சீத்தாராம் யெச்சூரி
(மேற்கு வங்கம், கொல்கத்தாவில், 2012 ஆகஸ்ட் 16 அன்று தேஷ்டைஷீ என்னும் கட்சியின் வார இதழின் பொன்விழா நிகழ்ச்சியின்போது, மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி சிறப்புரையாற்றினார்.
அதன் முக்கிய சாராம்சங்கள் வருமாறு:)
கட்சிப் பத்திரிகையின் முக்கியத்துவத்தை எப்போதுமே
குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. 1901இல் மனிதகுலம் முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்திற்கு
மாறும் இடைக்காலத்தின்போது, சோவியத் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தலைமையேற்று வழிகாட்டிய தோழர்
லெனின், ’’எங்கிருந்து தொடங்குவது?’’ என்னும் தன்னுடைய நூலில் கூறியதாவது: ’’நம்முடைய
கருத்தோட்டத்தின்படி, நம்முடைய செயல்களின் தொடக்கப்புள்ளி, நமக்குத்
தேவையானதொரு ஸ்தாபனத்தை நாம் உருவாக்குவதற்கு முன்னோடியாக நாம் எடுத்து வைக்கும் முதல்
அடி என்பது, அல்லது,
நாம் உருவாக்கும் ஸ்தாபனத்தை வளர்த்தெடுத்து, ஆழமாக்கி, விரிவான
முறையில் உறுதியாக முன்னெடுத்துச் செல்வதற்கானப் பிரதான இழையாக இருப்பதென்பது, நமக்காக
ஓர் அகில ரஷ்ய அரசியல் பத்திரிகையைத் துவக்குவது என்பதேயாகும். நம் அனைவருக்கும் தேவையான
ஓர் அரசியல் பத்திரிகை. அத்தகைய பத்திரிகையின்றி, பொதுவாக சமூக ஜனநாயகத்தைக் கட்டுவதற்கும்,
அடிப்படையாக உள்ள கொள்கை உறுதியுடன் நம்முடைய
பிரச்சாரத்தை, கிளர்ச்சியை முறையுடன் முன்னெடுத்துச் செல்ல முடியாது. தனிநபர் நடவடிக்கை, வட்டார அளவிலான
துண்டுப்பிரசுரங்கள், சிறுவெளியீடுகள் போன்ற வடிவங்களுடன் நம் பொதுவான மற்றும் திட்டமிட்ட
முறையில் கிளர்ச்சிகளை நடத்திட நமக்கு என்று ஒரு பத்திரிகையின் அவசியமும் இப்போது உருவாகியிருப்பதுபோல
முன்னெப்போதும் உருவானதில்லை. அத்தகையதொரு பத்திரிகையின்றி, நாம் நம்முடைய
கடமையை - மக்கள் மத்தியில் ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக நிலவும் அரசியல் அதிருப்தி
மற்றும் எதிர்ப்புணர்ச்சியை ஒன்றிணைத்து, ஒருமுகப் படுத்தி,
தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகர இயக்கத்தை
முன்னெடுத்துச் செல்லும் பணியை - முழுமையாக செய்துமுடிக்க முடியாது.’’
மேலும் அவர் கூறுகிறார்: ’’ஆயினும், பத்திரிகையின்
பங்களிப்பு என்பது, கட்சியின் சிந்தனைகளைப் பரவச் செய்தல், ஊழியர்களுக்கு
அரசியல் கல்வியை அளித்தல் மற்றும் அரசியல் நண்பர்களை அணிசேர்த்தல் ஆகியவற்றுடன் மட்டும்
சுருங்கிவிடவில்லை. ஒரு பத்திரிகை என்பது ஒரு கூட்டுப்பிரச்சாரகன், ஒரு கூட்டு
கிளர்ச்சியாளன் மட்டுமல்ல, அது ஒரு கூட்டு அமைப்பாளனும் ஆகும்.’’
பின்னர், ’’என்ன செய்ய வேண்டும்?’’ என்னும் நூலில் லெனின் கூறுகிறார்: ’’நம் பத்திரிகை
என்பது வர்க்கப் போராட்டத்தின் ஒவ்வொரு தீப்பொறியையும் விசிறிவிடும் கொல்லனின் துருத்தி
போன்று இருப்பதுடன், மக்களின் நேர்மையான சீற்றங்களை ஊதி, ஊதி காட்டுத்
தீயாக கொழுந்துவிட்டெரியச் செய்யும் பணியையும் செய்வதாகும். இன்றையதினம் அது ஆற்றும்
பணி மிகவும் மந்தமானதாக, சிறிய அளவினதாக இருக்கலாம், ஆனால் தொடர்ந்து முறையாக முயற்சி மேற்கொள்ளப்படுகையில், ஒரு பயிற்சி
பெற்ற போராளிகளின் சேனை கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து, விரிவாகி, அதன் முறையான
பயிற்சியைப் பெற்றுவிடும்.’’
(2)
ஆயினும் பலர் இருபதாம் நூற்றாண்டின் மனிதகுல
முன்னேற்றங்கள், குறிப்பாக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள்,
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில் இருந்ததைப்போல்
அல்லாமல் தகவல் பரிமாற்றத்தை உடனுக்குடன் செய்துவிடுகின்றன என்று கூறுகிறார்கள். வானொலி
மற்றும் தொலைக்காட்சி ஆகியவற்றுடன் இணையம், கைபேசி போன்றவை இதுநாள்வரை தகவல் பரிமாற்றங்களைச்
செய்துகொண்டிருந்த பத்திரிகைகளின் பணியை வழக்கற்றுப் போய்க்கொண்டிருக்கின்ற ஒன்றாக
மாற்றிக் கொண்டிருக்கின்றன என்றும் சிலர் வாதிடுகிறார்கள். எனவே, கட்சிப் பத்திரிகை தொடர்பாக லெனின் கூறிய
கருத்துக்களை மீளவும் நினைவுகூர்வதில் ஏதேனும் பொருளுண்டா என்றும் அவர்கள் நம்மைப்
பார்த்து கேட்கிறார்கள்.
கட்சிப் பத்திரிகையின் முக்கியத்துவம் தொடர்கிறது
என்பது மட்டுமல்ல, மிகவும் சரியாகச் சொல்வதென்றால் இன்றையதினம் எவ்வளவுதான் முன்னேற்றங்கள்
ஏற்பட்டிருந்தபோதிலும், நம் முன் உள்ள சவால்களை
எதிர்கொண்டிட அதன் முக்கியத்துவம் பல மடங்கு அதிகரித்திருக்கிறது என்பதே உண்மையாகும்.
ஒவ்வொரு காலகட்டத்திலும், ஆளும் வர்க்கங்கள் தங்கள் சமூகத்தின் மீது அவர்களுடைய தத்துவார்த்த மேலாதிக்கத்தை
செலுத்திக்கொண்டே எப்போதும் தங்கள் வர்க்க ஆட்சியை கெட்டிப்படுத்திக்கொள்வார்கள். மார்க்ஸ் - ஏங்கெல்ஸ் கூறியிருப்பது
போல, ’’ஆளும் வர்க்கத்தின் சிந்தனைகள் ஒவ்வொரு சகாப்தத்தின்போதும் ஆளுகின்ற
சிந்தனைகள்தான். அதாவது, பொருளாய சக்திகளை ஆளுகின்ற வர்க்கம், அதே சமயத்தில் தன் நாட்டில் உள்ள அறிவுஜீவிகளையும் ஆண்டுகொண்டிருக்கிறது.
பொருளாய உற்பத்திச் சாதனைகளைப் பெற்றிருக்கும் வர்க்கம் தன் கட்டுப்பாட்டில் சிந்தனாவாதிகளையும்
வைத்துக் கொண்டிருக்கிறது.’’
ஆளும் வர்க்கங்களின் சிந்தனைகளின் மேலாதிக்கம்தான், கிராம்சி
விளக்குவதைப்போன்று, அரசால் மட்டும் அமல்படுத்தப்படுவதில்லை, அதன் பின்னணியில்
இருந்து வலுவானதோர் அமைப்பு அதனைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆளும் வர்க்கங்களின் கட்டுப்பாட்டில் உள்ள கலாச்சார
நிறுவனங்களின் வலைப்பின்னல் அதனைச் செய்து கொண்டிருக்கிறது.
முதலாளித்துவத்தின் கீழ், கலாச்சாரம்
என்பது மூலதனத்தின் ஆட்சியைத் தாங்கி நிற்கிறது. கலாச்சாரத்தின் வடிவங்கள் அனைத்துமே
பண்டமயமாக்கல் மூலமாக சமூகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்றடைகிறது. இது தொடர்பாக
ஏராளமாக எழுதியிருக்கிறோம். எனவே இப்போது மீண்டும் அவற்றைத் திரும்பக் கூறவேண்டிய தேவை
இல்லை. முதலாளித்துவத்தின் கலாச்சார சாதனங்கள் அனைத்தும் சமூகத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில்
வைத்திருக்கக்கூடிய விதத்தில்தான் இருக்குமேயொழிய, சமூகத்தின் வளர்ச்சிக்கு, சமூகத்தின்
முன்னேற்றத்திற்கு ஏற்றவிதத்தில் இருக்காது. இப்பொருள்களின் பரிவர்த்தனை மதிப்பு எப்போதுமே
அதன் பயன் மதிப்பின் இடத்தைக் கைப்பற்றிவிடும்.
உலகமயத்தின் கலாச்சாரம், மக்களைத்
தங்கள் வாழ்வின் எதார்த்த நிலையிலிருந்து ஒதுக்கி வைத்துவிடுகிறது. இங்கே கலாச்சாரம்
என்பது அழகுணர்ச்சியை நோக்கியதாக இருக்காது, மாறாக தங்கள் வாழ்க்கையை அழுத்திக் கொண்டிருக்கிற
வறுமை மற்றும் ஏழ்மை நிலையிலிருந்து தங்களை மறக்கக்கடிக்கக்கூடிய விதத்தில் தங்களின் கவனத்தைத் திருப்பக்கூடியதாக அல்லது வேறுவழியில்
செலுத்தக்கூடியதாக இருந்திடும். அதன் விளைவாக, மக்கள் தங்கள் துன்பதுயரங்களுக்குக் காரணமான
காரணிகளைக் கண்டறிந்து அவற்றிற்கு எதிராகப் போராடுவதற்கு அவர்களுக்கு சக்தியை அளிப்பதற்குப்
பதிலாக, அவர்களிடம் இருக்கின்ற கொஞ்சநஞ்ச சக்தியையும் வீணடிக்கக்கூடிய
விதத்தில் அமைந்திருக்கும். மைக்கேல் பாரன்டி கூறியதைப்போல, ’’ நம்முடைய கலாச்சாரத்தின் பெரும்பகுதி, தற்போது
மிகவும் பொருத்தமாகவே, ஊடக முதலாளிகளின் உலகளாவிய நலன்களைப் பாதுகாக்கக்கூடிய விதத்தில், அவர்களின்
பயன்பாட்டு மதிப்பை அதிகரிக்கக்கூடிய விதத்தில், ’’வெகுஜன கலாச்சாரம்’’("mass cullture")
என்றும்,, ’’பொது மக்கள் கலாச்சாரம்’’("popular cultu7re"), என்றும்
ஏன், ’’ஊடகக் கலாச்சாரம்’’ ("media culture")
என்றும் கூட வரையறுத்திடலாம். சமூகத்தை முன்னேற்றப்பாதையில் கொண்டுசெல்ல வேண்டும் என்பது
அவர்கள் நோக்கமல்ல, மாறாக,
சமூகத்தைத் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டுமென்பதே
அவர்கள் நோக்கமாகும். இவர்களால் திணிக்கப்படும்
’’வெகுஜனக் கலாச்சாரம்’’ என்பது நம்மை எதார்த்த நிலைமைகள் குறித்து
ஆழமாகச் சிந்திக்க விடாமல் மழுங்கடிக்கும்
விதத்தில் உருவாக்கப்படுகின்றன. அற்பத்தனமானவைகள் குறித்த ஆடம்பரமான விளம்பரங்கள் உடனடியாக
நாம் மேற்கொள்ள வேண்டிய அத்தியாவசியமான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள முடியாதவாறு நம்மை
மறக்கடித்து விடுகின்றன. குப்பை கூளங்களை எல்லாம் ஏதோ வானத்திலிருந்து வந்த வைரங்கள்
போன்று நம்ப வைத்து மக்களின் கழுத்தை அறுக்கின்றன.
ஊடகங்கள் மூலம் இவர்கள் கட்டவிழ்த்து விடும்
பொழுதுபோக்குக் கலாச்சாரம், மேலெழுந்தவாரியாகப் பார்க்கையில் அரசியலற்றது என்று கூறப்படினும், அதன் தாக்கம், அதன் பிரச்சாரம்
மற்றும் பெண்களை மிகவும் கீழ்த்தரமாகக் காட்டுதல், இனவெறி, நுகர்வுவெறி, எதேச்சாதிகாரவெறி, ராணுவ வெறி
மற்றும் ஏகாதிபத்தியவெறி ஆகியவற்றை மக்கள் மனதில் விதைக்கக்கூடிய விதத்தில் உள்ள இவர்களது
பிரச்சாரம் உண்மையில் அரசியல் சார்ந்ததேயாகும்.
உலகமயத்தின் கைகளில் உள்ள ஊடகக் கலாச்சாரம்
இதனை மிகவும் ஒளிவுமறைவின்றி அப்பட்டமாகவே வெளிப்படுத்துகிறது. சமூகக் கொடுமைகளுக்கு
எதிராக மக்களின் எதிர்ப்புகள் மற்றும் அவர்களின் அவலநிலைமைகளை அது கண்டுகொள்வதில்லை.
உதாரணமாக, தலைநகர் தில்லியில் ஊழலுக்கு எதிராக அண்ணா ஹசாரே குழுவினர் மிகச்சிறிய
அளவில் உண்ணாவிரதம் இருந்த அதே நாளன்றுதான் நாட்டிலுள்ள அகில இந்தியத் தொழிற்சங்கங்களின்
அறைகூவலுக் கிணங்க, விலைவாசி உயர்வு மற்றும் ஊழலுக்கு எதிராக,
இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்
நாடாளுமன்றம் நோக்கி பிரம்மாண்டமான பேரணி/ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர். அண்ணா ஹசாரே
உண்ணாவிரதத்தைத் தூக்கிப் பிடித்த ஊடகங்கள், குறிப்பாக தொலைக்காட்சி ஊடகங்கள், தொழிலாளி
வர்க்கத்தின் போராட்டத்தைக் கண்டுகொள்ளவே இல்லை. இதைவிடக் கேவலமான வேலையை டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு செய்தது. ’’தலைநகர்
தில்லியில் தொழிலாளர்களின் பேரணி/ஆர்ப்பாட்டத்தால் போக்குவரத்து சீர்குலைந்ததாக’’ அது மிகவும் ’வருத்தப்பட்டு’ ஒரு சிறிய
பெட்டிச் செய்தி வெளியிட்டிருந்தது. இதே போன்று, ஜூலை மாதத்தில், மக்களின்
உணவுப் பாதுகாப்பை வலியுறுத்தி,
இடதுசாரிக் கட்சிகள் நடத்திய ஐந்து நாள் தர்ணா போராட்டத்தையும்
அவை கண்டு கொள்ளாது இருட்டடிப்புச் செய்தன. ஆனால் அதே சமயத்தில் அதற்குப் பக்கத்திலேயே
நடைபெற்ற பிசுபிசுத்துப்போன அண்ணா ஹசாரேயின் இயக்கத்தை மட்டும் அவை வானளாவப் புகழ்ந்து தள்ளின.
சுமார் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே, முதலாளித்துவம்
குறித்து ஆழமான ஆய்வினை மேற்கொண்ட மார்க்ஸ், அதன் குணம் குறித்து மிகவும் சிறப்பாக வரையறுத்தார்.
’’உற்பத்தி என்பது ஒரு
தேவையைத் திருப்திப்படுத்தும் ஒரு பொருளை மட்டும் அளிக்கவில்லை. அது, அப்பொருளுக்கான
தேவையையும் அளிக்கிறது. உற்பத்தி என்பது ஆரம்பத்தில் மக்களுக்காக ஒரு பொருளை உற்பத்தி செய்து அளிக்கிறது.
பின்னர் அதே உற்பத்தி, உற்பத்தி செய்யபபட்ட பொருள்களை வாங்குவதற்கான மக்களையும் உற்பத்தி
செய்கிறது.’’ (Production not only provides the material to satisfy a need, but it also provides the need for the material. Production accordingly produces not only an object for the subject, but also a subject for the object.)
உற்பத்தியின் முதல் கட்டம் மக்களுக்கான பொருள்களை
உற்பத்தி செய்வது. அதன் அடுத்த கட்டம் அவ்வாறு உற்பத்தி செய்த பொருள்களை வாங்கக்கூடிய
அளவில் மக்களின் மனதை மாற்றுவது. இதற்காகத்தான் முதலாளித்துவம் விளம்பரங்களின் மூலமாக
கோடிக்கணக்கான டாலர்கள் ஒவ்வோராண்டும் செலவு செய்கிறது. அதேபோன்றுதான் கலாச்சாரத் துறையிலும்.
விளம்பரத்தைப் பார்ப்பவர்களின் மனதை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி, தாங்கள்
உற்பத்தி செய்த பொருள்களை வாங்கக்கூடிய அளவிற்கு மாற்றி விடுவார்கள். இவ்வாறாக மக்களின்
விருப்பத்திற்கு ஏற்றவாறு கலாச்சாரம் இருப்பதில்லை. மாறாக, முதலாளித்துவம்
விரும்பக்கூடிய விஷயங்களை மக்கள் விரும்பக்கூடிய விதத்தில் தங்கள் விளம்பரங்களின் மூலம்
மாற்றிவிடுவார்கள்.
இவ்வாறு இவர்கள் நம் கலாச்சாரத்தின் மீது
தொடுக்கும் தாக்குதலை நாம் சமாளித்து முறிய்டிப்பது எப்படி? முதல் கட்டமாக, உலகமயம்
மற்றும் வகுப்புவாதம் கட்டவிழ்த்துவிட்டுள்ள கலாச்சாரப் படையெடுப்புகளினால் மதிமயங்கி
மழுங்கிக் கிடக்கும் மக்களிடம் மக்கள் பிரச்சனைகளை முன்னிறுத்தி ஒரு கலாச்சார நிகழ்ச்சிநிரலை
மீண்டும் உருவாக்க வேண்டியது அவசியம். அவர்களின் கலாச்சார மேலாதிக்கத்தை எதிர்கொண்டு
முறியடித்திட இது மிகவும் அவசியம்.
(3)
ஏகாதிபத்திய உலகமயத்தால் ஆதிக்கம் செலுத்தக்கூடிய
அரசியல் ந்டவடிக்கைகளுக்கு எதிராக இன்றைய தினம் நாம் இயக்கங்களை நடத்திக் கொண்டிருக்கிறோம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய 20ஆவது அகில இந்திய மாநாட்டின் தத்துவார்த்த
தீர்மானத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:
``ஏகாதிபத்தியம் மற்றும் நவீனதாராளமயம் அறிவித்துறை மற்றும் கலாச்சாரத்துறையில்
மேலாதிக்கததை நிலைநாட்டுவதற்காக இக்காலத்தில் தத்துவார்த்த யுத்தத்தைக் கட்டவிழ்த்து
விட்டுள்ளது. உலகமயத்தின் இத்தகைய நடைமுறையும், தொழில்நுட்பங்கள் மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளதும் செய்தி, தகவல்தொடர்பு மற்றும் பொழுதுபோக்குத் தளங்களை
மிகப் பிரம்மாண்டமான முறையில் ஒன்றிணைத்து மெகா கார்பரேட்டுகளாக வளர்த்துள்ளன. மனிதகுல
அறிவுத்துறையில் இவ்வாறு ஏகபோகமான வளர்ச்சி ஏற்பட்டிருப்பதும், மெகா கார்பரேட்டுகள்
தங்களின் ஊடகங்களின் வாயிலாக செய்திகளைத் தங்களுக்குச் சாதகமான முறையில் வெளியிடக்கூடிய
விதத்தில் அவற்றின்மீது கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதும் இக்காலகட்டத்தில் மிகவும் முக்கிய அம்சங்களாகும். முதலாளித்துவத்திற்கு
எதிராக அல்லது முதலாளித்துவத்திற்கு மாற்றை முன்வைப்பவர் களுக்கு எதிராக, தத்துவார்த்தத்
தாக்குதலை இவை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. இத்தகைய உலகமய நடைமுறை விரும்பும் கலாச்சார
மேலாதிக்கம் என்பது பொதுமக்களின் ரசனையுணர்வை ஒரேமாதிரியானதாக மாற்ற விரும்புகிறது.
எந்த அளவிற்கு மக்களின் பொது ரசனையுணர்வு அதிகரிக்கிறதோ அந்த அளவிற்கு ’கலாச்சாரப் பொருள்களின்’ எந்திரரீதியான
மறுஉற்பத்திக்கான தொழில்நுட்பங்களை வளர்த்தெடுப்பது என்பதும் எளிதாகிறது. வர்க்க மேலாதிக்கத்தின்
கண்ணோட்டத்தில், உலகமயத்தின் கலாச்சாரம் மக்களை நாள்தோறும் எதிர்கொள்ளும் தங்கள்
எதார்த்த வாழ்விலிருந்து விலக்கி வைக்கவே விரும்புகிறது. இங்கே கலாச்சாரம் என்பது அழகுணர்ச்சியை
நோக்கியதாக இருக்காது. மாறாக,
தங்களை எப்போதும் அழுத்திக்கொண்டிருக்கும் வறுமை மற்றும் ஏழ்மை
நிலையிலிருந்து, தங்களை மறக்கடிக்கக்கூடிய விதத்தில், தங்களின்
கவனத்தைத் திசைதிருப்பக்கூடிய விதத்தில், இருந்திடும்.’’
செய்தி, தகவல்தொடர்பு மற்றும் பொழுதுபோக்குத் தளங்களின்
தொழில்நுட்பங்களின் வளர்ச்சி மற்றும் அவற்றின் மீதான கட்டுப்பாடு ஆகியவை ஏகாதிபத்தியத்தை
அதிநவீன கண்காணிப்புத் தொழில்நுட்பங்களையும் வளர்த்து, செயல்படுத்திடவும்
அனுமதிக்கிறது. இத்தகைய தொழில்நுட்பங்கள், ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கத்திற்கு சவால்
விடக்கூடிய வகையில் வளர்ந்திடும் வெகுஜன இயக்கங்களைக் கட்டுப்படுத்திடவும், அவற்றின்மீது
செல்வாக்கு செலுத்திடவும், தேவைப்படின் அவற்றை நாசவேலை செய்த அழித்து ஒழித்திடவும் பயன்படுத்தப்படுகின்றன.
உதாரணமாக, மெகா நிறுவனமான ’டைம்’, மாபெரும் மற்றொரு பொதுழுபோக்கு நிறுவனங்களில் ஜாம்பவனாகத் திகழ்ந்த
வார்னர் பிரதர்ஸுடன் இணைந்தது. அதனை, அமெரிக்காவில் மிகப்பெரிய நிறுவனமாகத் திகழும்
ஏஓஎல் எனப்படும் அமெரிக்கன் ஆன்லைன் லிமிடெட் (AOL - American Online Limited) என்னும் நிறுவனத்தை 164 மில்லியன் டாலர்களுக்கு வாங்கி, உலகின் மிகப்பெரிய
செய்தி, தகவல்தொடர்பு, பொழுதுபோக்கு நிறுவனமாக மாற்றியுள்ளது. ரூபர்ட்
முர்டோக் தற்போது செய்தி,பொழுதுபோக்கு மற்றும் இணையதள நிறுவனங்களில் 68 பில்லியன்
டாலர் சொத்துக்களுடன் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. வால்ட் டிஸ்னி நிறுவனம் தற்போது
ஸ்பைடர்மேன் புகழ் மார்வெல் நிறுவனத்தை கபளீகரம் செய்துள்ளது. இந்நிறுவனங்கள் உற்பத்திச்
செய்திடும் கலாச்சாரப் பொருள்கள் உலகம் முழுதும் எறியப்பட்டு, அதிசயத்தக்க
அளவிற்கு லாபத்தை ஈட்டித்தருகின்றன. சமீபத்தில் 2011 ஜனவரியில், கம்காஸ்ட்
கார்பரேஷன் என்பிசி யுனிவர்சல் நிறுவனத்தை எடுத்துக்கொண்டுவிட்டது. கம்காஸ்ட் நிறுவனம்தான்
அமெரிக்காவில் வீடியோ மற்றும் இணையதள நிகழ்ச்சிகளை அளிப்பதில் நம்பர் 1 நிறுவனமாகத்திகழ்கிறது.
இதன்கீழ் 23 மில்லியன் வீடியோ சந்தாதாரர்களும், 17 மில்லியன் இணையதள சந்தாதாரர்களும் இருக்கின்றனர்.
இந்தியாவிலும்கூட இதேபோன்று எண்ணற்ற நிறுவனங்கள் வளர்ந்துள்ளன. அனில் திருபாய்
அம்பானி குழுமத்தின் ரிலயன்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட் (முன்பு ரிலயன்ஸ் பிக் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனமாக இருந்தது) நிறுவனம் இந்தியாவில்
மாபெரும் நிறுவனமாக உருவெடுத்துள்ளது. இதன்கீழ் இந்தியாவில் 35 மில்லியன்
நுகர்வோர் உள்ளனர். பிக் சினிமாஸ் (க்ஷஐழு ஊiநேஅயள) இந்தியாவில் திரைப்படங்ளைத் திரையிடுவதில் பிரதானபாத்திரத்தை
வகிக்கிறது. நாடு முழுதும் இதன்கீழ் 253 திரையரங்குகள் இருக்கின்றன. கோடிக்கணக்கான
ரூபாய் செலவு செய்து திரையிடப்படும் படங்களில் இதன் பங்களிப்பு மட்டும் 10 முதல் 15 விழுக்காடுகளாகும்.
இந்நிறுவனம் உலகின் பல நிறுவனங்களையும் வாங்கி டிஜிடல் பிலிம் துறைகளில் கால்பதித்துள்ளது.இந்தியாவில்
உள்ள பல தொலைக்காட்சி நிறுவனங்களையும் கொஞ்சம் கொஞ்சமாக கபளீகரம் செய்துகொண்டிருக்கிறது.
இவ்வாறு ஊடகத்துறையில் மெகா கார்பரேட் நிறுவனங்கள்
உருவாகி, தங்கள் நலன்களுக்கேற்ற விதத்தில் செய்திகளைத் திரித்து ஒளிபரப்புவதுடன்
மட்டுமல்லாமல், பல சமயங்களில் வேண்டுமென்றே தவறான செய்திகளையும் பிரச்சாரம்
செய்து, சமூகத்திற்குப் பேரழிவினை ஏற்படுத்தி வருகின்றன.
’காசு பெற்றுக்கொண்டு செய்தி வெளியிடுவது’ (`யீயனை நேறள’)
என்பது ஊடகத்துறையில்
வணிகமயம் எந்த அளவிற்கு விரிவடைந்திருக்கிறது என்பதையே காட்டுகிறது.
ஆளும் வர்க்கங்களின் மேலாதிக்கத்தின் கீழ்
உண்மை மற்றும் லட்சியம் முதலானவை விபத்துக்குள்ளாகிவிட்டன.
(4)
ஆளும் வர்க்கஙகள், ஊடகங்கள்
ஏகபோகம் என்கிற தத்துவார்த்த மேலாதிக்கக் கருவியால் பொதுவுடைமைத் தத்துவத்திற்கு எதிராக
விதம் விதமான தத்துவங்களைக் கட்டவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கின்றன. பின் நவீனத்துவம்
போன்ற புதிய தத்துவங்கள் மிகவும் அரக்கத்தனமானமுறையில் பரப்பப்படுகின்றன. இதன் பிரதான நோக்கம் என்னவெனில், மற்ற கம்யூனிச
எதிர்ப்பு தத்துவங்களைப் போலவே இதுவும் வர்க்கங்களை மறுதலிப்பது என்பதும். அதன் கரணமாக
வர்க்கப் போராட்டமே தேவையில்லை என்பதுமேயாகும்.
இது சமூகத்தைப் பல்வேறு கூறுகளாக - இனரீதியாக, பிராந்தியரீதியாக, மற்றும்
சின்ன சின்ன அடையாளங்களாக - பிரித்து, இறுதியாக சுரண்டப்படும் வர்க்கங்களின் ஒற்றுமையைச்
சீர்குலைப்பதாகும். எனவேதான்,
இத்தகைய சிந்தனைகள், சுரண்டப்படும் மக்களின் வர்க்க ஒற்றுமையை
பலவீனப்படுத்துகின்றன, அதனைத் தொடர்ந்து சுரண்டும் கூட்டத்தின் வர்க்க ஆட்சியைத் தூக்கிப்
பிடிக்கின்றன.
கட்சிப் பத்திரிகை, ஊடகத்தின்
மற்ற வடிவங்களுடன், இவ்வாறு ஆளும் வர்க்கங்கள்
நம்மீது கட்டவிழ்த்துவிட்டுள்ள சவால்களை எதிர்கொண்டு முறியடிப்பதற்கு ஏற்றவிதத்தில்
வளர்த்தெடுக்கப்பட வேண்டியது அவசியமாகும். எனவே, புரட்சிகர சக்திகள் தங்கள் சிந்தனைகளைப் பரப்பக்கூடிய
விதத்தில், சுரண்டப்படும் வர்க்கங்களை அணிதிரட்டக்கூடிய விதத்தில், அவற்றின்
மூலமாக அனைத்துவிதமான சுரண்டலுக்கும் முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய விதத்தில் ஒரு சமூகத்தை
- சோசலிச சமூகத்தை உருவாக்கக்கூடிய போராட்டத்தை வலுப்படுத்தக் கூடிய வகையில் புரட்சிகர சக்திகளின் கைகளில் ஒரு வலுவான ஆயுதமாக, கட்சிப்
பத்திரிகை திகழ வேண்டும்.
(தமிழில்: ச.வீரமணி)
1 comment:
அருமை
Post a Comment