Thursday, May 2, 2019

மதவெறி விஷத்தைக் கக்கும் மோடியின் தேர்தல் பிரச்சாரம்



சீத்தாராம் யெச்சூரி
சுரண்டலுக்கு முடிவு கட்டுவோம் என்று உலகம் முழுதும் உள்ள உழைப்பாளி மக்கள் தங்கள் போராட்டங்களின்மூலம் ஒருவர்க்கொருவர் ஒருமைப்பாட்டை இம் மே தினத்தன்று தெரிவித்துக்கொண்டுள்ள அதே சமயத்தில், அத்தகைய மக்களின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் சீர்குலைத்திடும் விதத்தில் பாஜகவும் நரேந்திர மோடியும் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களில் மதவெறி விஷத்தை உமிழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
17ஆவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவுகளில் முதல் மூன்று கட்டங்கள் முடிவடைந்திருக்கின்றன. இவற்றில் மொத்தம் உள்ள 543 இடங்களில், 302 இடங்களுக்கான தேர்தல்கள் நடைபெற்றுள்ளதைப் பார்த்தோம். இந்தத் தொகுதிகளில் பாஜக தற்போது 113 இடங்களைப் பெற்றிருக்கிறது.
அடுத்து நான்கு கட்ட வாக்குப் பதிவுகளில் மீதம் உள்ள 241 இடங்களுக்குத் தேர்தல் நடந்து, வரும் மே 19உடன் நிறைவடைகின்றன. இவற்றில் பாஜக, தற்போது 161 இடங்களைப் பெற்றிருக்கிறது. அதாவது, மூன்றில் இரண்டு பங்கு இடங்கள். இந்த இடங்களைப் பாஜக-வினால் தக்கவைத்துக் கொள்ள முடியாது போகுமாயின், அதனால் அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்கான அவா அதற்கு நிறைவேறாது என்பது தெளிவாகத் தெரிகிறது. ஏனெனில், முதலில் நடைபெற்றுள்ள மூன்று கட்ட வாக்குப்பதிவுகளிலும், அதற்குத் தற்போது இருக்கும் இடங்களில் 50 சதவீதத்தைக் கூட தக்க வைத்துக்கொள்ள முடியாது என்பது அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது.
இதனைப் பாஜகவும் மிகவும் துல்லியமாக உணர்ந்துகொண்டிருப்பதன் காரணமாகத்தான், எப்படியாவது ஆட்சியைக் கைப்பற்றிவிட வேண்டும் என்பதற்காக, அடுத்த நான்கு கட்ட வாக்குப் பதிவுகளின்போதும், மக்கள் மத்தியில் மதவெறி விஷத்தைக் கக்கியாவது, மக்களின் வாக்குகளைப் பறித்திட வேண்டும் என்று தீர்மானித்திருக்கின்றனர். 2014இல் ஆட்சிக்கு வந்த பாஜக மக்களுக்கு அளித்த உறுதிமொழிகளில் எதையுமே நிறைவேற்றாது மக்களுக்குத் துரோகம் இழைத்துவிட்டதும், அதன் மிகவும் பயங்கரமான மற்றும் மிகவும் பரிதாபகரமான ஆட்சி பரிபாலனமும், இந்தியப் பொருளாதாரத்தையே முழுமையாக நாசப்படுத்தியுள்ளமையும், ரூபாய்  நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பின்மூலமும், ஜிஎஸ்டி கொண்டு வந்ததன் மூலமும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மக்களின் மீது பொருளாதாரச் சுமைகளை ஏற்றி வைத்திருப்பதும், மக்களுக்கு எதிராக, குறிப்பாக முஸ்லீம்கள் மற்றும் தலித்துகளுக்கு எதிராக வெறுப்பு மற்றும் வன்முறை வெறியாட்டங்களைக் கட்டவிழ்த்துவிட்டு மக்கள் மத்தியில் மிகவும் ஆழமான அளவிற்கு சகிப்பின்மையை உருவாக்கியிருப்பதும் இந்த மோடி  அரசாங்கத்திற்கு எதிராக மக்களிடையே கணிசமான அளவிற்கு எதிர்ப்பு உணர்வைக் கட்டி எழுப்பியிருக்கிறது.
ஆர்எஸ்எஸ்/பாஜக கும்பல் ஒரு பக்கத்தில் நம் ராணுவத்தினரின் வீரதீரச் செயல்களைக் கூறி மக்களின் வாக்குகளைக் கோருவதுடன் தங்களால் மட்டுமே பயங்கரவாதத்திற்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு எதிராகவும் போராட்டங்களை நடத்திட முடியும் என்று காட்டிக் கொண்டு வருகின்றன. (இது குறித்து ஏற்கனவே நாம் ஒரு கட்டுரை எழுதியுள்ளோம்.)
மற்றொரு பக்கத்தில் மக்கள் மத்தியில் மதவெறித் தீயைக் கிளறிவிட்டு அதன்மூலம் வாக்குகளைக் கவர்ந்திட முயல்கின்றன. இவர்கள் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையிலும்கூட இவர்கள், தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால்,  தங்களுடைய வெறிபிடித்த இந்துத்துவா நிகழ்ச்சிநிரல் அமல்படுத்தப்படும் என்று கூறியுள்ளனர். இவற்றில் அயோத்தியில் தாவாவுக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டுவதும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் காஷ்மீர் மக்களுக்கு சுயாட்சி வழங்குவது தொடர்பாக அரசமைப்புச் சட்டத்தில் உள்ள 370 மற்றம் 35-ஏ ஆகிய பிரிவுகளை ரத்து செய்தல் மற்றும் நாடு முழுதும் ஒரேமாதிரியான உரிமையியல் (சிவில்) சட்டம் கொண்டுவருதல் முதலானவையும் அடங்கும். மேலும் கூடுதலாக, நம் அரசமைப்புச் சட்டத்திற்கு முற்றிலும் விரோதமான முறையில்,  முஸ்லீம்களுக்குக் குடியுரிமையை மறுக்கும் விதத்தில் மத அடிப்படையில் மிகவும்  மோசமான முறையில் உருவாக்கப்பட்டுள்ள குடியுரிமை (திருத்தச்) சட்டமுன்வடிவையும் சட்டமாக நிறைவேற்றிவிடுவோம் என்றும் உறுதிமொழி அளித்திருக்கின்றனர்.
வெறிபிடித்த வெறுப்புப் பிரச்சாரம் மூலம் மக்களிடையே துவேஷத்தை உருவாக்கும் முயற்சி
இவ்வாறான இவர்களின் மதவெறி நிகழ்ச்சிநிரலுக்கிணங்க, தற்போது நரேந்திர மோடியின் தலைமையின்கீழ் பாஜகவின் அனைத்துத் தலைவர்களும் வெறுப்பை உமிழும் பேச்சுக்களில் ஈடுபட்டிருக்கின்றனர். இவ்வாறு இவர்கள் இந்து வகுப்புவாத வாக்குவங்கியை ஒருமுகப்படுத்த வேண்டும் என்கிற மிகவும் மட்டரகமான வாக்கு வங்கி அரசியலில் இறங்கியுள்ளனர். இவ்வாறு நரேந்திர மோடியும் பாஜக தலைவர்களும்  மிகவும் கேடுகெட்ட முறையில் மதவெறிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளபோதிலும், தேர்தல் ஆணையமோ நரேந்திர மோடிக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்க இதுவரையிலும் முன்வரவில்லை. இது இந்திய ஜனநாயக நலனுக்கான தீய அறிகுறியாகும்.
இந்துத்துவா வகுப்புவாத வாக்கு வங்கியை ஒருமுகப்படுத்துவதற்கான அவர்களின் முயற்சிகளின் ஒரு வெளிப்பாடுதான், பயங்கரவாத வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு தற்போது நோயாளியாக இருப்பதாகக் கூறி பிணையில் வந்துள்ள பிரக்யா சிங் தாகூர் என்கிற சாமியாரினி மத்தியப் பிரதேசம், போபால் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் சங்கதியாகும். இவ்வாறு இவர் தேர்வு செய்யப்பட்டிருப்பதை வெகுவாகப் பாராட்டியுள்ள நரேந்திர மோடி, அவரை, நம் நாகரிகப் பாரம்பர்யத்தின் அடையாளம் என்று புகழ்ந்திருக்கிறார்.
மோடியின் புகழுரையால் புளகாங்கிதம் அடைந்துள்ள சாமியாரினி பிரக்யா சிங் தாகூர், தன் மதவெறிப் பிரச்சாரத்தை மேற்கொள்வதற்கு இந்த அரசியல் மேடையையும் பயன்படுத்தத் துவங்கி விட்டார். ‘மகாராஷ்ட்ரா பயங்கரவாத எதிர்ப்புக்குழு’வின் தலைவராக இருந்த நேர்மையான மற்றும் துணிவு மிக்க ஐபிஎஸ் அதிகாரியான ஹேமந்த் கர்காரே அவர்களையே – அவர்தன் கடமையை ஆற்றிக்கொண்டிருந்தபோது பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டவரையே - மிகமோசமாகத் திட்டிக் கண்டிக்கும் அளவுக்கு இறங்கிவிட்டார். ஹேமந்த் கர்காரேதான் மாலேகான் வெடிகுண்டு விபத்து தொடர்பான வழக்கைப் புலனாய்வு செய்து, இவற்றினைச் செய்தது பிரக்யா சிங் தாகூர் தலைமையிலான இந்துத்துவா வெறியர்கள் என்பதை வெற்றிகரமாகக் கண்டுபிடித்து அவர்கள் மீது குற்ற அறிக்கை தாக்கல் செய்தவர்.  பாஜக சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் இந்த நபர், என்ன தைர்யம் இருந்தால் ‘ஓர் இந்து தேசத்தில்,’ ‘இந்து மதத் தலைவரான’ என்மீது ஹேமந்த் கர்காரே வழக்கு தொடர்வார்! நான் இட்ட ‘சாபம்’தான் அவர் இறப்பதற்குக் காரணம் என்று சொல்லக்கூடிய அளவிற்குத் தரம் தாழ்ந்த பேர்வழியாவார். 26/11 மும்பை தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதக் குழுவினருக்கு கர்காரே பிரதான குறியாக இருந்தவர் என்பதும், அவர்களால்தான் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பதும் இத்தகைய மதவெறியர்களுக்கு சம்பந்தம் இல்லாத விஷயங்களாக அமைந்துள்ளன.    
முன்னாள் மத்திய அரசு ஐஏஎஸ்/ஐபிஎஸ் அதிகாரிகள் சிலர், குடியரசுத் தலைவருக்கு இவர் தொடர்பாக ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார்கள். அதில், இவர் பாஜக வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டிருப்பதற்கும்,  அதிலும் குறிப்பாக, அவரைத் தேர்வு செய்திருப்பதை மிகவும் உற்சாகத்துடன்  நாட்டின் பிரதமரே வரவேற்றிருப்பதற்கும் தங்கள் அவநம்பிக்கையையும், அதிர்ச்சியையும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அவர்கள் மேலும் சக குடிமக்களுக்கு, நாட்டின் மக்கள் மத்தியில் வெறுப்பு மற்றும் பிரிவினை சூழ்நிலை உருவாக்கப்பட்டுப் பரப்பப்பட்டு வருவதை நிராகரித்திட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். மேலும் அவர்கள், நம் நாட்டில் உள்ள அனைத்து மக்களும் அனைத்து மதத்தினரும் தங்கள் மத வேறுபாடுகளை மறந்து, ஒன்றுபட்டு நின்று, நமக்கு நாமேதான் நம் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிக் கொண்டோம் என்றும் அதனை நாம் அனைவரும் கொண்டாட வேண்டும், என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்கள். இவ்வாறான தங்கள் கடிதத்திற்கு இவர்கள் அளித்துள்ள தலைப்பு, ‘நம் பாரம்பர்யம், பயங்கரவாதத்தால் உருவானது அல்ல,’ என்று குறிப்பிட்டிருப்பதுடன் மோடி மீது அவரது செயவ்களுக்காக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியிருக்கிறார்கள்.
நரேந்திர மோடி, மேலும் வியப்பூட்டும் விதத்தில் ஒரு செய்தி சொல்லியிருக்கிறார். என்ன தெரியுமா? இந்துக்கள் என்பவர்கள் எந்தக்காலத்திலுமே வன்முறையாளர்களாக இருந்ததில்லையாம்! தான் பிரதமர் பதவியில் தொடர்ந்து ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும் என்பதற்காக, மோடி இந்தியாவின் வரலாறு என்பது மிகக் கொடூரமான யுத்தங்களும் போர்க் களங்களும் நிறைந்தவை என்பதை அழிக்கப் பார்க்கிறார்.  ஆர்எஸ்எஸ் பிரச்சாரகரான மோடி, போதனை செய்து வந்த ராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகிய இரு புராணங்களுமே அல்லது இதிகாசங்களுமே வன்முறையுடன் நிகழ்ந்த யுத்தங்களும் மோதல்களும் நிறைந்தவை என்பதை எப்படி மறந்தார் என்பதே ஆச்சர்யமாகும். நம்முடைய வரலாற்றிற்கு தற்போது ஆதாரமாக இருப்பதே இந்த இரு இதிகாசங்களும் மட்டும்தான். இந்திய வரலாற்றில் ‘மௌரியப்’ பேரரசின் முதல் மாமன்னராகத் திகழ்ந்த அசோகர், கலிங்கப் போரின்போது ஏற்பட்ட ரத்தக் களரியைக் கண்டு மனம் வெதும்பி, பின்னர் புத்தமதத்தைத் தழுவியதை நினைவு கூர்க.   இந்துயிசத்தைத் துறந்து, புத்திசத்தைத் தழுவிய பின்னர்தான் அசோகர், சகிப்புத்தன்மை, பிறரிடம் பரிவு காட்டுதல் மற்றும் பரஸ்பரம் மக்களிடையே அமைதி மற்றும் நல்லிணக்கத்துடன் வாழ்தல் ஆகியவற்றின் மூலமாக  வாழ்க்கையின் உன்னத லட்சியத்தைக் கண்டார்.   தன்னுடைய இந்தச் செய்தியை ஸ்தூபிகளில் செதுக்கப்பட்ட வெட்டெழுத்துக்கள் மூலமாக உலகம் முழுதும் கொண்டு சென்றார். அந்த ஸ்தூபிகளில் உள்ள வெட்டெழுத்துக்களில், நான், மக்களை படைகளைக்கொண்டு கட்டாயப்படுத்தி வெல்வதைவிட, அவர்களிடையே அன்பு செலுத்துவதன் மூலமாக (தர்மத்தின் மூலமாக) அவர்களை வெல்ல முடியும் என்று நம்புகிறேன்,என்று செதுக்கப்பட்டிருக்கின்றன. உண்மையில், அசோகரின் அடையாளமாக விளங்கும் சக்கரம் இன்றையதினம் நம் மூவர்ணத் தேசியக் கொடியில்வ பெருமைமிகு இடத்தைப் பெற்றிருக்கிறது. அசோகரின் ஸ்தூபிகளில் உள்ள நான்கு சிங்கங்கள்தான் இந்தியாவின் அதிகாரபூர்வ அடையாளமாகும். அவருடைய ஒரு ஸ்தூபியில் உள்ள பொன்மொழிகளில் ஒன்று, ஒருவன் தன் இனத்தின் மீதான அர்ப்பணிப்பின் காரணமாக, அதனைப் பெருமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன், அதனை மதிப்பதும், அதே சமயத்தில் இதர இனங்களைக் கண்டிப்பதும் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவானேயானால் அவன் தன் சொந்த இனத்திற்கே மிக அதிகமான அளவில் ஊறு விளைவிக்கிறான்,என்று கூறுகிறது.
ஆனால் ஆர்எஸ்எஸ்/பாஜக கும்பலின் இன்றைய நடவடிக்கைகள் அனைத்தும் அசோகர் ஸ்தூபிகளில் பொறித்து வைத்துள்ள பொன்மொழிகளுக்கு முற்றிலும் எதிரானவைகளாக இருந்து வருகின்றன.
அனைத்து அரசியலையும் இந்துமயமாக்குங்கள், இந்துஸ்தானை ராணுவமயமாக்குங்கள்” - “HINDUISE ALL POLITICS, MILITARISE HINDUDOM”
இந்துக்கள் பயங்கரவாதிகளாக இருக்க முடியாது என இப்போது மோடி அடக்கி வாசித்தாலும், இந்துக்களுக்கு ராணுவப் பயிற்சி கொடுக்கப்பட்டு வருவதென்பதற்கும் ஒரு நீண்ட வரலாறு உண்டு. வினாயக் தாமோதர் சாவர்க்கர்தான் இந்துத்துவா என்னும் சொல்லை உருவாக்கியவர். ஒரு தத்துவார்த்த அரசியல் கொள்கைத்திட்டத்திற்கான குணத்தையும் அதற்கு அவர் அளித்திட்டார். இவ்வாறு இவர் அளித்திட்ட இந்துத்துவா கொள்கைக்கும் இந்து மதத்திற்கும் எவ்விதச் சம்பந்தமும் கிடையாது.  இதனை எய்துவதற்கு இவர் முன்வைத்த முழக்கம்தான், அனைத்து அரசியலையும் இந்துமயமாக்குங்கள், இந்துஸ்தானை ராணுவமயமாக்குங்கள்(“HINDUISE ALL POLITICS, MILITARISE HINDUDOM”) என்பதாகும்.   இதனால் உத்வேகம் பெற்றவரும், ஆர்எஸ்எஸ் இயக்க நிறுவனர் கே.பி. ஹெக்டேவார் அவர்களின் மூளையாகச் செயல்பட்டவருமான பி.எஸ். மூஞ்சே என்பவர், பாசிஸ்ட் சர்வாதிகாரி பெனிடோ முசோலினியை சந்திப்பதற்காக, இத்தாலிக்குப் பயணம் செய்தார். இவர்களிடையே சந்திப்பு 1931 மார்ச் 19 அன்று நடைபெற்றது. மூஞ்சே தன்னுடைய சொந்த நாட்குறிப்பில்  இதனை 1931 மார்ச் 20 என்று குறிப்பிட்டிருக்கிறார். இவர் எழுதியுள்ள தன்னுடைய நாட்குறிப்பில் இத்தாலியப் பாசிசம் இளைஞர்களுக்கு ராணுவப் பயிற்சி அளிக்கும் விதம் தன்னை மிகவும் கவர்ந்துவிட்டதாகவும், தன்னை மிகவும் ஈர்த்துவிட்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். இந்தியா திரும்பிய பின்னர், மூஞ்சே, 1935இல் நாசிக்கில் மத்திய இந்து ராணுவக் கல்வி சங்கம் (Central Hindu Military Education Society) என்ற ஒன்றை நிறுவினார். இதுதான் 1937இல் நிறுவப்பட்ட போன்சாலா ராணுவப் பள்ளிக்கு முன்னோடியாகும்.  இவை  அனைத்தும் பயங்கரவாதம் தொடர்பான ரேடாரின் மூலம் புலனாய்வு செய்யப்பட்டவைகளாகும். ஆர்எஸ்எஸ்-இன் குருவாகத் திகழும் கோல்வால்கர், 1939இல் நாசி பாசிசத்தின்கீழ்  ஹிட்லர் யூதர்களைக் களையெடுத்த நடவடிக்கைகளைக் கண்டு களிபேருவகை கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் தன் சிஷ்யர்களுக்கு, இந்துஸ்தானில் உள்ள நாம் கற்றுக் கொள்ளவும், ஆதாயம் அடையவும் இவை நமக்கு நல்ல பாடங்களாக  அமைந்திடும், என்று கூறியிருக்கிறார். இதன்பின்னர் வெகு ஆண்டுகள் கழித்து, அவர் 1970இல், பொதுவாகக் கூறுவதென்றால்6, தீய சக்திகள் (இங்கே இந்துக்கள் அல்லாதவர்கள் என்று திருத்தி வாசிக்கவும்) நல்ல விதமாக, இனிய மொழியில் கூறினால் புரிந்துகொள்ள மாட்டார்கள்.  அவர்களை வன்முறை மூலமாக மட்டுமே கட்டுப்படுத்த முடியும், என்று மேலும் கூறியிருக்கிறார்.
இந்துத்துவா மீது பாசிஸ்ட் தத்துவார்த்த செல்வாக்குகள்
2000, ஜனவரி 22இல் தேதியிட்ட எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி இதழில் வெளியாகியிருந்த ஓர் ஆய்வுக்கட்டுரையில், மர்சியா கசோலரி (Marzia Casolari),  இந்துத்துவா குழுக்களின் மீது பாசிஸ்ட் தத்துவார்த்த செல்வாக்குகள் இருப்பதை சான்றாவணங்களின் மூலமாக நிறுவியிருக்கிறார்- இந்துத்துவாவின் தத்துவார்த்தத் திட்டங்களையும் கொள்கைகளையும் இத்தாலியப் பாசிசமும், ஜெர்மன் நாசிசமும் வடிவமைத்திருக்கின்றன என்று அக்கட்டுரையாளர் கூறுகிறார். மேலும் அவர், 1920இன் தொடக்கத்தில் துவங்கி, இரண்டாம் உலகப் போர் வரையிலும், இந்து தேசியவாதிகள், பாசிஸ்ட் இத்தாலியின் அரசியல் எதார்த்த நிலைமைமையும் அதன் பின்னர் நாசி ஜெர்மனியையும் தங்களுக்கு உத்வேகம் ஊட்டுபவைகளாக விளங்குவதைப் பார்த்தார்கள், என்றும் கூறுகிறார். இந்துத்துவா சித்தாந்தத்தில் பாசிஸ்ட் செல்வாக்கு எந்த அளவிற்கு ஊடுருவியிருக்கிறது என்றால், அது, நாட்டில் வாழ்கின்ற இதர இனத்தினரையும், மதத்தினரையும் தங்கள் எதிரிகளாக மாற்றக்கூடிய அளவிற்கு ஆழமாக வேரூன்றியிருக்கிறது. ‘உள்ளார்ந்த எதிரி’ என்கிற சொற்றொடர் ஏன்கனவே சாவர்க்கரின் இந்துத்துவா சித்தாந்தத்திலும் ஒளிந்திருக்கிறது என்பது உண்மைதான் என்ற போதிலும், அதனைத் தொடர்ந்து ஜெர்மன் இனவெறிக் கொள்கையும், ஜெர்மனியின் யூதர்கள் பிரச்சனையை இந்தியாவில் உள்ள முஸ்லீம்களின் பிரச்சனைகளோடு ஒப்பிட்டு, பாசிஸ்ட் தத்துவார்த்தத்தின் அடிப்படையில் மிகவும் துல்லியமானமுறையில். அந்நாட்டின் பாசிசத்தைத் இந்தியாவிற்கேற்ப மாற்றி, ‘உள்ளார்ந்த எதிரி’ கருத்தாக்கத்தை வளர்த்தெடுக்க கொண்டு சென்றுள்ளன.
ஆர்எஸ்எஸ்/பாஜகவின் தத்துவார்த்தப் பின்புலம் என்பது முசோலியின் பாசிசம் மற்றும் ஹிட்லரின் நாசிசம் ஆகியவற்றுடன் மிகவும் ஆழமானமுறையில் பின்னிப்பிணைந்தது என்று உரிய சான்றாவணங்கள் மூலமாக, இவ்வாறு மிகவும் ஆணித்தரமான முறையில் நிறுவப்பட்டிருக்கிறது. இந்து தர்ம சாஸ்திரங்களின் அடிப்படையில் எதிர்கால இந்தியாவைக் கட்டி எழுப்பிட இவ்வாறு இந்துத்துவா தத்துவார்த்த அடிப்படை அளிக்கப்பட்டுள்ளபோதிலும் அத்தகைய இந்தியாவை உருவாக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மூஞ்சே சொல்வது என்ன தெரியுமா?
அந்தக் காலத்து சிவாஜி போன்ற சர்வாதிகாரி அல்லது இந்தக்காலத்து முசோலினி அல்லது ஹிட்லர் போன்று சர்வாதிகாரிகள் இல்லாமல் இத்தகைய தத்துவார்த்த அடிப்படையில் நாம் நம் சொந்த இந்து ராஷ்ட்ரத்தை அமைத்திட முடியாது.  … ஆனால் இவ்வாறு கூறுவதால் அத்தகைய சர்வாதிகாரிகள் உருவாகும்வரை நாம் நம் கைகளைக் கட்டிக்கொண்டு வெறுமனே அமர்ந்திருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. நாம் அதற்கானதொரு திட்டத்தை அறிவியல் அடிப்படையில் உருவாக்கிட வேண்டும். அதற்கான பிரச்சாரத்தை வலுவாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இத்தாலியில் ‘பாசிஸ்ட்டுகள்’ என்ன செய்தார்களோ, ஜெர்மனியில் ‘நாஜிக்கள்’ என்ன செய்தார்களோ அவற்றை எதிர்கால இந்தியாவில் சங்கிகள் செய்வார்கள் என்று நம்புவதாக. மூஞ்சே கூறியிருப்பது என்பது மிகையான ஒன்று அல்ல.
மூஞ்சே, 1934இல் போன்ஸ்லா ராணுவப் பள்ளி என்னும் தன்னுடைய சொந்த நிறுவனத்தை அமைப்பதற்கான வேலையைத் துவக்கினார். இதற்காக, அதே ஆண்டில், மத்திய இந்து ராணுவக் கல்விச் சங்கத்தையும் அமைத்தார்.  அதன் நோக்கம், இந்துக்கள் மத்தியில் ராணுவரீதியிலான புத்துயிராக்கத்தைக் கொண்டுவர வேண்டும் மற்றும் இந்து இளைஞர்களை இந்து நாட்டைப் பாதுகாப்பதற்கான முறையில் வலுவானவர்களாக உருவாக்க வேண்டும் என்பதேயாகும்.
அப்போது இந்து மகா சபையில் தலைவராக இருந்த சாவர்க்கரும் ஹிட்லரின் யூத எதிர்ப்புக் கொள்கையையே இந்துத்துவாவின் கொள்கைக்கு வழிகாட்டியாக எடுத்துக்கொண்டிருப்பதையும் கட்டுரையாளர் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டுகிறார். சாவர்க்கர் ஆற்றிய சொற்பொழிவுகள் அனைத்திலும் ஹிட்லரின் யூத எதிர்ப்புக் கொள்கையை ஆதரித்திருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ள கட்டுரையாளர் இந்தியாவில் முஸ்லீம் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கான வழிமுறைகளை 1938 அக்டோபர் 14 அன்ற அவர் கீழ்க்கண்டவாறு பரிந்துரைத்திருப்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.
ஒரு தேசம், அங்கே பெரும்பாலானவர்களாக வாழ்பவர்களால் அமைக்கப்படுகிறது. ஜெர்மனியில் யூதர்கள் என்ன செய்தார்கள்? அவர்கள் சிறுபான்மையினராக இருந்ததால் ஜெர்மனியிலிருந்து விரட்டியடிக்கப்பட்டார்கள். ஜெர்மனியில் ஜெர்மானியர்களின் இயக்கம் தேசிய இயக்கமாக இருக்கிறது. ஆனால் அதுவே அங்கே வாழ்ந்த யூதர்களுக்கு ஒரு வகுப்புவாத இயக்கமாகும்.  
பின்னர் சாவர்க்கர் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்: தேசிய இனம் என்பது பெரும்பகுதியான பூகோளப் பகுதியை மட்டும் சார்ந்திருக்கவில்லை. அவர்களின் சிந்தனை, மதம், மொழி மற்றும் கலாச்சாரத்திலும் ஒற்றுமை இருந்திட வேண்டும். இதன் காரணமாகத்தான் ஜெர்மானியர்களும், யூதர்களும் ஒரே இடத்தில் வசித்த போதிலும் ஒரே நாட்டினராக – ஒரே தேசிய இனத்தினராக -   கருத முடியவில்லை.
பாஜகவைத் தோற்கடிக்க வேண்டியது தலையாயக் கடமையாகும்
நரேந்திர மோடியும் அவர் தற்போது அவிழ்த்துவிடும் பொய் மூட்டைகளும் எங்கிருந்து உத்வேகம் பெற்றிருக்கின்றன என்பதற்கு இவற்றைவிட வேறென்ன ஆதாரங்கள் தேவை? தேர்தல் ஆதாயத்திற்காக ‘இந்துக்களின்’ பெயரால் இந்துத்துவா பயங்கரவாதிகளைப் பாதுகாப்பது என்பது மிகவும் மோசமான வாக்கு வங்கி அரசியலை வெளிப்படுத்தும் மாக்கியவெல்லியின் சூழ்ச்சியாகும். பாரதம் என்கிற இந்தியாவைப் பாதுகாத்திட இவர்கள் தோற்கடிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.
தமிழில்: ச.வீரமணி

No comments: