Sunday, May 5, 2019

ஆர்எஸ்எஸ், இந்தியாவின் கடந்த காலத்துடன் யுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறது -ஏ.ஜி. நூரணி



ஆர்எஸ்எஸ் இயக்கம் விரும்புவதெல்லாம், இப்போதுள்ள மதச்சார்பற்ற இந்தியாவையும், காந்தி-நேரு அரசையும் தகர்த்திட வேண்டும் என்பதும் அதற்குப் பதிலாக இந்து ராஷ்ட்ரத்தை நிறுவிட வேண்டும் என்பதுமேயாகும்.
ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங் என்கிற ஆர்எஸ்எஸ் இயக்கம் இன்றைய தினம் இந்தியாவில் மிகவும் வலுவானதோர் அமைப்பாக இருக்கிறது என்பதில் எவ்விதச் சந்தேகமுமில்லை. ... அதன் முன்னணி பிரச்சாரகராக இருந்த நரேந்திர மோடிதான் இப்போது நாட்டின் பிரதமர். அதன் முத்திரை நாட்டின் பல துறைகளிலும் நன்குதெரிகிறது, என்று ஆர்எஸ்எஸ்:இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல் (RSS:A Menace to India) என்னும் தன்னுடைய நூலில்  நாட்டின் அரசமைப்புச்சட்ட வல்லுநரும் மற்றும் அரசியல் பகுத்தாய்நருமான ஏ.ஜி. நூரணி எழுதியிருக்கிறார்.

ஆர்எஸ்எஸ், இந்தியாவின் கடந்த காலத்துடன் யுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறது. இந்திய அரசை உருவாக்கி, கட்டி எழுப்பிய மாபெரும் சிற்பிகளான அசோகர், அக்பர் மற்றும் ஜவஹர்லால் நேருவை சிறுமைப்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்து வலதுசாரி வகுப்புவாதம் உமிழ்ந்திடும் விஷம், மிகவும் அபாயகரமான முறையில் பரவியிருக்கிறது,என்று அந்நூலின் அறிமுகவுரையில் கூறியுள்ள ஏ.ஜி. நூரணி, இவ்வாறு விஷத்தைப் பரப்பிக்கொண்டிருக்கும் இந்த சக்திகள் வெல்லமுடியாதவையல்ல, என்றும் சுட்டிக்காட்டி இருக்கிறார். அவற்றை வெல்ல முடியும். அதனை எதிர்ப்பவர்கள் அனைவரும் அனைத்து மட்டங்களிலும் அது விடுக்கும் சவால்களை உறுதியுடன் எதிர்த்துநிற்கத் தயாராக இருந்தார்கள் என்றால் நிச்சயமாக அதனை வெல்ல முடியும், என்கிறார்.
அந்நூலிலிருந்து சாராம்சங்கள் சில:
காவி ஆட்சியாளர்களின் ரசனைக்கு முதலில் பலியானது, இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கவுன்சில் (Indian Council of Historical Research) நிறுவனமாகும். 2015 மார்ச் மாதத்தில் சங்கிகளின் ரசனைக்கேற்ப இது மாற்றி அமைக்கப்பட்டது.
இந்து ராஷ்ட்ரம்
ஆர்எஸ்எஸ் தங்களுக்குச் சரியான நேரம் வந்திருப்பதாக நம்புகிறது. ஆர்எஸ்எஸ் தலைவரான மோகன் பகவத், 2015 பிப்ரவரி 9 அன்று, இப்போது நமக்கு சாதகமான நேரம், என்று கூறினார். அவர் அப்போது மேலும், இந்துயிசம் மட்டுமே உலகில் உள்ள ஒரே சித்தாந்தம். இது அனைவரையும் ஒருங்கிணைத்துக் கொண்டுவருகிறது. ... இந்துஸ்தான் என்றால் இந்து ராஷ்ட்ரம்தான். இது ஓர் உண்மை. இந்த சிந்தனையுடன் நாம் மேலும் முன்னேறிச் சென்றுகொண்டிருக்கிறோம். இந்த தேசத்தை வல்லமை பொருந்தியமாக மாற்றிட அனைத்து இந்துக்களும் ஒன்றுபட வேண்டும். நம் தேசம் வல்லமையுள்ளதாக மாறும்போது அது உலகம் முழுவதற்கும் பயனளித்திடும், என்றும் உறுதிபடக் கூறியிருக்கிறார்.
இவர்கள் இதுநாள்வரையிலும் ‘இந்து இந்தியா, உலகத்தின் ஆசானாக (விஸ்வகுரு அல்லது ஜகத்குரு) இருந்திடும்’ என்றுதான் சொல்லிவந்தார்கள். அதனுடன் ஒப்பிடும்போது மேற்கண்ட கூற்று என்பது மிதமான ஒன்றுதான். உலகமே ஆர்எஸ்எஸ் தங்களை வழிநடத்திச் செல்ல வேண்டும் என்று விரும்புகிறதாம்.
ஆர்எஸ்எஸ்-இன் வேலை இந்துக்களை ஒற்றுமைப்படுத்துவது. இதனை, வெறும் பேச்சுக்களால் மட்டும் செய்துவிட முடியாது. நமக்கு நேரம் வந்து விட்டது. ஒட்டுமொத்த சமூகமும், ஆர்எஸ்எஸ் இயக்கம் நமக்குத் தேவை என்று கருதுகிறது. அவர்களிடம் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. இவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி வைக்கக்கூடிய விதத்தில் ஆர்எஸ்எஸ் வளர வேண்டும். நாம் இந்து சமூகத்தை ஒன்றுபடுத்த வேண்டும், அச்சமற்றதாகவும், சுயசார்பு உடையதாகவும், சுயநலமற்றதாகவும் ஆக்க வேண்டும்.
மதச்சார்பற்ற அரசை அகற்றிட வேண்டும்
ஆர்எஸ்எஸ் இயக்கம், மோடியின் மூன்று துணிகர முயற்சிகள் காரணமாகவே அவர் பிரதமராக இருப்பதில் மகிழ்ச்சி கொண்டிருக்கிறது. முதலாவதாக, பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்தே தாதாபாய் நௌரோஜி, பத்ருதீன் தியாப்ஜி, சுரேந்திரநாத் பானர்ஜி போன்ற விடுதலைப் போராட்ட தலைவர்களால் நாட்டு மக்கள் மத்தியில் வேரூன்றச் செய்யப்பட்ட மதச்சார்பற்ற அரசு என்கிற கண்ணோட்டத்தை, மக்களிடமிருந்து பறித்திட அவர் மேற்கொண்டுவரும் முயற்சி. 1931இல் காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில் தலைமை உரை நிகழ்த்திய  வல்லபாய் பட்டேலும், 1940இல் அதேபோன்று காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில் தலைமையுரை நிகழ்த்திய மௌலானா ஆசாத்தும்,  சுதந்திர இந்தியா மதச்சார்பற்ற அரசாகும் என்று தெளிவுபடத் தெரிவித்திருந்தார்கள். மௌலானா ஆசாத்தின் உரை, அந்தச் சமயத்தில் முஸ்லீம் லீக் நாட்டைப் பிளவு படுத்த வேண்டும் என்று கூக்குரலிட்டுக்கொண்டிருந்ததற்கு எதிரானதாக அமைந்திருந்தது.  அவர் பேசியதைத்தொடர்ந்து, மாநாட்டில் ஏற்பட்ட சலசலப்பை ஜவஹர்லால் நேரு உறுதியுடன் எதிர்கொண்டார். அதிலிருந்து, இத்தகைய துயரார்ந்த நிலைமையை ஜவஹர்லால் நேரு மிகவும் சிறப்பாகக் கையாண்டு, மதச்சார்பற்ற அரசின் பிரதிநிதியாக இருப்பதற்கு இவரே பொருத்தமானவர் என்று எல்லோரால் ஏற்றுக்கொள்ளத்தக்க விதத்தில் உருவானார்.
இரண்டாவதாக, அசோகர் மற்றும் அக்பருக்கு அடுத்ததாக, ஜவஹர்லால் நேருதான் இந்திய அரசைக் கட்டி எழுப்பிய மாபெரும் தலைவராவார். நாட்டு மக்களின் அன்பையும் நம்பிக்கையையும் மட்டுமல்ல, உலகத்தின் நேசபூர்வமான நட்பையும் பெற்றிருந்தார். அரசைப் பொறுத்தவரை இவரது கருத்தாக்கம் என்பது மதச்சார்பின்மை, சகிப்புத்தன்மை மற்றும் பன்முக சமூகத்தின் மீதான ஜனநாயக அரசு என்கிற அடிப்படையில் அமைந்திருந்தது. இது, ஆர்எஸ்எஸ்-இன் சித்தாந்தத்திற்கும் அதன் அரசியல் சந்ததியினருக்கும் நேரிடையாகவே முரண்பாட்ட ஒன்றாகும். எனவே, நேரு, ஆர்எஸ்எஸ் பேர்வழிகளை முழுமூச்சுடன் எதிர்த்தார். ஆர்எஸ்எஸ் எப்போதும் வெறுத்த ஒரு காங்கிரஸ்காரன் யார் என்றால், அது ஜவஹர்லால் நேருதான். நாடு பிளவுண்டபோது,  இந்தியாவை ஓர் இந்து நாடாக நிறுவிட வேண்டும் என்றுதான் ஆர்எஸ்எஸ் விரும்பியது. இதனை காந்தி, நேரு, பட்டேல் ஆகியோர் எதிர்த்தார்கள். நாடு சுதந்திரம் பெற்றபின்பு நாட்டை மதச்சார்பற்ற நாடாக மிளிரச் செய்வதில் நேரு பெரும் பங்கு வகித்தார். மக்கள் மத்தியில் விடாது தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு, அவர்களைப் பக்குவப்படுத்தியதன் மூலமும் மதச்சார்பற்ற அடிப்படையிலான நிறுவனங்களை உருவாக்கியதன் மூலமும் அவர் இதனை வெற்றிகரமாக செய்து வந்தார். இந்திய மக்களிடையே காணப்பட்ட பல்வேறு வேற்றுமைக் கலாச்சாரங்களையும் மதித்து, அவர்களிடையே ஒற்றுமையைக் கொண்டுவருவதில் வெற்றி பெற்றார். 1979 வரையில் அன்றைய ஜனசங்க தலைவர்கள் நேருவின் இத்தகைய கொள்கையை ஏற்றுக்கொண்டவர்கள்தான். ஆனால், ஒருசில ஆண்டுகளுக்குப் பின்னர், தங்களின் பழைய நிலைக்கே திரும்பினர்.
குஜராத் மாடல்
ஆர்எஸ்எஸ் இயக்கமும் அதன் அரசியல் அங்கமான பாஜகவும் தற்போதைய மதச்சார்பற்ற அரசைத் தகர்த்தெறிந்துவிட்டு, அந்த இடத்தில் பாசிஸ்ட் ‘தலைவர்’ கொள்கை அடிப்படையில் ஒரு வெறிபிடித்த இந்துத்துவா அரசை நிறுவிட விரும்புகின்றன.    மக்கள் மத்தியில் நிலவுகின்ற மத சகிப்புத்தன்மையை ஒழித்துக் கட்டுவதன் மூலம் தாங்கள் விரும்பும் இந்து சமூகத்தை நிலைநிறுத்திட முடியும் என்று அது நினைக்கிறது. இதைத்தான் குஜராத்தில் 2002 முஸ்லீம்கள் மீதான படுகொலைகள் மேற்கொள்ளப்படுவதற்கு முன்பும், பின்பும் செய்தார்கள். இத்தகைய ‘குஜராத் மாடலை’ ஆர்எஸ்எஸ்-உம் அதன் பிரச்சாரகரான மோடியும் மத்தியிலும் செய்ய வேண்டும் என்று முயற்சிக்கிறார்கள். இத்தகைய இவர்களின் வெறித்தனத்தால் இந்தியாவின் ஜனநாயகமும் மதச்சார்பின்மையும் பாதிப்புக்கு உள்ளாகும் என்பதோடு மட்டுமல்லாமல், இந்தியா மீது உலக மக்கள் இதுநாள்வரை காட்டிவந்த அன்பும் ஆதரவும் மற்றும் பாசமும் நேசமும் கூட இல்லாது அழிந்துவிடும்.
ஆர்எஸ்எஸ், இந்தியாவில் வாழும் சிறுபான்மையினருக்கு மட்டுமே அச்சுறுத்தலான மற்றும் ஆபத்தான ஒன்று என்று சொல்ல முடியாது. மாறாக அது ஒட்டுமொத்த மக்களுக்குமே அச்சுறுத்தல் மற்றும் ஆபத்தான ஒன்றாகும்.
ஆர்எஸ்எஸ்-இன் இரண்டாவது பணி, நாட்டு மக்கள் மத்தியில் இந்துத்துவா வெறியை ஏற்க வைப்பதற்காக அவர்களை மூளைச் சலவை செய்த பின்னர், அவர்களிடம் தற்போதுள்ள காந்தி – நேரு அரசை அடித்து நொறுக்குவதுமாகும். 1989 தேர்தல்கள் நடந்துமுடிந்தவுடனேயே, ஜஸ்வந்த் சிங் மதச்சார்பற்ற சிற்பிகளின் சிலைகளை உடைத்தெறிவதற்கான பிரச்சாரத்தில் இறங்கினார். இத்தகைய இழிவான பிரச்சாரத்தில் மோடியும் இறங்கியிருந்தார்.
இறுதியாக, ஆர்எஸ்எஸ் சிறுபான்மையினரை, அதிலும் குறிப்பாக முஸ்லீம்களையும், கிறித்தவர்களையும் சிறுபான்மையினருக்கான அந்தஸ்து எதையும் பெறுவதிலிருந்து முற்றிலுமாக ஒழித்துக்கட்டவும், அரசியல்ரீதியாக எவ்விதமான மதிப்பற்றவர்களாகவும் இல்லாது செய்துவிட வேண்டும் என்றும் விரும்புகிறது. இந்து வாக்கு வங்கியை திரட்டிடுக, முஸ்லீம் வாக்குவங்கிக்காக முகத்துதி செய்வோரைக் கண்டித்திடுக என்று முழக்கங்கள் எழுப்பி, காங்கிரஸ் உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒழித்துக்கட்டிவிட வேண்டும், அதில் உள்ள இந்துக்கள் அனைவரையும் தமதாக்கிக் கொள்ள வேண்டும் என்பதே இவர்கள் குறிக்கோளாகும்.
2010 மார்ச் 10 அன்று சுதர்சன் ஆர்எஸ்எஸ் தலைவரானார். அப்போது அவர், பிரதமர் சுதேசிப் பொருள்களில் நம்பிக்கையுள்ள பொருளாதார ஆலோசகர்களைக் கொண்டுவர வேண்டும், என்று அறிவுறுத்தினார். மேலும், தற்போதைய அரசமைப்புச்சட்டத்தை, இந்தியாவின் சமுதாயப் பண்புகள் மற்றும் மக்களின் அபிலாசைகளின் அடிப்படையில் மாற்றியமைக்கப்பட வேண்டும், என்றும் கூறினார்.
சுதர்சனம் பொறுப்பேற்றுக்கொண்ட அன்றைய தினமே நாக்பூரில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் ஊழியர்களின் கூட்டத்தில் அவர் உரைநிகழ்த்துகையில், இங்கேயுள்ள இந்துக்கள் அல்லாதவர்கள் அந்நியர்கள் அல்ல, அவர்கள் அனைவரும் முன்னாள் இந்துக்கள்தான். அவர்கள் இந்தியர்கள்தான். ஆனால் அவர்களுடைய மத நம்பிக்கைகள் இந்தியமயமாக்கப்பட வேண்டியிருக்கிறது,என்றார்.
அவர் காந்தியையும் அதேபோன்று நேருவையும் கடுமையாகச் சாடினார். காந்தி, மதமோதல்களுக்கு உகந்ததான சூழலை உருவாக்குவதற்காக இந்து சமூகத்தினரைக் குறை கூறினார், என்று கூறிய பின்னர், ஆர்எஸ்எஸ் இயக்க வரலாற்றின் மூன்றாவது கட்டம் நம் ஸ்தாபனத்தைக் கட்டுப்படுத்துவதற்காக நேரு மேற்கொண்ட முயற்சிகளைக் கொண்டதாகும், என்றார்.
பின்னர் அவர் மார்ச் 19ஆம் தேதி, பாபர் மசூதி இடிக்கப்பட்ட நடவடிக்கையானது, இந்துக்கள் அனைவரையும் உலகம் முழுதும் பெருமிதத்துடன் பார்க்க வைத்திருக்கிறது, என்றும் கூறினார்.  
(நன்றி: தி இந்து மற்றும் லெப்ட்வேர்ட்)
தமிழில்: ச. வீரமணி

No comments: