Monday, December 12, 2011

தலித்துகள் பழங்குடியினருக்காக ஒதுக்கும் திட்டச்செலவினங்கள் வேறு திட்டங்களுக்கு மாற்றப்படக் கூடாது: கே. வரதராசன்





புதுதில்லி, டிச. 12-

தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்குப் பல்வேறு துறைகளில் ஒதுக்கப்படும் திட்டச் செலவினங்கள் அவர்களுக்குப் பயன்படுத்தப்படுவதில்லை, மாறாக வேறு துறைகளுக்கு மாற்றப்படுகின்றன. இதனைத் தடுத்து நிறுத்திடக்கூடிய வகையில் உரிய மத்திய சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. வரதராசன் கூறினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுதில்லி, பி.டி.ஆர்.பவனில் திங்கள் அன்று காலை தலித்துகள்/பழங்குடியினர் துணைத் திட்டங்கள் அமலாக்கம் மீதான பட்டறை ஒன்று நடைபெற்றது. நாட்டின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் பிரதிநிதிகள் வந்து பங்கேற்றார்கள். தமிழகத்திலிருந்து கே. சாமுவேல்ராஜ், வி.கே. சிவஞானம், ஜி. லதா, ஜி. ராமசாமி, டி.செந்தில்குமார், டி.நீதிராஜன், பி.பாரதி அண்ணா, எஸ். ஞானகுரு ஆகியோர் பங்கேற்றார்கள். பட்டறையில் தீர்மானத்தை முன்மொழிந்து கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும் தலித் உப குழுவின் கன்வீனருமான கே. வரதராசன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

‘‘தலித்துகள்/பழங்குடியினர் துணைத் திட்டம் என்றால் என்ன என்பது குறித்தும் அதன் உள்ளடக்கம் என்ன என்பது குறித்தும் நம் முன்னணி ஊழியர்களில் பலருக்குத் தெரியாது. அவர்களுக்கு விளக்குவதற்காகவே இந்தப் பட்டறை இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதலில் இதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும். பின்னர் நம் அணிகளின் மத்தியில் இதனைக் கொண்டுசெல்ல வேண்டும் என்பதற்காகவே இந்தப் பட்டறை இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தலித்துகள்/பழங்குடியினர் பெயரால் ஏராளமான திட்டங்கள் அரசால் அறிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் நடைமுறையில் அவர்களுக்காகச் செய்யப்படுவது என்பது மிக மிகஅரிதாகவே இருப்பதை அறிய முடியும். ஜீனி சர்க்கரை சித்தப்பா ஏட்டில் எழுதி நக்கப்பா என்று தமிழில் ஒரு சொலவடை உண்டு. அதாவது தாளில் சர்க்கரை என்று எழுதி அதை நக்கினால் இனிக்குமா என்பது இதன் பொருள். இப்படி பல திட்டங்கள் அரசால் தலித்துகளுக்காகவும் பழங்குடியினருக்காகவும் அறிவிக்கப்பட்டாலும் அவற்றுக்கு உரிய திட்டச் செலவினங்கள் ஒதுக்கப்படுவதில்லை. அப்படியே எப்போதாவது ஒதுக்கினாலும் அவற்றை தலித்துகளுக்கோ/பழங்குடியினருக்கோ பயன்படுத்தாமல் வேறு திட்டங்களுக்குத் திருப்பிவிடும் போக்கையும் அரசாங்கங்கள் கடைப்பிடிக்கின்றன. உதாரணமாக தலித்/பழங்குடியினர் திட்டங்களுக்கு ஒதுக்கிய பணத்தை தில்லி மாநில அரசு காமன்வெல்த் மோசடிகளுக்கு - இல்லையில்லை காமன்வெல்த் விளையாட்டுக்களுக்கு - திருப்பிவிட்டதைப் பார்த்தோம்.
எனவேதான் இந்தப் பட்டறையில் ஒரு பத்து தீர்மானங்களை முன்வைத்திருக்கிறோம். நாட்டில் உள்ள தலித்துகள்/பழங்குடியினர் மக்கள் தொகை விகிதாசாரத்திற்கேற்ப பட்ஜெட்டில் தலித்துகள்/பழங்குடியினருக்கு துணைத் திட்டங்களின் மூலம் தொகைகள் ஒதுக்கப்பட வேண்டுமும். அவை எக்காரணம் கொண்டும் வேறு திட்டச் செலவினங்களுக்கு மாற்றப்படக்கூடாது என்பதை உறுதிப்படுத்தக்கூடிய வகையில் ஒரு மத்திய சட்டம் இயற்றப்பட வேண்டும். நாட்டின் வருடாந்திர மற்றும் ஐந்தாண்டுத் திட்டங்கள் அனைத்திலும் தலித்துகள்/பழங்குடியினருக்கான துணைத் திட்டம் உருவாக்கப்பட வேண்டும். அதற்கேற்ற வகையில் விதிகள் மாற்றப்பட வேண்டும்.

அடுத்து, நம் தோழர்கள் நம் கோரிக்கைகளை உள்ளூர் பிரச்சனைகளோடு இணைத்து போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். உதாரணமாக தலித்துகள்/பழங்குடியினர் வீட்டுமனைப் பட்டாக்களுக்கான இயக்கம் ஆரம்பத்தில் நாம் நடத்தியபோது 200 பேர் 300 பேர் என்றுதான் கலந்து கொண்டார்கள். அதனை மக்கள் இயக்கமாக நாம் மாற்றியபோது 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றதை நாம் பார்த்தோம். அதேபோன்று உத்தப்புரம் சுவர் இயக்கத்தை நாம் கையில் எடுத்துக்கொண்டு போராடியபோது, பிரகாஷ்காரத் அந்தத் தீண்டாமைச் சுவரை இடிப்பதற்காக தேதி குறிப்பிட்டவுடன் அதற்கு முதல்நாளே கலைஞர் அச்சுவற்றை இடிக்க நடவடிக்கை எடுத்ததைப் பார்த்தோம். அந்தத் தீண்டாமைச் சுவர் வெகு ஆண்டுகளாக நம் பார்வைக்கே வராமல் இருந்தது. ஆனால் வந்தபின் பார்த்தால் கோவை, ஈரோடு, திருச்சி என மாநிலத்தின் பல பகுதிகளில் அதுபோன்று சுவர் இருப்பதை அறிய முடிந்தது.
இவ்வாறு உள்ளூர் பிரச்சனைகளை நாம் எடுக்கத் தவறினோமால் நம்மால் முன்னேற முடியாது. நம் கோபம் எதையும் தீர்மானிப்பதில்லை. மாறாக மக்களிடம் இருக்கும் கோபத்திற்கு நாம் உருவம் கொடுத்து போராட்டங்களை நடத்தினோமானால் வெற்றி நிச்சயம். அந்த விதத்தில் இங்கே எதிர்காலத்தில் நாம் மேற்கொள்ளவேண்டிய கோரிக்கை சாசனத்தை உங்கள் முன் சமர்ப்பித்திருக்கிறோம். உங்கள் விவாதங்களுக்குப்பின் இவை செழுமைப்படுத்தப்பட்டு இவற்றின் அடிப்படையில் மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் இயக்கங்கள் நடத்தப்பட்டு, பின்னர் நாடு தழுவிய அளவில் பேரணி/ஆர்ப்பாட்டம் நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு கே. வரதராசன் தீர்மானங்களை முன்மொழிந்து உரையாற்றினார். அதனை அடுத்து தீர்மானததின் மீது மேற்கு வங்கம், கேரளம், திரிபுரா,தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேச பிரதிநிதிகள் எட்டு நிமிடங்களும், மற்ற மாநிலத்தினர் ஐந்து நிமிடங்களும் விவாதத்தில் பங்கேற்றனர்.
பட்டறையில் தலித்துகள்/பழங்குடியினர் நலன்களுக்காக கடந்த அறுபதாண்டுகளாக போராடிவரும் முன்னாள் மத்திய அரசின் முன்னாள் செயலாளர்களில் ஒருவரான பி.எஸ். கிருஷ்ணன், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியர் பிரவீன் ஜா முதலானோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத் நிறைவுரையாற்றினார்.
---

No comments: