Thursday, November 25, 2010

பாஜகவின் இரட்டை வேடம்



அரசியல் சந்தர்ப்பவாதத்திற்கு மிகச் சரியான எடுத்துக் காட்டு பாஜக-வின் இரட்டை வேடம்தான். எவ்விதக் கூச்சநாச்சமுமின்றி கர்நாடக முதல்வர் பி.எஸ். எடியூரப்பாவிற்கு எதிராக உற்றார் உறவினர்களுக்கு அவர் சலுகைகாட்டியுள்ளார் என்று ஊழல் குற்றச்சாட்டுக்கள் குவிந்த வண்ணம் இருந்த போதிலும் பாஜக அவரையே தொடர்ந்து முதல்வராக நீடிக்க அனுமதித்திருப்பதிலிருந்து இதனைக் கூறமுடியும். பீகார் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் நிதிஷ் குமார், ஐக்கிய ஜனதா தளம் அறுதிப் பெரும்பான்மை பெற்ற நிலையில், பாஜக-வானது அறநெறி (அடிசயடவைல) தொடர்பான அனைத்துப் பாசாங்குகளையும் கைகழுவி விட்டது. பாஜகவின் தலைவர், ‘‘கட்சியின் மூத்த தலைவர்களையும் மாநிலத் தலைவர்களையும் கலந்தாலோசனை செய்த பின், கர்நாடக மாநில முதல்வராக பி.எஸ். எடியூரப்பாவையே தொடரச் செய்வதென கட்சி தீர்மானித்திருக்கிறது’’ என்று பாஜகவின் தலைவர் அறிவித்திருக்கிறார்.

‘சாதிய சலுகைகளைப் புறந்தள்ளிவிட்டு, வளர்ச்சித் திட்டங்களினாலேயே’ வெற்றி கிடைத்தது என்று பீகார் தேர்தல் முடிவுகள் கூறப்படும் அதே சமயத்தில், கர்நாடகாவைப் பொறுத்தவரை, பாஜக அங்கே முழுமையாக சாதி சலுகைகளின் அடிப்படையிலேயே தீர்மானம் செய்திருக்கிறது. கர்நாடக முதல்வர் தன் லிங்காயத் இனத்தினரைத் தனக்குப் பின்னால் அணிசேர்த்திருப்பது நன்கு தெரியக் கூடிய நிலையில், அவரைப் பதவியிலிருந்து தூக்கி எறிந்தால், அதனைத் தொடர்ந்து தென்னிந்தியாவில் அமைந்துள்ள தன் முதல் மாநில அரசையும் அது இழக்க வேண்டியிருக்கும் என்பதை பாஜக நன்கு உணர்ந்திருக்கிறது. எனவேதான், நாடாளுமன்றத்தில் ஊழலுக்கு எதிராகக் குரல் எழுப்பும் பாஜக, தன்னுடைய மாநில அரசைக் காப்பாற்றுவதற்காக அரசியல் அறநெறியை முற்றிலுமாகக் காற்றில் பறக்க விட்டுவிட்டது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் சம்பந்தமாக, புலனாய்வு செய்திட கூட்டு நாடாளுமன்றக் குழுவை அமைத்திட வேண்டும் என்று கோரும் பாஜக, எப்படி கர்நாடகாவில் ஊழல் புகார்களில் சிக்கியுள்ள கர்நாடக முதல்வரை ஆதரிக்கிறது என்று ஊடக செய்தியாளர் கேட்டபோது, பாஜகவின் தலைவர்களில் ஒருவர் மிகவும் வெளிப்படையாகவே பதிலளித்துள்ளார். அதாவது, ‘‘கர்நாடகாவில் முதல்வரை நீக்குவதனால் ஏற்படும் அரசியல் இழப்புகள் குறித்து கட்சி சீர்தூக்கிப் பார்த்தது’’ என்றும், ‘‘முதல்வரை ராஜினாமா செய்யச் சொன்னால், அரசாங்கத்தையே இழக்க வேண்டியதிருக்கும் என்று தெரிய வந்தது’’ என்றும், கூறியிருக்கிறார்.

பாஜகவின் தேசியத் தலைவர், கர்நாடகா அரசாங்கத்தால் அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் கமிஷன், முதல்வரின் கட்டளையின்படி அங்கு நடைபெற்ற மாபெரும் நில ஊழல்கள் குறித்த புகார்களை விசாரித்திடும் என்று கூறியிருக்கிறார். பல வாரங்களுக்கு முன்பே, கர்நாடக மாநில அமைச்சரவை, இத்தகைய கடுமையான புகார்கள் குறித்து, நீதி விசாரணை நடத்தப்படும் என்று தீரமானித்திருந்தது. அப்போதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, நீதிவிசாரணை செய்திடும் நடுவர் ஊழலில் ஈடுபட்ட நபர்கள் மீது வழக்குதொடுக்க அதிகாரம் அற்றது என்பதால் இது ஒரு கண்துடைப்பு வேலையே என்று கூறியது. இப்போதும் அதேபோன்றதொரு விசாரணையைத்தான் பாஜக-வின் தேசியத் தலைவர் குறிப்பிட்டிருக்கிறார்.
கர்நாடக முதல்வருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எதிராக எழுந்துள்ள ஊழல் புகார்கள் உண்மையில் மிகவும் நீண்டவைகளாகும். அவற்றில் ஒரு சிலவற்றை இப்பகுதியில் நாம் ஏற்கெனவே தெரிவித்திருக்கிறோம். அதன் அடிப்படையில் பல அமைச்சர்களும் பதவி இழச்கக வேண்டியிருந்ததையும் குறிப்பிட்டிருக்கிறோம்.

இப்போது நடைபெற்றுள்ள நிகழ்வுகளிலும், முதல்வரின் புதல்வர்கள் மற்றொரு நில ஊழலில் சம்பந்தப்பட்டிருப்பது வெளியாகி இருக்கின்றன. 2006இல் எடியூரப்பா துணை முதல்வராக இருந்த சமயத்தில் அவர்கள் அரசாங்க நிலத்தை 40 லட்ச ரூபாய்க்கு வாங்கியிருக்கின்றனர். 1991ஆம் ஆண்டு கர்நாடகா நில மாற்றல் தடைச் சட்டத்தின்படி எவரொருவரும் பங்களூர் வளர்ச்சிக் குழுமம் அறிவிக்கை செய்துள்ள நிலம் எதையும் மாற்றலோ ( transfer), பிறிதொரு காரியத்திற்காகப் பயன்படுத்துதலோ (alienation) அல்லது அடமானம் (mortgage) வைத்தலோ மூன்றாண்டுகள் வரை சிறைத் தண்டனை அனுபவிக்கக் கூடிய கிரிமினல் குற்றமாகும். ஆயினும், 2008 நவம்பர் 3 அன்று, எடியூரப்பா முதல்வராக வந்தபின் அந்த நிலங்களை பங்களூர் வளர்ச்சிக் குழுமத்தின் அறிவிக்கையிலிருந்து விடுவித்து (னநnடிவகைல) ஓர் ஆணை பிறப்பித்திதிருக்கிறார். அந்த நிலமானது 2010 நவம்பர் 22 திங்கள் கிழமையன்று ஒரு கனிமவள நிறுவனத்திற்கு 20 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டிருக்கிறது (டைம்ஸ் ஆப் இந்தியா, நவம்பர் 24, 2010). பதவி பறிபோகலாம் என்கிற அச்சம்தான், முதல்வரின் புதல்வர்களை மேற்படி நிலத்தை மிகப்பெரிய லாபத்திற்கு விற்கச் செய்திருக்கிறது.

‘ஆபரேஷன் லோடஸ்’ என்ற பெயரில் மிகவும் அறநெறி பிறழ்ந்த நடவடிக்கைகள் மூலம் சட்டமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற எடியூரப்பா அரசாங்கம் என்னவெல்லாம் செய்தன என்பதை இப்பகுதியில் இதற்கு முன்பும் நாம் விவரித்திருக்கிறோம். இப்போதும்கூட, கர்நாடக அரசு சட்டப்பேரவையில் பெரும்பான்மை பெற்றிருக்கிறது என்றால் அதற்கு, அது நம்பிக்கையில்லாத் தீர்மானம் அவையில் கொண்டுவரப்பட்ட சமயத்தில் ஒருசில சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதி யிழக்கச் செய்ததுதான் காரணமாகும். அனைவரும் வாக்களித்திருந்தால், எடியூரப்பா அரசாங்கம் பெரும்பான்மையைப் பெற்றிருக்க முடியாது. மொத்தம் உள்ள 225 உறுப்பினர்களில், பாஜகவின் பலம் வெறும் 106 மட்டுமேயாகும்.
உத்தர்காண்ட் மாநிலத்திலும் இதேபோன்றதொரு ஊழலில் பாஜக சிக்கியுள்ளது. அதன் உயர்மட்டத் தலைவர்களில் பலர், பல்வேறு ஊழல் புகார்களில் சிக்கியுள்ள அம்மாநில முதல்வர் ரமேஷ் பொக்ரியா நிசாங்க் நீக்கப்பட வேண்டும் என்று நிர்ப்பந்தம் அளித்து வருகின்றனர். அவற்றில் இரு பெரிய ஊழல் புகார்கள் மாநிலத்தையே குலுக்கி வருகின்றன. இவற்றில் 56 நீர் மின்சாரத் திட்டங்கள் ( hydro electric projects) மற்றும் ரிசிகேஷில் 400 கோடி ரூபாய்கள் மதிப்புள்ள 15 ஏக்கர் நிலத்தை ரியல் எஸ்டேட் முனைவர்களுக்கு (real estate developers) வெறும் 3 கோடி ரூபாய்க்கு கைமாற்றிக் கொடுத்திருப்பது போன்ற இரு பெரிய முறைகேடுகள் முக்கியமானவைகளாகும்.

இவ்வாறு, மிகப்பெரிய அளவில் ஊழல் செய்வதிலும் நாட்டைப் பிரம்மாண்டமான அளவில் கொள்ளையடிப்பதிலும் காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ அரசாங்கத்திற்கும், பாஜகவிற்கும் இடையே பெரிய அளவில் வித்தியாசம் எதுவும் கிடையாது. நாட்டின் நலன் மற்றும் நாட்டு மக்களின் நலன்களைப் பாதுகாத்திட, நாட்டின் வளங்கள் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்குப் பயன்படுத்தி, சிறந்ததோர் இந்தியாவை உருவாக்கிட, இவர்கள் அடிக்கும் கொள்ளைகளைத் தடுத்து நிறுத்த வேண்டியது அவசியமாகும்.

(தமிழில்: ச.வீரமணி)

No comments: