Tuesday, September 4, 2012

2013 பிப்ரவரி 20 -21 இரு நாட்கள் வேலை நிறுத்தம்-தொழிலாளர் - ஊழியர்களின் தேசிய சிறப்பு மாநாடு அறைகூவல்





புதுதில்லி, செப். 4-
கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 2013 பிப்ரவரி 20 - 21 ஆகியஇரு நாட்கள் 48 மணிநேரம் தொடர் வேலை நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று புதுதில்லியில் நடைபெற்ற தொழிலாளர் - ஊழியர்களின் தேசிய சிறப்பு மாநாடு அறைகூவல் விடுத்துள்ளது.
அகில இந்தியஅளவில் இயங்கிடும் மத்தியத் தொழிற்சங்கங்கள், மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனம், அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனம், ஆசிரியர்கள் கூட்டமைப்பு, இன்சூரன்ஸ ஊழியர் சங்கங்கள், வங்கி ஊழியர் சங்கங்கள்மற்றும் பல்வேறு அமைப்புகள் பங்கேற்ற மாபெரும் தேசிய சிறப்பு மாநாடு புதுதில்லியில் உள்ள தல்கடோரா அரங்கத்தில் நடைபெற்றது. இதில் மத்தியில் ஆளும் கட்சியான காங்கிரசின் ஐஎன்டியுசி, எதிர்க்கட்சியான பாஜகவின் பிஎம்எஸ உட்பட சிஐடியு, ஏஐடியுசி, யுடியுசி, ஏஐசிசிடியு முதலிய மத்தியத் தொழிற்சங்கங்கள், மத்திய அரசு ஊழியரகளின் மகா சம்மேளனம், அகில இந்திய மாநில  அரசு ஊழியர சங்கத்தின் பதாகையில் அனைத்து மாநில அரசு ஊழியரகள், பல்வேறு ஆசிரியர்களின் சங்கங்கள், இன்சூரன்ஸ ஊழியர் சங்கங்கள், வங்கி ஊழியர் சங்கங்கள் ஆகியவற்றின் ஆயிரக்கணக்கான பிரதிநிதிகள் சிறப்பு மாநாட்டில் பங்கேற்றனர்.
தேசிய சிறப்பு மாநாட்டை சிஐடியு தலைவர் ஏ.கே. பத்மநாபன் உட்பட அனைத்துத் தொழிற்சங்கங்களின் தலைவர்களைக் கொண்ட தலைமைக்குழு நடத்தியது. மாநாட்டில் ஐஎன்டியுசி பொதுச் செயலாளர் சஞ்சீவரெட்டி, ஏஐடியுசி பொதுச் செயலாளர் குருதா ஸ்தா ஸ்குப்தா,  சிஐடியு பொதுச் செயலாளர் தபன்சென் உட்பட அனைத்துத் தொழிற்சங்கங்களின் தலைவர்களும் உரையாற்றினார்கள்.
மாநாட்டில் நிரந்தரத் தொழிலுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களைப் பணி நியமனம் செய்வது ஒழிக்கப்பட வேண்டும், தற்போது ஒப்பந்த ஊழியர்களாக உள்ள அனைவரும் நிரந்தரம் செய்யப்பட வேண்டும், குறைந்தபட்ச ஊதியம் பத்தாயிரம் ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டு, அது விலைவாசிப் புள்ளி அட்டவணையோடு இணைக்கப்பட வேண்டும். போனஸ, வைப்புநிதி, பணிக்கொடை ஆகியவற்றிற்குள்ள உச்சவரம்புகள் நீக்கப்பட வேண்டும், அனைவரும் ஓய்வூதியம் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும், 45 நாட்களுக்குள் தொழிற்சங்கங்கள் பதிவு செய்யப்பட வேண்டும், சர்வதேச தொழிலாளர் ஸதாபனத்தின் 87 மற்றும் 98 ஆகிய கன்வென்ஷன்கள் சரி என்று ஏற்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை சிறப்பு மாநாடு முன்வைத்தது. 
இவற்றினை எய்திட 2012 செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் துறைவாரி அலுவலகங்கள், மாவட்ட, மாநில அளவில்  கூட்டு இயக்கங்கள் நடத்துவது என்றும், டிசம்பர் 18, 19 தேதிகளில் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் சத்தியாக்கிரகம், சிறை நிரப்பும் போர் முதலான போராட்டங்களை மேற்கொள்வது என்றும்,
டிசம்பர் 20 அன்று நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்துவது என்றும், பின்னர் அனைத்துக்கும் முத்தாய்ப்பாக 2013 பிப்ரவரி 20, 11 தேதிகளில் 48 மணிநேரம் தொடர் வேலைநிறுத்தத் மேற்கொள்வது என்றும் சிறப்பு மாநாடு தீர்மானித்தது.
இச்சிறப்பு மாநாட்டிற்குத் தமிழகத்திலிருந்து சிஐடியு சார்பில் அதன் மாநில நிர்வாகிகள் சிங்காரவேலு, அ. சவுந்தரராசன், கருமலையான், சந்திரன், டிஆர்இயு இளங்கோவன், அகில இந்திய மாநில அரசு ஊழியர் சங்க பொதுச்செயலாளர் ஆர்.முத்துசுந்தரம் உட்பட சிஐடியு, அரசு ஊழியர் சங்க மாநில / மாவட்ட நிர்வாகிகள் மற்றும் முன்னணி ஊழியர்கள்  என நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்திருந்தார்கள்.
(ச.வீரமணி)


No comments: