Sunday, March 3, 2013

கருணையற்ற, கொடூரமான தாக்குதலுக்கு முன்னோட்டம்



மத்திய அரசு நாடாளுமன்றத்தில் 2012-13ஆம் ஆண்டுக்கான பொரு ளாதார ஆய்வறிக்கையையும் அதனைத் தொடர்ந்து அடுத்த நாள் 2013-14ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டையும் சமர்ப்பித்துள்ளது. பொருளாதார ஆய்வறிக்கை சுமார் 300 பக்கங்களையும் அதனுடன் பொருளாதார விவரக்குறிப்புகள் 178 பக்கங்களையும் கொண்டுள்ளது. இவை நம் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 2012-13ஆம் ஆண்டில் 5 விழுக்காடு என்று மத்தியப் புள்ளியியல் ஸ்தாபனம் மதிப்பிட்டுள்ளது மிகச்சரியானது என்ற மேற்குறிப்பையும் அளித்துள்ளது. இந்தியப் பொருளாதார வளர்ச்சியை இது குறைத்து மதிப்பிட்டிருப்பதாக மத்திய நிதி அமைச்சரும் அவரது அமைச்சகமும் ஆட்சேபித்துள்ளன. ஆய்வறிக்கையில் 2009-10ஆம் ஆண்டில் 9.3 விழுக்காடாக இருந்த வளர்ச்சி விகிதம் 2011-12இல் 6.2 விழுக்காடாகவும். பின்னர் 2012-13இல் 5.0 விழுக்காடாகவும் வீழ்ந்துவிட்டது என்று குறிப்பிட்டிருக்கிறது. இவ்வாறு மந்தமானதற்கான காரணிகளையும் அது குறிப்பிட்டிருக்கிறது. உலகப் பொருளாதார நெருக்கடியை அடுத்து கார்ப்பரேட் மற்றும் உள்கட்டமைப்பு முதலீடு மந்தமாகிவிட்டது என்று அது சுட்டிக்காட்டியுள்ளது.அதுமட்டுமல்ல, நாட்டின் பொருளாதாரம் ஒட்டுமொத்த அளவில் 2013-14ஆம் ஆண்டில் 6.1 விழுக்காட்டிலிருந்து 6.7 விழுக்காட்டளவிற்கு வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று ஆய் வறிக்கை சித்தரித்திருக்கிறது. இதனை எய்திட, முதலீடுகளுக்கான முட்டுக்கட்டைகள் அகற்றப்பட வேண்டும் என்றும், அதற்கேற்ற வகையில் நிதிக்கொள்கைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றும் அது கூறியிருக்கிறது. இவ்வாறு மாற்றியமைத்தோமானால், அது உயர் வளர்ச்சி விகிதத்திற்கும் வேலை வாய்ப்புப் பெருக்கத்திற்கும் இட்டுச் செல்லும் என்றும் அது குறிப்பிட்டிருக்கிறது. கடந்த காலங்களில் பலமுறை சுட் டிக்காட்டியிருப்பதைப் போல, முதலீடுகளுக்கான வள ஆதாரங்களை உருவாக்குவதன் மூலம் மட்டுமே வளர்ச்சி வந்து விடாது. அத்தகைய முதலீடுகளின் மூலமாக உற்பத்தி செய்யப்பட்டவை, சந்தையில் நுகர்வோரால் வாங்கப்பட வேண்டும்.
அப்போதுதான் வளர்ச்சி சாத்தியமாகும். ஆனால் மக்களின் நுகர்வு சக்தி (consumption power) கூர்மையாக வீழ்ச்சியடைந்திருக்கிறது என்று ஆய் வறிக்கை குறிப்பிடுகிறது. பொருளாதாரத்தில் இறுதி நுகர்வு சராசரியாக ஆண்டுக்கு 8 விழுக்காடாக இருந்தது, மேலே குறிப்பிட்டதைப்போல, 2012-13ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 4.4 விழுக்காட்டிற்கு வீழ்ச்சியடைந்துவிட்டது. இதனை உயர்த்தாவிட்டால், முதலீடுகளை அதிகப்படுத்தினாலும் வளர்ச்சி வந்து விடாது. ஆய்வறிக்கை, ‘நுகர்வுஅம்சத்தைக் கண்டுகொள்ளாமல், ‘முதலீடுஅம்சத்தை மட்டும் கவனம் செலுத்தி ஆய்வு செய்திருக்கிறது. இது பெரும்பான்மையான நாட்டு மக்களின் அவல வாழ்வை மேலும் அதிகமாக்கிடவே இட்டுச் செல்லும். இவ்வாறு அரசாங்கம் முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக, தற்போது இருந்துவரும் ‘‘முட்டுக்கட்டைகளை’’ நீக்குகிறோம் என்ற பெயரிலும், நிதிக் கொள்கையை எளிமைப்படுத்துகிறோம் என்ற பெயரிலும் அந்நிய மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கவேண்டும் என்று முன் மொழிந்திருக்கிறது.
வளர்ச்சி விகிதம், முதலீட்டு விகிதம் ஆகிய இரண்டுக்கும் இடையே வலுவான வகையில் தொடர்புகள் இருப்பதால், இந்தியாவில் முதலீட் டுக்கான நிதியை அதிகரிப்பதன் மூலம், உயர் வளர்ச்சி விகிதத்தை இந்தியா மீண்டும் அடையும் என்று ஆய்வு அறிக்கை முடிவு செய்திருப்பதுபோல் தோன்றுகிறது. இது ஒரு தவறான கணிப்பு. உற்பத்தி செய்யப்படும் பொருள்களுக்கான தேவை வளராத வரையில், வளர்ச்சி விகிதம் தானாகவே அதிகரித்திடாது. உள்நாட்டுத் தேவை வளராமல் அந்நிய முதலீடுகளை அதிகரிப்பதனால் மட்டும் பயன் இல்லை. இதனால் ஊக நடவடிக்கைகள்தான் அதிகரிக்குமே யொழிய, உற்பத்தி சார்ந்த முதலீடுகளாக இவை இருக்காது. சமீபத்தில் நம் நாட்டில் ரியல் எஸ்டேட் மற்றும் தங்கம் ஆகியவற்றின் விலைகள் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்த அனுபவத்திலிருந்து இதனை நாம் பார்க்க முடியும். பணக்காரர் கள் தங்கள் பணத்தை இத்தகைய வழி களில் செலவிடுவார்கள். விலையுயர்ந்த சொத்துக்கள்” (`valuables’) என்று அழைக்கப்படும் இவற்றில் கலை சார்ந்த வேலைகள், விலையுயர்ந்த உலோகங்கள், கற்கள்ஆகியவை உள்ளடக்கம் என்று ஆய்வு அறிக்கை கூறுகிறது. தற்போதைய விலைகளின் மதிப்பீட்டில், “விலையுயர்ந்த சொத்துக்கள் வடிவத்தில் முதலீடுகள் சுமார் 4.5 மடங்கு உயர்வு 2007க்கும் 2012க்கும் இடையே பதிவு செய்யப்பட்டிருக்கிறது...
. “நாட்டில் 2007க்கும் 2012க்கும் இடையே, விலைவாசி மாறாத காலத்திலும் கூட, விலை உயர்ந்த சொத்துக்களின் பங்கு மொத்த முதலீட்டில் 2.9 விழுக்காட்டி லிருந்து 6.2 விழுக்காடு அளவிற்கு அதி கரித்திருக்கிறது.இவ்வாறாக உற்பத்தியோடு இணைக்கப்படாத முதலீடுகளுக்குள் நிதியங்கள் பெரிய அளவில் திருப்பிவிடப் பட்டிருக் கின்ற போதிலும், ஆய்வறிக்கையானது முதலீடுகளை ஊக்குவிக்க கட்டமைப்பு சீர்திருத்தங்கள் குறித்துப் பேசுகிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், நம் நாட்டில் தங்கள் கொள்ளை லாப வேட்டையை அதிகரித்துக்கொள்ளக் கூடிய விதத்தில் அந்நிய மூலதனத்திற்கும் நம் நாட்டின் மூலதனத்திற்கும் பணக்காரர்களுக்கும் வாய்ப்புவாசல்களை மிக விரிவாகத் திறந்தவிட வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கிறது. இவ்வாறு செய்வதானது இரு இந்தியர்களுக்கும் (ஒளிரும் இந்தியர்களுக்கும் அவலத்தால் அல்லல்பட்டுவேதனையால் வெந்து மடிந்து கொண்டிருக்கும் இந்தியர்களுக்கும்) இடையிலான இடைவெளியே மேலும் மோசமான முறையில் விரிவடைய வைத்திடும்
. வளர்ச்சி விகிதங்கள் மட்டுமே ஒட்டு மொத்த பொருளாதாரம் அல்லது மக்களின் நலனுக்குப் போதுமானதல்ல என்பது உலகம் முழுவதும் உள்ள பொருளாதார வாதிகளால் ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மையாகும். மனிதவள வளர்ச்சிக் குறியீடுகளில் கூறுவதானால், இந்தியா மேலும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட இருக்கிறது. ஆய்வறிக்கையானது 2011ஆம் ஆண்டு ஐ.நா. மனிதவள வளர்ச்சி அறிக்கையை மேற்கோள் காட்டியிருக்கிறது. அதில், இந்தியா, மனிதவள வளர்ச்சி அடைந்துள்ள 187 நாடுகளின் வரிசையில், மேலும் சரிவடைந்து 134ஆவது நாடாக இறங்கி விட்டது என்று குறிப்பிட்டிருக்கிறது. இலங்கை மற்றும் வங்கதேச நாடுகளின் நிலைமைகளைவிட இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளது. பிரிக்ஸ்’ (BRICS-Brazil, Russia, India, China, South Africa) நாடுகளிலேயே இந்தியாதான் மிகவும் கீழ் நிலையில் உள்ள நாடாகும். சுகாதாரச் செலவினங்களிலும் இதுதான் நிலைமை. சுகாதாரத் துறையில் பொதுச் செலவினம் என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.2 விழுக்காடு அளவிற்கு தேக்கநிலையில் இருக்கிறது. சுகாதாரத் துறையில் தனியார் கொள்ளையடிக்க வசதிகளைச் செய்து தந்தபின், சுகாதாரத்துறையில் தனியார் செலவினம் என்பது மொத்த உள் நாட்டு உற்பத்தியில் 2.9 விழுக்காடு அளவிற்கு பொது செலவினத்தைவிட இரு மடங்கு அளவிற்கு அதிகரித்திருக்கிறது. இதன் விளைவாக, மருந்துகளின் விலைகளும், மருத்துவ சிகிச்சைக்காக மக்கள் செலவழிப்பது என்பதும் மட்டுமீறிய அள விற்கு அதிகரித்திருக்கின்றன. இவை, நம் மக்கள்தொகையில் மேலும் மூன்று கோடி மக்களை ஒவ்வோராண்டும் வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழும் மக்கள் வரிசைக்குத் தள்ளும் என்று மதிப்பிடப் பட்டிருக்கிறது.
உலகப் பொருளாதார மந்த நிலைமை காரணமாக நம் நாட்டின் நிதிநிலை மையை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஆய்வறிக்கை சுட்டிக்காட் டியிருக்கிறது. இந்த நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில், கார்ப்பரேட்டுகளின் வருமான வரி 4.9 விழுக்காடும், சுங்கவரி 18.9 விழுக்காடும், மத்திய கலால் வரி 16 விழுக்காடும் வீழ்ச்சியடையும் என்று மதிப்பிட்டிருக்கிறது. ஆயினும், மத்தியதர வர்க்கம் செலுத்தி வரும் வரு மான வரி (personal income-tax) 7.6 விழுக் காடும், சேவை வரிகள் கிட்டத்தட்ட 5.9 விழுக்காடும் அதிகரித்திடும். பணக்காரர்களும், இந்திய முதலாளிகளும் குறைவாக வரி செலுத்தக்கூடிய அதே சமயத்தில், ஊதியம் பெறும் ஊழியர்களும், மத்தியதர வர்க்கமும் மிகப்பெரிய அளவிற்கு அதனை ஈடுசெய்யக்கூடிய வகையில் வரிகளைச் செலுத்த வேண்டும் என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது. அதுமட்டுமல்ல, நிதிநிலைமையை வலுப்படுத்திட ஏழை மக்களுக்கு உச்ச வரம்பு எதுவுமின்றி அளித்துவரும் மானியங்களை கடுமையாகக் குறைக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறது. சுமார் 1 லட்சத்து 66 ஆயிரத்து 824 கோடி ரூபாய் அளவிற்கு மான்யங்களை வெட்டிக் குறைக்க வேண்டும் என்று அது மதிப்பிட்டிருக்கிறது. 2012-13ஆம் ஆண்டில் நிதிப்பற்றாக்குறை 5 லட்சத்து 13 ஆயிரத்து 590 கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. நாம் திரும்பத் திரும்பக் கூறி வந்திருப்பதைப்போல, அரசாங்கம் கார்ப்ப ரேட்டுகளிடமிருந்தும், பணக்காரர்களிடமிருந்தும் வசூலிக்காமல் விட்ட வரி மட்டும், 2012-13ஆம் ஆண்டு பட்ஜெட் ஆவணங்களின்படி, சுமார் 5 லட்சத்து 28 ஆயிரம் கோடி ரூபாயாகும். இது இரண்டையும் ஒப்பிட்டுப்பார்த்தாலே நிதிப்பற்றாக்குறை ஏன் ஏற்பட்டது என்பதை ஒரு வர் மிக எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். நிதிப்பற்றாக்குறைக்குக் காரணமான இந்த ஓட்டையை அடைக்காமல் ஆட்சியாளர்கள், மக்களுக்கு அற்ப அளவில் அளித்து வரும் மானியங்களை வெட்டிக் குறைத்திட முன்வந்திருக்கிறார்கள்.
இது சாமானிய மக்களை மேலும் வறுமைக் குழிக்குள் தள்ளும். மக்களின் தேவைகள் சுருங்குவதன் காரணமாக, நம் நாட்டின் பொருளாதாரத்தையும் கடுமையாகப் பாதிக்கும். அதனைத் தொடர்ந்து நம் பொருளாதாரமும் மந்த நிலைக்குச் செல்லும்.பொருளாதார ஆய்வறிக்கை, பட்ஜெட்டிற்கும் அரசாங்கத்தின் எதிர்கால பொருளாதாரக் கொள்கைக்கும் முன்னோடி யானது. இதிலிருந்து நம் மக்கள் மீது ஆட்சியாளர்கள் கருணையற்ற முறையில் மிகவும் கொடூரமான முறையில் பொருளாதார ரீதியாகத் தாக்குதலைத் தொடுக்க இருக்கிறார்கள் என்பதும் அதன் விளைவாக, இரு இந்தியர்களுக்கும் இடையிலான இடைவெளி மேலும் ஆழமான முறையில் அதிகரிக்கும் என்பதும் தெளிவாகிவிட்டது. ஆட்சியாளர்களின் மக்கள்விரோதக் கொள்கையை மக்களிடம் தோலுரித்துக் காட்டிடவும், அதற்கு மாற்றாக சிறந்ததோர் இந்தியாவை உருவாக்கவும், நாட்டின் பெரும்பான்மை மக்களுக்குச் சிறந்ததோர் வாழ்வாதாரத்தை வழங்கிடவும், ஒரு மாற்றுக் கொள்கைத் திசைவழியை மக்களுக்குக் காட்டிடவும்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தற்போது நாடு தழுவிய அளவில் மாற்றுக் கொள்கைக்கான போர்முழக்கப் பயணம் நடைபெற்று வருகிறது.
(தமிழில்: ச.வீரமணி)


No comments: