நாஜி கொள்கைப் பரப்பு அமைச்சர் ஜோசப் கோயபல்ஸ், ஹிட்லரின் பாசிஸ்ட் பாணி
பிரச்சாரத்தைக் கட்ட விழ்த்து விட்ட அமைச்சராவார். “நீங்கள் ஒரு பொய்யைத் திரும்பத்
திரும்பச் சொல்லிக்கொண்டே இருங்கள், அது உண்மையாகிவிடும்,’’ என்பதே அவரது பாணி.இத்தகைய
கோயபல்ஸ் பிரச்சார உத்தியைத்தான் இப்போது மீண்டும் பிரதமர் மோடி, கோயபல்சையே விஞ்சக்
கூடிய அளவிற்குத் தன் கையில் எடுத்துக் கொண்டிருக்கிறார்.
மத்திய அரசுக்குச் சொந்தமான அகில இந்திய வானொலியின் அனைத்து நிலையங்களாலும்,
மார்ச் 22 அன்று ஒலிபரப்பப்பட்ட, “மனதின் குரல்’’ நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி,
நிலம் கையகப்படுத்தல் மசோதா மீது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு, எழுப்பிய
ஆட்சேபணைகள் அனைத்தும் “பொய்களின்’’ மூட்டை என்றும், விவசாயிகளின் நலன்களை வேரறுப்பதற்கான
“சதி’’யின் ஒரு பகுதி என்றும் அளந்துவிட்டுள்ளார். “அரசாங்கத்தால் தாக்கல் செய்யப்பட்டுள்ள
சட்ட முன்வடிவிற்குக் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத உரை’’ பிரதமரின் வானொலி உரை என்று,
தேசிய நாளேடுகள் பலவும் தலையங்கங்கள் தீட்டியிருக்கின்றன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யைப் பொறுத்தவரை, ஐமுகூ அரசின் சட்டமுன்வடிவில்
அளிக்கப்பட் டிருந்த குறைந்தபட்ச உரிமைகள் மற்றும் உத்தரவாதங்கள்கூட இவர்கள் கொண்டுவரவிருக்கும்
சட்டமுன்வடிவில் இல்லை என்று குறிப்பிட்டிருந் தோம். இவை அன்றைய காங்கிரஸ் தலை மையிலான
ஐமுகூ அரசாங்கத்தில் கொண்டுவரப்பட்டபோது நாடாளு மன்றத்தின் இரு அவைகளிலும் பாஜக வும்
சேர்ந்துகொண்டு நிறைவேற்றின.
நவீன தாராளமய பொருளாதார சீர்திருத் தங்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில்
காங்கிரசுக்கும் பாஜகவிற்கும் இடையே மிகவும் தெளிவான முறையிலேயே கூட்டணி (மேட்ச் பிக்சிங்)
உண்டு என்று நாம் குற்றம்சாட்டி வந்திருக்கிறோம். நிலம் கையகப்படுத்தல் சட்டத்தின்கீழ்
நிலம் கையகப்படுத்தும் சமயத்தில் அதனால் பாதிக்கப்படும் விவசாயிகள் நிலத்தின் மதிப்பு
உயரும்போதெல்லாம் தொடர்ந்து பயன்பெறக்கூடிய அளவிற்கு ஷரத்துக்கள் உருவாக்கப்பட வேண்டும்
என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் பரிந்துரைத்திருந்தோம். இத்தகைய
முன்மொழிவுகளை காங்கிரசும் பாஜகவும் இணைந்துநின்றே எதிர்த்தன.
எது பொய் மூட்டை?
எதிர்க்கட்சிகளின் ஆட்சேபணை கள் “பொய்கள்’’ அடங்கிய மூட்டை என்றுபிரதமர்
கூறியுள்ள குற்றச்சாட்டு குறித்து தற்போது ஆராய்வோம். 2013ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்தல்
சட்டத்தை பாஜக முழுமை யாக ஆதரித்தது என்று கூறுவது பொய்யா? இல்லை எனில், பின் ஏன் இப்போது
மாற்றங்கள் செய்யப்பட்டிருக் கின்றன? ஏற்கனவே கடும் நெருக்க டிக்குள்ளாகி இருக்கின்ற
இந்திய விவசாயிகளின் கொஞ்சநஞ்ச நலன்களையும் காவு கொடுத்து அந்நிய மற்றும் உள்நாட்டு
கார்ப்பரேட்டுகளின் ஆதாயத் திற்காக இத்தகைய திருத் தங்கள் மோடி அரசாங்கத்தால் கொண்டு
வரப்படவில்லை என்று கூற முடியுமா?
இத்தகைய திருத்தங்கள், பிரதமர் மோடி யின் தேர்தல் பிரச்சாரத்திற்காக தாராளமாக
நிதி உதவி செய்தவர்கள் பயன டையக்கூடிய விதத்தில், அவர்களுக்கு `திருப்பிச் செலுத்தும்’
விதத்தில் மேற் கொள்ளப்பட்டுள்ள ஒரு முயற்சி இல்லையா? முன்பு காங்கிரஸ் அரசாங்கம் கொண்டுவந்த
நிலம் கையகப்படுத்தல் சட்டத்தை முழு மையாக ஆதரித்த பாஜகஇப்போது மேலும் பல்வேறு மாற்றங்
களை அவசரம் அவசரமாகக்கொண்டு வருவதற்கான அடிப்படை நோக்கங்கள் குறித்து எண்ணற்ற கேள்விகள்
இதுபோல் தோன்றிக் கொண்டே இருக் கின்றன.
10ஏ பிரிவின் பொருள் என்ன?
முன்பிருந்த சட்டத்தில், நிலம் கையகப்படுத்தப்படும் சமயத்தில், நிலத்திற்குச்
சொந்தமான விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் 70 முதல் 80 சதவீதத்தினர் சம்மதம்
தெரிவிக்க வேண்டும் என்று இருந்தது. மோடி அரசாங்கம் கொண்டுவந்துள்ள அவசரச்சட்டத்தில்
10-ஏ என்று புதிதாக ஒரு பிரிவை உருவாக்கி, தொழில்துறை நிறுவனங்கள் மற்றும் பொது-தனியார்-ஒத்துழைப்புடன்
உருவாக்கப்படும் உட்கட்டமைப்பு திட்டங்கள் உட்பட பல்வேறு காரணங்களுக்காக கையகப்படுத்
தப்படும் நிலங்களுக்கு அவ்வாறு சம் மதம் பெறவேண்டும் என்பதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுவிட்டது.
மோடிஅரசாங்கம் இதன்கீழ் தனியார் பள்ளி கள், தனியார் மருத்துவமனைகள் போன்றவற்றையும்
சேர்த்திருந்தது. மக்களவை யில் இதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, மாநிலங்களவையில்
தற்போது நிலுவையில் உள்ள சட்டமுன்வடிவில் இவை நீக்கப்பட்டிருக்கின்றன. இது பொய்யா,
பிரதமர் மோடி அவர்களே?
6 வகையான நிலங்கள்
முந்தைய சட்டத்தில், சமூகத்திற்கு மிகவும் தேவையான நிலங்கள் எவைஎவை என்று
வல்லுநர் குழுவால் ஆய்வுசெய்யப்பட்டு ஆறு வகையிலான நிலங்களுக்கு, நிலம் கையகப்படுத்தல்
சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந் தன. ஆண்டுதோறும் பலவிதமான பயிர்கள் விளைவிக்கப்படும்
விவசாய நிலங்களுக்கு இதனால் முந்தைய சட் டத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தது. இப்போது
மோடி அரசாங்கம் கொண்டு வந்துள்ள சட்டமுன்வடிவில் மேற்படி ஆறுவகையிலான இனங்களில் ஐந்து
இனங் கள் நீக்கப்பட்டுவிட்டன. இது பொய்யா, திருவாளர் பிரதமர் அவர்களே?
24(2)வது பிரிவை திருத்தியது ஏன்?
நிலம் கையகப்படுத்தல் சட்டத்தின் 24(2)ஆவது பிரிவு திருத்தப்பட்டிருக்
கிறது என்பது பொய்யா, திருவாளர் பிரதமர் அவர்களே? இந்தச் சட்டப்பிரி வானது விவசாயிகளிடமிருந்து
கையகப்படுத்தப்படும் நிலம் என்ன காரணத் திற்காக, கையகப்படுத்தப்படுகிறதோ அந்தக் காரணத்திற்காக
ஐந்தாண்டு களுக்குள் பயன்படுத்தப்படாவிட்டால், மீண்டும் அந்த நிலங்கள் விவசாயி களுக்கே
சொந்தம் என்கிற முறையில் அந்தப் பிரிவு முன்பு அமைந்திருந்தது. மேலும் முந்தைய சட்டத்தில்
விவசாயிக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வில்லை என்றாலோ அல்லது உண்மையிலேயே அந்த நிலம்
எடுத்துக்கொள்ளப்படவில்லை என்றாலோ மீண்டும் அந்த நிலம் விவசாயிக்கே சொந்தம்என்றிருந்தது.
இப்போது இத்திருத்தத் தின் மூலம் விவசாயியின் அந்த உரிமை நீக்கப்பட்டுவிட்டது.
கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக, விவசாயியின் நலன்களுக்கு எதிராக, இந்தச் சட்டத்திருத்தம்
மேற்கொள்ளப்பட வில்லை என்றா கூறுகிறீர்கள், திருவாளர் பிரதமர் அவர்களே?
101வது பிரிவு என்னவாயிற்று?
2013ஆம் ஆண்டு சட்டத்தின் 101 ஆவது பிரிவில், கையகப்படுத்தப்பட்ட நிலம்
பயன்படுத்தப்படாவிட்டால் (அதனைக் கையகப்படுத்தியவரிடமே அல்லது மாநில நில வங்கியிடமே)
ஐந்து ஆண்டுகளுக்குப்பின் ஒப்படைத்து விட வேண்டும் என்று மிகவும் தெளி வாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இப்போது அது திருத்தப்பட வில்லை என்று கூறுகிறீர்களா, திருவாளர் பிரதமர் அவர்களே?இத்திருத்தம்
விவசாயிகளின் நலன்களுக்கு எதிராகப் போகாது என்கிறீர் களா?
நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் சென்றவாரம் மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது
சம்பந்தப்பட்ட அமைச்சர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில் ஒன்றில், சிறப்புப் பொருளாதார
மண் டலங்களுக்காக கையகப் படுத்தப்பட்ட நிலங்களில் கிட்டத்தட்ட பாதி அளவு நிலம் ஐந்தாண்டுகள்
கடந்த பின்னரும் பயன்படுத்தப்படாமல் வீணாகக் கிடக்கின்றன என்று கூறியிருந்தார். தொழில்மையங்கள்
அமைப்பதற்காக அமைக்கப்படும் - சாலை போக்குவரத்து அல்லது ரயில் போக்குவரத்திற் காக அமைக்கப்படும்
- பாதையில் இரு மருங்கிலும் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு நிலங்களைக் கையகப்படுத் தக்கூடிய
விதத்தில் முன்பிருந்த வரையறை விரிவாக்கப்பட்டு திருத்தப்படவில் லையா? முந்தைய சட்டத்தில்
எந்த அளவிற்குக் குறைவாக நிலம் தேவைப் படுமோ அந்த அளவிற்குக் கையகப்படுத் தினால் போதும்
என்றிருந்த நிபந்தனை இதன்மூலம் மீறப்பட வில்லையா?
ரியல் எஸ்டேட் முதலைகளிடம் போனதா? இல்லையா?
யமுனா எக்ஸ்பிரஸ்வே அமைக் கப்படுவதற்காக அதன் இருமருங்கிலும் கையகப்படுத்தப்பட்ட
நிலங்கள் பின்னர் உத்தரப்பிரதேசத்தில் ஜேப்பிகுரூப் போன்ற ரியல் எஸ்டேட்ஜாம்பவான்களிடம்
ஒப்படைக்கப் பட்டிருக்கிறது என்கிற உண்மையை ஒப்பிட்டுப்பார்த்தோமானால் இவ் வாறு திருத்தப்பட்டதற்கான
முக்கியத் துவத்தை மிக எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். விவசாயிகள் பயன் அடைவதற்காகத்தான்
இவ்வாறு திருத்தம் செய்யப்பட்டிருக்கிறதா, திரு வாளர் பிரதமர் அவர்களே?
150கி.மீ. நிலம் பறிக்கப்பட்டதா? இல்லையா?
ஜப்பான் அரசாங்கத்துடன் கூட்டாக மேற்கொள்ளப்பட்டுள்ள தில்லி-மும்பை இடையேயான
தொழிற் சாலை மையத்திற்காக “வளர்ச்சித் தேவை களுக்கு’’ என்று இரு மருங்கிலும் சுமார்
150 கிலோ மீட்டர் தூரத்திற்கு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டிருக்கிறது என்பது உண்மை
இல்லையா, திருவாளர் பிரதமர் அவர்களே?
தேசிய நெடுஞ்சாலையிலோ, மாநில அரசின் கீழான நெடுஞ்சாலையிலோ அல்லது ரயில்வே
பாதையின் இரு மருங்கிலுமோ ஒரு கிலோ மீட்டர் கையகப் படுத்தப்பட்டால்கூட, “வளர்ச்சித்
தேவை’’ என்பதன் கீழ் அளிக்கப்படும் இழப்பீட்டுத்தொகை மொத்த பயிர்ப் பாசன நிலத்தின்
மதிப்பில் 31.9 சதவீத அளவிற்குத்தான் என்பதுதான் உண்மை, இல்லையா? இதைப் பொய் என்கிறீர்களா,
திருவாளர் பிரதமர் அவர்களே?
2013ஆம் ஆண்டு சட்டத்தில் விவசாயத் தொழிலாளர்களுக்கும் மற்றும் விவசாய
நிலத்தைச் சார்ந்திருந்த இதர பிரிவினருக்கும் அவர்களு டைய வாழ்வாதாரங்களுக்காக அளிக்கப்பட்டிருந்த
பல்வேறு பாது காப்பு அம்சங்கள், தற்போது தாங்கள் கொண்டுவந்திருக்கிற சட்ட முன்வடிவில்
நீர்த்துப் போகச் செய்யப் பட்டிருக்கின்றன என்பது உண்மை இல்லையா?
அதற்குப் பதிலாக, விவ சாயத் தொழிலாளர்களுக்கு மட்டும் வேலைவாய்ப்புக்காக
சில ஷரத்துக்கள் மட்டும் அளிக்கப்பட்டு, நிலமற்ற இதர பகுதி மக்களின் வாழ்வாதாரங்கள்
கடுமையாகப் பாதிக்கப்படக்கூடிய விதத்தில் இல்லையா?
இவை அனைத்தும் பொய்யா, திருவாளர் பிரதமர் அவர்களே?
இதே தொனியில் நாம் தொடர முடியும். ஆயினும், பிரதமரால் எதிர்க்கட்சிகள்
மீது சுமத்தப்பட்டுள்ள “பொய்கள்’’ மூட்டை குறித்து அளித்துள்ள விவரங்கள் எந்த அளவிற்குப்
பொய் என்பதை அம்பலப்படுத்த இவை போதுமானவைகளாகும். தேர்தல் பிரச்சாரத்தின்போது தாராளமாகத்
தனக்கு உதவிய கார்ப்பரேட்டு களுக்கு “திருப்பி அளிக்கும் காலத் தில்’’ போதுமான அளவிற்கு
உதவி செய்ய முடியவில்லையே என்கிற மோடி அரசாங் கத்தின் விரக்திதான், எதிர்க்கட்சிகளால்
முன்வைக்கப்பட்ட “பொய்கள்’’க்கு எதிராக, உண்மையல்லாதவற்றைக் கூறு வதற்கு பிரதமரை இட்டுச்சென்றுள்ளது
என்றே தோன்றுகிறது.நம்முடைய பொருளாதாரத்தை `சலுகை சார் முதலாளித்துவத்திற்கு’ முற்றிலுமாக
உட்படுத்த முயலும்முயற்சிகளிலிருந்து பாதுகாப்பதற்காக வும், உலகத்தில் உள்ள அனைவருக்கும்
உணவினை அளித்து அச்சாணிபோன்று விளங்கும் நம் உழவர்களைப் பாதுகாப் பதற்காகவும், அவர்களை
மேலும் நெருக்கடிக்குள்ளாக்கி அவர்களைத் தற்கொலைப் பாதையிலிருந்து தடுத்து நிறுத்துவதற்காகவும்தான்
இச்சட்ட முன்வடிவை நாம் எதிர்க்கிறோம். மாபெரும் மக்கள்போராட்டங்கள் மூலமாக, நம் விவசாயிகள்
வாழ்வையும், அதன்மூலம் இந்திய விவசாயத்தை யும், சூறையாடக் கூடிய மிகவும் பிற் போக்குத்தனமான
இச்சட்டமுன்வடிவு நிறைவேற்றப்படாமல் தடுத்திட நாடாளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள எதிர்ப்பு
வலுப்படுத்தப்பட வேண்டும்.
(மார்ச் 25,
2015)
(தமிழில்: ச.வீரமணி)
1 comment:
Don't try to malign our PM. He is a great leader for economic prosperity. There are many selected content from Modi speech. An example is he raised the compensation to farmers by four times value. Why r u hiding it?
Post a Comment