Wednesday, April 14, 2010

பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஏன் காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்?

-வி.ஏ.என். நம்பூதிரி,
பொதுச் செயலாளர்,
பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம்

பிஎஸ்என்எல் ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு, பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றும் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வரும் 2010 ஏப்ரல் 20இலிருந்து நாடு தழுவிய அளவில் கால வரையற்ற வேலைநிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளார்கள். 2010 மார்ச் 26 அன்று நடைபெற்ற ஒருநாள் தர்ணா போராட்டம் கோரிக்கைகள் குறித்த கவனத்தை பொது மக்கள் மற்றும் ஊழியர்களின் கவனத்திற்குக் கொண்டு வந்ததோடு, காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கான தயாரிப்புப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதையும் வெற்றிகரமாக வெளிப்படுத்தியது.
கோரிக்கைகள் என்ன?

2010 மார்ச் 23 அன்று பிஎஸ்என்எல் நிரிவாகத்திற்கு, கூட்டமைப்பால் அளிக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் அடங்கிய வேலைநிறுத்த அறிவிப்பைக் கண்ணுறும் எவரும் பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து ஜீவித்திருப்பதற்கும், அதன் வளர்ச்சிக்கும் அவை எவ்வளவு முக்கியமானவை என்பதை உணர முடியும்.
(1) பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பங்குகளைத் தனியாருக்குத் தாரை வார்க்காதே.
(2) ஊழியர்கள்/அதிகாரிகளைக் குறைக்காதே, எவரையும் சுய ஓய்வு என்று பெயரைக் கூறி வெளியேற நிர்ப்பந்திக்காதே.
(3) பிஎஸ்என்எல் நிறுவனத்திற்குத் தேவைமயான கட்டமைப்பு வசதிகளை மேலும் காலதாமதப்படுத்தாமல் நிறைவேற்று.
(4) அவுட்சோர்சிங் என்ற பெயரில் வேலைகளை தனியாரிடம் கொடுத்து வாங்காதே.
(5) டெலிகாம் துறையிலிருந்து வந்துள்ள அனைத்து ஊழியர்களுக்கும் அதிகாரிகளுக்குமான பணிநிலைமைகளை முறைப்படுத்து.
(6) மொபைல் லைன்களை உடனடியாகக் கொள்முதல் செய்திடு.
(7) பிஎஸ்என்எல் இலிருந்து ஓய்வு பெற்றோருக்கு, ஓய்வூதியத்தை உத்தரவாதம் செய்.
பின்னணி
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் என்னும் நிறுவனமானது, மத்திய அரசின் நவீன தாராளமயக் கொள்கையின் ஒரு பகுதியாக, நாளடைவில் தனியாருக்குத் தாரை வார்த்திட வேண்டும் என்ற நோக்கத்துடன், மத்திய அரசிங்ன டெலிகாம் சர்வீசஸ் துறையிலிருந்து தனியே உருவாக்கப்பட்டது. மத்திய அரசாங்கத்தாலும், பன்னாட்டு நிதி நிறுவனங்களாலும், பல்வேறு தனியார் கம்பெனிகளாலும் பல்வேறுவிதமான முட்டுக்கட்டைகள் போடப்பட்டபோதிலும், பிஎஸ்என்எல் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அவை அத்தனையையும் முறியடித்து, நாட்டின் ‘நம்பர் ஒன் டெலிகாம் கம்பெனி’யாக அதனை விரிவுபடுத்தினர். இது 2006 வரையிலும் தொடர்ந்தது. இதனை பிற்போக்கு சக்திகளால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. மத்திய அரசாங்கமும், தனியார் டெலிகாம் கம்பெனிகளும் சேர்ந்து பல்வேறு சதிவேலைகளில் ஈடுபட்டு, பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு தேவையான 4.5 கோடி மொபைல் லைன்களைத் தராமல் முடக்கினர். இதனால் பிஎஸ்என்எல் நிறுவனமானது தன்னிடம் மொபைல் லைன்கள் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு மொபைல் லைன்களைத் தர இயலவில்லை. இதனால் பிஎஸ்என்ல் நிறுவனத்தின் விரிவாக்கமும், வருமானமும் கணிசமாகக் குறைந்தது. 2008-09இல் முதன்முதலாக பிஎஸ்என்எல் நிறுவனம் அதுநாள் வரையிலும் தக்கவைத்திருந்த முதல் நிலையை இழந்துவிட்டது. மொபைல் லைன்களில் நான்காவது இடத்திற்குத் தள்ளப்பட்டுவிட்டது. 5000 கோடி ரூபாய்க்கும் மேலாக லாபம் ஈட்டித் தந்த பிஎஸ்என்எல் நிறுவனம், 2008-09இல் வெறும் 574 கோடி ரூபாய் அளவிற்கு லாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றப்பட்டு விட்டது.

அரசுக்குக் கோடி கோடியாகக் கொட்டித் தந்த பிஎஸ்என்எல் பொதுத்துறை நிறுவனத்திற்கு அதன் பழைய நிலையை மீட்டுத்தர, தேவைமயான நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பதிலாக, அரசு, பிரதமரின் ஆலோசகர், சாம் பிட்ரோடா என்பவர் தலைமையில் ஒரு குழுவை நியமித்தது. டெலிகாம் துறையின் செயலர் பி.ஜே. தாமஸ் மற்றும் எச்டிஎப்சி தலைவர் தீபக் பரேக் ஆகிய இருவரும் இக்குழுவின் இதர உறுப்பினர்கள்.

மத்திய அரசின் விருப்பத்தற்கேற்ப இக்குழு பரிந்துரை செய்துள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனத்தை 30 விழுக்காடு தனியாரிடம் தாரை வார்த்திட வேண்டும் என்றும், ஒரு லட்சம் ஊழியர்களை சுய ஓய்வு என்ற பெயரில் வீட்டிற்கு அனுப்பிடவேண்டும் என்றும் கேபிள்கள் அமைக்கும் பணியை அவுட்சோர்சிஸ் முறையில் தனியாரிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என்றும், இக்குழு பரிந்துரைத்திருக்கிறது. இவை அனைத்தும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிரானவைகளாகும். மாபெரும் பொதுத்துறை நிறுவனத்தைத் தனியாரிடம் ஒப்படைத்திட இழிவான நோக்கத்துடன் செய்யப்பட்டுள்ள பரிந்துரைகளாகும்.

இந்தப் பின்னணியில்தான் பிஎஸ்என்எல் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு 2010 ஏப்ரல் 20இலிருந்து காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்திருக்கிறது. கோரிக்கைகளை ஆராயும் எவரும் ஊழியர்கள் தங்களை மட்டுமல்ல, பிஎஸ்என்எல் நிறுவனத்தையும் பாதுகாத்திடவும், அதனை விரிவுபடுத்திடவுமே இவ்வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

(1) பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பங்குகளைத் தனியாருக்குத் தாரை வார்க்காதே.
சாம் பிட்ரோடா குழு, பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 30 விழுக்காடு பங்குகளைத் தனியாருக்குத் தாரை வார்த்திடப் பரிந்துரைத்திருப்பது தேவையற்ற ஒன்று. இது பொதுத்துறை மற்றும் ஊழியர்களின் நலன்களுக்கு விரோதமான ஒன்று. இது அரசின் நவீன தாராளமய ஊழியர் விரோதக் கொள்கையை அமல்படுத்துவதற்கான நடவடிக்கையே தவிர வேறல்ல. இவ்வாறு பங்குகளைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதால் தேவையான நிதி கிடைத்திடும் என்று கூறுவதில் எந்த அடிப்படையும் இல்லை. ஏனெனில் தற்போதுள்ள நிலைமையிலேயே பிஎஸ்என்எல் நிறுவனம் தனக்குச் சொந்தமான 35 ஆயிரம் கோடி ரூபாய்களை பல்வேறு வங்கிகளில் போட்டு வைத்திருக்கிறது. மேலும், இவ்வாறு தனியாருக்குத் தாரை வார்ப்பதன் மூலம் வரும் பணமானது நேரடியாக அரசாங்கத்திற்குத்தான் செல்லப்போகிறதேயொழிய, பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு வரப்போவதில்லை. 2006 ஜனவரியில் வேலைநிறுத்தத்திற்கான அறிவிப்பை ஊழியர் சங்கங்கள் சார்பில் அரசாங்கத்திற்கு அளிக்கப்பட்டபோது, அரசாங்கத்தின் சார்பில் ‘‘பிஎஸ்என்எல் நிறுவனம் தனியார்மயப்படுத்தப்பட மாட்டாது அல்லது அதன் பங்குகள் தனியாருக்குத் தாரைவார்க்கப்பட மாட்டாது’’ என்று எழுத்து பூர்வமான உறுதிமொழி அளிக்கப்பட்டது. அரசாங்கம் இவ்வாறு ஊழியர்களுக்கு எழுத்து மூலமாக அளித்திட்ட உறுதிமொழியினை நேர்மையுடன் அமல்படுத்திட முன்வர வேண்டும். பொதுச் சொத்தைத் தனியாருக்குத் தாரை வார்த்திடும் இழி நடவடிக்கைகளில் இறங்கிடக் கூடாது.

2.ஊழியர்கள்/அதிகாரிகளைக் குறைக்காதே, எவரையும் சுய ஓய்வு என்று பெயரைக் கூறி வெளியேற நிர்ப்பந்திக்காதே.
சாம் பிட்ரோட குழுவானது, பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றுவோரில் ஒரு லட்சம் பேரை வீட்டிற்கு அனுப்பிடக்கூடிய முறையில் சுய ஓய்வுத் திட்டத்தை (ஏசுளு-ஏடிடரவேயசல சுநவசைநஅநவே ளுஉhநஅந) அமல்படுத்திட வேண்டும் என்று பரிந்துரைத்திருக்கிறது. தன் பரிந்துரையை நியாயப்படுத்துவதற்காக இக்குழு, பார்தி ஏர்டெல் போன்ற தனியார் நிறுவனங்களில் 35 ஆயிரம் ஊழியர்கள் மட்டுமே இருக்கிறார்கள் என்றும் ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 3 லட்சம் பேர் இருப்பதாகவும் கூறியிருக்கிறது. ஆனால் இக்குழுவானது பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இவ்வாறு ஊழியர்கள் இருந்து வருவதற்கான வரலாற்றுக் காரணங்களை அது வசதியாக மறந்துவிட்டது. தற்போதுள்ள தொழில்நுட்ப மாற்றத்தை மட்டும் அது குறிப்பிடுகிறது. நாட்டின் லட்சக்கணக்கான கிராமங்களை இணைக்க வேண்டும் என்கிற அரசின் கொள்கையையும் அது மறந்துவிட்டது. மேலும் அடுத்த ஐந்தாண்டுகளில் 60 ஆயிரம் ஊழியர்கள் இயல்பாக ஓய்வு பெறுவார்கள் என்பதையும் அது மறந்துவிட்டது.

எல்லாவற்றிற்கும் மேலாக நாட்டின் வனப்பகுதிகளிலும், மலைப்பகுதிகளிலும், ஆறுகள் மற்றும் பாலைவனங்கள் என மிகக் கடினமான அனைத்துப் பகுதிகளிலும் டெலிபோன் லைன்களை நிறுவியது இத்தகைய ஊழியர்கள்தான் என்பதையும் இக்குழு வசதியாக மறந்துவிட்டது. வெகு காலம் தற்காலிக ஊழியர்களாக இருந்தபின்னர்தான் இத்தொழிலாளர்கள் நிரந்தரம் செய்யப்பட்டார்கள். பல்வேறு சிரமங்களுக்கிடையே சகதிகளிலும், சேறுகளிலும் நின்று கேபிள்களைப் போட்ட ஊழியர்கள் இவர்கள். அக்கேபிள்களில் ஏதேனும் குறைகள் வரும்போது மீண்டும் அவற்றை அதேமாதிரி சிரமத்திற்கிடையே சென்று பணியாற்றி சரி செய்பவர்கள். அத்தகைய ஊழியர்களைப் பணிநீக்கம் செய்திடவோ, பணியிறக்கம் செய்திடவோ எந்த ஒரு அரசின் குழுவிற்கும், எந்த ஒரு நிர்வாகத்திற்கும் சட்டரீதியாகவோ அல்லது தார்மீக ரீதியாகவோ உரிமை கிடையாது. தாஸ்மகாலை உருவாக்கிய வல்லுனர்களைக் கொன்ற மன்னன் ஷாஜகான் போன்று இவர்கள் நடந்திட முடியாது.

அரசாங்கமும் நிர்வாகமும் இதற்கு முன்பும் இருமுறை - 2005இலும் 2008இலும், முறையே 50 ஆயிரம் ஊழியர்களையும் 20 ஆயிரம் ஊழியர்களையும் வீட்டிற்கு அனுப்பிட - முயற்சித்தது. ஆனால் அவ்விருமுறையும் ஊழியர்கள் தங்கள் ஒன்றுபட்ட போராட்டத்தின் மூலமாக அவற்றை முறியடித்தார்கள். இப்போதும் அரசின் இத்தகைய தாக்குதலை வெற்றிபெற அனுமதித்திட மாட்டார்கள்.

எந்த ஒரு அமைப்புக்கும் அதன் ஊழியர்கள் அதன் சொத்துக்களாவார்கள். தன் ஊழியர்களைத் திறம்படவும் இலாபகரமாகவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அதன் நிர்வாகத்தின் பொறுப்பும் கடமையுமாகும். பிஎஸ்என்எல் சங்கங்கள் இது தொடர்பாக எண்ணற்ற யோசனைகளை நிர்வாகத்திற்கு அளித்திருக்கின்றன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அவற்றைப் பரிசீலித்திட நிர்வாகம் எந்த அக்கறையும் எடுத்துக்கொள்ளவில்லை. அதன் குறியெல்லாம் ஊழியர்களை எப்படிக் குறைப்பது என்பதுதான்.

(3) பிஎஸ்என்எல் நிறுவனத்திற்குத் தேவைமயான கட்டமைப்பு வசதிகளை மேலும் காலதாமதப்படுத்தாமல் நிறைவேற்று.
கட்டமைப்பு வசதிகளுக்கான ஒயர்களை பிரதான கேபிள்களுடன் இணைப்பது என்பது மிகவும் முக்கியமான பணியாகும். இதன்மூலம்தான் வாடிக்கையாளர்களுக்குத் தேவைமயான பிராண்ட்பாண்ட் இணைய வசதிகளை அளித்திட முடியும். பிஎஸ்என்எல் நிறுவனம் மட்டுமே லட்சக்கணக்கான கிலோ மீட்டர் தூரத்திற்கான காப்பர் ஒயர்களைப் பெற்றிருக்கிறது. வேறெந்தத் தனியார் கம்பெனிகளுக்கும் இத்தகைய வசதிகள் கிடையாது. இந்தத் தனியார் கம்பெனிகள், பிஎஸ்என்எல்/எம்டிஎன்ல் நிறுவனங்களுக்குச் சொந்தமான இந்த காப்பர் ஒயர்களைத் தங்களுக்குப் பகிர்ந்தளித்திட அரசு ஆவன செய்ய வேண்டும் என்று நிர்ப்பந்தித்து வருகின்றன.

பிஎஸ்என்எல் அமைப்புக்குச் சொந்தமான இத்தகைய கட்டமைப்பு வசதிகளைத் தனியார் கம்பெனிகளுக்குஒருபோதும் அனுமதியோம். இவ்வாறு அளித்திட்டோமானால், அது பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு பேரழிவினை ஏற்படுத்திடும்.

(4) அவுட்சோர்சிங் என்ற பெயரில் வேலைகளை தனியாரிடம் கொடுத்து வாங்காதே.
பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் மிகவும் திறமையான தொழில்நுட்ப ஊழியர்கள் இருந்தபோதிலும், நிர்வாகம் பல பணிகளை அவுட்சோர்சிங் முறையில் தனியாரிடம் கொடுத்து செய்து வருகிறது. இப்போது பிட்ரோடா குழு இதனைக் கடுமையாக அமல்படுத்திட வேண்டும் என்று பரிந்துரைத்திருக்கிறது. புதிய நிலைமைகளுக்கேற்ப ஊழியர்களுக்குப் பயிற்சி கொடுத்து அவர்கள் மூலம்தான் பணிகளைச் செய்திட வேண்டுமேயொழிய, இவ்வாறு அவுட்சோர்சிங் முறையில் வேலைகளைத் தனியாரிடம் தாரை வார்ப்பதல்ல.

(5) டெலிகாம் துறையிலிருந்து வந்துள்ள அனைத்து ஊழியர்களுக்கும் அதிகாரிகளுக்குமான பணிநிலைமைகளை முறைப்படுத்து.
மத்திய அரசின் டெலிகாம் துறை ஊழியர்களைக் கொண்டு பிஎஸ்என்எல் நிறுவனம் 2000 அக்டோபர்1 அன்று உருவானது. ஒருசிலரைத் தவிர பெரும்பகுதி அதிகாரிகளும், ஊழியர்களும் விருப்பம் அளித்து, பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைத்துக் கொள்ளப்பட்டார்கள். ஆனால், இந்தியன் டெலிகாம் சர்வீசஸ்-ஐச் சேர்ந்த குரூப் ‘ஏ’ அதிகாரிகள் சுமார் 1500 பேர் மட்டும் பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் தங்களை இணைத்துக் கொள்ள முன்வராமல், ‘டெபுடேசன் அடிப்படையில்’ பணியாற்றி வந்தார்கள். பத்தாண்டுகள் ஓடிவிட்டன. இன்னும் அவர்கள் பிரச்சனை தீர்க்கப்படாமல் நீடிக்கிறது.

ஐடிஎஸ் அதிகாரிகள் என்போர் பிஎஸ்என்ல் நிர்வாகத்தின் டிஜிஎம், ஜிஎம், சிஜிஎம் போன்ற உயர்மட்ட அதிகாரிகளாவார்கள். இவர்கள்தான் நிறுவனத்தை விரிவாக்கிடவும், வளர்த்திடவும் திட்டமிடுபவர்கள். அவற்றை அமல்படுத்திட உத்தரவாதப்படுத்துபவர்கள். ஆனால் அவர்கள் சொந்தப் பிரச்சனை தீர்க்கப்படாதிருப்பது, நிறுவனத்தின் வளர்ச்சியையை கடுமையாகப் பாதிக்கிறது.

இது தொடர்பாக பிஎஸ்என்எல் நிர்வாகமும் டெலிகாம் துறையும் எண்ணற்ற தடவைகள் வாக்குறுதிகள் அள்ளிவீசியுள்ள போதிலும் உருப்படியான நடவடிக்கைகள் எதுவும் இதுவரை நடைபெறவில்லை. 2009 டிசம்பர் 31க்கு முன் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுவிடும் என்று நிர்வாகத்தின் தரப்பில் உறுதியாக உறுதிமொழி கூறப்பட்டிருந்தது. ஆனால் அது நடைபெறாதது மட்டுமல்ல, நிலைமைகள் மேலும் மோசமாகியுள்ளன.
இப்பிரச்சனை மேலும் காலதாமதம் எதுவும் செய்யப்படாமல் உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டும். பிஎஸ்என்எல் விரிவாக்கம் மற்றும் வளர்ச்சித்ர திட்டம் வலுவான முறையில் அமல்படுத்தப்பட வேண்டும் என்று கோருகிறோம்.

(6) மொபைல் லைன்களை உடனடியாகக் கொள்முதல் செய்திடு.
பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு அளிக்கப்பட வேண்டிய மொபைல் லைன்கள்அளிக்கப்படவில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அரசாங்கம் ஏதேனும் சாக்குப்போக்கு சொல்லி இதனைச் செய்ய மறுக்கிறது. தனியார் டெலிகாம் கம்பெனிகளுக்கு 20 லட்சம் மொபைன் லைன்களுக்கு மேல் அளித்திடும் அதே சமயத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு பத்து லட்சம் இணைப்புகள் கூட அளிக்கத் தயாரில்லை. இதன்விளைவாக வணிக ரீதியாக கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனத்திற்குத் தேவையான மொபைல் லைன்களை போதுமான அளவில் அளித்திட அரசு உடனடியாக முன்வர வேண்டும் என்றும் அதன்மூலம் நிறுவனத்தின் நிதி நிலைமையை மேம்படுத்திட வேண்டும் என்றும் கோருகிறோம். இல்லையெனில் நிறுவனத்தின் வீழ்ச்சி தவிர்க்கமுடியாததாகிவிடும்.

(7) பிஎஸ்என்எல் இலிருந்து ஓய்வு பெற்றோருக்கு, ஓய்வூதியத்தை உத்தரவாதம் செய்.
பிஎஸ்என்எல் கார்பரேஷன் உருவான சமயத்தில், அதன் ஊழியர்களுக்கு மத்திய அரசின் டெலிகாம் ஊழியர்களுக்கு அளிக்கப்படும் ஓய்வூதியம் அளிக்கப்படும் என்று அரசு சார்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டடிது. அதன்படி பிஎஸ்என்எல் இலிருந்து ஓய்வு பெற்றோர் ஓய்வூதியம் பெற்று வந்தார்கள்.

மத்திய அரசு தன் ஊழியர்களுக்கு ஆறாவது ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் ஓய்வூதியத்தை 1.1.2006 முதல் மாற்றி அமைத்திருக்கிறது. ஊழியர்களும் அத்தேதியிலிருந்து நிலுவைத் தொகைகளைப் பெற்றிருகிகிறார்கள். பிஎஸ்என்எல்-இல் பணிபுரியும் அதிகாரிகள் 1.1.2007இலிருந்து திருத்தப்பட்ட ஊதியத்தைப் பெற்று வருகிறார்கள். ஊழியர்களுக்கும் ஊதியம் அத்தேதியிலிருந்து திருத்தப்பட்டிருக்கிறது. ஆனால் ஓய்வூதியம் மட்டும் திருத்தப்படவில்லை. இது மாபெரும் அநீதியாகும். இது சரிசெய்யப்பட வேண்டும் என்று கோருகிறோம்.

பிஎஸ்என்எல் நிறுவனம் நாட்டின் மாபெரும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று. மூன்று லட்சம் ஊழியர்களின் குடும்பங்களுக்கு இதுரு வாழ்வாதாரமாகத் திகழ்ந்து வருகிறது. போட்டி என்ற பெயரில் தனியார் துறையையும் பன்னாட்டு நிறுவனங்களையும் கொழுக்க வைத்திடவும் பிஎஸ்என்எல் நிறுவனத்தை அழித்திடவும் அரசுக்கோ அல்லது பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கோ எவ்வித உரிமையும் கிடையாது.

நாட்டின் நலனையும் நாட்டு மக்களின் நலனையும் நம் ஊழியர்களின் நலனையும் பாதுகாத்திட நாம் கடுமையாகப் போராட வேண்டிய தருணம் இது. இவ்வுயரிய குறிக்கோளுடன், பிஎஸ்என்எல் ஊழியர்கள்/அதிகாரிகள் ஏப்ரல் 20 அன்று களம் இறங்குகிறார்கள். பிஎஸ்என்எல் நிறுவனத்தைப் பாதுகாத்திட மக்களின் முழு ஆதரவினையும் கோருகிறோம்.

(தமிழில்: ச.வீரமணி)

No comments: