தற்கொலை புரிந்துகொண்டுள்ளமை, அயல் துறைக் கொள்கையிலும் அரசாங்கம் மேற் கொண்டுள்ள பல்வேறு குளறுபடிகள் - இப்படி எந்தப் பிரச்சனை குறித்தும் நாடாளு மன்றத்தின் முன்கொண்டுவந்து, தீர்வு காண முடியவில்லை.
நாட்டு மக்களின் பெரும்பான்மையான வர்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தக் கூடிய விதத்தில் ஆட்சியாளர்கள் முடிவு களை மேற்கொள்ள நிர்ப்பந்திக்கக்கூடிய விதத்தில், நாடாளுமன்றத்திற்கு வெளியே மக்கள் மன்றத்தின்முன் மிகவும் வலுவான முறையில் மக்கள் பிரச்சனைகளை எடுத் துச் செல்ல வேண்டிய நிலையில் இப்போது நாம் இருக்கிறோம். மே மாதத்தின் இறுதிப் பாதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அறைகூவலுக்கிணங்க நடைபெறவிருக் கும் நாடு தழுவிய அளவிலான வெகுஜன மறியல் போராட்டம், அத்தகைய மகத்தான மக்கள் போராட்டங்களின் அடையாளமாக அமைந்திட வேண்டும்.
(தமிழில்: ச.வீரமணி)

Friday, May 3, 2013

மத்தியப் புலனாய்வுக் கழகமும் நிலக்கரிச் சுரங்க ஊழலும்





நிலக்கரிச் சுரங்கப் படுகைகளை ஒதுக் கீடு செய்ததில் நடைபெற்றுள்ள ஊழல்களில் ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கத்தின் பங்கு குறித்து வந்த ஐயங்களை உறுதிப் படுத்தும் வண்ணம் மத்தியப்புலனாய்வுக் கழகத்தின் புலனாய்வில் மத்திய அரசு தலையிட்டிருப்பது தொடர்பாக சிபிஐ இயக்குநர் ஒத்துக்கொண்டிருப்பதை அடுத்து, உச்சநீதிமன்றம் ஏப்ரல் 30 அன்று கடும் விமர்சனங்ளைச் செய்திருக்கிறது. நீதிபதிகள் ஆர்.எம்.லோதா, மதன் பி. லோகுர் மற்றும் குரியன் ஆகிய மூவரடங் கிய அமர்வாயம், ‘‘நாட்டின் முதன்மை யான புலனாய்வு ஏஜென்சி என்ற முறை யில், உங்கள் நடவடிக்கைகள் அதன் நம்பகத்தன்மையையும், நடுவுநிலைமை யையும் உயர்த்திப்பிடிப்பதாக இருக்க வேண்டும். சுதந்திரம் என்பதன் பொருள் நீங்கள் (சிபிஐ) நிர்வாகத்தின் ஊன்று கோல்களின் துணைகொண்டு இயங்கு வது அல்ல. உங்கள் நடவடிக்கைகள் (அதாவது உங்கள் அறிக்கையை சட்ட அமைச்சருடனும் இதர அதிகாரிகளு டனும் பகிர்ந்து கொண்டதானது) சுதந்திர மான நடவடிக்கைகளை ஆட்டம் காணச் செய்துள்ளது. முதலாவதாக நாங்கள் செய்ய வேண்டியது, மத்தியப் புலனாய்வுக் கழகத்தை அயலார் தலையீடுகளிலி ருந்து விடுவிப்பதேயாகும்.
அப்போதுதான் புலனாய்வு என்பது வேதனை அளிக்கக் கூடியதாக இருக்காது. இதுவே நம்முன் உள்ள பிரதானமான பணியாகும். இந்த வழக்கில் வெளிவந்துள்ள சங்கடத்தை விளைவிக்கும் நிகழ்வுகள் புலனாய்வின் நம்பகத் தன்மையையே பாதித்திருக்கிறது. இந்தப் புலனாய்வும், இது முதற்கொண்டு மேற்கொள்ளப்படுகிற அனைத்துப் புல னாய்வுகளும் அயலார் தலையீடு எதுவும் இல்லாததாக அமைந்திட வேண்டும்.’’ இவ்வாறு நீதிமன்றம் தெரிவித்திருப்பதன் மூலம் சட்ட அமைச்சர் பதவியில் மேலும் தொடர்வது என்பது முற்றிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லை. இந்த ஊழல் தொடர்பாக மூன்று அம் சங்கள் சம்பந்தப்பட்டிருக்கின்றன. முத லாவதாக, இதில் சம்பந்தப்பட்டுள்ள தனி நபர்களின் குறைகூறத்தக்க நிலையுடன், மத்திய அரசும் கூட்டாக, புலனாய்வின் மீது செல்வாக்கு செலுத்த முயற்சித்திருப் பதை நிறுவுவது. இரண்டாவதாக, மத் தியப் புலனாய்வுக் கழகத்தின் நடுவு நிலைமையையும் அதன் சுயாட்சித்தன் மையையும் உத்தரவாதப்படுத்த வேண் டிய மிக முக்கியமான பிரச்சனை. அதே அளவுக்கு முக்கியத்துவமுடைய மூன்றா வது பிரச்சனை: அதாவது, நிலக்கரிச் சுரங்கங்களை சட்டவிரோதமாக ஒதுக் கீடு செய்ததற்குப் பொறுப்பான தனி நபர் களை அடையாளம் காணுதல். அவ்வாறு அடையாளம் கண்டு அவர்களைத் தண் டித்து நீதி வழங்கப்படுவதை உத்தரவாதப் படுத்துவதுடன், அதன் காரணமாக அர சின் கருவூலத்திற்கு ஏற்பட்ட இழப்பில் ஓரளவிற்காவது இழந்தவற்றை மீண்டும் பெறக்கூடிய விதத்தில் அத்தகைய ஒதுக் கீடுகளை ரத்து செய்து, அவற்றைத் தற் போதைய சந்தை விலையில் மறுபடியும் ஒதுக்கீடு செய்வது ஆகியவைகளாகும்.2012 ஆகஸ்ட் 17 அன்று மத்தியத் தலைமைத் தணிக்கைத்துறைத் தலை வர் (சிஏஜி), நாடாளுமன்றத்திற்கு சமர்ப் பித்தத் தன்னுடைய அறிக்கையில், நிலக் கரிச் சுரங்கப் படுகைகள் ஒதுக்கீடு செய்த முறை, அரசுக்கு சுமார் 1 லட்சத்து 86 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பை ஏற்படுத்தி இருப்பதாகத் தெரி வித்திருந்தார். ( உண்மையில் 2012 மார்ச் 22 அன்று அவர் தயார்செய்திருந்த வரைவு அறிக்கையில் 10 லட்சத்து 67 ஆயிரம் கோடி ரூபாய் என்று மதிப்பிட்டிருந்தார்.) 2012 செப்டம்பர் 6 அன்று உச்ச நீதிமன்றம், 2004க்கும் 2011க்கும் இடையில் நிலக் கரிச் சுரங்கங்கள் ஒதுக்கப்பட்டவை களை ரத்து செய்துவிட்டு மீளவும் ஒதுக் கீடு செய்யவேண்டும் என்று கோரி பொது நல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந் ததை அனுமதித்திருக்கிறது. அதன் மீதான வழக்கில்தான் உச்சநீதிமன்றம் இப்போது விசாரணை செய்து கொண் டிருக்கிறது.
வழக்கின் விசாரணை சமயத்தில் மத் தியக் குற்றப் புலனாய்வுக் கழகம் (சிபிஐ) உச்சநீதிமன்றத்தில் 2013 மார்ச் 8 அன்று தாக்கல் செய்திருந்த தகுநிலை அறிக்கை (ளவயவரள சநயீடிசவ )யில், முறையான விதி முறைகளைப் பின்பற்றாமல் ஒதுக்கீடு கள் செய்யப்பட்டிருக்கின்றன என்று குறிப்பிட்டிருக்கிறது. ஆனால், அந்த அறிக்கையில் மார்ச் 6 அன்று மத்திய சட்ட அமைச்சரிடம் அது காட்டப்பட்டது குறித்தோ, அவர் அதில் திருத்தம் செய்தது குறித்தோ எதுவும் கூறப்படவில்லை. இந்தப் பிரச்சனை இப்போது மிகவும் முக் கியத்துவம் உடையதாக மாறிவிட்டது. ஏனெனில், இந்தப் பிரச்சனையில் சிபிஐ, உச்சநீதிமன்றம் முன் இதன் மீதான புலனாய்வு சுதந்திரமானதாக இருக்கும் என்று ஐயப்பாட்டுக்கு இடமில்லாத வகையில் தெரிவித்திருந்தது. இந்த வழக்கு சம்பந்தப்பட்ட அனைத்து விவரங் களும் சட்ட அமைச்சருடன் விவாதிக்கப் பட்டிருப்பதும், அவற்றில் சட்ட அமைச் சர் அளித்திட்ட பரிந்துரைகளுக்கேற்ப மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதும் அசிஸ் டண்ட் சொலிசிட்டர் ஜெனரல் ஹரிண் ராவல் ராஜினாமா கடிதத்தின் மூலம் உறு திப்படுத்தப்பட்டுவிட்டது. ஹரிண் ராவல், தன்னுடைய ராஜினாமா கடிதத் தில், அட்டார்னி ஜெனரல் ஜி.இ. வாஹன் வாதி முன்னிலையில் சட்ட அமைச்ச ருடன் நடைபெற்ற சந்திப்பின்போது நடைபெற்ற நடவடிக்கைகள் அனைத் தையும் விவரமாக முன்வைத்திருக்கிறார். மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகத் திற்கும், சட்ட அமைச்சருக்கும் இடையே நடைபெற்ற இச்சந்திப்பு குறித்து தேசிய ஊடகங்களில் செய்திகள் வெளியானது, அது அரசியல் வட்டாரத்தில் சீற்றத்தை ஏற்படுத்தியது ஆகியவற்றைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் 2013 ஏப்ரல் 15 அன்று ‘‘சிபிஐ அறிக்கை எவருடனும் பகிர்ந்து கொள்ளப்படவில்லை’’ என்பதை ஓர் உறுதி வாக்குமூலத்துடன் (அபிடவிட்டுடன்) சமர்ப்பிக்குமாறு மத்தியப் புல னாய்வுக் கழகத்திற்குக் கட்டளையிட்டது. அதனை அடுத்து ஏப்ரல் 26 அன்று சிபிஐ இயக்குநர் ஓர் உறுதிவாக்குமூலம் தாக் கல் செய்தார். அதில் அவர், தங்கள் அறிக் கையானது சட்ட அமைச்சருடனும் பிர தமர் அலுவலகம் மற்றும் நிலக்கரி அமைச்சகத்தில் உள்ள சில அதிகாரி களுடனும் பகிர்ந்து கொள்ளப் பட்டதாகக் குறிப்பிட்டிருந்தார். அதாவது, எந்த அமைச்சகங்கள் நிலக்கரிச் சுரங்கப் படு கைகளை ஒதுக்கீடுகள் செய்தது தொடர் பான ஊழலில் சம்பந்தப்பட்டிருக்கின் றனவோ அதே அமைச்சகங்களுடன் தாங்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் அறிக்கை பகிர்ந்து கொள்ளப் பட்டதாக அவர் தெரிவித் துள்ளார்.
அதனைத் தொடர்ந்துதான் உச்சநீதிமன்றம் ஏப்ரல் 30 அன்று மத் தியக் குற்றப் புலனாய்வுக் கழகத்தைக் கடுமையான முறையில் கண்டித்துள்ளது. மேலும் மே 6 அன்று புதிதாக ஓர் உறுதி வாக்குமூலத்தைத் தாக்கல் செய்யுமாறும், அது மே 8 அன்று விசாரணைக்கு வரும் என்றும் கூறியுள்ளது. உச்சநீதிமன்றம் ஏழு அம்சங்கள் குறித்து விளக்கங்களைக் கோரியுள்ளது. (1) மார்ச் 8 அன்று தாக்கல் செய்யப்பட்ட தகு நிலை அறிக்கையில், அது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்பாக அரசாங் கத்துடன் பகிர்ந்துகொள்ளப்பட்டது என் பதை ஏன் பகிரங்கப் படுத்தவில்லை? (2) அறிக்கையானது எவரொருவருடனும் பகிர்ந்துகொள்ளப்படவில்லை என்று எந்த அடிப்படையில் அடிசனல் சொலி சிட்டர் ஜெனரல் ஓர் உறுதி அறிக்கையை மார்ச் 12 அன்று நீதி மன்றத்தின் முன் தாக்கல் செய்தார்? (3) வரைவு அறிக்கையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் என்னென்ன? அவை யாரு டைய தூண்டுதலில் செய்யப்பட்டுள் ளன? (4) அவை சட்ட அமைச்சர், பிரதமர் அலுவலகம் மற்றும் நிலக்கரி அமைச்சக அதிகாரிகள் அல்லாது வேறொருவருட னாவதுபகிர்ந்துகொள்ளப்பட்டிருக்கிறதா? (5) பிரதமர் அலுவலகத்திலும், நிலக்கரி அமைச்சகத்திலும் உள்ள அதிகாரிகளில் பகிர்ந்துகொள்ளப்பட்ட அதிகாரிகள் யார் யார்? (6) நீதிமன்றங்களால் கேட்டுக் கொள்ளப்பட்டபடி புலனாய்வுகள் மேற் கொள்ளப்படும் வழக்குகளின் தகுநிலை அறிக்கைகளை பகிர்ந்துகொள்வது தொடர்பாக குற்றப்புலனாய்வுக் கழகத்தின் குறிப்பேடுகள் மற்றும் விதிகளில் கண் டுள்ள நடைமுறை என்ன? மற்றும் (7) இந்தப் புலனாய்வை நடத்திவரும் சிபிஐ குழுவினரின் பின்னணி விவரங்கள் என்ன? மேற்கண்ட ஏழு கேள்விகளுக்கும் அளிக்கப்படும் விடைகள் ‘‘ஒளிவுமறை வற்றவிதத்திலும், நேர்மையாகவும், பதி வுருக்களின் அடிப்படையிலும்’’ இருந் திட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கறார்படுத்தியுள்ளது. உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளபடி இந்தத் திசை வழி கடைப்பிடிக்கப்பட்டால், பின், மத் தியக் குற்றப்புலனாய்வுக் கழகமும், மத் திய அரசாங்கமுமே சிக்கலில் மாட்டிக் கொள்ளும் என்பது திண்ணம். ஏனெனில், ஏற்கனவேயே நிலக்கரிச் சுரங்க ஊழல் கள் தொடர்பான புலனாய்வுகளை மேற் கொண்டு வந்த அதிகாரி ரவிகாந்த் என் பவர், தன்னுடைய எஜமானர்களின் விருப் பத்திற்கு ஏற்ப நடக்காததால் வெளியே தூக்கிவீசப்பட்டுள்ளார். உச்சநீதிமன்றம், 1997ஆம் ஆண்டு வினீத் நாராயணன் வழக்கில் மத்தியக் குற்றப்புலனாய்வுக் கழகத்தை சுதந்திர மானதாக மாற்ற வேண்டும் என்று கருத் துரை வழங்கியிருந்தபோதிலும், அவ் வாறு கூறி பதினைந்து ஆண்டுகளான பிறகும் அது இன்னமும் நடைமுறைப் படுத்தப்படாததற்கும், ஆட்சியாளர்கள் மத்தியப் புலனாய்வுக் கழகத்தை நடுவு நிலைமையுடன் செயல்படத் தேவை யான நடவடிக்கைகள் எடுக்காதிருப்பதற் கும் தன் வருத்தத்தைப் பதிவு செய்து கொண்டுள்ளது. சிபிஐ இவ்வாறு தன் னுடைய அறிக்கையை அரசாங்கத்துடன் பகிர்ந்துகொண்டிருப்பது தொடர்பாக வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகள், சிபிஐ மீதிருந்த ‘‘நம்பிக்கை முற்றிலுமாக அரிக்கப்பட்டுவிட்டது’’ என்றும், அதன் நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகள் ‘‘ஒட்டுமொத்த மனசாட்சியையே உலுக்கி விட்டது’’ என்றும் கடும் வார்த்தைகளில் மிகவும் கூர்மையான முறையில் தாக் குதலைத் தொடுத்திருக்கிறார்கள்.
மே 6 அன்று உச்சநீதிமன்றத்தின்முன் சிபிஐ சொல்லப் போகும் விஷயங்கள் அதன் எதிர்கால செயல்பாடுகள் மீது முக்கியமான பாதிப்புகளை ஏற்படுத்தும். நாடாளுமன்றத்தில் லோக்பால் சட்டமுன் வடிவின் மீதான விவாதங்களின்போது, சிபிஐ பாரபட்சமற்ற முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக இதேபோன்ற கவலைகள் உறுப்பினர் களால் தெரிவிக்கப்பட்டன. இச்சட்ட முன்வடிவானது இன்னமும் நிறைவேற் றப்படாமல் மாநிலங்களவையில் நிலு வையில் இருந்து வருகிறது. மக்கள வையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட சட்டமுன்வடிவினை ஆய்வு செய்வதற் காக அமைக்கப்பட்ட தெரிவுக் குழு பரிந்துரை களை ஏற்கனவே அனுப்பிவிட்டது. அதன் பரிந்துரைகளில் ஒன்று, சிபிஐ தொடர் பாக மிகவும் விரிவாக ஆராய்ந்து அளிக் கப் பட்டிருக்கிறது. இச்சட்டமுன்வடிவு மாநிலங்களவை முன் இதுநாள்வரை கொண்டுவரப்படவில்லை. ஆட்சியில் அமர்பவர் எவராக இருந்தாலும் சரி, மத் தியப் புலனாய்வுக் கழகத்தைத் தங்கள் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள் வதற்கானதொரு கைப்பாவையாகப் பயன்படுத்திக் கொள்ள விரும்புவது இயற்கையே. நாடாளுமன்றத்தில் பெரும் பான்மையைத் தக்க வைத்துக்கொள் வதற்காக பல்வேறு அரசியல்கட்சிகளை மிரட்டிப் பணிய வைப்பதிலிருந்து, ‘‘சலுகைசார் முதலாளித்துவ’’த்தின் மூலமாக நாட்டின் செல்வங்களைச் சூறையாடு வோரைப் பாதுகாப்பதுவரை, சிபிஐ பயன்படுத்தப்படுகிறது. மேற்கண்டவாறு நாம் முன்வைத் துள்ள மூன்று அம்சங்கள் குறித்தும் விரைந்து தீர்வுகாணப்பட வேண்டும். இப்பிரச்சனை குறித்து தற்போது அரசாங் கமும், நீதித்துறையும், நாடாளுமன்றமும் மிகவும் ஆழமாக ஆராய்ந்துகொண் டிருப்பதால், நீண்டகாலமாக நிலுவை யில் இருந்துவரும் இப்பிரச்சனை மீது முடிவுகள் மேற்கொள்வதற்கு உண்மை யில் இதுவே சரியான தருணமாகும்.
தமிழில்: ச.வீரமணி