Wednesday, June 3, 2015

நவீன தீண்டாமை



-சீத்தாராம் யெச்சூரி

`மொட்டைக் கடிதங்கள், பொய்ப் பெயர்களில் புகார்கள் அடிப்படையில் நடவடிக்கை எதுவும் எடுக்கக்கூடாது’
சென்னை ஐஐடி-யில் இயங்கி வந்த மாணவர்களின் அம்பேத்கர் - பெரியார் வாசிப்பு வட்டம் தடை செய்யப்பட்டிருப்பது, மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியக் குடியரசை, ஆர்எஸ்எஸ் பரிவாரங்களின் வெறிபிடித்த- சகிப்புத் தன்மையற்ற பாசிச `இந்து ராஷ்ட்ரமாக’ மாற்ற வேண்டும் என்கிற குறிக்கோளின் ஒரு பகுதியேயாகும்.மேற்படி வாசிப்பு வட்டத்திற்கு எதிராக மொட்டைக் கடிதம் ஒன்றைப் பெற்றதைத் தொடர்ந்து, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கட்டளையின் அடிப்படையில் இந்தத் தடை மேற்கொள்ளப்பட்டிருக் கிறது.
வாசிப்பு வட்டத்தில், `பிரதமர் மோடிக்கு எதிராக கருத்துக்களைக் கூறினார்கள்’ என்றும், அரசாங்கத்தை விமர்சித்தார்கள் என்றும் ஊடகங்கள் தலைப்புச் செய்திகளாகச் வெளியிட்டிருக்கின்றன. மத்திய கண்காணிப்பு ஆணையம் “மொட்டைக் கடிதங்கள், பொய்ப் பெயர்களில் புகார்கள் அடிப்படையில் நடவடிக்கை எதுவும் எடுக்கக்கூடாது,’’ என்று அறிவுரைகள் வழங்கியுள்ள போதிலும், உயர்கல்வி நிறுவனங்களில் “அறிவார்ந்த முறையில் நடைபெறும் சிந்தனைகளை’’ மழுங்கடிக்கும் விதத்தில், நாட்டில் பல்வேறு மதத்தினர் வாழ்ந்து வந்தபோதிலும் அவர்களுக்கிடையே இருந்து வரும் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கப் பண்புகளை இந்துமதப் புராண, இதிகாசங்களுக்கேற்ப மாற்றியமைக்க முயலும் விதத்தில் மேற்கொள்ளப்படும் இத்தகைய தடைகள் அரசமைப்புச் சட்டம் அளித்திருக்கின்ற உரிமைகளின் ஆணிவேரையே பிடுங்கி எறியும் இழிசெயல்களாகும்.
நாட்டை நவீனத்துவத்தை நோக்கி முன்னெடுத்துச் செல்வதற்கான முயற்சிகளில், சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு சமத்துவம் அளிப்பது என்பதும் ஒரு பகுதியாகும். சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக ஆண்டாண்டு காலமாக முழக்கங்களை வாயளவில் முழங்கி வந்த போதிலும், இந்தக் கேவலமான அமைப்புமுறை இன்னமும் நம்மைப் பீடித்திருப்பது தொடர்கிறது. தலித் - பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடுகள் வழங்கியிருக்கின்ற போதிலும், ஒட்டுமொத்தத்தில் அவர்கள் இன்னமும் மிகவும் இருளடைந்த நிலையிலிருப்பது தொடர்கிறது. பள்ளிப்படிப்பைப் பாதியில் கைவிடும் சிறார்களில் தலித்-பழங்குடியினர் சதவீதம் இன்றளவும் அதிக அளவில் இருக்கிறது. அதேபோன்று உயர்கல்வி நிறுவனங்களிலும் அரசுப் பணிகளிலும் இவர்களது பிரதிநிதித்துவம் என்பது இன்றளவும் மிக மிகக் குறைவான நிலையிலேயே தொடர்கின்றன.
அதிகாரப்பூர்வமற்ற முறையில் வெளியாகி இருக்கும் சில புள்ளிவிவரங்கள் உண்மையில் மிகவும் அதிர்ச்சியளிக்கக்கூடியவைகளாகும். அதாவது, ஒவ்வொரு வாரமும் சராசரியாக 13 தலித்துகள் கொல்லப்படுகிறார்கள்; 6 பேர் வலுக்கட்டாயமாகக் கடத்திச் செல்லப்படுகிறார்கள்; 21 தலித் பெண்கள் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். நாட்டிலுள்ள விவசாயத் தொழிலாளர்களில், நகர்ப்புறங்களில் வாழும் ஆதரவற்ற மக்களில், மலம் அள்ளும் இழிதொழிலில் ஈடுபட நிர்ப்பந்திக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையோர் தலித் - பழங்குடியினர்களே யாவார்கள்.
இத்தகைய பிரச்சனைகளை எழுப்பி, சாதிய வன்முறைக்கு எதிராக விழிப்புணர்வை உருவாக்க முயன்ற ஒரு மாணவர் குழுவினரைத் தடை செய்ய முடியுமா? முடியும் என்று ஐஐடி நிர்வாகம் கூறுகிறது. இந்து `தர்மத்தின்கீழ்’ இந்து தேசத்தை மேன்மைப்படுத்திட வேண்டுமாயின், ஏணிப்படிகள் போன்று இருக்கும் சாதியக் கட்டமைப்பைக் கட்டிக்காக்க வேண்டியது அவசியம் என்பதே ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் கட்டளையாகும். ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் குருவாகக் கருதப்படும் கோல்வால்கர், “சிந்தனைக்கொத்து’’ என்னும் தன்னுடைய நூலில், “பிராமணன் தலையிலிருந்து பிறந்தவன், சத்திரியன் (அரசன்) கைகளிலிருந்து பிறந்தவன், வைசியன் தொடைகளிலிருந்து பிறந்தவன் மற்றும் சூத்திரன் கால்களி லிருந்து பிறந்தவன். இதன்பொருள், மக்கள் என்போர் இவ்வாறு நான்கு அடுக்குகளாக ஆக்கப்பட் டிருக்கிறார்கள் என்பதே’’ என்கிறார்.
நம் நாட்டில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் நம் நாட்டின் பொருளாதார சமத்துவமின்மையை மிகப்பெரிய அளவில் விரிவடைய வைத்திருக்கின்றன. நம் நாட்டின் மொத்தவளத்தில் அதிகபட்சம் வைத்திருக்கும் ஒரு சதவீதத்தினரின் சொத்து மதிப்பு 2000ஆம் ஆண்டில் 36.8 சதவீதமாக இருந்தது, 2014ல் அது 49 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. உணவு மற்றும் வேளாண் அமைப்பின் அறிக்கையின்படி, 2015ம் ஆண்டில் உலகில் பசி - பஞ்சம் - பட்டினியால் வாடுவோர் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியா கீழ்த்தரமான இடத்தைப் பிடித்திருக்கிறது.
அதாவது நம் நாட்டில் பசி - பஞ்சம் - பட்டினியால் வாடுவோர் 19 கோடியே 40 லட்சம் பேர்களாவர். நம் நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களுக்குக் கிடைத்து வந்த உணவின் அளவு சுருங்கி விட்டதால், கிடைக்கும் உணவைப் பங்கு போட்டுக் கொள்ளும் சண்டை சாதிய மோதலுக்கும் பகைமைக்கும் இட்டுச் செல்கிறது. சமூகத்தில் ஒதுக்கிவைத்தல் என்னும் இழி செயல் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு திடுக்கிடும் சில உண்மைகளை வெளிப்படுத்தி இருக்கிறது.
“சமூகத்தில் ஒருசில பிரிவினரை ஒதுக்கிவைக்கும் போக்கு என்பது கடந்தகால மிச்ச சொச்சம் மட்டும் அல்ல; கல்வியறிவற்றவர்களிடம் மட்டும் இத்தகைய புத்தி நிலைகொண்டிருக்கவில்லை; மாறாக, சாதிக்காரர்களுக்கு சலுகை அளிப்பது என்பதும், தலித் மற்றும்முஸ்லிம்களை ஒதுக்கி வைத்தல் என்பதும் இந்தியப் பொருளாதாரத்தில் ஆதிக்கம் வகிக்கக் கூடிய நிலையில் உள்ள தனியார் நிறுவனங்களால் ஊட்டி வளர்க்கப்படுவதாவே தெரிகிறது’’ என்று அந்த ஆய்வு கூறுகிறது. இவ்வாறு, காலங்காலமாக சமூகத்தில் ஒருசில பிரிவினரை ஒதுக்கி வைத்தல், சாதிய ஒடுக்கு முறை, வகுப்புவாத அடிப்படையில் பாரபட்சம் காட்டுதல், ஆண் - பெண் பாலினப் பாகுபாடுகள் முதலானவை இருந்து வருகின்றன.
இவைதான், நவீன இந்தியாவில் மிகவும் நளினமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.`பிரதமருக்கு எதிராக வெறுப்பைப் பரப்புகிறார்கள்’ என்று கூறுவோரால் இந்த உண்மைகளை மறுக்க முடியுமா? கடந்த சில ஆண்டுகளில், சாதிகளுக்கிடையேயும் மற்றும் சாதிகளுக்குள்ளேயும் அரிதாரம் பூசும் வேலைகள் சில நடை பெற்றிருந்தபோதிலும், சமூக ஒடுக்குமுறையின் அடிப்படைக் கட்டமைப்பு இன்னமும் அப்படியே தான் இருக்கிறது என்கிற எதார்த்தத்தை நாம் உணர வேண்டிய தருணம் இது.
மகாத்மா காந்தி, “கடவுளின் மக்கள்’’ என்றபொருள்படும் ஹரிஜன் என்ற சொல்லை உருவாக்கி, சமூக ஒடுக்குமுறைக்கு எதிராக மக்களின் மனப்பான்மையில் மாற்றம் வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். சாதி ஒழிப்பு இயக்கங்களை வலுவாக நடத்தியவர்களுள் ஜோதிபா பூலே ஒருவராவார். அவர் நடத்திய சத்யசோதாக் இயக்கம் இன்றளவும் செல்வாக்குடன் விளங்குகிறது. சாதியச் சுரண்டலுக்கு எதிராக ஓய்வு ஒழிச்சலின்றி போராடிய பாபா சாகேப் அம்பேத்கர், கடைசிக் காலங்களில் தன்னைப் பின்பற்றியோரை, இந்துசமூகத்தின் சாதிய அநீதிகளிலிருந்து தப்பிப்பதற்காக, புத்தமதத்தைத் தழுவுமாறு கேட்டுக் கொண் டார்.
தந்தை பெரியாரால் தலைமை தாங்கப்பட்ட வலுவான திராவிட இயக்கம் சாதிய ஒடுக்குமுறை மற்றும் தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக வலுவான உணர்வுகளை உருவாக்கியது. ஆயினும், இவ்வாறு அளப்பரிய தலைவர்களும் அவர்களுடைய வலுவான இயக்கங்களும் செயல் பட்டிருந்த போதிலும், சாதிய ஒடுக்குமுறை இன்னமும் நம்மைப் பீடித்திருப்பது தொடர்கிறது. மனதை மாற்றிக் கொள்ளுங்கள், பழக்கத்தை மாற்றிக் கொள்ளுங்கள் என்று வெறுமனே வேண்டுகோள் விடுப்பதோ அல்லது இத்தகைய சமூக ஒடுக்குமுறைக்கான மூல வேர்களைச் சரியாகப் புரிந்து கொண்டிருப்பதோ மட்டும் இத்தகைய அருவருப்பான அமைப்பினை ஒழித்துக்கட்டப் போதுமானதல்ல.
இவ்வாறு ஒடுக்கப்பட்டு அடித்தட்டில் இருப்போரைப் புரட்சிகரமான முறையில் பொருளாதார ரீதியாக மேம்படுத்தாதவரை இக் கொடுமைகளுக்கு முடிவுகட்ட முடியாது. ஆனால் பாஜக அரசு, இக்கொடுமைகள் நீடிக்க வேண்டும் என்று சொல்கிறது. அதற்காகப் பணியாற்றுகிறது.
வரைவு அரசமைப்புச் சட்டத்தை ஏற்பளிப்புக்காக சமர்ப்பிக்கையில் டாக்டர் அம்பேத்கர் கூறியவார்த்தைகளை மீண்டும் ஒருமுறை நாம் நினைவு கூர்வது அவசியம்:
“1950 ஜனவரி 26 அன்று முரண்பாடுகளின் மத்தியில் ஒரு வாழ்க்கையை வாழ்வதற்காகப் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
அரசியலில் நாம் சமத்துவத்தைப் பெற இருக்கிறோம். ஆனால் சமூக மற்றும் பொருளாதார வாழ்வில் சமத்துவமின்மையைப் பெற இருக்கிறோம். அரசியலில், ஒரு மனிதனுக்கு ஒரு வாக்கு மற்றும் ஒரு வாக்கிற்கு - ஒரு மதிப்பு என்பதைக் கொள்கைரீதியாக அங்கீகரித்திருப்போம். ஆனால் நம் சமூக மற்றும் பொருளாதார வாழ்வில், நம் சமூக மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பின் காரணமாக, ஒரு மனிதன் - ஒரு மதிப்பு என்னும் கொள்கையை மறுக்கும் நிலையைத் தொடரப் போகிறோம். இத்தகைய முரண்பாடுகளுடனான வாழ்க்கையை இன்னும் எவ்வளவு காலத்திற்குத் தொடரப் போகிறோம்?
நம் சமூக மற்றும் பொருளாதார வாழ்க்கையில் சமத்துவத்தை மறுக்கும் போக்கை இன்னும் எவ்வளவு காலத்திற்குத் தொடரப் போகிறோம்? இவ்வாறு நாம் வெகுகாலத்திற்கு மறுப்பது தொடருமேயானால், அது நம் அரசியல் ஜனநாயகத்தையே இடருக்குள்ளாக்கிடும்.’’
இத்தகைய பிரச்சனைகளை விவாதித்திடும் மாணவர் வாசிப்பு வட்டங்களைத் தடைசெய்வ தென்பது, எதிர்காலத்தில் மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியா மிகப்பெரிய அளவில் நெருக்கடிக்கு உள்ளாக இருக்கிறது என்பதற்கு  நிச்சயமான அடையாளமாகும்.

நன்றி: தி இந்துஸ்தான் டைம்ஸ் நாளேடு
தமிழில்: ச.வீரமணி


No comments: