Thursday, April 22, 2010

தோழர் லெனின் வழிகாட்டும் துருவநட்சத்திரம் - பிரகாஷ்காரத்



2010 ஏப்ரல் 22 தோழர் லெனின் 140ஆவது பிறந்த தினமாகும். காரல் மார்க்ஸ் ஏங்கெல்ஸ் ஆகியோரால் உருவாக்கப்பட்ட மார்க்சிய தத்துவத்தை புரட்சித் தோழர் லெனின் மேலும் செழுமைப்படுத்தினார். தோழர் லெனின், உலகின் முதல் சோசலிச அரசான சோவியத் யூனியனின் சிருஷ்டிகர்த்தா ஆவார்.

லெனின் வாழ்வையும் பணியையும் நாம் போற்றிப் பாராட்டிக் கொண்டாடும்போது, உலகின் முதல் சோசலிசப் புரட்சியை வழிநடத்திய மாபெரும் தலைவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மட்டும் நாம் அதனைக் கொண்டாடவில்லை. மார்க்ஸ், ஏங்கெல்சுக்குப் பின், லெனின் அளவிற்கு வேறெவரும் மார்க்சிய சித்தாந்தத்திற்குப் பங்களிப்பினைச் செய்ததில்லை. தொழிலாளி வர்க்கஇயக்கம், தொழிலாளர் வர்க்கப் புரட்சியை வெற்றிகரமாக நடத்தி அறிவியல்பூர்வமாக சோசலிசத் தத்துவத்தை முன்னெடுத்துச் செல்லக்கூடிய வகையில் லெனினது அனைத்துத் தத்துவார்த்தப்பணிகளும் அமைந்திருந்தன.
லெனின், 20ஆம் நூற்றாண்டில் ஏகாதிபத்தியம் மற்றும் முதலாளித்துவம் ஆகியவற்றின் குணங்களைப் பகுப்பாய்ந்து பல்வேறு உண்மைகளைக் கண்டறிந்தார். ஏகாதிபத்தியம், ஏகபோக முதலாளித்தவத்தின் உச்சகட்டம் என்பதை லெனின் பறைசாற்றினார். முதலாளித்துவ முறை தொடர்பான மார்க்சின் ஆய்வுகளை லெனின் ஆக்கபூர்வமான முறையில் வளர்த்திட்டார். இன்றையதினம் இன்றைய ஏகாதிபத்தியம் குறித்தும் உலக முதலாளித்துவம் குறித்தும் ஆய்வு செய்திடும் எவரும், லெனினால் ஏகாதிபத்தியம் குறித்துப் பகுப்பாய்வு செய்து அளிக்கப்பட்டுள்ள ஆய்வினைத் தொடாது எதுவும் செய்திட முடியாது. லெனினிஸ்ட் ஆராய்ச்சிமுறையிலன்றி வேறெந்த விதத்திலும் இன்றைய தினம் முற்றியுள்ள உலக நிதி மூலதனம் மற்றும் அதன் உலகமயக் கொள்கைகளினால் ஏற்பட்டுள்ள விளைவுகளுக்கான காரணங்களைப் புரிந்து கொள்ளவும் முடியாது.

ஏகாதிபத்தியம் தொடர்பான லெனினிஸ்ட் புரிந்துணர்வுதான், உலக முதலாளித்துவத்தை அதன் பலவீனமான கண்ணியில் உடைத்து நொறுக்கப்பட வேண்டும் என்பதையும் அதிலிருந்து ரஷ்யாவில் சோசலிஸ்ட் புரட்சிக்கான போர்த்தந்திரத்தையும் அதற்கான உத்திளையும் உருவாக்க வேண்டும் என்றும், இதற்கு தொழிலாளர் - விவசாயிகள் ஒற்றுமை கேந்திரமான பங்கினை வகித்திடும் என்றும் முடிவு கண்டார். இதற்கிணையான மற்றொரு லெனினிஸ்ட் புரிந்துணர்வு என்பது, தேசிய மற்றும் காலனியப் பிரச்சனைகளை, உலகப் புரட்சியின் போர்த்தந்திரம் மற்றும் அதற்கான உத்திகளோடு இணைப்பது தொடர்பானதாகும். இது, இதற்கு முன் பிரபல்யமாயிருந்த ஐரோப்பிய மார்க்சிஸ்ட்டுகளின் புரிந்துணர்வுகளிலிருந்து முற்றிலும் வேறான ஒன்றாகும். காலனியாதிக்க நாடுகளில் நடைபெறும் தேச விடுதலைப் போராட்டங்கள் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உலகம் முழுதும் நடைபெறும் போராட்டத்தின் ஒரு பகுதியே என்பதையும், இப்போராட்டங்களில் ஈடுபட்டுள்ள சக்திகள் சோசலிசத்திற்காகப் போராடிக்கொண்டிருக்கும் உலகத் தொழிலாளர் வர்க்கத்தின் கூட்டாளிகள்தான் என்றும் லெனின் தெளிவுபடுத்திக் காட்டினார். 20ஆம் நூற்றாண்டின் நிகழ்வுகள் காலனியாதிக்கம் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான தேச விடுதலைப் போராட்டங்களின் வெற்றிக்கு இட்டுச் சென்றதும், சீன, வியட்நாமிய, கொரிய மற்றும் கியூபா புரட்சிகளும் லெனினிஸ்ட் போர்த்தந்திரத்தை வெற்றிகரமாக ஏவியதன் மூலமாகக் கிடைத்திட்ட சாதனைகளேயாகும்.

லெனினது மற்றுமொரு முக்கிய பங்களிப்பு என்பது அரசு மற்றும் அதன் வர்க்கக் குணம் குறித்து லெனினது புரிந்துணர்வாகும். இதுதான் உலகிலிருந்த அனைத்துக் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் முதலாளித்துவத்திற்கு எதிராகவும் ஆளும் வர்க்கங்களுக்கு எதிராகவும் தாங்கள் நடத்திய போராட்டங்களுக்கு அடிப்படையாக மாறியிருந்தன. வர்க்கப் போராட்டம் என்பது பொருளாதாரப் பிரச்சனைகள் மீதான போராட்டம் மட்டுமல்ல, மாறாக சுரண்டும் ஆளும் வர்க்கங்களின் அரசு அதிகாரத்திற்கு சவால் விடுத்து அதனை வெற்றிகொள்வது என்பதுமாகும்.

லெனின், எல்லாக் காலத்துக்கும் பொருந்தக்கூடிய விதத்தில் ஸ்தாபனம் தொடர்பான புரட்சி விதிகளையும் வகுத்தளித்திருந்தார். தொழிலாளர் வர்க்கத்தையும் உழைக்கும் மக்களையும் உருக்கு போன்று உருவாக்கி வழிநடத்திக் செல்லக்கூடிய வகையில் புதியதொரு பாணியில் ஒரு கட்சியைக் கட்டுவதற்கு லெனினிஸ்ட் பங்களிப்பு மகத்தானது. உள்கட்சி ஜனநாயகத்தின் அடிப்படையில் அமைந்த ஜனநாயக மத்தியத்துவக் கொள்கை, கடுமையான கட்டுப்பாடு, விமர்சனம் மற்றும் சுயவிமர்சனம் ஆகியவை தொழிலாளர் வர்க்கத்திற்கு புது வகையான ஸ்தாபனத்தைக் கொடுத்தது. இது முதலாளித்துவ மற்றும் சமூக ஜனநாயகக் கட்சிகளின் ஸ்தாபன முறைகளுக்கு முற்றிலும் எதிரானது. பின்னர் புரட்சியை நடத்திய ஒவ்வொரு கட்சியும், புரட்சி இயக்கத்தை மேலும் வளர்த்து முன்னெடுத்துச் செல்ல, லெனினிய வடிவமும் கட்சி ஸ்தாபன அமைப்பு முறையும் ஒன்றையொன்று பிரிக்க முடியாதவை என்பதை உணர்ந்தன. லெனினிய ஸ்தாபனக் கோட்பாடுகளை கம்யூனிஸ்ட் அல்லாதவர்களும், இடதுசாரி அமைப்புக்குள்ளேயே இருக்கின்ற மற்ற பகுதியினரும் கடுமையான முறையில் தாக்கினர். ஆனால், லெனின் ‘‘முதலாளித்துவ அரசுக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாளி வர்க்கத்திடம் உள்ள ஒரே ஆயுதம், அதன் ஸ்தாபனம்தான் என்பதை மிகவும் உறுதியாக உயர்த்திப்பிடித்தார். இந்தியாவிலும் பல்வேறுவிதமான சூழ்நிலைகளின்கீழ் கட்சியைக் கட்டிய நமது அனுபவமும் ஸ்தாபனம் தொடர்பான லெனினது கொள்கையை உறுதி செய்தது.

லெனின், 1917 புரட்சிக்குப்பின்னர் ஆறு ஆண்டுகள் மட்டுமே சோவியத் யூனியனின் தலைவராக வாழ்ந்தார். இக்காலத்தில், மிகவும் சுக்குநூறாக நொறுங்கிப்போயிருந்த பழைய சமூகத்திலிருந்து புதிய சமூகத்தை உருவாக்கும் பிரம்மாண்டமான பணியில் அவர் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டிருந்தார். புரட்சிக்குப்பின் அவர் உயிருடன் இருந்த ஆறு ஆண்டுகளில் நான்கு ஆண்டுகள், நடைபெற்றுக்கொண்டிருந்த கசப்பான உள்நாட்டு யுத்தத்திலிருந்து நாட்டைக் காக்க வேண்டியிருந்தது. யுத்த காலத்திலிருந்து புதிய பொருளாதாரக் கொள்கை காலம் வரை, லெனின் சோசலிசத்தைக் கட்டுவதற்கான ஒரே குறிக்கோளுடன் கொள்கைகளைத் தொடர்ந்து மாற்றி, சரி செய்து கொண்டிருந்தார். லெனின், சோசலிசத்திற்கான பாதை மிகவும்நீண்ட நெடிய ஒன்று என்பதையும் மிகவும் கடினமான ஒன்று என்பதையும் நன்கு அறிந்திருந்தார்.

‘‘மிகவும் நெளிவுசுழிவுகளுடன் கூடிய வரலாற்றைக் கொண்டுள்ள மிகவும் பிற்பட்ட ஒரு நாட்டில், பழைய முதலாளித்துவ உறவுகளிலிருந்து, சோசலிச உறவுகளுக்கு மாறிச் செல்வதென்பது, மிகவும் கடினமான ஒன்று என்பதை நிரூபித்தது,’’
என்று லெனின் கூறினார்.

லெனின் மேலும் சில காலம் வாழ்ந்திருந்தாரானால், சோவியத் யூனியன் சோசலிசத்தை எப்படிக் கட்டி எழுப்பியிருக்கும் என்று இப்போது ஊகம் செய்து பார்ப்பது வீண் என்ற போதிலும், ஒரு வளர்ச்சியடையாத பின் தங்கிய நாட்டில் சோசலிசத்தைக் கட்டுவதற்கான பாதையை லெனின் எப்படி ஏற்படுத்தித் தந்தார் என்பது குறித்த படிப்பினைகளை அறிந்து கொள்வது அவசியமாகும்.

லெனின் மறைந்தபின் சுமார் எழுபதாண்டுகள் கழித்து, சோவியத் யூனியன் சிதறுண்டது. அதன்பிறகு, கடந்த இருபதாண்டுகளில், வரலாறு திருப்பி எழுதப்பட வேண்டியிருந்தது. லெனினிசத்தின் புரட்சிகர உள்ளடக்கம் முழுமையாக மறுதலிக்கப்பட்டது. லெனினின் தத்துவார்த்த மற்றும் அரசியல் முக்கியத்துவம் என்பது ரஷ்யாவுக்கு மட்டுமே பொருந்தக்கூடியது என்று அதுநாள்வரை கூறி வந்த முதலாளித்துவ விமர்சகர்களில் ஒரு பிரிவினர், இப்போது மேலும் ஒருபடி சென்று, அது ரஷ்யாவிலும் தோல்வியடைந்து விட்டது என்று சொல்லத் தொடங்கிவிட்டார்கள். அனைத்து விதமான முதலாளித்துவ தத்துவவாதிகள் மற்றும் சிந்தனாவாதிகள் ஏகாதிபத்தியம் என்ற ஒன்று இருப்பதையே மறுக்கிறார்கள். இவர்களில் சிலர் தாராளமயமான முதலாளித்துவம் என்பது அழியாதது என்று கூட வாதிடுகிறார்கள். மார்க்சிசம் என்பதும் லெனினிசம் என்பதும் அவர்கள் காலத்திய உற்பத்திப் பொருள்கள் என்றும், பின்நவீனத்துவ உலகில் அவை அர்த்தமற்றதாகிப் போய்விட்டன என்றும் கூறுகின்றனர்.

வரலாறு முடிந்துவிட்டது என்கிற இவ்வாறான இவர்களின் பசப்புரையும், முதலாளித்துவமே சாசுவதமானது என்ற இவர்களது களியாட்டமும் திடீரென்று முடிவுற்று விட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இருந்து வரும் உலகப் பொருளாதார மந்தம் மீண்டும் ஒருமுறை முதலாளித்துவத்தின் குணத்தையும் அதன் கொள்ளையடிக்கும் குணத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. இப் பூமண்டலத்தில் உள்ள எழுநூறு கோடி மக்களில் பாதி ஏழைகள், 102 கோடி மக்கள் பட்டினியால் வாடிக்கொண்டிருப்பவர்கள். ஏகாதிபத்தியம் தன்னுடைய யுத்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதன் மூலம் இப்பூமண்டலத்தில் உள்ள வளங்களை சூறையாடிக் கொண்டிருக்கிறது. ஏகாதிபத்தியம் இந்நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்ளுமானால், பூமியின் சுற்றுப்புறச் சூழல் மற்றும் வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டு விடும்.

மார்க்சிசம் ஒன்றுதான் விஞ்ஞான பூர்வமான கண்ணோட்டம் மற்றும் நடைமுறைகளைக் கொண்டிருப்பதும், இன்றைய தினம் உலகில் நிலவும் ஏற்றத்தாழ்வான நிலைமைகளைப் போக்கி, முரண்பாடற்ற சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவதற்கான செயலுக்கான வழிகாட்டியுமாகும். மார்க்சும் ஏங்கெல்சும் வகுத்துத் தந்த தத்துவம் மற்றும் நடைமுறையை லெனின் மேலும் வளர்த்து, செழுமைப்படுத்தியதைப்போல, இன்றையதினம் லெனின் வகுத்துத் தந்த அடிப்படையில் மார்க்சியத் தத்துவத்தையும் நடைமுறையையும் மேலும் வளப்படுத்தி விரிவாக்கிட வேண்டும். மார்க்சியம் ஒரு செயலற்ற வறட்டுத் தத்துவமல்ல என்று லெனினே சுட்டிக்காட்டியிருக்கிறார். அதனை மேலும் செழுமைப்படுத்தி, வளப்படுத்துவது இன்றைய தேவையாகும்.

‘‘மார்க்சியத் தத்துவமானது நிரந்தரமானது மற்றும் எந்தக்காலத்தும் மாறாத ஒன்று என்று நிச்சயமாக நாம் கருதவில்லை. மாறாக, அது அறிவியலுக்கான அடித்தளத்தைப் போட்டுத் தந்திருக்கிறது என்பதிலும், அதன் மீது நின்று சோசலிஸ்ட்டுகள் முன்னேறிச் செல்ல வேண்டும் என்பதிலும் நாம் முழு நம்பிக்கை கொண்டிருக்கிறோம்.’’

மார்க்சியத்தை மேலும் வளப்படுத்தி முன்னெடுத்துச் செல்லும் நம் முயற்சிகள் அனைத்திற்கும், லெனின் துருவநட்சத்திரமாக இருந்து நமக்கு என்றென்றும் வழிகாட்டுவார்.

(தமிழில்: ச.வீரமணி)