Tuesday, November 23, 2010

இன்சூரன்ஸ் ஊழியர் சங்க மாநாட்டில் தபன்சென்






இன்சூரன்ஸ் பொதுத்துறை நிறுவனமாக இருந்ததே பொருளாதார நெருக்கடியிலிருந்து தப்பியதற்குக் காரணம்: இன்சூரன்ஸ் ஊழியர் சங்க மாநாட்டில் தபன்சென் பேச்சு
புதுதில்லி, நவ. 23-

உலகப் பொருளாதார நெருக்கடியின் விளைவாக அமெரிக்க இன்சூரன்ஸ் நிறுவனங்கள் எல்லாம் திவாலாகிப்போன நிலையில் இந்தியாவில் இன்சூரன்ஸ் துறை பாதிக்கப்படாததற்கு அது பொதுத்துறையில் நீடித்ததே காரணம் என்று இந்திய தொழிற்சங்க மையத்தின் பொதுச்செயலாளர் தபன்சென் கூறினார்.

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் வைர விழா ஆண்டில் 22ஆவது பொது மாநாடு, புதுதில்லியில் சனிக்கிழமையன்று துவங்கியது. முன்
னதாக, இன்சூரன்ஸ் ஊழியர் சங்க ஊழியர்கள் சங்கத்தின் செங்கொடி மற்றும் செம்பதாகைகளை ஏந்திய வண்ணம் புதுதில்லி, கன்னாட் பிளேஸ், ஜீவன் பாரதி கட்டிடத்தின் முன்பிருந்து மாபெரும் பேரணியாக, ‘பொதுத் துறையைப் பாதுகாப்போம்’, ‘பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களைப் பாதுகாப்போம்’, ‘நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளை முறியடிப்போம்’ என்று முழக்கமிட்டவாறு, பொது மாநாடு நடைபெறும் ராம் லீலா மைதானத்திற்கு வந்தனர்.

மாநாட்டுப் பந்தலின் முன்பு சங்கத்தின் கொடியினை அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க தலைவர் அமானுல்லா கான் ஊழியர்கள் மற்றும் பிரதி
நிதிகளின் பலத்த முழக்கங்களுக்கிடையே ஏற்றி வைத்தார்.

மறைந்த தோழர்கள் ஜோதிபாசு, ஹர்கிசன்சிங் சுர்ஜித் உள்ளிட்ட தலைவர்களுக்கு மாநாட்டில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர் மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவர் எம்.கே. ரைனா வரவேற்புரை நிகழ்த்தினார். மாநாட்டை, திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சர்க்கார் துவக்கி வைத்து உரையாற்றினார். சிஐடியு அகில இந்திய பொதுச் செயலாளர் தபன் சென் வாழ்த்திப் பேசியதாவது:

உலகப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதையடுத்து அமெ ரிக்காவில் இருந்த அனைத்து இன்சூரன்ஸ் நிறுவனங் களும் திவாலாகிப் போயின. அமெ ரிக்க அரசாங்கம் அவற்றைக் காப்பாற்ற பல மில்லியன் டாலர்கள் அளித்திருக்கிறது. ஆனால், இந்தியாவில் இன்சூரன்ஸ் துறை உலகப் பொருளாதார நெருக்கடியின் விளைவால் சிறிதும் பாதிக்கப்படாமல் காப்பாற்றப்பட்டிருக்கிறது என்றால், அதற்குக் காரணம் அவை பொதுத்துறையாக நீடிப்பதேயாகும். அவ்வாறு பொதுத்துறையாக நீடிப்பதற்கு இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தினர் நடத்திய போராட்டங்களின் வெற்றியே காரணமாகும்.அதுமட்டுமல்ல, இன்சூரன்ஸ் துறையானது, பல லட்சம் கோடி ரூபாய்களை நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக அரசுக்
குக் கொடுத்து உதவி வருகிறது. ஆனாலும்கூட இன்றும் இந்திய அரசு, இன்சூரன்ஸ் துறையைத் தனியாருக்குத் தாரைவார்க்கத் துடித்துக் கொண்டிருக்கிறது. இதை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்று தபன்சென் கூறினார்.

ஆர். முத்துசுந்தரம்

அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனப் பொதுச் செயலாளர் ஆர்.முத்துசுந்தரம் தன் வாழ்த்துரையில், பொதுத்துறை நிறுவனங்களான ஆயுள் இன்சூரன்ஸ் மற்றும் பொது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் நன்கு செயல்பட்டு வந்தபோதிலும், தமிழ்நாடு அரசு, மாநில அரசு ஊழியர்களுக்கான மருத்துவ இன்சூரன்சை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்திருக்கிறது. இதற்கு எதிராக மாநில அரசு ஊழியர்கள் போராடி வருவதைச் சுட்டிக்காட்டினார்.

பிஎஸ்என்எல் ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு கன்வீனர் வி.ஏ.என். நம்பூதிரி, இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் பிரதிப் பிஸ்வாஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

பொது மாநாட்டில் சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் என்.எம்.சுந்தரம், ஆர். கோவிந்தராஜ், டேவிட், எஸ்.ஆர். கிருஷ்ணமூர்த்தி உட்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

ஞாயிறன்று காலை பிரதிநிதிகள் மாநாடு புதுதில்லி, ஸ்ரீ ஃபோர்ட் அரங்கத்தில் துவங்கியது. மாநாட்டில் நாடு முழுதுமிருந்து 1200 பிரதிநிதிகள் பங்கேற்றனர். தமிழகத்திலிருந்து தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் சங்க பொதுச் செயலாளர் சுவாமிநாதன், கோட்டங்களின் காப்பீட்டு ஊழியர் சங்கங்களைச் சேர்ந்த முத்துக்குமாரசாமி , சுரேஷ்குமார் , ஆர். புண்ணியமூர்த்தி, வீ. சுரேஷ் , ஆர். தர்மலிங்கம் , எஸ். ராமன் , எஸ். ரமேஷ்குமார், மனோகரன் ஆகியோர் தலைமையில் 55 பிரதிநிதிகளும் 80 பார்வையாளர்களும் பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். மாநாடு புதன்கிழமை வரை நடைபெறுகிறது

2 comments:

S.Raman, Vellore said...

Thank you very much comrade for your reportage with photos. I was very much worried that I could not
take the photo of Com Manik Sarkar's address for our monthly
bulletin Sangachudar. From you I got it and thank you once again

Comradely yours
S.Raman, Vellore

Swaminathan K said...

Thank you for the coverage of AIIEA's diamond jubilee year conference held at New Delhi.

k swaminathan