Monday, April 30, 2018

தொழிலாளர் இயக்கம்




தொழிலாளர் இயக்கம்
பத்தாயிரம் முறை விழும்,
எழும், வடுபடும், மறுபடியும் எழும்.
அதன் குரல்வளை இறுக்கப்படும்!
உணர்வற்றுப் போகும்வரை
தொண்டை அடைக்கப்படும்!
நீதிமன்றம்
கேள்விக் கணைகளைத் தொடுக்கும்.
குண்டர்களால் தாக்கப்படும்!
ஊடகங்களால் வசைபாடப்படும்!
பொதுமக்களின் புருவ நெரிப்பும்கூட
போர் தொடுக்கம்!
அரசியல்வாதிகளால் ஏய்க்கப்படும்!
ஓடுகாலிகளால்
மறுப்புரைகள் கூறப்படும்!
சூதாடிகளால் பலிகொடுக்கப்படும்!
உளவாளிகளின் ஒற்றறியும் நோயால்
பீடிக்கப்படும்!
கோழைகளால் நடுவீதியில் விடப்படும்!
துரோகிகளால் வஞ்சிக்கப்படும்!
அட்டைகளால் உறிஞ்சப்படும்!
தலைவர்களால் கூட,
விற்றுவிடப்படும்!
ஓ. …………………
இவ்வளவு சோதனைகள் இருந்தாலும்
இந்த வையகம்‘
இதுவரை கண்டிராத
உன்னத சக்தி வாய்ந்தது
உழைக்கும் மக்களின்
இயக்கம் ஒன்றுதான்!
ஆண்டாண்டு காலமாக
அடிமைப்பட்டிருக்கும் பாட்டாளிகளை
விடுதலை செய்வதே
வரலாற்றுக் கடமையாகும்.
கிழக்கில் சூரியோதயம்
எப்படி சர்வநிச்சயமோ
அதேபோன்று –
இதன் வெற்றி
சர்வ நிச்சயமே!
(1904-ஆம் ஆண்டு “தி மெட்டல் வொர்க்கர்” பத்திரிகையில் சுரங்கத்தொழிலாளி ஈகிள்ஸ் வீடெப்ஸ் என்பவரால் எழுதப்பட்ட கவிதை. தோழர் தே. இலட்சுமணன் தமிழாக்கம் செய்தது. இன்றைய காலத்திற்கும் இக்கவிதைத் தேவைப்படுவதாகத் தோன்றுவதால், இன்றைய மே நாளில் மீளவும் இதனைப் பதிவேற்றம் செய்கிறேன்

ஒன்றுபட்டுப் போராட,
ஒற்றுமையுடன் போராட,
மே நாளில் சபதம் ஏற்போம்
தோழர்களே!
தோழமையுடன்
ச.வீரமணி.



No comments: