Friday, May 21, 2010

ஐமுகூ-2 அரசுக்கு எதிராகப் போராட்டங்கள் தீவிரமாகும்-கே.வரதராசன் பேட்டி



புதுதில்லி, மே 22-
ஐமுகூ-2 அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக, போராட்டங்கள் தீவிரமாகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. வரதராசன் கூறினார்.

ஐமுகூ-2 அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்து ஓராண்டு காலம் ஆகிறது. இது தொடர்பாக தாங்கள் என்ன கூறுகிறீர்கள் என்று தமிழ்த் தொலைக்காட்சி அலைவரிசையைச் சேர்ந்த செய்தியாளர் ஒருவர் கே. வரதராசனிடம் கேட்டார். அப்போது அவர் கூறியதாவது:
‘‘ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் கடந்த ஓராண்டு காலத்தில் மக்களுக்கு எந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்தியதாகச் சொல்வதற்கில்லை. உண்மையைச் சொல்வது என்றால், ஐ.மு.கூ.1 காலத்தில் அரசுக்கு இடதுசாரிகள் ஆதரவு இருந்ததால், மக்கள் மீதான சில தாக்குதல்களைத் தடுக்க முடிந்தது. தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம் போன்று சில காரியங்களைச் செய்ய முடிந்தது. ஆனால் இப்போதைய ஐமுகூ-2 அரசாங்கத்தில் அங்கம் வகிக்கிற காங்கிரசின் கொள்கைகளும், திமுக-வின் கொள்கைகளும் ஒன்றாக இருக்கிற காரணத்தால், இந்த அரசு நேரடியாகவே வசதிபடைத்தவர்களின் அரசாக ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும் வசதி படைத்தோருக்கு 80 ஆயிரம் கோடி ரூபாய் சலுகைகள் அளித்திருக்கிறது. இதை வேண்டுமால் அரசு செய்துள்ள ‘‘நன்மை’’ என்று சொல்லலாம். 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி சாமானிய மக்களைத் தாக்கி இருக்கிறது.
உண்மையாகச் சொல்லப்போனல் தாராளமய, தனியார்மய, உலகமய, மக்கள் விரோதக் கொள்கைகளை கடந்த கால அரசாங்கங்களும் செயல்படுத்தின. ஆனால் இந்த அரசு பகிரங்கமாகவே அதுதான் எங்கள் கொள்கை என்று அறிவித்து, ப.சிதம்பரம், மன்மோகன்சிங் போன்றவர்கள், நேரடியாகவே அவற்றை அமலாக்குகிற காரணத்தால் இன்றையதினம் கடுமையான விலைவாசி உயர்வு ஏற்பட்டிருக்கிறது. சாமானிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். பட்டினிச் சாவுகளும் நடந்து கொண்டிருக்கின்றன.
ஆட்சியாளர்களின் கொள்கைகளுக்கு எதிராக ஏற்கனவே போராட்டங்கள் நடத்தி இருக்கிறோம். அகில இந்திய வேலை நிறுத்தம், நாடு முழுதும் சிறையேகும் போராட்டம் ஆகியவற்றை வெற்றியுடன் நடத்தியிருக்கிறோம்.

வரவிருக்கும் ஜூலை முதல் வாரத்தில் புதுதில்லியில்ல பாஜக கூட்டணியில்ல இல்லாத, ஐமுகூ-2 கூட்டணியில் இல்லாத மதச்சார்பற்ற கட்சிகள்மற்றும் இடதுசாரிக் கட்சிகள் சார்பில் புதுதில்லியில் சிறப்பு மாநாடு ஜூலையில் நடைபெறவிருக்கிறது. அதில் எதிர்கால போராட்ட வடிவங்கள் தீர்மானிக்கப்படும். குறிப்பாக இந்த அரசின் கொள்கைகள் மாற்றப்படும்வரை தீவிரமான போராட்டங்கள் நடைபெறும். செப்டம்பரிலிருந்து இந்தப் போராட்டங்கள் தீவிரமாகும்.’’

இவ்வாறு கே. வரதராசன் கூறினார்.

(ச.வீரமணி)

No comments: