Friday, May 14, 2010

பாசிசத்திற்கு எதிரான வெற்றி:சோவியத் மக்களின் வீரமும் தியாகமும் மனிதகுல வரலாற்றில் மகத்தானவை - சீத்தாராம் யெச்சூரி






முதலாளித்துவ ஆதரவு வரலாற்றாசிரியர்கள் எப்போதும் வரலாற்றைத் தங்கள் எஜமானர்களின் ஆசை அபிலாசைகளுக்கு ஏற்ப மாற்றியே எழுதி வந்திருக்கிறார்கள். அதேபோன்று இப்போதும், சோவியத் யூனியன் தகர்வுக்குப்பின், இன்றைய உலகப் பொருளாதார மந்தம் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், மேற்கத்திய உலகம் பாசிசத்தையும் கம்யூனிசத்துடன் சமமாகப் பாவித்து, இரண்டாம் உலகப் போரின் வரலாற்றையும் திரித்து எழுத முற்பட்டிருக்கிறது. நமது நாட்டிலும், உலக அளவிலும் கம்யூனிசத்திற்கு எதிராக அரக்கத்தனமான முறையில் விஷமப் பிரச்சாரத்திலும் முதலாளித்துவ வரலாற்றாசிரியர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். இதற்கான காரணங்களைப் புரிந்துகொள்வது அப்படி ஒன்றும் கடினமானதல்ல.

இவ்வாறு கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரத்தை மேற்கொள்வதற்கான மிகவும் முக்கியமான காரணம் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு தான் மேற்கொள்ளும் அனைத்து அட்டூழியங்களுக்கும் நியாயம் கற்பிக்கவேண்டிய அவசரத் தேவை ஏற்பட்டிருக்கிறது.
உலகப் பொருளாதார மந்தம் ஏற்பட்டுள்ள இன்றைய சூழலில், லத்தீன் அமெரிக்க நாடுகள் உட்பட உலகில் பல பகுதிகளிலும் மக்கள் சோசலிசத்தின்பாலும், இடதுசாரி அரசியலாலும் ஈர்க்கப்படுவது அதிகரித்து வருவதைத் தடுத்திட வேண்டிய அவசியம் உலக முதலாளித்துவத்திற்கு அவசியமாகியுள்ளது. இதற்காக வரலாற்றை மீண்டும் ஒருமுறை திரித்து எழுத வேண்டிய தேவை அதற்கு ஏற்பட்டிருக்கிறது.

இன்று அமெரிக்காவில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்திருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்திலும் நிலைமைகள் அப்படி ஒன்றும் சிறப்பாக இல்லை. கிரீஸ், போர்த்துக்கல், ஸ்பெயின், இத்தாலி, அயர்லாந்து போன்ற நாடுகள் கடும் நெருக்கடிக்குள் சிக்கிக்கொண்டு அதிலிருந்து வெளிவர முடியாமல் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றன. பட்டினிக் கொடுமைக்கு ஆளாகியிருக்கும் மக்கள் தொகையின் அளவு 102 கோடியைத் தாண்டிவிட்டது. உலகில் வாழும் மக்களில் ஆறில் ஒருவர் பட்டினிக்கொடுமைக்கு ஆளாகியிருக்கிறார்கள். இந்த ஆண்டு பொருளாதார மந்தம் ஏற்பட்டபின்னர், 10 கோடியே 20 லட்சம் மக்கள் பட்டினிப் பட்டாளத்தில் கூடுதலாகச் சேர்ந்துகொண்டுள்ளனர். இந்தச் சூழ்நிலையில்தான், இவ்வாறான முதலாளித்துவ பொருளாதார நெருக்கடிக்கான மாற்று சோசலிசமே என்ற சிந்தனைக்கு மக்கள் வந்துவிடக் கூடாது என்றும், அதற்கு, பாசிசத்தைத் தோல்வியுறச் செய்ததில் சோவியத் யூனியனின் வீரமிகு பங்களிப்பை மூடிமறைத்திடவேண்டியது அவசியம் என்றும் ஏகாதிபத்தியம் கருதுகிறது.

இவ்வாறு சோசலிசத்திற்கு எதிராகவும், சோசலிச நாடுகளுக்கு எதிராகவும் மிகவும் கேவலமான முறையில் தொடர்ந்து துஷ்பிரச்சாரத்தை மேற்கொள்வதன் மூலமாகவே, உலகின் பல இறையாண்மை மிக்க நாடுகளில் உள்ள மக்களுக்கு எதிராகத் தான் மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் அடிக்கும் கொள்ளைகளை, தொடர்ந்து மேற்கொள்ள முடியும் என்று ஏகாதிபத்தியம் கருதுகிறது.

உலகப் பொருளாதார மந்தத்தால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், அவர்கள் முதலாளித்துவ நெருக்கடிக்கு மாற்று சோசலிசமே என்று போய்விடக்கூடாது என்பதற்காகவே, ‘‘முதலாளித்துவமே என்றும் சாசுவதமானது’’ என்று வரலாற்றைத் திரித்து எழுதுவோர் சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள். இடதுசாரிகளின் முன்னேற்றத்தைத் தடுத்திட, உண்மை இவ்வாறு முதலாளித்துவத்தின் பலிபீடத்தில் காவு கொடுக்கப்படுகிறது. இரண்டாம் உலகப் போரில் பாசிசம் மற்றும் கம்யூனிசத்திற்கு எதிராக மேற்கத்திய நாடுகள் வெற்றி பெற்றன என்று சித்தரிப்பதன் மூலம் கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரத்தை தீவிரமாக்குவதே இவர்கள் வரலாற்றைத் திரிப்பதற்கான நோக்கமாகும். பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் மேற்கத்திய நேச நாட்டைச் சேர்ந்த வீரர்களைப்போல் நாற்பது மடங்கு சோவியத் வீரர்கள் பலியாகியிருக்கிறார்கள் என்கிற உண்மையை இவர்கள் வேண்டுமென்றே மறைக்கிறார்கள். இரண்டு கோடிக்கும் மேலான சோவியத் வீரர்களும் மக்களும் தங்கள் உயிரைப் பலிகொடுத்திருக்கிறார்கள்.

பாசிசத்துடன் கம்யூனிசத்தை சமமாகப் பாவிப்பதன் மூலம் தங்கள் திரிபை நியாயப்படுத்துவதற்காக, ‘தி எகனாமிஸ்ட்’ இதழ் ‘‘1941க்கு முன் ஸ்டாலின் இட்லருக்கு உடந்தையாக இருந்தார் என்பதை கிரெம்ளின் ஒப்புக்கொள்ள வேண்டும்’’ என்று கூறுகிறது. ஜெர்மனியும் சோவியத் யூனியனும் 1939இல் செய்துகொண்ட ஆக்கிரமிப்புக்கு எதிரான ஒப்பந்தத்தை இது இவ்வாறு சுட்டிக்காட்டுகிறது. இட்லருக்கு எதிராக ஓர் அரசியலணியை அமைக்காமல் யுத்தத்தில் வெற்றிபெறுவது சாத்தியமில்லை என்பதால் அவ்வாறு ஒரு பாசிச எதிர்ப்புக் கூட்டணியை ஏற்படுத்திட முதலில் முயன்றது ஸ்டாலின் தலைமையிலான சோவியத் யூனியன் என்னும் உண்மையைக் கூறுவதை அவர்கள் வேண்டுமென்றே தவிர்க்கிறார்கள். பாசிசத்திற்கு எதிரான ஐக்கிய முன்னணி என்னும் சோவியத் யூனியனின் முன்மொழிவை நிராகரித்துவிட்டு, அதேபோன்றதொரு கூட்டணியை பிரிட்டனும், பிரான்சும் ஜெர்மனியுடன் செய்துகொண்டதை அவர்கள் தங்கள் வசதி கருதி மறைக்கிறார்கள். லண்டன் ‘எகனாமிஸ்ட்’டுக்கு, லண்டனிலிருந்து வெளிவரும் மற்றோர் இதழான ‘கார்டியன்’ இதழில் 1970 ஜனவரி 1 அன்று, ரகசிய அயல்துறை விவகாரங்களுக்கான ஆவணக்காப்பகத்திலிருந்து வெளியிடப்பட்ட 1939ஆம் ஆண்டு அமைச்சரவை ஆவணங்களை நிச்சயமாக அறிந்திருக்கவேண்டும். அவற்றில், ‘‘ரஷ்யாவின் அறிவுரையைக் கேட்டு, பிரிட்டன் - பிரான்ஸ் - சோவியத் யூனியனுக்கு இடையே ஒரு கூட்டணி ஏற்பட்டிருக்குமானால், அது இரண்டாம் உலக யுத்தம் ஏற்படாமல் தடுத்திருக்கும். ஏனெனில், இட்லர் ‘ரிஸ்க்’ எடுத்திடத் துணிந்திருக்க மாட்டான். ஆனால் சாம்பர்லெயின் அரசாங்கம் ரஷ்யாவின் அறிவுரையை ஏற்கவும் இல்லை, புரிந்துகொள்ளவும் இல்லை.’’ என்று கூறப்பட்டிருக்கிறது.

சோவியத் முன்மொழிவுக்கு ஏன் மேற்கத்திய நாடுகள் ஒப்புக்கொள்ளவில்லை? மிகவும் கொடூரமான முறையில் இது தொடர்பாக அப்போது அமெரிக்க செனட்டராகவும் பின்னர் அமெரிக்காவின் துணை ஜனாதிபதி மற்றும் ஜனாதிபதியாகவும் மாறிய ஹாரி ட்ரூமேன் கூறியது கவனிக்கத்தக்கது. சோவியத் யூனியனை இட்லர் தாக்கிய அன்று அவர் கூறுகிறார்: ‘‘இப்போரில் ஜெர்மனி வெற்றி பெறும்போல் தெரியுமானால் நாம் ரஷ்யாவுக்கு உதவுவோம். ரஷ்யா வெற்றிபெறும்போல் தெரிந்தால் ஜெர்மனிக்கு உதவுவோம். எப்படியோ இருவரும் அடித்துக்கொண்டு, ஏராளமானோர் கொல்லப்பட வேண்டும்’’. (தி நியுயார்க் டைம்ஸ், ஜூன் 24, 1941) இவ்வாறு அவர் கூறியிருந்தபோதிலும், ரஷ்யாவுக்கு உதவிட சுமார் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் காலம் கடத்தினார்கள். இட்லர் சோசலிசத்தை அழித்துத் தகர்த்துவிடுவான் மீண்டும் உலகின் ஆறில் ஒரு பகுதியாக உள்ள சோசலிச நாடு மீண்டும் முதலாளித்துவத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுவிடும் என்று அவர்கள் நம்பினார்கள்.

இட்லருக்கு எதிரான யுத்தத்தில் சோவியத் யூனியன் வெற்றிக்குப் பின் வெற்றி பெற்று வந்த சமயத்தில்தான், இட்லரை எதிர்த்த போரில் வெற்றிக்கான முழுப் பெருமையும் சோவியத் யூனியனுக்குப் போய்விடக்கூடாது என்பதற்காகத்தான் கடைசி நேரத்தில் அவை சோவியத் யூனியனுக்கு ஆதரவு தெரிவித்தன.

நாஜி ஜெர்மனி, சோவியத் யூனியனைத் தன்னுடைய சொந்த ராணுவத்தின் மூலமே நசுக்கிவிட தன்னைத் தயார்ப்படுத்திக்கொண்டிருந்தது. ஆங்கிலோ-பிரான்ஸ்- அமெரிக்காவோ அதே குறிக்கோளை யாரையாவது பயன்படுத்தி செய்திட விரும்பின. சோவியத் யூனியனுக்கும் ஜெர்மனிக்கும் இடையிலான யுத்தத்தில் இரண்டு நாடுகளுமே ஏராளமான அளவில் ரத்தத்தை சிந்திடும் என்று அவை நம்பின. யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் சோவியத் யூனியன், ஜெர்மனிக்கு எதிராக பாசிஸ்ட் எதிர்ப்புக் கூட்டணியை அமைத்திட தொடர்ந்து முயற்சித்தது. ஆனால் பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா தொடர்ந்து இதனை நிராகரித்து வந்தன. அவற்றின் நோக்கம் தெளிவானது. எப்படியாவது சோவியத் யூனியன் தாக்கப்படட்டும் என்பதுதான்.

நாஜிக்கள் போலந்தைத் தாக்கியபின் இருநாட்கள் கழித்து, பிரிட்டனும் பிரான்சும் ஜெர்மனிக்கு எதிராக யுத்தத்தைப் பிரகடனம் செய்தன. ஆயினும் அவ்வாறு அறிவித்ததோடு சரி. அடுத்து ஒன்பது மாதங்கள் அவை எதுவுமே செய்திடவில்லை. இதனால் உத்வேகம் கொண்ட ஜெர்மன் பாசிசம், தன் தாக்குதலைத் தீவிரப்படுத்தியது. அதன்பின்னர்தான் தாங்கள் நீடித்திருப்பதே ஆபத்திற்குள்ளாகிவிட்டது என்பதையும் மேலும் தங்கள் நாடுகளுக்குள்ளேயே பாசிஸ்ட் எதிர்ப்பு இயக்கங்கள் வலுவடைந்து வந்ததையும் அவை உணர்ந்தன.
இட்லர், பிரிட்டனையும் தாக்குவதற்கான திட்டத்தையும் ஆமோதித்துவிட்டான். உண்மையில், பிரிட்டனைத் தாக்குவதற்கானத் தயாரிப்பு வேலைகளை பிரசுரித்தபின், இட்லர் சோவியத் யூனியனுக்கு எதிராக கிழக்கு முன்னணியில் தன் படைகளை குவித்து வந்தான். பிரான்சை எளிதாக வெற்றிகொண்டதை அடுத்து, உலகைத் தாங்கள் ஆள்வதற்குத் தடையாக இருந்து வரும் சோவியத் யூனியன்தான் தங்களின் அடுத்த தாக்குதல் என்று பாசிஸ்ட்டுகள் கருதினார்கள். இட்லர், பிரிட்டன் மீதான தாக்குதலைத் தொடர்ந்த அதே சமயத்தில் சோவியத் யூனியன் மீதும் தாக்குதலைத் தொடுத்தான்.

ஐரோப்பிய நாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக எளிதில் வீழ்ந்ததால் மிகவும் நம்பிக்கையுடனிருந்த இட்லர் அதேபோன்று சோவியத் யூனியனும் எளிதில் தங்கள் வசமாகிவிடும் என்று கருதினான். சோவியத் யூனியனுக்கு எதிரான யுத்தம் ‘‘ஆறு வாரங்கள் கூட நீடிக்காது’’ என்று அவன் கருதினான். எனவேதான் இதனை அடுத்து ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியாவைத் தாக்கவும் திட்டம் தீட்டி இருந்தான். பின்னர் மற்ற ஐரோப்பிய நாடுகளையும், அமெரிக்காவையும் தாக்கிடவும் திட்டங்கள் தீட்டியிருந்தான்.
சோவியத் யூனியனுடன் செய்து கொண்டிருந்த ஆக்கிரமிப்புக்கு எதிரான ஒப்பந்தத்தை மீறி,

1941 ஜூன் 22 அன்று சோவியத் யூனியன் மீது திடீர் தாக்குதலை இட்லர் மேற்கொண்டான். இட்லர் தன்னுடைய படையினரில் 77 விழுக்காட்டினரை சோவியத் யூனியனுக்கு எதிரான யுத்தத்தில் செலுத்தினான். ஐரோப்பிய நாடுகளை அவன் வென்றிருந்ததனால், சோவியத் யூனியனின் மேற்கத்திய முன்னணி முழுவதிலும் அவன் தன் படைகளை எளிதாக நுழைக்க முடிந்தது. நாஜிக்கள் ஜூலை 10க்குள் சுமார் 600 கிலோ மீட்டர் தூரம் சோவியத் யூனியனுக்குள் நுழைந்துவிட்டனர். விரைவில் சோவியத் யூனியன் நிர்மூலமாக்கப்பட்டு அழிக்கப்பட்டுவிடும் என்றுதான் உலகம் கருதியது. வின்ஸ்டன் சர்ச்சில் தன் நினைவுக்குறிப்பில், ‘‘அநேகமாக ரஷ்ய ராணுவம் விரைவில் தோற்கடிக்கப்பட்டுவிடும், மற்றும் பெருமளவில் அழிக்கப்பட்டுவிடும் என்றே அனைத்துவிதமான ராணுவக் கணிப்புகளும் கூறுகின்றன’’ என்று எழுதியிருக்கிறார். ஜெர்மானியர்கள் யுத்தம் தொடங்கிய முதல் சிலவாரங்களிலேயே வடக்கில் லெனின்கிராட், மத்தியில் மாஸ்கோ மற்றும் கீவ் நகரைத் தகர்த்தபின் ஸ்டாலின்கிராடை நோக்கி முன்னேறத் தொடங்கிவிட்டார்கள்.
ஆயினும் ஜெர்மனியரின் திட்டம் அவர்கள் நினைத்தபடி வெற்றி பெறவில்லை. உலகை விரைவில் தன் ஆளுகையின் கொண்டுவந்துவிட வேண்டும் என்று நினைத்திருந்த இட்லர் மிகவும் விரக்தி அடைந்தான். சோவியத் யூனியனில் நாஜிக்கள் எதிர்கொண்ட எதிர்ப்பு, ஒட்டுமொத்த உலகையே வியப்பில் ஆழ்த்தியது. நாஜிக்கள் பக்கமும் இழப்புகள் வேகமாக அதிகரிக்கத் தொடங்கின.

ரஷ்யர்கள் வீரத்துடன் போரிட்டபோதிலும், ஜெர்மானியர் தொடர்ந்து முன்னேறினர். ‘‘என்ன விலைகொடுத்தேனும் ஸ்டாலின்கிராடைக் கைப்பற்றுக’’ என்பதுதான் இட்லரின் கோஷம். ஸ்டாலின்கிராடைக் கைப்பற்றுவதற்கான யுத்தம் 182 நாட்கள் நடைபெற்றன. ஸ்டாலின்கிராடைச்சேர்ந்த அனைத்து மக்களும் ஸ்டாலின்கிராடைக் காத்திடும் யுத்தத்தில் பங்குகொண்டனர். சைபீரியாவில் பயிற்றி பெற்ற வீரர்கள் ஸ்டாலின்கிராடைத் தாக்கிக்கொண்டிருந்த ஜெர்மானியர்களை பின்னணியிலிருந்து தாக்கத் தொடங்கினர். ஜெர்மானியர்கள் சுற்றி வளைக்கப்பட்டனர். 3 லட்சம் ஜெர்மானியர்கள் இவ்வாறு சுற்றி வளைக்கப்பட்டனர். பின்னர் 1943 பிப்ரவரி 2 அன்று அவர்கள் முழுமையாகச் சரணடைந்தனர். இது யுத்தத்தின் போக்கையே மாற்றியமைத்தது. உலகையே ஆள நினைத்திருந்த ஜெர்மானியருக்கு தீர்மானகரமான முதல் தோல்வி இங்கே ஏற்பட்டது. இத்தோல்விதான் இட்லரைத் தற்கொலை செய்து கொள்ள இட்டுச் சென்றது.
ஸ்டாலின்கிராடு தோல்விக்குப்பின், ஜெர்மானியர் பின்வாங்கத் தொடங்கினர். 1943இல் ஜெர்மானியர் உக்ரேனிலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர். 1944 கோடை காலத்தின் துவக்கத்தில் அவர்கள் சோவியத் நாட்டின் அனைத்துப் பகுதியிலிருந்தும் விரட்டியடிக்கப்பட்டனர். 1945 ஏப்ரல் 30 அன்று பெர்லினில் இட்லரின் தலைமையகத்தின் மீது செங்கொடி ஏற்றப்பட்டது.

இவ்வாறு வரலாற்றில் பாசிசத்தை முறியடித்தது, அமெரிக்காவோ, பிரிட்டனோ அல்லது பிரான்சோ அல்ல மாறாக, சோவியத்யூனியன்தான், பாசிஸ்ட்டுகளின் கொடியை இறக்கியது. 1945 மே 2 அன்று மாலை 3 மணியளவில் ஜெர்மானியர்கள் எவ்வித நிபந்தனையுமின்றி சரணடைந்தார்கள்.

உலகை ஆள துடித்துக்கொண்டிருந்த பாசிஸ்ட்டுகளை நிர்மூலமாக்கியது ஸ்டாலின் தலைமையிலான செங்கொடி இயக்கமே. இதற்கு செங்கொடி இயக்கம் எவ்வளவு பெரிய தியாகத்தைச் செய்திருக்கிறது? 2 கோடி வீரர்கள் கொல்லப்பட்டார்கள், இரண்டரை கோடி பேர் வீடிழந்தார்கள், 1700 நகரங்கள் 27 ஆயிரம் கிராமங்கள் அழிக்கப்பட்டன. 38 ஆயிரத்து 500 மைல்ல ரயில் பாதை அகற்றப்பட்டது. 1418 நாட்கள் நடைபெற்ற போரில் சோவியத் யூனியன் ஒவ்வொரு நிமிடமும் ஒன்பது பேரை பலி கொடுத்தது, ஒரு நாளைக்கு 14 ஆயிரம் பேரை பலி கொடுத்தது. ஆயினும் இவ்வளவு இழப்புக்குப்பின்னரும், சோவியத் மக்கள் எழுந்துநின்றனர். யுத்தம் முடிவடைவதற்கு முன்னரே தங்கள் நாட்டை மீண்டம் பிரம்மாண்டமாக எழுப்பும் பணியில் ஈடுபட்டனர். வீரர்கள் ஐரோப்பாவில் யுத்தத்தின் ஈடுபட்டிருந்த அதே சமயத்தில் மக்கள் மீண்டும் தொழிற்சாலைகளையும், பண்ணைகளையும் அமைக்கத் தொடங்கினார்கள். இவ்வாறு சோவியத் மக்கள் மிகவும் வீரஞ்செறிந்த முறையில் பாசிசத்தை முறியடித்தனர்.

இத்தகைய சோவியத் மக்களின் வீரத்தையும் தியாகத்தையும்தான் ஏகாதிபத்திய வரலாற்றாசிரியர்கள் இப்போது துடைத்தழித்திட முன்வந்துள்ளனர். பாசிசத்தை முற்றிலுமாக தோல்வியுறச்செய்து, மனிதகுலத்தை விடுவித்தது கம்யூனிசத்தின் செங்கொடியும், செம்படையும்தானேயொழிய, ஆங்கிலேய - அமெரிக்க - பிரான்ஸ் படைகள் அல்ல. செம்படையின் வெற்றி உலகின் அரசியல் வரைபடத்தையே மாற்றி அமைத்தது. உலகில் காலனியாதிக்கத்திற்குள்ளிருந்த பல நாடுகள் விடுதலை அடைந்தன. உண்மையில் புதியதோர் உலகம் உருவானது.

(தமிழில்: ச.வீரமணி)

No comments: