மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர்
பரிக்கரின் வாஷிங்டன்னுக்கான முதல் பயணம் அமெரிக்காவுடனான ராணுவ ஒத்துழைப்பு தொடர்பாக
பல்வேறு முன்முயற்சிகளுக்கு அடித்தளமிட்டுள்ளது. இவற்றில் மிகவும் ஆழமான மற்றும் சங்கடத்தை
உருவாக்கக்கூடிய அம்சம், அமெரிக்கா, இந்தியாவில் உள்ள ராணுவத் தளங்களையும், துறைமுகங்களையும்
பயன்படுத்திக்கொள்வதற்கு மத்திய அமைச்சர், இந்தியாவின் விருப்பத்தை வெளிப்படுத்தி இருப்பதாகும்.
இந்திய அரசாங்கம், அமெரிக்காவுடன் ராணுவ ரீதியான ஆதரவு ஒப்பந்தம் செய்து கொள்வதில்
திறந்த மனதுடன் இருப்பதாக, மனோகர் பரிக்கர், அமெரிக்க அயல்துறை விவகாரங்களுக்கான அமைச்சர்
அஸ்டன் கார்டரிடம் தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் வாயிலாகத் தெரியவருகிறது.
இடதுசாரிகள் எதிர்ப்பால்ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை
2005 ஜூன் மாதத்தில்
கையெழுத்தான இந்திய - அமெரிக்க பாதுகாப்புக் கட்டமைப்பு ஒப்பந்தத்தின்படி, அமெரிக்கா,
இந்தியாவை அமெரிக்காவுடனான ராணுவரீதியான ஆதரவு ஒப்பந்தம் மற்றும் போக்குவரத்து மற்றும்
தகவல் பாதுகாப்பு ஒப்பந்தம் ஆகிய இரண்டிலும் கையெழுத்திட வற்புறுத்தி வந்தது. இடதுசாரிக்
கட்சிகள் இந்தியா, அமெரிக்காவுடன் பாதுகாப்புக் கட்டமைப்பு ஒப்பந்தத்திலும் மேற்கண்ட
இரு ஒப்பந்தங்களிலும் கையெழுத்திடுவதைக் கடுமையாக எதிர்த்தன.
ராணுவ ரீதியான
ஆதரவு ஒப்பந்தத்தின்மூலம் அமெரிக்க ராணுவப் படைகள் இந்தியாவின் விமானத் தளங்கள் மற்றும்
கப்பற்படைகளின் துறைமுகங்களைத் தங்கள் ராணுவ நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்திக்கொள்ள
இட்டுச் செல்லும். மற்றொரு ஒப்பந்தமான போக்குவரத்து மற்றும் தகவல் பாதுகாப்பு ஒப்பந்தமானது
இரு நாட்டின் ராணுவப் படைகளின் போக்குவரத்து வலைப்பின்னல்களை இணைத்திடும். இவ்வொப்பந்தங்கள்
கையெழுத்தாகிவிட்டால், பின்னர் இந்தியா அமெரிக்காவின் கீழ் இயங்கும் ஒரு முழுமையான
கூட்டணி நாடாக மாறிவிடும். ஐமுகூ அரசாங்கம் இறுதியில் இவ்விரு ஒப்பந்தங்களிலும் கையெழுத்திடாமல்
இருந்துவிட்டது. இது தொடர்பாக அன்றைய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி ஒரு தெளிவான
நிலைப்பாட்டினை எடுத்தார்.
இந்தியாவுக்கு ராணுவ கருவிகள் விற்பதில்
அமெ.தான் முதலிடம்
பாஜக அரசாங்கமானது,
அமெரிக்க ராணுவக் கூட்டணியில் சேர மிகவும் ஆர்வம் காட்டுவதுபோல் தோன்றுகிறது. இந்தத்
திசைவழியில் அது சென்றுகொண்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த ஆண்டின் ஆரம்பத்தில்
ஜனவரியில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இந்தியா வருகைபுரிந்தபோது, இரு நாடுகளுக்கும் இடையிலான
ஒரு கூட்டுத் தொலைநோக்கு அறிக்கை கையெழுத்தானது. அதன்படி, ஆசிய-பசிபிக் மற்றும் இந்தியப்
பெருங்கடல் பிராந்தியத்தில் அமெரிக்கா மேற்கொள்ளும் போர்த்தந்திர நடவடிக்கைகளின் கீழ்
இயங்கும் ஒரு நாடாக இந்தியா மாறிவிட்டது. கடல்வழிப் பாதுகாப்பு என்ற பெயரில், இந்தியப்
பெருங்கடலில் அமெரிக்கக் கப்பற்படை மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு இந்திய ஒத்துழைப்பு
நல்கிக் கொண்டிருக்கிறது. ஹவாய் தீவில் இயங்கிக் கொண்டிருக்கும் பசிபிக் பிராந்தியத்திற்கான
அமெரிக்க பசிபிக் கமாண்ட் என்னும் ராணுவத்தளத்திற்கு விஜயம் செய்த முதல் இந்தியப் பாதுகாப்பு
அமைச்சர் மனோகர் பரிக்கர்தான். இந்தியாவிற்கான ராணுவ உபகரணங்களை வழங்குவதில் அமெரிக்காதான்
மிகப்பெரும் பங்கு வகிக்கிறது.
இறையாண்மை - ராணுவ நலனில் சமரசம்
இந்திய-அமெரிக்க
பாதுகாப்புக் கட்டமைப்பு ஒப்பந்தம் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் மேலும் பத்தாண்டுகளுக்குப்
புதுப்பிக்கப்பட்டது. இந்தக் கட்டமைப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் அமெரிக்கா,
மேற்கண்டவாறு ராணுவ ரீதியான ஆதரவு ஒப்பந்தம் மற்றும் போக்குவரத்து மற்றும் தகவல் பாதுகாப்பு
ஒப்பந்தம் ஆகிய ஒப்பந்தங்களுடன் மேலும் அடிப்படைப் பரிவர்த்தனை மற்றும் ஒத்துழைப்பு
ஒப்பந்தம் என்னும் மூன்றாவது ஒப்பந்தம் ஒன்றிலும் கையெழுத்திட நிர்ப்பந்தித்து வருகிறது.
இந்த ஒப்பந்தங்கள் குறித்து விவாதித்திடவும், இந்தியா திறந்த மனதுடன் இருக்கிறது என்றும்
மனோகர் பரிக்கர் ஒத்துக்கொண்டிருப்பது என்பது, மோடி அரசாங்கம் அமெரிக்காவின் நிர்ப்பந்தத்திற்கு
ஆளாகிக் கொண்டிருப்பதற்கான ஓர் அபாய அறிகுறியாகும். இந்த இரு ஒப்பந்தங்களிலும் இந்தியா
கையெழுத்திடாவிட்டால், உயர் தொழில்நுட்பத்திற்கான பல்வேறு மூலங்களை இந்தியாவிற்கு கொடுக்கக்கூடாது
என்ற நிலைபாட்டினை அமெரிக்கா எடுத்திருக்கிறது. மோடி அரசாங்கம், பாதுகாப்பு உபகரணங்களை
உற்பத்தி செய்வதில் அமெரிக்காவையும் இணைத்துக் கொள்வதற்குக் காட்டும் ஆர்வத்தின்காரணமாக,
நாட்டின் இறையாண்மையையும், நம் ராணுவத்தின் சீரிய நிலையையும் சமரசம் செய்துகொள்ளக்கூடிய
அளவிற்கு அமெரிக்காவிடம் நயமாகப் பேசிக்கொண்டிருக்கிறது.
பலவீனப்படுத்தும் நடவடிக்கை
இந்தியா இதுவரை
எவ்விதமான ராணுவக் கூட்டணியுடனும் தன்னை இணைத்துக்கொள்ளாமல் ஒரு சுயேச்சையான நிலைபாட்டினை
மேற்கொண்டு வந்தது. ஆனால் தற்போது அமெரிக்க ராணுவத்தை நம்முடைய கப்பற்படை துறைமுகங்கள்
மற்றும் விமானப்படையின் தளங்களையும் பயன்படுத்திக்கொள்ளவும், எரிபொருள்களை நிரப்பிக்கொள்ளவும்,
தங்கள் படைகளை நிலைநிறுத்திப் பராமரித்துக்கொள்ளவும் அனுமதிப்பதன் மூலம், இத்தகைய நிலைபாட்டிலிருந்து
தீவிரமான முறையில் முறிவினை ஏற்படுத்திக்கொள்ளப் போகிறது. இவை அனைத்தும், அமெரிக்காவின்
பாதுகாப்பு கட்டமைப்புக்குள் இந்தியாவின் ராணுவப் படையினரைக் கொண்டுவருவதற்கான முயற்சிகளேயாகும்.
பாஜக அரசாங்கம் இந்தியாவின் இறையாண்மைக்குக் குந்தகம் விளைவிக்கக்கூடிய, நம் சுயேச்சையான
ராணுவ நடவடிக்கைகளைப் பலவீனப்படுத்தக்கூடிய, அமெரிக்காவின் கீழ் இயங்கும் ஒரு ராணுவக்
கூட்டாளியாக இந்தியாவை மாற்றக்கூடிய இந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திடக் கூடாது.
- தமிழில்: ச.வீரமணி
No comments:
Post a Comment