Tuesday, April 17, 2018

கல்வி நிறுவனங்கள் மீதான தாக்குதல் குறித்து மக்கள் பொதுவிசாரணை நடுவர் மன்றம் வெளியிட்டுள்ள அதிர்ச்சிதரும் தகவல்கள்




கல்வி நிறுவனங்கள் மீதான தாக்குதல் குறித்து
 மக்கள் பொதுவிசாரணை நடுவர் மன்றம்
வெளியிட்டுள்ள அதிர்ச்சிதரும் தகவல்கள் 
-பேராசிரியர் வசந்திதேவி
கல்வி நிறுவனங்கள் மீதான தாக்குதல் குறித்து மக்கள் பொதுவிசாரணை நடுவர் மன்றம் சார்பில்,  தலைநகர் புதுதில்லியில் உள்ள கான்ஸ்டிட்யூஷன் கிளப்பில், ஏப்ரல் 11-13 தேதிகளில் கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. இந்தியாவில் ஜனநாயகத்திற்கான இடம் சுருங்கிவருவதன் மீதான மக்கள் ஆணையம் (PCSDS—People’s Commission on Shrinking Democratic Space in India) என்ற தலைப்பில் இந்தக் கருத்தரங்கத்திற்கு, மக்கள் பொதுவிசாரணை நடுவர் மன்றம் ஏற்பாடு செய்திருந்தது.
இம்மன்றத்தின் நடுவர் குழுவில் என்னையும் சேர்த்து, ஓய்வுபெற்ற நீதியரசர் ஹோஸ்பேட் சுரேஷ், ஓய்வுபெற்ற நீதியரசர் பி.ஜி. கோல்சே பட்டீல், பேராசிரியர் அமித் பாதுரி, டாக்டர் உமா சக்ரவர்த்தி, பேராசிரியர் டி.கே. உம்மன், பேராசிரியர் ஞான்ஷியாம் ஷா, பேராசிரியர் மெஹர் என்ஜினியர், பேராசிரியர் கல்பனா கண்ணபிரான், மற்றும் திருமதி பமீலா பிலிபோஸ் அங்கம் வகித்தோம். பேராசிரியர் ரோமிலா தாப்பர் நடுவர் மன்றத்தின் பிரதானமான அமர்வுக்குத் தலைமை வகித்தார். 
பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் உயர் கல்வி நிறுவனங்கள் மீது நடக்கும் தாக்குதல் குறித்த பொது விசாரணை நடுவர் மன்றத்தில், நாடு முழுதும் உள்ள 50 நிறுவனங்கள் மற்றும் பல்கலைக் கழகங்களின் பயிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சுமார் 120 பேர் தங்கள் அனுபவங்களைப் பதிவு செய்தார்கள்.  பொது விசாரணை நடுவர் மன்றத்தின் இறுதியில் ஓர் அறிக்கை ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டது. அதன் விவரம் வருமாறு:
பொது விசாரணை நடுவர் மன்றத்தில் நாட்டில் உள்ள 17 மாநிலங்களில் உள்ள 50 நிறுவனங்கள் மற்றும் பல்கலைக் கழகங்களிலிருந்து 120 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் சாட்சியங்களை அளித்துள்ளார்கள். தற்போது உயர்கல்வி நிறுவனங்களில் நிலவும் அவல நிலை குறித்து நேரடியாக 49 பேர் சாட்சியம் அளித்துள்ளார்கள். 17 வல்லுநர்கள் தங்கள் அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்கள். ‘

இவற்றின் அடிப்படையில் நடுவர் மன்றம் விரிவான அளவில்  கண்டுள்ளவை பின்வருமாறு:
இரண்டரை நாட்கள் நடைபெற்ற விசாரணை நடுவர் மன்றத்தின் அடிப்படை ஆய்வுப் பொருள், இந்திய ஜனநாயகம் தொடர்ந்து நீடித்து நிலைத்து நிற்க வேண்டுமானால் அதற்கு உயர்கல்வித்துறையில் இதுநாள்வரை கட்டிக்காத்து வந்த உயரிய மாண்புகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்தே அமைந்திருந்தது. இதுநாள்வரையிலும் நம் நாட்டில் உயர்கல்வித்துறையில்தான் மாணவர்கள் சுதந்திரமாக சிந்திப்பதற்கும், ஆய்வு செய்வதற்கும், விவாதிப்பதற்கும், தங்களுக்குப் பிடிக்காத  அம்சமாக இருப்பின் மறுப்பு தெரிவிப்பதற்கும் மிகப்பெரிய அளவில் இடம் கொடுத்து வந்தது. ஜனநாயக அரசியல் என்னும் ஒட்டுமொத்த உடம்பிற்கும் இரத்தத்தைச் செலுத்தக்கூடிய விசையியக்கக்கருவியான இதயமாகச் செயல்பட்டது. உயர்கல்வி நிறுவனங்கள், சமூகத்தின் அனைத்துப்பிரிவினருக்கும், குறிப்பாக  பல்வேறு காரணங்களால் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்ட மாணவர்களுக்கும் இடம்  அளிக்கக்கூடிய விதத்தில் இருந்திட வேண்டும். ஆனால் தற்போதைய பாஜக ஆட்சியில் கடந்த நான்காண்டுகளில் உயர்கல்வித்துறையில் எந்த அளவிற்கு நெருக்கடி மிக மோசமான முறையில் ஆழமாகியிருக்கிறது என்பது, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் சாட்சியங்களிலிருந்து தெரிய வந்தது. நம் நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் உயரிய மாண்புகளைத் தொடர்ந்து பாதுகாத்திடுவதே நாட்டின் உச்சபட்ச முன்னுரிமையாக இருந்திட வேண்டும் என்றும் அதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதையும் நடுவர் மன்றத்தில் பேசிய மாணவர்களும் ஆசிரியர்களும் மிகவும் தெளிவாக எடுத்துரைத்தார்கள். இவர்கள் உரைகள் கூட்டத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் எச்சரிக்கை மணியாகவே ஒலித்தது.
கல்வியைத் தனியாரிடம் தாரை வார்த்தல்
நாட்டில் உயர்கல்வித்துறையில் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டுவரும் தாக்குதல்களை விசாரணை நடுவர் மன்றத்தில் உரைநிகழ்த்திய மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் வல்லுநர்கள் தங்கள் சாட்சியங்களில் தெளிவாக எடுத்துரைத்தார்கள்.
உயர்கல்வி நிறுவனங்களில் பல்வேறு சிரமங்களுக்கு இடையில் படிப்பதற்காக வரும் ஏழை மற்றும் பிற்படுத்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் இனி உயர்கல்வி நிறுவனங்களின் படியே ஏறக்கூடாது என்று செய்வதற்கு வழி வகுக்கும் விதத்தில், மத்திய மனிதவள வளர்ச்சித்துறை அமைச்சகம் சமீபத்தில் பொதுக் கல்வி நிறுவனங்களுக்கு சுயாட்சி வழங்கிட முடிவு செய்திருக்கிறது. சுயாட்சி என்ற பெயரில் தொழிற்கல்வி மற்றும் சந்தை தொடர்பான பாட வகுப்புகளை மேம்படுத்திடத் திட்ட மிட்டிருக்கிறது.
இவற்றைத் தொடர்ந்து, இதுநாள்வரையிலும் நாட்டில் தலித், பழங்குடியின மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் படித்துவந்த நிறுவனங்களில் எல்லாம் இனிவருங்காலங்களில் அவ்வாறு சேர முடியாத நிலையை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இக்கல்வி நிறுவனங்களில் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் கட்டணங்களை இவர்களால் முழுமையாக அளித்திட முடியாது. படித்துவரும் மாணவர்களும் விரக்தி நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அதோடு, தற்சமயம் மத்திய அரசு கொண்டுவரவிருக்கும் நுழைவுத் தேர்வு மாதிரிகள், கல்வி நிறுவனங்களில் உள்ளூர் மாணவர்கள் சேர முடியாத விதத்திலும், உள்ளூர் மாணவர்களின் நலன்களுக்கு எதிரான விதத்திலும் அமைந்திருக்கின்றன.
இதற்கு மிகச் சரியான எடுத்துக்காட்டாக தமிழ்நாட்டில் மிகவும் அறிவுக்கூர்மை வாய்ந்த தலித் மாணவியான அனிதாவின் துர்ப்பாக்கிய நிலை சுட்டிக்காட்டப்பட்டது. அவர் மருத்துவப்படிப்பிற்காகத் தங்கள் மாநிலத்திலிருந்த பாடப் புத்தகங்களை நன்கு படித்து மிகவும் நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால் மத்திய அரசு திடீரென்று ‘நீட்’ தேர்வை அறிமுகப்படுத்தி அவர் நம்பிக்கையில் மண்ணை அள்ளிப் போட்டது. அவரால் மருத்துவப் படிப்பில் சேர முடியவில்லை. இவ்வாறு அறிமுகப்படுத்தப்படும் நுழைவுத் தேர்வுகள் நிச்சயமாக தலித், பழங்குடியின மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களை விரட்டியடிப்பதற்காகத்தான் என்பதை மாணவர்களும் ஆசிரியர்களும் தெள்ளத்தெளிவாக எடுத்துரைத்தார்கள். மேலும் இத்தகைய நுழைவுத் தேர்வுகள் நம் நாட்டின் கூட்டாட்சி  கட்டமைப்பு முறைக்கும் எதிரானதாகும். அவர் இதற்கெதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். எனினும் வழக்கு அவருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்காத நிலையில், தற்கொலை செய்துகொண்டார்.
தற்போது உயர்கல்வி நிறுவனங்களுக்கு முறையாக ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவதில்லை.  எல்லாம் இடைக்கால நியமனங்கள்தான். இது மாணவர்கள் – ஆசிரியர்கள் இடையே எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதிகரித்துவரும் இடைக்கால நியமனங்கள் ஆசிரியர்கள் மத்தியில் ஒரு நிச்சயமற்ற தன்மையை உருவாக்கி இருக்கிறது. இது ஒட்டுமொத்தமாக இதுநாள்வரை ஆசிரியர்கள் – மாணவர்கள் இடையே நிலவிவந்த விமர்சனரீதியான சிந்தனையையே அற்றுப்போகச் செய்துள்ளது.
எடுத்துக்காட்டாக, 1980களின் மத்தியிலிருந்தே மத்தியப்பிரதேச பல்கலைக் கழகங்களில் ஆசிரியர்கள் நிரந்தரமாக நியமனம் செய்யப்படுவதில்லை. தில்லிப் பல்கலைக் கழகத்தில் தற்சமயம் ஐயாயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. இவை நிச்சயமாக கல்வியின் தரத்தைப் பாதிக்கும் என்பதிலோ, மாணவர்களுக்கும் – ஆசிரியர்களுக்கும் இடையே இதுநாள்வரையிலும் இருந்துவந்த சுதந்திரமான முறையில் கேள்வி கேட்கும் நிலைமைகள் அடிபட்டுப்போகும் என்பதிலோ சந்தேகமில்லை.
நாட்டின் வளர்ச்சி விகிதம் குறைகிறது என்றால் அரசாங்கம் கல்விக்கான செலவினத்தை அதிகரித்திட வேண்டும். ஆனால் இன்றைய தினம் என்ன நிலைமை? கல்விக்கு நிதி ஒதுக்கும் அரசமைப்புச் சட்ட பொறுப்பினை அரசாங்கம் கைகழுவிக் கொண்டிருக்கிறது. உயர்கல்வித்துறையைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதோடு மட்டுமல்லாமல், அவற்றை கார்ப்பரேட்மயமாக்கிடவும் நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இது நாட்டின் எழுத்தறிவு மட்டத்தை நிச்சயமாகப் பாதிக்கும். இது ஏற்கனவே 75 சதவீத அளவிற்குத் தேக்க நிலையில் இருக்கிறது. இதன் விளைவு, வரவிருக்கும் காலங்களில் மாநிலங்களில் உள்ள பல்கலைக் கழகங்களை வெறுமனே மாணவர்களின் தேர்வு மையங்களாக மாற்றிடும் என்பதிலும் ஐயமில்லை.
கல்வியை காவிமயமாக்குதல்
கல்வி நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதோடு மட்டுமல்லாமல், அவற்றைக் காவிமயப்படுத்திடும் வேலைகளும் மும்முரமாக நடந்து வருகின்றன. முக்கியமான பொறுப்புகளில் இந்துத்துவா வெறியர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள். அவர்களின் கட்டளைக்கிணங்கதான் அனைவரும் செயல்பட்டாக வேண்டும். எடுத்துக்காட்டாக, அஸ்ஸாமில்,  சங்கர் தேபோ ஷிசு நிகேடன் என்ற பெயரில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் 500 பள்ளிகள் இயங்குகின்றன. இவற்றில் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் பயிலுகிறார்கள். இப்பள்ளிகள், மாணவர்கள் இதுநாள்வரை படித்துவந்த மதச்சார்பின்மை தத்துவத்தை குப்பையில் தூக்கி எறிந்துவிட்டு, இனி இந்துத்துவா சித்தாந்தத்தையே படித்திட வேண்டும். ராமானுஜன் எழுதிய 300 ராமாயணங்கள் என்னும் நூல் பாடத்திட்டத்திலிருந்து ஓரங்கட்டப் பட்டுவிட்டது. ஆரியர்கள் வந்தேறிகள் அல்ல அவர்கள்தான் இந்த நாட்டின் பூர்வகுடியினர் என்று மெய்ப்பிக்கும்விதத்தில் தில்லிப் பல்கலைக் கழகத்தின் சமஸ்கிருதப் பிரிவு, வரலாற்றை முழுமையாக மாற்றியமைத்துத்தரும்படி, கேட்டுக்கொள்ளப் பட்டிருக்கிறது. இதற்காக ஆர்எஸ்எஸ் இயக்கம் ஓர் எட்டு அம்ச வழிகாட்டும் விதிகளை அளித்திருப்பதாகவும் கூறப்பட்டது. இவை அனைத்தும் மாணவர்கள் – ஆசிரியர்கள் மத்தியில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமேயில்லை. அதுமட்டுமல்ல, உத்தரப்பிரதேசத்தில் உயர்கல்வி நிறுவனங்களில் இந்துத்துவா அமைப்பைச் சார்ந்தவர்கள், எவ்விதக்கல்வித்தகுதியும் இல்லாதவர்கள், உயர்பீடங்களில் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது. இவற்றுக்கு எதிராக மாணவர்களோ, ஆசிரியர்களோ எதிர்ப்பு தெரிவித்தால் அவர்கள் மீது கடுமையானமுறையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பல்கலைக் கழகங்களில் பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி-க்கு பல்வேறு வழிகளிலும் சலுகைகள் அளிக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, பீகாரில் ஒரு வழக்கில், ஏபிவிபி மாணவர்கள் மட்டுமே வருகைப்பதிவேட்டில் 75 சதவீதம் வந்திருப்பதாகப் பதிவு செய்யப்பட்டு, இதர மாணவர்களை அதிகாரமிழக்கச் செய்திடும் வேலை நடந்திருக்கிறது.
பல மாநிலங்களில் மாணவர் சங்கங்களுக்கான தேர்தல்களை நடத்துவதிலும், மாணவர் சங்கங்களை அமைப்பதிலும் படிப்படியாகத் தடைக்கற்கள் கொண்டுவரப் படுகின்றன.
பல்கலைக் கழக நிர்வாகம் சொல்வதற்கு எதிராக மறுப்பு தெரிவிக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எதிராக, சட்டரீதியான நடவடிக்கை, ஒழுங்கு நடவடிக்கை, நிர்ப்பந்தம் கொடுத்துக் கீழ்ப்படியச் செய்தல் போன்று  பல்வேறு வழிகளில் ஒடுக்குமுறைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன என்பதை மிகவும் தெளிவானமுறையில் மாணவர்களும் ஆசிரியர்களும் சாட்சியமளித்தார்கள். இவ்வாறு எதிர்ப்பு தெரிவிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையைத் தருவது மறுக்கப்படுகிறது. இதன்மூலம் மாணவர் சமுதாயத்தில் ஓர் அச்ச உணர்வை உருவாக்கி இருக்கிறார்கள். பல கல்வி வளாகங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு காவல்துறையினர் மற்றும் உளவுத்துறையினர் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக விளிம்புநிலையிலிருந்து வந்துள்ள மாணவர்களில் உள்ள முஸ்லீம்கள், தலித்துகள், பெண்கள் முதலானவர்களைக் குறிவைத்து இவர்கள் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறு எதிர்ப்புத்தெரிவிக்கும் மாணவர்கள் - ஆசிரியர்களுக்கு எதிராக கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன, அவர்களுக்கு இந்திய அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள அடிப்படை உரிமைகள் மற்றும் பேச்சுரிமை திட்டமிட்டு படிப்படியாக மறுக்கப்படுகிறது. அவர்கள் கூறும் எதிர்ப்பு எத்தகையதாயினும் அதனை தேச விரோதம் என்ற முத்திரைகுத்தி கிரிமினல்படுத்தும் வேலையும் நடந்து கொண்டிருக்கிறது.  தேசவிரோதிகள், பயங்கரவாதிகள், தேசத்துரோகிகள், அரசாங்கத்தின் எதிரிகள் என்று முத்திரைகுத்தி அச்சுறுத்துவது சர்வசாதாரணமாக நடைபெற்றுவருகிறது.
அதேபோன்று மூன்றாம் பாலினத்தவர் உட்பட  தலித்துகள், பழங்குடியினர், மதச்சிறுபான்மையினர், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், காஷ்மீரிகள் மற்றும் பெண்கள் முதலான ஆசிரியர்கள் – மாணவர்கள்  மீது பாகுபாடு காட்டுவது அதிகரித்து வருகிறது. உயர்கல்வி நிறுவனங்களுக்கு தலித்துகள், பழங்குடியின மாணவர்கள் வருவதை பல்வேறு வழிகளிலும் அடைத்து வருகின்றனர். அவர்களுக்கு விடுதிகள் அளிக்கப்படுவதில்லை. அவர்களின் அடையாளத்தை வைத்து கல்வி வளாகங்களில் அவர்கள் அவமதிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றனர். அவர்களுக்கு அளித்துவந்த கல்வி உதவித் தொகை குறைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் அவர்கள் பல்வேறு வடிவங்களில் அவமதிப்புக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். தலித் மாணவிகளாக இருந்துவிட்டால் இத்தகைய அவமதிப்புகள் மேலும் அதிகமாகும். இதேபோன்றே கடந்த சில ஆண்டுகளாக இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான சலுகைகளும் படிப்படியாக வெட்டப்பட்டு வருகின்றன.
இவ்வாறு தலித், பழங்குடியின மாணவர்களுக்கு இட ஒதுக்கீடுகள் மற்றும் கல்வி உதவித்தொகைகள் மறுக்கப்படுவதால், இவர்களுக்குக் கல்வி கற்கும் வாய்ப்பே மூடப்பட்டு வருகிறது. கல்வி உதவித்தொகை வழங்கப்படுவதற்குப் பதிலாக மாணவர்கள் வங்கிகளில் சென்று கடன் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அரசால் புதிய கொள்கை கொண்டுவரப்பட்டிருக்கிறது. இத்தகைய கடன்கள் அவர்களை பல ஆண்டுகளுக்குக் கொத்தடிமைகளாக மாற்றிடும் என்பதில் சந்தேகமில்லை.
அரசியல்ரீதியான நடவடிக்கைகளிலிருந்து பெண்களைத் தடுப்பதற்காக, அவர்களை அச்கறுத்தும் உத்தியாக பாலியில் ரீதியாகத் துன்புறுத்தும் நடவடிக்கைகளும் அதிகரித்து வருகின்றன.
எனினும் இத்தகைய அரசின் தாக்குதல்களுக்கு எதிராக தலித் மாணவர்கள் மத்தியில் போராட்ட உணர்வு அதிகரித்து வருகிறது. அவர்கள் அச்சுறுத்தப்பட்டபோதிலும், அவற்றுக்கு எதிராகப் போராடும் குணத்தை அவர்கள் கைவிட்டுவிடவில்லை. உத்தரப்பிரதேசத்தில் ஒரு பல்கலைக் கழகத்தில் விடுதி மாணவிகள் தங்களுக்கு படிப்பதற்கான நேரத்தை அதிகரித்திட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துப் போராடியபோது, அப்பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் என்ன கூறினார் தெரியுமா? மாணவிகள் இரவில் படிப்பது இயற்கைக்கு விரோதமான செயல்என்று திருவாய்மலர்ந்திருக்கிறார்.
மாணவர்கள் போராடும் சமயங்களில் காவல்துறையினரால் மாணவிகள் குறிவைத்துத் தாக்கப்படுகின்றனர். குறிப்பாக காஷ்மீரி மாணவர்களும், பெண்களும் அவர்கள் முஸ்லீம்களாக இருப்பதால் அவர்களின் மீதான தாக்குதல்கள் இரட்டிப்பாகும். அவர்களைத் தேசவிரோதிகள், என்றும், இஸ்லாமிய பயங்கரவாதிகள் என்றும், பாகிஸ்தான் ஏஜண்டுகள் என்றும் விளிப்பது சர்வசாதாரணமாக நடைபெற்று வருகிறது.
அதேபோன்றே வடகிழக்கு மாநிலங்களிலிருந்து வந்துள்ள மாணவர்கள் பழங்குடியினர் என்ற அடையாளத்தால் ஓரங்கட்டப்பட்டு வருகின்றனர்.
மாணவர்கள் மத்தியில் இதுநாள்வரையிலும் இருந்துவந்த வேற்றுமையில் ஒற்றுமை காணும் உயரிய பண்பு கொஞ்சம் கொஞ்சமாக அரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்துத்துவா சித்தாந்தத்துடன் தங்களைப் பிணைத்துக்கொண்டுள்ள உயர் சாதியைச் சேர்ந்தவர்கள் பல கல்லூரிகளில் ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டு அவர்கள் மூலமாக மாணவர்களின் அறிவைத் தீர்மானித்திடும் துரதிர்ஷ்டவசமான நிலை உருவாகி இருக்கிறது.
இவற்றைக் காலத்தே சரிசெய்திடாவிட்டால், இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை மாண்புகளுக்கு ஆழமானவிதத்தில் ஆபத்துகள் ஏற்படும்.
(தமிழில்: ச.வீரமணி)


No comments: