Tuesday, December 29, 2015

கோவில் அரசியல்


ஆர்எஸ்எஸ் பரிவாரங்கள் ராமர் கோவில் நிகழ்ச்சிநிரலை மீண்டும் முன்னிலைப்படுத்திடத் தீர்மானித்திருக்கிறது. சென்ற வாரம், ராமர் கோவில் கட்டுவதற்காக அயோத்திக்கு ராஜஸ்தானிலிருந்து இரு டிரக்குகளில் செங்கற்கள் (ளயனேளவடிநே) வந்திருக்கின்றன.கோவில்கட்டுமானப் பணிகளுக்காக, விசுவ இந்து பரிசத் நடத்திடும் தொழிற்சாலை ஒன்றில் இந்தக் கற்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. எட்டு ஆண்டுகள் இடைவெளிக்குப்பின்னர், அயோத்தியில் இக்கற்கள் சாஸ்திரசம்பிரதாயங்களுடன் பெறப்பட்டிருக்கின்றன.
மோகன் பகவத்தின் கட்டளை
விசுவ இந்து பரிசத்தின் கீழ் உள்ள அறக்கட்டளையான ராம ஜன்மபூமி நியாஸ் அமைப்பாளர்கள் கூற்றின்படி, கோவில் விரைவில் கட்டப்படும் என்றுசாதகமான சமிக்ஞைகள்’’ அவர்கள் பெற்றிருக்கின்றனர். ஆர்எஸ்எஸ் தலைவரான மோகன் பகவத், ஒருசில நாட்களுக்கு முன், “எப்பொழுது மற்றும் எப்படி கோவில் கட்டப்படும் என்று எவராலும் சொல்ல முடியாது,’’ என்று கூறியுள்ள அதே சமயத்தில் எனினும், “நாம் தயாரிப்புப்பணிகளை மேற்கொள்வதுடன் எப்போதும் தயாராக இருக்க வேண்டியதும் தேவை,’’ என்றும் கூறியிருக்கிறார். இவைதான் மேற்படிசாதகமான சமிக்ஞைகளாக’’ இருக்க முடியும். அவர் மேலும், “கோவில் என் வாழ்நாளுக்குள் கட்டப்பட்டுவிடும்’’ என்றும் சொல்லி இருக்கிறார்.
விசுவ இந்து பரிசத் அயோத்தியில் தன் வேலைகளைப் புதுப்பித்திருப்பதைப் பார்க்கும்போது, ஓர் அரசியல் குறிக்கோளுடன் கோவில் பிரச்சனையை விசுவ இந்து பரிசத் தன் கையில் எடுத்துக்கொண்டு தயாரிப்புப் பணிகளில் இறங்கி இருப்பதாகவே தெரிகிறது. உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத்திற்கான தேர்தல்கள் 2017 ஆரம்பத்தில் நடக்க இருக்கின்றன. இதனையொட்டி ஆர்எஸ்எஸ்-பாஜக கூடாரத்திற்கு மதவெறித் தீயை விசிறிவிடவேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. தேவைப்பட்டால், அதனை அவை மிகவும் மூர்க்கத்தனமாக மேற்கொள்ளும். பீகார் தேர்தலுக்குப்பின்னர், பாஜகவின் ஆதரவுத்தளத்தில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டுவருவதை அடுத்து, அதிலிருந்து மீள ஆர்எஸ்எஸ் தன்னுடைய கொட்டடியிலிருந்து மதவெறி ஆயுதங்களைத் தயார்ப்படுத்திக் கொண்டிருக்கிறது.
நீதித்துறை கட்டளையை மீறும் செயல்
அயோத்தி தாவா உச்சநீதிமன்றத்தில் இருக்கிறது. பாபர் மசூதி இருந்த இடம் தொடர்பாக தற்போதைய நிலை நீடித்திட வேண்டும் என்பதே நீதித்துறையின் கட்டளையாகும். ஆனால், அயோத்தியில் கோவில் கட்டுவதற்காக கற்கள் சேகரிக்கப்பட்டுக்கொண்டிருப்பது என்பது, நீதித்துறையின் கட்டளைகளை மீறும் செயலாகவே பார்க்கப்பட வேண்டும். உத்தரப்பிரதேச மாநில முதல்வர் மிகவும் விழிப்புடன் இருக்குமாறு மாவட்ட நிர்வாகத்தினரை அறிவுறுத்தி இருக்கிறார். இதுபோதுமானதல்ல. உத்தரப்பிரதேச அரசாங்கம் அயோத்திக்குக் கற்களை வரவழைப்பது போன்ற செயல்பாடுகளை நிறுத்துவதற்கு மாவட்ட நிர்வாகத்திற்குக் கட்டளையிட வேண்டும். தற்போதைய நிலையினை மாற்றுவதற்கு நடைபெறும் எந்தச் செயலும் நடைபெறக் கூடாது. இதனைச் சீர்குலைத்திட நடந்துவரும் நடவடிக்கை முளையிலேயே கிள்ளியெறியப்பட வேண்டும். -
டிசம்பர் 23, 2015
தமிழில்: .வீரமணி


No comments: