புதுடில்லி, ஜூலை 20-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழுக் கூட்டம் ஜூலை 19-20 தேதிகளில் டில்லியில் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவுகளை விளக்கி பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத் செய்தியாளர்களிடையே கூறியதாவது:
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசானது அணுசக்தி ஒப்பந்தத்தை மிகவும் ஜனநாயகவிரோதமான முறையில் நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொண்டதை அடுத்து, இந்த அரசுக்கு அளித்து வந்த ஆதரவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விலக்கிக் கொள்வது என அரசியல் தலைமைக்குழு எடுத்த முடிவை, கட்சியின் மத்தியக்குழு முழுமையாக ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அளித்துள்ளது . இந்த அரசு விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்திட நடவடிக்கைகள் எதுவும் எடுக்காததை மத்தியக்குழு கடுமையாகக் கண்டித்துள்ளது.
கடந்த மூன்றாண்டு காலமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு எதிராக உறுதியான போராட்டத்தை மேற்கொண்டு வந்துள்ளன. அந்தப் போராட்டம் முடிவடைந்து விடவில்லை. அது தொடரும்.அப்போராட்டத்தின் ஒரு முக்கிய கட்டம் வரும் ஜூலை 22 அன்று நடைபெறுகிறது. இந்த அரசு, நம்பிக்கை வாக்கு கோருகிறது. அன்றைய தினமே அரசு வீழ்த்தப்படும். இதனை அடுத்து அணுசக்தி ஒப்பந்தமும் முடிவுக்கு வந்துவிடும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு, அனைத்து மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயகக் கட்சிகளுக்கும் இந்த அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறது. மேலும், நம்பிக்கை வாக்கெடுப்பில் எப்படியும் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக கட்சித் தாவல்களை ஊக்குவித்தல் மற்றும் பல்வேறு கேடு கெட்ட, கேவலமான நடவடிக்கைகளில் காங்கிரசும், சமாஜ்வாதிக் கட்சியும் இறங்கியிருப்பதற்கு மத்தியக்குழு கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது. குற்றவழக்குகளில் சிக்கியுள்ளவர்கள் மீது வழக்கு முடிவுக்கு வந்து அவர்கள் தண்டிக்கப்படாமலிருந்தால், இந்நாட்டின் சட்டம் மற்றும் மரபுகளின்படி, அவர்கள் தண்டிக்கப்படும்வரை நிரபராதிகள் என்றுதான் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்ற அடிப்படையில் அவர்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் மன்மோகன் சிங் அரசு, குற்றவாளிகள் என்று தண்டிக்கப்பட்டு சிறையிலிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கூட வாக்களிக்க அனுமதித்திட மிகக் கேவலமான முறையில் முன்வந்திருக்கிறது. தங்கள் ஆட்சியை காப்பாற்றுவதற்காக அரசு இவ்வாறு இழி நடவடிக்கைகளில் இறங்கியிருப்பது மிகவும் வெட்கக்கேடானது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை எச்சரிக்கிறோம். நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றுப்போனபிறகும், இந்த ஒப்பந்தத்தை எப்படியாவது நிறைவேற்ற முயற்சித்தீர்களானால், அதற்கெதிராக இந்த நாடே வெகுண்டெழுந்து கலகம் செய்யும் என்று எச்சரிக்கிறோம். நீங்கள் ஏற்கனவே நாடாளுமன்றத்தைப் புறந்தள்ளிவிட்டு இதில் நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள். உங்களுக்கு இந்த நாட்டின் நலன் குறித்தோ, நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் குறித்தோ கவலையில்லை, உங்கள் கவலை எல்லாம் அமெரிக்க அதிபர் புஷ்சுக்கு அளித்த வாக்குறுதி குறித்துத்தான்.
ஐமுகூ அரசுக்கு எதிராகவும், அணுசக்தி ஒப்பந்தத்திற்கு எதிராகவும் பாஜக அல்லாத, காங்கிரஸ் அல்லாத கட்சிகள் ஒன்று சேர்ந்திருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு வரவேற்கிறது. ஐக்கிய தேசிய முற் போக்கு கூட்டணி, பகு ஜன் சமாஜ் கட்சி, மதச்சார்பற்ற ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் இடதுசாரிக் கட்சி கள் ஒன்றிணைந்து செயல்பட தீர்மானித்துள்ளன.நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்தபின், ஜூலை 23ஆம் தேதி மீண்டும் நாங்கள் சந்தித்து எதிர்கால நடவடிக்கை கள் குறித்து திட்டமிட இருக்கிறோம். இந்த அணியில் மேலும் மேலும் மதச்சார்பற்ற சக்திகளும் கட்சிகளும் இணையுமாறு அறைகூவி அழைக்கின்றோம்.
சமாஜ்வாதிக்கு கண்டனம்
சமாஜ்வாதிக் கட்சி எங்கள் கட்சி குறித்து தாக்குதல் தொடுத்திருப்பதாக அறிகிறேன். எனக்கு இன்னும் முழு விவரமும் கிடைக்கவில்லை. சமாஜ்வாதிக் கட்சியைப் பொறுத்தவரை, அது எங்களை இதுவரை மூன்று தடவை முதுகில் குத்தி இருக்கிறது. 1999இல் மதச்சார்பற்ற அரசாங்கம் உருவான சமயத்தில் அவ்வாறு உருவாகாமல் தடுத்தது சமாஜ்வாதிக் கட்சி. இரண்டாவதாக, ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றபோது, மக்கள் முன்னணி என்று அமைக்கப்பட்டபோது, அதன் சார்பாக தோழர் ஜோதிபாசு தலைவராகவும், முலாயம் சிங் யாதவ் கன்வீனராகவும் இருந்தார்கள். திடீரென்று அதனை கைகழுவிவிட்டு முலாயம் சிங், தேசிய ஜனநாயகக் கூட்டணி பக்கம் சென்றுவிட்டார்.மூன்றாவதாக, இப்போது நம்முடன் பேசிக்கொண்டிருந்தவர் திடீரென்று அரசுக்கு ஆதரவாக சாய்ந்துவிட்டார். கண்டிப்புகட்சியின் மேற்கு வங்க மாநில செயற்குழு உறுப்பினர் சுபாஷ் சக்ரவர்த்தி, கட்சி நிலைக்கு விரோதமாக அறிக்கைகள் வெளியிட்டிருப்பதை மத்தியக்குழு கண்டித்துள்ளது. அவர் கட்சியின் விதிமுறைகளுக்கு உட்பட்டுச் செயல்பட வேண்டும் என்று மத்தியக்குழு எச்சரித்துள்ளது.
இவ்வாறு பிரகாஷ்காரத் கூறினார்.
No comments:
Post a Comment