Friday, June 25, 2010

நீதிமன்றங்களும் அவற்றின் வழக்கு மொழியும்

தமிழகத்தில், உயர்நீதிமன்றத்தில் தமிழில் வழக்காட அனுமதிக்கவேண்டும் என்று கோரி வழக்குரைஞர்கள் உண்ணாவிரதப் போராட்டங்கள் நடத்தி, சிறையேகி, தற்போது உயர்நீதிமன்ற நீதியரசர்களின் கருணையினால் தமிழில் வழக்காடலாம் என அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

கோவையில் நடைபெறும் உலகச் செம்மொழித் தமிழ் மாநாட்டில் உரையாற்றிய பலர், இந்தி ஆட்சி மொழியாக உள்ள வட இந்திய மாநிலங்களில் உள்ள உயர்நீதிமன்றங்களில் இந்தி வழக்கு மொழியாகச் செயல்படுவதாகப் பேசியுள்ளாரகள்.
ஆனால், உண்மை நிலை என்ன?

மத்தியஅரசின் அலுவல் மொழியாக இந்தி பிரகடனப்படுத்தப் பட்டிருப்பது உண்மை.
ஆனால், வழக்கறிஞர் ‘சிகரம்’ ச. செந்தில்நாதன் தன் கட்டுரையில் தெளிவுபடுத்தியிருப்பதுபோல், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 348ஆவது பிரிவின்படி ஆங்கிலம் மட்டுமே உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களின் அலுவல் மொழியாகும்.
சமீபத்தில் தில்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் வழக்கறிஞர் ஒருவர் இந்தியில் வாதாடினார். இதனை தில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாகிய நீதியரசர் ரேகா ஷர்மா அனுமதித்தார். ஆனால் அதே வழக்குரைஞர், அதே நீதிமன்றத்தில் நீதியரசர் ஏ.கே. பதக் முன்பு ஆஜராகி இந்தியில் வாதாடியபோது, நீதியரசர் ஏ.கே. பதக் அனுமதி மறுத்துவிட்டார். ஆங்கிலத்தில்தான் வாதாட வேண்டும், அதுதான் உயர்நீதிமன்ற அலுவல் மொழி என்று கூறியுள்ளார்.

நாட்டில் உள்ளஅனைத்து உயர்நீதிமன்றங்களிலும், உச்சநீதிமன்றத்திலும் அனைத்து வழக்குகளும், மனுக்களும் ஆங்கிலத்தில்தான் தாக்கல் செய்யப்படுகின்றன. ஒரு சில நீதிபதிகள், மொழி உணர்வுக்கேற்ப இந்தியில் நீதிமன்றத்தில் வாதாட அனுமதிக்கிறார்களே ஒழிய, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி அவ்வாறு அனுமதிக்க முடியாது.
எனவே, உண்மையில் அந்த அந்த மாநிலங்களில் உள்ள ஆட்சிமொழிகளே, அந்த அந்த உயர்நீதிமன்றங்களுக்கும் ஆட்சி மொழி என்ற முறையிலும், உச்சநீதிமன்றததில் நாட்டின் அனைத்து மாநில ஆட்சி மொழிகளிலும் வழக்குகள் தாக்கல் செய்திடவும் அவறறை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திடக் கூடிய விதத்திலும் அரசியலமைப்புச் சட்டத்தின் 348ஆவது பிரிவு மாற்றப்பட வேண்டும்.

இவ்வாறு மாற்றுவதற்கு ஐமுகூ-2 அரசு முன்வருமா? ஐமுகூ-2 அரசிற்கு ஆதரவு
அளித்து வரும் திமுக இதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளுமா?
செம்மொழி மாநாட்டில் தமிழ் வளர்ச்சிக்காக ஓங்கிக் குரல் கொடுத்துள்ள கே. வி. தங்கபாலுவும், தமிழக முதல்வர் கலைஞரும்தான் கூற வேண்டும்.

-ச.வீரமணி

No comments: