Saturday, December 24, 2011

கடுமையான பொருளாதாரச் சூழ்நிலையில் மக்கள் மீதான தாக்குதலுக்கு எதிராகவும் கிளர்ந்தெழுக



யர்மட்ட அளவில் நடைபெறும் ஊழல்களைச் சமாளிப்பதற்காக லோக்பால் சட்டமுன்வடிவு கொண்டுவரப்படக்கூடிய அதே சமயத்தில், நாட்டில் நிலவும் கடும் பொருளாதாரச் சூழ்நிலையும், வரவிருக்கும் காலங்களில் மேலும் கடுமையான முறையில் பொருளாதார நெருக்கடி ஏற்படக்கூடும் என்கிற முன்னெச்சரிக்கைகளும் நாட்டின் சாமானிய மக்களின் வாழ்வாதாரங்கள் மீது மேலும் கொடூரமானத் தாக்குதலைத் தொடுக்க விருக்கிறது என்பதைக் கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது.

நாட்டின் பொருளாதார நிலைமை மிகவும் கடுமையாக மாறிக்கொண்டிருப்பதன் பின்னணியில் ஐமுகூ-2 அரசாங்கத்தின் ‘‘ஆபத்பாந்தவரான’’ நிதி அமைச்சர், நாட்டின் கார்பரேட் முதலாளிகளுக்கு நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறார். 2011 அக்டோபர் மாதத்திற்கான தொழில் உற்பத்தி வளர்ச்சி விகிதம் வெ@ம் -5.1 விழுக்காட்டைப் (minus 5.1 percent) பதிவு செய்திருக்கிறது. ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது. இன்றைய நிலையில் ஓர் அமெரிக்க டாலருக்கு 54 ரூபாய் என்று வரலாறு படைக்கும் அளவிற்கு நிலைமை தலைகுப்புற வீழ்ந்திருக்கிறது. இவ்வாறு ரூபாயின் மதிப்புக் குறைவதனால் ஏற்றுமதியாளர்களுக்கு லாபம் என்ற போதிலும், ஏற்றுமதியாகும் பொருள்கள் கடுமையாகக் குறைந்துவிட்டன. மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியின் மதிப்பீடுகளும் கடுமையாகக் குறைந்திருக்கின்றன. மாநிலங்களவையில், 63 ஆயிரத்து 180 கோடி ரூபாய்கள் கூடுதலாக ஒதுக்குவதற்காக நடைபெற்ற நிதி ஒதுக்கீட்டுச் சட்டமுன்வடிவின் மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பதிலளித்த நிதி அமைச்சர், ‘‘வரவிருக்கும் நெருக்கடியை சமாளித்து மீளக்கூடிய வல்லமையை’’ இந்தியா பெற்றிருக்கிறது என்று கூறினார். இந்தியாவின் பொருளாதாரத்தை நிலைநிறுத்துவதற்கு நிதித்துறையில் மேலும் தாராளமய சீர்திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும் என்று அவர் அடிக்கோடிட்டிருக்கிறார். இதன் பொருள் என்ன தெரியுமா? இத்தகைய தாராளமய பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு பிரதான எதிர்க்கட்சியாக உள்ள பாஜகவின் ஆதரவினைப் பெற்றிட வேண்டும் என்பதேயாகும். இத்தகைய சீர்திருத்த நடவடிக்கைகளில் பெரும்பாலானவை பாஜக தலைமையிலான முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தின் காலத்தின்போது கொண்டு வரப்பட்டவையே என்பதையும் அவர் அப்போது அவர்களுக்கு நினைவூட்டியிருக்கிறார்.

இத்தகைய தாராளமய நடவடிக்கைகளுக்கு பாஜகவிடமிருந்தும் உடனடியாக ஒத்துழைப்பு கிடைத்திடும் என்பது திண்ணம். ஆயுள் காப்பீட்டுக் கழகத் திருத்தச் சட்டமுன்வடிவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொண்டுவந்த திருத்தத்தைத் தோற்கடித்து ஐமுகூ-2 அரசாங்கத்தை பாஜக காப்பாற்றியது. பாஜக மட்டும் அரசாங்கத்தைக் காப்பாற்ற முன்வராதிருந்திருக்குமானால் அந்தச் சட்டமுன்வடிவு தோற்றுப்போயிருக்கும். தற்போது ஓய்வூதிய நிதிகளைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதற்காகக் கொண்டுவரவிருக்கும் சட்டமுன்வடிவின்போதும், வங்கிகளில் மேலும் சீர்திருத்தங்கள் கொண்டுவரும்போதும், இவ்வாறு காங்கிரசும் பாஜகவும் ஒத்துப்போக ஒப்புக்கொண்டிருக்கின்றன.

இத்தகைய சீர்திருத்தங்கள் அனைத்தும் சர்வதேச முதலீட்டாளர்களையும், அந்நிய நிதி மூலதனத்தையும் ‘‘இந்தியாவிற்கு வருக, எங்கள் செல்வத்தைக் கொள்ளையடித்துச் செல்க’’ என்று நயந்து பேசி இச்சகம் செய்து வரவழைப்பதைக் குறியாகக் கொண்டதாகும். அந்நிய மூலதனம் இவ்வாறு நாட்டிற்குள் வருவதானது இந்தியாவின் நிதிநிலைமைகளை அழகுபடுத்திடும் என்றும், இந்திய முதலாளிகளுக்கும் ‘சென்செக்ஸ்’ என்னும் பங்குச்சந்தை புள்ளிகளுக்கும் நம்பிக்கையூட்டிடும் என்றும் நம்பப்படுகிறது. இதனை அடுத்து, ‘‘அனைத்தும் நன்றாகவே நடக்கிறது’’ என்று கூறுபவர்களையும் இது திருப்திப்படுத்திடும்.

ஆயினும் இவை அனைத்துமே சாமானிய மக்களின் வாழ்வாதாரங்களை முன்னேற்றிட எதுவுமே செய்யப்போவதில்லை. மாறாக, சர்வதேச நிதி மூலதனம் மிகப்பெரியஅளவில் கொள்ளை லாபம் அடிப்பதற்கு வாய்ப்பு வசதிகளை உருவாக்கித் தருவது என்பதானது நம் நாட்டின் பெரும்பான்மை ஏழை மக்களை மேலும் கொடூரமான முறையில் வறிய நிலைக்கே தள்ளிவிடும்.
மேலும், அந்நிய நிதிமூலதனம் இந்தியாவிற்குள் வருவது மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது ஆரோக்கியமானதாகத் தெரியலாம். ஆனால் நாட்டின் பொருளாதார அடிப்படைகளை மேலும் கடுமையாகப் பாதிக்கும். ‘சென்செக்ஸ்‘ என்னும் பங்குச்சந்தை புள்ளிகளுக்கு இது உற்சாகத்தைக் கொடுக்கலாம். இந்திய கார்பரேட் முதலாளிகளுக்கும் கொள்ளை லாபம் ஈட்ட வழிவகைகளை அனுமதித்திடலாம். ஆயினும் நாட்டின் பெரும்பான்மையான சாமானிய மக்களின் வாழ்வாதாரம் மேம்பட இவை எதுவும் செய்யப் போவதில்லை.

அரசாங்கம் கூடுதல் செலவினங்களுக்காக நிதி ஒதுக்கீட்டுச் சட்டமுன்வடிவின் மூலம் நாடாளுமன்றத்தின் அனுமதியைக் கோரும் சமயத்தில், நிதி அமைச்சர் அவர்கள், இறக்குமதிக்கான செலவினங்கள் அதிகரித்திருப்பதற்கு எரிபொருள்கள் விலை உயர்வும், மக்களுக்கு அளித்திடும் மான்யங்கள் அதிகரித்திருப்பதுமே காரணங்கள் என்று கூறியிருக்கிறார். ஒவ்வோராண்டும் ஒரு லட்சம் கோடி ரூபாய்களுக்கும் அதிகமாக மான்யங்கள் அளிக்கப்பட வேண்டியிருக்கிறது என்றும் ஒப்பாரி வைத்திருக்கிறார். ஆனால், அதேசமயத்தில், நாடாளுமன்றத்தில் ஓர் உறுப்பினர், இந்த ஆண்டில், இதுவரை மட்டுமே, பெட்ரோலியப் பொருட்களின் மீதான வரிகளிலிருந்து மட்டும் அரசுக்கு 1.3 லட்சம் கோடி ரூபாய் வருவாய் வந்திருக்கிறதே என்ற உண்மையைக் கூறியபோது, அவர் வாயே திறக்கவில்லை. அதாவது, மக்களுக்கு அளிக்கப்படும் மான்யங்களைவிட அதிக அளவில் அரசாங்கம் மக்களிடமிருந்து வரிகள் மூலம் ஆதாயம் அடைந்திருக்கிறது. அரசின் வருவாயில் பெரும்பகுதி பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை உயர்த்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு வந்ததேயாகும். இவ்வாறு விலை உயர்வால் இத்தொகைகளை அரசுக்கு வாரி வழங்கியிருப்பது மக்களே. அதாவது, மக்கள்தான் அரசாங்கத்திற்கு ஆண்டுதோறும் 30 ஆயிரம் கோடி ரூபாய்கள் அளவிற்கு மான்யங்களாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அரசாங்கமானது இத்தகைய ‘அடுத்த தலைமுறை சீர்திருத்தங்கள்’ மூலமாக, வருகின்ற கூடுதல் மூலதனம் இந்திய கார்பரேட் முதலாளிகள் கைகளில் சேர்ந்து அவர்கள் அடிக்கும் கொள்ளை லாபங்கள் நாட்டின் முதலீடுகளுக்குப் பயன்படுத்தப்பட்டு அதன் மூலம் மொத்த உள்நாட்டுஉற்பத்தி வளர்ச்சி அதிகரிக்கக்கூடும் என்று நம்புகிறது. இது தவறான ஊகமே. இதில் அரசு எங்கே தவறு செய்கிறதென்றால், இவ்வாறு முதலாளிகள் உற்பத்தி செய்திடும் பொருள்கள் விற்கப்பட வேண்டும் அல்லவா? அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலைகள் விண்ணை எட்டியுள்ள நிலையில் அவற்றை வாங்கவே வழிதெரியாது விழிபிதுங்கிக் கொண்டிருக்கும் சாமானிய மக்களின் வாங்கும் சக்தி மிகவும் குறைந்துள்ள நிலையில் இத்தகைய முதலாளிகள் உற்பத்தி செய்யும் பொருள்களை அவர்கள் எப்படி வாங்குவார்கள்?
இவ்வாறு மக்களின் வாங்கும் சக்தி கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையிலும், உள்நாட்டுத் தேவை மிகவும் சுருங்கிப்போயுள்ள நிலையிலும் முதலாளிகளுக்கு முதலீடுகளுக்காக மூலதனத்தை அளிப்பதன் மூலம் மட்டும் வளர்ச்சி வந்துவிடாது. நாட்டில் வளர்ச்சி ஏற்பட வேண்டுமானால் அரசாங்கம் மக்களின் வாங்கும் சக்தியை அதிகரித்திட நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும். இதனைச் செய்திட வேண்டுமானால் நாட்டில் பெரிய அளவில் பொது முதலீடுகள் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட வேண்டும். அரசாங்கம் இவ்வாறு பொது முதலீடுகளின் மூலம் நாட்டிற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை உருவாக்கிட வேண்டும். அதன் மூலம் மக்களுக்குப் பெரிய அளவில் வேலை வாய்ப்புகள் கிடைத்திடும். அவர்களின் சொந்த வீட்டுத் தேவைகளும் விரிவாக்கப்படும். இதையெல்லாம் அரசாங்கம் செய்வதற்குப் பதிலாக, தன்னுடைய நவீன தாராளமய பொருளாதார சீர்திருத்தங்களை மேலும் மும்முரமாக செயல்படுத்திடவும், அதன் மூலம் சர்வதேச மூலதனமும் இந்திய கார்பரேட் முதலாளிகளும் கொள்ளை லாபம் ஈட்டிடவும் ஐமுகூ 2 அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறது.

2008ஆம் ஆண்டில் சர்வதேச நிதி நெருக்கடி ஏற்பட்ட காலத்தில் அரசாங்கத்தால் அளிக்கப்பட்ட ஊக்கத் தொகைகள் (stimulus packages)மூலம் எவ்விதமான பொருளாதார ஸ்திரத்தன்மையும் ஏற்படவில்லை என்பதை சமீபத்திய பொருளாதார மந்த நிலைமை மெய்ப்பித்துள்ளது. கடந்த மூன்றாண்டுகளில் அரசாங்கம் வரவேண்டிய வரிபாக்கிகளைத் தள்ளுபடி செய்ததன் மூலம் இவ்வாறு கார்பரேட் முதலாளிகளுக்கு அளித்த ஊக்கத் தொகைகள் 14 லட்சத்து 28 ஆயிரத்து 028 கோடி ரூபாய்களாகும். இதில், 3 லட்சத்து 63 ஆயிரத்து 875 கோடி ரூபாய்கள் கார்பரேட்டுகளுக்கும் அதிகபட்சம் வருமான வரி செலுத்துவோருக்கும் நேரடியாகவே அளித்திட்ட சலுகைகளாகும். விளைவு என்னாயிற்று? பொருளாதார நெருக்கடி வேகமாக மாறி இன்றைய தினம் நம்மைத் திகைக்க வைத்திருக்கிறது.

பொருளாதார நெருக்கடியின்போதும் பெரிய அளவில் பயனடைந்தோர் ‘‘ஒளிரும் இந்தியா’’வைச் சேர்ந்தவர்களேயாவார்கள். கடந்த மூன்றாண்டுகளில், இந்தியாவில் உள்ள அமெரிக்க டாலர் பில்லியனர்கள் எண்ணிக்கை 26 இலிருந்து 52க்குச் சென்று பின்னர் அது 69 ஆக அதிகரித்திருக்கிறது. இந்த 69 பேர்களின் ஒட்டுமொத்த சொத்துக்களையும் சேர்த்துப் பார்த்தோமானால் நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கிற்குச் சமமாக இருக்கும். அதேசமயம் மறுபக்கத்தில் நாட்டு மக்களில் 80 கோடிக்கும் அதிகமானோர் நாளொன்றுக்கு 20 ரூபாய் கூட கிடைக்காமல் அவதிப்பட்டுக் கொண்டிருக் கிறார்கள்.
அடுத்து, அரசுத்தரப்பில் அதிகரித்து வரும் நிதிப் பற்றாக்குறை குறித்து கவலை தெரிவித்திருப்பதும் தவறான எண்ணத்தையே தோற்றுவிக்கிறது. பணக்காரர்களுக்கு அளித்துள்ள அபரிமிதமான சலுகைகளுடன் ஒப்பிடுகையில், நிதிப் பற்றாக்குறையாகக் காட்டப்பட்டிருக்கும் 4 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய்கள் என்பது மிகவும் அற்பத்தொகையேயாகும். அரசுக்கு வரவேண்டிய சட்டப்படியான வரிகள் அனைத்தும் வசூலிக்கப்பட்டிருந்தால், நிதிப்பற்றாக்குறைக்கே வாய்ப்பில்லை. மேலும் நாட்டிலுள்ள வளங்களைப் பயன்படுத்தி, பொது முதலீடுகள் மூலம் பெரிய அளவிலான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஆரோக்கியமாக வளர்ந்து அதன் மூலம் நாட்டின் பெருவாரியான மக்களின் வாழ்க்கைத்தரமும் மேம்பாடு அடைந்திருக்கும்.

ஐமுகூ-2 அரசாங்கமானது ஒரு வலுவான லோக்பால் சட்டத்தை நிறைவேற்றி, உயர்மட்ட அளவில் நடைபெற்றுவரும் கொள்ளைகளைத் தடுத்து நிறுத்திடவும், அதன்மூலம் அரசுக்குக் கூடுதலாகக் கிடைத்திடும் வள ஆதாரங்களை நாட்டு மக்களின் நலத்திட்டங்களுக்குப் பயன்படுத்திட அரசாங்கத்தை நிர்ப்பந்திக்கக்கூடிய அதே சமயத்தில், அரசாங்கம் பொருளாதார சீர்திருத்தங்களை மேலும் தாராளமயப்படுத்திட மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளையும் கண்டுகொள்ளாமல் இருந்திடக்கூடாது. இதனையும் மாற்றக்கூடிய வகையில் அரசாங்கத்தை நிர்ப்பந்திப்பதற்கான போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டியது அவசியமாகும். பொருளாதாரக் கொள்கைகளைப் பின்பற்றுவதில் காங்கிரசுக்கும் பாஜகவிற்கும் பெரிய அளவில் வித்தியாசம் எதுவும் கிடையாது என்பதையும் மக்கள் மத்தியில் தோலுரித்துக் காட்டிடவேண்டும். இரு கட்சிகளுமே அந்நிய மூலதனம் மற்றும் இந்திய கார்பரேட் முதலாளிகளின் நலன்களைக் காத்திட வேலை செய்யக்கூடிய அளவிற்கு, நாட்டு மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்திட செயல்படவில்லை என்பதை மக்கள் மத்தியில் தெளிவுபடுத்திட வேண்டும். கூடுதலாக, பாஜக, தன்னுடைய நாசகர மதவெறி நிகழ்ச்சிநிரலையும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது என்பதையும் மறந்துவிடக் கூடாது.

(தமிழில்: ச.வீரமணி)

No comments: