Tuesday, August 14, 2012

பாஜகவின் கற்பனைக் கனவுகள்

“தன் மனதை மாற்ற முடியாத ஒருவன் தன் குடிமக்களையும் மாற்ற மாட் டான்’’ என்று வின்ஸ்டன் சர்ச்சில் இன வெறியன் ஒருவனைப் பற்றி ஒருமுறை சொன்னார். பாஜகவின் முதுபெரும் சண்டைக் குதிரையான எல்.கே. அத் வானி சமீபகாலத்தில் உதிர்க்கும் வார்த் தைகள் இவரது கூற்றை மறுவரையறை செய்வதுபோலவே தோன்றுகிறது. பாஜகவில் பிரதமர் பதவிக்காகப் பரிசீலிக் கப்படும் பெயர்ப் பட்டியலில் தன் பெயர் இல்லை என்பதை அறிந்ததை அடுத்து, அவர் இவ்வாறு மாறிவிட்டார் என்றே தெரிகிறது. நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத்தொடரின் முதல் நாளன்று அவர் நடந்துகொண்ட விதமே இதனைத் தெளிவுபடுத்தியது. அசாமில் கண்டிக்கத் தக்க வகையில் நடைபெற்ற வன்முறை மற்றும் கலவரங்களைப் பயன்படுத்திக் கொண்டு, அவர் மதவெறி விஷத்தைத் துப்பியதிலிருந்து, அவர் தன் மனதை மாற்றிக்கொள்ள முடியாது என்பது தெளி வானது.

2014 பொதுத் தேர்தலை அடுத்து அமையவிருக்கும் அரசாங்கத்திற்கு பாஜ கவைச் சேர்ந்தவரோ அல்லது காங் கிரசைச் சேர்ந்தவரோ தலைமையேற்க மாட்டார் என்று அவர் பதிவு செய்திருக் கிறார். அரசாங்கம் அமைப்பதற்கான ஓட் டப்பந்தயத்தில் பாஜக வெற்றி பெறாது என்று அவர் ஒப்புக்கொண்டிருப்பதானது, இயற்கையாகவே எண்ணற்ற ஆர்எஸ் எஸ் இயக்கத்தின் கொடுக்குகளுக்கும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங் கம் வகித்திடும் அதன் கூட்டணிக் கட்சி களுக்கும் அதிர்ச்சி அலைகளை ஏற் படுத்தி இருக்கிறது. பிரதமர் பதவிக்குத் தான் வரமுடியாது என்றால், பாஜகவி லிருந்து வேறு யாரும் வரக்கூடாது என்கிற கூற்றும் இவரது பேச்சில் மறைந்தி ருக்கும் மற்றொரு செய்தியாகும் என்பதை அவரது பேச்சை சற்றே நுணுகி ஆராய்ந் தாலே தெரிந்துகொள்ள முடியும்.

பிரதமர் பதவிக்கு பாஜகவிற்குள் மிகக் கடுமையான முறையில் குடுமிப்பிடிச் சண்டை நடந்து கொண்டிருப்பது அனை வரும் அறிந்த உண்மை. குஜராத் முதல் வர், பாஜகவின் தலைவர், நாடாளு மன்றத்தின் இரு அவைகளிலும் அங்கம் வகிக்கும் பாஜகவின் தலைவர்கள் மற்றும் அத்வானி உட்பட இப்பதவிக்குத் தங்கள் விருப்பத்தை வெளிப்படையாகவே தெரி வித்திருக்கின்றனர்.

பாஜக, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஓர் அரசியல் அங்கமாக இருப்பதாலும், ஆர்எஸ்எஸ் பாஜகவின் தலைவருக்கு இரண்டாவது முறையாகவும் பதவியை அளித்திருப்பதாலும், அத்வானிக்கு, பிரதமர் ஆவதற்கான வாய்ப்புகள் மீதான ஐயுறவுகள் பல்கிப் பெருகிவிட்டன. சில நாட்களுக்கு முன்னால், அத்வானி, “ஊழல் கறைபூசிக் கொண்டுள்ள ஐ.மு. கூட்டணி அரசாங்கத்திற்கு நெருக்கடி யைக் கொடுக்கத் தவறிவிட்டார்’’ என்று பாஜகவின் தலைவர் மீது கடும் தாக்குதல் தொடுத்ததைப் பார்த்தோம். இதில் வேடிக்கை வினோதம் என்னவென்றால், மக்களவையில் முதல் பெஞ்சில் உட் கார்ந்திருப்பவரே இவர்தான். இவர்தான் அதனைச் செய்திருக்க வேண்டும். ஆனால் இவர், அவர் மீது பாய்ந்திருக் கிறார்.

பிரதமர் பதவிக்கு குஜராத் முதல்வர் மோடியின் பெயர் அடிபடுவதை அடுத்து பாஜகவின் கூட்டணிக் கட்சிகள் வெளிப் படையாகவே தங்கள் அசௌகரியத்தைத் தெரிவித்துவிட்டன. பீகார் முதல்வர் தன் எதிர்ப்புணர்ச்சியை எவ்வித ஒளிவு மறைவுமின்றி வெளிப்படுத்திவிட்டார். சிவசேனாவின் தலைவரான பால் தாக் கரே, அத்வானியின் பேச்சை ஒப்பிட்டு, தங்கள் கட்சி ஏட்டில் எழுதியுள்ள தலை யங்கத்தில், “சண்டைக்குச் செல்லும் போர்வீரர்களிடம் அதன் தலைவன், இச்சண்டையில் நாம் வெற்றி பெறுவோம் என்ற உத்தரவாதம் இல்லை என்று சொல்லி ஒட்டுமொத்த போர்வீரர்க ளையும் நம்பிக்கை குன்றச் செய்தது போல’’ இருக்கிறது என்று எழுதியிருக் கிறார். ‘மனவுறுதியையும் வலிமையையும் கொஞ்சம் பெற்றுக்கொள்ள’ அவர் தன் னைச் சந்திக்க வேண்டும் என்றும் பால் தாக்கரே, அத்வானிக்கு அழைப்பு விடுத் திருக்கிறார். அத்வானியின் நம்பிக்கை யற்ற மதிப்பீட்டிலிருந்து தேசிய ஜனநாய கக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் அகாலி தளம் போன்ற கட்சிகளும் தங்களை விலக்கி வைத்துக் கொண்டுள்ளன. அத்வானி யின் மதிப்பீடு உண்மை நிலைமைக்கு மிக நெருக்கத்தில் உள்ளது என்பது உண் மையே என்ற போதிலும், அவர்கள் அதனை வெளிப்படையாக ஒப்புக்கொள் ளத் தயாரில்லை.

பாஜகவோ அல்லது காங்கிரசோ ஆட் சிக்கு வராது என்று கூறிய அத்வானி, அதே சமயத்தில் மூன்றாவது முன்னணி ஆட்சி அமைப்பதற்கான சாத்தியக்கூறு களும் இல்லை என்று மிகவும் விசித் திரமான முறையில் கூறியிருக்கிறார். அநே கமாக, அவர் ஐ.மு.கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் அடுத்த அரசாங்கத் திற்குத் தலைமை வகிப்பதற்கான சாத் தியக்கூறுகள் இருக்கலாம் என்று அவர் கருதியிருக்கக்கூடும். எப்படி அவர் கருதியிருந்தாலும் அவரது அனைத்து ஊகங்களும் பகற்கனவேயாகும். பட் டத்தை வானத்தில் பறக்க விடும் மனி தனின் இயல்பு அதனை மிக மிக உயரத் தில் பறக்கவிட வேண்டும் என்பதே யாகும். அத்வானியும் இதனை மறுக்க மாட்டார். ஆர்எஸ்எஸ்-பாஜக கூடாரம் பொதுத் தேர்தலுக்குப் பிந்தைய வாய்ப்பு கள் குறித்து கற்பனைச் சிறகடித்து பறந்து கொண்டிருந்ததைக் குறிப்பிட்டிருக்கி றோம். பொதுத் தேர்தல் நடைபெற இன் னும் இரண்டு ஆண்டுகள் இருக்கின்ற போதிலும், நடைபெறவிருக்கும் தேர்த லில் பாஜகவின் வாய்ப்புகள் இந்த நிமிடம் வரை வீழ்ந்து கொண்டிருக்கும் அதே சம யத்தில், அன்னா ஹசாரே போன்றோரின் இயக்கங்களால் ஆதாயம் அடையலாம் என்ற அவர்களது அபிலாசைகள் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக மாறி யுள்ள நிலையிலும், பிரதமர் பதவிக்கு தங் கள் கட்சியில் யார் போட்டியிடுவது என் பதற்கான குடுமிப்பிடிச் சண்டை மட்டும் தொடர்ந்து மூர்க்கத்தனமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது.

நாட்டிற்கு ஒரு மாற்றுக் கொள்கைத் திசை வழி தேவை என்பதை அத்வானி வேண்டாவெறுப்புடன் ஒப்புக்கொண் டிருப்பது போலவே தோன்றுகிறது. நாட் டிற்கும் நாட்டு மக்களுக்கும் நலன் பயக் கக்கூடிய விதத்தில் கொள்கை மாற் றத்தை ஏற்படுத்தக்கூடிய தலைமை பாஜ கவிற்கோ அல்லது காங்கிரசுக்கோ இல்லை என்பதையும் அவர் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

நாடு தன்னுடைய சமூகப் பொருளா தாரக் கொள்கையின் திசைவழியில் ஒரு புரட்சிகரமான மாற்றை ஏற்படுத்த வேண்டியது இன்றைய தேவையாகும். நாடு தன்னுடைய வெறிபிடித்த வகுப்பு வாதத்தை உறுதியுடன் நிராகரிப்பதன் மூலம் வேற்றுமையில் ஒற்றுமை காணும் தன் வளமான தன்மையை சமரசமற்ற முறையில் நிலைநிறுத்திப் பாதுகாத்திடும் அதே சமயத்தில், நாட்டின் பெரும் பான்மை மக்களை பசி-பஞ்சம்-பட்டினி யில் தள்ளிவிட்டு, சர்வதேச நிதிமூலதனத் திற்கும், இந்தியாவில் உள்ள பெரிய வர்த் தக நிறுவனங்களுக்கும் சேவகம் செய் திடக்கூடிய வகையில், ஆட்சியாளர்கள் கடைப்பிடித்து வரும் பொருளாதாரக் கொள்கைகளை மாற்ற வேண்டியதும் அவசியமாகும். பொருளாதாரக் கொள்கை களைப் பொறுத்தவரை, காங்கிரசுக்கும் பாஜகவிற்கும் வேறுபாடு எதுவும் இல்லை. அவை நவீன தாராளமய நிகழ்ச்சிநிரலையே அமல்படுத்திட உறுதி பூண்டவைகளாகும். எனவே, நாட்டில் மக்கள் நலன் காக்கப்பட வேண்டுமா னால், இவர்களுக்கு மாற்றாக உள்ள சக்திக்குத்தான் தலைமைப் பொறுப்பு அளிக்கப்பட வேண்டும்.

வீரியத்துடன் ஒரு வளமையான இந் தியாவை உருவாக்கிடக்கூடிய வல்ல மைக்கும், வள ஆதாரங்களுக்கும் நமக்குப் பஞ்சமில்லை. ஆட்சியாளர்கள் தற்போது கடைப்பிடித்து வரும் நவீன தாராளமய பொருளாதார சீர்திருத்தக் கொள்கைகள் முற்றிலுமாக மாற்றி அமைக்கப்பட வேண்டியதே இன்றைய தேவையாகும். இதுவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் குறிக் கோளாகும். இக்குறிக்கோளை எய்த வேண்டுமென்ற நோக்கத்தோடுதான் அவர்கள் மக்களைத் திரட்டி மாபெரும் இயக்கங்களை நடத்தி வருகின்றனர். இவ்வியக்கங்கள் சிறந்ததோர் இந்தி யாவை உருவாக்கக்கூடிய விதத்தில் மேலும் வலுவாக மாற்றப்பட வேண்டியது அவசியமாகும்.

(தமிழில்: ச.வீரமணி)

No comments: