Thursday, December 3, 2009

மேற்கு வங்கத்திற்கு மத்தியக்குழு



மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு நிலைமைகள் தொடர்பாக மேற்கு வங்க அரசின் அதிகாரிகளுடன் விவாதங்கள் மேற் கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகளை மத்திய அரசு அனுப்பி வைத்திருக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சித் தத்துவத்தினை இது முழுமையாக மீறும் செயல் என்பதால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதனைக் கடுமையான முறையில் எதிர்த்தது. அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் மாநில அரசின் கீழ் வருகின்ற, ‘‘மாநிலப் பட்டியலின்’’ கீழ் வரும் பிரச்சனைகள் குறித்து மத்திய அரசின் தலையீடு எதுவாக இருந்தாலும், சம்பந்தப்பட்ட மாநில அரசாங்கத்தின் கலந்தாலோசனை மற்றும் ஒப்புதலுடன்தான் நடைபெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பல முறை தீர்ப்பளித்திருக்கிறது.

மத்தியக் குழு மேற்கு வங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதை, திரிணாமுல் காங்கிரஸ், ‘மேற்கு வங்க மாநில அரசை அரசியலமைப்புச் சட்டத்தின் 356ஆவது பிரிவின்கீழ் டிஸ்மிஸ் செய்து அங்கே ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதற்கான முதல் நடவடிக்கை இது’ என்கிற முறையில் வியாக்கியானம் செய்துகொண்டிருக்கிறது. ஜனாதிபதியின் ஆட்சியின் கீழ் விரைவில் மேற்கு வங்கத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் திரும்பத் திரும்ப வெளிப்படையாகவே கோரி வருகிறது. உண்மையில், இதனை எய்தும் விதத்திலேயே அதன் அனைத்து நடவடிக்கைகளும் அமைந்திருக்கின்றன. மாவோயிஸ்ட்டுகளைப் பயன்படுத்திக்கொண்டு, வன்முறை மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளின் மூலம் தொடர்ந்து மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கை சீர்குலைத்திடவும் அது முயற்சித்துக் கொண்டிருக்கிறது. இதனை சாக்காக வைத்துக்கொண்டுதான் மத்திய அரசின் தலையீட்டை அது கோரிக்கொண்டிருக்கிறது. இவ்வாறான அவர்களது கீழ்த்தரமான சூழ்ச்சியின் காரணமாகத்தான் மேற்கு வங்கத்தில் மக்கள் மீது இதற்குமுன் எப்போதும் இல்லாத அளவிற்கு தாக்குதல்களை அவர்கள் தொடுத்துள்ளார்கள், நூற்றுக்கணக்கான அப்பாவி உயிர்களைக் கொன்று குவித்திருக்கிறார்கள். திரிணாமுல் காங்கிரஸ் - மாவோயிஸ்ட்டுகள் இடையேயுள்ள தொடர்பு, இவர்களால் மார்க்சிஸ்ட் ஊழியர்கள் மற்றும் மக்கள் மீது 2008 நவம்பரில் இவர்கள் தொடுத்த தாக்குதல்கள், முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவைக் கொல்ல இவர்கள் மேற்கொண்ட முயற்சி தனியே பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.

நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் பின்னணியில், உள்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஓர் அறிக்கையை சமர்ப்பித்தார். மேற்கு வங்கத்திற்கு உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பாக திரிணாமுல் காங்கிரசின் நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கக்கூடிய விதத்தில் அந்த அறிக்கை இருந்தது. மத்திய அரசாங்கத்தால் நான்கு விஷயங்கள் அதில் தெள்ளத்தெளிவாக்கப் பட்டுவிட்டன: (1) அதிகாரிகள் குழு அங்கு செல்வது மோதல் போக்குடன் அல்ல, (2) அவர்கள் மாநில அரசின் அதிகாரிகளுடன் மட்டும்தான் விவாதங்களை மேற்கொள்வார்கள். (3) மாநில அரசாங்கம் கேட்டுக்கொண்டால் அல்லது வசதிசெய்து கொடுத்தால் மட்டுமே அவர்கள் மோதல் நடைபெறும் மாவட்டங்கள் அல்லது பகுதிகளுக்குச் செல்வார்கள், (4) அவர்கள் அரசியல் கட்சிகளிடமிருந்து மனுக்களைப் பெறலாம். ஆனால் அவர்களுடன் அதிகாரிகள் எவ்விதப் பேச்சுவார்த்தையும் மேற்கொள்ள மாட்டார்கள்.

இவ்வாறு அரசின் சார்பில் அளிக்கப்பட்ட அறிக்கையானது, மத்தியக் குழுவின் விஜயம், மாநில அரசுக்கு உதவத் தானே யொழிய, திரிணாமுல் காங்கிரஸ் சொல்வதுபோல் சட்டம் - ஒழுங்கு பிரச்சனையை மதிப்பிடுவதற்காக அல்ல. தற்சமயம் மத்திய - மாநிலப் பாதுகாப்புப் படையினர் இணைந்து மிட்னாபூர் மாவட்டத்தில் லால்கார் பகுதியிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மாவோயிஸ்ட் வன்முறைக்கு எதிராக நடவடிக்கைகளில் இறங்கியிருக்கின்றன. அப்பகுதிகளில் இயல்பு நிலையை மீட்டு, மாநில அரசின் நீதி நிர்வாகத்தை நிலைநாட்டுவதற்கு அவை முயற்சித்துக் கொண்டிருக்கின்றன.

நாம் இப்பகுதியில் ஏற்கனவே பல முறை சொல்லியிருப்பதுபோல, காங்கிரஸ் கட்சியானது தன்னுடைய கூட்டணியில் திரிணாமுல் காங்கிரசை ஓர் அங்கமாக இணைத்துக் கொண்டிருப்பது ஏற்புடையதல்ல. ஏனெனில், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் பலமுறை வெளிப்படையாகவே, நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்புக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருப்பது, மாவோயிஸ்ட் வன்முறை என்று பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால், திரிணாமுல் காங்கிரசோ நேரடியாகவும், வெளிப்படையாகவும் பயங்கரவாத நடவடிக்கைகளைக் கட்டவிழ்த்து விடுகின்ற, சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கின்ற, அராஜகத்தை உருவாக்குகின்ற, எண்ணற்ற அப்பாவிகளின் உயிர்களைக் கொன்று குவிக்கின்ற மாவோயிஸ்ட்டுகளுக்கு உடந்தை யாக இருந்து வருகிறது. இத்தகைய மோசமான முரண்பாடுகளுடன் இருக்கின்ற ஒரு கட்சியுடன் எப்படிக் கூட்டு வைத்துக்கொண்டு, தங்கள் அமைச்சரவையில் நீடிக்க அனுமதிக்கிறோம் என்பதை காங்கிரஸ் விளக்க வேண்டும்.

கொலைபாதகத் தாக்குதல்கள் மற்றும் பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விடுதல் போன்ற நடவடிக்கைகளின் மூலமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் இடதுசாரிகளையும் வங்கத்தில் பலவீனப்படுத்த முயற்சிப்பதே தங்கள் அரசியல் குறிக்கோள் என்று கருதுவார்களானால், அவர்கள் வரலாற்றிலிருந்து எதையும் கற்றுக்கொள்ள வில்லை என்றே நாம் கூற முடியும். மார்க்சிஸ்ட்டுகளைத் தாக்க இடது அதிதீவிரவாதிகளைப் பயன்படுத்திக்கொள்வது என்பது மேற்கு வங்கத்திற்கு புதிதல்ல. 1972க்கும் 1977க்கும் இடையே ஓர் ஐந்தாண்டு காலம், இதுபோன்றதோர் அரசியல் சேர்மானத்தால், மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக ஓர் அரைப் பாசிச அராஜகமே கட்டவிழ்த்துவிடப்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சி அதனை எதிர்த்து முறியடித்தது மட்டுமல்ல, அதனைத் தொடர்ந்து கடந்த முப்பதாண்டு காலமாக அங்கே எவரும் வெல்லமுடியாத அளவிற்கு,தேர்தல்களில் வெற்றிபெற்று அரசியல் சக்தியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. மேற்கு வங்கத்தில் உருக்கு போன்று உருவாக்கப்பட்டுள்ள இடது முன்னணியை உடைக்க முடியாததாலும், மக்கள் ஏற்கக்கூடிய விதத்தில் மாற்றுக் கொள்கை எதையும் முன்வைக்க முடியாததாலும், திரிணாமுல் காங்கிரசானாது, மாவோயிஸ்ட்டு களிலிருந்து சில முஸ்லீம் அடிப்படைவாத அமைப்புகள் உட்பட அனைத்துப் பிற்போக்கு சக்திகளுடனும் சேர்ந்துகொண்டு, வன்முறை மூலமாக ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சித்துக் கொண்டிருக்கிறது. திரிணாமுல் காங்கிரசின் இத்தகைய புனிதமற்ற கூட்டணிதான் மேற்கு வங்கத்தில் தற்சமயம் நடைபெற்று வரும் அனைத்து வன்முறைச் சம்பவங்களுக்கும் காரணமாகும். இத்தகைய ஜனநாயக விரோத கும்பல் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிராகவும், மேற்கு வங்க மக்களுக்கு எதிராகவும் அவை மேற்கொண்டுள்ள வன்முறைத் தாக்குதல்கள் அரசியல்ரீதியாகத் தனிமைப்படுத்தப்பட்டு, தோற்கடிக்கப்பட வேண்டியது அவசியம்.

(தமிழில்: ச.வீரமணி)

No comments: