நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம் மக்களால்
தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் உரிமைகள் மீது தாக்குதல் தொடுக்கும் விதம்
உண்மையில் மிகவும் நாணமற்றதும் ஆணவமிக்கதுமாகும். கடந்த சில வாரங்களாக, தில்லி
துணைநிலை ஆளுநர், நஜீப் ஜங், தில்லி முதலமைச்சரையும், அமைச்சரவையையும்
புறந்தள்ளிவிட்டு ஒன்றன்பின் ஒன்றாக தன்னிச்சையான முறையில் பல நடவடிக்கைகளை
எடுத்து வருகிறார். மோடி அரசாங்கம் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தின்
கட்டளைக்கிணங்கவே துணைநிலை ஆளுநர் இவ்வாறு அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாகவும்,
ஜனநாயகமற்ற முறையிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். தில்லியில் இந்த ஆண்டு
பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது ஆம் ஆத்மி கட்சி
முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மாபெரும் வெற்றி பெற்று, மொத்தம் உள்ள70 இடங்களில்
67 இடங்களைக் கைப்பற்றிய பின்னர், கெஜ்ரிவால் அரசாங்கம் தில்லியில் அமைந்தது.
.மிகவும் பரிதாபகரமான முறையில் வெறும் மூன்றே இடங்களைப் பெற்ற பாஜக
மக்களின் தீர்ப்பை மதித்து நடந்திட வேண்டும். மத்திய அரசாங்கம் மாநில
அரசாங்கத்துடன் சுமுகமான முறையிலும் சமத்துவமான முறையிலும் உறவுகளை
உத்தரவாதப்படுத்திட வேண்டும். தில்லி நாட்டின் தலைநகர் என்கிற உண்மையின்
பின்னணியில் இது மிகவும் அவசியமான ஒன்றாகும். ஆனால், நடப்பது என்ன? தில்லி
அரசாங்கம் மற்றும் தில்லி சட்டமன்றப் பேரவையின் உரிமைகள் மீதும் கெஜ்ரிவால்
அரசாங்கத்தின் செயல்பாடுகளைக் குலைக்க வேண்டும் என்ற தீர்மானத்துடன் மத்திய அரசாங்கத்தால்
மிகவும் கேவலமான முறையில் தாக்குதல்கள் தொடுக்கப் பட்டிருக்கிறது. துணை நிலை
ஆளுநர், முதலமைச்சரையே கலந்தாலோசிக்காமல், தலைமைச் செயலர் பத்து நாட்கள்
விடுப்பில்போனபோது பொறுப்பு தலைமைச் செயலரை நியமித்தார்.
பின்னர், அதனைத் தொடர்ந்து முதுநிலை (சீனியர்) அதிகாரிகள்
நியமனங்களையும் மேற்கொண்டார். முதலமைச் சரும் அமைச்சரவையும் வெளியிடுகிற
நியமனங்களையெல்லாம் ரத்து செய்கிறார். துணைநிலை ஆளுநர் கடைசியாக செய்த நிகழ்வு,
லஞ்ச ஒழிப்பு பீரோவின் முதன்மை அதிகாரியை நியமனம் செய்ததாகும். அதேபோன்று சட்ட
அமைச்சர் போலி பட்டப்படிப்பு சான்றிதழ் பெற்றிருந்தார் என்ற குற்றச்சாட்டின்மீது
அவரைக் கைது செய்தது தொடர்பாகவும் முதலமைச்சரைக் கலந்தாலோசிக்கவில்லை. தில்லி ஒரு
யூனியன் பிரதேசம் என்பதும், அதற்கு முழுமையான மாநில அந்தஸ்து கிடையாது என்பதும்
உண்மைதான். ஆனால், அரசமைப்புச் சட்டத்தின் 239-ஏஏ பிரிவின்கீழ் மத்தியஅரசுக்கு
பொது ஒழுங்கு, காவல்துறை மற்றும் நிலம் ஆகியவை தொடர்பாக மட்டுமே அதிகாரங்களைப்
பெற்றிருக்கிறது. மற்ற துறைகள் அனைத்துமே மாநிலப் பட்டியலில்தான் வருகின்றன. எனவே
அவை அனைத்தும் மாநில அரசாங்கத்தின் அதிகாரங்களுக்கு உட்பட்டவை களாகும்.
மேலும் அதே பிரிவானது, அமைச்சரவை துணைநிலை ஆளுநருக்கு உதவிட வேண்டும்
மற்றும் அறிவுறுத்த வேண்டும் என்றும் கூறுகிறது. துணைநிலை ஆளுநர் முதலமைச்சரின்
அறிவுரையின் படிதான் செயல்பட வேண்டும் என்று அரசமைப்புச் சட்டத்தின்
கட்டளைகளுக்குப் பொருந்தக்கூடிய விதத்திலேயே தில்லி தேசியத் தலைநகர் பிரதேசச்
சட்டமும் கூறுகிறது. ஆயினும், மோடி
அரசாங்கமானது, துணைநிலை ஆளுநரின் மூலமாக, தலைமைச் செயல ராக யாரை நியமனம் செய்வது
என்பது தொடர்பாக முதலமைச்சருக்கு உள்ள உரிமையைப் பறித்துள்ளது. தன்னுடைய சட்டவிரோத
நடவடிக்கையை நியாயப்படுத்துவதற்காக, உள்துறை அமைச்சகம் மே 21 அன்று ஓர்
அறிவிக்கையை வெளியிட்டிருக்கிறது. அதன்படி, ‘பணிகள்’ (`services’) மத்திய
அரசாங்கத்தின் வரையறைக்குள் வருமாம். இதன் பொருள், தில்லி அரசாங்கத்தின் ஊழியர்கள்
அனைவருமே மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்குள்தான் வருவார்களாம்.
இவ்வாறு மத்திய அரசாங்கம் வெளியிட்டிருக்கிற அறிவிக்கைக்கு
அரசமைப்புச்சட்ட அடிப்படையும் கிடையாது, அது எவ்விதச் சட்டத்தின் கீழும்
வராதுஎன்று அரசமைப்புச்சட்ட வழக்கறிஞர்கள் பலர்மத்திய அரசின் இந்நடவடிக்கையைக்
கண்டித்திருக்கிறார்கள். அரசமைப்புச் சட்டம் தொடர்பான புகழ்பெற்ற வழக்குரைஞர்
கே.கே.வேணுகோபால் இந்த அறிவிக்கை, “அரசமைப்புச்சட்டத்திற்கு விரோதமானது,
சட்டத்திற்கு விரோதமானது மற்றும் செல்லத்தக்கதல்ல,’’ என்று கூறியிருக்கிறார்.
கெஜ்ரிவால் அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் அரசியல் கோட்பாடுகள் குறித்து ஒருவர்
என்ன வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ள லாம். ஆனால் அரசமைப்புச் சட்டத்தின்
கட்டுக்கோப்பிற்கு உட்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒரு மாநில அரசாங்கத்திற்கு
உள்ள உரிமைகள் பற்றி எவருக்கும் எவ்வித ஐயப்பாடும் இருக்கக்கூடாது.
நரேந்திர மோடி அரசாங்கம் “கூட்டுறவு கூட்டாட்சித்தத்துவ’’ (“cooperative
federalism”) சகாப்தத்தை முன்னறிவித்திருக்கி றோம் என்று தம்பட்டம் அடித்துக்
கொண்டிருக் கிறது. தில்லியில் அது நடந்துகொள்ளும் விதம்இதனை கொடூரமான
கேலிக்கூத்தாக்கி இருக்கிறது. அனைத்து அதிகாரங்களும் மத்திய அரசாங் கத்திடமும்,
நிர்வாகம் பிரதமரின் கைகளிலும் குவிந்து கொண்டிருக்கக்கூடிய நிலையில், மத்திய -
மாநில உறவுகளும் இவர்களது எதேச்சதிகார நடவடிக்கைகளுக்குப் பலியாகிக்
கொண்டிருக்கிறது. திட்டக் கமிஷனும் அதன் கீழ் பல்வேறு மாநிலங்கள் சிறப்பு
அந்தஸ்துடன் சிறப்பு செலவுத்தொகைகள் பெற்றுவந்த ஏற்பாடுகளும் ஒழித்துக்
கட்டப்பட்டதைத் தொடர்ந்து, தங்களுக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து
ஒழிக்கப்பட்டதால் வடகிழக்கு மாநிலங்களின் முதலமைச்சர்கள் இதுதொடர்பாக விவாதிக்க
வேண்டும் என்று பிரதமரைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், பிரதமருக்கோ அந்த
ஏழு மாநில முதல்வர்களை யும் சந்திப்பதற்காக தேதி ஒதுக்குவதற்கு நேரமே
இல்லை.தில்லிப் பிரச்சனையை ஏதோ துணைநிலைஆளுநருக்கும் முதல்வர் கெஜ்ரிவாலுக்கும்
இடையிலான சில்லரை சச்சரவு என்று பார்க்கக்கூடாது. மாநிலங்கள் குறித்து மத்திய
அரசின் எதேச்சதிகார அணுகுமுறையையே இது பிரதிபலிக்கிறது. தில்லி மாநில அரசின்
உரிமைகள் மீதான தாக்குதல்களும், கூட்டாட் சித் தத்துவத்தின் மீதான தாக்குதல்களும்
கடுமையாக எதிர்க்கப்பட வேண்டிய வைகளாகும். அரசமைப்புச்சட்டத்தின் விதிகளுக்குப்
புறம்பாகச் செயல்படும் துணைநிலைஆளுநர் நீக்கப்பட வேண்டும். நரேந்திர மோடியும்,
பாஜக அரசாங்கமும் நம் நாட்டின் கூட்டாட்சி அமைப்புமுறை மற்றும் அரசமைப்புச் சட்டக்
கட்டுக்கோப்பின் மீது தாக்குதல்கள் தொடுத்திருப்பது அனுமதிக்கப்பட முடியாத
வைகளாகும்.
தமிழில் : ச.வீரமணி
No comments:
Post a Comment