Friday, March 30, 2012
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது அகில இந்திய மாநாட்டை நோக்கி...பிரகாஷ் காரத்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது அகில இந்திய மாநாடு வரும் 2012 ஏப்ரல் 4 - 9 தேதிகளில் கேரள மாநிலம் கோழிக்கோடில் நடைபெறவிருக்கிறது. கட்சியின் அகில இந்திய மாநாடு என்பது கட்சியின் ஓர் உயர்ந்தபட்ச அமைப்பாகும். அதுதான் எதிர்கால அரசியல் உத்திகளைத் தீர்மானித்திடும். அதுமட்டுமல்லாமல் அதுதான் கடந்த அகில இந்திய மாநாட்டிற்குப் பின்னர் நடைபெற்ற வேலைகளை ஆய்வு செய்து, கட்சி ஸ்தாபனத்தின் திசைவழியைத் தீர்மானித்திடும். முக்கியமான தத்துவார்த்த பிரச்சனைகளை விவாதிக்கும் அமைப்பாகவும் இது திகழும்.
கட்சியின் 19ஆவது அகில இந்திய மாநாட்டிற்குப் பின்னர் கடந்த நான்காண்டுகள் உலகப் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து, வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளில் கடும் விளைவுகளை ஏற்படுத்தியது. இந்நாடுகள் பின்பற்றிய நவீன தாராளமயக் கொள்கைகளின் காரணமாக இந்நாட்டு மக்களின் வாழ்வாதாரங்களின் மீது கடும் தாக்குதல்களை ஏற்படுத்தியது, வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகரித்தது. மீண்டும் ஒருதடவை, முதலாளித்துவ அமைப்பு என்பது நெருக்கடியற்ற, சுரண்டலற்ற ஓர் அமைப்பாக இருக்க முடியாது என்பதை இது மீண்டும் ஒரு தடவைக் காட்டிவிட்டது. இதன் காரணமாக சமீப காலத்தில் இந்நாடுகளில் தங்கள் உரிமைகளையும், வாழ்வாதாரங்களையும் பாதுகாத்துக் கொள்வதற்காக எண்ணற்ற போராட்டங்களிலும் இயக்கங்களிலும் மேலும் மேலும் மக்கள் இணைந்த வண்ணம் உள்ளார்கள். நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிர்ப்பு வளர்ந்து கொண்டிருப்பதன் மூலம், இடது மாற்றை உருவாக்குவதற்கான வாய்ப்பும் உலகம் முழுதும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. லத்தீன் அமெரிக்க நாடுகளில் இடதுசாரிகள் முன்னேறிக் கொண்டிருப்பது இவ்வுண்மைக்கு சாட்சியமாகும்.
நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டம்
தேசிய அளவில், கடந்த இருபதாண்டுகளாக ஆட்சியாளர்கள் வெறித்தனமாகக் கடைப்பிடித்து வந்த தாராளமயக் கொள்கைகள் இரு வித இந்தியர்களை உருவாக்கி இருக்கிறது. முதல்விதமானவர்கள், நவீன தாராளமயக் கொள்கைகளின் காரணமாக பயனடைந்த இந்திய மற்றும் வெளிநாட்டுப் பெரு முதலாளிகள், நிதி மற்றும் ரியல் எஸ்டேட் ஊக வர்த்தகர்கள் மற்றும் இந்நாட்டின் இயற்கை வளங்களை கொள்ளையடித்திட உரிமங்கள் வழங்கப்பட்டவர்கள். இரண்டாவது விதமானவர்கள் கோடிக்கணக்கான சாமானிய மக்கள். தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், சிறிய கடை வணிகர்கள், கைவினைஞர்கள், மற்றும் அற்பக் கூலி பெறும் மக்கள். இவர்களில் சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட தலித்துகள், பழங்குடியினர், பெண்கள் மற்றும் சிறுபான்மையினரும் அடங்குவர். உணவுப் பொருள்களின் கடும் விலை உயர்வாலும், வேலையில்லாக் கொடுமையாலும், விவசாய நெருக்கடியாலும், பாரம்பர்ய வாழ்வாதாரங்களை இழந்ததாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள் இவர்கள்தான். இவர்களில் வேலை கிடைத்தோருக்கும் உரிய ஊதியம் தர மறுப்பதோடு அற்ப ஊதியமே வழங்கப்படுகிறது. இவர்களுக்கு எவ்விதமான சமூகப் பாதுகாப்பும் கிடையாது. இப்பிரிவினரை எவ்விதம் அணிதிரட்டப்போகிறோம் என்பதையும், அவர்கள் பிரச்சனைகளை முன்னிலைப் படுத்தி இயக்கங்களையும் போராட்டங்களையும் எங்ஙனம் வளர்த்தெடுக்கப்போகிறோம் என்பதையும், கட்சியின் அகில இந்திய மாநாடு விவாதிக்க இருக்கிறது. உழைக்கும் மக்களின் ஒற்றுமையை எப்படி வளர்த்தெடுப்பது மற்றும் அவர்களின் ஒன்றுபட்ட போராட்டங்களை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பன மாநாட்டின் நிகழ்ச்சி நிரலாக அமைந்துள்ளன.
சாதி, மதம் மற்றும் பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்துள்ள சமூக ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சனைகளையும் எடுத்துக் கொண்டு போராட்ட வியூகங்களை அமைத்திட கட்சி தீர்மானித்திருக்கிறது. இத்தகைய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்கள் விரிவாக்கப்பட வேண்டும். இவை, இடதுசாரிகள் மற்றும் ஜனநாயக இயக்கத்தின் மேடையின் ஓர் அங்கமாக மாற வேண்டும். இப்பிரச்சனை மீதும் கட்சியின் அகில இந்திய மாநாடு விவாதிக்க இருக்கிறது.
ஏகாதிபத்தியத்திற்கு எதிரான, மிகவும் உருக்குபோன்று உறுதியான படையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விளங்குகிறது. சமீப ஆண்டுகளில், எப்படி ஐமுகூ அரசாங்கம் சுயேட்சையான அயல்துறைக் கொள்கையைக் கைகழுவிவிட்டு, அமெரிக்க ஆதரவுடன் கூடியதொரு போர்த்தந்திரக் கூட்டணியை (strategic alliance) உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்பதை நாம் பார்த்தோம். இது நம் நாட்டின் இறையாண்மை மீது கடும் விளைவுகளை ஏற்படுத்தியதோடு, நாட்டு மக்களின் நலன்களுக்கு எதிரான பொருளாதாரக் கொள்கைகளை மக்கள் மீது திணிக்கக்கூடிய அளவிற்கு இட்டுச் சென்றுள்ளது. ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களையும், நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான இயக்கங்களையும் எப்படி வலுப்படுத்தப் போகிறோம் என்பதையும், கட்சியின் அகில இந்திய மாநாடு விவாதிக்க இருக்கிறது.
கட்சியின் சுயேட்சையான பங்கினை வலுப்படுத்துவோம்.
நம் கட்சியின் சுயேட்சையான பங்கினையும் செயல்பாடுகளையும் அதன் அரசியல் தளத்தையும் செல்வாக்கையும் எங்ஙனம் உயர்த்தப் போகிறோம் என்பதுதான் மாநாட்டின் அரசியல் தீர்மானத்தில் விவாதத்திற்காக முன்வைத்துள்ள மையக் கேள்வியாகும். இதற்கு, கட்சி, நம் அடிப்படை வர்க்கங்களின் - ஐமுகூ அரசாங்கத்தின் மக்கள் விரோதக் கொள்கைகளின் மோசமான விளைவுகளை நேரடியாக அனுபவிக்கின்ற தொழிலாளர் வர்க்கம், ஏழை விவசாய வர்க்கம் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் - போராட்டங்களை உருவாக்க வேண்டியிருக்கிறது. நாட்டிலுள்ள பல்வேறு பகுதி மக்களையும் நவீன தாராளமயக் கொள்கைகளின் விளைவுகள் எப்படியெல்லாம் பாதித்திருக்கின்றன என்பது குறித்து துல்லியமானதோர் ஆய்வினை நடத்தி, அவர்களின் பிரச்சனைகளை அடையாளப்படுத்த வேண்டியிருக்கிறது.
முறைசாராத் தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், ஏழை விவசாயிகள் மற்றும் நாட்டுப்புற ஏழைகள் என்று கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களைத் தொடர்ந்து விடாப்பிடியாக போராட்டப்பாதையில் அணிதிரட்ட வேண்டிய பணியினை, ஒட்டுமொத்த கட்சியின், செல்லும் திசைவழியை, விவாதிப்பதே மாநாட்டின் பிரதானப் பணியாக இருந்திடும்.
இந்தியாவில் வகுப்புவாதம் ஆளும் வர்க்கங்களின் போர்த்தந்திரங்களுடன் பின்னிப்பிணைந்திருக்கிறது. உழைக்கும் வர்க்கங்களைப் பிரிப்பதற்கும், வலதுசாரி நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு முட்டுக் கொடுப்பதற்கும் அவர்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அது பாஜக-வாக இருந்தாலும் சரி, சிவ சேனைக் கட்சியாக இருந்தாலும் சரி, அல்லது வேறெந்த வகுப்புவாத சக்திகளாக இருந்தாலும் சரி - அவை பெரு மூலதனம் மற்றும் சந்தைப் பொருளாதாரக் கொள்கைகளின் அமலாக்கத்தை எவ்விதக் கூச்சநாச்சமுமின்றி ஏற்றுக் கொள்பவைகளேயாகும். வகுப்புவாதக் கட்சியால் நடத்தப்படும் அரசாங்கங்கள் எப்படி பெரு முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களின் ஏவலர்கள்போல் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதற்கு குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் உள்ள பாஜக அரசாங்கங்களின் செயல்பாடுகளே எடுத்துக் காட்டுகளாகும். எனவே, நவீன தாராளமயக் கொள்கைகள் மற்றும் வகுப்புவாதத்திற்கெதிராக போராடுவது என்பதை இணைத்தே நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டியிருக்கிறது.
அரசியல் நிலைப்பாடு
அரசியல்ரீதியாக இதன் பொருள், காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு பெரும் பெரு முதலாளிகள் கட்சிகளையும் எதிர்த்திட வேண்டும் என்பதேயாகும். இன்றைய சூழ்நிலையில், நாடு முழுதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் அதன் சுயேட்சையான வளர்ச்சியையும் வலுப்படுத்துவதென்பதே நம்முன் உள்ள மிகவும் முக்கியமான பணியாகும். இதனுடன், இடதுசாரிக் கட்சிகளின் ஒற்றுமையை வலுப்படுத்திடவும், இடதுசாரி அரசியலை முன்னிறுத்தக்கூடிய விதத்தில் அனைத்து இடதுசாரி சக்திகளையும் ஒன்றுதிரட்டிடவும் வேண்டும். இடது மற்றும் ஜனநாயகக் கூட்டணியை உருவாக்கும் பணியும் கட்சியின் முன்னேயுள்ளது. ஏனெனில், அதுதான் பெரு முதலாளிகளின் கட்சிகள் மற்றும் முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ ஆட்சிக்கு எதிரான உண்மையான மாற்றாக இருக்க முடியும். நாம் தொழிலாளர் வர்க்கம், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்களின் இதர பிரிவினரையும் போராட்டங்கள் மற்றும் ஒன்றுபட்ட இயக்கங்கள் மூலமாக அணிதிரட்டிடும்போது, ஒரு வலுவான இடது மற்றும் ஜனநாயக முன்னணி உருவாகிடும். காங்கிரசையும் பாஜகவையும் எதிர்த்திடும் போராட்டத்தில் இத்தகையதொரு கூட்டணியைக் கட்டிட முயற்சிக்கும் வேளையில், கட்சி மக்கள் பிரச்சனைகளின் மேல் நடத்தப்படும் போராட்டங்களிலும், மதச்சார்பின்மையைப் பாதுகாப்பதற்கான போராட்டத்திலும் இதர ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற கட்சிகளுடன் ஒத்துழைத்திடவும் முயல வேண்டும்.
கட்சியின் 19ஆவது அகில இந்திய மாநாட்டிற்குப் பிந்தைய கால கட்டம் கட்சிக்கு மிகவும் சிரமமான மற்றும் மிகக் கடினமான ஒன்றாக இருந்திருக்கிறது. வலுவான தளம் இருந்த மேற்கு வங்கத்தில் கட்சி கடுமையான தாக்குதலை சந்தித்துக் கொண்டிருக்கிறது. கடந்த மாநாட்டிற்குப் பின்னர் இதுவரை 570க்கும் மேற்பட்ட கட்சி உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் மேற்கு வங்கத்தில் நாம் இழந்திருக்கிறோம். மக்களவைத் தேர்தல்களிலும் சட்டமன்றத் தேர்தல்களிலும் நமக்கு ஏற்பட்ட தேர்தல் பின்னடைவுகளைப் பயன்படுத்திக் கொண்டு நமக்கு எதிரான தாக்குதல்கள் உக்கிரமாகி இருக்கின்றன. நமது கட்சி இந்த நிலைமையை உறுதியுடன் எதிர்த்து நின்று நாம் இழந்த தளத்தை மீண்டும் பெற்றிட மக்கள் மத்தியில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. உழைக்கும் மக்களின் பிரச்சனைகளைக் கையில் எடுத்துக்கொண்டு போராட்டங்களையும் இயக்கங்களையும் கட்டவிழ்த்துவிட்டுக் கொண்டிருக்கிறது. மேற்கு வங்கத்தில் நாம் இழந்த தளத்தை மீண்டும் அடைவதற்காக நாம் நடத்தும் போராட்டமானது கட்சியின் சுயேட்சையான அடித்தளத்தை வலுப்படுத்துவதற்கான முயற்சியின் ஒரு பகுதியேயாகும்.
தத்துவார்த்தப் பிரச்சனைகள்
மாநாட்டில் கட்சி எடுத்துக் கொண்டுள்ள மற்றுமொரு முக்கியமான பணி, சில தத்துவார்த்தப் பிரச்சனைகள் மீதான தீர்மானத்தை விவாதித்து, நிறைவேற்ற இருப்பதாகும். மத்தியக் குழுவால் தயார் செய்யப்பட்ட வரைவு கட்சியின் அனைத்து மட்டங்களிலும் விவாதிக்கப்பட்டிருக்கிறது. மார்க்சிய - லெனினியக் கண்ணோட்டத்தின் அடிப்படையில், கம்யூனிஸ்ட் கட்சி, தன்னுடைய சித்தாந்த (theoretical) மற்றும் தத்துவார்த்த (ideological) புரிதலை இடைவிடாமல் தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். இன்றைய உலக வளர்ச்சிப்போக்கில், ஏகாதிபத்தியம் என்று அழைக்கப்படுவதை அங்கீகரிக்க மறுக்கும் எண்ணற்றோரை நாம் பார்த்து வருகிறோம். ஏன், இடதுசாரிகள் மத்தியில் கூட சிலரிடம் இத்தகைய கண்ணோட்டம் இருக்கிறது. இன்றைய உலக வளர்ச்சிப்போக்கில் ஏகாதிபத்தியம் எப்படி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை மிகவும் சரியாகக் கணிக்க வேண்டியது நம்முன்னுள்ள முக்கிய கடமையாகும். உலக நிதிமூலதனத்தினால் நன்கு மாற்றியமைக்கப்பட்டுள்ள இன்றைய முதலாளித்துவத்தின் கீழ் தொழிலாளர் வர்க்கம் ஒரு புரட்சிகரமான சக்தியாக தன் பங்களிப்பினைச் செய்திட முடியாது என்கிற கருத்து பலரிடம் காணப்படுகிறது. தொழிலாளர் வர்க்கத்தின் புரட்சிகரப் பாத்திரம் மீள உறுதிசெய்யப்பட வேண்டியிருக்கிறது. அதே சமயத்தில், இன்றைய ஏகாதிபத்திய உலகமய காலகட்டத்தில், அரசியல், தத்துவம், பொருளாதாரம் மற்றும் கலாச்சாரத் துறைகளில் நாம் எதிர்கொண்டுள்ள சவால்களையும் நாம் அலசி ஆராய வேண்டியிருக்கிறது. அவ்வாறு ஆராய்ந்து எதிர்காலத்தில் எப்படி வர்க்கப்போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்தும், இந்தியாவில் உள்ள நிலைமைகளில், அரசியல், தத்துவார்த்த மற்றும் பொருளாதாரப் போராட்டங்களை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்தும் இத்தீர்மானத்தில் விரிவாக சொல்லப்பட்டிருக்கிறது.
ஸ்தாபனத்தைக் கட்டுக
இன்றைய தினம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பத்து லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்டிருக்கிறது. ஆயினும் இதனை ஓர் அகில இந்தியப் போராடும் சக்தியாக, புதிய பகுதிகளுக்கும் மக்களின் பல்வேறுபட்ட புதிய பிரிவினருக்கும் இடையில் செயல்படக்கூடிய கட்சியாக, மாற்றக்கூடிய விதத்தில் வளர்த்தெடுக்கப்பட வேண்டியிருக்கிறது. இதற்கான அத்தியாவசியமான ஸ்தாபன நடவடிக்கைகள் அனைத்தையும் அகில இந்திய மாநாடு தீர்மானித்திடும்.
கோழிக்கோடிலிருந்து அறைகூவல்
கேரள மாநிலம், கம்யூனிஸ்ட் இயக்கம் வலுவாக வேரூன்றியுள்ள ஒரு மாநிலமாகும். கடந்த பல ஆண்டுகளாக எண்ணற்றப் போராட்டங்கள் மற்றும் தியாகங்கள் மூலமாக வீரம் விளைந்த பூமியாகும். இத்தகைய மாநிலத்தில் கோழிக்கோடில் கட்சியின் 20ஆவது அகில இந்திய மாநாடு நடைபெறவிருக்கிறது.
நாடு எதிர்கொண்டுள்ள அனைத்து சவால்களையும் எதிர்கொண்டிட, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இடது மற்றும் ஜனநாயக சக்திகளை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல, அறைகூவல் விடுப்பதற்கான சரியான மற்றும் பொருத்தமானதொரு இடமாக, அகில இந்திய மாநாட்டிற்கு, கோழிக்கோடு அமைந்திடும்.
(தமிழில்: ச.வீரமணி)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment