Monday, April 19, 2010

வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவிருக்கும்பிஎஸ்என்எல் ஊழியர்கள்-அரசு பேச்சுவார்த்தை நடத்தி சுமுகத் தீர்வு காண வேண்டும்-நாடாளுமன்றத்தில் பி.ஆர். நடராஜ

புதுதில்லி, ஏப். 19-
வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவிருக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைகளுக்குச் சுமுகத் தீர்வு காண வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் கோரினார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. திங்கள் அன்று நாடாளுமன்ற நடத்தை விதி 377ஆவது பிரிவின்கீழ் பிரச்சனைகளை எழுப்பும் நேரத்தில் பி.ஆர். நடராஜன் பேசியதாவது:
பிஎஸ்என்எல் ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு, பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றும் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வரும் 2010 ஏப்ரல் 20இலிருந்து நாடு தழுவிய அளவில் கால வரையற்ற வேலைநிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளார்கள்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பங்குகளைத் தனியாருக்குத் தாரை வார்க்காதே. ஊழியர்கள்/அதிகாரிகளைக் குறைக்காதே, எவரையும் சுய ஓய்வு என்று பெயரைக் கூறி வெளியேற நிர்ப்பந்திக்காதே. பிஎஸ்என்எல் நிறுவனத்திற்குத் தேவைமயான கட்டமைப்பு வசதிகளை மேலும் காலதாமதப்படுத்தாமல் நிறைவேற்று. அவுட்சோர்சிங் என்ற பெயரில் வேலைகளை தனியாரிடம் கொடுத்து வாங்காதே.டெலிகாம் துறையிலிருந்து வந்துள்ள அனைத்து ஊழியர்களுக்கும் அதிகாரிகளுக்குமான பணிநிலைமைகளை முறைப்படுத்து. மொபைல் லைன்களை உடனடியாகக் கொள்முதல் செய்திடு. பிஎஸ்என்எல் இலிருந்து ஓய்வு பெற்றோருக்கு, ஓய்வூதியத்தை உத்தரவாதம் செய் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இவ்வேலைநிறுத்தத்தில் இறங்கியுள்ளார்கள்.

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் என்னும் நிறுவனமானது, மத்திய அரசிங்ன டெலிகாம் சர்வீசஸ் துறையிலிருந்து தனியே உருவாக்கப்பட்டது. பிஎஸ்என்எல் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் நாட்டின் ‘நம்பர் ஒன் டெலிகாம் கம்பெனி’யாக அதனை விரிவுபடுத்தினர். இது 2006 வரையிலும் தொடர்ந்தது. இப்போது, பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு தேவையான 4.5 கோடி மொபைல் லைன்களைத் தரப்படாததால், மொபைல் லைன்கள் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு மொபைல் லைன்களை அதனால் தர இயலவில்லை. இதனால் பிஎஸ்என்ல் நிறுவனத்தின் விரிவாக்கமும், வருமானமும் கணிசமாகக் குறைந்தது. 2008-09இல் முதன்முதலாக பிஎஸ்என்எல் நிறுவனம் அதுநாள் வரையிலும் தக்கவைத்திருந்த முதல் நிலையை இழந்துவிட்டது. மொபைல் லைன்களில் நான்காவது இடத்திற்குத் தள்ளப்பட்டுவிட்டது. 5000 கோடி ரூபாய்க்கும் மேலாக லாபம் ஈட்டித் தந்த பிஎஸ்என்எல் நிறுவனம், 2008-09இல் வெறும் 574 கோடி ரூபாய் அளவிற்கு லாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றப்பட்டு விட்டது.

அரசுக்குக் கோடி கோடியாகக் கொட்டித் தந்த பிஎஸ்என்எல் பொதுத்துறை நிறுவனத்திற்கு அதன் பழைய நிலையை மீட்டுத்தர, தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பதிலாக, அரசு, பிரதமரின் ஆலோசகர், சாம் பிட்ரோடா என்பவர் தலைமையில் ஒரு குழுவை நியமித்தது. மத்திய அரசின் விருப்பத்தற்கேற்ப இக்குழு பரிந்துரை செய்துள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனத்தை 30 விழுக்காடு தனியாரிடம் தாரை வார்த்திட வேண்டும் என்றும், ஒரு லட்சம் ஊழியர்களை சுய ஓய்வு என்ற பெயரில் வீட்டிற்கு அனுப்பிடவேண்டும் என்றும் கேபிள்கள் அமைக்கும் பணியை அவுட்சோர்சிஸ் முறையில் தனியாரிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என்றும், இக்குழு பரிந்துரைத்திருக்கிறது. இவை அனைத்தும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிரானவைகளாகும். மாபெரும் பொதுத்துறை நிறுவனத்தைத் தனியாரிடம் ஒப்படைத்திட இழிவான நோக்கத்துடன் செய்யப்பட்டுள்ள பரிந்துரைகளாகும். இந்தப் பின்னணியில்தான் பிஎஸ்என்எல் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு 2010 ஏப்ரல் 20இலிருந்து காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்திருக்கிறது. கோரிக்கைகளை ஆராயும் எவரும் ஊழியர்கள் தங்களை மட்டுமல்ல, பிஎஸ்என்எல் நிறுவனத்தையும் பாதுகாத்திடவும், அதனை விரிவுபடுத்திடவுமே இவ்வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். எனவே, பிஎஸ்என்எல் நிறுவனத்தையும், பிஎஸ்என்எல் ஊழியர்களையும் பாதுகாத்திட மத்திய அரசாங்கம் போராடும் ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு பி.ஆர்.நடராஜன் பேசினார்.

No comments: