Sunday, April 5, 2015

ஆள்வோரின் சூழ்ச்சியை முறியடிப்போம்!


காஷ்மீர் பள்ளத்தாக்கில் மீண்டும் ஒருமுறை வெள்ளத்தால் பேரழிவு ஏற் பட்டிருக்கிறது. இதன் தாக்கம் விரைவில் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திலும் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளிலும் உணரப்படும். இந்த மாநிலம் முந்தைய இயற்கைப் பேரிடரினால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்தே இன்னும் மீளமுடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. சட்ட மன்றத் தேர்தல்களும், அதனைத் தொடர்ந்து பாஜகவிற்கும் பிடிபி-க்கும் இடையே அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக, கொள்கை எதுவுமற்ற ஒரு கூட்டணி அமைவதற்கான பேச்சுவார்த்தை இழுத்தடித்துக் கொண்டி ருந்ததும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் போய்ச் சேருவதைத் தாமதப்படுத்திக் கொண்டே வந்தன.
முந்தைய இயற் கைப் பேரிடருக்கான நிவாரணம் தொடங்கு வதற்கு முன்னதாக, மீண்டும் ஒரு கொடூர மான இயற்கைப் பேரிடர் இப்போது மீண்டும் மக்களைக் கடுமையாகத் தாக்கி, கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. ஜம்மு - காஷ்மீர் மாநில மக்களுக்கும் மாநில நிர்வாகத்திற்கும் அனைத்து விதமான உதவிகளும், வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள மக்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்குத் தேவைப்படும் ராணுவத்தினரின் உதவிகளையும் மற்றும் தேவையான அனைத்து நிவாரண உதவிகளையும் அளிக்க வேண்டி யது மத்திய அரசின் தலையாய கடமை யாகும்.
அதேபோன்று பருவம் தவறி பெய் துள்ள மழையாலும், புயல்காற்றாலும், வடஇந்தியாவில் பல மாநிலங்களில் விளைந்துள்ள வேளாண் பயிர்கள் கடும் நாசம் அடைந்துள்ளன. இதனால் கிராமப் புறங்களில் பாதிக்கப்பட்டுள்ள கோடிக்கணக்கான விவசாயிகளின் துன்ப துயரங்களைப் போக்குவதற்கு முன் வராது, மோடி அரசாங்கமானது பாதிப்புக் குள்ளான பகுதிகள் குறித்து குறைத்து மதிப்பிடுவதிலேயே அக்கறைகாட்டி வரு கிறது. ஆரம்பத்தில் 181 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் சேதத்திற்குள்ளானதாக மதிப் பிடப்பட்டிருந்தது. இப்போது அது, 106 லட்சம் ஹெக்டேர் நிலம்தான் என்று குறைக்கப்பட்டிருக்கின்றது.
மத்திய அரசு, மாநில அரசுகளைச் சேதத்தின் மதிப்பீட்டைக் குறைத்துக்காட்டி அனுப்பி வைக்குமாறு “நிர்ப்பந்திப்பதாக’’ பீகார்அரசு கடுமையாக விமர்சனம் செய்திருக் கிறது. (தி இந்து, மார்ச் 31, 2015)இவ்வாறு கடும் பயிர்ச்சேதத்திற்கு இதுவரை 14 மாநிலங்கள் உள்ளாகியுள்ளன. இவற்றில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத், ஹரியானா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், உத்தர்காண்ட், இமாசலப் பிரதேசம், ஜம்மு - காஷ்மீர், தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்ட்ரா மாநிலங்களும், பீகாரும் அடங்கும்.
நாட்டில் ஏற்கனவே வேளாண் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள விவசாயிகளை இது மேலும் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளியிருக்கிறது. கடந்த சம்பா பருவத்தில் பயிரிடப்படும் நிலத்தின் மொத்தப் பரப்பளவு கடுமையாக வீழ்ச்சி அடைந்திருந்தது. சுதந்திரம் பெற்றபின் இவ்வாறு வீழ்ச்சி அடைந்தது இதுவே முதன்முறையாகும். வேளாண் மையில் ஈடுபடுவது, தங்கள் அடிப் படை வாழ்வாதாரங்களைத் தக்கவைத்துக் கொள்வதற்குக் கூட பயன்பட வில்லை என்ற காரணத்தால் பெரும் பகுதி விவசாயிகள் வேளாண் தொழிலை விட்டு வெளியேறிவிட்டார்கள் என்பது தெளிவு. இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை.
மத்திய அரசின் கீழ் இயங்கும் வேளாண் செலவினங்கள் மற்றும் விலைகளுக்கான மத்திய நிறுவனம் நிர்ணயித்துள்ள உற்பத்திச் செலவினம் குறித்த தொகையைவிடக் குறைவாகத்தான் குறைந்தபட்ச ஆதார விலைகடந்த மூன்று ஆண்டுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு வருவதாக, சென்றஆண்டு நாடாளுமன்றத்தில் முந் தைய ஐமுகூ-2 அரசாங்கத்தின் சார்பில் வேளாண்துறையின் முன்னாள் அமைச்சர் சரத் பவார் ஒப்புக்கொண்டி ருந்தார். வேளாண்மைச் செலவினங் களுக்காக விவசாயிகள் கடன் வாங்கி யதை அடைக்க முடியாது திண்டாடிக் கொண்டிருக்கின்றனர். ஆயினும், வேளாண் உற்பத்தியில் ஆதாயம் இல்லாததால், கடன் வலையிலிருந்து மீள முடி யாது, பல விவசாயிகள் தற்கொலைப் பாதைக்குத் தள்ளப்படுகின்றனர்.
இவற்றின் காரணமாக, விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. “பருவம் தவறிபெய்த மழை வடநாட்டின் பல பகுதிகளிலும் மிகப்பெரிய அளவிற்கு குளிர்காலப் பயிர்களையும் மிகவும் மோசமாகப் பாதித்திருக்கிறது. இதுவும் விவசாயி களின் தற்கொலைகளுக்கு முக்கிய காரணமாகும்’’ என்று அறிக்கை ஒன்றுதெரிவிக்கிறது. மேலும், அந்த அறிக்கையானது “பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவ எவ்வித நடவடிக்கையும் மோடி எடுக்கவில்லை என்றும் வேளாண் விளைபொருள்களின் விலைகள் நிலையாக இருப்பதற்கும் எவ்வித உத்தர வாதத்தையும் மோடியால் அளிக்க முடியவில்லை என்றும் கிராமத்தினர் குறைகூறுகிறார்கள்’’ என்று குறிப்பிட்டிருக் கிறது.
மிகவும் விளம்பரப்படுத்தப்பட்ட பிரதமர் மோடியின் வானொலி உரை யான, “மனதின் குரல்’’ என்கிற உரையில், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி கள் “பொய்களைப் பரப்புவதாக’’க் குறிப் பிட்டதுடன், நிலம் கையகப்படுத்தல் சட்டமுன்வடிவு கிராமப்புறங்களில் வேலைகளை உருவாக்க உதவும் என் றும் குறிப்பிட்டார். இது தொடர்பாக உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த, ஆர்எஸ்எஸ்/பாஜகவின் கீழ் இயங்கும் பாரதிய விவ சாய சங்கத்தின் மாவட்டத் தலைவர் புத்தா சிங் என்பவர், “பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவுவதற்கு உருப்படியான நடவடிக்கை எதுவும் எடுப்பதற்குப் பதிலாக, குறிப்பாக இம்மாதம் கடுமையாக மழை பெய்தபின்பு, மோடியும் அவரது அரசாங்கமும் நிலம் கையகப்படுத் தல் சட்டமுன்வடிவைக் கொண்டுவருவ திலேயே தன் நேரத்தையும் சக்தியையும் செலவு செய்து கொண்டிருக்கின்றன.“
(2015 மார்ச் 31, மின்ட், ஏட்டில் வெளியாகி இருந்த ரெய்ட்டர் அறிக்கையின் மேற்கோள் என்று கூறினார்). “பொய்களைப் பரப்புகின்றன’’ என்று பிரதமர் மோடிஎதிர்க்கட்சிகள் மீது `குற்றம்’ சுமத் தினார் அல்லவா? உண்மையில் யார்“பொய்களைப் பரப்புவது’’ என்பது இதன் மூலம் நன்கு தெளிவாகும். ஓர் ஆங்கிலப் பழமொழி கூறுவதுபோல, “செருப்பு கால்மாற்றி போடப்பட்டிருக்கிறது.’’இவற்றின் விளைவாக நாட்டில் உணவு தானியங்கள் உற்பத்தி கணிசமான அளவிற்கு வீழ்ச்சி அடைந்திருக்கிறது.
பொது விநியோக முறையை வலுப் படுத்தி, நாட்டு மக்களுக்கு உணவு தானியங்கள் போய்ச்சேருவதை உத்தரவாதப் படுத்துவதற்குப் பதிலாக, மோடி அரசாங்கமானது, நாட்டின் ஒட்டுமொத்த பொருளா தார வளர்ச்சியைத் தூக்கிநிறுத்த வேண்டும் என்பதற்காக, வேளாண் உற்பத்திப் பொருள்களை ஏற்றுமதி செய்வதி லேயே குறியாக இருக்கிறது. இதன் காரணமாக நம் நாட்டில் மக்கள் பட்டினியால் பாதிக்கப்படுவது குறித்தோ, சமூகத்திற்கு இதுநாள்வரை உணவை அளித்து வந்த உழவர்களே இன்றைய தினம் உண வில்லாமல் பசி, பட்டினியால் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டு, தற்கொலைப் பாதைக்கு அவர்கள் தள்ளப்படுவது குறித்தோ மோடி அரசாங்கம் கிஞ்சிற்றும் கவலைப்படாது,
உழவர்கள் உற்பத்தி செய்த அரிசி, தேயிலை, காப்பி, தானியங்கள், எண் ணெய் வித்துக்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் என அனைத்தையும் வெளி நாட்டிற்கு ஏற்றுமதி செய்வதிலேயே குறியாக இருக்கிறது. அடுத்து, நம் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார நிலைமை குறித்து, எதார்த்த நிலை என்ன என்பதைப் பார்ப்போம். “வருடாந்திர உள்கட்டமைப்பு வளர்ச்சி விகிதம் 2015 பிப்ரவரியில் 1.4 சதவீத அளவிற்கு மந்தமாகி இருக்கிறது. இதற்குப் பிரதான காரணம், உருக்கு, ரசாயன உரம் மற்றும் சுத்திகரிப்புப் பொருட்களின் உற்பத்தி கடுமையாகக் குறைந் திருப்பதேயாகும் என்று அரசின் புள்ளிவிவரங்களே செவ்வாய் அன்று காட்டி யிருக்கிறது. (2015 மார்ச் 31).
இயற்கை எரிவாயு, உருக்கு மற்றும் கச்சா உற்பத்தி 8.1 சதவீதம், 4.4 சதவீதம் மற்றும் 1.9 சதவீதம் அளவிற்கு முறையே வீழ்ச்சி அடைந்திருக்கின்றன. இவ்வாறு மத்தியவர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரி விக்கிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த தொழில்உற்பத்தியில் நிலக்கரி, கச்சா எண்ணெய், எண்ணெய் சுத்திகரிப்பு, இயற்கை எரிவாயு, உருக்கு, சிமெண்ட், மின்சாரம் மற்றும் ரசாயன உரங்கள் 37.9 சதவீதமாகும். (பிசினஸ் ஸ்டாண்டர்டு, மார்ச் 31, 2015)நிலைமைகள் இவ்வாறு இருந்தும் கூட, மோடி அரசாங்கம், தரவு கணக் கீடுகளுக்கான “அடிப்படை ஆண்டை’’ மாற்றி இருக்கிறது.
இவ்வாறு மாற்றி அமைத்ததன் மூலம் உலகில் பொருளா தாரத் துறையில் மிக வேகமாக வளர்ந்துகொண்டிருப்பதுபோன்று ஒரு சித்திரத் தை ஊடகங்களின் மூலம் திட்டமிட்டுத் தீட்டிக் கொண்டிருக்கிறது. உண்மையில் மோசமாகிக் கொண்டிருக்கும் பொரு ளாதார நிலை குறித்து, மக்கள் மனதின் குரலை பிரதமர் மோடி கேட்க வேண்டிய தருணம் இதுவாகும். மோடி அரசாங்கம் இவ்வாறு பொருளாதார நிலைமைகள் குறித்து அளித்துள்ள நன்னம்பிக்கை, இந்தியகார்ப்பரேட்டுகளால் ஏற்றுக்கொள்ளப்பட வில்லை.
2015 மார்ச் மாத பிடிஐ செய்திநிறுவனத்தின் செய்தியின்படி, “இந்திய பெரும் கார்ப்பரேட்டுகள் தங்கள்முதலீடுகளை அதிகரித்திட இன்ன மும் திட்டமிடவில்லை. இந்தியப் பெரும்கார்ப்பரேட்டுகளின் மூலதனச் செல வினம் 2014இல் இருந்ததைவிட வரும் 2016இல் சுமார் 10-15 சதவீதம் வீழ்ச்சி அடையும் என்று நாங்கள் நம்புகிறோம்,’’ என்று குறிப்பிட்டிருக்கிறது. இதற்குக் காரணம் என்ன? “இந்தியக் கார்ப்பரேட் டுகள் அரசாங்கத்தின் சீர்திருத்தங்கள் காரணமாக அல்லது ஆட்சியாளர்கள் கூறுவது போன்ற இந்தியப் பொருளாதாரத்தின் முன்னேற்றம் காரணமாக இன்னமும் பயன் அடையவில்லை’’ என்று அது கூறுகிறது.
2014 உடன் 2016ஐ ஒப்பிடுகையில், பொருளாதார மந்தம் உள்கட்டமைப்புத் துறையில் 20 சதவீதம் அளவிற்கும், உலோகங்கள் மற்றும் நிலக்கரித்துறை யில் 30 சதவீதமும் குறைந்திருக்கும் என்றும் அறிக்கை மேலும் கூறுகிறது. 2014 மூன்றாவது காலாண்டுக்குப் பின்னர், மோடி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபிறகு, இந்தியாவில் வேலைவாய்ப்பு நிலைமையும் மிகவும் பரிதாபகரமான நிலைக்குச் சென்றுவிட்டது என்று ஒரு மதிப்பீடு தெரிவிக்கிறது. இரண்டாவது காலாண்டுடன் ஒப்பிடுகையில், வேலைவாய்ப்பு 13.2 சதவீதம் வீழ்ச்சி அடைந்ததாக அது குறிப்பிடுகிறது. மக்க ளின் வாழ்நிலையைப் பொறுத்தவரை, அவர்களின் வாழ்நிலைமை மோசமாகிக் கொண்டிருப்பது தொடர்கிறது. அத் தியாவசியப் பொருள்களின் விலைகள் தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக் கின்றன. காய்கறிகள், பழங்கள், உணவுதானியங்கள், வெங்காயம், சர்க்கரை, சமையல் எரிவாயு மற்றும் எல்லாவற் றிற்கும் மேலாக எரிபொருட்களின் விலைகள் உயர்ந்திருப்பதே இதற்குக் காரணமாகும். நாம் முன்பே குறிப்பிட் டிருந்ததைப்போல, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை வீழ்ச்சி அடைந்த போதிலும், அதன் பயன்கள் மக்களுக்குத் திருப்பிவிடப்பட வில்லை. மாறாக, மோடி அரசாங்கம் கலால் வரியை நான்கு தடவைகள் செங்குத்தாக உயர்த்தி, அரசாங்கத்தின் வருவாயைப் பன்மடங்கு பெருக்கிக் கொண்டுவிட்டது.
இதுதான் எதார்த்த நிலை பிரதமர் மோடி அவர்களே. எனவே, “பொய்களைப் பரப்பிக் கொண்டிருப்பது’’ யார்? எதிர்க் கட்சிகளா, அதிலும் குறிப்பாக இடது சாரிக் கட்சிகளா? அல்லது இந்த அரசாங்கமா?மோடி அரசாங்கத்தின் ஓராண்டு நிறைவு அடைவதற்கு முன்பாகவே, மக்களின் வாழ்வாதாரங்கள் மீது கடும் தாக்கு தல்கள் தொடுக்கப்பட்டுவிட்டன. மேலும், மோடி அரசாங்கத்தின் அரவணைப் போடு, மதச் சிறுபான்மையின ருக்கு எதிராக ஆர்எஸ்எஸ் மற்றும் அதன்கீழ் இயங்கும் அமைப்புகள் கட்டவிழ்த்து விட்டுள்ள தாக்குதல்களும், மதச் சகிப் பின்மையும் அதிகரித்து வருகின்றன. இவை, சமூக நல்லிணக்கத்திற்கும், மக்களின் ஒற்றுமை மற்றும் நாட்டின் ஒருமைப் பாட்டிற்கும் பெரும் சவால்களாக எழுந்துள்ளன.
நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாத்திட இவர்களின் சூழ்ச்சித் திட்டங்கள் முறியடிக்கப்பட்டாக வேண்டும். மக்களின் மகத்தான மற்றும் சக்திமிக்க போராட்டங்கள் மூலமாகவே இதனை எதிர்கொள்ள முடியும்.
(ஏப்ரல் 1, 2015)
தமிழில்: ச.வீரமணி



No comments: